இமாமத் செய்ய தகுதியுடையவர்

in 2017 மே

நஸீர் அஹ்மது, குன்னூர்

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாவும்.

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்…

நாம் இன்று அல்லாஹ்வுக்கு எவ்வளவோ நன்றி செலுத்த வேண்டும். இப்படி உலகத்தில் 99.99% ஆத முடைய மக்கள் வழிகேட்டில் இருக்க கூடிய சமயத்தில் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தீனையும், நபிவழியிலும், குர்ஆனின் ஒளியிலும் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஒரு சமுதாயம் இன்று நம் வாழ் நாளிலே உருவாகிக் கொண்டு வருகிறது. இதன் காரணத்தினால் நாமும், நம் குடும்பத்தாரும், நம் சந்ததிகளும் நேர்வழி பெற்ற முஸ்லிம்களில் ஒருவராக திகழ ஒரு மாபெரும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. மேலும் இதை உலக மக்களுக்குக் கொண்டு சேர்க்கக் கூடிய பாக்கியமும் நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இப்படி ஒரு பாக்கியம் நமக்கு கிடைக்காது வழிகேட்டிலேயே நாமும் வாழ்ந்து இருந்திருந்தால், எவ்வளவு பெரிய நஷ்டத்தை நாம் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை நம் எவராலும் ஊகித்து பார்க்க முடியுமா? உலக மக்கள் அனைவரும் கூடி அந்நஷ்டத்தை இவ்வளவுதான் என்று கணிக்க முடியுமா? இல்லை சுவர்க்கம் செல்வது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதைத் தான் கணிக்க முடியுமா?

இவ்வுலகத்தில் மனிதன் தன் அளவற்ற அன்பின் காரணத்தினால் அவர்களுக்கு பிரியமுடையவர்களுக்கு (உற்றார், உறவினர், மனைவி, மக்கள்) அதிக மாக உதவிகள் செய்ய வேண்டும் என்று எண்ணி எவ்வளவோ உதவிகளைச் செய்து வருகிறார்கள். அதில் ஒருவர் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்று கருதி அல்லாஹ்வுடைய தீனை அழகான முறையில் எடுத்துரைத்துத் தொழுகும்படி செய்தால், அதன் கார ணத்தினால் அவர்கள் சொர்க்கவாதியாகிவிட்டால் இதை விட ஒரு பெரிய உபகாரம் யாராவது ஒருவர் அவருக்குச் செய்துவிட முடியுமா? இல்லை அல்லாஹ்வுடைய தீனை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாமல் எவர் எவரோ சொன்னதை வைத்துக் கொண்டு அவர் அவர் இஷ்டப்படி வாழ்ந்து தானும் கெட்டு பிறருக்கும் அல்லாஹ்வுடைய தீனை தெளிவான முறையில் கிடைக்கச் செய்யாத காரணத்தினால் அவர்களுடைய மனைவி, மக்கள், உற்றார், உறவினர் இதன் காரணத்தினால் நரகவாதி ஆகி விட்டார்களேயானால், இதைவிட மாபெரும் துரோகம் இவர்களால் செய்திருக்க முடியுமா என்று சிந்தியுங்கள். இதில் எவ்வகையில் நாம் இருக்கிறோம் என்பதையும் சிந்தியுங்கள்.

உலகத்தில் வாழும் மனிதர்களில் வணக்க வழிப்பாட்டில் இருக்கும் அனைவரும் அல்லாஹ்வையும், சொர்க்கத்தையும் தான் தேடுகிறார்கள். நரகத்தை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள். எதைக் கொண்டு நாம் ஒருவரை நேர்வழியில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை கணிக்கிறோம் என்றால், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் சொன்ன வழியில் இருக்கிறார்களா? இல்லை அதற்கு மாறு செய்கிறார்களா? என்பதை அறிந்தே முடிவுக்கு வருகிறோம்.

இன்றைய சூழ்நிலையில் நாம் நம் நாட்டுக்கு ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க ஒரு அயல் நாட்டு மனிதரைத் தேர்ந்தெடுக்க மாட்டோம். நிச்சயமாக அவர் நம் நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதைப் போன்றே நம் மாநிலத்தின் முதன் மந்திரி நம் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அப்படி அல்லாத பட்சத்தில் அவர் நம் மாநிலத்தில் பல வருடங்களுக்கு முன் குடியேறிய வராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வழக்கம். அயல்நாட்டாரை நம் நாட்டுக்கு பிரதம ராக இருங்கள் என்பதோ அல்லது மற்ற மாநிலத்தில் வாழக்கூடியவரை நம் மாநிலத்தில் முதன் மந்திரியாக இருங்கள் என்று கூறுவது மடமையாகும். இதைப் போலவே நம் முஹல்லாவில் வாழக்கூடிய வரையே நம் முஹல்லாவுக்கு, பள்ளிக்கு முதவல்லியாகவோ, அமீராகவோ தேர்ந்தெடுக்க வேண்டும். அதை அல்லாமல் வேறு ஊரில் வாழக்கூடியவரை முதவல்லியாகவோ, அமீராகவோ தேர்ந்தெடுப்பது ஓர் அர்த்தமற்ற செயலாகும்.

1. திர்மிதியில் ஒரு ஹதீஃத் கூறுகிறது:

மாலிக் பின் ஹுவைரிஃத்(ரழி) எங்களைச் சந்திக்க எங்கள் மஸ்ஜிதுக்கு வரக்கூடியவராக இருந்தார்கள். ஒரு தடவை மஃரிப் உடைய நேரத்தில் அவர் வந்தார். நாங்கள் அவரை நீங்கள் முன் சென்று எங்களுக்கு இமாமத் செய்வீராக என்று சொன்னோம். அதற்கு அவர் மறுத்து விட்டார். (இமாமத் செய்வதை) உங்களில் ஒருவர் முன் சென்று தொழ வைக்கட்டும். தொழுததற்குப் பின் காரணத்தைக் கூறுகிறேன் என்று சொன்னார். பின் கூறினார் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு கூட்டத்தாரை நீங்கள் சந்திக்கச் சென்றால் நீங்கள் இமாமத் செய்யாதீர்கள். அவர்களில் ஒரு வரையே இமாமத் செய்யச் சொல்லுங்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஃத்(ரழி)

2. சஹிஹீல் புகாரி  VI/P,435/H,782,787

அறிவிப்பவர் : அபூகிலாஃபா(ரழி)

ஒரு நாள் மாலிக் பின் ஹுவைரிஃத்(ரழி) எங்களைச் சந்திக்க பள்ளிக்கு வந்தார்கள். அப்பொழுது கடமையான தொழுகை அல்லாத நேரத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் தொழுத முறையை காட்டட்டுமா என்று கூறி தொழுது காட்டினார். தொழுகை நேரம் வந்தவுடன் அதனை கூறுங்கள்; உங்களில் வயதில் மூத்தவர் தொழ வையுங்கள். (இமாமத் செய்யுங்கள்) என்று கூறினார்.

3. முஸ்லிமிலும், திர்மிதியிலும் உள்ள ஒரு ஹதீஃத்: அறிவிப்பவர் : அபூமஸ்ஊத்(ரழி)

நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் நெறி நூலை அதிகம் ஓதியவர் ஒரு சமுதாயத்திற்கு இமாமத் செய்யட்டும். ஓதுவதில் பலரும் சமநிலையில் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு தெரிந்தவர் இமாமத் செய்யட்டும். நபிவழியை நன்கு தெரிந்தவர் பலர் சமநிலையில் இருந்தால் ஹிஜ்ரத் செய்வ தில் அவர்களில் முந்தியவர் இமாமத் செய்யட்டும். ஹிஜ்ரத்திலும் அவர்கள் சமநிலையில் இருந்தால் அவர்கள் வயதில் மூத்தவர் இமாமத் செய்யட்டும். ஒரு மனிதரின் அதிகாரத்திற்குட்பட்ட விஷயத்தில் இன்னொருவர் அதிகாரம் செலுத்தக் கூடாது. ஒரு மனிதனின் இல்லத்தில் அவனுக்கே உரிய ஆசனத்தில் அவனது அனுமதியின்றி மற்றவர் அமரக் கூடாது.

மேற்காட்டிய ஹதீஃத்களில் இருந்து நமக்கு என்ன தெளிவாகிறது என்றால், இமாமத் செய்ய தகுதியுடையவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களே. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களே இமாமத் செய்துள்ளார்கள்.

அபூபக்கர்(ரழி) காலத்தில் அவர்களே இமாமத் செய்துள்ளார்கள். இதைப்போலவே உமர்(ரழி), உஸ்மான்(ரழி), அலீ(ரழி) அவர்களுடைய காலத்திலும் அவர்களே இமாமத் செய்துள்ளார்கள். இதைப் போலவே ஒரு நாட்டுக்கோ, ஊருக்கோ தலைவராக, அமீராக நியமிக்கப்பட்டவரே இமாமத் செய்துள்ளார்கள். இதற்கு எவரும் காசோ, பணமோ, எவ்வகையான கூலியோ பெற்றதாக சரித்திரம் இல்லை. மாறாக எவ்வகையிலும் இமாமத் செய்வதற்கு கூலிகள் வாங்க கூடாது என்ப தற்கு பல குர்ஆன் வசனங்கள், ஆதாரபூர்வமான ஹதீஃத் கள் உள்ளன. உதாரணமாக உஸ்மான் இப்னு அபீல் ஆஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கக் கூடிய ஹதீஃத் அபூ

தாவூத், திர்மிதியில் உள்ளது. முஅத்தினை நியமனம் செய்தால் எந்தவிதமான பிரதிபலனும் (கூலியோ, சம்பளமோ) பெற்றுக் கொள்ளாத ஒருவரை நிய மிக்க வேண்டும் என்று நபி(ஸல்) என்னிடம் இறுதியான, உறுதிமொழி வாங்கினார்கள் என்று கூறினார்கள்.

இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு முஅத்தின் ஒரு ஊருக்கு, ஒரு முஹல்லாவுக்கு ஒரு பள்ளிக்கு, ஒரு பர்ழான நேரத்திற்கு ஒருவர் ஒருமுறை அதான் கூறினால் போதுமானதாயிற்று, ஊரில் இருக்கும் அனைவரும் அதைச் செய்யத் தேவையில்லை. அப்படி இருந்த பட்சத்திலும் நபி(ஸல்) எப்பிரதிபலனையும் (மனிதர்களிடம்) எதிர்பாராத ஒரு நபரை முஅத்தினை நியமிக்கும்படி கட்டளையிட்டிருக்கும் பட்சத்தில் எல்லா மனிதர்கள் மீதும் கடமையான ஒரு தொழுகையை நிறைவேற்றக் கூடிய அல்லாஹ்வின் மஸ்ஜிதில் அத்தொழுகையை நிலை நாட்ட ஓர் இமாம் நியமிக்கப்பட்டால் எவ்வகையில் கூலி பெற அனுமதிக்கப்படும்.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா கடுமையான முறையில் 22 இடங்களில் திருகுர்ஆனில் தன் வச னங்களை விற்பதை ஹராம் ஆக்கியுள்ளான். (அல் குர்ஆன் 2:44, 2:41,42, 3:187, 4:46, 5:44)

மேலும் நபி(ஸல்) கூறுகிறார்கள் :

1. குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப் பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள். நபிமொழி நூல்கள் : அஹ்மத், தஹாவீ, தப்ரானீ, இப்னு அஸாகிர்.

2. எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல்லாஹ்விடமே கேட்கட்டும். வருங்காலத்தில் குர் ஆனை ஓதிவிட்டு மக்களிடமே (கூலி) கேட்பவர்கள் தோன்றுவார்கள் (என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.) நூல்கள் : திர்மிதி, அஹ்மத்.

3. குர்ஆனை ஓதுங்கள், அறிந்து கொள்ளுங்கள் அதன் மூலம் பொருள் திரட்டவோ, சாப்பிடவோ செய்யாதீர்கள். நூல்கள் : அஹ்மத், தப்ரானி

சாதாரணமாக மனிதர்கள் குர்ஆன் வசனங்களை விற்க வேண்டாம் என்றால் இப்பொழுது கிடைக்க கூடிய அச்சடித்து பைண்ட் செய்யப்பட்ட குர்ஆன் நூல்களையே என்று எண்ணுகிறார்கள். அப்படியல்ல, அதை விற்கவோ, வாங்கவோ எவ்வித தடைகளும் இல்லை. ஆனால் எதைத் தடை செய்யப்பட்டு உள்ளது என்றால், குர்ஆன் வசனங்கள் வஹீ மூலம் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. அதை அவர்கள் மனனம் செய்தார்கள். அதைப் பிறரிடம் எடுத்துரைத்தார்கள். அதை ஒவ்வொரு வரும் இதைப்போலவே மனனம் செய்து கொண்டார்கள். அதை ஓதியதற்கு பகரமாக மக்களிடம் பணம்/கூலி பெற்றல் கூடாது என்று இதைத்தான் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எச்சரித்துள்ளார்கள்.

சகோதர, சகோதரிகளே! சிந்தித்துப் பாருங்கள்!

எவரேனும் குர்ஆனை ஓதாமல் இமாமத் செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது.அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் இமாமத்திற்குக் காசு பெற்றுக் கொள்வது ஹராமாகும். அவர் கேட்பதும் ஹராமாகும். கொடுப்பதும் ஹராம் ஆகும்.

அல்லாஹ் சுப்ஹானஹு த ஆலாவை பொறுத்த வரையில் ஹராமில் சிறியது, பெரியது இல்லை. ஹராம் என்றால் ஷைத்தானுக்கு வழிபடுதல், அது மதுவோ, மதுக்கடையோ, மது தயாரிப்போ, விபச் சாரியோ, விபச்சார விடுதியோ, வட்டியோ, வட்டிக் கடையோ, காசுக்காக இமாமத் செய்வதோ அல்லாஹ்வின் முன்னிலையில் அனைத்து ஹராமான செயல்கள் புரிபவர்கள் பாவத்தில் சமநிலையில் உள்ளார்கள். ஷைத்தானுக்கு அடிபணிந்தவர்களாக உள்ளார்கள். இந்நிலையில் அல்லாஹ்விடம் நன் மையை நாடுவது அறிவீனமாகும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். (நபியே!) நெறிநூலில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும் நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான், எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
(அல்குர்ஆன்: 4:51,52)

ஒரு எஜமான் தன் கடையை பார்த்துக் கொண்டிருக்கும் வேலை ஆட்களிடம் இந்த ஜாடிகளை எல்லாம் நல்லமுறையில் பேணிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் செல்கிறார். ஒரு மடையன் அந்த வேலை ஆட்களிடம் அந்த ஜாடிகளை எடுத்து உடைத்துவிடுங்கள் என்று கூறுகிறான். அந்த வேலை ஆட்களில் ஒரு சிலரும் அந்த ஜாடிகளை உடைத்து விட்டு எஜமான் திருப்திபடுவார். சந்தோஷப்படுவார் என்று எண்ணுகிறார்கள். இதைச் சிந் திக்கக்கூடிய எந்த ஒரு மனிதரும் என்ன ஒரு பைத் தியக்காரனாக இருக்கிறான் என்றுதான் எண்ணுவார்கள். ஏனெனில் எஜமான் சொன்னதற்கு மாற்ற மாக செய்ததும் அல்லாமல் எஜமானிடம் அவனுடைய தண்டனைக்கு அஞ்சாமல் எஜமானுடைய திருப்தியையும், நற்கூலியுமல்லவா எதிர்பார்க்கிறார்கள்.

அல்லாஹ் தெளிவான முறையில் குர்ஆனில் பல இடங்களிலும், நபி(ஸல்) மூலமாகவும் அல்லாஹு வுக்கு மாறு செய்வதை கடுமையான முறையிலே எச்சரித்துள்ளான். மேலும் ஷைத்தான் சூழ்ச்சி செய்வதெல்லாம் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வைத்து (ஹராம்) நரகத்தின்பால் மக்களைப் புகுத்துவதற்கே விடாமுயற்சி செய்து கொண்டிருக்கிறான். இப்படியிருக்கும்பட்சத்தில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து எவ்வாறு அவனிடம் நன்மையை எதிர் பார்க்க முடியும். (பார்க்க : 15:39)

இதற்கு முன் உள்ள சமுதாயமும் வழிகேட்டில் ஆவதற்கு காரணம் அவர்களுடைய குருமார்களே, அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அவர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு தங்கள் பாதிரிமார்களையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும், கடவுள் ஆக்கிக் கொண்டார்கள். (அல்குர்ஆன் : 9:31)

இந்த வாக்கியம் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டபொழுது அதீய்யிபின் ஹாதிம்(ரழி) ஒரு கிறிஸ்தவராக இருந்து இஸ்லாத்தை அப்பொழுது தான் ஏற்று இருந்தார். அவர் நாங்கள் அவர்களை வணங்கவில்லையே எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அந்த பாதிரிகள் (ஹஜரத்துகள்) அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்குகின்றனர். இவ்விஷயத்தில் நீங்கள் அவர்களைப் பின்பற்றுகிறீர் கள் அல்லவா? என்று கேட்க ஆம் என பதில் கூறினார். இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதா கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மத்.

சிந்தியுங்கள்! தீனை அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியமான அம்சமாக உள்ளது. வாழ்க் கையில் ஈடேற்றம் பெறவும், இம்மை, மறுமை வாழ்க்கை வெற்றியடையவும், தீனை அறிந்து கொள்வது மிகமிக முக்கியமான அம்சமாக உள்ளது.

இவர் கூறினார், அவர் கூறினார் என்று கூறுவதை விட அல்லாஹ் என்ன கூறியுள்ளான். அவன் தூதர் என்ன கூறினார்கள் என்று அறிந்து கொள்வதே மிகவும் முக்கியமானதாகவும், சிறந்ததாகவும் உள்ளது. இதை மனிதர்கள் அறியாத காரணத்தினாலேயே அதிகமான ஜனங்கள் வழிதவறக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

ஹராமையும், ´ஷிர்க்கையும், சூஃப்ரையும் வணக்க வழிபாடுகள் என்று எண்ணி பயபக்தியுடன் நிலைநாட்ட முற்படுகிறார்கள். உதாரணமாக சிலை வணக்கம், தர்காக்கள், மந்திரித்த நூல் தாயத்து அணிதல், ­பே மிஃறாஜ் ஷபே பராஅத் இன்னும் தீனில் பலவாறாக பிரிதல்; ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத் தைப் (பலவாறாக) பிரித்து பல பிரிவினர்களாக பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே) உமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. (அல்குர்ஆன் : 6:159)

நபி(ஸல்) அவர்களும் கூறுகிறார்கள். என்னுடைய உம்மத் 73 பிரிவினர்களாக பிரிவார்கள். அதில் ஒன்றே ஒன்று மட்டும் சொர்க்கம் வரும். இப்படியிருந்தும் தற்போது எத்தனை வகையான பிரிவுகளைக் காண்கிறோம். உதாரணமாக ஹனபி, ஷாபி, ஹம்பலி, மாலிகி, காதியானி பஹாயி, முஜாஹித், ஜாக், அஹ்லஹதீஃத், மஸ்லக், ஸலஃபி, ததஜ, இதஜ, பல இயக்கப் பிரிவுகள். அல்லாஹ் அவனது நெறிநூலில் கூறுகிறான் எவர் பிரிந்து விட் டனரோ நபிக்கும் அவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறிவிட்டதால் இஸ்லாத்திற்கும் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் உள்ளதா? என்று சிந்தியுங்கள்.

அல்லாஹ்வின் பாதையை விட்டு மனிதர்களை வழிகெடுக்கச் செய்யும் அடிப்படையான அம்சம் இப்பிரிவினனைகள்தான். ஒரு காலத்தில் அல்லாஹ் வின் தூதர் ஒருவருக்கு அருளப்பட்ட நேரிய மார்க் கம் அதைப் பின்பற்றியவர்களால் திரிக்கப்பட்டு அதிலும் பல பிளவுகளை உண்டாக்கி அனுஷ்டிக் கப்பட்டு, மிகச் சமீபகாலத்தில் ஹிந்து மதம் என்று மனிதர்களால் பெயரிடப்பட்டுள்ள ஹிந்து மதத்தில் மேலும் எத்தனை பிரிவுகள் ஆகி உள்ளன. எந்தள வுக்கு வழிகேட்டில் சென்று விட்டார்கள் என்று அவர்களுக்கே புலப்படுவதில்லை. இதைப் போன்றே யூத கிறிஸ்தவ மதங்களும், இப்பொழுது முஸ்லிம்களிடையேயும் இதையே காண்கிறோம். அவர் அவர்கள் செய்து கொண்டு இருப்பதே சரி என்று காண்கிறார்கள். இந்துக்கள், யூதர்கள், கிறிஸ் தவர்கள் செய்தால் தான் தவறு, முஸ்லிம்கள் செய் தால் தவறு இல்லை என்று யாராலும் கூற முடியுமா? அல்லது அனைவருமே ஆதமின் மக்கள், அல்லாஹ் வும், அவன் தூதர்(ஸல்) சொல்லும் வழியே சரி, அதற்கு மாறு செய்யும் அனைவருமே தவறான வழியில் உள்ளார்கள் என்று கூறுவது சரியா? இல்லையா?

முஸ்லிம்களிடையே இப்பிரிவினைகளுக்கு காரணமாக இருக்கக் கூடியது, அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் அல்லாஹ்வின் தூதருக்கும்

கீழ்ப்படியுங்கள், உங்களில்(நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். (அல்குர்ஆன் : 4:59)

இதில் (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர் களுக்கு கீழ்ப்படியுங்கள் என்பது நம்முடன் உயிரு டன் இருப்பவர்களையே குறிக்கும். ஆனால் சிலர் அது இறந்தவர்களையும் குறிக்கும் என்று எண்ணு கிறார்கள். அவர்கள் எதை அறிந்துக் கொள்ள வேண் டும் என்றால் நாம் இறந்தவர்களை ஒருக்காலமும் அதிகாரத்தில் வைக்கப்போவதில்லை. ஏனெனில் அல்லாஹ் அதே வசனத்தில் கூறுகிறான். உங்களில் ஏதேனும் ஒரு வி­யத்தில் தர்க்கம் ஏற்படும்.

ஆனால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடியவர்களானால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் ஒப் படைத்து விடுங்கள். நாம் யாரை அதிகாரத்தில் (தலைவராக) வைத்துள்ளோமோ அவர் நிச்சயமாக உயிருடன்தான் இருக்க வேண்டும். அவர் இடும் கட் டளைகள் அல்லாஹ்வும், அவன் தூதரும் சொன்ன சட்டத்தின் அடிப்படையில் உள்ளதா? என்று நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர் இடும் கட்டளைகள் அல்லாஹ்வும், அவன் தூதரும் சொன்ன சட்டத்தின் அடிப்படையில் உள்ளதா? என்று நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி அவர் சொல்லக் கூடியதிலோ, ஏவக் கூடிய திலோ அல்லாஹ்வுக்கும் ரசூல்(ஸல்) அவர்களுக்கும் மாற்றமாக இருந்தால் நாம் அவருக்கு கட்டுப்படக் கூடாது. அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்குமே கட் டுப்படவேண்டும். இதுதான் மேற்கூறப்பட்ட வசனத்தில் தெளிவு. இதைத்தான் இமாம்கள் (ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹம்பலி) நால்வரும் கூறினார்கள். எங்களை நீங்கள் பொறுப்புதாரி ஆக்கிவிடாதீர்கள். நாங்கள் ஒருக்காலமும் பொறுப்பு ஏற்கமாட்டோம். நீங்கள் அல்லாஹ்வுக் கும், அவன் தூதருக்குமே கட்டுப்படுங்கள். இதை அறியாத மூடர்கள் இமாம்களுக்கும் அதிக காலம் பின்னால் அவர்களின் பெயர்களால் பல பிரிவினை களை ஏற்படுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும் (குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும்) மாற்ற மான பல சட்டங்களையும் இயற்றியுள்ளார்கள்.

ஈஸா(அலை) அவர்கள் நான் வணங்கும் இறைவனையே நீயும் வணங்கு என்பதாகக் கூறி னார்கள். ஆயினும் அவர் மேல் உள்ள அளவற்ற பக்தியினாலும் முஹப்பத்தினாலும், அவரையே வணங்கக் கூடியவர்களாக கிறிஸ்தவர்கள் ஆகிவிட் டார்கள். இதைப்போல் தான் அல்லாஹ் கூறுகி றான். நபிக்கு வழிபடுங்கள் என்பதாக, இமாம்களும் அதையே கூறினார்கள். ஆனால் இமாம் மேல் உள்ள முஹப்பத்தினால், பக்தியினால் இமாம்கள் இறந்த பின்னும் அவர்களின் பெயரால் மத்ஹப்களை உருவாக்கி, அல்லாஹ் ரசூல் கொடுத்த சட்டங்களை மாற்றி இவர்களே சட்டநூல்களை தயாரித்து (ரத்துல் முக்தார், துர்ருல் முக்தார், ஆலம்கீரி, ­ரஹுல் விகாயா, கன்ஸு, ஹிதாயா, இஆனா சிமிஉ.,) போன்ற பல சட்டநூல்களை தயாரித்து இதன் அடிப்படையில் மத்ஹப்களை பின்பற்றியும் வருகிறார்கள். இவற்றைப் பின்பற்றக்கூடியவர்கள் ஜாடிகளை உடைத்து எஜமானுடைய பொறுத்தத் தையும், நற்கூலியையும் எதிர்பார்க்கும் பைத்தியக் காரர்களே ஆவார்கள்.

ரசூல்(ஸல்) கூறுகிறார்கள், நிச்சயமாக உலமாக் கள் நபிமார்களின் வாரிசுகள், நபிமார்கள் தீனா ருக்கோ, திர்ஹமுக்கோ வாரிசாக மாட்டார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா(ரழி), நூல்கள் : அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத், பைஹகீ, ஹாக்கிம், தப்ரானி.

மேல்காணும் ஹதீஃதில் தெள்ளத் தெளிவாக ரசூல்(ஸல்) கூறுகிறார்கள். ஆலிம், உலமாக்கள் நபி மார்களின் வாரிசுகள்தான் என்று, ஆனால் நிச்சய மாக காசுக்கோ பணத்திற்கோ எவர்கள் தங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் தீனின் வேலையை செய்கிறார்களோ, அவர்கள் ஒரு காலமும் நபிமார் களின் வாரிசு ஆக மாட்டார்கள். ஒரு வாரிசுதாரர் தன் தகப்பனுடைய சொத்துக்களையும், வேலை களையும் பேணிப்பாதுகாத்து மாசற்ற தூய்மை யான முறையிலேயே மேலும் மேலும் முன்னேறப் பாடுபடுவார்கள். (இது பலவீனமான ஹதீஃத்)

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். நபி(ஸல்) பல ஹதீஃத்களில் கூறுகிறார்கள். உஹது போரின் பொழுது முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகமான வர்களாக இருந்தார்கள். அதில் ஒரு குறிப்பிட்ட ஒரு சிறிய கூட்டத்தாரை நபி(ஸல்) அழைத்து, அவர்கள் மிகவும் அழகிய முறையில் அம்பு எய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் நபி(ஸல்) ஒரு இடத்தை குறிப்பிட்டு இவ்விடத்தில் இருந்து நான் கூறும் வரையில் நீங்கள் ஒருபொழுதும் நகரக் கூடாது என்பதாக கட்டளையிட்டார்கள். போர் மூண்டதும் மிக எளிய முறையில் அழகிய வெற்றி முஸ்லிம்களுக்கு கிடைத்தது. எதிரிகள் (மக்கத்து காஃபிர்கள்) விரண்டோடினார்கள். இதைப் பார்த்த சஹாபாக்கள் அவர்கள் விட்டுச் சென்ற (கனீமத்) பொருளை சேகரிக்க ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த அந்த சிறிய கூட்டத்தார் எவரிடம் நபி(ஸல்) என் அனுமதியின்றி இவ்விடத்தில் இருந்து செல்லாதீர்கள் என்று கூறினார்களோ, அவர்கள் அவ்விடத்தை பாதுகாப்பதை விட்டுவிட்டு போர் தான் முடிந்து விட்டதே நாமும் அந்த (கனிமத்) பொருளை சேகரிப்போம் என்று எண்ணி அவ் விடத்தை விட்டு சென்று விட்டார்கள்.

அப்பொழுதும் ஒரு சிலர் நபி(ஸல்) இவ் விடத்தை விட்டு நரகவேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். நாங்கள் செல்லமாட்டோம் என்று கூறி அங்கேயே இருந்தார்கள். பெரும்பாலானோர் சென்று விட்டார்கள். விரண்டோடிக் கொண்டிருந்த எதிரிகள் இவ்விடம் காலியாக இருப்பதைக் கண்டு அவ்வழியாக வந்து முஸ்லிம்களுக்கு பலத்த சேதத்தை உண்டுபண்ணி அதிகமான சஹாபாக்களை ஷஹீதாக்கவும் செய்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்கும் பலத்த அடியும், ஒரு பல்லும் உடைந்து முகத்தில் காயமும் ஏற்பட்டது. நபி(ஸல்) இறந்து விட்டார்கள் என்ற கூக்குரலும் எழுப்பப் பட்டது.

ஆனால் ஒரு சிலரின் வீரச் செயலினால் அம் முஸ்லிம்களுக்கு ஏற்பட இருந்த பலத்த தோல்வியில் இருந்து அல்லாஹ் பாதுகாத்தான். இத்தோல்விக்கு முக்கியக் காரணம், இந்த சிறியக் கூட்டத்தார்தான். நபி(ஸல்) அவர்களுக்கு அருளிய தீனையும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையையும் (மக்களிடையே தீனை பரவச் செய்தல்) குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் அல்லாஹ்விடமே கூலியை எதிர் பார்த்தவர்களாகச் செயல்பட வேண்டும். இன் றைய சூழ்நிலையில் இவர்கள் காசு, பணத்துக்கு என்று (கனீமத்பொருளை தேடி) அழைகிறார்கள். இதன் காரணமாகவே முஸ்லிம் சமுதாயம் உலக முழுவதிலுமே பெரிய வீழ்ச்சியில் உள்ளது. ஒரு சிலரால் இச்சமுதாயம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. பலத்த சேதத்தில் இருந்து அல்லாஹ் பாதுகாத்து இம்மையிலும், மறுமையிலும் முழுமை யான வெற்றியை நமக்கு அருள்வானாக! ஆமீன்!

ஆகையால் இமாமத் செய்பவர்களை தம் முஹல்லாவாசிகளாக இருக்கக் கூடியவர்களிலிருந்தே (தலைவர்களாக) தேர்ந்தெடுத்து குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் தொழ வைப்பவராகவும், அவர் இல்லாத பட்சத்தில் அவருக்கு அடுத்தபடி யானவர், அல்லது அவருக்கு அடுத்தபடியானவர், அல்லது அவருக்கு அடுத்தபடியானவர் அப்படியே அந்த முஹல்லாவாசிகள் அனைவருமே தொழ வைக்க வாய்ப்பும் கிடைக்கும். குர்ஆன், ஹதீஃதை தெளிவான முறையில் அறிய வாய்ப்பும் கிட்டும், அப்படியில்லாதபட்சத்தில் ஒரு மனிதருக்கு காசை கொடுத்து தொழ வைக்கச் சொன்னால் அவர் இல்லையயனில் வேறு ஒருத்தரை அதே கூலிக்கு (அல்லாஹ்வுக்கும் அவன் நபிக்கும் மாறு செய்யக் கூடிய நிலையில்) இமாமத் செய்ய வைப்பார்கள். இந்த அடிப்படையில் போய்கொண்டிருந்தால் நம்மிடம் உள்ள தீன் சிறுக சிறுக அழிந்துவிடக் கூடும். இச்சூழ்நிலையை நம் கண்முன்னால் பார்த்துக் கொண்டுள்ளோம். அல்லாஹ் பாதுகாப்பானாக; மேலும் அவனுடைய தீனை ஓங்கச் செய்ய நமக்கு அருள்புரிவானாக. (ஆமீன்)

Previous post:

Next post: