ஆன்மாவும்(நஃப்ஸ்) உயிரும்(ரூஹ்) ஒன்றா?

in 2014 செப்டம்பர்

இப்னு ஹத்தாது

அல்குர்ஆன் 39:42 இறைவாக்குக் கூறும் நேரடிச் செய்தி. “”அல்லாஹ் ஆன்மாக்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன்மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்டத் தவணை வரை அனுப்பி விடுகிறான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.” (39:42)

இங்கு அரபியில் “”அன்ஃபுஸ” என்றே இருக்கிறது. அதை நேரடியாக மொழி பெயர்த்தால் “”ஆன்மாக்கள்” என்றே மொழி பெயர்க்க வேண்டும். அதற்கு மாறாக தமிழ் மொழி பெயர்ப்பு கள் அனைத்திலும் “”உயிர்கள்” என்றே மொழி பெயர்த்துள்ளனர்.ரஷத் கலீஃபாவின் மொழி பெயர்ப்பில் மட்டும் ஆங்கிலத்தில் “SOULS” என்றும் தமிழில் “”ஆன்மாக்கள்” என்று சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 39:42-ல் ஆன் மாக்கள் (SOULS) என்று சரியாக மொழி பெயர்த்த ரஷத் கலீஃபா 17:85-ல் உயிரை வெளிப்பாடுகள் (Revelation) என்று தவறாக மொழி பெயர்த்துள்ளார். 2:87-ல் அல்லாஹ் ஈசா (அலை) அவர்களை “”ரூஹுல் குத்ஸ்” என்று குறிப்பிட்டிருப்பதால் இங்கு வெளிப்பாடு என்று கூறலாம். காரணம். ஈசா (அலை) தகப்பனின்றி பிறந்தார். அடுத்து உலகம் அழிவுக்குச் சமீபம் வரை இறக்காத நிலையில் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டுள்ளார். (பார்க்க : 4:156-159, 43:61) ஆயினும் உலகம் அழிவதற்கு முன்னர் ஈசா(அலை) அவர்களும் மரணிப்பவர்களே!

அதே போல் 17:85 இறைவாக்கில் அரபியில் “”ரூஹ்” என்றிருப்பதை அரபு “”நஃப்ஸ்” என்ற பதத்திற்குரிய “”ஆத்மா” என தவறாக மொழி பெயர்த்திருக்கிறார்கள். மேலும் நஃப்ஸ்-ஆத்மா நஃப்ஸ்:61, நஃப்ஸன்:14, நஃப்ஸிக, நஃப்ஸக:10, நஃப்ஸஹு : 40, நஃப்ஸஹா:2, நஃப்ஸீ:13 ஆக 140 இடங்களிலும், “”அன்புஸ” – “”ஆத்மாக்கள் அன்புஸ:6, அன்புஸக்கும்:49, அன்ஃபுஸிஹிம்: 91, அன்ஃபுஸ்னா:3, அன்புஸி ஹின்ன:4, ஆக 153 இடங்களிலும் காணப்படுகின்றன. ரூஹ் :14, ரூஹன்:1, ரூஹினா:3, ரூஹிஹா:1, ரூஹீ:2, ஆக 21 இடங்களிலும் காணப்படுகிறது. நாம் பார்த்தவரை அர்வாஹ் -உயிர்கள் என்று ஓரிடத்திலும் இல்லை. நஃப்ஸ், ரூஹ் இவை இரண்டினதும் இவர் களின் மொழி பெயர்ப்புகளைப் பார்க்கும் போது இந்த அனைத்துத் தரப்பு மவ்லவிகளும் நஃப்ஸும், ரூஹும் ஒன்றுதான் என்ற தவறான எண்ணத்தில் இருப்பதையே காணமுடிகிறது.

ஆனால் உண்மையில் நஃப்ஸும், ரூஹும் ஒன்றல்ல, வெவ்வேறானவை மட்டுமல்ல. இரண்டிற்குமிடையில் மலைக்கும் மடுவுக்கு முள்ள வேறுபாடு இருப்பதை அறியாதிருக்கிறார்கள் இம்மவ்லவிகள்.  நஃப்ஸ்-ஆன்மா அல்லது ஆத்மா ஜின் இனத்திற்கும், மனித இனத்திற்கும் மட்டுமே உண்டு. இதர ஜீவனுள்ள அதாவது உயிருள்ள படைப்புக்களுக்கு ஆன்மா இல்லவே இல்லை. அதற்கு மாறாக ரூஹ் என்ற உயிரோ ஜின் இனம், மனித இனம் மட்டுமல்ல; மிருகங்கள், பறவைகள், காட்டில் வாழ்பவை, கடலில் வாழ்பவை, செடி, கொடி, மரம் என அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் உண்டு.

இம்மவ்லவிகளின் இந்தத் தடுமாற்றத்திற்குக் காரணம் என்ன தெரியுமா? 39:42 இறை வாக்கில் மரணத்தோடு “”அன்புஸ” என்ற ஆத்மாக்களைச் சம்பந்தப்படுத்தி அல்லாஹ் கூறி இருப்பதால் மரணத்தோடு சம்பந்தப்பட்டது உயிர்கள்தான் என்ற எண்ணத்திலேயே ஆன்மாக்களை உயிர்கள் எனத் தவறாக மொழி பெயர்த்துள்ளனர். உடலிலிருந்து உயிர் கைப்பற்றப்பட்டால் அது நிரந்தர மரணமே. அவ்வுடலில் சுவாசமோ, இரத்த ஓட்டமோ, சூடோ இருக்காது என்ற சாதாரண, நடுத்தர அறிவும் இம்மவ்லவிகளுக்கு இல்லையா? இரவில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது எனச் சொல்வதை இம்மவ்லவிகள் கேட்டதில்லையா? அப்படியானால் ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட உயிர் மீண்டும் உடலிலிருந்து பிரியுமா? என்ற சுய சிந்தனையும் இந்த மவ்லவிகளுக்கு இல்லையா? அல்லது மனிதனுக்கு 2 உயிர்கள் இருக்கின்றனவா? இனியாவது நஃப்ஸ்-ஆன்மா என்பது வேறு, ரூஹ்-உயிர் என்பது வேறு, இரண்டிற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடு உள்ளது என்பதை விளங்கிக் கொள்வார்களாக.

அதேபோல் அல்லாஹ் ஆதத்தின் மக்களின் முதுகுகளிலிருந்து ஆன்மாக்களை வெளியாக்கி அவர்களைக் கொண்டே “”நானே உங்களில் ரப்பு அல்லவா?” என்று அவர்களையே சாட்சி சொல்ல வைத்ததாக 7:172 இறைவாக்கில் அல்லாஹ் கூறுகிறான். ஆலமுல் அர்வாஹில் அல்லாஹ் சாட்சி சொல்ல வைத்ததாக இம் மவ்லவிகள் கதையளப்பது தவறாகும். அர்வாஹ்(உயிர்கள்) என்ற அரபி பதம் குர்ஆனில் இருந்தால் இந்த மவ்லவிகள் எடுத்துக்காட்டட்டும். பரிசீலிப்போம்.

39:42ல் மரணத்தோடு சம்பந்தப்படுத்தி “”அன்புஸ” -ஆன்மாக்கள் என்ற பதம் இடம் பெற்றிருப்பதால் அதை உயிர்கள் என்று மொழி பெயர்த்த மவ்லவிகள், 17:85-ல் “”உம்மிடம் ரூஹைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள்? ரூஹ் என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உள்ளதாகும்” என்று சொல்லும் என அல்லாஹ் கூறி இருப்பதால் ஆன்மாவும் (நப்ஸ்) உயிரும் (ரூஹ்) ஒன்றுதான் என்ற தவறான முடிவுக்கு வந்து அப்படி மொழி பெயர்த்துள்ளனர். அதே 17:85 இறைவாக்கின் இறுதிப்பகுதி “”அறிவிலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனத் தெளிவாக அல்லாஹ் கூறியிருந்தும், தாங்கள்தான் ஆலிம்கள் மார்க்கம் கற்ற மேதைகள் எனப் பெருமையடிப்பதுடன் 2:159-162, 42:21, 49:16 இறை வாக்குகளை நிராகரித்து மனம்போன போக்கில் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு சுயவிளக்கங்கள் கொடுத்து, அவர்களை நம்பியுள்ள பெருங்கொண்ட மக்களையும் வழிகெடுத்து அவர்களை நரகில் தள்ளி ஷைத்தானின் சபதத்தை நிறைவேற்றத் துணை போகின்றனர். (பார்க்க: 7:13-18, 15:39-44, 17:62-64) மக்களை வழிகெடுப்பதில் ஷைத்தானும் இவர்களுக்குத் துணையாக நிற்கின்றான். அதனால் வழிகேட் டில் இந்த மவ்லவிகளுக்குப் பின்னால் பெருங்கூட்டம் சேர்கிறது. 6:116, 32:13, 11:118,119 இன்னும் இவைபோல் பல இறைவாக்குகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

ஆக ஆன்மா(நஃப்ஸ்) மற்றும் உயிர்(ரூஹ்) இரண்டும் ஒன்றுதான் என்பதில் பெருமையடிக்கும் இம்மவ்லவிகள் பிடிவாதமாகவே இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை (பார்க்க : 7:146) ஆயினும் ஆத்மா(நஃப்ஸ்) அல்லாஹ் அதைப் படைத்த ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இருக்கும். ஒன்றில் சுவர்க்கம் நுழையும். அல்லது நரகில் நுழையும். அங்கு அழிவில்லாத நிரந்தர நிலையை அடையும். (பார்க்க: 89:27, 2:39) குர்ஆன் முஹ்க்கமாத் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து, அதில் பிடிவாதமாக இருந்து, மக்களை வழிகெடுக்கும் இம்மவ்லவி கள் நரகத்தில் நிரந்தரமாகத் தங்குபவர்களே! (பார்க்க : 2:159-162)

உயிரின் நிலை நஃப்ஸ் போன்றதல்ல. ஜீவனுள்ள படைப்புகளை இயங்க வைக்கும் ஒரு சக்தி மட்டுமே. எளிதாக விளக்குவதாக இருந்தால் ஒரு பெரும் பாலைவனத்தைக் கடக்க ஒரு மனிதன் ஓர் ஒட்டகத்தைப் பயன் படுத்துகிறான் என்றால் உயிருள்ள அந்த ஒட்ட கத்தை அந்த உயிருள்ள மனிதனுக்கும், அதில் சவாரி செய்யும் மனிதனை ஆன்மாவுக்கும் ஒப் பிடலாம். இங்கு உயிருக்கும், ஆன்மாவுக்கும் வேறுபாடு தெரிகிறதா? இல்லையா?

அதேபோல்தான் மனிதன் இந்த அற்பமான தற்காலிகமான இவ்வுலகைக் கடந்து மறு மையை அடையத் தற்காலிமாகக் கொடுக்கப் பட்டவைதான் அவனது உடலும், அவ்வுடலை இயங்க வைக்கும் சக்தியான உயிரும் ஆகும். அவ்வுடலில் பயணம் செய்யும் “”ஆன்மா” மட்டுமே நிரந்தரமானது. அதற்கு அழிவே இல்லை.
ஐம்புலன்களுக்குள் அடங்குபவை மட்டும் தான் உள்பொருள், ஐம்புலன்களுக்குள் அடங்காதவை இல்பொருள் என பிடிவாதம் பிடிக்கும் செமி பகுத்தறிவார்களான நாத்திகர்கள் அவர்களின் வாதப்படி ஆன்மாவை மறுப்பதோடு, உயிரையும் மறுக்க வேண்டும். ஆனால் உயிரை மறுக்க அவர்களால் முடியவில்லை. காரணம் ஐம்புலன்களுக்குள் அடைபடாத உயிரை அவர்கள் மறுத்தால், மக்கள் அவர்களை பைத்தியக்காரப் பட்டியலில் சேர்த்து விடுவார்கள். காரணம் இன்றைய அறிவியல் வளர்ச்சிப்படி உடலின் அனைத்து உறுப்புக்களையும், அணுவளவான செல்கள் உட்பட அனைத்தையும் நவீன கருவிகள் மூலம் கண்டறியும் விஞ்ஞானிகள், இன்று வரை மனித உடலை இயக்கும் உயிர் மனித உடலில் எங்கிருக்கிறது? எப்படிப்பட்டது? என்று கண்டறிய முடியவில்லை.

ஆயினும் நாத்திகர்கள் அவர்களின் ஐம்புலன்களுக்குள் அடைபடாத உயிரை மறுக்கும் துணிச்சல் அவர்களுக்கில்லை. காரணம் உயிரை அவர்களின் கொள்கைப்படி அறிய முடியாவிட்டாலும், அவ்வுயிரின் மூலம் உடல் செயல்படுவதையும், அது பிரிந்துவிட்டால் உடலின் செயலற்றத் தன்மையையும், அவ்வுடல் அழுகி நாற்ற மடிப்பதையும் நிதர்சனமாகப் பார்க்கிறார்கள். அதனால் ஐம்புலன்களுக்குள் அடைபடாத உயிரை மறுக்காமல் ஏற்கிறார்கள்.

ஆனால் ஆன்மாவைப் பற்றி இப்படிப்பட்ட அனுபவங்களையும் இவ்வுலகில் பெற முடியாது. அதனால் உயிரை விட அசலான நிரந்தரமான ஆன்மாவை மறுக்கும் நிலையில் நாத்திகர்கள் இருக்கிறார்கள். எப்படி இம்மவ்லவிகள் உயிருக்கும், ஆன்மாவுக்கும் வேறுபாடு தெரியாமல் தடுமாறுகிறார்களோ, அதே போல் ஐம்புலன்களுக்குள் அடைபடாத உயிரை ஒப்புக் கொள்ளும் நாத்திகர்கள், ஐம்புலன்களுக்குள் அடைபடாத ஆன்மாவை மறுத்து அவர்களுக்கு அவர்களே முரண்படுகிறார்கள். இன்று உடலின் செயல் இழப்பைப் பார்த்து உயிரை எப்படி ஏற்கிறார்களோ அதேபோல் அண்ட சராசரம் செயலிழக்கும் நாளில் அதாவது யுக முடிவில் ஆன்மாவையும் அதைப் படைத்த இறைவனையும் நாத்திகர்கள் நிச்சயம் பார்க்கத்தான் போகிறார்கள்.

இந்த மவ்லவிகளுக்கு உயிரும், ஆன்மாவும் ஒன்றுதான் என்ற தடுமாற்றம் ஏற்பட இன்னொரு காரணமும் உண்டு. 17:85ல் “”உயிரைப் பற்றி அவர்கள் கேட்கிறார்கள். உயிர் இறைவ னது கட்டளையிலிருந்தே உள்ளதாகும். இன்னும் அறிவில் மிகச் சொற்பமானதே அன்றி உங்களுக்கு அளிக்கப்படவில்லை” என்று கூறும்படி அல்லாஹ் நபிக்குக் கட்டளையிட்டுள்ளான்.

அதனால் உயிரும், ஆன்மாவும் ஒன்றுதான் என்ற தவறான முடிவுக்கு இம்மவ்லவிகள் வந்துள்ளனர். ஆயினும் ஆன்மாவும், உயிரும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்துள்ளன வென்றாலும் மனிதன் தனது அற்பமான அறிவைக் கொண்டு அவை இரண்டினதும் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள முற்படுவது வீண் முயற்சியே! ஆயினும் மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் ஆன்மாவானது தான் அசலானது. அவனது அந்தப் பயணத்தில், அவன் கடக்கும் இடங்களுக்கு ஏற்ப அவற்றைக் கடக்கும் சக்தியாக அவனுக்கு உடல், உயிர் கொடுக்கப்படுகின்றன. அவனுக்குக் கொடுக்கப்படும் உயிர் வேறு. இறுதியில் சுவர்க்கத்தையோ, நரகத்தையோ அடையும் ஆன்மா வேறு என்பதே குர்ஆன், ஹதீஃத் கூறும் உண்மையாகும்; நேர்வழியாகும்.

ஆயினும் 7:146 இறைவாக்குக் கூறுவது போல் நாங்கள்தான் மவ்லவிகள், ஆலிம்கள், எங்களுக்குத்தான் மார்க்கம் தெரியும். அவாம் களான பொதுமக்கள் குர்ஆனைப் படித்து விளங்க முற்படக்கூடாது. அது அவர்களுக்கு விளங்காது என்று பெருமை பேசும் மவ்லவிகள், அல்லாஹ்வாலேயே குர்ஆனின் நேரடிப் போதனைகளிலிருந்து திருப்பப்படுகிறார்கள். குர்ஆன் வசனங்களை நேரடியாக எடுத்துக் காட்டினாலும் அவற்றை நம்பமாட்டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே தங்களின் வழியாகக் கொள்வார்கள் என்று அல்லாஹ் திட்டமாக, தெளிவாக, நேரடியாக, குன்றிலிட்ட தீபமாக, உள்ளங்கை நெல்லிக்கனியாகக் கூறி இருப் பதை நிராகரித்து இம்மவ்லவிகள் நேர்வழி நடப்பது சாத்தியமா? ஒருபோதும் சாத்திய மில்லை.

உலகில் காணப்படும் அனைத்து மதங்களின் மதகுருமார்களின் நிலை எதுவோ அதே நிலை தான் முஸ்லிம் மதகுருமார்களின் நிலையும். அவர்கள் எங்கு போய் சேர்வார்களோ, அதே இடம்தான் இம்மவ்லவிகள் சேரும் இடமாகும். 2:186, 7:3, 18:102-106, 33:36, 66-68, 50:86, 59:7 இறைவாக்குகளை நேரடியாகப் படித்துணர்ந்து, இம்மவ்லவிகளின் சூன்ய, வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு, 3:103 இறைக் கட்டளைப்படி எண்ணற்ற பிரிவுகளாகப் பிரியாமல் ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அதன் நேரடிப் போதனைகளை அப்படியே எடுத்து நடப்பவர்களே வெற்றியாளர்கள் சுவர்க்கம் நுழைவோர். அல்லாஹ் அருள்புரிவானாக!

Previous post:

Next post: