சமாதானத்தை ஏற்படுத்துங்கள்!

in 2013 ஜூலை,பொதுவானவை

ஷரஹ் அலி, உடன்குடி

கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் உறுதிமொழிகள் இதோ :
“”நிச்சயமாக முஃமின்கள்(யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் சமாதானத்தை உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வையுங்கள். (49:10)

தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துதல் தவிர, அவர்களின் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நன்மையும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, இதை செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற் கூலியை வழங்குவோம். (4:114)

மேற்கண்ட இறைவனின் உறுதிமொழிகளை மீண்டும் படித்துப் பாருங்கள். முஃமின்களாக சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும், நல்ல செயல்க ளைச் செய்ய வேண்டும், பகைமை ஏற்படுத்தவோ, உறவைத் துண்டிக்கவோ, குரோத மனப்பான்மையுடன் செயல்படவோ கூடாது என்பதை அல்லாஹ் முஸ்லிம் சமூகத்தினருக்குத் தன்னுடைய இறை வசனத்தின் மூலம் உத்தரவு பிறப்பித்து உள்ளான். இன்றைய முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் குர்ஆன் ஹதீஃதைச் சுயமாகச் சிந்தித்துப் படித்துச் செயல்படுத்த முன்வராததன் காரணத்தினால், முஸ்லிம் சமூகம் அழிவின் அதல பாதாளத்தில் வீழ்ந்து, இதர சமூகத்தினர் நம்மை இழிவுபடுத்தி, கேவலப்படுத்தி, கொடுந்துன்பங்களைக் கொடுத்து, வீண் பழிகளைச் சுமத்தி குற்றப்படுத்திக் கொண்டிருக்கக் காரணம் புரிகிறதா?…

1434 வருடங்களுக்கு முன்னர் உலகளாவிய சகோதரத்துவ ஒற்றுமையுடன் செயல்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு வல்லமை மிக்க அல்லாஹ் வழங்கிய அளப்பறிய அருட்கொடைகளையும், உதவிகளையும், சரித்திரச் சான்றுகளுடன் இன்றைய உலகளாவிய முஸ்லிம் சமூகத்தாரின் செயல்களுடன் ஒப்பிட்டு உரசிப் பார்க்க ஒவ்வொரு முஸ்லிமும் கட மைப்பட்டுள்ளோம் என்பதை மனதில் முன் நிறுத்த வேண்டும். கடந்த 29 வருடங்களுக்கு முன்னர், தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தமிழக மக்களுக்கு இடையே எடுத்து வைத்துப் பிரச்சார விழிப்புணர்வு மூலம், மக்களுக்கு இடையே சிந்திக்கும் ஆற்றலை வளர வைத்ததன் விளைவு, காலங்காலமாக கண் மூடித்தனமாகப் பின்பற்றி வந்த மூட நம்பிக்கையிலும், ´ஷிர்க் எனும் இணைவைப்பு, வழிகேடு போன்ற மாபாதகச் செய்களில் இருந்து வல்லமை படைத்த அல்லாஹ் நம்மவர்களை காப்பாற்றினான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

மறுமையின் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்களிடையே குர்ஆன் வசனம், நபிமொழிகளைக் கொண்ட ஏகத்துவப் பிரச்சாரப் பிரசுரம் வினியோகம் செய்தல், தமிழாக்க குர்ஆனை வினியோகம் செய்தல், தமிழாக்க நபி மொழிப் புத்தகங்களை நம்மக்களிடையே வினியோகம் செய்தல், பிரச்சார மேடைகளிலே பீரங்கி முழக்கம், குர்ஆன் நபிவழி அடிப்படையில் இஸ்லாமிய கருத்துக்களைக் கொண்ட மாதப் பத்திரிகை வெளியிடுதல், இதன் வாயிலாக செயல்பட்டதன் விளைவு, தூய்மையான இஃக்லாசுடன் கிடைக்கப் பெற்ற கொள்கைக்கான சகோதரத்துவம், சக தோழர்களின் நட்பு நிச்சயமாக மறக்க முடியாத நிகழ்வே! அன்றைய (அன்றைய நாளில் பிரிவு ஜமாஅத் பள்ளி கிடையாது) நாட்களில் ஏதேனும் ஒரு ஊரில் ஏதேனும் ஒரு பள்ளிவாசலில் தொழும் போது, நமது அருகில் நபிவழிமுறையில் ஒரு சகோதரர் தொழுவார். தொழுகை முடிந்தது. அவரை முஸாபா செய்து நட்புப் பாராட்டி, நலம் விசாரித்து, கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்கைக்காக சகோதரத்துவத்தை வளர்த்தோமே! மறக்க முடியுமா? அதே நிகழ்ச்சி, நமது முன்னால் சக தோழர்களுக்கும் நிச்சயம் தெரியும்.

ஆனால் இன்றைய நிலை என்ன? என் அருமை சகோதரர்களே, சகோதரிகளே! சிந்திப்போமா? அல்லது சிந்திக்கின்றோமா? இன்றைய நிலையில், மறுமை வெற்றியை முன்நிறுத்தி செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பேசி வந்தவர்கள், தங்களின் சுயநலத்திற்காகவும், பதவி ஆசைகளுக்காகவும், பண ஆசைக்காகவும் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுத்து, தங்களின் சுய கருத்துக்களை குர்ஆன் ஹதீஃதுக்குள் புகுத்தி முரண்பாடான செய்திகள் இளைஞர்களுக்குச் சொல்லப்பட்டு, ஆசை வார்த்தை காட்டி, பதவி ஆசைகளை வளர்த்து, வார்த்தை ஜாலங்களால் சுய சிந்தனைக்கு மாற்றமாக கண்மூடித்தனமாக (தக்லீது)தங்களின் அமைப்பு, கழக, பிரிவு ஜமாஅத் தலைவர்களின் கட்டளையை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற சிந்தனையை இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில் ஏற்படுத்தியதால் ஒரே சமுதாயமாக இருந்த முஸ்லிம் சமூகத்தைப் பிரித்து, பிளவுபடுத்தி, சின்னாபின்னமாக்கி விட்டனர். சகோதரத்துவம் என்றால் தங்களது அமைப்பு, கழகம், அரசியல் பிரிவு, இயக்கம், பிரிவு ஜமாஅத் இவர்களுக்குள்ளே தான் காணமுடிகிறது. இல்லையயன மறுக்க முடியுமா? மறுமை நாளில் அல்லாஹ்வின் விசாரணையின் போது என்ன பதில் சொல்வோம் சிந்தியுங்கள் எனதருமைச் சகோதரர்களே!

சமீபத்தில் ஒரு பிரிவு ஜமாஅத்தினரின் பள்ளி வாசலில் தொழுகைக்காக சென்றபோது தொழுகை முடிந்தவுடன் இரண்டு இளைஞர்கள் இயக்க வெறியுடன் பேசிக் கொண்டதை நமது காதால் கேட்க நேரிட்டச் செய்தியானது:
தொழுகை முடிந்த பின்னர் பள்ளிவாசல் வளாகத்திலேயே ஓர் இயக்க வெறி கொண்ட நபர் இன்னோர் இயக்க வெறி கொண்ட இளைஞரிடம் ம்….. “”நாங்களும் எங்களின் தலைமை உத்தரவுடன் எங்களின் இயக்கக் கிளை திறப்பு விழாவை செய்து முடித்து விட்டோம். இனிமேல் கூடிய சீக்கிரம் நாம் மோத வேண்டியதுதான்; பார்த்துக் கொள்வோம்” என்ற வெறிக் கோஷத்துடன் சொன்னதை நம்மால் கேட்க முடிந்தது. அதில் பாதிக்கப்பட்ட நபரைச் சந்தித்து நாம் அவருக்கு உபதேசம் சொன்னபோது யாவற்றையும் அமைதியுடன் கேட்ட பின்னர் அவர் கூறியது நமக்கு இதயமே வெடித்து விடும் போல் இருந்தது. “”குர்ஆன், ஹதீஃத் எல்லாம் சரிதான்; எங்களின் அமைப்பின் ஜமாஅத்தின் பைலா படி செயல்படவில்லை என்றால் அதுவும் ´ஷிர்க் (இணை வைப்பு) தான் என்று எங்களுக்குச் சொல்லி தரப்பட்டு உள்ளது” என்று விளக்கம் தருகிறார். எந்த அளவுக்கு இயக்க வெறி ஊட்டப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் சகோதர சகோதரிகளே!

உலகத்தின் அருட்கொடை நபி(ஸல்) அவர்க ளின் உபதேசத்தைப் பாரீர்… தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றின் செயல் அந்தஸ்தை விட மிகச் சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி(ஸல்)அவர்கள் தோழர்களிடம் கேட்க, தோழர்கள் ஆம்! அல்லாஹ்வின் தூதரே என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இருவருக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துதல் தான் அந்தச் செயல், எனக் கூறினார்கள். ஏனெனில் இருவரின் உறவில் ஏற்படும் சீர்குலைவு மார்க்கத்தையே சிதைத்துவிடும். அறிவிப்பாளர் : அபுதர் (ரழி) நூல்கள்: அபுதாவுத் : 4921, திர்மிதி:2509

மேற்கண்ட அல்லாஹ்வின் இறை வசனத்தையும், நபி(ஸல்) அவர்களின் உபதேசத்தையும் செயல் படுத்த முன் வராததன் விளைவு. (அதிலும் குறிப் பாக குர்ஆன் ஹதீஸ்படிதான் பிரச்சாரம் செய்கி றோம், பள்ளிவாசல் நிர்வாகம் நடத்துகிறோம், ஓட்டுவங்கி அரசியல் நடத்துகிறோம், இஹ்ஸானிய பணி செய்கிறோம் என்று கூறும் பிரிவு ஜமாஅத், அமைப்பு, கழகங்கள், ETC) கருத்து மோதல்களாலும், சுயநலத்தாலும், பிரிந்து பிளவுபட்டு, பிரிவு ஜமாஅத் ஏற்பட்டு குரோத மனப்பான்மையால் அடுத்தவர்களின் பள்ளிவாசலைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கோர்ட், கேஸ், லஞ்சம் என எல்லா ஈனச் செயல்களைச் செய்து வருவதை பத்திரிகை செய்திகள் மூலம் காண முடிகிறதே! எந்தளவுக்கு என்றால் 29 வருடத்திற்கு முன்னர் கொள்கைக்காக, மறுமை வெற்றியை மட்டுமே முன்நிறுத்தி நட்பைப் பாராட்டி வந்தவர்கள் இன்று ஒவ்வொருவரும் ஒரு இயக்கம்,அமைப்பு, கழகம், பிரிவு, ஜமாஅத்தில் இருந்து கொண்டு தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்வது கூட கிடையாது. தங்களின் முன்னாள் இயக்கத்தினரின் இளைஞர்களுக்குக் கூட இன்றைக்கு ஸலாம் சொல்லக் கூடாது; அவருடன் கருத்துப் பறிமாற்றம் செய்யக் கூடாது முஸாபா பண்ணுவது கூட கிடையாது என்பது தான் இன்றைய நிலை! சு.ஜ.தினர் தான் இன்று அதிகமாக ஸலாம் சொல்லுகின்றனரே தவிர, குர்ஆன் ஹதீஃத்படி செயல்பட்டு வரும் சகோதரர் களுக்கு இடையே முஸாபஹா ஸலாம் சொல்லுதல் மிகமிகக் குறைவே!

வல்லமை படைத்த அல்லாஹ் தனது நெறி நூலில் கட்டளையிடுகிறான். உங்களுக்கு ஸலாம் கூறப்படும்பொழுது, அதற்கு பதிலாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள். அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். (4:86) நபி(ஸல்) அவர்களின் இறுதி உரையின் நீண்ட நபிமொழியின் ஒரு பகுதியைப் பாரீர்… செயல்பட முன் வாருங்கள்… முஸ்லிம்களே! நீங்கள் ஒருவருக் கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! நீங்கள் ஒருவருக்கொருவர் உறவுகளை துண்டிக்காதீர் கள்…! நீங்கள் ஒருவருக்கொருவர் புறக்கணித்துக் கொள்ளாதீர்கள்…! அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் எல்லோரும் சகோதரர்களாகி விடுங்கள் என நபியே கூறியதாக அபூபக்கர்(ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இப்னு மாஜா 3849, நஸஈ, அஹ்மத், அபுயஃலா, முஸ்னத் ஹுமைதி போன்ற ஹதீஸ் நூல்களில் காணமுடிகிறது.

எனதருமைச் சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வின் பயம் நிச்சயம் உங்களின் உள்ளங்களில் கடுகு அளவு இருக்குமேயானால் மேற்கண்ட குர்ஆன் ஹதீஃதை சுயமாகச் சிந்தித்து நடைமுறைப் படுத்த முயற்சி செய்யுங்கள். இல்லையேல் மறுமை நாளில் அல்லாஹ்வின் முன்னால் நடைபெற இருக் கும் கடுமையான விசாரணையில் இருந்து யாரும் தப்பித்து விட முடியாது என்பதை ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி உணர்ந்து கொள்வோமாக! யா அல்லாஹ் மறுமை நாளில் எங்களின் கேள்வி கணக்கை எளிதாக்குவாயாக! என்ற நபி(ஸல்) அவர் களின் பிரார்த்தனையை அல்லாஹ்விடம் கேட்டு, எல்லாப் பிரிவினர்களின் நயவஞ்சகப் பேச்சில் மயங்காமல் சுயமாக குர்ஆன் ஹதீஃதை சிந்தித்துச் செயல்படுத்தினால் மட்டுமே! சகோதரத்துவம் ஏற்படும். நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்து, செயல் பட்ட இஸ்லாமிய சகோதரத்துவம் (Islamic Brother Hood)  ஏற்படுத்த முயற்சி செய்வோமாக!

வேறுபாடுகளை உணர்ந்து உண்மையை விளங்கி, அதன் அடிப்படையில் செயல்பட வல்ல அல்லாஹ் அருள் செய்வானாக! முஸ்லிம் சகோதர சகோதரிகளே! சுயமாக குர்ஆன் ஹதீஃதை சிந்தித் துச் செயல்பட்டு ஈருலகிலும் வெற்றி பெற முன் வாருங்கள்….!

Previous post:

Next post: