மார்க்கப்பணிக்கு – மக்களுக்கு இமாமத் செய்வதற்கு கூலி வாங்குவது கூடுமா?

in 2014 மார்ச்

சித்தி நிஷா அஷ்ரபிய்யா,
மார்க்கப் பணிக்கு : மக்களுக்கு இமாமத் செய்வதற்குக் கூலி (சன்மானம் என்ற பெயரில்) வாங்குவது கூடும்!
விளக்கமளித்தவர் : “அல்ஜன்னத்’ பத்திரிகையின் முன்னாள் துணை ஆசிரியரும், மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசலின் இமாமுமான S.செய்யதலி பைஜி, நாகர்கோவில்.

இறைவசனங்களைச் செயல்படுத்துபவர்கள் மீது சாந்தி உண்டாவதாக! (20:47)
இறை வசனங்களில் ஒரே ஒரு வார்த்தையை மறுத்தாலும் அவர்கள் நிராகரிப்பாளர்கள்- காஃபிர்கள்.
இப்லீஸ் இறை வார்த்தையை மறுத்தக் காரணத்தினால்தான், அல்லாஹ்விடமே பெருமையடித்ததால் தான் காஃபிரானவர்களில் ஒருவனாக ஆகிவிட்டான். (38:74)

வானங்களும், பூமியும் அமானிதத்தைச் சுமக்கப் பயந்தன. மனிதன் ஏற்றுக் கொண்டான். (33:72)
முஃமின்கள் வெற்றி பெற்று விட்டார்கள்; அவர்கள் தங்கள் அமானிதங்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். (23:8)

எவர் அல்லாஹ் இறைநெறிநூலில் அருளியதை மறைத்து அதற்குக் கிரயமாக அற்ப தொகையைப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதனையும் உட்கொள்ளவில்லை. (2:174)

அல்லாஹ் இறக்கியருளியதைக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் காஃபிர்கள். (5:44)

நிச்சயமாக! இந்த குர்ஆன் முற்றிலும் நேரான பாதையைக் காட்டுகிறது.
குர்ஆனை ஓதுங்கள். அதன் மூலம் சாப்பிடவோ பொருள் திரட்டவோ செய்யாதீர்கள். வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடம் கூலி கேட்பவர்கள் தோன்றுவார்கள். (அஹ்மத், தஹாவி, தப்ரானி, திர்மிதி)

மேற்சொன்ன திருகுர்ஆன் வசனங்களை நாம் அவர் முன் எடுத்து வைத்து மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவது கூடுமா? என்று கேள்வி எழுப்பிய போது அவர் சொன்ன பதில் தான் கூடும். இவர்கள் தான் அல்லாஹ்வின் பாதையில் தன்னை அர்ப்பணித்தவர்கள். 2:273-ல் எங்களைத்தான் (அதாவது இறைவன் பாதையில் நாங்கள் முழு நேரப் பணியாளர்களாக இருப்பதால்) குறிப்பிடுகிறான். அதற்காக எங்களுக்கு உழைக்கச் சக்தி இல்லை என்று பொருள் இல்லை. எல்லோரும் உழைக்கச் சென்று விட்டால் மார்க்கத்தைச் சொல்ல ஆளிருக்காது. அதனால் எங்களைப் போன்றவர்களை இவர்கள் உழைக்க விடமாட்டார்கள். அதுவுமில்லாமல் இதற்குக் கூலி என்று பெயரும் கிடையாது.

தென்னை மரத்தில் ஏறுபவன் கூலியை நிர்ணயம் செய்து ஏறுவது போல் எந்த இமாமும் 3வக்து தொழ வைப்பேன் இவ்வளவு கூலி தரவேண்டும் 2 வக்து தொழவைப்பேன் இவ்வளவு கூலி தரவேண்டும் என்று நிர்ணயம் செய்வது இல்லை. மேலும் நபி(ஸல்) அவர் கள் தன்னுடைய 10 ஆண்டு மதீனா வாழ்க்கையில் தன்னுடைய குடும்பத்தின் அனைத்துப் பொருளாதாரத் தேவையையும் பைத்துல்மாலிலிருந்து தான் எடுத்துள்ளார்கள்! அவருக்குப் பின் வந்த கலீஃபா அபூபக்கரும்(ரழி) அவ்வாறே வாங்கியுள்ளார்கள். திண்ணைத் தோழர்களும் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மேலும் அல்லாஹ் 2:174ல் குறிப்பிடுவது யூதர்களைத் தானே தவிர நம்மை அல்ல.

எனவே கூலி இல்லை சன்மானம் வாங்குவது கூடும் என்று பதிலைத் தந்தார். மேலும் இது கூலி என்றோ, கூடாது என்றோ, சொல்வதற்கு ஒரு ஆதாரமேனும் உங்களிடம் உள்ளதா? என்று கேட்டதற்கு நாம் கையோடு கொண்டு சென்ற அந்நஜாத்தில் வெளியாகிய “புரோகிதத்தின் கூலி நரகமே’ என்ற கட்டுரையின் நகலைச் சமர்ப்பித்தோம். அபூ அப்துல்லாஹ்வின் ஆதாரம் இங்கு செல்லுபடியாகாது. வேறு எந்த அறிஞரின் (உலகளாவிய அளவில்) ஆதாரம் கொண்டு வந்தாலும் ஏற்கலாம் என்றும் கூறினார்.

எந்தக் கூலியும் வாங்காத இந்தத் தூதரை பின் பற்றுங்கள் என்று அல்லாஹ் ஏராளமான இடங்களில் கூறியிருக்க நபி(ஸல்) அவர்கள் கூலி வாங்கியிருப்பார்களா?

குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தூதர் செய்த இச்செயலை அல்லாஹ் கண்டிக்காமல் விட்டுவிட்டானா?

யூதர்களுக்கு, நஸாராக்களுக்கு, மஜூஸிகளுக்கு எனத் தனிதனி குர்ஆன் வசனங்கள் உள்ளனவா? அல்லது குர்ஆன் உலகப் பொது நெறிநூலா?

அபூ அப்தில்லாஹ்வின் ஆதாரம் ஏற்றுக் கொள்ளப்படாது என்று கூறும் இவர்கள் அதில் சொல்லப் படுவது அல்லாஹ்வின் கருத்தல்லவா என்பதை மறந்தது ஏனோ?

அரபி மொழி ஞானம் அதிகம் பெற்றவர்கள் நாங்கள் என்று கூறும் இவர்கள் மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு குர்ஆனிலிருந்தும், நபி மொழியிலிருந்தும் ஆதாரம் தராமல் நபி(ஸல்) அவர்கள் மீது கூலி வாங்கினார்கள், வரலாறில் இருக்கிறது என பொய்யுரைப்பது யாரை ஏமாற்றுவதற்கு?

“”என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள்” 25:30 திருகுர்ஆனின் இந்த வசனம் யாருக்காக இறங்கியது?

ஆசிரியர் விளக்கம் : பொய்யுரைப்பதில் மன்னர்கள், அண்டப் புளுகர்கள், ஆகாசப் பொய்யர்கள். மக்களை வழிகெடுப்பதில் இந்த மவ்லவிகளை விடக் கேடு கெட்டவர்கள் இந்த உலகில் காணப்படும் ஏனைய அனைத்து மதங்களின் மதகுருமார்களிலும் யாரும் இல்லை! காரணம் அவர்களில் யாரிடமும் இறையளித்தப் பாதுகாக்கப்பட்ட வாழ்வியல் வழிகாட்டி நெறிநூல் இல்லவே இல்லை. இந்த மவ்லவிகளிடமே பூரணப் படுத்தப்பட்ட இறைவனால் பாதுகாக்கப்பட்ட, யுக முடிவு வரை நடைமுறையில் இருக்கும் குர்ஆன் இருக்கிறது. இந்த மவ்லவிகள் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கேடுகெட்டவர்கள்; கண்ணிருந்து குருடர்கள், காதிருந்தும் செவிடர்கள். இவர்களின் மவ்லவி, ஆலிம் என்ற பெருமை இவர்களை நேர்வழியை, சத்தியத்தை ஒருபோதும் ஏற்க விடாது. அல்லாஹ்வாலேயே நேர்வழியை விட்டுத் திருப்பப்படுகிறார்கள். இதை நாம் கூறவில்லை. அல்லாஹ்வே 7:146 இறைவாக்கில் கூறுவதைப் படித்துப் பாருங்கள். இதோ அவ்விறைவாக்கு!

“உண்மையின்றி பூமியில் பெருமையடிப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி விடுவேன். அவர்கள் அனைத்து ஆதாரங்களைக் கண்ட போதிலும் அவற்றை ஏற்க மாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால், அதை ஏற்கமாட்டார்கள். தவறான வழியைக் கண்டாலோ அதையே ஏற்பார்கள். ஏனெனில், நம் அத் தாட்சிகளை அவர்கள் பொய்ப்பித்து, புறக்கணித்தும் வருகின்றனர். (7:146)

மேலும் தங்கள் மனம்போன போக்கில் இது ஹலால், இது ஹராம் எனப் பொய்யுரைப்பவர்கள் அடையப்போகும் கொடிய வேதனைகளை 10:59, 16:116,117, 6:20,21, 39:32,33, 6:157, 7:37, 10:17, 11:18, 16:105, 47:25,26, 51:10, 77:15 போன்ற இறைவாக்குகளைப் படித்து விளங்கி, இம்மவ்லவி களைப் புறக்கணித்து நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடிப்பவர்களே மறுமையில் வெற்றியடைந்து சுவர்க்கம் புக முடியும்.

அதற்கு மாறாகக் கூலிக்கு மாரடிக்கும், பெருமை யடிக்கும் இம்மவ்லவிள் இந்த குர்ஆன் வசனங்களை விளங்க முன்வருவார்கள் என நம்புகிறீர்களா? ஒருபோதும் அவர்களால் விளங்க முடியாது. காரணம் அவர்களின் மவ்லவி, ஆலிம் என்ற பெருமை காரண மாக நேர்வழியை ஒருபோதும் அவர்கள் ஏற்க மாட்டார்கள். கோணல் வழிகளையே சரிகாண்பார்கள் என்று அல்லாஹ் 7:146 இறைவாக்கில் கூறியிருப்பது பொய்யாகுமா? மேலும் ஹராமான உணவு, குடிப்பு, உடை, உறைவிடம் காரணமாக அவர்களின் உள்ளங்கள் கற்பாறைகளை விடக் கடினமாகிவிட்டன என்று 2:74, 5:13, 6:43,125, 57:16 இறைவாக்குகள் கூறுவது பொய்யாகுமா? மிகக் கொடிய ஹராமான வழியில் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள் பற்றி அன்றே நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளனர்; அது வருமாறு:

“ஒரு காலம் வரும் இஸ்லாத்தின் பெயரைத் தவிர வேறொன்றும் எஞ்சி இருக்காது, குர்ஆன் ஏட்டில் இருக்குமே அல்லாமல் வேறொன்றும் எஞ்சி இருக்காது. அவர்களின் பள்ளிகள் முற்றிலும் நேர்மைத் தவறியவர்களைக் கொண்டே நிரம்பி இருக்கும். அவர்களின் ஆலிம்கள் என்ற மார்க்க அறிஞர்கள் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடு கெட்டப் படைப்பாக இருப்பார்கள். தீய செயல்கள் அனைத்தும் அவர்களிலிருந்தே (கோழி குஞ்சுகளைப் பொரிப்பது போல்) பொரிச்சி வெளியாகும்.
பைஹகி 1908, மிஷ்காத் பாகம் 1. பக்கம் 91

கூலிக்கு மாரடிக்கும் இம்மவ்லவிகளைவிட, அபூ ஜஹீலின் வாரிசுகளை விட அவாம்களான பாமர மக்களே மார்க்கப் பிரசாரத்திற்கு முற்றிலும் தகுதியானவர்கள் என்று கூறும் 62:2 இறைவாக்கை விளங்கும் அற்ப அறிவுதானும் இம்மவ்லவிகளுக்கு இல்லை; அந்த அளவு மூளை வரண்ட ஜாஹில்களாக இருக்கிறார்கள்.

மேலே நாம் எடுத்தெழுதியுள்ள இறைவாக்குகளையும், இந்த ஹதீஃதையும் மீண்டும் மீண்டும் படித்து உணர்கிறவர்கள், இந்த மவ்லவிகளை விட பெரும் பொய்யர்கள், வழிகேடர்கள், துணிந்து மக்களை வழி கேட்டில் இழுத்துச் செல்கிறவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுகிறவர்கள் (தக்லீது) நாளை மறுமையில் நரகில் கிடந்து வெந்து கதறிக் கொண்டு, அவர்களை மிகக் கடுமையாக சபித்துக் கொண்டு ஒப்பாரி வைப்பதைக் கீழ்க்கண்ட வசனங்கள் நெத்தியடியாகக் கூறுவதை அறிய முடியும். அந்த இறைவாக்குகள் இதோ:

7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45.
இந்த இறைவாக்குகளில் சில குறிப்பிடும் பெருமை யடித்தவர்கள் இம்மவ்லவிகளையே சுட்டுகிறது.
மேலும் நாங்கள்தான் மவ்லவிகள், ஆலிம்கள், நீங்கள் எல்லாம் அவாம்கள், ஆடு, மாடு போன்றவர்கள், உங்களுக்கு குர்ஆன் விளங்காது, அபூ அப்தில்லாஹ் போன்றவர்களின் ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது, செல்லுபடியாகாது, உலகளாவிய அளவில் மவ்லவிகளாகி, ஆலிம்களாகிய வேறு எந்த அறிஞர்களின் ஆதாரம் கொண்டு வந்தாலும் ஏற்கலாம் என்று பெருமை பேசும் இம்மவ்லவிகள் நாளை நரகை அடைவதைக் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்கள் மேலும் உறுதிப்படுத்துகின்றன. அவை வருமாறு:
2:34, 7:146, 39:72, 17:37, 4:36, 57:23, 16:22,23, 28:83, 40:35,56,60, 7:36-40, 31:7,18, 11:10, 25:63.

மவ்லவிகள் நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள்; மக்கள் எங்களிடம்தான் மார்க்கம் பற்றிக் கேட்க வேண்டும் என்று மமதை-ஆணவம்-பெருமை பேசும் நிலை அவர்களை நரகில் கொண்டு சேர்க்கும் எனப் பல ஹதீஃத்கள் உணர்த்துகின்றன. அவற்றை நேரடியாகக் குறிப்பிடும் ஹதீஃத் எண்களைக் குறிப்பிட் டுள்ளோம். நீங்களே நேரடியாகப் பார்த்துப் படிப்பினை பெறுங்கள். புகாரீ: (ர.அ.) 4918, 6071, 6657, 4850.

இத்தனை குர்ஆன் வசனங்களும், ஹதீஃத்களும் இருந்தாலும் பெருமையடிக்கும் இம்மவ்லவிகள் நேர்வழியை ஏற்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அது ஒருபோதும் நடக்காது என்பதை 7:146 இறை வாக்கைப் படித்து உணர்கிறவர்கள் மட்டுமே ஏற்பார்கள்.

குர்ஆன் வசனங்கள் எடுத்துக் காட்டப்பட்டால் அவை குறைஷ் காஃபிர்களுக்குரியது. முஷ்ரிக்களுக் குரியது, யூதர்களுக்குரியது, கிறித்தவர்களுக்குரியது, மஜூசிகளுக்குரியது என்று மக்களை ஏமாற்றி வஞ்சிப் பவர்கள் இவ்வானத்தின் கீழுள்ள ஜன்மங்களிலேயே ஆகக் கேடுகெட்ட ஜன்மம், நரகில் அதுவும் அடித்தட்டில் கிடந்து வெந்து கரியாகும் ஜன்மம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
முன் சென்றவர்களின் குற்றங்குறைகளை இறுதி நெறிநூல் அல்குர்ஆனில் ஏன் சொல்ல வேண்டும்? அதனால் நமக்கு என்ன பலன்? தேவையின்றி அவர்களின் குறைகளைப் புறமாக அல்லாஹ் ஏன் சொல்லிக்காட்ட வேண்டும்? என்று சிந்திக்கும் அற்ப அறிவு இருந்தாலும் இப்படிப் பிதற்றுவார்களா? அந்தத் தவறுகளை முஸ்லிம்களாகிய நீங்கள் செய்தாலும் அது குற்றம்தான். நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை உணர்த்தவே அல்லாஹ் அல்குர்ஆனில் முன் சென்றவர்களின் குற்றச் செயல்களைச் சுட்டிக் காட்டுகிறான். அதை உணராத இந்த மவ்லவிகள் அந்த யூத, கிறித்தவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் அப்படியே பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஒரு பொந்தில் நுழைந்திருந்தாலும் இந்த மவ்லவிகள் அப்பொந்தில் நுழைகிறார்கள் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் முன் அறிவிப்புச் செய்துள்ளனர்.
(பார்க்க: புகாரீ 3456, 7319, 7320, முஸ்லிம் 5184)

இந்த மவ்லவிகள் தங்களை முழு நேரப் பணியாளர்கள் என்று கூறுவது ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்யாகும். ஐந்து நேரத் தொழுகைகளுக்கும் முன்பின் சுன்னத்துக்களை விடாமல் பேணித் தொழும் தொழுகையாளிகள் செலவிடும் நேரத்தைக் கூட இந்த இமாம்கள் ஒதுக்குவதில்லை. அந்தத் தொழுகையாளிகள் மண்ணையா சாப்பிடு கிறார்கள்? அல்லது 2:273 இறைவாக்குகள் கூறுவது போல் யாரும் பணம் கொடுக்கிறார்களா? இல்லையே!

2:273 இறைவாக்கு என்னக் கூறுகிறது? சுய உணர்வுடன் படித்துப் பாருங்கள்; யாரிடமும் எதையும் எதிர்பாராமல் 2:186 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பி, அவனிடமே கேட்பவர்களாக இருப்பார்கள். எங்கிருந்து வரும்? யார் தருவார்கள் என்று அறியவும் மாட்டார்கள்; எதிர் பார்க்கவும் மாட்டார்கள்; கேட்கவும் மாட்டார்கள். இந்த நிலையில் அல்லாஹ் சில செல்வந்தர்களின் உள்ளத்தில் போட்டு அவர்கள் தங்களின் ஜகாத், சதகா பணத்தை கொடுப்பதையே குறிக்கிறது. இதற்குத் திண்ணைத் தோழர்களான அஸ்ஹாபுஸ் ஸுஃப்பாக்களின் வழி காட்டல் முன்மாதிரியாக இருக்கிறது.

இதற்கு மாறாக மாதா மாதம் இவ்வளவு சம்பளம், போனஸ் எனப் பேசி அப்பணியைச் செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்ற நிலையில், அதுவும் எதிர் பார்த்த நிலையில் மாதா மாதம் சம்பளமாகப் பெறு வதைக் கூலி அல்ல அன்பளிப்பு எனக் கூறுபவர்கள் எப்படிப்பட்டப் பொய்யர்களாகவும், மூடர்களாகவும் இருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய 10 ஆண்டு மதீனா வாழ்க்கையில் தன்னுடைய குடும்பத்தின் அனைத்துப் பொருளாதாரத் தேவையையும் பைத்துல் மாலிலிருந்துதான் எடுத்துள்ளார்கள்” என்று தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய்யைக் கூறி இருப்பது அவர் அண்டப்புளுகர், ஆகாசப் பொய்யர் என்பதையும் அவர் மக்களுக்கு மார்க்க உபதேசம் செய்யக் கடுகளவும் அருகதையற்றவர் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

நபி(ஸல்) அவர்கள், மார்க்கப் பணிக்கு இங்குக் கூலி சம்பளம் இல்லை, அல்லாஹ்விடமே இருக்கிறது என்று கூறும் 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127, 145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 13 குர்ஆன் வசனங்களையும், கூலிக்குக் கடமையான மார்க்கப் பணி செய்கிறவர்கள் நேர்வழியில் இல்லை என்று கூறும் 36:21 வசனத்தையும், கடமையான மார்க்கப் பணியை கூலிக்கு-சம்பளத்திற் குச் செய்யும் இம்மவ்லவிகள் செய்யும் தில்லுமுல்லு களை, மக்களைத் துணிந்து ஏமாற்றி வழிகேட்டில் இட்டுச் செல்லும் தீச் செயல்களை பட்டியலிடும் 2:41,75,78,79,88,109,146,159,161,162,174, 3:78,187,188, 4:44,46, 5:41,63, 6:21, 25,56, 9:9,10,34, 11:18,19, 31:6 இந்த வசனங்களை எல்லாம் நன்கு அறிந்த நிலையில், மக்களுக்கு எடுத்து உபதேசித்த நிலையில், நபி(ஸல்) அவர்கள் தங்களின் குடும்பப் பொருளாதாரத் தேவைகளை பைத்துல்மாலிலிருந்து தான் எடுத்தார்கள் என்று தார்ப்பாயில் வடித் தெடுத்தப் பொய்யைக் கூறும் இவர் எந்த அளவு வழி கேட்டில் இருப்பார் என்பது நீங்கள் அறியாததல்ல.

அடுத்து கலீஃபாக்கள் சம்பளம் வாங்கியதை ஆதாரமாகத் தந்து கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதை நியாயப்படுத்தியுள்ளார். கலீஃபாக்கள் காலத்தில் அவர்கள் மட்டுமே கடமையான மார்க்கப் பணி புரிந்தார்களா? அதற்கு மாறாக நபி தோழர்கள், தாபியீன்கள் போன்றவர்களும் இமாமத் , பிரச்சாரம் போன்றவற்றில் ஈடுபட்டார்களா? எனச் சிந்தியுங்கள். அப்படி என்றால் அவர்களுக்கும் கூலி-சம்பளம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமே. கொடுக்கப்படவில்லையே? காரணம் என்ன?

கலீஃபாக்களுக்குக் கடமையான இமாமத், மார்க்கப் பிரசாரம் போன்றவற்றிற்குக் கூலி-சம்பளம் கொடுக்கப்படவில்லை. மக்களின் உலகத் தேவைகளை நிறைவேற்ற முழு நேரமாக இருந்து கவனிக்கும் ஆட்சியில் அமர்ந்திருந்ததே சம்பளம் கொடுக்கக் காரணமாயிற்று. நாமும் நம்மீது விதிக்கப்பட்டக் கடமையான தொழுகை, தங்களுடன் அன்றாடம் பழகுகிறவர்களுக்கு மார்க்கப் பிரசாரம் செய்வதற்கு (பார்க்க: 3:110, 9:71, 103:1-3) கூலி-சம்பளம் வாங்கக் கூடாதே தவிர, நம்மீது கடமையாக்கப்படாத விதிக்கப் படாத, செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை என்று நாளை விசாரிக்கப்பட்டுத் தண்டனையளிக்கப் படாத சேவைகளுக்குக் கூலி-சம்பளம் வாங்கத் தடையில்லை என்றுதான் குர்ஆன், ஹதீஃத் கூறுகிறது. அந்த அடிப்படையில்தான் கலீஃபாக்களுக்கும், கவர்னர்களுக்கும், ஆட்சிப்பணி புரிந்தவர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டது. இதை ஆதாரமாகக்காட்டி விதிக்கப்பட்ட, கடமையான மார்க்கப் பணிகளுக்கு கூலி – சம்பளம் வாங்குவது மிகக் கொடிய ஹராமாகும்.

எந்த அடிப்படையில் என்றால், குர்ஆன், ஹதீஃத் குறிப்பிடும் ஹராம்களில், கடமையான மார்க்கப் பணி அல்லாத இதர அனைத்து ஹராமான வழிகளிலும் ஒருவன் சாப்பிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை விட மிக மிகக் கொடிய ஹராமில் மூழ்கி இருப்பவர்களே கடமையான மார்க்கப் பணியைக் கூலிக்கு-சம்பளத்திற்குச் செய்யும் இம்மவ்லவிகள். இதர ஹராமான வழிகளில் சாப்பிடுகிறவன் தனக்கு மட்டுமே தீங்கிழைத்து மறுமையில் நரகை அடைகி றான். இந்த மவ்லவிகளோ தாங்களும் நரகையடை வதோடு 32:13, 11:118,119 இறைவாக்குகள் கூறும் எண்ணற்ற மக்களை நரகில் சேர்க்கும் கொடியவர்களாக இருக்கிறார்கள்.

உண்மையில் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட இம்மவ்லவிகள் மார்க்கம் பற்றிப் பேசவோ, மார்க்கத்தில் ஃபத்வா கொடுக்கவோ அணுவளவும் அருகதையற்றவர்கள். இம்மவ்லவிகளின் ஃபத்வாப்படி நடப்பவர்கள் நாளை நரகை அடைந்து இம்மவ்லவிகளைக் கடுமையாக சபிக்க நேரிடும்.

மிகமிக உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். இஸ்லாமிய மார்க்கத்தில் ஆலிம்கள், மதகுருமார்கள் என்றதொரு தனிப்பிரிவு-இனம்-ஜாதி இல்லவே இல்லை. எவன் தன்னை ஆலிம் என்கிறானோ அவன் வடிகட்டிய ஜாஹில்-அபூ ஜஹீலின் வாரிசு. 32:13, 11:118,119 இறைவாக்குகள் கூறுவது போல் நரகத்தில் தனது இடத்தைப் பதிவு செய்து கொண்டவர்களே தங்களை ஆலிம்கள்- மார்க்கம் கற்ற மேதைகள் எனப் பெருமையடிப்பார்கள். 2:186, 7:3, 18:102-106 குர்ஆன் வசனங்களை நிராகரித்து இம்மவ்லவிகளை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் முஸ்லிம்கள் 9:31 இறைவாக்குக் கூறுவது போல் அவர்களை வணங்குவதன் மூலம் முஷ்ரிக்கள் ஆகிறார்கள். அவர்கள் 32:13, 11:118.119 இறைவாக்குகள் கூறும் பெருங்கூட்டம் நரகை நிரப்பும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களே.

இந்த மவ்லவிகளை முற்றிலும் முழுவதுமாகப் புறக்கணித்து குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடிப்பவர்களே வெற்றியாளர்கள். நாளை அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கம் நுழைபவர்கள். ஆயினும் அவர்கள் மிகமிகச் சொற்பமானவர்களே!

Previous post:

Next post: