சூனியம்- சிஹ்ர்!!

in 2014 ஜூலை

அபூ அப்தில்லாஹ்

சூனியம்-சிஹ்ர் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அனைத்துத் தரப்பு மவ்லவிகளிடமும் கொடி கட்டிப் பறக்கின்றன. பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. வேதனைக்குரியது என்னவென்றால், குர்ஆனில் முஹ்க்கமாத் வசனங்கள் இரண்டாவது பொருளுக்கே இடமே இல்லாத ஒரேயொரு பொருளை மட்டுமே கொண்ட வசனங்கள், (3:7) அந்த வசனங்களை 2:159 வசனம் கூறுவது போல் தெள்ளத் தெளிவாகத் திட்டமாக, சர்வ வல்லமை மிக்க, முக்காலமும் அறிந்த அல்லாஹ்வே மனிதர்களுக்காகவே விளக்கி விட்டான். அவற்றில் இரண்டாவது பொருள் எடுப்பது அவற்றின் அசலான -சரியான பொருளை மறைப்பதாகும். அது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரது சாபத்திற்குரிய செயலாகும் (2:159-162) என்பதைக் கண்டு கொள்ளாமல், 7:146 வசனம் கூறுவது போல், அல்லாஹ்வாலேயே அந்த வசனங்களை விட்டும் கோணல் வழிகளில் திருப்பப்படுகிறார்கள் என்ற நிலையிலேயே மவ்லவிகள் எனப் பெருமை பேசும் அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகள் இருக்கிறார்கள்.

முஹ்க்கமாத் வசனங்களுக்கு மனம் போன போக்கில் மேல் விளக்கம் கொடுத்து விட்டு இறுதியில் “”அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்” என முடிக்கிறார்கள். இந்த இறுதி வாசகம் யாரை ஏமாற்ற? அல்லாஹ்வையா? அல்லது தங்களை நம்பி தங்கள் பின்னால் கண்மூடி வரும் (தக்லீத்) அப்பாவிகளை ஏமாற்றவா? உண்மையில் அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர்களாக இருந்தால் அல்லாஹ்வே 2:159-ல் சொல்வது போல் தெளிவாக விளக்கிய பின்னர் இம்மவ்லவிகள் அவற்றிற்கு மேல் விளக்கம் கொடுக்கத் துணிவார்களா? சிந்தியுங்கள்!

உண்மையும், நேர்வழியும் குன்றிலிட்டத் தீபமாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக தெள்ளத் தெளிவாக இருக்கும் நிலையில், இந்த மவ்லவிகளும், அவர்களின் முன்னோர்களும், 3:7 குர்ஆன் வசனம் கூறும் ஒரே பொருளுள்ள முஹ்க்கமாத் வசனங்களுக்கு வேறு வேறு பொருள்கள் கொண்டு தஃப்சீர் என்ற பெயரால் பக்கங்களைப் பாழாக்கி இருப்பதுடன், முஸ்லிம் சமுதாயத்தையும் 21:92, 23:52 இறைக் கட்டளையை நிராகரித்து குஃப்ரிலாகி (2:39) எண்ணற்றப் பிரிவுகளாக்கி, பெருங்கொண்ட மக்களை வழிகேட்டிலாக்கி, இம்மவ்லவிகள் அற்பமான இவ்வுலக ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். (பார்க்க : 2:174,175,176, 31:6)

இறைவனின் இறுதி நெறிநூலான அல்குர் ஆன் இரவும் பகலைப் போல் தெள்ளத் தெளிவாகவும், நேரடியாகவும் ஒரே நேர்வழியைக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரே பொருளுள்ள முஹ்க்கமாத் வசனங்களுக்கு, முன் சென்றவர்களின், இப்போதுள்ளவர்களின் மேல் விளக்கங்களை ஏன் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்று சிந்தித்தால், ஓர் உண்மை நமக்குப் புலப்படுகிறது.

முஹ்க்கமாத் வசனங்களுக்கு தஃப்சீர் என்ற பெயரால் 2:159 இறைவாக்குக் கூறுவது போல், அவற்றின் உண்மைக் கருத்தை மறைத்து மேல் விளக்கம் கொடுத்து எழுதி இருப்பதைத் தூக்கிப் பிடித்தால்தான், அந்தச் சந்தடிச் சாக்கில் இவர்களும் 7:3, 9:31, 18:102 குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி(2:39) அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்குமிடையில் இடைத் தரகர்களாகப் புக முடியும். மதகுருமார்கள் மவ்லவிகள் என பெருங்கொண்ட மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க முடியும். முன்னோர்களை முன்மாதிரியாகக் கொண்டு இவர்களும் தங்கள் மனம் போனபோக்கில், மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு ஒரே பொருளுள்ள முஹ்க்கமாத் வசனங்களுக்கு விதவிதமாக மேல் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுத்து நரகில் தள்ள முடியும். ஷைத்தானிடம் பட்டம் பெற முடியும். தாஃகூத்களாக முடியும்.

இந்த இலட்சிய அடிப்படையில்தான் இந்த சூனியம்-சிஹ்ர் பற்றிய குர்ஆன் வசனங்களிலும் தங்கள் மனம் போக்கில் மேல் விளக்கங்கள் கொடுத்து, அவர்கள் வழி கெடுவதோடு பெருங்கொண்ட மக்களையும் வழி கெடுக்கிறார்கள். 32:13, 11:118,119 வசனங்கள் கூறுவது போல் நரகை நிரப்ப வழிகாட்டுகிறார்கள். இன்னொரு காரணம், இந்துக்களின் குருகுல மடங்கள் போல், கிறித்தவர்களின் குருத்துவக் கல்லூரிகள் போல், மதகுருமார்களை உருவாக்கும் மதரசாக்கள், இவர்களின் ஆரம்ப நிலையிலேயே, குர்ஆனை விளங்க அரபு இலக்கண, இலக்கியங்களில் முழுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 16 கலைகள் கற்றுத் தேறி இருக்க வேண்டும். அது இப்போது சாத்தியமில்லை. முன்சென்ற சாதாத்துகள், அகாபிரீகள், இமாம்கள் அவற்றில் முழுத்தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் குர்ஆனுக்குக் கொடுத்துள்ள விளக்கத்தின்படிதான் நடக்க வேண்டும் என்று இம் மவ்லவிகள் மூளைச் சலவைச் செய்யப்பட்டதாகும்.

முன்னோர்களையோ, பின்னோர்களையோ, இம்மவ்லவிகளையோ நம்பாமல் 2:186 வசனம் கூறும் இறைவனது கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து அல்லாஹ்வையே முற்றிலும் முழுவதுமாக நம்பி, 29:69 இறைவனது கட்டளைப்படி குர்ஆனில் காணப்படும் 2:102, 5:110, 61:6, 6:7, 7:101,109,112,113,116,120, 10:2, 76,77,79, 80,81, 11:7, 15:15, 17:47, 20:57, 58,63,66,70,71, 73, 21:103, 25:8,47, 26:34, 35, 37, 38, 40,41,49, 153,185, 27:13, 28:36,48, 34:43, 37:15, 38:4, 40:24, 43:49, 46:7, 51:39,52, 52:15, 54:2, 74:24 இந்த குர்ஆன் வசனங்களில் சூனியம், சூனியம் செய்பவர், சூனியம் செய்யப்பட்டவர் என்று காணப்படும் அனைத்து வச னங்களையும் நேரடியாக, சுய சிந்தனையோடு படித்து அறிகிறவர்கள் சூனியம் பற்றிய உண்மைக் கருத்தை நிச்சயம் அறிய முடியும். தஃப்ஸீர் என்ற பெயரால் 7:3, 33:36, 53:2,3,4,5, 59:7 குர்ஆன் வசனங்களுக்கு முரணாக ஹிஜ்ரி 300க்குப் பிறகு எழுதிக் குவிக்கப்பட்டுள்ள மனிதர்களின் சுய கருத்துக்களுக்கு, மேல் விளக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அவை நம்மை வழிகேட்டில்தான் இழுத்துச் செல்லும்.
இப்போது 2:102 குர்ஆன் வசனம் நேரடியாக என்ன கூறுகிறது? அவ்வசனத்திற்கு எப்படியெல்லாம் விளக்கம் என்ற பெயரால் வழிகேடுகளைப் புகுத்தி இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

2:102 குர்ஆன் வசனத்தின் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பு :
சுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத் தான்கள் ஓதியவற்றையே அவர்கள் பின்பற்றி னார்கள். ஆனால் சுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள், அவர்கள் தான் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர். இன்னும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (கற்றுக் கொடுத்தார்கள்). ஆனால் அந்த(மலக்குகள்) இருவரும் “”நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள் என்று சொல்லி எச்சரிக்காத வரை, எவருக்கும் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் கணவன்- மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் நாட்டமின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கையும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்தவித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் பகரா : 2:102)

இந்த வசனத்தை நேரடியாகப் படித்து விளங்கும் ஒரு பாமரனும் சூனியம் என்ற ஒரு தீய சோதனை நிலை இருக்கிறது என்பதை விளங்க முடியும். ஷைத்தான்கள்தான் அதை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றனர். அத்துடன் கணவன் மனைவியருக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தும் தீச்செயலை ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகள் கற்றுக் கொடுத்தனர். அதன் தீமையைத் தெளிவாக விளக்கி, அதைக் கற்பதன் மூலம் காஃபிராகும் கொடிய பாவச் செயல் ஏற்படும் என்று எச்சரிக்காமல் அம்மலக்குகள் கற்றுக் கொடுக்கவில்லை.

அம்மலக்குகளின் கடும் எச்சரிக்கையை மீறியே சிலர் அத்தீச்செயலைக் கற்றுக் கொண்டனர். ஆயினும் அல்லாஹ்வின் நாட்டமின்றி யாருக்கும் எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்த முடியாது. அதற்கு மாறாக அதைக் கற்றுக் கொண்டவர்கள் தங்களுக்குத் தாங்களே பெரும் தீங்கிழைத்துக் கொண்டனர். நாளை மறுமையில் எவ்விதப் பாக்கியமும் இல்லாமல் பெரும் நட்டத்திற்கு ஆளாகிறார்கள் என்று தெளிவாக நேரடியாக, எவ்வித முரண்பாடும் இல்லாமல் 2:102 இறைவாக்கு உறுதியாகக் கூறுகிறது. அரைகுறை படிப்புள்ள பாமரனும், எழுதப் படிக்கத் தெரியாத தற்குறியும் இந்த வசனத்தை யாரும் படிப்பதைக் காதால் கேட்ட மாத்திரத்தில் அன்றைய பெரும்பாலான நபி தோழர்கள் போல் மிக எளிதாக அதன் கருத்தை எவ்விதக் குழப்பமும் இல்லாமல் சரியாக விளங்க முடியும். இதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.

இப்போது இந்த 2:102 நேரடி வசனத்தை, இந்த அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளும் சுய விளக்கம் கொடுத்து எப்படியெல்லாம் 2:159 வசனம் கூறுவது போல் நேரடிக் கருத்தை மறைத்து மக்களைக் குழப்பத்தில் ஆக்குகிறார்கள் என்று பார்ப்போம்.

அவர்களில் ஒரு பிரிவினர் குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்றுகிறோம் என்று வாயளவில் சொல்லி மார் தட்டுவோர், 2:102-ல் காணப்படும் “”அல் மலக்கைனி” என்ற பதம் அதற்கு அடுத்து வரும் ஹாரூத், மாரூத்தைக் குறிக்கவில்லை அவர்கள் இருவரும் ஷைத்தான்கள், 2:102-ல் இருக்கும் “”அல்மலக்கைனி” என்ற பதம் அதற்கும் 5 வசனங்களுக்கு முன்னருள்ள 2:98-ல் காணப்படும் ஜிப்ரீலையும், மீக்காயிலையுமே குறிக்கிறது என்று சுய விளக்கம் கொடுக்கின்றனர். தனது குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பில் ஹாரூத், மாரூத் என்ற இரு மலக்குகளை இரு ஷைத்தான்களாக்கி எழுதி இருப்பதோடு சுய விளக்கமும் கொடுத்துள்ளார். 33:36 இறைவாக்குக் கூறுவது போல் பகிரங்க வழிகேட்டிலாகி இருக்கிறார்.

அதாவது 2:98-ல் குறிப்பிட வேண்டிய “அல் மலக்கைனி’ என்ற அரபி பதத்தை அல்லாஹ் தவறாக 2:102-ல் குறிப்பிட்டுள்ளான் என்று நேரடியாகக் குற்றம் சாட்டாமல் மறைமுகமாகக் குற்றம் சாட்டுகிறார், அதாவது 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்பட்டுள்ளார். அல்லாஹ் செய்துள்ள தவறை (நவூதுபில்லாஹ்) தான் மேல் விளக்கம் மூலம் சரி செய்வதாக ஆணவத்துடன்-பெருமையுடன் செயல்படுகிறார். பாவம்! 7:146 குர்ஆன் வசனத்தை அவரால் முறையாக விளங்க முடியவில்லை. மனித குலத்தினரை பெரும் வழிகேட்டில் இழுத்துச் சென்று நரகில் தள்ளும் ஷைத்தானை மிகவும் கேடுகெட்ட செயல்களைச் செய்பவனை அல்லாஹ் படைத்திருக்க முடியாது என்ற சூனிய வாதத்தை தேவைப்பட்டால் மேற்படியார் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த மேல் விளக்கத்திற்கு ததஜ மத்ஹப் இமாம்(?) சொல்லும் விளக்கம் வேடிக்கையானது. அவரது அறிவு சூனியத்தை அம்பலப்படுத்துகிறது. அவர் கொடுக்கும் மேல் விளக்கம் இதுதான். அதாவது மலக்குகள் தீய செயலைச் செய்ய ஒருபோதும் கற்றுக் கொடுக்க மாட்டார்கள் என்பதுதான் அவரது மேல் விளக்கம். மார்க்கத்தின் அடிப்படையையே விளங்க முடியாத இவரெல்லாம் தன்னை மெத்தப் படித்த மேதை என பெருமை கொள்வதுதான் வேடிக்கையாகும். அப்படிப்பட்ட அறிவு சூனியத்தை பெரும் மார்க்க அறிஞராகக் கருதி அவர் பின்னால் கண்மூடிச் செல்பவர்கள் மிகுந்த பரிதாபத்திற்குரியவர்கள். நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு தங்கள் தலையில் வைத்து கொண்டாடியவரையே கடுமையாகச் சபிக்கப் போவதை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இறைவசனங்கள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் அம்பலப்படுத்துகின்றன.

மார்க்கத்தின் அடிப்படையை 51:56 குர்ஆன் வசனம் நேரடியாகக் கூறுகிறது. படித்துப் பாருங்கள்.
“”ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிந்து நடப்பதற்காகவே அன்றிப் படைக்கவில்லை” (51:56)
இந்த குர்ஆன் வசனத்தில் ஜின் இனமும், மனித இனமும் மட்டுமே பரீட்சை வாழ்க்கையாக-சோதனை வாழ்க்கையாகப் படைக்கப் பட்டிருக்கிறார்கள். அந்த இரண்டு இனங்களுக்கு மட்டுமே ஏவல், விலக்கல், செய்யலாம், செய்யக்கூடாது, நல்லது, கெட்டது போன்ற கட்டுப்பாடுகள் எல்லாம். மலக்கினம் இதில் சேர்க்கப்படவே இல்லை. அப்படியானால் மலக்குகள்-வானவர்கள் யார்? அவர்கள் அல்லாஹ்வின் வேலையாட்கள்.

அல்லாஹ் கட்டளையிடுவதை அப்படியே அணுவும் பிசகாமல் கண்மூடி நிறைவேற்றுபவர்களே மலக்குகள். சூறைக் காற்று, சுனாமி, பிரளயம், நிலநடுக்கம், இடி மின்னல், பேய் மழை என லட்சக்கணக்கான மக்களை வாரிச் செல்லும் பெரும் சோதனைகளை மலக்குகள் நற்செயல்கள் என்றா நிறைவேற்றுகிறார்கள். மலக்குகளோடு நற்செயல்களையும் தீய செயல்களையும் சம்பந்தப்படுத்தி மார்க்கச் சட்டம் கூறுகிறவர்கள் அறிவு சூனியன்களாக மட்டுமே இருக்க முடியும். இந்த உண்மையை அதாவது மலக்குகள் சோதனைகளுக்கு உட்பட்டவர்களா என்பதை 2:124,155,249, 3:152,154,186, 4:6, 5:48,94, 6:165, 7:141, 163,168, 8:17, 10:30, 11:7, 14:6, 16:92, 18:7, 21:35, 27:40, 33:11, 37:106, 47:4,31, 68:17, 89:15,16 குர்ஆன் வசனங்களை நீங்களே நேரடியாகப் படித்து விளங்க முடியும்.

மலக்குகள் தீய செயலைக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். எனவே ஹாரூத், மாரூத் இரண்டு மலக்குகள் அல்ல; ஷைத்தான்கள் என்ற அவர்களின் மடமை வாதத்தை நிலைநாட்ட தங்களின் அரபு மொழி ஆணவத்தையும் பெருமையையும் வெளிப்படுத்தியுள்னர். அதாவது 2:102-ல் “”அல்மலக்கைனி” அந்த மலக்குகள் என்று அல்லாஹ் கூறியுள்ளானாம். “”மலக்கைனி” என்று மட்டும் இருந்தால் ஹாரூத், மாரூத் இருவரையும் மலக்குகளாக ஏற்றுக் கொள்ளலாம். “”அல்” என்று சேர்ந்து வந்திருப்பதால் அந்த மலக்குகள் அதாவது 2:98-ல் காணப்படும் ஜிப்ரீலையும், மீக்காயிலையுமே குறிக்கின்றனவாம். ஆகா! என்னே அரபு மொழிப் புலமை? தர்கா வழிபாட்டுக்காரர்கள் 18:110 குர்ஆன் வசனத்தில் “”இன்னமா அன பஷருன் மிஃத்லு(க்) கும்” நிச்சயமாக “”நான் உங்களைப் போன்ற மனிதனே” என்றிருப்பதை “”நான் உங்களைப் போன்ற மனிதனே இல்லை” என்று தங்களின் அரபு மொழி புலமை கொண்டு அறிவீனமான வாதத்தை வைப்பது போல், ததஜ இமாமும்(?) ஓர் அறிவீனமான வாதத்தையே வைத்துள்ளார். அதாவது அபூ ஜஹீல் வாதத்தையே வைத்துள்ளார். ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து நரகத்தை நிரப்புவேன், வழிகேட்டை நேர்வழியாகவும், தீயவற்றை நல்லவையாகவும் காட்டுவேன் என்று சபதம் ஏற்று வந்துள்ள ஷைத்தான்கள், “”நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். இதைக் கற்று நீங்கள் காஃபிர் களாகிவிடாதீர்கள்” என்று எச்சரித்த பின்னர் அதைக் கற்றுக் கொடுத்திருக்க முடியுமா? என்ற சாதாரண அறிவும் இல்லாத இவரைப் பெரும் மேதையாகக் கருதிக் கண்மூடிப் பின்பற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாவப்பட்டவர்கள், பரிதாபத்திற்குரியவர்கள்.

அல்குர்ஆன் 7:157,158, 62:2 குர்ஆன் வசனங்கள் என்ன கூறுகின்றன? எழுதப் படிக்கத் தெரியாத உம்மிகளிலிருந்தே (பாமரர்) அவர்களுக்காக அவர்களிலிருந்தே ஓர் உம்மியைத் தேர்ந்தெடுத்து இந்த குர்ஆனை இறக்கியுள்ளான் அல்லாஹ். அன்று அரபி மொழி இலக்கண, இலக்கியம், கவிப்புலமை அனைத்தும் தேவைக்கும் அதிகமாகக் கொண்டிருந்த தாருந்நத்வா ஆலிம்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அல்லாஹ் குர்ஆனை இறக்கவில்லை. இந்த மவ்லவிகளின் அரபு மொழிப் பெருமை உண்மை என்றால் அன்று “”அபுல் ஹிக்கம்” – ஞானத்தின் தந்தை என குறைஷ்களால் ஏற்றிப் போற்றப்பட்டவனுக்கே குர்ஆன் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அந்த அரபு மொழிப் பண்டிதனுக்கு குர்ஆன் இறக்கப்படாதது மட்டுமல்ல; அவனை நபி(ஸல்) அபூ ஜஹீல் என்றும், தாருந்நத்வா ஆலிம்களை ஜாஹில்கள் என்று இந்த உம்மத்திற்கு அடையாளம் காட்டினார்கள். இன்றைய இந்த மவ்லவிகளும் அந்த அபூ ஜஹீலின் நேரடி வாரிசுகளாகவே தங்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.
இப்படி அரபு மொழி பெருமை பேசுகிறவர்களையே 7:146 குர்ஆன் வசனம் குன்றிலிட்டத் தீபமாக அடையாளம் காட்டுகிறது. அவர்கள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே தங்களுடைய வழியாகக் கொள்வார்கள். அல்லாஹ்வே அவர்களை அவனது வசனங்களிலிருந்து அவர்களைத் திருப்பி விடுகிறான். அல்லாஹ்வின் இந்த வாக்குகள் பொய்யாக முடியுமா?

சூனியம் பற்றி அவர்களின் இன்னொரு அறிவு சூன்யப் பேச்சு என்ன தெரியுமா? எவ்விதச் சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அப்படி நம்புவது மூட நம்பிக்கையாகும் என்பதே அவர்களின் அறிவு சூனிய வாதமாகும்.

புறச்சாதனங்கள் இல்லாமல் உடலில் காயங்கள் ஏற்படுத்தவோ, கைகளை, கால்களை முறித்து முடமாக்கவோ முடியாது என்பது உண்மைதான். புறச்சாதனங்கள் இல்லாமல் உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்பது அவர்களின் தவறான அறிவீன வாதமாகும். இவரையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவன் இவரை மிகமிக மட்டரகமாக அர்ச்சிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இவரது உள்ளத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மன அமைதியுடன் இருப்பாரா?

கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும், மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவனும் இறந்து விட்ட செய்திகளை அறியத்தானே செய்கிறோம், நோய் பாதிப்பு கால் பங்கு என்றால் அதனால் ஏற்படும் வியாகூலம்-மனக்கவலை ஏற்படுத்தும் பாதிப்பு முக்கால் பங்கு என்பார்கள். நோயை மருந்து கால் பங்கு குணப்படுத்து மென்றால், மருத்துவரின் ஆறுதல் வார்த்தைகள், முக்கால் பங்கைக் குணப்படுத்தும். சூனியம் தனக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற மிகமிக உறுதியான எண்ணத்துடன் இருப்பவருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது. அதே சமயம் சூனியம் தனக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று மனதில் கவலை கொள்பவனுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்; எப்படி என்று பாருங்கள்?

சூனியம்-பூஜ்யம்-00000000000 இந்த சூனியங்களுக்கு ஏதாவது மதிப்பு இருக்கிறதா? இல்லைதானே! அதே சமயம் இந்த சூனியங்களுக்கு முன்னால் 1 லிருந்து 9 வரை போட்டுப் பாருங்கள். இப்போது அந்தச் சூனியங்கள் எவ்வளவு பெரிய மதிப்பைப் பெறுகின்றன. இப்போது 0 என்ற சூனியம் கூட கூடஅதன் மதிப்பும் எப்படி எகிறுகின்றது என்று நோட்ட மிட்டுப் பாருங்கள். இந்தப் பிரபஞ்சமே சூனியத்திலிருந்து அதாவது இல்லாமையிலிருந்து உண்டானது தான். ஒவ்வொரு மனிதனும் இல்லாமையிலிருந்து தான் உண்டாகிறான். உலகில் காணப்படும் அனைத்துப் படைப்புகளும், உயிரினங்களும் சூனியம்-இல்லாமையிலிருந்துதான் தோன்றுகின்றன. இப்போது புரிகிறதா? சூனியத்தின் எதார்த்த நிலை?

பெரியாரிய நாத்திகச் சிந்தனைக்கு ஆளானவர்கள்தான் சூனியம் என ஒன்று இல்லை. அதனால் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்று கூற முடியும். பெரியார் என்ன நினைத்தார்? கடவுளின் பெயரைச் சொல்லித் தானே இந்த ஒட்டு மொத்த மதகுருமார்களும் மனித குலத்தை அழிவில் புகுத்தும் அனைத்து வித அநியாய, அட்டூழியங்கள், மூட நம்பிக்கைகள், மூட சடங்கு சம்பிரதாயங்கள் இவற்றை அரங்கேற்றி அவர்கள் வயிறு வளர்த்து வருகிறார்கள். கடவுளே இல்லை என்று நிலைநாட்டி விட்டால், மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் இந்த அநியாய, அட்டூழியங்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகப் போய்விடும் என மூடத்தனமாக நம்பி, கடவுளை மற, மனிதனை நினை எனப் பிரசாரம் செய்தார். விளைவு மத குருமார்களின் அநியாய அட்டூழியங்கள் மேலும் மேலும் வளர்ந்து வருகின்றனவே அல்லாமல் குறைந்தபடில்லை. ஏன்? பெரியாரின் தொண்டர்கள் என்று மார்தட்டும் பலரிட மும் இவை மலிந்து காணப்படுகின்றன. இவர்களும் இதய தெய்வம் எனக் கூறி எண்ணற்றக் கடவுள் சிலைகளை வடித்து அவற்றிற்கு மாலை மரியாதை செய்து அவற்றை வணங்கி வழிபடுகின்றனர். பொய்க் கடவுள்களின் எண்ணிக்கையைக் கோடி கோடியாக அதிகரிக்கத் துணை போகின்றனர்.

அதே பாலிசி அடிப்படையில்தான் சூனியம் இல்லை என்று நிலை நாட்டிவிட்டால் சூனியத்தின் பேரால் முஸ்லிம் சு.ஜ. மதகுருமார்களான மவ்லவிகள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்கு ஒரு முடிவு ஏற்படும் என்ற மூட நம் பிக்கையில் ததஜ மத்ஹபு இமாம் சூனியத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அது ஒரு தந்திரக் கலை எனப் பிரசாரம் செய்கிறார். ஊடகங்களில் செய்தி பரப்பி வருகிறார்.

சூனியத்தால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது; அது ஒரு தந்திர வித்தைதான் என்று கூறும் ததஜ மத்ஹபு இமாம்(?) அல்குர்ஆன் தாஹா 20:66,67,68 மூன்று வசனங்களைப் படித்ததே இல்லையா? அதுவும் தனது சூனியம் பற்றிய நூலில் 20:66,69 வசனங்களை எடுத்து எழுதியவர் 20:67,68 வசனங்களை இருட்டடிப்பு செய்த மர்மம் என்ன? மடமை வாதத்திற்கு அவை ஆப்பு வைக்கின்றன என்று இருட்டடிப்புச் செய்கிறாரா? அந்த வசனங்கள் வருமாறு:

“”அவ்வாறன்று! நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என (மூசா) கூறினார். அவர்களின் கயிறுகளும் தடிகளும் அவர்களின் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போலவே அவருக்குத் தோன்றியது (20:66)
அப்போது மூசா தம் மனதினுள் பயந்தார். (20:67) “”பயப்படாதீர்” நீரே மேலோங்கி நிற்பீர்! என நாம் கூறினோம். (20:68)

சூனியம் பற்றி எதையயல்லாமோ எழுதி பக்கங்களை நிரப்புபவருக்கு குர்ஆனின் இந்த 20:67, 20:68 வசனங்கள் கண்ணில் படாமல் போனது எப்படியோ? தனது மடமை வாதத்தை இந்த இரண்டு வசனங்களும் தரை மட்டமாக்கிவிடும் என்ற அச்சம்தானே. 2:85 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனின் சில வசனங்களை ஏற்று சில வசனங்களை மறுக்கும் இவரது நயவஞ்சக நிலைதானே! முடிவு???

20:67,68 இரு வசனங்களும் என்ன கூறுகின்றன? பல சிறப்புகளைப் பெற்ற நபி மூசா (அலை) அவர்களுக்கே சூனியக்காரர்கள் போட்ட சூனியம் பயத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ்வே அவரது பயத்தைப் போக்கினான் என்று கூறவில்லையா? வஹியின் தொடர்புடன் இருந்த ஒரு நபிக்கே சூனியம் அச்சத்தை ஏற்படுத்தியது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? அவர்களுக்கு ஏற்படும் அச்சம் பாதிப்பை ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா? சிந்தியுங்கள். ஆம்! சூனியக்கலை மூலம் மக்களின் மனதில் திடுக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நிலை குலையச் செய்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த 20:67,68 இரு வசனங்களும் உறுதிப்படுத்துகிறதை அறிய முடியாமல் 7:146 இறைவாக்குக் கூறுவது போல் அவரது பெருமை அவரைத் தடுக்கிறது என்பதுதானே உண்மை!

அடுத்து 17:47, 25:8 இரு வசனங்களில் காணப்படும் “”சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரைத் தவிர (எவரையும்) நீங்கள் பின்பற்ற வில்லை” என்று அக்கிரமக்காரர்களான இறை நிராகரிப்பாளர்கள் கூறியதை ஆதாரமாகக் காட்டி நபி(ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை என்ற வாதத்தை வைக்கின்றனர். இதற்கு 17:45 முதல் முதல் 48 வரையும், 25:7 முதல் 9 வரையும் மேலும் சூனியம் பற்றிய அனைத்து குர்ஆன் வசனங்களையும் படித்து விளங்குகிறவர்கள் பெரும்பாலும் நபிமார்கள் வஹி மூலம் பெற்ற நேர்வழி அறிவிப்புகளையே நிராகரிப்பாளர்கள் “”சூனியம்” என்று சொன்னதையும், நேர்வழியை மக்களுக்குப் போதித்தவர்களையே சூனியக்காரர்கள், சூனியம் செய்யப்பட்டவர்கள் என்றெல்லாம் கூறி மக்கள் நேர்வழியை ஏற்க விடாமல் தடுத்ததைப் பார்க்க முடிகிறது. 17:101 வசனம் ஃபிர்அவ்ன் மூசா(அலை) அவர்களை சூனியம் செய்யப்பட்டவராகச் சொல்லி அவரது நேர்வழிப் பேச்சைக் கேட்கவிடாமல் மக்களைத் தடுத்ததை கூறுகிறது. மேலும் 15:10லிருந்து 15 வரைப் படித்து விளங்குகிறவர்கள் நேர்வழியைப் போதித்த அனைவரையும் ஏற்காமல் நிராகரித்து அவர்களைப் பரிகாசம் செய்யாமல் இல்லை. இன்றும் குர்ஆன், ஹதீஃதை மட்டுமே நேர்வழியாகப் போதிப்பவர்களை மன நோயாளி, அமானித மோசடி என அவதூறு பரப்பி குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனையைத் கேட்கவிடாமல் தடுத்து மக்களை வழிகேட்டில் இழுத்துச் சென்று நிராகரிப்பாளர்கள் ஆவது இம்மவ்லவிகளே! “”சூனியம்” ஒரு தந்திரக்கலை. அது மனிதர்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சொல்லுபவர்தான் அவதூறு பரப்புவதில் முன்னிலையில் இருக்கிறார்.

ஆக இந்த 17:47, 25:8 வசனங்கள் நபி(ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டதை மறுத்துக் கூறவில்லை என்பதை விளங்க முடிகிறது. 3:31, 33:21 இறைவாக்குக் கூறுவது போல் நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் வழிகாட்டுதல்-முன்மாதிரி இருந்தே ஆகவேண்டும். அப்போது தான் 3:31 வசனம் கூறுவது போல் அனைத்து விவகாரங்களிலும் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற முடியும். அதற்குத் தோதாக நடுத்தர மனிதர்களிடம் காணமுடியாத சில சம்பவங்களையும் நபி(ஸல்) அவர்களது வாழ்வில் இடம் பெறச் செய்து, அவற்றை எப்படித் தீர்க்க வேண்டும் என்பதை வஹீ மூலம் அறிவித்து மானிடத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியுள்ளான்.

20:66-68, குர்ஆன் வசனங்கள் என்ன கூறுகின்றன? சூனியக்காரர்களின் சூனியத்தைப் பார்த்து மூசா(அலை) அவர்களுக்கு அச்ச உணர்வு ஏற்பட்டது. அஞ்சாதீர் என்று அவர்களுக்கு அல்லாஹ் தைரியம் கொடுத்ததாகக் கூறவில்லையா? 20:66 வசனம் மூசா(அலை) அவர்களுக்கு அச்சம் ஏற்படக் காரணமானதை “”யுஃகையலு”- மருட்சி என்றே குறிப்பிட்டுள்ளான். நபி(ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டதையும் அது பற்றிக் கூறும் ஹதீஃத்களில் இதே யுஃகையலு-மருட்சி என்ற பதமே காணப்படுகிறது. அதாவது ஒரு தடுமாற்ற நிலையே அல்லாமல் ததஜ மத்ஹப் இமாம்(?) கற்பனை செய்து தனது பக்தகோடிகளை ஏமாற்றி வஞ்சித்து அவர்களை நரகில் தள்ள பக்கங்களை நிரப்பி இருப்பது போல் சூனியத்தின் மூலம் அவர்கள் முடங்கிப் போகவும் இல்லை. மனநோயாளியைப் போல் ஊர் அறியப் பிதற்றித் திரியவும் இல்லை. மிக நெருங்கிப் பழகியவர்களைத் தவிர பெரும்பாலான நபிதோழர்களே அறியும் வாய்ப்பு ஏற்படவில்லை. இந்த உண்மையை புகாரீ 3268, 5763, 5765, 5766. 6063, 6391 இப்படி பல ஹதீஃத்களில் காணப்படும் “”அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். அது மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பிவிடும் என்று நான் அஞ்சினேன்,” “”மக்களிடையே குழப்பத்தைக் கிளப்பி விடுவதை நான் வெறுத்தேன்”, “”மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை”, “”மக்கள் குழப்ப மடைந்துவிடுவார்களோ என அஞ்சினேன்”, “”மக்களுக்கெதிராக வன்மத்தைக் தூண்டி விடுவதை அஞ்சுகிறேன்” போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே ததஜ மத்ஹப் இமாமின்(?) பிதற்றல் அர்த்த மற்றதாகும். எதார்த்த நிலை நபி(ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருந்த விஷயம் குறைஷ் காஃபிர்கள் மட்டுமல்ல, நபி தோழர்களிலும் பெரும்பாலோருக்குத் தெரியாது என்பதே உண்மை.

ஆக இப்படிப்பட்ட எதார்த்த நிலையை அறியாது, அல்லது அறிந்து கொண்டே மக்களை வழி கெடுக்கும் கெட்ட நோக்கத்துடன் சூனியம் பற்றித் தேவையற்ற, நபி(ஸல்) அவர்களே விரும்பாத, வெறுத்த குழப்பங்களை சமுதாயத்தில் ஏற்படுத்தி வருகிறார் ததஜ இமாம்(?). இவர்தான் நபியைப் பின்பற்றுபவராம்!

மேலும் ஆதாரபூர்வமான ஹதீஃத்களும் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற அவரது வாதமும் சுத்தப் பிதற்றலாகும், பித்தலாட்ட மாகும். ஹதீஃத் கலையை அறியாத மூடராக இருப்பதால் இப்படிப் பிதற்றித் திரிகிறார். அவரது ஏடுகளில் பக்கங்களை நிரப்பி வருகிறார். ஹதீஃத்களைப் பற்றிய அவரது அறியாமையை அடுத்து வரும் இதழ்களில் விரிவாகப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

அல்குர்ஆன் 93:8-ல் “”அவன் உம்மைத் தேவையுடையவராகக் கண்டு, தேவையற்றவராக்கினான்” என்ற வசனத்தைப் படித்துக் காட்டி, நபியின் இறுதி நாட்களில் வறுமையில் வாடியதைக் கூறும் பல ஹதீஃத்களைத் தனக்குத் தேவைப்பட்டால் ததஜ இமாம்(?) மறுத்தாலும் ஆச்சரியப்டுவதற்கு இல்லை! பின்னால் இம்மதகுருமார்களான மவ்லவிகள் சட்டவிரோதமாகப் புகுந்து மேல் விளக்கம் கொடுத்து மக்களை வழிநடத்தும் வழிகேட்டிற்கு அல்லாஹ் இடம் வைக்கவே இல்லை.

ஆயிஷா(ரழி) அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு, நபி(ஸல்) அவர்கள் சுமார் 50 நாட்கள் அலைக்கழிக்கப்பட்டது, மகன் இப்ராஹீம் அவர்கள் இறந்தபோது நபி(ஸல்) கண்ணீர் வடித்தது, மறதியில் குளிப்புக் கடமையான நிலையில் இஷா தொழுகைக்குப் போய் நின்றது. மறதியில் பூரணமாகத் தொழ வைக்காமல் சலாம் கொடுத்தது, வாகனத்திலிருந்து விழுந்து காயப்பட்ட நிலையில் இயலாமல் உட்கார்ந்து தொழவைத்தது, சில தவறான முடிவுகள் எடுத்து அல்லாஹ்வால் வஹீ மூலம் கண்டிக்கப்பட்டுத் திருத்தப்பட்டது. இப்படிப் பட்ட சம்பவங்களை குர்ஆனிலும், ஹதீஃதிலும் பார்க்கிறோம்.

நபி(ஸல்) அவர்களின் 23 வருட வாழ்க்கையில் இப்படிப்பட்டச் சம்பவங்களை அல்லாஹ் ஏன் இடம்பெறச் செய்தான்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அப்படிச் சிந்தித்தால் மனிதகுல வழ்க்கையில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நபி(ஸல்) அவர்களிடம் 33:21 இறைவாக்குக் கூறுவது போல் முன் மாதிரி இருந்துதானே ஆகவேண்டும். இதை அறிவு சூனியங்கள் மறுக்கலாம்; அறிவுடையோர் மறுக்கமுடியுமா? மக்களிடையே ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இல்லாத நிலையில் 3:31 இறைவாக்குக் கூறுவது போல், “”என்னைப் பின்பற்றுங்கள்” என்று நபி (ஸல்) அவர்களைக் கூறும்படி அல்லாஹ் கட்டளையிட்டிருக்க முடியுமா? சுயமாகச் சிந்தியுங்கள்.

2:102 இறைவாக்கு நேரடியாக என்ன கூறுகிறது என்று படித்துப் பாருங்கள்.
“”….ஷைத்தான்களே (சத்தியத்தை) நிராகரித்தனர். அவர்களே மக்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர்….”
இந்த இறைவாக்கை நிராகரித்து நவீன ததஜ மத்ஹப் இமாம்(?) என்ன கூறுகிறார் தெரியுமா?

நபிமார்கள் தாங்கள் அல்லாஹ்வின் தூதர்கள் தான் என்பதை நிலைநாட்டச் சில அற்பு தங்களை, அதிசயங்களைச் செய்து காட்டிய போது நிராகரிப்பாளர்கள், இறைத் தூதர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு அந்த அற்புதங்களை, அதிசயங்களை சிஹ்ர்-சூனியம் என்று கூறி ஏமாற்றினர். தந்திர வித்தை (Magic) என்று அல்ல. மக்களின் அறிவுக்கு எட்டாத ஒரு தீயசெயல் மூலம் மக்களை மயக்குகிறார் என்றனர். இந்த அடிப்படையில் முன்னைய நிராகரிப்பாளர்களின் இக்கருத்தை வேதவாக்காகக் கொண்டு இன்றைய நிராகரிப்பாளர்கள் (ததஜவினர்) சூனியம் என்றால் அதிசயம் இல்லை. இது வெறும் தந்திர வித்தை மட்டும்தான் என்று கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அப்படியானால் வெறும் ஏமாற்றுத் தந்திர வித்தையைத்தான் ஷைத்தான்கள் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தனரா? என்று சிந்திக்கத் தவறி விட்டாரா? அல்லது மக்களை மதிமயக்கி (பேச்சுச் சூனியம்) வழிகெடுத்து ஆதாயம் அடைய இப்படி அறிந்த நிலையில் பிதற்றுகிறாரா? அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

சூனியம் பற்றி அவர் ஆரம்பத்தில் எழுதிய நூலையும், குர்ஆன் முதல் தஃப்சீரையும், 9ம் பதிப்பு புதிய 2014 வெளியீட்டையும், புதிய பதிப்பான குர்ஆன் தஃப்சீரையும் படித்துப் பார்ப்பவர்கள் அவரது இரட்டை வேடத்தையும், பச்சோந்தித் தனத்தையும், தில்லுமுல்லுகளையும், திருகு தாளங்களையும் தெளிவாக விளங்க முடியும்.

உண்மையில் சூனியம் என்பது தந்திர வித்தை மட்டுமல்ல; மக்களின் உள்ளங்களில் திடுக்கத்தையும், அச்சத்தையும் உண்டாக்கி பாதிப்படையச் செய்யும், இறை நிராகரிப்பையும் ஏற்படுத்தும் சோதனைக்குரிய ஒரு தீயச் செயலுமாகும். இந்த உண்மையை 20:67,68, 7:116 குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்ப்பவர்கள் விளங்க முடியும். ஆயினும் அல்லாஹ்வின் நாட்டமின்றி எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.

ஆக சூனியத்தின் மூலம் கைகால்களை முறிக்கவோ, பொருள்களை அபகரிக்கவோ முடியாது என்பதே உண்மை. அதற்கு மாறாக உள்ளத்தில் வீண் சந்தேகங்களையும், அச்சத்தையும் ஏற்படுத்தி நிலை தடுமாறச் செய்ய முடியும். 2:186 இறைக் கட்டளை சொல்வது போல், அல்லாஹ்வையே முற்றிலும் முழுவதுமாக நம்பாதவர்கள், அல்லாஹ் அல்லாதவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள், அந்த வீண் சந்தேகங்களையும், அச்சத்தையும் மிகைப்படுத்தி அலட்டிக் கொண்டு, அம்பலப்படுத்தி ஊரறியச் செய்வதுடன், அதிலிருந்து விடுபட இறை நிராகரிப்பான செயல்களில் ஈடுபடுவார்கள். சோதனையில் தோற்று ஈமானை இழந்து பாவியாவார்கள்.

அதற்கு மாறாக இறை நம்பிக்கையில் (ஈமான்) உறுதியானவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டாலும் நிலை குலைய மாட்டார்கள். தடுமாற மாட்டார்கள். அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அம்பலப்படுத்தி ஊரறியச் செய்ய மாட்டார்கள். தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை அல்லாஹ்விடம் முறையிட்டு அவனிடம் நிவாரணத்தை வேண்டுவார்களே அல்லாமல், அல்லாஹ் அல்லாதவர்களிடம் போய் முறையிடமாட்டார்கள். குர்ஆனில் 113, 114 அத்தியாயங்களைப் படித்து நிவாரணம் தேடுவார்கள். சோதனையில் வெற்றி பெற்று அல்லாஹ்வின் பொருத்தம் பெறுவார்கள்.

இப்போது சிந்தியுங்கள்! ததஜ மத்ஹப் இமாம்(?), நபி(ஸல்) அவர்கள் மீது சுமத்தியுள்ள அபத்தங்கள் சத்தியமா? சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி நிவாரணம் பெற வேண்டும் என்பதற்கு 33:21 இறைக் கட்டளைப்படி நபி(ஸல்) அவர்களிடம் முன் மாதிரி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் நாட்டப்படி நபி(ஸல்) அவர்களுக்கு சூனிய பாதிப்பு ஏற்பட்டபோது, முழுமையான ஈமானுடன் செயல்பட்டிருப்பார்களா? அதற்கு மாறாக அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் இடைத்தரகர்களைப் புகுத்திக் கொண்டிருப்பவர்கள் செயல்படுவது போல் செயல்பட்டிருப்பார்களா? சொல்லுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படிப்பட்ட நிலைகள் ஏற்பட்டிருக்கும், காஃபிர்கள் அதை அறிந்து எப்படிப்பட்டப் பிரசாரங்கள் செய்து, நபி (ஸல்) அவர்களின் சத்தியப் பிரசாரத்தை முறியடிக்க முற்பட்டிருப்பார்கள் என்று பக்கங்களை நிரப்பியுள்ளாரே? இது எதை உறுதிப்படுத்துகிறது? நபி(ஸல்) அவர்களும் தன்னைப் போல் இறை நம்பிக்கையில்(ஈமானில்) உறுதியற்றவர்கள் என்று கற்பனை செய்து இப்படி எழுதியுள்ளாரா? அவருக்கு 2:186 இறைவாக்கு சொல்வது போல் அல்லாஹ் மீது உறுதியான நம்பிக்கை இருந்தால் இப்படிப் பிதற்றி இருக்க முடியுமா? சிந்தியுங்கள்!

மேலும் ததஜ மத்ஹப் இமாம்(?) நான்காம் வகுப்பைத் தாண்டியவர் இல்லை என்பது அவரது சொந்த வாக்குமூலம். எனவே உலக நடப்பை விளங்கும் ஆற்றல் அவருக்கு இல்லை. நபி(ஸல்) அவர்களுக்குச் சூனிய பாதிப்பால் என்னென்ன வழமைக்கு மாறான செயல்கள் இடம் பெற்றன என்று ஹதீஃத்களில் காணப்படுகின்றனவோ, அப்படிப்பட்ட வழமைக்கு மாறான நிலை அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த சில விஞ்ஞானிகளுக்கும் ஏற்பட்டதை ததஜ மத்ஹப் இமாம்(?) அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். அறிவியில் ஆய்வுகளில் மிகத் தீவிரமாக தம் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கும் போது அவற்றில் மிகத் தெளிவாக இருக்கும் நிலையில் அன்றாட நடவடிக்கைகளில் மறதி, தடுமாற்றம் ஏற்பட்டதை அவர்களின் வரலாறுகளில் படிக்கிறோம். ஏன்? இப்போதும் வயது முதிர்ந்தோர், அன்றாட செயல்பாடுகளில் மறதியாக, தடு மாற்ற நிலைகளில் செயல்படுவதைப் பார்க்கத் தான் செய்கிறோம். மேலும் முன்மாதிரிக்காக அல்லாஹ்வின் நாட்டப்படி, அவனது திட்டப்படி நபி(ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அல்லாஹ் அவர்களது நிலையை அறியாமல் வஹீ இறக்கினான், குர்ஆனின் வசனங்களை அறிவித்தான் என்று நினைப்பதை விட மூளை வரண்ட நிலை அறிவு சூனியம் வேறு இருக்க முடியுமா? சிந்தியுங்கள்! நிராகரிப்பாளர்களுக்கே இந்த எண்ணம் ஏற்படும்!

நபி(ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப் பட்டிருந்தால் இப்படி இப்படி எல்லாம் நடந் திருக்கும் என்று ததஜ மத்ஹபு இமாம்(?) எவற்றை எல்லாம் எழுதிப் பக்கங்களைப் பாழாக்கி இருக்கிறாரோ, அவை அனைத்தும் அவரின் அறிவு சூனியத்தை வெளிப்படுத்துவதோடு, அவரது இறை நம்பிக்கையற்ற நிலையையும் அம்பலப்படுத்துகிறது.

இன்னும் பாருங்கள் அவரது அறிவு சூனியத்தை! அல்குர்ஆனின் 113:4 வசனம் கூறும் “”இன்னும், முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்” என்று நேரடியாகக் கூறி இருப்பதை நிராகரித்து, இந்த ஆயத்தில் குறிப்பிடும் முடிச்சுக்குச் சம்பந்தமில்லாத புகாரீ 2269, 1142 ஹதீஃத்களையும், குர்ஆன் 20:26,27 வசனங்களையும் சம்பத்தப்படுத்திப் பிதற்றியுள்ளார். பிறை விவகாரத்தில் பொதுவாக பார்ப்பதைக் குறிக்கும் “”ரூஃயத்” அரபி பதத்திற்கு கண்ணால் மட்டுமே பார்ப்பது எனப் பிதற்றுவது போல் இங்கும் பிதற்றியுள்ளார். சட்ட சபையில் நிறைவேற்றப்படும் சட்டத்திற்கும், தச்சர் செதுக்கும் சட்டத்திற்கும் வேறுபாடு தெரியாமல் ஓர் அறிவீனன் உளறுவது போல் உளறியுள்ளார்.

இன்னும் அவரது அறிவு சூனியத்தை அவரே அம்பலப்படுத்தியும் உள்ளார். எப்படி என்று பாருங்கள்.
நாம், சூனியத்தால் புறச்சாதனம் எதுவும் இல்லாமல் மனித உள்ளங்களில் திடுக்கத்தையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் கெடுதி ஏற்படுத்த முடியும். சூனியத்தில் ஈடுபடுகிறவர் காஃபிராகிறார். சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் அல்லாஹ்விடம் முறையிட்டு அதிலிருந்து விடுபட முயலாமல், அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடுவதன் மூலம் காஃபிராகிறார். சூனியம் இறைவன் ஏற்படுத்தியுள்ள ஒரு சோதனை; ஷைத்தான் சூனியத்தைக் கற்றுக் கொடுக்கிறான். கணவன் மனைவிகளிடையே பிரிவினை ஏற்படுத்துவதை, அது தெளிவான காஃபிராகும் தீய செயல் என்று அறிவித்த பின்னரே ஹாரூத், மாரூத் என்ற இரு மலக்குகள் கற்றுக் கொடுத்தனர் என்றே 2:102 இறைவாக்கும் நேரடியாகக் கூறுவதையே கூறுகிறோம்.

ததஜ மத்ஹப் இமாமோ(?) தனது சூனியப் பேச்சைக் கொண்டு (பயான்) சூனியத்தால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று வாதிடுவதாகக் கதையளக்கிறார். அவருடைய வாதம் இதுதான் “”நபி(ஸல்) அவர்களுக்கு லபீத் என்ற ஆண்தான் சூனியம் வைத்தான். எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை. இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதிலிருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்” என்று பிதற்றியுள்ளார்.

இப்படி 2014 ஒன்பதாம் பதிப்பு பக்கம் 51-ல் பிதற்றியவர், அடுத்து 52-ம் பக்கத்தில் தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண் பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. என தனது 51-ம் பக்கப் பிதற்றலை மறுத்து அடுத்த 52-ம் பக்கத்தில் எழுதியுள்ளார். அவரது அறிவு சூனியம் விளங்குகிறதா? இல்லையா? அரபு மொழியில் மட்டுமல்ல தமிழிலும் அதுதான் நிலை. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியைப் பாருங்கள். சூனியம், சூனியக்காரி என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதே அல்லாமல் சூனியக்காரன் என்று விளக்கம் கொடுக்கப்படவில்லை.

அதனால் ஆண்கள் சூனியம் செய்ய முடியாது என்றோ, அல்லது ஆண்கள் சூனியம் செய்தால் 113:4 இறைவாக்கு அதைக் குறிக்காது என்றோ கூறுவது வெற்றுப் பிதற்றலே அல்லாமல் வேறில்லை. அறிவு சூனியமே அன்றி வேறில்லை!

“”முடிச்சுகளில் ஊறும் பெண்கள்” என்பதற்கு சூனியக்காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை என்று பிதற்றியுள்ள இவர் குர்ஆன் 20:26,27, புகாரீ, 2269, 1142, அபூதாவூது 651 ஹதீஃத்களை எழுதி சுய விளக்கம் கொடுத்து, ஷைத்தானைத்தான் அல்லாஹ் சூனியக்காரி என்று கூறுகிறான் என்று எழுதியுள்ளாரே, 49:16 குர்ஆன் வசனம் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்பட்டிருக்கிறாரே, அவரின் அறிவு சூனியத்தின் ஆழம் புரியாமல்தான் அவரது பக்தகோடிகள் அவர் பின்னால் கண்மூடிச் செல்கின்றனரா? சிந்தியுங்கள். 113, 114 அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளத் தீங்குகள் அனைத்தும் புறச்சாதனம் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்துபவையா? அல்லது புறச் சாதனம் கொண்டு ஏற்படுபவையா? ததஜ மத்ஹப் இமாமின் நேரடிப் பதில் என்ன?

ததஜ மத்ஹப் இமாமின் அகராதியில் சூனியம் தந்திர வித்தை, சூனியத்தால் அற்புத அதிசயத்தைக் காட்ட முடியாது, புறச்சாதனம் இல்லாமல் எவ்வித பாதிப்பையும் எவருக்கும் ஏற்படுத்த முடியாது. எனவே 113, 114 குர்ஆன் அத்தியாயங்கள் சூனியத்திலிருந்து விடுபட இறக்கப்பட்ட அத்தியாயங்கள் இல்லை என்பதாகும். அவரது பில்லி சூனியம் பற்றிய எழுத்துக்களை சுய சிந்தனையுடன் படிப்பவர்கள் அவற்றிலுள்ள முரண்பாடுகளையும், ஒரு பக்கத்தில் எழுதியுள்ளதற்கு நேர்முரணாக அடுத்தப் பக்கத்திலேயே எழுதி இருப்பதையும் படித்து உணர்கிறவர்கள், அவரே சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ என்றே ஐயப்படுவார்கள். குர்ஆனின் 113,114 அத்தியாயங்கள் சூனியத்திலிருந்து விடுபட இறக்கப்பட்டவை அல்ல என்று கூறுகிறவர், அவற்றில் பெரும்பாலான தீங்குகளிலிருந்து பாதுகாப்புத் தேடிப் படிக்கக் கூடிய வசனங்களைச் சுட்டிக் காட்டி, இன்ன இன்ன காரணங்களுக்காக இறங்கியவை என இதைவிட ஆதாரபூர்வமான தகவலைத் தரும் ஒரு செய்தியைத் தந்தாலாவது நாம் அதைப் பரிசீலிக்கலாம். பொத்தாம் பொதுவாக இப்படிப்பட்ட மூடத்தனமான சுய விளக்கங்களைக் கொடுத்து மறுப்பது கேலிக் கூத்தாகும். கால் காசும் பெறாது. குப்பையில் எறியப்பட வேண்டியவை.

ததஜ மத்ஹப் இமாம் தெளிவான பகிரங்க மான வழிகேட்டில்தான் இருக்கிறார் என்பதை நீங்கள் 6:68, 40:35, 56 குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்த்து புரிந்து கொள்ள முடியும்! அல்லாஹ் தெளிவைத் தருவானாக. 29:69 அல்லாஹ்வின் கட்டளைப்படி 2:186 கூறுவது போல் அல்லாஹ்வையே முற்றிலும் முழுதும் நம்பிப் பாடுபடுபவர்களுக்கு நிச்சயம் 6:153 இறைவாக்குக் கூறும் நேர்வழியை அல்லாஹ் காட்டுவான். இது உறுதி! குர்ஆனில் பாடுபட முன்வாருங்கள்!

Previous post:

Next post: