விரலை நீட்டுவது தான் நபிவழி!

in 2017 நவம்பர்

 முஹம்மது இஸ்மாயீல், கடையநல்லூர்.

தவ்ஹீது சகோதரர்கள் மத்தியில் தொழுகையில் அத்தஹிய்யாத்து இருப்பில் விரலை நீட்டுவது நபிவழியா? அல்லது அசைப்பது நபிவழியா? என்ற பிரச்சனை எழுந்துள்ளது. பெரும்பாலான சகோதரர்கள் அந்த ஹிய்யாத்து இருப்பில் விரலை அசைப்பது தான் நபிவழி என்று தவறாக விளங்கி வைத்துள்ளார்கள். மத்ஹபை பின்பற்றி நடப்பவர்கள் எவ்வாறு தங்களுடைய மத்ஹபு அறிஞர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றார்களோ அது போன்றுதான் தவ்ஹீது அறிஞர்களை தவ்ஹீது சகோதரர்களும் கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றார்கள். விரலை அசைப்பது தான் நபிவழி என்று சொல்லக்கூடியவர்கள் வாஇல் இப்னு ஹிஜ்ர்(ரழி) என்ற நபித்தோழர் அறிவித்த ஹதீஃதைத்தான் ஆதாரமாக காட்டுகின்றார்கள். வாஇல் இப்னு ஹுஜ்ர்(ரழி) நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள் என்று நான் என் மனதிற்குள் சொல்லிக் கொண்டு (மதினாவிற்குச் சென்று) நபி(ஸல்) அவர்களின் தொழுகையைப் பார்த்தேன்.

நபி(ஸல்) அவர்கள் எழுந்து தக்பீர் கூறி தம் காதுகளுக்கு நேராக கைகளை உயர்த்தினார்கள், பின்பு தமது வலக்கையை இடது முன் கை மணிக்கட்டு, முழங்கை ஆகிய (மூன்றின்) மீது வைத்தார்கள். அவர்கள் ருகூவு செய்ய விரும்பிய போது முன்பு போன்றே (தமது காதுகளுக்கு நேராக கைகளை உயர்த்தினார்கள்.

பின்பு தமது கைகளை மூட்டுக் கால்களின் மீது வைத்தார்கள். பின்பு தமது தலையை உயர்த்தி ருகூவிலிருந்து நிமிர்த்திய போது முன்பு போன்று (தம் காதுகளுக்கு நேராக) தம்முடைய கைகளை உயர்த்தினார்கள். பின் ஸஜ்தா செய்தார்கள். அப்போது தம் உள்ளங் கைகளைக் காதுகளுக்கு நேராக (தரையில்) வைத்தார்கள். இடக்காலை விரித்து வைத்தார்கள். முன் இடக்கையை இடது தொடை மற்றும் இடது முட்டு காலின் மீது வைத்தார்கள். (வலது காலை நட்டு வைத்து) வலது முழங்கையை (சற்று உயர்த்தியவாறு) வலது தொடை மீது வைத்தார்கள்.

பின்பு தமது விரல்களில் (சுண்டு விரல் மற்றும் மோதிர விரல்) ஆகிய இரு விரல்களை மடக்கிக் கொண்டு (பெருவிரலையும், நடு விரலையும் வட்டமாக பிடித்துக் கொண்டார்கள். பின்பு சுட்டு விரலை உயர்த்தினார்கள். அதை அசைத்துப் பிரார்த்தித்ததை தான் கண்டேன். சுனனுன் நஸாயீ, 879வது ஹதீஃத், இதே கருத்தில் அமைந்த ஹதீஃத் சுனனுன் நஸாயில் 1251வது ஹதீஃதாக இடம் பெற்றுள்ளது.

இந்த இரண்டு ஹதீஃத்களில் மட்டுமே அசைத்துப் பிரார்த்தித்தார்கள் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. சுனனுன் நஸாயில் 1246வது ஹதீஃதில் சைகை செய்தார்கள் என்றும், அதே நூலில் 1147வது ஹதீஃத் வாஇல் இப்னு ஹுஜ்ர்(ரழி) அவர்கள் அறிவித்த செய்தியில் தமது வலது கையை வலது பக்கத் தொடையில் வைத்து விரலை பிரார்த்தனைக்காக நீட்டினார்கள் என்றும் அதற்கான அரபி வாசகம் “”நஸப அஸ்பஅஹீலித்துவாஇ” இடம் பெற்றுள்ளது என்பதையும், 1251வது ஹதீஃதில் விரலை அசைத்துப் பிரார்த்தித்தார்கள் என்ற வார்த்தைக்கு “”தஆ பிஹா” என்ற அரபி வாசகமும் இடம் பெற்றுள்ளது என்பதையும், அதே நூலில் 1247வது ஹதீஃதாக இடம் பெற்ற செய்தியில் நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்து) இருப்பில் தமது இடப் பக்க பாதத்தை விரித்து வலது பக்க பாதத்தை நட்டு வைத்தார்கள், தம்மிரு தொடையின் மீது முழங்கைகளை வைத்து சுட்டுவிரலால் சைகை செய்து பிரார்த்தித்தார்கள் (இதை) வாஇல் இப்னு ஹுஜ்ர்(ரழி) கண்டார்கள்.

இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர்கள் அறி வித்த ஹதீஃத்களில் “”விரலை அசைத்துப் பிரார்த்தித்தார்கள் என்றும், சில ஹதீஃத்களில் சைகை செய்தார்கள்” என்றும் முரண்பட்ட தகவல்கள் அறிவிப்பாளர்கள் மத்தியில் உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் அப்துல் ஜப் பார்(ரஹ்) அவர்கள் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. இவர் வாஇல் இப்னு ஹுஜ்ர்(ரழி) அவர்களின் மகனாவார். இவர் தன்னுடைய தந்தையிடமிருந்து எதையும் செவியேற்கவில்லை. காரணம், இவர் இவருடைய தாயின் வயிற்றில் இருக்கும்போது வாஇல் இப்னு ஹுஜ்ர்(ரழி) இறந்து விட்டார்கள். ஆதாரம் நூல்: தஹ்தீப், சுனனுன் நஸாயில் இத்தகவல் உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர்கள் மத்தியில் குழப்பமும் அறிவித்த நபித் தோழரின் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இந்த ஹதீஃதின் தரமும் சந்தேகம் கொள்வதற்கு இட மளிக்கின்றது.

ஆகவே, சந்தேகத்திற்கு உரித்தான செய்திகளின்படி அமல் செய்வது சரியான செயலாக இருக்க முடியாது. நபி(ஸல்) அத்தஹிய்யாத்து அமர்வில் விரலால் சைகை செய்வார்கள் என்று பல நபித்தோழர்கள் அறிவித்துள்ளார்கள். நபித் தோழர்கள் இப்னு உமர்(ரழி) அபூ உஸைத் (ரழி) அபூ ஹுமைத்(ரழி) சஹ்ல் இப்னு சஆத் (ரழி) அபூ ஹுரைரா(ரழி) முஹம்மது இப்னு மஸ்லமா(ரழி) ஆகிய நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஃத்களில் நபி(ஸல்) அவர்கள் சுட்டுவிரலால் சைகை செய்வார்கள் என்ற அறி விப்புகள் சுனனுன் நஸாயீ, ஜாமிஉத் திர்மிதி, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய ஹதீஃத் நூல்களில் இடம் பெற்றுள்ளது. திர்மிதியில் 270வது ஹதீஃத், இந்த ஹதீஃதை அப்பாஸ் பின் சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதி(ரஹ்), அவர்கள் அறிவித் துள்ளார்கள். அபூஹுமைத்(ரழி) அபூஉஸைத் (ரழி) (என் தந்தை) சஹ்ல் பின் சஅத்(ரழி) முஹம்மது பின் மஸ்லமா(ரழி) ஆகிய நபித் தோழர்கள் ஒன்று கூடி நபி(ஸல்) அவர்களின் தொழுகையைக் குறித்து பேசிக் கொண்டனர். அப்போது அபூ ஹுமைத்(ரழி) அவர்கள் நான் உங்களிலேயே அல்லாஹ்வின் தூதரின் தொழு கையை நன்கு அறிந்தவன் எனக் கூறி “”நபி(ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்து இருப்பில் இடது காலை படுக்க வைத்து (உள்ளங்காலில் அமர்ந்து) வலக்காலின் நுனிகளை கிப்லா திசையை முன்னோக்கி வைத்தார்கள்.

தமது வலப்புற முழங்கால் மீது வலப்புற உள்ளங்கையையும், இடப்புற முழங்கால் மீது இடப்புற உள்ளங்கையையும் வைத்து சுட்டு விரலால் சைகை செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் விரலால் சைகை தான் செய்தார்கள் என்பது மிகத் தெளிவாயிருக்கின்றது.

இன்னும் ஸஹீஹ் முஸ்லிம் என்னும் நூலில் 1014, 1015, 1016, 1017, 1018 ஆகிய ஹதீஃத்களிலும் நபி(ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்து அமர்வில் சைகை செய்வார்கள் என்ப தற்கு வலுவான ஆதாரமும் உள்ளது. சுனனுன் நஸாயில் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்து இருப்பில் விரலால் (சுட்டு விரலால்) சைகை செயவார்கள். விரலை அசைக்கமாட்டார்கள் என்ற செய்தி பதிவாகியுள்ளது. சுனனுன் நஸாயில் 1258வது ஹதீஃத் ஸுபைர்(ரழி) அறிவித்த ஹதீஃதில் நபி(ஸல்) சுட்டுவிரலால் சைகை செய்வார்கள். அவர்களின் பார்வை அதை கடந்து செல்லாது என்றும் கூறிய செய்தி பதி வாகியுள்ளது.

சுனனுன் நஸாயீ 1254வது ஹதீஃத் அல் குஸாஈ(ரழி) அவர்கள் அறிவித்த செய்தியில், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை அத்த ஹிய்யாத்து இருப்பில் வலக்கையை வலது பக்கத் தொடையின் மீது வைத்து தமது விரலால் சைகை செய்ததை நான் கண்டேன். அபூதாவூது அத்தஹிய்யாத் இருப்பில் நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் சுனனுன் நஸாயீ 1249வது ஹதீஃதாக இடம் பெற்றுள்ளது.

அலி இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்கள். நான் (சிறு வயதில்) இப்னு உமர்(ரழி) அவர்களின் அருகில் தொழுதேன். நான் சிறு கற்களை புரட்டிக் கொண்டிருந்தேன் (கற்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தேன்) தொழுகை முடிந்ததும் இப்னு உமர்(ரழி), அவர் கள் தொழுகையில் விளையாடாதே! இது ஷைத்தானிடமிருந்து ஏற்படும் செயலாகும்.

நபி(ஸல்) செய்தது போன்று நீயும் செய் என்றார். அதற்கு நான் நபி(ஸல்) அவர்களை தொழுகையில் எவ்வாறு செய்ததைக் கண்டீர்கள் என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ரழி) நபியவர்கள் அத்தஹிய்யாத்து இருப்பில் தமது வலக்காலை நட்டு வைத்து இடக் காலை படுக்க வைப்பார்கள். வலக்கையை வலது பக்கத் தொடையின் மீதும், இடக்கையை இடது பக்கத் தொடையின் மீதும் வைத்து சுட்டு விரலால் சைகை செய்வார்கள் என்று கூறினார்கள்.

அத்தஹிய்யாத்து இருப்பில் விரலால் நபி (ஸல்) சைகைதான் செய்தார்கள் என்பதற்கான சில அறிஞர்களின் கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்வது அவசியமாகும். இமாம் பைஹகீ (ரஹ்) விரலால் சைகை செய்வதில் நோக்கம் விரலை நபி(ஸல்) அவர்கள் அசைக்கமாட்டார்கள் என்றே கூறுகின்றார்கள். அபூதாவூது என்னும் நூலில் நபி(ஸல்) அவர்கள் விரலை அசைக்கமாட்டார்கள் என்ற நபிமொழியை ஆதாரமாக சுட்டிக் காட்டுகின்றனர். இமாம் நவவீ(ரஹ்) அவர்களும் இதே கருத்தில்தான் உள்ளார்.

இமாம் ஷாபீ(ரஹ்) இமாம் அபூஹனிபா (ரஹ்) இமாம் ஹம்பலி(ரஹ்) ஆகியோரும் நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்து இருப்பில் விரலை அசைக்கமாட்டார்கள் என்ற கருத்தில் உள்ளார்கள். இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்களின் ஆதாபுல் மஷ்யி இலஸ் ஸலாத் என்னும் நபித் தொழுகை நூலில் நபி(ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்து இருப்பில் சுட்டு விரலால் சைகை செய்வார்கள். அசைக்க மாட்டார்கள் எனக் கூறி அபூதாவுதில் இடம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற ஹதீஃதை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். ஆகவே, எனதருமைச் சகோதரர்களே விரலை அசைப்பதை விட்டு விட்டு விரலை நீட்டுங்கள் இது தான் நபி வழி எனக் கூறி நிறைவு செய்கிறேன்.

Previous post:

Next post: