MRSA-(ஷைத்தான்) குடியிருக்கும் குகை  – NOSTRIL

in 2017 செப்டம்பர்,அறிவியல்

பிஸ்மில்லாஹ் அர்- ரஹ்மான் அர்-ரஹீம்Post image for MRSA-(ஷைத்தான்) குடியிருக்கும் குகை  – NOSTRIL

 எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7.

பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும்,இவர்கள் அறியாதவற்றையும், ஜோடி ஜோடியாக படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.     அல் குர்ஆன்.36:36.

இன்னும் குதிரை,கோவேரி கழுதைகள்,கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும் அலங்காரமாகவும்,(அவனே படைத்துள்ளான்) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.   அல் குர்ஆன்.16:8.

அல்லாஹ் பூமியில் படைத்த படைப்பினங்களை சுருக்கமாக,மனிதர்,கால்நடை,தாவரங்கள் என்று நாம் அறிந்ததை சொல்லிவிட்டு,நாம் அறியாத ஒன்றையும் பூமியில் படைத்திருப்பதாக கூறுவது சிந்திக்கத்தக்கது.உண்மையில் இவ்வசனம் எம்மக்கள் மத்தியில் ஆறாம் நுற்றாண்டில்  இறங்கியதோ அந்த சஹாபா பெருமக்கள் மாத்திரமல்ல, அதைத்தொடர்ந்து 17 ஆம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த மக்களும் இப்படைப்பினத்தை அறியவில்லை.

ஆம்! நம் கண்ணுக்குத்தெரியாத கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நம்மை சுற்றி வாழ்வது…நம் உடலையே உலகமாக நினைத்து வாழ்வது….1675 ஆம் ஆண்டு ஆண்டன் வான் லீவனாக் என்னும் டச்சு அறிஞர், தான் சொந்தமாக உருவாக்கிய நுண்ணோக்கியின் மூலம் இந்த நுண்ணுயிர்களை கண்டு உலகிற்கு அறிவித்தார்.

ஒவ்வொரு மனிதனிலும் நமது கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் எனப்படும் Microorganisms வாழ்ந்து வருகின்றன. இவை நுண்ணோக்கியின் (Microscope) உதவியுடன் மட்டும் பார்க்கக் கூடிய, ஒரு செல், (Single Cell) அல்லது கூட்டுக் செல்களால்  (Multicellular) ஆன உயிரினங்கள் ஆகும். இவற்றை வைரஸ், (Virus), கிருமி (Bacteria), பூஞ்சை (Fungi) மற்றும் Protozoa என்று முக்கிய நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

நமது  உடற் பரப்பில், மந்தை மந்தையாக, ஒரு ட்ரில்லியன்(ஒரு லட்சம் கோடி) பாக்டீரியாக்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும்-அதாவது, மேல் தோலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டரிலும் ஒரு லட்சம் பாக்டீரியாக்கள். மேல்தோல் ஒவ்வொரு நாளும் உதிர்க்கின்ற சுமார் ஓராயிரம் கோடி செதில்கள், தோலின் நுண்துளைகள் வெடிப்புகளில் வடியும் சுவையான எண்ணை வகைகள் மற்றும் வலுவூட்டும் கனிமங்களே அவற்றின் உணவு.

மேலே குறிப்பிட்ட ஒரு லட்சம் கோடி பாக்டீரியாக்கள், நமது தோலின் மேற்பரப்பில் வசித்து வருபவை. இன்னொரு லட்சம் கோடி நமது உணவு/மூச்சுப் பாதைகளில் அமர்ந்தும்,, கண் இமைகளிலும் பிற இடங்களிலும் உள்ள உரோமங்களைப் பற்றிக்கொண்டும், ஈரவிழிப்படலத்தில் நீந்திக்கொண்டும், நமது பற்களின் எனாமலைத் துளைத்து கூடாரம் அமைத்துக் கொண்டும் வாழ்கின்றன. நமது ஜீரண மண்டலம், குறைந்த பட்சம் 400 வகைப்பட்ட, 10000 கோடிக்கு மேலான நுண்ணுயிரிகளுக்கு வாழ்வாதாரம்.

சுமார் பத்து க்வாட்ரில்லியன்(100 கோடி கோடி) செல்கள் இருக்கும் மனித உடலில், 100 க்வாட்ரில்லியன்(1000கோடி கோடி) பாக்டீரியா செல்கள் குடியிருக்கின்றன. அதாவது, நம்மில்  பெரும்பகுதி அவையே.மனிதர்களில் நல்லவர்,தீயவர் இருப்பதுபோலவே மனிதர்களில் குடியிருக்கும் பாக்டீரியாக்களிலும்  நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தீமை செய்யும் பாக்டீரியாக்கள்  என இரு பிரிவினர் உள்ளனர்.

நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், பல கோடி ஆண்டுகள் மனிதரில்லாத உலகில் உலவி வந்த உயிரினம். அவற்றின் துணையின்றி நாம் ஒருநாள் கூட வாழ்ந்திருக்க முடியாது. அவை நம் கழிவுகளைச் சுத்திகரித்து, மறு சுழற்சிக்குத் தருகின்றன. அவை அயராது மென்ற பின்னரே இறந்த உயிரினங்கள் மக்கிப் போக இயலும். அவை, நாம் பயன்படுத்தும் நீரை சுத்திகரித்தும், நம் விளை நிலங்களின் உற்பத்தித் திறனைத் தக்கவைத்தும் உதவுகின்றன.

மேலும், நம் வயிற்றில் வைட்டமின்களை உணவுடன் ஒருங்கிணைப்பது, உடல் ஏற்கும் சர்க்கரைகளாகவும், கலப்புப் பல்சர்க்கரைகளாகவும் (polysaccharides), உண்ணும் உணவை மாற்றுவது, நம் தொண்டை வழியாக நுழையும் அயலிடத்து கிருமிகளுடன் போரிடுவது போன்ற பலவற்றையும் அவை செய்கின்றன.

காற்றிலுள்ள நைட்ரஜனை எடுத்து, நமக்குப் பயன்படும் ந்யூக்லியோடைட்களையும் அமினோஆசிட்களையும் தயாரிக்க, பாக்டீரியாக்களால் மட்டுமே முடியும் அப்படிக்கிடைக்கும் நைட்ரஜன் இல்லாமல் பெரிய உயிரினங்கள் பிழைத்திருக்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நுண்ணுயிரிகள் நமக்கு சுவாசிக்கும் காற்றையும் நிலையான காற்றுமண்டலத்தையும் தொடர்ந்து அளித்து வருகின்றன.

சைனோபாக்டீரியா என்னும் புதிய பதிப்பு உள்ளிட்ட பாக்டீரியாக்கள், பூமிக்கோளின் சுவாசிக்கத்தக்க பிராணவாயுவின் பெரும்பகுதியைத் தருகின்றன. கடற்பாசி மற்றும் கடல்வாழ் சின்னஞ்சிறு உயிரினங்கள் குமிழிகளாக ஓராண்டில் வெளியேற்றும் ஆக்சிஜனின் எடை 150 பில்லியன்(15 கோடி) கிலோ கிராம்.

Human neutrophil ingesting MRSA.jpgநம் உடலுக்கு தீங்கிழைக்கும் பாக்டீரியாக்களும், நம் உடலிலேயே அமைதியாக வாழ்ந்து தக்க தருணத்தில் கொடும்  நோயைக் கொடுக்கும் குனமுள்ளதாகவும் இருக்கிறது. ஹெச்ஐவி வைரஸ், செல்களின் கருவில் ஒளிந்துகொண்டு வம்பு செய்யாமல் ஆண்டுக்கணக்கில் தாக்குதலை நடத்தும் தருணம் வரும் வரை காத்திருக்கும். கிருமி தாக்குவதிலும் கூட சில புரிந்துகொள்ள முடியாத அதீத நிகழ்வுகள் உண்டு.  


“மனித உடலின் ஒரு பகுதியில் நிரந்தரமாகத் தங்கி ஒரு தீங்கும் விளைவிக்காமல் சாதுவாக வாழ்ந்துவரும் சில நுண்ணுயிரிகள், சில சமயம் வழி தவறி வேறு பகுதியை அடைய நேர்ந்தால்,அவை வெறியாட்டம் போடும்” என்கிறார்கள் தொற்றுநோய் நிபுணர்கள் “எல்லா பயங்கர கார் விபத்துகளிலும், மக்கள் உள்காயம் அடையும்போது, குடல் பகுதியில் வாழும் சாது கிருமிகள்,உடலின் வேறுபகுதிகளுக்குத் தள்ளப்பட்டு (உதாரணமாக,ரத்த ஓட்டம்), அங்கே அவை பேராபத்தை விளைவிக்கின்றன” என்கிறார்கள்.

இப்படி மனித உடலிலேயே வாழ்ந்து, குணப்படுத்த முடியாத கொடிய நோயைக் கொடுக்கும் பாக்டீரியாக்களில் ஒன்றுதான் MRSA என்று அழைக்கப்படும் மெத்திலியன் ரெசிஸ்டென்ஸ் ஸ்பாபிலோ காகஸ் ஆர்லஸ் (Methicillin-Resistant Staphylococcus aureus.) பொதுவாக உடலில் பாக்டீரியா கிருமிகள் புகுந்து நோயைக் கொடுத்தால், அதைக் குணப்படுத்த நோய் எதிர்ப்பு மருந்துகளை (Antibiotics – methicillin, amoxicillin, penicillin, oxacillin) செலுத்துவார்கள். ஆனால் எம்ஆர்எஸ்ஏ கிருமி எந்த நோய் எதிர்ப்பு மருந்துக்கும் கட்டுப்படாமல் மரணத்திற்கு இட்டுச் செல்லும். சூப்பர் பக் (Super Bug) என்ற பெயரும் இதற்குண்டு.

https://www.sciencedaily.com/releases/2016/10/161024131114.htm

உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒருவர், அதாவது 33% மக்களின் உடலில் இந்த பாக்டீரியா கிருமிகள் காலனியாக வாழ்கின்றன.அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களை விட எம்ஆர்எஸ்ஏ நோயில் இறந்தவர்களே அதிகம்.இந்தக் பாக்டீரியா கிருமியால் எங்கு வசிக்கின்றன தெரியுமா? நாம் சுவாசிக்கும் மூக்கின் உள்ளே கும்பலாக குடியிருக்கின்றன.ஒரு செல் உயிரியான இந்த பாக்டீரியாக்கள் பத்து மணி நேரத்தில் பத்து லட்சம் செல்லாக பல்கிப்பெருகி தோலில் வெடிப்பு,கொப்புளங்கள்,சுவாசப் கோளாறு மற்றும் ரத்த ஓட்டத்தில் நச்சை கலக்கும். இவை உள் மூக்கில் குடியிருக்கக் காரணம்,குறுகலான துவாரம் மற்றும் ஆக்சிஜன் சென்று இரத்தத்துடன் கலக்க எளிதாக இருப்பதே என்று அறிவியல் ஆய்விதழ் “நேச்சர்” கூறுகிறது.

Staphylococcus aureus colonizes an estimated two billion persons worldwide and has become a leading cause of skin, respiratory, and blood stream infections,” the researchers wrote. Deaths from methicillin-resistant S. aureus (MRSA) now exceed those caused by Human Immunodeficiency Virus (HIV) in the United States.

http://www.nature.com/articles/nmicrobiol2016224

https://en.wikipedia.org/wiki/Methicillin-resistant_Staphylococcus_aureus

மனிதர்களின் உள் மூக்கில் குடியிருந்து நோயை கொடுக்கும் கிருமிகளைப் பற்றி கியாம  நாள் வரை வரும் மக்களுக்கு, தீர்க்க தரிசனமாக அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியது.

உங்களில் ஒருவர் உறங்கி எழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்கு சிந்தட்டும்.ஏனெனில் ஷைத்தான் அவர் உள் மூக்கில் தங்குகின்றான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி).   நூல்: முஸ்லிம்.238.

நோய்க்கிருமிகளை ஷைத்தானுடன் ஒப்பிடுவது சரியா? என்ற கேள்வி எழலாம்.இன்று  மனித உடலில் உருவாகும்,வைரஸ்,பாக்டீரியா  கிருமி நோய்கள் அனைத்தும் இரத்த ஓட்டத்திலேயே  ஓடிக்கொண்டிருக்கின்றன.மலேரியா,மஞ்சள்காமாலை,பன்றிக்காய்ச்சல், டெங்கு,மற்றும் ஹெச்ஐவி எய்ட்ஸ் போன்ற நோய்களை இரத்த சோதனை மூலமே அறிந்துகொள்ள முடிகிறது.மனிதர்களை நோய் என்னும் துன்பத்தை கொடுத்து சோதித்து அவர்களின் ஈமானை தடம்புரளச் செய்வதும் ஷைத்தான்களின் வேலைகளில் ஒன்றே!

இதையே நபி (ஸல்) அவர்கள்.,ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான். என்று கூறினார்கள்.-புஹாரி.3281.

அய்யூப் (அலை) அவர்கள் தனக்கு நோய் ஏற்பட்டிருக்கின்றது என்பதை தெரிவிக்க ஷைத்தான் என்னைத் தீண்டிவிட்டான் என்ற வார்த்தையை கூறுவது கவனிக்கத்தக்கது.

நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்). அல் குர்ஆன்.38:41 .

மனிதர்களுக்கு துன்பத்தைக் கொடுத்து சோதித்து வழிகெடுக்கும் ஆற்றலை  அல்லாஹ்விடமிருந்து ஷைத்தான் பெற்றுள்ளான்.ஆனாலும் அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் எவரையும்  ஷைத்தானால் வழி கெடுக்க முடியாது.இந்த அடிப்படையில் எம்ஆர்எஸ்ஏ பாக்டீரியா கிருமிகள் மனிதர்களின் மூக்கில் குடியிருந்து அதன் வழியாக  உடலில்  நுழைந்து தீங்கு செய்கிறது.

மனிதர்களை வழி கெடுக்க,அல்லாஹ்விடம் சபதம் போட்டு வந்த ஷைத்தான்,

பின் நிச்சயமாக, நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும்,அவர்கள் வலப்பக்கத்திலும்,அவர்கள் இடப்பக்கத்திலும்,வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்;ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி  செலுத்துவோர்களாகக் காண மாட்டாய் என்றும் கூறினான்.

  • அல் குர்ஆன்.7:17.

ஷைத்தானின் தீண்டுதலிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்க,அல்லாஹ் அநேக பாதுகாப்பு வழி முறைகளை  கற்றுக்கொடுத்துள்ளான்.எந்த ஒரு காரியத்தை  தொடங்கும் முன்பும் அவூது பில்லாஹி மினஸ் ஷைத்தநிர்ரஹீம் என்று சொல்லி எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவது.மற்றும்,நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த சுன்னத்தான வாழ்வியல் ஒழுக்கங்களை  முறையை கடைப்பிடிப்பதன் மூலமும் பாதுகாப்பு பெறலாம்.

அம்முறைகளில் ஒன்றே தூங்கி எழுந்ததும் மூக்கை நீர் கொண்டு சுத்தம் செய்வதும்,ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் ஒழு செய்து மூக்கிற்கு நீர் செலுத்தி தூய்மை செய்வதும். அமெரிக்கா,ஐரோப்பிய,சீனா,ஜப்பான் போன்ற சுமார் 19  நாடுகளில் தீவிரமாக பரவிற எம்ஆர்எஸ்ஏ நோயானது…முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் பரவாததன் காரணம்,நம் மக்கள் நபிவழியை அன்றாட வாழ்வியலாக கடைபிடிப்பதே!

இஸ்லாம் கூறும் இபாதத் என்னும் வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யப்படுவதாக இருந்தாலும்…அந்த அமல்கள் அனைத்திலும் அல்லாஹ் மனிதர்களின் உடல்,உள்ளம் இரண்டிற்கும் நன்மைப் பயப்பனவாகவே அமைத்துள்ளான்.உதாரணமாக,நாள்தோறும் ஐவேளை தொழுகை அவனுக்கு மன அமைதியையும் உடல் உறுதியையும் கொடுக்கிறது.ரமழான் ஒரு மாத நோன்பு, உள்ளுறுப்புகளை புத்தாக்கம் செய்து புத்துணர்ச்சியை அளிக்கிறது.

இது போலவே,விருத்தசேதனம் என்னும் கத்னா செய்வதின் மூலமும்,இஸ்லாம் ஹராம் என்று தடுத்த விபச்சாரம்,ஓரின புணர்ச்சி,மற்றும் இயற்கைக்கு மாறான புணர்ச்சியை தடுத்துக் கொள்வதன் மூலம், கொடிய ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயிலிருந்து தப்ப முடியும். ஒரு மனிதன் இம்மையிலும்,மறுமையிலும் இன்பமாக வாழ இஸ்லாம் மார்க்கம் காட்டும் வழியே இனிய வழி,மற்றும் எளிய வழி!வாருங்கள் இஸ்லாத்தை நோக்கி.!

எவர்கள் அல்லாஹ்வுக்கும்,அவனுடைய தூதருக்கும்,கட்டுப்பட்டு,அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறுசெய்வதை விட்டு) விலகிக் கொண்டார்களோ அத்தகையவர்தாம் நிச்சயமாக பெரும்பாக்கியம் பெற்றவர்கள்.  அல் குர்ஆன்.24:52.

 

Previous post:

Next post: