ஊழலின் ஊற்றுக்கண்!

in 2013 செப்டம்பர்,தலையங்கம்

அரசு எவ்வழி, மக்கள் அவ்வழி! இது நமது முன்னோர்கள் கூறிய அமுத மொழி. ஆம்! ஆட்சியாளர்கள் நேர்மையாளர்களாகவும், நெறி தவறாமலும் நீதமான ஆட்சி நடத்தினால் நிச்சயமாக மக்களும் நேர்மையாளர்களாகவும், நெறி தவறாமலும் நீதமான வாழ்க்கை வாழும் நிலை ஏற்படும் என்பதில் சந்தேகம் உண்டா? அதற்கு மாறாக இன்றைய ஆட்சியாளர்கள் யார்? அவர்களின் உண்மையான நிலை என்ன? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

“”அயோக்கியர்களின் கடைசிப் புகழிடம் இன்றைய அரசியல்” என்று ஓர் அறிஞன் கூறியது பல ஆண்டுகளுக்கு முன்னராகும். அப்படியானால் இன்றைய அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் எத்தரத்தில் இருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இன்றைய அரசியல்வாதிகளுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை, மனசாட்சி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதைச் சமீபகால அவர்களின் நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. அரசியல் கட்சிகளும் தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்ற தீர்ப்பும், கிரிமினல் வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட எம்.எல்.ஏ., எம்பிக்களின் பதவி பறிக்கப்படும் என்ற தீர்ப்பும் அவர்களை எப்படி மானமிழந்து பதற வைத்தன என்பதை நாடறியும். நாங்கள் தப்புத்தண்டா செய்கின்றவர்கள் தான், சிவில், கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் தான், லஞ்சம், ஊழல் போன்றவற்றில் முங்கிக் குளிப்பவர்கள்தான். அதில் என்ன சந்தேகம்? ஆயினும் எங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்படுத்துவதற்கும், எங்களின் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளைப் பறிப்பதற்கும் எந்த உச்ச, உயர், கீழமை நீதி மன்றங்களுக்கும் அதிகாரம் இல்லை எனச் சட்டத்தைத் திருத்த அனைத்து அரசியல் கட்சிகளும், எவ்வித அபிப்பிராய பேதமும் இல்லாமல், ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயல்படும் போக்கு நமக்கு எதை உணர்த்துகிறது?

இப்படி மக்களுக்கு, குறிப்பாக ஏழை, பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நூற்றுக்கு நூறு பலன் தரும் சட்டமாக இருந்தாலும், அதில் இந்த அரசியல் கட்சிகளின் ஒன்றுபட்ட ஏகோபித்த நிலையைப் பார்க்க முடிகிறதா? இல்லையே! இங்கெல்லாம் அப்படிப்பட்டச் சட்டங்கள் நிறைவேறி நடைமுறைக்கு வந்துவிட்டால், ஆளும் கட்சியினரே அதன் பலனை அனுபவிப்பர். அவர்களுக்கே மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நமக்கு அதில் எவ்வித ஆதாயமும் இல்லை என்ற சுயநல, கெட்ட நோக்கோடு அந்த நல்லத் திட்டங்ளையும் கடுமையாக எதிர்க்கும் போக்கை எதிர்க் கட்சிகள் கடைபிடித்து வருவதைத் தானே பார்க்கிறோம்.

மக்கள் நலன் பெற வேண்டும் என்பதை விட தங்கள் ஆதாயமே குறிக்கோள் என்பதில் தானே இன்றைய ஒவ்வொரு அரசியல் கட்சியும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. ஆட்சியிலிருக்கும் கட்சிதான் பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு, பாலம் அமைத்தல், பாதைகள் போடுதல், இன்னும் இவைபோல் சில மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்து வேலை நடை பெற்றுக் கொண்டிருக்கும். இந்த நிலையில் அந்தக் கட்சி ஆட்சி இழந்து எதிர்கட்சி ஆட்சியில் அமர்ந்து விடும். இப்போது ஒப்பந்தக்காரர்களுடன் பேரம் பேசப்படும். ஒரு பெரும் தொகை கேட்கப்படும். கேட்பது கொடுக்கப்பட்டால் அப்பணிகள் தொடரும். இல்லை என்றால் அப்பணிகள் முடக்கப்படும். அதனால் பொது மக்களுக்குத் தாங்க முடியாத இடர்பாடுகள், வீண் செலவுகள் ஏற்பட்டாலும் ஆளும் கட்சி அதைக் கண்டு கொள்ளாது. கட்சி பேதமில்லாது இதுதான் எதார்த்த நிலை.

இப்படி ஆட்சியாளர்களுக்கு மாறி மாறி லஞ்சம் கொடுக்கும் ஒப்பந்தக்காரர்கள் அதைத் தங்கள் கையிலிருந்தா கொடுப்பார்கள்? மக்களின் வரிப் பணம் மூலம் நிறைந்துள்ள அரசுக் கருவூலத்திலிருந்து பெறும் தொகையிலிருந்து பெரும் பகுதியை இக்கட்சியினருக்கு தாரை வார்த்துவிட்டு, அவர்களும் அதுபோல் ஒரு பெருந் தொகையை ஒதுக்கிக் கொண்டு, ஒரு சிறு தொகையே குறிப்பிட்டப் பணிகளுக்காகச் செலவிடப்படும். அப்படியானால் அப்பணிகளின் நீடிக்கும் தரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.பொதுமக்களுக்குப் பெரி தும் நன்மை பயக்கும் நல்ல திட்டங்களில் இப்படி எதிரும் புதிருமாகச் செயல்படும் ஆளும் கட்சிகள், எதிர்கட்சிகள், பொது மக்களுக்குப் பெரிதும் கேட்டை உண்டாக்கி, இவர்களின் பைகளை நிரப்பும் திட்டங்களில் முனைப் புடன் ஒன்றுபட்டுச் செயல்படுவதைப் பார்க்கலாம்.

உதாரணத்திற்கு தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்திற்குள் அரசியல் கட்சிகளையும் கொண்டு வந்துள்ள தீர்ப்பையும், கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பையும் எந்த அளவு மும்முரமாக எதிர்த்து, அவற்றை முறியடிக்கும் வகையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி ஏகோபித்துச் சட்டத் திருத்தம் கொண்டுவர முனைப்புடன் செயல்படுவது இதை உறுதிப்படுத்துகிறது. அக்கட்சி களும், எம்.பி. எம்.எல்.ஏ.க்களும் நேர்மையாக நடந்து பொது மக்களுக்குப் பெரிதும் நன்மை விளைவிக்கும் இந்தத் தீர்ப்புகளை அவர்கள் எதிர்க்கும் போக்கே அவர்கள் யோக்கியர்கள் அல்ல; அயோக்கியர்கள், முறை தவறி மக்கள் சொத்துக்களைச் சூரையாடும் கயவர்கள் என்பதை உணர்த்தவில்லையா?

மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடலுக்கும் கேடு என்பதை மறுக்கும் அரசியல்வாதிகள் உண்டா? இல்லையே! அப்படிப்பட்ட மதுக்கடைகளை அரசே நடத்தி பொதுமக்களுக்குப் பெரும் கேடுகளை விளைவிக்கும் இந்த அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்லது செய்பவர்களா? கேடு விளைவிப்பவர்களா? ஆட்சியில் அமரும் எந்தக் கட்சியாவது இது பற்றி அக்கறை கொள்கிறதா? குறுக்கு வழியில் தங்கள் பைகளை நிரப்ப வழி என்ன? என்றுதானே கவலைப்படுகின்றன.

ஒரு தலைமுறைக்குமேல் மதுப் பழக்கம் இல்லாத தமிழ் மக்களை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த கட்சி மதுவிலக்கை நீக்கி குடிகாரர்களாக்கியது. அதிலிருந்து தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்த இரு கட்சியினரும் மாறி மாறி மது விற்பனையை தங்கள் கட்சிக்காரர்களைக் கொண்டு வளர்த்து லாபம் அடைந்தன. இந்த நிலையில் 2001ல் ஆட்சியில் அமர்ந்த கட்சி மது விற்பனையை அரசே “”டாஸ்மாக்” என்ற பெயரில் எடுத்து நடத்தும் கையாலாகாத கொள்கையை கையில் எடுத்து குறுக்கு வழியில் கொள்ளை அடிக்க முற்பட்டது. அதே கையாலாகாத குறுக்கு வழி கொள் கையை 2006ல் ஆட்சியில் அமர்ந்த கட்சியும் தொடர்ந்தது. இப்போது 2011ல் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த கட்சியும் அதே கொள்ளையைத் தொடர்கிறது. இரு கட்சியினரும் மாறி மாறி மதுவை தமிழகத்தில் ஆறாக ஓட வைக்கின்றன. இன்று 10 வயது சிறுவர், சிறுமியர்களும் குடிகாரர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர். தமிழகம் உருப்படுமா? சிந்தியுங்கள். அரசியல்வாதிகளுக்கு அதைப் பற்றியக் கவலை இல்லை. கோடி கோடியாய் மக்கள் பணத்தைத் தவறான வழிகளில் சுருட்டவே திட்டம் தீட்டுகின்றனர். உள்நாடு, வெளிநாடு பெரும் பணம் முதலைகளிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களை அவர்களுக்குத் தாரை வார்க்கும் திட்டங்களையே நடைமுறைப்படுத்துகின்றனர். இன்றைய ஆட்சியாளர்கள் இத்துடனாவது மன நிறைவடைகிறார்களா என்றால் அதுதான் இல்லை. ஏழை மக்களுக்கு உபகாரம் செய்வ தாகப் பசப்பிக் கொண்டு விலையில்லாப் பொருள்கள் எனக் கூறி அங்கும் அவற்றைக் கொள்முதல் செய்வதில் பெருந்தொகையை லஞ்சமாகப் பெறுகின்றனர். அவற்றைக் கொடுப்பதிலும் பெருத்த முறைகேடுகள். இவற்றுடனாவது திருப்தியடைகிறார்களா? அதுதான் இல்லை!

அரசு அதிகாரிகள், பணியாளர்கள் போன்றோரை நியமிப்பதிலும் கொள்ளையோ கொள்ளை. உச்ச, உயர், கீழமை நீதிமன்ற நீதிபதிகளாகட்டும், I.A.S. I.P.S. I.F.S அதிகாரிகளாகட்டும், பெரும், பெரும் இராணுவ அதிகாரிகளாகட்டும், எத்துறை பணியாளர்களாகட்டும், பல் கலைக்கழகத் துணை வேந்தர்களாகட்டும், பதிவாளர்களாகட்டும், பேராசியர்களாகட்டும், துறைத் தலைவர் களாகட்டும், மேல்நிலை, நடுநிலை, கீழ்நிலைப் பள்ளி களின் தலைமையாசிரியர்களாகட்டும், ஆசிரியர்களா கட்டும் இன்னும் இவைபோல் அனைத்துத் துறைகளின் பணியாளர்களாகட்டும் ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்காமல் பதவிகள் பெற முடியாத நிலை. ஆகக் கீழ் நிலைப் பணியான தோட்டியும் கூட பல ஆயிரம் லஞ்சம் கொடுத்தே அப்பதவியைப் பெற முடிகிறது.

கல்விக் கொள்ளை, மருத்துவக் கொள்ளை, மணற் கொள்ளை, கிரனைட் கொள்ளை, பெரும் சொத்துகள் கொள்ளை என அனைத்து வகைக் கொள்ளைகளில் முழுக்க முழுக்க ஊறித் திழைப்பது அரசியல் வியாபாரி கள் தங்களின் பினாமிகளைக் கொண்டேயாகும். நீதிமன்றத் தீர்ப்புகள் நியாய அடிப்படையில் வழங்கப்படாமல், லஞ்சம் கொடுத்து எப்படி வாங்கப்படு கின்றனவோ அதுபோல் படிப்புச் சான்றிதழ்களும் முறை யாகப் படித்துப் பெறப்படுவதில்லை. லஞ்சம் கொடுத்து வாங்கப்படுகின்றன. அப்படிப்பட்டவர்கள் ஆட்சிய ருக்கு லஞ்சம் கொடுத்துப் பெரும் பெரும் பதவிகளையும் பெற முடிகிறது. மக்களுக்கு அரசு வழங்கும் அடையாள அட்டைகள், உரிமங்கள், இன்னும் பலவகை அத்தாட்சிச் சீட்டுகளில், அவற்றைப் பெறுபவர்கள் பற்றிய பெயர், வீட்டு எண் மற்றும் விபரங்களிலுள்ள குளறுபடிகள் சம் பந்தப்பட்ட அந்த அதிகாரிகளின் தகுதியைப் பறை சாட்டுகின்றன.

ஒரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் 6 கோடி கொடுத்து அப்பதவியை அடையும் போது அவர் என்ன செய்வார்? கொடுத்த பணத்தைப் பன்மடங்காகப் பெருக்க லஞ்சம் பெற முணைப்புக் காட்டுவாரா? அதற்கு மாறாக நியாய உள்ளத்துடன் மக்களுக்குக் கல்விச் சேவையாற்ற முனைவாரா? சிந்தியுங்கள். இப்படிப் பதவிக்கேற்றவாறு கோடிக் கணக்கில், லட்சக் கணக்கில், ஆயிரக்கணக் கில் லஞ்சம் கொடுத்து அப்பதவிகளை அடைகிறவர்கள், மக்களுக்குத் தொண்டாற்ற முற்படுவார்களா? அதற்கு மாறாக லஞ்சமாகக் கொடுத்த பணத்தை ஒன்றுக்குப் பத்தாக லஞ்சமாகப் பெற முற்படுவார்களா? சிந்தியுங்கள்!

அதன் விளைவு, பொதுமக்கள் தங்களின் நியாயமான உரிமைகளைப் பெறுவதற்கு அரசுத் துறைகளை அணுகினாலும் அது அற்பமான ஒன்றாக இருந்தாலும் லஞ்சம் கொடுக்காமல் பெறவே முடியாது. அதன் பரிணாம வளர்ச்சி அரசியல்வாதிகள் போல் மனம் படைத்தவர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அரசு சொத்துக்களை யும், கருவூலத்திலிருந்தும், அநீதமாகப் பெறுவது மட்டு மல்ல, பிற மக்களின் சொத்துக்களையும் அநீதமாக அபகரிக்க முற்படுகிறார்கள். ஆக இப்படி காற்றுப் புக முடி யாத இடங்களிலும் இந்த லஞ்சப் பேய், ஊழல் பெருச்சாளிகள் புகுந்து நாட்டையே குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கின்றன.

ஆம்! இன்று நாட்டில் மிகமிக மலிந்து காணப்படும் லஞ்ச லாவண்யம், மற்றும் ஊழல் பெருச்சாளிகள் மலிந்து காணப்படுவதற்கு ஆட்சியாளர்களே முழுமுதல் காரண கர்த்தாக்களாக இருக்கிறார்கள். ஊழலின் ஊற்றுக் கண்ணாக அரசே திகழ்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் போலி ஜனநாயக ஆட்சி முறையேயாகும். மனிதக் கற்ப னையில் உருவான போலி ஜனநாயக ஆட்சி முறை ஒரு போதும் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சுபீட்சத்தைத் தராது. மக்கள் என்று மனிதக் கற்பனைகளான ஜனநா யகம், கம்யூனிசம், இன்ன பிற இசங்கள், மதங்கள் அனைத்தையும் கைகழுவி விட்டு அகிலங்களையும், அனைத்துப் படைப்புகளையும், ஜீவராசிகளையும், மனித குலத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் இணை, துணை, தாய், தந்தை, பிள்ளை, இடைத்தரகு எதுவுமே இல்லாத தன்னந் தனியனான இறைவனின் இறையாட்சியை நடை முறைப் படுத்த முன்வந்தால் மட்டுமே நாடும், மக்களும் சுபீட்சமடைவார்கள். அறிவுஜீவிகள் அதற்குரிய முயற்சி களில் ஈடுபட முன்வருவார்களா?

Previous post:

Next post: