வெளிநாட்டிற்கு வேலைக்குப் போனதால் தொலைந்துபோன வாழ்க்கைகள்!

in 2013 ஆகஸ்ட்

பஷீர் அகமது, புதுக்கோட்டை.
திரைகடல் ஓடி திரவியம் தேடு, கப்பலுக்கு போன மச்சான், மாப்பிள்ளை வெளிநாட்டு சபுராளி…

இந்தத் தலைப்புகள் தமிழ் முஸ்லிம்களின் சிறு கதை தலைப்புகள் மட்டுமல்ல! நாவல்களும் அல்ல! இவை போன்ற சொற்றொடர்கள் பெரும்பான்மையான தமிழ் முஸ்லிம் குடும்பங்களில் அடிக்கடி புழங்குபவை. மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினரை ஊரில் விட்டுவிட்டு வெளிநாட்டில் போய் வேலை பார்ப்பது, தமிழ்நாட்டு முஸ்லிம்களின் விசயம் மட்டுமல்ல; எல்லா சமூகத்திலும் உள்ள தேசியப் பிரச்சினை என்ற கோணத்தில் இக்கட்டுரையைப் படிக்கத் துவங்குங்கள்! வெளிநாடு போய் சில வருடம் வேலை பார்த்துத் தாயகம் திரும்புவது, சிலருக்கு மனம் குளிரும் செல்வத்தையும், மலரும் நினைவுகளையும் தருகிறது. சிலருக்கோ சொல்ல முடியாத வேதனையையும், இருண்ட பக்கங்களையும் வாழ்வில் பெற்றுத் தருகிறது?

முஸ்லிம் குடும்பங்களின் பாஷையில் சொன்னால், சிலருக்கு பரக்கத்தாகவும், சிலருக்கு முசீபத்தாகவும் அமைந்து விடுகிறது. வளரும் பிள்ளைகளின் வாழ்க்கைப் படிக்கட்டுகளை, அருகாமையில் அவதானிக்கும் பொறுப்பான, அமானத்தான நாட்களை இழந்துவிட்டிருக்கும் எண்ணற்ற நண்பர்களை, உறவினர்களை நீங்கள் அன்றாடம் சந்திப்பீர்கள்! காசு பணம் சம்பாதித்து நாலு பேரைப் போல நானும் மனுஷனாகனும் என்ற எண்ணங்களைச் சுமந்து, பெற்றெடுத்த தாய், தகப்பனை, கண்ணீரில் மிதக்கவிட்டு, வெளிநாட்டுக்குச் சம்பாரிக்கப் போன எண்ணற்றப் பலரை நீங்கள் அன்றாடம் சந்திப்பீர்கள்! பல பெருநாள் தினங்களை, திருமண நாட்களை, வெறும் டெலிபோன் உரையாடல்களில் மட்டும் கொண்டாடி, பல வருடங்கள் இளமையையும் வீணாக்கி, வெளியே சொல்ல முடியாமல் அழும் பலரை நீங்கள் அன்றாடம் சந்திப்பீர்கள்.

மேலே குறிப்பிட்ட விசயங்களைப் பலர் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. காரணம் அந்த “”வெளிநாட்டுச் சம்பாத்தியம்” பண்ணும் நபர்களும், குடும்பத்தினரும் உடுத்தும் உடைகளும், சென்டும், கட்டிய வீடுகளும் அவர்களின் இன்னொரு பக்கத்தைப் பார்க்கத் தவறி விடுகிறது. அதே சமயம் குறைந்த சதவிகிதத்தினர் குடும்பத்தோடு வெளிநாட்டில் இருப்பதால் இப்பிரச்சனையின் ஆழம் சிலருக்குப் புரியாது. எது எப்படியோ, அதிகமான சதவிகிதம் பேர் வாழ்வின் பக்கங்களை தொலைத்து விடுகிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. இவர்கள் கண்களை விற்று விட்டு ஓவியம் வாங்கும் பரிதாபத்துக்குரியவர்கள்.

ஒருமுறை “”களவானி” என்ற திரைப்படத்தையும், “ஈசன்’ என்ற படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். குடும்பத் தலைவன் வெளிநாட்டு வேலைக்குப் போனதால் சீரழிந்த மகன் மற்றும் குடும்ப வாழ்வு காட்சிகள் என் மனதை பல நாட்கள் பிராண்டிக் கொண்டிருந்தன.

“ஈசன்’ படத்திலோ அன்பே உருவான தந்தை பிள்ளைகளுக்காக கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கி நகர்ந்த பிறகும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிள்ளைகளை இழக்கிறார். அங்கே பிரிந்து இருந்தது பிழையாகிப் போனது. இங்கே அருகில் இருந்தும் பிழை நிகழ்ந்து விடுகிறது. (படத்தைப் பற்றி மேலும் சிந்தித்தால் தலைப்பு மாறிவிடும்)

எது எப்படி இருப்பினும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் முன்னேறச் செய்து கொண்டிருக்க வேண்டும். பிள்ளைகளுடன் நண்பர்களைப் போல அவர்களுடன் உறவாட வேண்டும் அல்லது பிள்ளைகளின் நண்பர்கள் யார் என்றாவது அறிய வேண்டும். பிள்ளைகளின் வாழ்வியலில் தோழனாக இருக்க வேண்டும்… இப்படிப்பட்ட கனவுகள் எல்லாம் “வெளிநாட்டுச் சம்பாத்திய’ வாழ்வுகளால் தொலைந்து போய்க்கொண்டே இருக்கிறது.

காவிரி நீர் பிரச்சினை அரசியலாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டாலும் கூட, நிலத்தடி   நீர், மழைநீர் சேகரிப்புப் பற்றியயல்லாம் பேசுகிறோம். ஏதோ கொஞ்சம் அல்லது எங்கோ   சிலர் செய்து கொண்டுதான் உள்ளனர்.

தண்ணீர் மாசுபடுதல் அல்லது சுவாசிக்கும் காற்று மாசுபடுதல் இவை பற்றி நாம்   பெரிதாக அலட்டிக் கொள்வது இல்லை. எனினும் ஏதோ கொஞ்சம் அல்லது எங்கோ சிலர் சின்ன   பணிகள் செய்து கொண்டுதான் உள்ளனர்.

மோசமான வாகன விதி மீறல்களாலும், சாலைகளின் அகலப் பற்றாக்குறைகளாலும் தினம் தினம்   நமக்குத் தெரிந்தவர்கள், அல்லது உறவினர்கள் யாரும் இறந்தால், அது அன்றைய பேச்சோடு   முடிந்துவிடுகிறது. இறந்தவரைப் பற்றி வேண்டுமானால் கவலைப்பட்டிருப்போம். ஆனால்   மற்ற பாதுகாப்பு விதிமுறை, மூலகாரணம் இவை பற்றிப் பெரிதாக நாம் ஒன்றும்   அலட்டிக்கொள்வது இல்லை. இருப்பினும் ஏதோ கொஞ்சம் அல்லது எங்கோ சிலர் இதைப் பற்றி   கவலைப்படுகிறார்கள் பேசுகிறார்கள்.

இங்கே மேலே குறிப்பிட்ட இந்த 3 விசயங்களை அரசியலாக்காமல், இது சமூகப் பிரச்சினை; இவற்றின் விளைவால் ஏற்படும் நன்மை தீமை இரண்டும் நம் ஒவ்வொருவரையும் நம் குடும்பத்தினரையும், நம் சந்ததிகளையும் பாதிக்கும் என்ற கண்ணோட்டத்தில் அணுகி தொலைநோக்கான தீர்வு காண வேண்டும். இதை வாசிக்கின்ற யாருக்கும் இந்த 3 விசயங்களில் மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன். இந்த 3 விசயத்துக்கும் நிகரான 4வது விசயம் தான், வெளிநாட்டு சம்பாத்தியப் பயணங்களால் தொலைந்து போகின்ற வாழ்வின் பக்கங்கள்.

தாய் அல்லது தந்தை கண்காணிப்பு இல்லாமல் வளரும் பிள்ளைகள் சமூக அமைப்பின் சட்டம் ஒழுங்கின் ஆணி வேரைக் கெடுக்கிறார்கள் என்பது உண்மை. வீடு உருப்பட்டால் தானே, ஊர் உருப்படும். ஊர்கள் உருப்பட்டால் நாடு முன்னேறாதா? இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. வல்லரசாக மாறப்போகிறது என்று வாயால் பீற்றிக் கொண்டிருக்கிறோம்! பெரும்பாலான தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறை. அதே சமயம் 18 வயது முதல் 30 வயது வரை உள்ள வாலிபம் முறுக்கேறிய மனித வளம் அயல் நாடுகளில் மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து கொண்டும் உள்ளது. கிராமப்புற பொருளாதார மேம்பாடு என்றெல்லாம் பேசுகிறோம். பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் என்று ஆரம்பித்து இன்று பல மாவட்டங்களில் கிராமங்களில் இளைஞர்களே இல்லாமல் உள்ளன.

முறையான தொழில் பயிற்சி, தொழில் நுட்ப ஆலோசனை, நிதியை கையாளும் ஆலோசனை இவை இல்லாததால் வெளி நாட்டிலிருந்து திரும்பும் பல இளைஞர்கள் அங்கே சம்பாதித்த சில லட்சங்களை சொந்த ஊரில் இழந்து மீண்டும் வெளி நாட்டு வேலைக்குப் பெட்டியைக் கட்டும் அவலம் தொடர்கிறது. இந்த சமூக பிரச்சினைக்கு நம்மால் முடிந்த வழிகாட்டுதலை செய்யா விட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது!

நன்மையை ஏவுவோம்; தீமைகளைத் தடுத்த வண்ணம் இருப்போம்!

Previous post:

Next post: