ஐயமும்! தெளிவும்!!

in 2015 அக்டோபர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : சுப்ஹு தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும்போது, சுன்னத்து தொழலாமா?
ஜைனுல் ஆபிதீன், இளங்காகுறிச்சி

தெளிவு : அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) அறி வித்துள்ளார்கள். சுப்ஹு தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்பொழுது சுன்னத்துத் தொழுகை இரண்டு ரகாஅத்துகளைத் தொழ ஒருவர் ஆரம்பித்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரது ஆடையைப் பிடித்திழுத்து, சுப்ஹு தொழு கையை நான்கு ரகாஅத்துகளாக்க நீர் கருதுகிறீரோ? என்று கேட்டார்கள். (அஹ்மத்)

கைஸ் பின் உமர்(ரழி) கூறுகிறார்கள். நான் சுப்ஹு தொழச் சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டவுடன், அவர்களோடு பர்ளைத் தொழுது விட்டு பின்னர் நான் தொழாதிருந்த பஜ்ருடைய சுன்னத்தைத் தொழுதேன். அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, என்ன இப்பொழுது தொழுதீர்? என்று கேட்க, நான் விடுபட்டு விட்ட சுன்னத்தைத் தொழுதேன் என்றென். அதற்கு அவர்கள் ஏதும் கூறாது சென்றுவிட்டார்கள். கைஸ்பின் உமர்(ரழி), அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத்)

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் அஸ்ருக்கும், இஷாவுக் கும் முன் சுன்னத்து தொழுதுள்ளார்களா? அவர் களின் அந்த சுன்னத்துகளில் முக்கியத்துவம் வாய்ந் தவையும் சாதாரணமானவையும் இருக்கின்ற னவா? அவற்றிற்கு ஹதீஸின் அடிப்படையில் விளக்கம் தருக! அஹ்மத், அல்கோபார்.

தெளிவு : இப்னு உமர்(ரழி) அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து (தினசரி சுன்னத்தான தொழுகைகள்) 10 ரகாஅத்துகள் தான் என்பதை நான் மனனம் செய்து வைத்துள்ளேன். (அவை யாவன) முஹ்ருக்கு முன் 2 ரகாஅத்துகள், பின் 2 ரகாஅத்துகள், மஃரிபுக்குப் பின் 2 ரகாஅத்துகள், இஷாவுக்குப் பின் தமது வீட்டில் 2 ரகாஅத்துகள் ஸுபுஹுக்கு முன் 2 ரகாஅத்துகள். (புகாரி, முஸ்லிம்)

அன்னை உம்முஹபிபா(ரழி) அறிவிக்கிறார்கள்:

ஒரு பகலும், இரவும் 12 ரகாஅத்துகள் (சுன்னத் தான தொழுகைகள்) தொழும் ஒரு நபருக்கு அவற் றைத் தொழுததன் காரணமாக சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். இவ்வாறு அவர்கள் கூறிய நாள் முதல் நான் அவற்றை (ஒருநாளும்) விடவேயில்லை. (முஸ்லிம்)

மேற்காணும் இரு ஹதீஸ்களும் ஏற்கத்தக்க, ஸஹீஹானவையாயிருப்பதால் இரண்டின்படியும் அமல் செய்வது ஆகும். மேலும் நபி(ஸல்) அவர்கள் தாமே ழுஹ்ருக்கு முன், சமயங்களில் 4ம், சமயங் களில் 2ம், தொழுதிருப்பதாக ஹதீஸ்களில் காணப் படுகிறது. மேலும் இவற்றை பெரும்பாலும் தாமும் தொழுது, பிறரையும் தொழும்படி ஆர்வமூட்டி யிருப்பதால் இவற்றை பிரதானமானவை எனக் கருதப்படுகிறது. இவையன்றி அஸ்ருக்கும், இஷா வுக்கும் முன்னுள்ள 4 ரகாஅத்துகள் குறித்தும், ழுஹ்ரு, மஃரிபு, இஷா முதலியவற்றின் பர்ளுக்குப் பின் தொழும் 2 ரகாஅத்து சுன்னத்து நீங்கலாக, நபில் என்னும் வகையில் தொழப்படும் 2 ரகாஅத்து கள் குறித்தும் போதுமான ஆதாரங்கள் ஹதீஸில் கிடையாது.

அஸ்ருக்கு முன் 4 ரகாஅத்துகள் தொழுபவருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வான் எனும் ஹதீஸ் இப்னு உமர்(ரழி) வாயிலாக அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது பற்றி இப்னு ஹிப்பான். இப்னு குஜைமா ஆகியோர் ஸஹீ ஹானவை என்றும், திர்மிதீ இமாம் அவர்கள் அதை ஹஸனான அறிவிப்பென்று கூறியிருப்பினும், ஏனைய ஹதீஸ்கலா வல்லுநர்கள் அவை குறித்து பல்வேறு குறைபாடுகளிருப்பதாகக் கூறியிருப்ப தால், அஸ்ரு, இஷா ஆகியவற்றின் முன் சுன்னத்து கள் இரண்டு ரகாஅத்துகள் என்பதைக் கூட பொது வான கீழ்காணும் ஒரு ஹதீஸையே ஆதாரமாகக் கொண்டு அமுல் நடத்தப்படுகிறது.

அதாவது பாங்குக்கும், இகாமத்துக்குமிடையில் தொழுகை உண்டு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் தொழுகையுண்டு என்று நபி(ஸல்) கூறி விட்டு, மூன்றாம் முறையாக விருப்பமுள்ளவர் களுக்கு என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ்பின் முகஃப்பல்(ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜ்ஜா
ஆகவே, நபி(ஸல்) அவர்களால் மேற்கூறப் பட்ட 10 ரகாஅத்து சுன்னத்துகள் நீங்குதலாக மற்றவை சாதாரணமானவை என்பதை அறிகிறோம்.

ஐயம் : ஜுமுஆவுக்கு முன், பின் தொழும் சுன்னத்து களின் நிலை குறித்து ஹதீஸின் அடிப்படையில் விளக்கம் தருக. அப்துல்லாஹ், திருச்சி.

தெளிவு : அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்: ஜுமுஆவின் பர்ளுக்குப் பின் தொழுவோர் 4 ரகா அத்துகள் தொழுது கொள்வார்களாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி)

இப்னு உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஜுமுஆவுக்குப் பிறகு தமது வீட்டில் 2 ரகாஅத்துகள் தொழுவார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)

இமாம் அபூதாவூத் அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களின் இதே ஹதீஃதின் தொடரில், நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் தொழுதால் 4ம் வீட்டில் தொழுதால் 2 ரகாஅத்துகளும் தொழுவார்கள் என்று அறிவித்துள்ளார்கள். ஆகவே ஜுமுஆவுக்குப் பின் 4ம், அல்லது 2 ரகாஅத்துகளும் தொழுதுள்ளார் கள் என்பதையே ஹதீஃதில் காணலாம்.

ஆனால் ஜுமுஆவில் பர்ளுக்கு முன் (ழுஹ்ருக்கு 4 அல்லது 2 ரகாஅத்துகள் தொழுவது போல்) நபி (ஸல்) அவர்கள் எதுவும் தொழுதார்கள் என்பதற்கு, ஸஹீஹான ஹதீஸ்கள் ஒன்றுமில்லை. அவ்வாறு உண்டு என்று கூறினால், அது பலகீனமானதாகவோ அல்லது இடைச் செருகலாகவோ அன்றி வேறில்லை.

எனவே, ஜுமுஆவின் பர்ளுக்கு முன், தஹிய்யத் துல் மஸ்ஜித்(பள்ளி காணிக்கை தொழுகை) எல்லா தினங்களிலும் சுன்னத்தாயிருப்பது போல் அன்றும் சுன்னத்துத்தான் என்பதை மறந்து விட வேண் டாம். ஆகவே அதையும், அதுபோன்ற மற்ற நபி லான எத்தொழுகையையும் தொழுது கொள்வது பற்றி எதுவுமில்லை. ஆனால் ஜுமுஆவுக்கு முன் சுன் னத்துகள் எதுவும் ஹதீஸின் அடிப்படையில் இல்லை என்பதே மிகச் சரியானதாகும்.

முஸ்லிம் 1584 முதல் 1589 வரையிலான வெள்ளிக்கிழமை இமாம் உரை நிகழ்த்திக் கொண் டிருக்கையில் தஹிய்யத்துல் மஸ்ஜித்-தொழுகை தொழுவது என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள ஹதீஃத்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் ஜுமுஆவுக்கு முன் சுன்னத்து இருக்குமானால் நபி (ஸல்) அவர் பாங்குக்குப் பின் சுன்னத்துத் தொழுத பின்னரே மிம்பரில் ஏறி உரையை ஆரம்பித்திருப் பார்கள். அப்படித் தொழுது காட்டவில்லை.

ஐயம் : தூக்கம் அல்லது மறதியின் காரணமாக, விழித்தவுடன் அல்லது நினைவு வந்தவுடன் தொழ லாம் என்று முயற்சிக்கும்போது நேரம் மக்ருஹான தாக இருக்கிறது. அப்பொழுது அத்தொழுகையைத் தொழலாமா? கே.முஹம்மது ஸாபிஹ், வேலூர்.

தெளிவு : ஒருவர்(பர்ளான) தொழுகையை மறந்து விட்டால் அல்லது(தொழாது) தூங்கி விட்டால் அதற்குப் பரிகாரம் அதை நினைத்தவுடன் (அல்லது விழித்தவுடன்) தொழுது கொள்வதேயாகும். (மற் றொரு அறிவிப்பில்) அதற்கு அதைத் தவிர வேறு பரிகாரமே கிடையாது என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அனஸ்(ரழி), புகாரி, முஸ்லிம்.

தூக்கத்தினால் எத்தவறுமில்லை, ஆனால் தவ றெல்லாம் விழிப்பில்தான் உள்ளது. உங்களில் ஒரு வர் (பர்ளான) தொழுகையை மறந்து விட்டால், அல்லது அதை விட்டும் தூங்கி விட்டால் (தூக் கத்தை விட்டு விழித்தவுடன்) மறதியிலிருந்து நினைவு வந்தவுடன் அதைத் தொழுது கொள்வா ராக! ஏனெனில், என்னை நினைப்பதற்காக தொழு கையை நிலை நிறுத்துவீராக என்று அல்லாஹ் கூறு கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூகதாதா(ரழி), முஸ்லிம்.

மேற்காணும் ஹதீஸின் வாயிலாக, தூங்கியவர் எழுந்தவுடன், மறந்தவர் நினைவு வந்தவுடன் எந்த நேரம் என்பதையே பொருட்படுத்தாது தொழுது கொள்வதுதான் சரி என்பதை அறிகிறோம்.

ஐயம் : பிரசவமாகி மூன்று தினங்கள் வரை தாயின் உடல் நலம் கருதி பிராந்தியை மருந்து போல் குடிக் கலாம் என்று சிலர் கூறுகிறார்களே அவ்வாறு குடிக்க மார்க்கம் அனுமதிக்கிறதா? ஸஃபிய்யா, திட்டச்சேரி. மருந்து எனும் வகையில் ஆட்டின் இரத்தம் சாப்பிடுவது நமது மார்க்கத்தில் ஆகுமா?
முஹம்மத் கனி, இளங்காகுறிச்சி

தெளிவு : மூமின்களே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்ரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே இவைகளி லிருந்து விலகிக் கொள்ளுங்கள்.(அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள் (5:90) போதை தரும் பானங் கள் அனைத்தும் ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அன்னை ஆயிஷா(ரழி), புகாரி.

இவ்வுலகில் ஒருவர் மதுவை அருந்திவிட்டு (அப் பாவத்திற்காக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு திருந்தி நடக்காவிட்டால் (சுவர்க்கத்தில்) மறு உலகில் (அல்லாஹ்வினால் அருளப்படும் பரி சுத்தமான) பானத்தை இழந்து விடுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), புகாரி

வல்ல அல்லாஹ்வும், அவனது ரசூலும் மேற் கண்டவாறு எச்சரிக்கை செய்துள்ளபோது, மருந் துக்காக அதை உபயோகிப்பதும் ஹராமேயாகும். காரணம் மதுபானமல்லாது, வேறு அநேக விதமான நல்ல ஹலாலான மருந்துகள் நூற்றுக்கணக்கில் இருக்கும்போது, எவ்வாறு பிராந்தி குடிப்பது ஆகு மானதாகும்? வேறு வழியே இல்லாமல் அதை சாப் பிட்டால் தான் மட்டும் ஆள்பிழைக்க முடியும் என்ற கடுமையான நிர்பந்த நிலை ஏற்படும் போது பிராந்தி என்ன? பன்றியின் மாமிசத்தையும், இரத் தத்தையும், செத்துவிட்ட பிராணிகளையும் கூட சாப்பிடலாம் என்று திருகுர்ஆனே கூறுகிறது. (மூமின்களே! நீங்கள் சாப்பிடக் கூடாது என்று) உங் களுக்குத் தடுக்கப்பட்டிருப்பவை: தானாகவே செத் தும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், (அறுக்கும் போது) அல்லாஹ் அல்லாத வேறு பெயர் சொல்லப் பட்டதுமேயாகும். ஆனால் எவரேனும் தம் சுய விருப்பமின்றி, பாவம் செய்யும் நோக்கமின்றி, வரம்பு மீறாமல், (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப் பட்டு விட்டால் அவர் மீது குற்றமாகாது. நிச்சய மாக அல்லாஹ் கருணை மிக்கோனும், அன்புடை யோனுமாக இருக்கிறான். (2:173)

மேற்காணும் திருவசனத்தில் இரத்தமும் ஹரா மாக்கப்பட்டுள்ளதை அறிகிறோம். சில பகுதிகளில் மூல வியாதி நெஞ்சுவலி என்று சொல்லிக்கொண்டு, சர்வ சாதாரணமாக அதைச் சாப்பிடுகிறார்கள். ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் வாயிலுபின் ஸுவைத் (ரழி) அவர்கள் மருந்துக்கு மதுவை உப யோகிப்பது ஆகுமா என்று கேட்டார். அதற்கவர் கள், கூடாது என்றார்கள். மீண்டும் கேட்டார் கூடாது என்றார்கள். அப்பொழுது அவர் அல்லாஹ் வுடைய நபியே! மருந்துக்குத்தானே கேட்கிறேன் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அது மருந்தல் லவே, அது வியாதியாயிற்றே என்றார்கள்.
வாயிலுல் ஹழ்ரமீ(ரழி),முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

எனவே, நபி(ஸல்) அவர்கள் மருந்துக்குக் கூட ஹராமான பொருட்களை உபயோகிப்பது கூடாது என்று கூறியிருப்பதை உணருகிறோம்.

ஐயம் : அன்னிய மதத்தவர் உபயோகிக்கும் சமை யல், சாப்பாட்டுப் பாத்திரங்களை நாம் உபயோகிப் பது கூடுமா? எஸ்.ஏ.லியாகத் அலி, திருச்சி

தெளிவு : ஒருமுறை அபூதஃலபா(ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எங்க ளுக்கு (பிரயாணத்தின் போது) மஜூஸி(நெருப்பு வணங்கி)களின் பாத்திரங்களை உபயோகிக்கம் நிர் பந்தநிலை ஏற்பட்டுவிடின், அப்பொழுது அவற்றை நாங்கள் உபயோகித்துக் கொள்வது பற்றி முடிவு சொல்லுங்கள் என்றார். அதற்கவர்கள் அவ்வாறு நிர் பந்த நிலை ஏற்பட்டுவிட்டால், அவற்றைத் தண்ணீ ரால் நன்கு கழுவிக் கொண்டு, பின்னர் அதனால் சமைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
அப்துல் லாஹ்பின் உமர்(ரழி), அஹ்மத்.

ஆகவே முஸ்லிம் அல்லாதவர்களின் பாத்திரங் களை நன்றாய் தண்ணீரால் கழுவியபின் உபயோ கிப்பது ஆகும் என்பதை அறியலாம்.

ஐயம் : ஒருவர் மற்றொரு முஸ்லிமிடம் மூன்று தினங்களுக்கு அதிகமாக பேசாமலிருப்பது கூடாது என்று கேள்விப்படுகிறேன் அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா? பி.எம்.மீரான்,

தெளிவு : ஆம், அவ்வாறே கூறியுள்ளார்கள்.ஒருவர் தமது முஸ்லிம் சகோதரரை மூன்று தினங்களுக்கு அதிகமாக (அவரோடு பேசாது) வெறுத்து, இருவரும் சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் புறக்கணித்துச் சென்று விடுவது முறை அல்ல. அவ் விருவரில் அடுத்த நபருக்கு முதலில் ஸலாம் சொல்ப வரே சிறந்தவராவார் என்று நபி(ஸல்) கூறினார்கள். அபூஅய்யுபல் அன்ஸாரீ(ரழி), புகாரி, முஸ்லிம் அபூதாவூத்

மூன்று தினங்களுக்கு அதிகமாக ஒரு மூமினான வர். அடுத்த மூமினானவரை வெறுத்து விட்டிருப் பது முறை அல்ல. மூன்று தினங்கள் கழித்துவிட் டால் (தாம் வெறுத்து விட்டிருந்த) அவரைச் சந்தித்து ஸலாம் சொல்ல வேண்டும். அவர் பதில் கூறிவிட்டால், இருவரும் (பரஸ்பரம் தமது வெறுப்பை அகற்றிக் கொண்டமைக்காக கிடைக் கும்) கூலியில் பங்குதாரராவார். அவர் பதில் கூறா விடில் அவர் மட்டும் பாவத்தைச் சுமந்தவராவர். ஸலாம் கூறியவர் (ஒரு முஸ்லிமை) வெறுக்கும் நிலையை விட்டும் விலகி விடுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா(ரழி), அபூதாவூது

ஐயம் : மீன் போன்ற கடல் வாழ் பிராணிகளை நாம் ஏன் மற்ற பிராணிகளைப் போல், அறுத்துப் புசிப்பதில்லை? அவ்வாறு செய்வதற்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆதாரம் காட்டுக!
கே.அர்­த் அஹ்மத், பேரனாம்பட்டு.

தெளிவு : (விசுவாசிகளே) இஹ்ராம் அணிந்துள்ள உங்களுக்கும், (மற்ற) பிரயாணிகளுக்கும், (பயன் கருதி) நீரில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்ப தும் ஹலாலாக (ஆகுமானதாக) ஆக்கப்பட்டுள்ளது. (5:96) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடத்தில் யாரசூலல் லாஹ்! நாங்கள் கடலில் பிரயாணம் செய்யும்போது, எங்களுடன் சிறிதளவு தண்ணீரே கொண்டு செல்கி றோம். அத்தண்ணீரால் நாங்கள் ஒளு செய்து விட்டால், பின்னர் தாகிந்திருக்க நேரிடும். அப் பொழுது கடல் நீரால் நாங்கள் ஒளூ செய்துகொள் வது ஆகுமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கடலின் தண்ணீர் சுத்தமானதும் அதிலுள் ளவற்றில் மரித்தவை ஹலாலானதுமாகும் என்றார் கள். அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம் அபூதாவூத், திர்மிதீ, நஸயீ)

மேற்காணும் திருவசனம், ஹதீஸ் ஆகியவற்றின் மூலம் கடல்வாழ் பிராணிகளில் இறந்து போனவை யும் ஹலால் என்பதை உணருகிறோம்.

ஐயம் : ஒரு முஸ்லிம் பொய் சொல்வது ஆகுமா? இஸ்லாத்தில் பொய் சொல்வது குறித்து ஏதேனும் விதிமுறை உண்டா? பி.எம்.மீரான், பத்ராவதி.

தெளிவு : உம்முகுல்ஸூம் பின்த் உக்பா(ரழி) அறிவிக்கிறார்கள் :
மக்களிடையே (பகைமையை நீக்கி) ஒற்று மையை உண்டுபண்ணும் நோக்கோடு, நல்லதைச் சொல்லி நன்மையை வளர்ப்பதற்காக (இல்லாத தொன்றைப்) பேசுபவர் பொய்யரல்லர் என்று நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மக்கள் பொய் என்று சொல்பவற்றில் நபி(ஸல்) அவர்கள் சொல்வதற்கு அனுமதி வழங்கியவை மூன்றே அன்றி, (வேறு எதையும் அவர்கள் கூற) அவர்களிடமிருந்து நான் கேட்டது கிடையாது.

1. யூத்தகளத்தில் (எதிரியைச் சமாளிப்பதற்காக, யுத்த தந்திர அடிப்படையில் கூறும் பொய்)
2. மக்களிடையே நல்லுறவை உண்டுபண்ணுவதற் காகக் (கூறும் பொய்)
3. ஒரு கணவர் தமது மனைவியையும், ஒரு மனைவி தமது கணவரையும் திருப்தி செய்வதற்காக சொல் லும் பொய் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உம்முகுல்ஸூம் பின்த் உக்பா(ரழி), முஸ்லிம்.

ஐயம் : ஆண்கள் தலையில் முடி வைப்பது அல்லது சிரைத்து விடுவது ஆகியவற்றில் ஹதீஸின் அடிப் படையில் எது சிறந்தது? ரியாஷ், மதராஸ்.

தெளிவு : இப்னு உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை தனது தலையில் ஒரு பகுதி சிரைக்கப்பட்டும். மறுபகுதி (சிரைக்காது) விடப்பட்டுமிருந்த ஒரு சிறுவனைக் கண்டார்கள். அப்போது (சம்பந்தப்பட்டவர்களிடம்) அதை முழு மையாகச் சிரைத்து விடுங்கள். அல்லது அதைச் சிரைக்காது) முழுமையாக விட்டு விடுங்கள் என் றார்கள். (அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

இந்த ஹதீஸ், தலைமுடி வைத்துக் கொள்வது சிரமமெனக் கருதும் ஆடவருக்கு அதை அகற்றிக் கொள்ளவும் செய்யலாம் என அனுமதி வழங்கு கிறது. நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜு உம்ரா போன்ற சந்தர்ப்பத்திலன்றி மற்ற நேரங்களில் தலைமுடி யைச் சிரைத்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் ஹதீஸ்களில் கிடையாது. ஹஜ்ஜு உம்ராவின் போதும் தலை மொட்டை போட்டுத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. விரும்பி னால் போடலாம். இல்லையேல் சிறிதளவு முடியை வெட்டிக்கொள்ளவும் செய்யலாம்.

இது வி­யம் குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் பயமற்றவர்களாக, உங்கள் தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், மேலும் அதன் உரோமங் களை வெட்டிக் கொண்டவர்களாகவும் பிரவேசிப் பீர்கள். (48:27)

மொட்டைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, மார்க்க ரீதியாக மொட்டைபோடுவதால் ஏதோ நன்மை இருப்பதாக கருதிக் கொண்டிருப்போர் கவனிப்பார்களாக!

எனவே முடி வைத்திருப்போர், ஹிப்பிகளைப் போல் அதைப் பாராமுகமாக, தலைவிரி கோலத் தில் விட்டுவிடாது, நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ் களுக்கேற்ப, பாதி காதுக்கு மேல் போகாது. புஜத் திற்குக் கீழ் இறங்காது. முறையாக வெட்டிக் கொண்டு, எண்ணெய் தடவி, சீவி முறையோடு வைத்துக் கொள்வார்களாக

ஐயம் : ஹுஹு என்னும் வார்த்தையைக் கூறி, தனி யாகவோ, கூட்டாகவோ திக்ரு செய்வது கூடுமா?
எச்.எஸ். அலாவுத்தீன், அதிரை.

தெளிவு : நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை தியானம் செய்வதற்காக ஹுஹு என்னும் வார்த் தையை நமக்குக் கற்றுத்தரவில்லை. அவர்கள் நமக்கு திக்ரு செய்வதற்குக் கற்றுத்தந்தவை அனைத் தும் முழுமையான பொருளைக் கொண்டுள்ள வாக் கியங்களே தவிர, பொருள் முழுமை பெறாத வார்த் தைகள் எதுவுமில்லை. உதாரணமாக, சுப்ஹானல் லாஹ் அல்லாஹ் பரிசுத்தமானவன், அல்ஹம்துலில் லாஹ் அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப் பெரியோன். இவை போன்ற வாசகங்களையே கூறி அல்லாஹ்வை தியானம் செய்வதற்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.
நாம் ஒரு முறை சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர் என்று கூறுவதானது. எவற்றின் மீதெல்லாம் சூரியன் உதிக்கின்றதோ அவை அனைத்தைக் காட்டிலும் (அகில உலகத்தைக் காட் டிலும்) எனக்கு அதிகம் விருப்பமுள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா (ரழி) முஸ்லிம்.

ஆகவே, நபி(ஸல்) அவர்களால் கூறப்பட்ட வாச கங்களைக் கொண்டு திக்ரு செய்வதன் மூலமே, நன் மையை அடைய முடியுமே அன்றி, அவர்களால் கற் றுத்தரப்படாத, நமது சொந்தத் தயாரிப்பிலுள்ள எந்த திக்ருகளுக்கும், குர்ஆன், ஹதீஸின் அடிப் படையில் சிறிதும் நன்மை கிடையாது.

ஐயம் : நாம் நமது வி­யங்களை ஒரு வக்கீலிடம் எடுத்துச் சொல்லி நீதிபதியிடம் நியாயத்தைக் கோருவது போல், அவ்லியாக்களிடத்தில் அவ்வாறு கூறி அல்லாஹ்வை அணுகுவதில் என்ன தவறு இருக்கிறது? அவர்களும் வக்கீலைப் போன்றவர் கள் தானே! நாம் பாவிகளாயிருப்பதால், நமது தேவைகளை அவனிடம் நேரிடையாக எப்படி கேட்க முடியும்? ஏ.கமாலுத்தீன், துபை.

தெளிவு : (நபியே!) நாம் உம்மை எவர்கள் மீதும் பாதுகாவலராக நியமிக்கவில்லை. இன்னும் நீர் எவருக்கும் வக்கீலும் அல்லர். (6:107)

என் அடியார்களே! உங்களில் எவரும் வரம்பு மீறி, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தும் பாவங்களையும் மன்னிப் பான், நிச்சயமாக அவன் மன்னித்துக் கிருபை செய் பவனாகும் என்று (நான் கூறுவதாக நபியே!) நீர்கூறும். (39:53)

உன்னையே வணங்குகிறோம் மேலும் உன்னிடமே உதவி தேடுகிறோம். (1:4)
எனவே, நல்லடியார்களும், பாவிகளும் இடைத் தரகரே இல்லாமல் இறைவனிடம் நேரிடையாக கேட்க வேண்டும் என்பதை மேற்காணும் திருவசனங்கள் வலியுறுத்துகின்றன.

ஐயம் : துல்ஹஜ் 9 முதல் 13 வரை ஐங்கால தொழு கைகளில் இமாம் ஸலாம் கொடுத்தவுடன் அனைவ ரும் சப்தமாக தக்பீர் முழங்குவது நபி வழியா?
பல தொலைபேசி ஐயம்.

தெளிவு : நபிவழிதான் மவ்லவிகளுக்கு எட்டிக் காயாக கசக்குமே. 7:55 இறைக் கட்டளைப்படி கூட்டு துஆவும் 7:205 இறைக்கட்டளைப்படி கூட்டு திக்ரும் பித்அத்கள், வழிகேடுகள் நரகில் சேர்ப் பவையே. ஆலிம் என பெருமை பேசும் இம்மவ்லவி கள் அல்லாஹ்வாலேயே குர்ஆனை விட்டுத் திருப் பப்படுவதால், 25:30 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனை நிராகரிப்பவர்களே. குர்ஆன் வசனங் களை ஏற்கமாட்டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழி என்பார்கள் என்று 7:146 இறைவாக்கு நேரடியாகக் கூறும் நிலையில், அவர்கள் பின்னால் செல்லலாமா? அவர்கள் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களே!

Previous post:

Next post: