நஜாத் ஏன் பிறந்தது?

in 1986 மே,2017 ஆகஸ்ட்

தங்கத் தமிழகத்தில் இனிய இஸ்லாமிய இலட்சிய இதழ்கள் என்ற பெயரோடு பல பவனி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்னொரு பத்திரிக்கையா? அதுவும் மார்க்கத்தைப் போதிப்பதற்கென்று மதரஸாவில் ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் இருக்க கடிகாரக்கடைகாரனும், செருப்புக்கடைக்காரனும், பிளாஸ்டிக் கடைக்காரனும், மார்க்கத்தைப் போதிக்கிறோம் என்று கிளம்புவதா? இஸ்லாமிய பத்திரிகை நடத்துவதா? 7 வருடங்கள் கஷ்டப்பட்டு ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் பிழைப்பில் மண்ணைப் போடுவதா? என்ற அர்த்தமற்ற சந்தேகங்கள் எமது முதல் இதழுக்குப்பின் கிளப்பப்பட்டு, அப்பாவி முஸ்லிம்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். அப்பாவி முஸ்லிம்களின் குழப்பத்திற்கு விளக்கம் தேவை என்ற நல்லெண்ணத்தோடு நஜாத்தின் நோக்கங்களை இங்கு விளக்குகிறோம்.

எண்ணற்ற இதழிகளிலே “நஜாத்” அலாதியானது. தங்கள் உலக வாழ்க்கையை இலட்சியமாகக் கொண்டு நடத்தப்படுபவை இந்த இதழ்கள். அந்த நோக்கத்தின் காரணமாக அவசியப்படும் போது வளைந்து,நெளிந்து, குளிந்து கொடுக்கும் இயல்புகள் அவர்கள் அறிந்த நிலையிலேயே ஏற்பட்டு விடுகின்றன. இங்கு தீனை (மார்க்கம்) விட தீனி (உணவு) முக்கிய இடத்தைப் பெற்று விடுகிறது.

ஒரு சில இதழ்கள் இஸ்லாத்தை விளக்கும் தூய நோக்கோடு வெளி வந்தாலும் உண்மைகளை வெளிப்படையாகச் சொல்வதால், மக்களிடம் ஆதரவு இல்லாமல் போகிறது, என்ற அச்சத்தின் காரணமாக, உண்மைகளைப் பட்டும் படாமலும் கூறுகின்றன.

அல்ஹம்துலில்லாஹ். இன்று இஸ்லாமிய வரலாற்றில் புதியதொரு சகாப்தம் ஏற்பட்டுள்ளது. நீண்டகாலமாக மார்க்கத்தை வைத்து வயிறு வளர்க்கும் நிலையையே இஸ்லாமிய உலகம் கண்டுவந்தது. குர்ஆனும், ஹதீஸும் விலை பேசப்பட்டு வந்தன. பணம் பெற்று கொண்டு மார்க்கம் உபதேசிக்கப்பட்டு வந்தது. மார்க்கம் பிழைக்கும் வழியாகவும், மார்க்கத்தை உபதேசிப்பவர்களில் பெரும்பாலோர் தங்கள் உலக ஆதாயத்தையே குறியாகக் கொண்டிருந்தனர். இந்த இழிநிலைமாறி, தங்கள் கையிலிருக்கும் பணத்தைச் செலவழித்து மக்களுக்குப் போதிக்கப் புறப்பட்டிருக்கிறது. நபித்தோழர்கள் செய்தது போல், ஹலாலான தங்கள் சம்பாத்தியத்தின் கனிசமான ஒரு பகுதியை மார்க்கத்திற்காகச் செலவிடுவதை தங்கள் தலையாய கடமையாக இக்கூட்டம் கருதுகிறது.

ஆகவே இந்தக் கூட்டத்திற்கு வளைந்து, நெளிந்து, குனிந்து கொடுக்க வேண்டிய அவசியம் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. குர்ஆனும், ஹதீஸ்களும் – நபி வழியும் எவற்றை மார்க்கமாக போதிக்கின்றனவோ அவற்றை நெஞ்சுயர்த்திச் சொல்ல இக்கூட்டம் அஞ்சப்போவதில்லை. இதனால் ஏற்படும் அனைத்துத் துன்பங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்று ஸப்ரு செய்யத் தயங்கப் போவதில்லை. இன்ஷா அல்லாஹ். காரணம் இது நஜாத் வெற்றியின் பிரிக்க முடியாத ஒரு பாகமாக இருக்கிறது.

காலத்தின் மீது சத்தியமாக! மனித இனம் நஷ்டத்தில் உள்ளது. எவர்கள் ஈமான் கொண்டு, நல்ல (ஸாலிஹான) செயல்கள் செய்து; இன்னும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை (தவ்ஹீதை, தீனின் சரியான உண்மையான விஷயங்களை) உபதேசம் செய்தும், (அவ்வாறு உண்மையானவற்றைக் கூறுவதால் அதை ஏற்க மறுத்து, அதன் விளைவாக ஏற்படும் தீய பேச்சுக்கள் துன்புறுத்தல்கள், பயமுறுத்தல்களை தாங்கிக் கொண்டு அல்லாஹ்விற்காக) பொறுமையைக் (கடைபிடிக்க வேண்டுமென்பதை) கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தார்களோ அவர்கள் நீங்கலாக. (அல்குர்ஆன் 103 -1-3)

இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்ப்பட்ட நான்கு தன்மைகளைக் கைக் கொண்டவர்கள்தான் நஷ்டத்திலிருந்து நீங்கியவர்கள், வெற்றி பெற்றவர்களாவர்.

Previous post:

Next post: