ஷிர்க்-இணை வைப்பின் தோற்றம்!

in 2015 ஜனவரி,பொதுவானவை

– அபூ அப்தில்லாஹ்

ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். சோதனையில் வெற்றி பெறச் செய்தான். ஆதம் (அலை) அவர்கள் செய்த தவறுக்குப் பின் இவ்வுலகிற்கு அனுப்பும்போதே என்னிடமிருந்து நேர்வழி காட்டல் வரும். அதன்படி நீரும் உமது வாரிசுகளும் நடந்தால் வெற்றி பெறுவீர்கள். எனது நேர்வழி காட்டலைப் புறக்கணித்து, உங்கள் பகிரங்க விரோதியான ஷைத்தானின் வழிகாட்டல்படி, உங்கள் மனோ இச்சைப்படி நடந்தால் நீங்கள் சென்றடைவது மீளா நரகம் என்று தெளிவாகக் கட்டளையிட்டே இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தான். இந்த உண்மையை அல்குர்ஆன் பகரா : 2:30 முதல் 39 வசனங்களைச் சுயமாக-நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.

ஆதம்(அலை) அவர்கள் இவ்வுலகிற்கு வந்த பின்னர் பல சந்ததிகளைப் பெற்றெடுத்தனர். அவர்கள் வளர்ந்த பின்னர் ஷைத்தானின் தூண்டுதல்படியும், தங்களின் மனோ இச்சைப்படியும் பல பாவங்களைச் செய்து வந்தனர். ஆயினும் அவை இறைவனுக்கு மாறு செய்யும் பாவங்கள்தான் என்று அறிந்த நிலையிலேயே அவற்றைச் செய்ததால், பின்னர் மனம் வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டவர்களாக இருந்தனர். இறைவனும் அவர்களின் தவ்பா-பாவமன்னிப்பை ஏற்று மன்னித்து வந்தான்.

இதை ஷைத்தானால் ஜீரணிக்க முடியுமா? பொறுக்க முடியுமா? அவனோ ஆதத்தின் சந்ததி களை வழிகெடுத்து அவர்களைக் கொண்டு நர கத்தை நிரப்பச் சபதம் ஏற்று வந்திருக்கிறான். எனவே பாவங்களைப் பாவங்கள்தான் என்று அறிந்த நிலையில் பாவங்களைச் செய்ய வைப்பதில் தனது சபதம் நிறைவேற வழியில்லை என்பதை அறிந்து பெரிதும் வருத்த முற்றான். பாவங்களைப் புண்ணியம் என்று தவறாகக் கருதி ஆதத்தின் சந்ததிகளை செய்ய வைக்க வழி என்ன என்று தனது மூளையை கசக்கி வந்தான்.

இந்த நிலை நபி நூஹ்(அலை) அவர்கள் காலம் வரை நீடித்தது. 4:48,116 குர்ஆன் வசனங்கள் கூறும் இறைவன் எந்த நிலையிலும் மன்னிக்கவே மன்னிக்காத இறைவனுக்கு இணை வைக்கும் (´ர்க்) மிகக் கொடிய செயல் நூஹ்(அலை) அவர்களின் சமூகத்திலேயே முதன் முதலாக ஷைத்தானால் கற்பனை செய்யப்பட்டு மக்களிடையே புகுத்தப்பட்டது. அது ஷைத்தானால் எப்படிக் கற்பனை செய்யப்பட்டது தெரியுமா?

பாவங்களை பாவங்களாகவே நினைத்துச் செய்யும்போது எப்படியும் மனசாட்சி உறுத்தவே செய்யும். எப்படியும் என்றாவது வருந்தி இறைவனிடம் தவ்பா- பாவமன்னிப்புக் கோரும் நிலை ஏற்படவே செய்யும். தவ்பா செய்து மீள வாய்ப்பு அதிகம் உண்டு. அதற்கு மாறாக 18:103,104 இறைவாக்குகள் கூறுவது போல் பாவங்களைப் புண்ணியமாகக் கருதி செய்யும்போது, அதிலும் எந்த நிலையிலும் இறைவனால் மன்னிக்கப்படாத கொடிய ´ஷிர்க்கை -இணை வைத்தலைப் புண்ணியமான செயலாகச் செய்யும் ஒருவன் பின்னர் எப்போதாவது அதிலிருந்து தவ்பா செய்து மீளும் நிலை ஒருபோதும் ஏற்படாது. காரணம் அதை அவன் பாவம் என்று செய்யவில்லை. நல்ல காரியம் புண்ணியம் என்றே செய்து வருகிறான். தவ்பாவுக்கு இடமே இல்லை!

ஷைத்தான் இதற்கு என்ன தந்திரம் செய்தான் தெரியுமா? நூஹ்(அலை) அவர்களின் சமூகத்தில் சில நல்லடியார்கள் வாழ்ந்தார்கள். அந்த நல்லவர்களை அந்த மக்கள் வானளாவப் புகழ வைத்தான். அவர்களைப் பற்றிய மிக உயர்வான மதிப்பு மரியாதையை அந்த மக்களிடையே புகுத்தினான் ஷைத்தான். அவர்களை இறைவனுக்கு மிகமிக நெருங்கிய வர்களாக அந்த மக்களை நம்பவைத்தான். அந்த நல்லடியார்கள் அந்த மக்களிடையே வாழும் காலங்களில் எல்லாம் வானளாவப் புகழப்பட்டு, பெரும் மரியாதையுடன் நடத்தப்பட்டார்கள்.

இந்த நிலையில் அவர்கள் மரணித்தவுடன் அவர்களை மிகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்து அதை நினைவிடமாக்கி, கபுரு-சமாதிகளாக்கி பின்னர் அதை வழிபடும் இடமாக்க ஷைத்தான் வழி வகுத்தான். காலக்கிரமத்தில் அவர்களின் ஞாபகார்த்தம் என்ற மாயையை உருவாக்கி சிலையாகக் கல்லில் செதுக்கி வழிபட வைத்தான் ஷைத்தான். முதன் முதலில் அப்படி சிலையாக வடிக்கப்பட்டு வணங்கப்பட்ட வர்களைத்தான், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் 71:23 இறைவாக்கில் வத்து, ஸுவாவு, யகூஸ், யஊக், நஸ்ரு என்று குறிப் பிட்டுக் காட்டுகிறான்.

முன்னர் பாவங்களைப் பாவங்கள்தான் என்று தெரிந்த நிலையில் மனோ இச்சைக்கு அடிமைப் பட்டு அப்பாவங்களைச் செய்தவர்கள் பின்னர் மனம் வருந்தி தவ்பா-பாவமன்னிப்பு இறைவனிடம் கேட்கும் நிலையிலிருந்த ஆதத்தின் சந்ததிகள், நூஹ் நபியின் சமூகத்தார், பின்னர் அவர்களிடையே இந்த நல்லடியார்கள் இறந்த பின் முதலில் கபுரு-சமாதி பின்னர் சிலைகள் வடித்து, ´ஷிர்க்கான சிலை வழிபாடுகளை நன்மை-புண்ணியம் என்ற நம் பிக்கையில் வழிபட ஆரம்பித்தனர். அதனால் இத்தீய செயலுக்கு அவர்கள் வருந்தவோ, இறைவனி டம் மன்னிப்புக் கேட்டு மீளவோ முற்படவில்லை. இந்த நிலையில்தான் அல்லாஹ் அவர்களிடம் நூஹ் (அலை) அவர்களை நபியாக அனுப்பினான். நூஹ் (அலை) அவர்கள் சமூகத்தினர்தான் முதன் முதலாக, மனிதர்களை இறைவனுக்கு இணையாக்கி இறைவன் மன்னிக்காத ´ஷிர்க் எனும் மாபாதகத்தை நடைமுறைப்படுத்தினர். அவர்களை ´ஷிர்க்கிலி ருந்து விடுவித்து நேர்வழிக்குக் கொண்டுவர இறைவனால் நபியாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தான் நூஹ்(அலை) அவர்கள், அதனால்தான் அவர்கள் முதல் ரசூல் என்றும் கூறப்படுகிறார்.

பஞ்சமா பாவங்களை எல்லாம் செய்து கொண்டிருந்தவர்களிடம் அவர்களின் பாவங்கள் உணர்த் தப்பட்டால் அதை ஏற்று அவர்கள் திருந்தும் வாய்ப் புப் பெரிதும் இருந்தது. அதற்கு மாறாக மனிதர் களை இணை தெய்வமாக்கி, சமாதிகளாக, சிலை களாக வழிபடுவதை நற்செயல் புண்ணியம் என்று அம்மக்கள் கருதியதால், நூஹ்(அலை) அவர்களின் நேர்வழி உபதேசங்கள் அந்த மக்களிடம் எடுபட வில்லை. இந்த எதார்த்த நிலையை குர்ஆனின் 71-ம் அத்தியாயம் 1லிருந்து 28 வரையும், 7:59-64, 11:25-48, 10:71-73, 14:9-12, 17:3,17, 22:42, 25:37, 26:105-122, 23:23-29, 37:75-82, 40:5, 51:46, 53:52, 54:9-16, 66:10, 3:33, 29:14,15, 57:26 போன்ற இறை வாக்குகள் அனைத்தையும் சிரமம் பாராமல், சோம்பல் படாமல் தங்களுக்குத் தெரிந்த மொழிகளிலுள்ள குர்ஆன் மொழி பெயர்ப்பைப் படித்து உணர்கிறவர்கள், பஞ்சமா பாவங்களை விட இறைவ னுக்கு இணை வைக்கும்(´ஷிர்க்) மாபாதகச் செயல் எவ்வளவு கொடூரமானது, அச்செயலை இறைவன் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான் (4:48,116) என்பதை விளங்க முடியும்.

அது மட்டுமல்ல, பஞ்சமா பாவங்களைச் செய்பவர்களுக்கு உபதேசம் செய்தால் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்த வாய்ப்பிருக்கிறது. காரணம் அவை பாவச் செயல்கள்தான் என்று அவர்களின் மனசாட்சி உறுத்துகிறது. அதற்கு மாறாக இந்தக் கொடிய ´ஷிர்க்கான செயலை நன்மை, புண்ணியம் என்ற மூட நம்பிக்கையில் (பார்க்க 18:103, 104) செய்து வருவதால் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு. பாவங்களைச் செய்ய வைத்து ஏமாந்த ஷைத்தான், பெரும் பாவத்தை-இணை வைத்தலை-´ஷிர்க்கை ஆதத்தின் சந்ததிகளைச் செய்ய வைத்து நரகத்தை நிரப்பத்தான் செய்த சபதத்தை நிறைவேற்றுவதில் மாபெரும் சாதனைப் படைத்து வருகிறான். அல்லாஹ் நாடிய மிகமிகச் சொற்பமானவர்களே ஷைத்தானின் வலையில் சிக்காமல் பாதுகாப்புப் பெறுகிறார்கள்; அவர்களே பெரும் பாக்கியசாலிகள்.

இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்று உறுதிபடச் சொல்லும் பாவங்களிலேயே மிகக் கொடூரமான பாவச் செயலான இறைவனுக்கு இணை வைக்கும்-´ஷிர்க் செய்யும் செயல் இன்று ஆதத்தின் சந்ததிகளில் 99.99%ஐ ஆட்டிப்படைக் கிறது. அவர்களில் 99.99 சதவிகித, அல்குர்ஆனை இறுதி நெறிநூலாக ஏற்றிருக்கும் முஸ்லிம்களும் சிக்கி இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையான செய்தி. எப்படி என்று பாருங்கள்!

சமாதி-கபுரு வழிபாட்டினைச் சரிகாணும் மவ்லவிகள் சிலை வழிபாடுதான் கூடாது; அவுலியாக்கள் அடங்கப்பட்டிருக்கும் கபுரு வழி பாடுகள் கூடும்; மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்று சில சுய விளக்கங்களைக் கூறி நியாயப்படுத்துகின்றனர். ஆனால் உண்மை என்ன? சிலை வழிபாடுகளும் இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய குற்றமே! கபுரு வழிபாடுகளும் அதே கொடிய குற்றமே! அவர்கள் செத்தவர்களை சிலை வடித்து நிற்க வைத்து வழிபாடுகள் செய்கின்றனர். இவர்கள் செத்தவர்களை சமாதி கட்டி படுக்க வைத்து வழிபாடுகள் செய்கின்றனர். எனவே சிலை வழிபாடுகளுக்கும், கபுரு வழிபாடுகளுக்கும் அணுவளவும் வேறுபாடு இல்லை. இரண்டும் இறைவன் மன்னிக்காத மாபெரும் கொடிய ´ஷிர்க்கே. நரகத்தில் சேர்ப்பவையே. இந்த உண்மையை 2:186, 7:3, 18:102-106, 33:36 குர்ஆன் வசனங்களை நடுநிலையோடு நேரடி யாகப் படித்து உணர்கிறவர்கள் நிச்சயம் ஏற்பார்கள்.

ஆனால் கபுரு வழிபாடுகளை நியாயப்படுத்தும் மவ்லவிகளும் அவர்களின் சுய புராணங்களை வேத வாக்காக(?) எடுத்து நடக்கும் அவர்களின் கண்மூடிப் பக்தர்களும் இந்த உண்மையை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். 7:146 இறைவாக்குக் கூறுவது போல் இந்த மவ்லவிகளின் ஆலிம் என்ற பெருமை, அவர்களை குர்ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து நிராகரித்து குஃப்ரிலாகச் செய்கிறது. அவர்களின் பக்தர்களோ கபுரு வழிபாடுகளை நன்மை தரும் புண்ணியமான செயல் என்ற குருட்டு நம்பிக்கையில் இருப்பதால் அவர்கள் மனம் வருந்தி, திருந்தி நேர்வழிக்கு வர வாய்ப்பே இல்லை!

கபுரு வழிபாடுகள் வழிகேட்டின்-´ஷிர்க்கின் உச்சக்கட்டம் என்றால் முஹ்க்கமாத் எனும் ஒரே பொருளுள்ள குர்ஆன் வசனங்களின் நேரடிப் பொருளை 2:159 இறைவாக்குக் கூறுவது போல் சுய விளக்கும் கொடுத்து திரித்து வளைத்து மறைப்பது அதைவிட பெரிய வழிகேடு. ஆம்! 33:36 இறைவாக் குக் கூறுவது போல் பகிரங்கமான வழிகேடு; 42:21, 49:16 இறைவாக்குகள் கூறுவது போல் அல்லாஹ்வுக்கும் மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்கும் அதிமேதாவிகளாகி ´ஷிர்க்கின் உச்சிக்கே செல்கிறார்கள். ஒரே நேர்வழி மார்க்கத்தை (6:153) எண்ணற்றக் கோணல் வழிகள் மதமாக்கி (21:92,93, 23:52-56) அதையே எண்ணற்ற வசனங்களை நிராகரித்து வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பவர்கள் ஒரு போதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள். (பார்க்க : 36:21, 7:146)

அவர்களும் வழிகெட்டு, தங்களை நம்பியுள்ள அப்பாவி மக்களையும் வழிகெடுப்பதிலேயே குறியாக இருப்பார்கள். செத்தவர்களுக்கு சமாதி -கபுரு கட்டி வழிபாடு செய்கிறவர்கள் அல்லாஹ் மன்னிக்காத மாபெரும் ´ஷிர்க்கான கொடூர செயல்களைத்தான் வழிபாடு நன்மை தரும் செயல்கள் என்று மூடத்தனமாக நம்பிச் செயல் படுகிறார்கள்.

அவர்கள் கற்பனைப் பொய்ச் சிலைகளை எல்லாம் வைத்து வழிபாடுகள் செய்கிறார்களே என்ற வாதமும் எடுபடாது. அதேபோல் முஸ்லிம்களும் கற்பனைப் பொய்க் கபுருகளைக் கட்டிக் கொண்டு அவர்களைப் போல் இவர்களும் வழிபாடுகள் செய்து வருகிறார்கள். அதுமட்டுமா! யானை, கழுதை, கட்டை இவற்றைப் புதைத்து, தர்காக்கள் ஆக்கி வழிபாடுகள் செய்து வயிறு வளர்க்கத்தான் செய்கிறார்கள். தமிழகத்திலுள்ள பெரும்பாலான தர்காக்களுக்கு நம்பத்தகுந்த வரலாற்று அடிப்படையில் ஒரு ஆதாரத்தையும் தரமுடியாது. ஆக சிலை கள் வழிபாடுகளுக்கும் தர்காக்கள் வழிபாடுகளுக்கும் அணுவளவும் வேறுபாடு இல்லை. இரண்டும் இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய குற்றமே; இறைவன் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். நிரந்தர நரகமே. (பார்க்க : 4:48,116)

சிலைகள், தர்காக்கள் வழிபாடுகள் எப்படி இணை வைக்கும் கொடிய குற்றமோ, அதேபோல் குர்ஆன், ஹதீஃத் நேரடி கருத்துக்களுக்கு முரணான வற்றை முன் சென்ற கலீஃபாக்கள், நபிதோழர்கள், தாபியீன்கள், இமாம்கள் பேரால் சொல்லப்படுவதை அப்படியே ஏற்று நடப்பதும் 9:31 இறைக்கட்டளைப்படி அவர்களை ரப்பாக ஆக்கி வணங்குவதன் அடிப்படையில் இறைவனுக்கு இணை வைக்கும்-´ஷிர்க் கொடிய குற்றமே. 2:134,141 இறை வாக்குகள் கூறுவது போல் அவர்களின் செயல்பாடுகள் சரியா, தவறா என்று நாம் ஆராய வேண்டியது மில்லை. எடுத்து நடக்க வேண்டியதுமில்லை. மீறி அவற்றை எடுத்து நடந்தால் அதுவும் ´ஷிர்க் எனும் கொடிய குற்றமே.

இறந்தவர்களாகட்டும், உயிரோடிருப்பவர் களாகட்டும் அல்லாஹ்வுக்கும், நமக்குமிடையில் புகுத்தி, குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான வற்றை அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் மவ்லவிகள், அரபி மொழி கற்றவர்கள், தப்பாக சொல்லவா போகிறார்கள் என நம்பி அவர்கள் சொல்படி நடப்பதும் 9:31 இறைக் கட்டளைப்படி ´ஷிர்க் எனும் பெரிய குற்றமே. 50:16, 56:85 இறை வாக்குகள் அல்லாஹ்வை விட மிகமிக நமக்கு நெருக்கமானவர்கள் மனிதர்களில் யாருமில்லை என்று சொல்லும்போது, யாரையும் நமக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் புகுத்த முடியுமா? சிந்தியுங்கள். 2:186, 7:3, 18:102-106, 33:36 இறை வாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள், இறந்துபோன, உயிரோடுள்ள எந்த மனிதரையும், ஆலிமோ, அல்லாமாவோ, அவுலியாவோ யாராக இருந்தாலும் அவர்களை வசீலாவாக, இடைத்தரகராகப் புகுத்தினால் 9:31 இறைக் கட்டளைப்படி அது இணை வைக்கும் கொடிய குற்றமேயாகும். அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். எப்படிப்பட்ட உயர்வான அமலாக இருந்தாலும், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகச் செய்தால் அதுவும் ´ஷிர்க் எனும் குற்றம் என்று ஹதீஃத்கள் கூறும்போது, அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடையில் இடைத்தரகராக யாரைப் புகுத்தினாலும் அது இணை வைக்கும் கொடிய குற்றமாவதில் சந்தேகமா?

இவ்வுலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கை (பார்க்க : 67:2); அதில் யாரை காப்பி அடித்தாலும் அது பெருங் குற்றமே. பாடங்களை நேரடியாப் படித்துச் சுயமாக விளங்கி எழுதினால் பரீட்சையில் 35 மார்க் வாங்கினாலும் வெற்றியடைவது போல், குர்ஆனையும், ஹதீஃத்களையும் நேரடியாகப் பார்த்துப் படித்து விளங்கி அதன்படி நடந்தால் 35 மார்க் எடுத்தாலும் வெற்றியடைவது போல் வெற்றியடையலாம். அதற்கு மாறாக காப்பி அடிப்பவர்கள் வெளியே தூக்கி எறியப்படுவது போல், மவ்லவிகளையோ, மவ்லவி அல்லாதவர்களையோ கண் மூடிப் பின்பற்றினால் நாளை நரகில் எறியப்படுவார்கள் என்பதே குர்ஆன், ஹதீஃத் கூறும் எதார்த்த உண்மை. மக்களே இறைவனுக்கு இணை வைக்கும், நரகைச் சென்றடையச் செய்யும் கொடிய பாவமான ´ஷிர்க்கான செயல்களிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஃத்களைப் படித்து விளங்கி அதன்படி நடக்க முன் வாருங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக!

Previous post:

Next post: