சூது கவ்வும்

in 2013 டிசம்பர்

பெங்களூர், M.S.கமாலுத்தீன்

“”மக்களாட்சி சீருடன் நடைபெற அதற்கு முழு முயற்சியும் தன்னொழுக்கமும் ஜனநாயகம் பற்றிய பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளும் விருப்பமும் மக்களுக்குத் தேவை. இதற்குப் பெரும்பாலான மக்கள் தயாராக இல்லாதபோது அங்கு ஜனநாயகம் வீழ்ச்சி அடையும். மேலும் பெரும் பணக்காரர்களோ, ஆயுத பலம் கொண்டவர்களோ நியாயமாக ஒரு சமுதாயத்தை வழிநடத்தவே முடியாது. ஒரு சமுதாயத்தின் மிகச் சிறந்த மனமாற்றங்கள் மட்டுமே அந்த சமுதாயத்தை வழி நடத்தும்” – ப்ளேட்டோ

பாமரர்கள் நிறைந்த பாரத தேசம் இது. வெகுளித் தனம், வெளுத்ததெல்லாம் தூய்மையாக நினைக்கும் அறியா உள்ளம். குறைந்த நினைவுத் திறன். வார்த்தை ஜாலங்களைக் கைதட்டி ரசித்து உண்மையாக நம்பும், விழிப்புணர்வு இல்லாத வெகுஜன வாக்காளர்கள்தான் இந்தத் தேசத்தின் பலகீனம். சாணக்யனையும், சகுனியையும் முன்னுதாரணமாகக் கொண்டு அரசியல் சதுரங்கம் ஆடிவந்த மூத்த அரசியல் தலைவர்கள். முப்பது தலைமுறைக்குத் தேவையான சொத்துக்களை சேர்த்து வைத்து ஏழைப் பங்காளனாகவே காட்டிய வேஷம் நேற்று வரை நல்ல பலனைத் தந்தது.
இன்று சூது கவ்வியது, தர்மம் வென்று விட்டது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்படாத பீகார் மாநிலத்தில் அதாவது 1990ம் ஆண்டு முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான அரசு கால்நடைத் தீவனம் வாங்கியது. இதில் 950 கோடி ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. மாநிலத்தின் பல கருவூலங்களில் இருந்தும் போலி ரசீதுகள் மூலம் பணம் எடுக்கப்பட்டது. இதை ஊடகங்களும் எதிர்க் கட்சிகளும் கடுமையாகக் கண்டித்துப் போராட்டங்கள் நடத்தின.

இப்போது ஜார்கண்டு மாநிலத்தில் உள்ள “”சாய் பாசா” மாவட்டக் கருவூலத்தில் போலி ரசீது மூலம் ரூபாய் 37.7 கோடி சுருட்டப்பட்டது. இந்த ஊழலில் அன்று முதல்வராக இருந்த லாலுபிரசாத், மூன்று முறை காங்கிரஸ் சார்பில் பீகாரில் முதல்வராக இருந்த ஜகந்நாத் மிஸ்ரா மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் உட்பட 56 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழலை விசாரணை செய்ய 1996ம் ஆண்டு மார்ச் 11ந் தேதி பாட்னா உயர்நீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து லாலு மேல் முறையீடு செய்தார். உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச்27ம் தேதி லாலு மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. ஆதாரங்களை வலுவாகத் திரட்டியது.

1997ம் ஆண்டு ஜூன்23ம் தேதி சி.பி.ஐ. லாலுவுக்கு எதிராகக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. எதிர் கட்சிகள் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தின. வேறு வழி இல்லாமல் லாலு முதல்வர் பதவி விலகினார். தன் மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கி விட்டு ஜூலை 30ம் தேதி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் லாலு சரணடைய, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். 135 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 12ம் தேதி ஜாமீன் கிடைத்தது. அடுத்து அடுத்து நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், இவ்வழக்கை நீர்த்துப் போகச் செய்த சதிகள் என எல்லாவற்றையும் தாண்டி 2000, ஏப்ரல் 5ம் தேதி சி.பி.ஐ.யால் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

2001, அக்டோபர் 5ம் தேதி நிர்வாக வசதிக்காக பீகார் பிரிக்கப்பட்டது. ஜார்கண்ட் தனி மாநிலமாக, வழக்கு அங்கு மாற்றப்பட்டது. 2002 பிப்ரவரியில் விசாரணை தொடங்கினாலும் வாய்தாவில் தொடங்கி பல வழிகளில் முட்டுக்கட்டை போட்டார்கள். மத்தியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தால் ரயில்வே துறை அமைச்சரானார் லாலு. பயணிகள் கட்டணம் உயரவே இல்லை. லாபக் கணக்கைக் காட்டினார். சுதந்திர இந்தியாவில் ரயில்வே துறை லாபத்தில் இயங்கியது முதன் முறை இதுதான். இதுபோல் எல்லா துறைகளும் செயல்பட்டால் இந்தியா விரைவில் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இடம் பெறும் என ஊடகங்கள் புகழ்ந்தன. லாலு புகழ் பரவியது.

வழக்கு ஆமை வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது. பத்து வருட காலம் விசாரணையிலே வீணாய்ப் போனது. அவ்வப்போது சில செய்திகள் மட்டும் வெளியாகும், வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நினைவூட்ட. இந்த வருட ஆரம்பத்தில் வழக்கு வேகம் பிடிக்க ஆரம்பித்தது. நீதிபதியை மாற்றக் கோரி லாலு மனு செய்தார். உச்சநீதிமன்றம் உடனே தள்ளுபடி செய்தது. இரண்டு ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் பரபரப்புத் தீர்ப்பு வழங்கியது. இதை பொது மக்களும் வரவேற்றார்கள். நாடு முழுவதும் காரசார மான விவாதங்கள் நடைபெற்றன.

தற்போது மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களில் 30%பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது 162 பேர், இதுபோக 76 பேர் மீது கொலை, கற்பழிப்பு போன்ற கடுமையான கிரிமினல் வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(4) தண்டனை விதிக்கப்பட்டவர் எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருந்தால் 90 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அவர் பதவியில் தொடரலாம் எனக் கூறுகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எஸ்.ஜே. முகோபாத்யாய அவர்கள் இச்சட்ட பிரிவை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். மக்கள் பிரதிநித்துவச் சட்டம் 1957, விதி 8(4)ல் உள்ள சட்ட அதிகாரம், சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமாக (Witra Vires)  இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே தண்டனைப் பெற்ற மக்கள் பிரதி நிதிகள் உடனே தகுதி இழந்து விடுகிறார்கள் எனத் தீர்ப்புக் கூறினார்கள். இந்தத் தீர்ப்பை உடனே செயல்படுத்தினால் 76 எம்.பி.க்கள், 438 எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்க நேரிடும்.

அரசியல்வாதிகள் ஆடித்தான் போனார்கள். நாட்டின் மிக உயர்ந்த அதிகார அமைப்பு நாடாளுமன்றமே என்பதை எல்லோருக்கும் (குறிப்பாக உச்சநீதிமன்றத்துக்கு) நினைவுபடுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என கர்ஜித்தார்கள். மத்திய அரசு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது. நாங்கள் தீர்ப்பை மாற்ற முடியாது. நீங்கள் சட்டத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை முறியடிக்க அனைத்து கட்சிகள் ஆதரவுடன் அவசரச் சட்டம் தயாரானது. இந்த அவசரச் சட்டத்தால் முதல் பயனடையப் போகிறவர் லாலுவாக இருந்தாலும். தற்போதைய சட்ட அமைச்சரும் பிரபலமான வக்கீலான கபில் சிபல் மிகுந்த ஆர்வத்தோடு செயல்பட்டதுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. முதன் முதலாக நாடாளுமன்றத்துக்குள் பீகார் வழியாகத்தான் நுழைந்தவர். ராகுல் காந்தியின் ஆவேசம். சுத்த அபத்தமான சட்டம் இது, இதை ஜனாதிபதியும் நிராகரிக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசினார், தலைப்புச் செய்தியானது. பகிரங்க விமர்சனம் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் நாட்டு மக்களுக்கு நன்மையே.

கடந்த ஜூலை 10ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்புக்கு முதல் பலி “ரஷீத் மசூத்’ என்ற முஸ்லிம் எம்.பி. இவ்வளவு கேவலமான, சிறுமை அடைய இவர் செய்த காரியம் இதுதான். 1990-ல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த போது, திரிபுரா மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 1990-91ஆம் கல்வியாண்டில் மத்திய அரசு ஒதுக் கீட்டின் கீழ் தகுதி இல்லாதவர்களுக்கு முறைகேடாக இடம் ஒதுக்கியது தான் இவர் செய்த குற்றம். 17 ஆண்டுகளாக தில்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சிறப்பு நீதிபதி ஜே.பி.எஸ். மாலிக் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 60 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.

இந்தியாவில் முதன் முதலாகக் கட்சித் தாவலை தொடங்கி வைத்த சிறுமை ஒரு முஸ்லிமையே சாரும். 1937ல் உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளராக வெற்றி பெற்ற ஹபிஸ் முகமது இப்ராஹீம் என்பவர் காங்கிரஸில் இணைந்தார் கட்சித் தாவி. இத்தகைய பெயர் தாங்கி முஸ்லிம்களால் முஸ்லிம் சமுதாயம் அடையும் அவமானங்களுக்கு அளவேயில்லை. மறுமை என்பது இத்தகையவர்களுக்கு வெறுமையா? இந்திய மக்களுக்கு விழிப்புணர்வு அன்று முதல் இன்று வரை எள் மூக்கின் முனை அளவும் சம்மதமே இல்லாமல் இருப்பதால்தான், இத்தகையவர்கள் ஆட்சி அதிகாரங்களில் வலுவாக உள்ளார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் நீதிமன்றமே நாளைய சமுதாயத்திற்கு நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது.

நபி(ஸல்) அவர் கள் சொன்னார்கள் இப்படி “”உலக வாழ்வில் இரட்டை வேடம் போட்டவனுக்கு மறுமை நாளில் நெருப்பாலான இரண்டு நாக்குகள் இருக்கும்”. நூல்: அபூதாவூத், செய்தியாளர்: அம்மார்(ரழி)

பெரும்பான்மை அரசியல்வாதிகள் இப்படித்தான் இருக்கிறார்கள். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஐந்து ஆண்டு சிறையும் 25 லட்ச ரூபாய் அபராதமும் 11 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை மட்டும் போதாது. ஊழல் அரசியல்வாதிகள் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். ஆயுள் தடை விதிக்க வேண்டும் தேர்தலில் போட்டியிட.

சீனாவில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் ரூபாய் 22 கோடி லஞ்சம் பெற்றது-பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக 2011ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 2013 செப்டம்பர் 22ம் தேதி ஆயுள் தண்டனை விதித்து விட்டார்கள். இந்தியாவில் இருபது வருடங்களுக்கு மேல் ஆகவேண்டும் தண்டனை கிடைக்க. இந்த நிலையை நீதிமன்றங்கள் மட்டுமே மாற்ற முடியும். மேலும் அல்லாஹ் சொல்கிறான்.

“”எந்த ஒரு சமுதாயமும் தன் நிலையை தான் மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை” அல்குர்ஆன் 13:11. மாற்றம் மக்களிடம் வர வேண்டும். ஊழல் செய்தவர்களை இனி தேர்வு செய்யக் கூடாது என்ற உறுதி செயல்பாட்டுக்கு வருமேயானால் நல்ல ஆட்சி கண்டிப்பாக மலரும். இதை நாம் ஒவ்வொருவரும் செய்வோம். அதற்கான வழியை அல்லாஹ் நமக்கு இலகுவாக்கித் தரட்டும். ஆமீன்.

Previous post:

Next post: