அபூ அப்தில்லாஹ்விற்கு பிறகு அந்நஜாத் வெளிவருமா?

in 2017 ஆகஸ்ட்,தலையங்கம்

“”நாம் எமது 77 வயதை கடந்து கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் வல்லமை மிக்க அல்லாஹ் எம்மை இப்பூமியின் மேற்பரப்பில் நடமாட அனுமதிக்கிறானோ? யாம் அறியோம்! ஆயினும் எமக்குப் பின்னரும் அந்நஜாத் “”குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்க ஆதாரங்கள்; மனிதர்களில் எவரது சுய கருத்தும் ஒருபோதும் மார்க்கம் ஆகாது” என்ற நேர்வழிக் கருத்தில் உறுதியாக நின்று நிலைத்து வெளிவர வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். அல்லாஹ் அருள் புரிவானாக.”

மேலே உள்ள வாசகம், “”அந்நஜாத்” பத்திரிகை ஆசிரியர் சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் தமது அந்நஜாத் ஜூலை 2017 இதழில் பக்கம் 9 பத்தி 6-ல் எழுதியுள்ள செய்தியாகும். (முழுமையாக படிக்க ஜூலை 17 இதழில் “”அந்நஜாத்தின் பணி தொடரவேண்டிய கட்டாயம்” என்ற தலைப்பை படிக்கவும்)

இச்செய்தி பத்திரிக்கையில் வெளிவந்த 12 நாட்களில், பூமியின் மேற்பரப்பில் நடமாடிக் கொண்டிருந்த அவரை பூமியின் கீழ்பரப்பான மண்ணறையில் வசிக்க செய்து விட்டான் வல்லோன் அல்லாஹ்! ஆம்! எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்ட அல்லாஹ் இந்த சகோதரரின் ஆன்மாவைக் கைப்பற்றிக் கொண்டான். அவரின் மரணம் விபத்தாக இல்லாமல் இருந்திருந்தால், அவரைப் பற்றி புறம் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டவர்கள், மவுத் திற்கு பிறகும் புறம் பேசத்தான் செய்திருப்பர். ஒரு நல்ல காரியத்திற்காக அல்லாஹ்வின் பாதையில் இந்த அடியாரை பயணம் செய்ய வைத்து, அவரை விபத்திற்குள்ளாக்கி, மரணிக் கச் செய்து, அதன் மூலம் (ஸஹீஹான ஹதீஃதின்படி) ஸஹீதுடைய நிலைக்கு கொண்டு சென்று, புறம் பேசுவோரின் வாயை அடைத்துவிட்ட அல்லாஹ் தூய்மையானவன்! மிகப் பெரியவன்! ஈடு இணையற்றவன். எல்லாப் புகழுக்கும் உரியவன்!……….

ஜூலை 12, 2017 புதன்கிழமை பயணம் சென்றபோது, வழியில் மதுரை மேலூருக்கு அருகில் கொட்டாம்பட்டி எனும் இடத்திற்கு அருகில் பட்டமங்களப்பட்டி எனும் இடத்தில் விபத்திற்குள்ளாகி மரணித்தார். இறை நாட்டம் இது! உடன் பயணித்த அவரின் துணைவியாரும், இரண்டாவது மகனும் சிறிய காயங்களுடன் தப்பினர். இதுவும் இறை நாட்டமே! (நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள், மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே மீள வேண்டியிருக்கிறது)
மைய்யத்தாகி கிடந்த அவரின் முகம் அவ்வளவு அழகாக சற்றே புன்முறுவல் பூத்தவாறு இருந்ததற்கு சாட்சி: பார்த்தவர்கள் அனைவருமே! மைய்யித்தை பார்த்து சென்றவர்கள், அவரைப் பற்றி நல்ல வார்த்தைகளால் பேசிச் சென்றதை கண்கூடாக பார்த்தோம்.

ஆனாலும் அல்லாஹ்வுக்கே பயப்படாதவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். தம்மை பெரிய மார்க்க அறிஞர்(?!) என்று நினைத்துக் கொண்டிருக்கும் மைய்யத்தை பார்த்த தவ்ஹீத் புரோகிதர் ஒருவர் பொய்யனாக மாறி, கண் வெளியே தள்ளிக் கொண்டு வந்து விட்டது என்று கூறி தன் கோபத்தை தணித்துக் கொண்டார்.

புரோகிதர் வேறொருவரோ, “”காஃபிர் ஃபத்வா கொடுக்க எவருக்கும் உரிமை இல்லை” என அந்நஜாத்தில் அபூ அப்தில்லாஹ் அவர்கள் தெளிவாக எழுதி இருந்தும், “”அவரின் ஜமாஅத்தை சேராதவர்களை காஃபிர்கள் என அவர் ஃபத்வா கொடுத்து இருப்பதாக அவர் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி, அவரது ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக் கூடாது” என்றும் வாட்ஸ் அப்பில் பகிர்வு செய்துள்ளார்.

மரணித்து விட்டவர்களைப் பற்றி கெட்டதை பேச வேண்டாம் என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்திருந்ததைப் பற்றி தெரிந்த நிலையிலேயே தவ்ஹீத் புரோகிதர் துணிந்து பொய் கூறினார். ஆனால், அடுத்தவரோ மார்க்கம் தெரிந்த நிலையிலும் அப்பாவியாக இருக்கிறார். இவரை போன்றோரும், மார்க்கம் தெரியாத இந்த அப்பாவிகளை வழிகேட்டில் அழைத்து செல்லும் புரோகிதர்களை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இந்த அப்பாவிகளுக்காகத் தானே ஏற்பட்டது. இதற்காக பல எதிர்ப்புக்களுக்கு இடையே எவருக்கும் அஞ்சாமல் அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சி, தமது வாழ்நாளில் 31 ஆண்டுகளை அல்லாஹ் விடம் நற்கூலி பெரும் நோக்குடன் மட்டுமே இப்பணியில் தம்மை அர்ப்பணித்திருந்தார். அப்படி இருந்தும் இன்னும் அப்பாவிகள் இருக்கச் செய்வதால், அபூ அப்தில்லாஹ் அவர்களின் பணியை தொடர, வல்லோனிடம் உதவியை எதிர்பார்க்கிறோம்.

புரோகிதர்களை அவர் சாடி வருவதால், வெகுண்டெழுந்த புரோகிதர்கள் அவரை கடுமையாக எதிர்த்தனர். கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து தொல்லைகள் கொடுத் தனர், குடியிருந்த வாடகை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளரிடம் கூறி காலி செய்ய வைத்தனர். வேறு வீட்டுக்கு குடி புகுந்ததும், அதே தொல்லைகள் தொடர்ந்தன. வீட்டின் உரிமையாளரின் மகன் அவரின் தலையில் தடி கொண்டு தாக்கினான். பள்ளிகளில் தொழுகை முடித்து திரும்பி வந்தால் அவரின் செருப்பு காணாமற் போயிருந்தது. பல தடவைகள் இச்சம்பவம் தொடர்ந்தது, ஒவ்வொரு முறையும் அவர் செருப்பை தேடும்போதும் கேலி, கிண்டல் செய்தார்கள். சில மஹல்லாக்களில் பயானுக்காக போட்ட மேடையை பிரிக்க சொல்லி மிரட்டினர். இரவில் பயானை முடித்து விட்டு திரும்பும்போது 8, 3 என்று கேலி செய்து, கற்களை எறிந்தனர்.

இந்நிலையில் ஓரிரு சகோதரர்களின் முயற்சியால், ஏப்ரல் 1986ல் அந்நஜாத் பிறந்தது. பத்திரிகையில் “”ஸலஃபி வெளியீடு” என குறிப்பிட சொன்னார்கள். இஸ்லாத்தில் பிரிவு பெயர்கள் வைக்க குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் இல்லை என்று சகோதரர் மறுத்தார். இதை மனதில் வைத்து பிரிந்து செல்லும் எண்ணம் கொண்டிருந்தவர்கள் அதற்கான அடிக்கல் நாட்டினர்.

தனி மனிதர் ஒருவரின் வசீகர பேச்சினால், சில மாதங்களில் குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையில் திரளான கூட்டம் வளர்ந்து கொண்டிருந்தது. தன்னால் வளர்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தை தனதாக்க முயற்சித்த மவ்லவி & கோ.வினர், அப்படியே பிரிந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்து விட்டு சென்றனர். அந்நஜாத்தின் பணத்தை அபூ அப்தில்லாஹ் கையாடல் செய்து விட்டார் என குற்றம் சாட்டினர். கணக்கு வழக்குகளை ஆராய்ந்த கமிட்டி “”குற்றச்சாட்டுக்கள் பொய்” என நிரூபித்து விட்டது.

பிறகு, தவ்ஹீத் மவ்லவிகள் சேர்ந்து “”தவ்ஹீத் உலமாக்கள் அமைப்பு” ஒன்றை ஆரம்பித்தனர். அதை அந்நஜாத்தில் விளம்பரம் செய்ய சொன்னார்கள். இஸ்லாத்தில் ஆலிம்-அவாம் பிரிவு கிடையாதெனக் கூறி விளம்பரம் செய்ய மறுத்தார். இவர்களும் பிரிந்தனர். பத்திரிகை ஆரம் பித்த சில மாதங்களிலே இவ்வளவும் நடந்து முடிந்து விட்டது. உடன் இருந்தபோது அவரை அறிஞர் என்று பாராட்டிய அதே நாக்கால், பிரிந்து சென்றவுடன் மனநோயாளி என கூறுகிறார் ஒருவர். அபூ அப்தில்லாஹ் மவுத்தாகி விட்டால், அந்நஜாத் நின்று விடும் என்று கூறி மகிழ்கின்றனர். ஏன் இந்த வெறி? பூமியில் அவர் வாழ்ந்து முடித்த வாழ்க்கை சாட்சி சொல்லும் அல்லவா?

சத்தியத்தை எடுத்து சொன்ன எல்லா நபிமார் களும் இதைவிட அதிகமாக சோதனைகளை சந்தித்தனர் என்றும், கொலை செய்யப்பட்ட நபிமார்களும் உண்டு என்று கூறும் இறை வசனங்களைக் காட்டி உடன் இருப்பவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, தம் பணியை தொடர்ந்துவந்தார்.

இதன் பிறகு, சகோ.அபூ அப்தில்லாஹ்வை அமீராக ஏற்று, சாமானியர்களைக் கொண்ட சிறு கூட்டத்தினர் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் அவர்களைக் கொண்டு தான் இந்த 31 ஆண்டுகளாக, அந்நஜாத்தின் பயணம் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. இத்தரு ணத்தில்தான் “”எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்ட வல்லோன் அல்லாஹ், சகோதரரின் ஆன்மாவைக் கைப்பற்றிக் கொண்டான்”.

மேலே குறிப்பிட்ட புரோகிதர்கள், அப்பாவிகள் அனைவரும் இரு பக்கங்கள் கொண்ட நாணயத்தின் ஒரு பக்கம் போன்றவர்கள். நாண யத்தின் மறு பக்கம் போல செயல்பட்டவர்களைப் பாருங்கள்.

விபத்து ஏற்பட்ட இடத்தின் வழியே சென்று கொண்டிருந்த பலர் உதவினர். செய்தி அறிந்து தொலைபேசியில் பலர் தொடர்பு கொண்டனர். திருச்சியிலிருந்து பல சகோதரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக வந்து உதவினர். திருச்சிக்கு உடல் வந்ததும், அன்று மக்ரிப் நேரத்திலிருந்து அடுத்த நாள் காலை 9 மணியளவு வரை மக்கள் வந்துகொண்டிருந்தனர். அவரை விமர்சித்தவர்கள், அவரால் விமர்சிக்கப்பட்டவர்கள் என பாகுபாடின்றி வெளியூர்களிலிருந்தும் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் பலரும் அவரைப் பற்றி நல்ல வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருந்ததை காண முடிந்தது.

வந்திருந்த வெளியூர் வாசிகளை இரவில் பள்ளிவாசலில் தங்கவைத்து சகல வசதிகளையும் தாராளமாக செய்து கொடுத்தனர். குமந்தான் பள்ளி நிர்வாகத்தினர், இமாம் மற்றும் ஜமா அத்தினர். கூட்டம் சற்று அதிகமாக இருந்தும், ஜனாஸா தொழுகைக்கும், அடக்கம் செய் யவும் தாராளமாக சகல வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருந்தனர் சமஸ்பிரான் பள்ளி வாசல் நிர்வாகத்தினர். உடல் அடக்கம் செய்யப்படும் வரை இன்னும் பற்பல வழிகளில் பலர் உதவினர். அதன் பிறகும் கூட அந்நஜாத் தின் மீது அக்கறைக் கொண்ட பலர் அன்றே கூடி அறிவுரைகள் கூறினர். தேவைப்படும் உதவிகளை செய்வதாகவும் கூறினர். உதவிய அனைத்து சகோதர்களுக்கும், ஜமாஅத்தார் களுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவனாக.

சகோ. அபூ அப்தில்லாஹ் அவர்களின் குடும்பத்தினரும், அந்நஜாத் ஆசிரியர் குழுவினரும், அச்சகங்களின் பணியாளர்களும், உதவிகள் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பாவங்கள் மன்னிக்கப்படவும், மறுமையில் கேள்வி கணக்கின்றி உயரிய சுவர்க்கம் கிடைக் கவும், அவரின் விருப்பத்தின் பிரகாரம் அந்நஜாத் தொடர்ந்து வெளி வரவும், அவரது குடும்பத்திற்காகவும் அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு கோருகிறோம்.
இந்த நிலையில், அல்குர்ஆனின் 6:116 இறை வசனம் எங்களுக்கு ஆறுதல் தருகிறது. “”பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின் பற்றுவீரானால், அவர்கள் உம்மை அல்லாஹ் வின் பாதையை விட்டு வழி கெடுத்து விடுவார்கள். வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின் பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் யூகம் செய்பவர்களாகவே தவிர வேறில்லை.”

இவ்வசனம் எங்களுக்கு அன்றிலிருந்து இன்று வரை எப்போதும் தெம்பையும், தைரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்து கொண்டிருக்கும் ஒரு டானிக் ஆக இருந்து கொண்டிருக்கிறது. 31 ஆண்டுகளாக சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்களிடம் பழகி, பத்திரிகை பரிசீலனைக் கூட்டங்களுக்கு ஆஜராகி, அவரி டமிருந்து நாங்கள் குர்ஆன், ஹதீஃத்களிலிருந்து கற்றுக் கொண்டவைகளை மூளையில் ஏற்றி மனதில் நிறுத்தி வைத்திருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் எங்களுக்குள் சூரா ஜமா அத் அமைத்து, ஜூலை 2017 அந்நஜாத் இதழில் மரணிக்கும் முன் அவர் விரும்பி தெரிவித்தவாறு “”அவருக்குப் பின்னரும், “”குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்க ஆதாரங்கள்; மனிதர்களில் எவரது சுய கருத்தும் ஒருபோதும் மார்க்கம் ஆகாது என்ற நேர்வழிக் கருத்தில் உறுதியாக நின்று”, இன்ஷா அல்லாஹ் அந்நஜாத் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். வல்லோன் அல்லாஹ்விடம் அந்நஜாத்தின் வளர்ச்சிக்கு துஆ செய்யுமாறும் கோருகிறோம்.

ஒவ்வொருவரும் இயன்ற அளவு சந்தாதாரர் களை அறிமுகம் செய்வதோடு பழைய சந்தாக்களை அவசியம் புதுப்பிப்பதோடு, தங்களது உறவினர்கள் நண்பர்களின் சந்தாக்களையும் புதுப்பித்து தொடர்ந்து அந்நஜாத்தை படிக்க வைத்து அந்நஜாத் தொடர்ந்து வெளிவரவும், அதன் மூலம் அனைவரும் நேரிய மார்க்கத்தை அறிந்து செயல்படவும் ஆதரவு தருமாறு கோருகிறோம்.

குறிப்பு : வெளியூர்களில் இருக்கும் சகோதரர்கள் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆகிய விவரங்களுடன் எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

– அந்நஜாத் பரிசீலனைக் குழு.

Previous post:

Next post: