விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2014 டிசம்பர்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

2-வது விமர்சனம் : ஆலிம், அல்லாமா, மவ்லவி, மவ்லானா, ஹஜ்ரத் என முஸ்லிம்களால் ஏற்றிப் போற்றப்படுகின்ற, அல்லாஹ், ரசூலுக்கு அடுத்துப் பெரிதும் மதிக்கிற, முஸ்லிம் மதகுருமார்களை, சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் முஸ்லிம் மதகுருமார் களை, மிகக் கீழ்த்தரமாகத் திட்டுவதாகவும், தரக் குறைவாக எழுதுவதாகவும், புரோகிதர், புரோகிதர் என அடிக்கடி கூறுவதாகவும், அவர்களை நாயிலும் கேடாக மதிப்பதாகவும் அவதூறுகள் பரப்பி வருகின்றனர். முஸ்லிம்களை நமக்கு விரோதமாகத் திருப்பி, நாம் கூறும் குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்துக்களை அவர்கள் கேட்க விடாமல் தடுக்கின்றனர். இவற்றின் உண்மை நிலை!

விளக்கம் : அல்லாஹ்வின் தனிப்பெரும் கிருபையால் எமக்கு விளக்கம் தெரிந்த காலத்திலிருந்தே தர்கா சடங்குகளை நாம் சரிகாணவில்லை. அவற்றில் ஈடுபடவும் இல்லை. கபுரு வழிபாடுகளைக் கடுமையாக எதிர்க்கும் நிலையில் இருந்தோம். 1963களில் இலங்கையிலிருந்து திரும்பி வரும் போதே தப்லீஃக் பணியில் ஆர்வமாக இருந்ததால், இங்கும் அதிகமாக ஈடுபட்டுச் செயல்படும் போது தர்கா வழிபாடுகளைக் கடுமையாகச் சாடிப் பேசும் நிலையில் இருந்தோம். தப்லீஃக் அமீர்களே இப்படிப் பேசினால் மக்கள் நம்மை விட்டு வெருண்டோடி விடுவார்கள் என்று கூறித் தடுப்பார்கள். சத்தியத்தைச் சொல்லும் விஷயத்தில் நாம் பின் வாங்குவதில்லை. அதனால் எமக்குப் பேசும் வாய்ப்பைத் தரமாட்டார்கள். அதற்காக நாம் கவலைப் பட்டதுமில்லை.

கபுரு வழிபாடு ´ஷிர்க் என்று நாம் சொல்லும் போது, காயல்பட்டினம் பிரபல மவ்லவி “”கபுரு வழிபாடு ´ஷிர்க் அல்ல, உனக்குத்தான் கிறுக்கு’ என்று சாடுவார். அது மட்டுமா? நாம் அவுலியாக்களை அவமரியாதை செய்வதாகவும், அவர்களைத் திட்டுவதாகவும் அவதூறு பரப்பினார்கள். நாம் கவலைப்படவில்லை. 1970 வரை முழு ஈடுபாட்டுடனும், 1970லிருந்து 1983 வரை ஒரு தடுமாற்ற நிலையிலும் தப்லீஃக் பணியை அரைகுறையாகச் செய்து வந்தோம். அக்காலக் கட்டங்களில் டெல்லி தப்லீஃக் மார்க்ஸுக்குப் பலமுறைச் சென்று தப்லீஃக் பணியில் நுழைந்துள்ள சீர்கேடுகள் குறித்து எச்சரித்தோம், கடிதமும் எழுதினோம். அக்காலக் கட்டங்களில் தர்காவாதிகளிடமிருந்து மிகக் கடுமையான ஏச்சுப் பேச்சுக்களையும் பெருத்த இடையூறுகளையும் சந்தித்து வந்தோம், வருகிறோம்!

1983க்குப் பிறகு குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை நேரடியாகப் படித்துச் சிந்திக்கும் பாக்கியத்தை அல்லாஹ் தந்தான். அதன் பின்னர்தான் 2:186, 7:3, 18:102-106, 59:7 குர்ஆன் வசனங்கள் மூலம் தக்லீதின் கெடுதியையும், மத்ஹபுகளும் வழிகேடே, நேர் வழி இல்லை என்பதைத் தெளிவாக உணரும் பாக்கியத்தைத் தந்தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்.

உடனே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அவ சரப்பட்டு இறங்கவில்லை. அனைத்து மதரஸாக்கள் மவ்லவிகள் அனைவருக்கும் விவரம் கேட்டு 11.5.1985-ல் கடிதம் எழுதினோம். அக்கடிதத்தை “”முஸ்லிம் சமுதாய சிந்தனைக்கு” என்ற நூலில் பார்க்கலாம். இக்கடிதத்திற்கு எந்த மதரஸாவிலிருந்தும் பதில் வரவில்லை. இதுதான் அவர்களின் பரிதாப நிலை. எமது கடிதத்திற்குப் பதில் தர தயார் இல்லை. அதேசமயம் அப்பட்டமான அவதூறுகளை மக்களிடையே பரப்பும் ஷைத்தானிய புத்தி மட்டும் நிறையவே அவர்களிடம் காணப்படுகிறது.
நாம் நபி(ஸல்) அவர்ளை மதிக்கவில்லை. நபி தோழர்களை மதிக்கவில்லை. இமாம்களை அவமரியாதை செய்கிறோம். வலிமார்களைத் திட்டுகிறோம். மவ்லவிகளைத் திட்டுகிறோம், நாம் மவ்லவி இல்லை. அரபி நூலின் அட்டையைக் கூட பார்த்ததில்லை. அரபி மொழி தெரியாமல் மார்க்கம் சொல்ல வந்துவிட்டார். அவரது கடிகாரத் தொழிலைப் பார்க்க வேண்டியதுதானே? ஏன் எங்கள் பிழைப்பில் தலையிடுகிறார் என்றெல்லாம் வாய்க்கு வந்தவாறு திட்டி, அவதூறுகள் பரப்பி, பொது மக்களுக்கு வெறுப்பும், கசப்பும் ஏற்பட எல்லாத் தந்திரங்களையும் கைக்கொண்டனர். அரபு நாட்டுப் பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படித் திசை மாறிப் போவதாகக் கதை கட்டி விட்டனர்.

இந்த நிலையில் எஸ்.கே., பீ.ஜை, கேரள முஜாஹித், அஹ்ல ஹதீஃத், ஸலஃபி போன்றோர் எம்மை ஆதரிப்பதாக வேகமாக வந்தனர். நாகர் கோவில், கடையநல்லூர், கோயமுத்தூர், கேரளாவில் சில ஊர்கள் என கூட்டங்களை ஏற்படுத்தி எம்மை தர்கா, தரீக்கா, மத்ஹபு எதிர்ப்புகள் பற்றிப் பேச வைத்தனர். எம்மை வரம்பு மீறிப் புகழ்ந்து மகிழ்வித்து அவர்களின் சுன்னத் ஜமாஅத்துக்கு எதிரான ஸலஃபி கொள்கையில் சிக்க வைக்கத் திட்டமிடுகின்றனர் என்பதை அப்போது நாம் விளங்கவில்லை. எஸ்.கே. எமது “”பல்சமய சிந்தனை” நூலைப் படித்து விட்டு எமக்கு 1985ல் எழுதிய கடிதங்கள் இதற்குப் போதிய சான்றாகும்.

இது 1986 ஜனவரியில் அந்நஜாத் ஆரம்பிப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் வெடித்தது. அந்நஜாத் ஸலஃபி சார்பாக வெளிவர வேண்டும் என்பதில் ஸலஃபி வகையறாக்கள் வீண் பிடிவாதம் பிடித்தனர். அவர்களின் வீண் பிடிவாதப் போக்கை நாம் ஏற்காமல் நீங்களே உங்கள் விருப்பம் போல் நடத்துங்கள். அதில் எமக்கு உடன்பாடில்லை என்று வெளியேறி விட்டோம்.

அப்போது IAC என்ற அமைப்பே இல்லை. இஸ்லாமிய இளைஞர் இயக்கம் (இ.இ.இ) என்ற அமைப்பின் சார்பாக எமக்கும், பீ.ஜைக்கும் இரண்டு கடிதங்களுடன் வந்திருந்த கள்ளக்குறிச்சி சுலைமான் சாஹிபும் மற்றும் அவருடன் வந்தவர்களும் அக்கூட்டத்திலிருந்து வெளியேறி நம்மோடு வந்து விட்டனர். இந்த நிலையில் வேறு வழியின்றி எஸ்.கே.யும், பீ.ஜை.யும் நம்மோடு வரும் கட்டாயம் ஏற்பட்டது. ஸலஃபி சார்பாக பத்திரிகை வெளிவருவது எங்களுக்கும் உடன்பாடில்லை என்று தனித்தனியாகக் கடிதம் 19.2.86ல் பீ.ஜை.யும், 1.3.86ல் எஸ்.கே.யும் எழுதி இருந்தனர்.

ஆக அந்நஜாத்தை எந்த அமைப்பையும் சாராமல் பிளவுபடாத முழுச்சமுதாயம் (21:92, 23:52) சார்பாக வெளியிடுவது என்றே முடிவு செய்யப்பட்டது. இதைத் தெளிவாக சுலைமான் சாஹிப் பேசி துபை இ.இ.இ. ஜமாஅத்திற்கு அனுப்பிய ஆடியோ கேசட் இருக்கிறது. இதன் காரணமாக முஜாஹித், அஹ்லஹதீஃத், ஸலஃபி பிரிவுகள் சார்ந்தோர் எம்மீது படு அவதூறுகளையும், அப்பட்டமான பொய்களையும் அவிழ்த்துவிட ஆரம்பித்தனர்.

அந்நஜாத்தை 1986 ஏப்ரலில் ஆரம்பித்தோம். 1986 டிசம்பருக்குள் பெரும் புரட்சி வெடித்தது. அந்நஜாத்தின் அபார வளர்ச்சி எம்மோடிருந்த மவ்லவிகளுக்கு வயிற்றைக் கலக்கியது. தங்களின் புரோகித வர்க்கத்திற்கு சாவு மணி அடிக்கப்படுமோ என்று அஞ்சினார்கள். இது 1987 ஜனவரியில் குட்டிபுரத்தில் நடைபெற்ற முஜாஹிதுகள் மாநாட்டில் வெளிப்பட்டது. அந்நஜாத்திலிருந்து எம்மை வெளியேற்றிவிட்டு அதைக் கைப்பற்றச் சதித்திட்டம் தீட்டினர். இப்போது ஸலஃபிகளும் இவர்களுடன் கைகோர்த்துக் கொண்டனர்.

இதன் உச்சக்கட்டம் திருச்சியில் 1987 பிப்ரவரியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் அரங்கேறியது. எம்மீது அமானித மோசடி, அந்நஜாத் பணத்தைச் சுருட்டிவிட்டோம் என்ற அண்டப் புளுகை, ஆகாசப் பொய்யைப் பரப்பி, எம்மிடமிருந்த அந்நஜாத் பொறுப்புகளை எல்லாம் தட்டிப் பறித்துக் கொண்டு, அட்ஹாக் கமிட்டிப் போட்டு வரவு செலவுகளை வரிவிடாமல் ஆராய்ந்து, தப்பித் தவறி ஒரு நூறு ரூபாய் விடுபட்டிருந்தாலும், அதை லட்சம் ரூபாய் போல் படம் காட்டி எம்மை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டினர். திட்டமிடுபவர்களுக்கெல்லாம் பெரும் திட்டமிடுபவன் அல்லாஹ் என்பதை மறந்துவிட்டார்கள்.

இறுதியில் அவர்களின் அமானித மோசடி, அந்நஜாத் பணத்தை எல்லாம் சுருட்டி விட்டோம் போன்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் தார்ப்பாயில் வடித்த அப்பட்டமான பொய் என நிரூபனமானது. ஒரு ரூபாயைக் கூட தவறாக நாம் எடுத்ததாக அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு, மூக்கறுபட்டு எம்மிடமிருந்து அபகரித்த அந்நஜாத் நிர்வாகத்தை மீண்டும் எம்மிடமே ஒப்படைக்கும் கட்டாயத்திற்கு ஆளாயினர். இது நடந்தது 1987 மார்ச்சில்.

அதன் பின்னர் அந்நஜாத்தில் புரோகிதத்தை நுழைக்கும் தீய திட்டத்துடன், இவர்களுக்கென்று ஒரு ஜமாஅத்துல் உலமா சபை அமைத்து அதை அரசில் பதிவு செய்து கொண்டு, அதை அந்நஜாத்தில் விளம்பரம் செய்து மவ்லவிகளை அதில் சேர்க்க முற்பட்டனர். அதற்கு நாம் இடம் கொடுக்கவில்லை. அதைக் காரணம் காட்டியே மவ்லவிகள் அனைவரும் நம்மை விட்டுக் கூண்டோடு வெளியேறினர்.

இம்மவ்லவிகளின் ஆகக் கேடுகெட்டப் புத்தி இதுதான்! அந்நஜாத்தின் ஆரம்பத்திலிருந்து அதன் வரவு செலவுகளை வரிவிடாமல் குற்றப்படுத்தும் நோக்கத்துடனேயே ஆய்வு செய்தும், ஒரு சிறிய தொகை கூட விடுபடாமல் கணக்குச் சரியாக இருக்கிறது என்று அவர்களே ஒப்புக்கொண்டு அவர்கள் அனைவரும் கையயழுத்திட்ட ஆதாரம் நம்மிடமிருக்கிறது. அவர்களே வேறுவழியின்றி அந் நஜாத்தை நம்மிடம் ஒப்படைத்துவிட்டு மவ்லவிகள் கூண்டோடு வெளியேறியதற்கும் அவர்கள் கையயழுத்திட்ட ஆதாரம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 28 ஆண்டுகளாக செல்லாக்காசான அதே அமானித மோசடி, பண மோசடி என அதே பழைய அவதூறுகளை மக்களிடையே பரப்பி வருகிறவர்களிடம் அல்லாஹ்வின் பயமோ, மறுமை அச்சமோ இருந்தால் இப்படிச் செயல்படுவார்களா? அல்லாஹ்மீதே ஆணையிட்டே அவதூறு பரப்புவார்களா?

கடந்த 28 ஆண்டுகளாக வாருங்கள், வந்து உங்கள் குற்றச்சாட்டுக்களை நிரூபியுங்கள் என்று மீண்டும் மீண்டும் அழைத்தும், பிடறியில் பின்னங் கால்கள் அடிபட வெருண்டு ஓடுவார்களா? இதுவே அவர்கள் அண்டப்புளுகர்கள், ஆகாசப் பொய்யர்கள் என்று குன்றிலிட்ட தீபமாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்துகிறதே. பொய்யையே மீண்டும் மீண்டும் சொன்னால் அது மெய்போல் தோற்ற மளிக்கும் என்ற கொயபல்ஸ் தத்துவத்தை வேத வாக்காகக் கொண்டு பொய்களைப் பரப்பி வருகிறார்கள்.

ஆக 1963லிருந்து இன்று 2014 வரை கடந்த 52 ஆண்டுகளாக இந்த மவ்லவிகள் கூட்டம்-புரோகித வர்க்கம் நம்மீது வரம்பு மீறிய பொய்களை அவதூறுகளை மக்களிடையே பரப்பிக் கொண்டு அப்பழியை 4:112 இறைவாக்குக்கூறுவது போல் நம்மீது சுமத்துகிறார்கள். நாம் அவர்களை இழிவு படுத்துவதாகக் கூறுகிறார்கள். அவர்களின் இந்தக் குற்றச்சாட்டில் கடுகளவாவது உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்.

1963லிலிருந்து தர்கா, தரீக்கா, மவ்லவிகளும், 1984லிலிருந்து மத்ஹபு மவ்லவிகளும், 1986லிருந்து முஜாஹித், அஹ்லஹதீஸ், ஸலஃபி மவ்லவிகளும், 1987லிலிருந்து தவ்ஹீத் மவ்லவிகளும், 1988லிலிருந்து காதியானி மவ்லவிகளும் இப்படி எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்துத் தூயமார்க்கத்தை மதமாக்கி பிழைப்பு நடத்தி வரும் அனைத்துத் தரப்பு மவ்லவிகளும் எம்மைக் கடுமையாக விமர்சித்து, அப்பட்டமான அவதூறுகள், பொய்கள் கூறி, எம்மைப் பற்றி பொதுமக்கள் தப்பெண்ணம் கொள்ளச் செய்து, நாம் எடுத்து வைக்கும், கடந்த 1000 வருடங்களாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட குர்ஆனின் நேரடிக் கருத்துக்கள், மக்களிடையே போய்ச் சேராவண்ணம் தடுத்து வருகின்றனர். உண்மை வீட்டு வாசலைக் கடக்கு முன் பொய் உலகையே சுற்றி வந்துவிடும் என்பது போல் இம் மவ்லவிகளின் பொய்க் கருத்துக்கள், நாம் எடுத்து வைக்கும் உண்மைக் கருத்துக்களை விட மிகமிக எளிதாக மக்களிடையே பரவுகிறது. ஷைத்தானும், அவனது அனைத்து வகைப் படைகளும் இம் மவ்லவிகளுக்குப் பக்கபலமாக இருந்து வழிகேடுகளே உலகம் முழுக்க, பெருங்கொண்ட மக்களிடையே போய்ச் சேர உதவுகிறான். அந்த மக்கள் தான் குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மட்டுமே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் எம்மைப் பற்றித் தார்ப்பாயில் வடித்தெடுத்த அவ தூறுகளை, பொய்களை, அமானித மோசடி, பணம் சுருட்டல் யூதக்கைக் கூலி, வெளிநாட்டுப் பணம் போன்ற கடுகளவும் உண்மையில்லாத செய்திகளை பரப்பித் திரிகிறார்கள். அதனால் முஸ்லிம்களில் இந்த மவ்லவிகள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்கள் அவர்கள் பங்கிற்கு அவதூறுகளை, பொய்களைப் பரப்பித் திரிகிறார்கள்.

நாமோ மார்க்கத்தை மதமாக்கி அது கொண்டு பிழைப்பு நடத்தும் மதகுருமார்கள் பற்றி அல்குர் ஆனில் கடுமையாக விமர்சித்துச் சொல்லும் வசனங்களை மட்டுமே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம். இங்கு அவர்கள் எம்மைக் குற்றப்படுத்தவில்லை. அல்லாஹ்வின் வசனங்களையே நிராகரித்துக் குற்றவாளியாகிறார்கள். ஆனால் 7:146 இறைவாக்குக் கூறுவது போல் ஆலிம் என்ற அவர்களின் பெருமை இந்த உண்மையை உணர விடாது.

இந்த மவ்லவிகள் நாம் எடுத்துக் காட்டும் குர்ஆன் வசனங்களை எப்படி நிராகரிக்கிறார்கள் தெரியுமா? அவ்வசனங்கள் முஷ்ரிக், காஃபிர்களுக்காக இறங்கியவை. எங்களுக்கும் அவற்றிற்கும் சம்பந்தமில்லை என்று கூறி எளிதாக, சிந்திக்கத் துணியாத மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். மார்க்கத்தை மதமாக்கி அது கொண்டு பிழைப்பு நடத்தும் யூத, கிறித்தவ, இந்து, பெளத்த இன்னும் பிற மதகுருமார்களையே மேற்படி குர்ஆன் வசனங்கள் எச்சரிக்கின்றன. உதாரணமாக 18:102-106, 33:66-68 இறைவாக்குகள் காஃபிர்களைக் கண்டிக்கின்றன. முஸ்லிம் மதகுருமார்களாகிய எங்களை அல்ல என்று கூறி முஸ்லிம்களை ஏமாற்றி வஞ்சிக்கின்றனர். மற்ற மதகுருமார்களை எச்சரிக்கும் இப்படிப்பட்ட வசனங்களை அல்லாஹ் இறுதி நெறி நூல் குர்ஆனில் ஏன் இடம்பெறச் செய்யவேண்டும்? அவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டால் அது பெருங்குற்றம். நாங்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வது தவறல்ல என்கிறார்களா? அவர்கள் பொய் சொன்னால் அது குற்றம். நாங்கள் பொய் சொல்லலாம் என்கிறார்களா? அவர்கள் விபச்சாரம் செய்தால் குற்றம், நாங்கள் விபச்சாரம் செய்யலாம் என்கிறார்களா? இப்படி முன்னைய சமுதாயத்தினர் செய்த பாவச் செயல்களை அவர் கள் செய்தால்தான் குற்றம். நாங்கள் தாராளமகாச் செய்யலாம் என்று நாக்கூசாமல் கூறுகிறார்களா? இவர்களை அறிஞர்கள் பட்டியலில் சேர்ப்பதா? அன்றைய தாருந் நத்வா ஜாஹில்கள் பட்டியலில் சேர்ப்பதா? சொல்லுங்கள்! ஆக ஹராமான வழியில் மார்க்கத்தை வயிறு வளர்க்கப் பயன்படுத்தும் மவ்லவிகள்-ஆலிம்கள் உட்பட முஸ்லிம் மதகுருமார்களையும் அவ்வசனங்கள் கட்டுப்படுத்தவே செய்யும். இதுதான் மறுக்கமுடியாத உண்மை!

யூத, கிறித்தவ மதகுருமார்களை இம்மவ்லவிகள் ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்தால் இம்மவ்லவிகளும் நுழைகிறார்கள் என்பதே குர்ஆன், ஹதீஃத் கூறும் உண்மை. இந்த உண்மைகளை மக்கள் மன்றத்தில் நாம் வைப்பதால், நம்மைப் பற்றி அவதூறு கூறுகிறார்கள் என்றால், அவர் நம்மைக் குற்றப்படுத்தவில்லை. குர்ஆன் வசனங்களையே நிராகரிக்கிறார்கள். நாளை மறுமையில் அதன் பலனைக் கண்டு கொள்வார்கள். இது நிச்சயம். நிச்சயத்திலும் நிச்சயம்!

1963லிலிருந்து இம்மவ்லவிகளின் ஏச்சுப் பேச்சு, அவதூறுகள், அப்பட்டமான பொய்கள் இவை அனைத்தையும் ஜீரணித்துக் கொண்டு, சில நல்லுள்ளம் கொண்டவர்கள், இம்மவ்லவிகள் நம்மை இழி வுபடுத்துவதைத் தாங்க முடியாமல், இந்த அளவு அவர்களை அடையாளம் காட்ட வேண்டாம் என்பதையும் பொருட்படுத்தாமல், நாம் குர்ஆன் கூறும் உண்மைகளை அதாவது கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இம்மவ்லவிகளால் மறைத்து வைக்கப்பட்டிருப்பவற்றை வெளிப்படுத்தி இம்மவ்லவிகளின் உண்மை முகத்தை அடையாளம் காட்டி வருகிறோம். இம்முயற்சி 51:55 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான் (இறை நம்பிக்கை) உள்ளவர்களுக்கு நிச்சயம் பலனளிக்கும். இது மட்டுமல்ல இம்மவ்லவிகள் செய்து வரும் அற்ப சொற்ப நன்மைகளும் நமது கணக்கில் வரவு வைக்கப்படுவதுடன், அப்படி அவர்களிடம் நன்மை இல்லை என்றால் எமது பாவங்கள் அவர்களின் கணக்கில் ஏறும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் குர்ஆன் கூறும் உண்மைகளை பகிரங்கப் படுத்துகிறோம். குர்ஆன் வசனங்களை மறுப்பதன் விளைவு, அவர்கள் அல்லாஹ்வையே மறுக்கிறார்கள், அதன் பலனையும் நாளை மறுமையில் நிச்சயம் பார்ப்பார்கள்.

அடுத்து இம்மவ்லவிகளை நாம் புரோகிதர்கள் என்று அடையாளம் காட்டுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் நாம் அவர்களைத் திட்டுவதாக, வசைபாடுவதாக மக்களிடம் சொல்லி மக்கள் எம்மீது வெறுப்பைக்கக்கவும், எமது குர்ஆன், ஹதீஃத் கருத்துக்களைக் கேட்கவும், அந்நஜாத்தைப் பார்க்கவும் மறுக்கிறார்கள். ஆம்! இம் மவ்லவிகளின் வசீகரப் பிடியில் சிக்கி இருக்கிறார்கள், வழிகேட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதகுருமார்களை இந்துக்கள் புரோகிதர் என்று பெருமையுடன் அழைக்கின்றனர். இதே போல அனைத்து மதங்களின் மக்களும் தங்கள் தங்கள் மதகுருமார்களை புரோகிதர்கள் என்று பெருமையாக அழைக்கின்றனர். இவர்கள் எப்படி மவ்லவி, மவ்லானா, ஆலிம், அல்லாமா, ஹஜ்ரத் என்றுழைக்கப்படுவதைப் பெருமையாக எண்ணுகிறார்களோ, அதுபோல் அவர்கள் தங்கள் மதகுருமார்க ளைப் புரோகிதர்கள் என்று அழைத்துப் பெருமைப் படுத்துகிறார்கள்.

இப்படி மற்ற மதங்களின் மதகுருமார்கள் தங்களைப் புரோகிதர் என்று அழைப்பதைப் பெருமையாக நினைக்கும் அதே வேளை முஸ்லிம் மதகுருமார்கள், புரோகிதர்கள் என்று அழைப்பதை வெறுப்பது ஏன்? ஆம்! இரகசியம் இதுதான். மற்ற மதங்களில் மதகுருமார்கள் அனைத்தையும் துறந்த துறவிகளாக இருக்க வேண்டும். (இன்று மக்களின் பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டி வைத்துக் கொண்டு, கருப்புப் பண முதலைகளுக்கும் பினாமியாக இருந்து கொண்டு தங்களை முற்றும் துறந்த துறவிகள் என்று பெருமைப்படுவது வேறு விஷயம்) அடுத்த வேளை உணவையும் மக்களிடம் யாசித்தே உண்ண வேண்டும். மக்களும் அவர்களுக்கு உணவளிப்பதையும், காணிக்கையாக செலுத்துவதையும் பெருமையாகக் கருதுவார்கள். மதகுருமார்களும் மக்களிடம் யாசித்துச் சாப்பிடுவதை இழிவாக எண்ணாமல் பெருமையாகவே கருதுகிறார்கள். அதனால் மக்கள் தங்களைப் புரோகிதர்கள் என்று அழைப்பதைப் பெருமையாகவே கருதுகிறார்கள்.

அதே சமயம் மவ்லவிகள் தங்களைப் புரோகிதர்கள் என்று அழைப்பதை ஏன் வெறுக்கிறார்கள் தெரியுமா? அதற்கு மாறாக மவ்லவி, மவ்லானா, ஆலிம், அல்லாமா, ஹஜ்ரத் என்று அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள் தெரியுமா? ஆம்! மார்க்கத்தை மதமாக்கி அதைக் கொண்டு பிழைப்பு நடத்துவது கொடிய ஹராம், தடுக்கப்பட்டது என்பதை நூற்றுக் கணக்கான குர்ஆன் வசனங்கள் கூறுவதை 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல் தங்கள் பெற்ற குழந்தைகளை அறிவது போல் நன்கு அறிந்த நிலையில்தான், அந்த ஹராமில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டவர்களை புரோகிதர்கள் என்று அடையாளம் காட்டும் போது அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கை தானே. திருடனை திருடன் என்றால் கோபம் வராதா? கொள்ளைக்காரனை கொள்ளைக்காரன் என்றால் கோபம் வராதா? அதற்கு மாறாக வியாபாரியை வியாபாரி என்றும், மருத்துவரை மருத்துவர் என்றும், வக்கீலை வக்கீல் என்றும், ஆடிட்டரை ஆடிட்டர் என்றும் அறிமுகப்படுத்தினால் அவர்கள் கோபப்படுவார்களா? இல்லையே! ஆம்! அவர்கள் ஹலாலான தொழில்களைச் செய்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் அவர்கள் பெருமைப்படும் மவ்லவி, மவ்லானா, ஆலிம், அல்லாமா, ஹஜ்ரத் போன்ற பெயர்களுக்கு இவர்கள் தகுதியுடையவர்கள் தானா என்று பார்ப்போம். 8:40, 22:78, 47:11, 3:150, 66:2 இறைவாக்குகள் அல்லாஹ்வையே “”மவ்லா” என்று குறிப்பிடுகின்றன. “”மவ்லவி” என் றால் அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று பொருள் தருகிறது. இவர்கள் உண்மையில் அல்லாஹ்வைச் சேர்ந்தவர்களாக இருந்தால் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வார்களா? சிந்தியுங்கள்.

அடுத்து “”மவ்லானா” என்ற பதம் 2:286ல் இடம் பெற்றுள்ளது. இதில் “”அன்த்த மவ்லானா” நீயே மவ்லானா என்று அல்லாஹ்வையே குறிப்பிடுகிறது. இந்த மவ்லவிகள் தங்களை “”மவ்லானா” என்று பெருமைப்படுவது இவர்களை எங்கு கொண்டு சேர்க்கும் (பார்க்க : 7:146) அடுத்து “”ஆலிம்” என்ற அரபி பதம் குர்ஆனில் இடம் பெறும் அனைத்து இடங்களிலும் அல்லாஹ்வை குறிக்கிறது. இந்த நிலையில் இந்த மவ்லவிகள் தங்களை ஆலிம் எனக் கூறிப் பெருமைப்படுவது இவர்களை எங்கு கொண்டு சேர்க்கும். (மீண்டும் பார்க்க : 7:146)

அடுத்து “”அல்லாமா” என்று பெருமைப்படுகிறார் கள். இப்பதம் குர்ஆனில் இருப்பதாகத் தெரிய வில்லை. ஆலிமுக்கு மேல் தகுதியுடையவர்களாக இவர்கள் கருதுகிறவர்களை அல்லாமா என்று அழைக்கின்றனர். ஃபிர்அவ்ன் சொன்னானே “”அனரப்புக்கு முல் அஃலா”-ரப்புகளுக்கெல்லாம் பெரிய ரப்பு என்று. அதுபோல் இவர்கள் அல்லாஹ் வுக்கு மேல் அறிந்தவர்களாக (நவூதுபில்லாஹ்) தங்க ளைக் கருதுகிறார்கள். இது எவ்வளவு கொடிய ´ஷிர்க்கை ஏற்படுத்தும் செயல் என்பதை 42:21, 49:16 இறைவாக்குகளை நீங்களே படித்து அறிந்து கொள்ளுங்கள்.

அடுத்து “”ஹஜ்ரத்” என்று மக்கள் தங்களை அழைப்பதைப் பெரிதும் விரும்புகின்றனர். ஏன்? பல அரைகுறை மவ்லவிகளே அடிக்கடி ஹஜ்ரத் என்ற பதத்தைக் கொண்டு அழைப்பதைப் பார்க் கலாம். அவர்களைப் பார்த்துத்தான் பொது மக்களும் இவர்களை ஹஜ்ரத், ஹஜ்ரத் என்று பெருமையாக அழைக்கின்றனர். மவ்லவிகளும் இதைப் பெருமையாக கருதுகின்றனர். என்னே இவர்களின் அறியாமை? இவர்களை அறிஞர்கள் என்று ஏற்கலாமா?

அரபியில் “”ஹாழிர்” என்ற பதத்தைத் திரித்து “”ஹழரத்” என்று ஆக்கி இருக்கிறார்கள். இப்பதம் 18:49ல் ஹாழிரா-நேரில் வைக்கப்படுவதையும், 2:282-ல் ஹாழிரத்தன்-உடனுக்குடன் என்றும், 7:163-ல் ஹாழிரத்தன்-கடலோரத்தின் என்றும், 2:196-ல் ஹாழிரீ-மஸ்ஜிதுக்குப் பக்கத்தில் என்றும் காணப்படுகிறது.

இந்த மவ்லவிகள் “”ஹழரத்” என்று அழைக்கப் படுவதை என்ன நோக்கத்தோடு பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? இந்துக்கள் தங்கள் மதகுருமார்களின் தலைவர்களை மடாதிபதிகளை, ஆதீனங்களை குருமகா சந்நிதானம் என்றே அழைக் கிறார்கள். அதாவது கடவுளின் அவதாரம் என்றே நம்புகிறார்கள். தங்களை மவ்லவி, மவ்லானா, ஆலிம், அல்லாமா, ஹழரத் என்று அறிமுகப்படுத் தும் இந்த மவ்லவிகள், இறைவனின் பண்புகள் கொண்டவர்கள் என்று மக்கள் நம்பவேண்டும் என்ற தீய நோக்குடன் தங்களை ஹழரத் என அழைக்கப் பேராவல் படுகின்றனர்.

ஆனால் அவர்களது விருப்பத்திற்கு மாறாக ஹஜ்ரத் என்று அழைக்கப்படுகின்றனர். ஹஜ்ர் என்றால் கல், ஹஜருல் அஸ்வத் என்றால் கருப்புக் கல் என்பது முஸ்லிம்கள் அனைவரும் அறிந்ததே. இவர்களது உள்ளங்கள் கற்பாறைகள் போல் இறுகி விட்டதால் ஹஜ்ரத் என்று அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள் போலும். அதிலும் “”ஹஜ்ர்” என் பதை ஹஜ்ரத் என்று ஆக்கி பெண்பாலாக்கி இருக் கிறார்கள். நேரடியாகச் சொன்னால் “”பொம்பளைச் சட்டி” என்று கூறலாம்.

இந்த மவ்லவிகள் பெருமையாகப் பயன்படுத் தும் பதங்களில் நிலையை அறிந்து கொண்டீர்களா? இந்த நிலையில் அவர்களை புரோகிதர்கள் என்று உள்ளதை உள்ளபடிச் சொன்னால் அவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? புரோகித் தொழிலை விட்டு விட்டு, நபிமார்கள், கலீஃபாக்கள், நபிதோழர்கள், தாபியீன்கள், தபஅதாபியீன்கள், இமாம்கள் செய்து காட்டிய மார்க்கப் பணியை, அவர்களை மட்டுமே பின்பற்றி அல்லாஹ்வுக்காக மறுமையில் கூலியை எதிர்பார்த்து, கூலி வாங்காமல் செய்து கொண்டு ஹலாலான முறையில் விவசாயம், வியாபாரம், தொழில், பொருள் உற்பத்தி என ஆகுமானவற்றில் ஈடுபட்டுத் தங்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்ய முன்வாருங்கள். உங்களை யாருமே புரோகிதர்கள் என்று சொல்ல மாட்டார்கள்.

இப்போது கவனமாகப் படியுங்கள். மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட அன்றைய, இன்றைய மதகுருமார்கள் பற்றி குர்ஆன் வசனங்கள் என்ன கூறுகின்றனவோ அந்த வசனங்களையே எடுத்து எழுதியுள்ளோம். அதனால் கோபப்படுகிறவர்கள் எம்மீது கோபப் படவில்லை. அல்லாஹ்மீது, அவனின் வசனங்களின் மீது கோபப்படுகிறார்கள். அவர்களின் உள்ளங்கள் கற்பாறைகளாக ஆகிவிட்டதால் (பார்க்க : 2:74, 5:13, 6:43, 125, 57:16) அல்குர்ஆன் வசனங்கள் அவர்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும் என்று கூறும் 17:41, 45-47,89, 22:72, 39:45 இறைவாக்குகளை நீங்களே படித்துப் பார்த்து தெளிவு பெறுங்கள். 3:103 இறைவாக்குக் கட்டளையிடுவது போல் பிரியாமல் ஒரே ஜமாஅத்தாக அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து நேர்வழி நடந்து ஈருலகிலும் வெற்றிபெற முன் வாருங்கள்.

நாம் இந்த மவ்லவிகள் பற்றி எடுத்து வைக்கும் இழிமொழிகள் அனைத்தும் குர்ஆன் கூறுபவையே. அந்த வசனங்களை எல்லாம் பலமுறை எடுத்து எழுதி இருக்கிறோம். புரோகிதர்கள் என்று நாம் அவர்களைச் சாடுவதும் குர்ஆனின் வழிகாட்டல் படியே என்பதையும் விளக்கிவிட்டோம். “”ஹஜ்ரத்” என்று பெருமைபடும் அவர்களின் எதார்த்த நிலை யையும் குர்ஆன் ஆதாரப்படியே விளக்கி விட்டோம்.

இந்த நிலையில் அவர்கள் நம்மீது ஆத்திரப்பட்டு அவதூறுகளையும், பொய்களையும், இழிசொல்களையும் கூறி மக்களை சத்தியத்தை, 6:153 கூறும் நேர்வழியை அறிய விடாமல் தடுத்தால், அவை அனைத்தும் நாளை மறுமையில் எமக்கு நன்மை தான். காரணம் அவர்களது அற்ப சொற்ப நன்மைகளும் எமது ஏட்டில் பதியப்படும். நன்மை இல்லை என்றால் எமது பாவங்கள் அவர்களது ஏடுகளில் பதியப்படுவதும் நன்மைதானே. இதில் என்ன சந்தேகம் இருக்கிறது?

 

 

 

 

 

Previous post:

Next post: