“ஜாக்” நிறுவனர் S. கமாலுத்தீன் மதனியின் உபதேசம் யாருக்கு?

in 2017 ஏப்ரல்

மனம் திறந்த மடல்…

அன்புள்ள கொள்கை சகோதரனுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
நீ எல்லாவிதமான பாக்கியங்களையும் பெற்று சிறப்புடன் வாழ வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்.
இஸ்லாமை தங்கள் மார்க்கமாக ஏற்றுக் கொண்ட நம் சகோதரர்கள் மீது பாச உணர்வோடும் கவலையோடும் நாம் தெரிந்து கொண்ட நேரான வழி அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் தமிழகத்தில் பிரச்சாரப் பணியைத் துவங்கினோம். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் இந்த அறப்பணியில் ஈடுபட்டு, அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமெனவும் வணக்க வழிபாடுகளில் எதையும் அவன் அல்லாத வேறெதற்கும் செய்வது நம்மை அழிவின் பக்கம் கொண்டுபோய் சேர்த்து விடும் என்பதையும் அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் உரக்கச் சொல்லி மக்களை சத்தியப் பாதையில் அழைக்கின்ற பணியில் ஈடுபட்டவர்கள் முற்றிலும் உளத்தூய்மையோடும், சகோதரத்துவப் பாசத்தோடும், எதையும் தாங்கும் இதையத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் ஓர் அணியில் இணைந்து செயலாற்றிய நாட்களில் காணப்பட்ட நற்பண்புகளும், நல்லெண்ணங்களும் இன்றைய அழைப்பாளர்களிடத்தில் காண முடியவில்லை.

அல்லாஹ்தான் எங்கள் இறைவன், இஸ்லாம் தான் எங்கள் மார்க்கம், முஹம்மது நபி(ஸல்) அவர்கள்தான் எங்கள் தலைவர், எங்கள் வழிகாட்டி என்று நம்பியிருக்கின்றவர்கள் பலப் பிரிவு களாகவும், பலக் குழுக்களாகவும் சிதறி வாழவேண்டிய காரணம் என்ன? அவர்களை இணைய விடாமல் பிரித்தாளும் சூழ்ச்சி எது? இணைந்து செயல்பட முடியாத அளவிற்கு குறுக்கே நிற்பது எது? என்று சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் காலமும் சமூகமும் இருந்து கொண்டிருக்கிறது. பிரிவினையை ஏற்படுத்தி குழுக்களை உருவாக்கிவிட்ட தலைவர்கள் அவசியம் இது குறித்து சிந்திக்க வேண்டும். எதிர்கால சமூகம் அவர்களை நிந்திக்கக் கூடாது. அவர்கள் ஏற்படுத்திய கேடு களினால் சமூகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும், மனக் கசப்புகளையும், குரோத, விரோதங் களையும் நினைத்துப் பார்த்து இதற்கு காரணமானவர்களை சபித்து விடக்கூடாது. தங்கள் கெளரவங்களையயல்லாம் காலுக்கடியில் போட்டு மிதித்து விட்டு, அல்லாஹ்வுக்காகவே நேசிக்கின்ற ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும்.

அப்போதுதான் அவர்களுடைய செயல் பாடுகள் உண்மையானதுதானா? அவர்களுடைய எண்ணங்கள் தூய்மையானதுதானா? என்பதை மக்கள் புரிவார்கள். இதைத் தலைவர்கள் செய்யத் தவறுவார்களானால் தொண்டர்கள் பார்த்துக் கொண்டு அமைதி காக்கக் கூடாது. ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்க விரும்புகின்ற சமூகம் ஓர் அணியில் ஒன்று சேருவதற்கு குறுக்கே நிற்கின்ற சக்தி எதுவானாலும் அதைச் சமூகத்திற்கு இனம் காட்டி அப்புறப்படுத்துவதற்கு உண்மையான ஓரிறைக் கொள்கை இலட்சியவாதிகள் முன்வரவேண்டும். அதுதான் இறை நம்பிக்கையாளர்கள் செய்யவேண்டிய மகத்தான பணி. அதில்தான் படைத்த இறைவனின் அருளும் கருணையும் இருக்கிறது. இப்பணியைத்தான் அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் நிலைநாட்டி, அதைத் தன் சமூகத்திற்கு வலியுறுத்திச் சென்றுள்ளார் கள். அதற்காக முயற்சிப் போம், பாடுபடுவோம், வெற்றி பெறுவோம். இன்ஷா அல்லாஹ்.

அல்ஜன்னத், பிப்ரவரி 2017

குறிப்பு : அல்ஜன்னத் ஜூன் 2008-ல் S.K எழுதிய மனம் திறந்த மடலை
அந்நஜாத் ஜூலை 2008 இதழில் பார்வையிடவும்.

Previous post:

Next post: