ஈத்-பெருநாள் கொண்டாட்டம்!

in 2010 செப்டம்பர்,2017 டிசம்பர்,ரமளான்

அபூ அப்தில்லாஹ்

எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாள்களை மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாகக் கொண்டாட அனுமதி வழங்கி இருக்கிறான். ஆண்கள் மஹல்லா பள்ளிகளிலும், பெண்கள் கடமையான ஐங்கால தொழுகைகளை தங்கள் வீடுகளிலும் தொழுது கொள்ள அனுமதித்த நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று தொழத் தடுக்கப்பட்ட மாதவிடாய் பெண்களையும் பெருநாள் திடலுக்கு வரும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றால், தங்களின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைப்பதற்கு உரிய ஆடைகள் இல்லாத பெண்கள் கூட இரவல் ஆடையை வாங்கி அணிந்து கொண்டு பெருநாள் திடலுக்கு வரக் கட்டளையிட்டார்கள் என்றால், முஸ்லிம் ஆண்கள், பெண்கள் அனை வரும் ஒன்று கூடி மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதை மார்க்கம் வலியுறுத்துவதை எளிதாக விளங்க முடியும்.

தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்ட மாத விடாய்ப் பெண்களையும் பெருநாள் திடலுக்கு வரும்படிக் கட்டளையிட்டுள்ளதிலிருந்தே பெருநாள் தினத்தில் சுன்னத்தான பெருநாள் தொழுகையை விட, முஸ்லிம் ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுகூடி மகிழ்வுடன் பெரு நாளைக் கொண்டாடுவதையே மார்க்கம் வலியுறுத்துகிறது என்பதை எளிதாக விளங்க முடியும்.

அடுத்து பெருநாள் தொழுகையை ஒருநாள் கழித்துத் தொழுவதற்கு மார்க்கத்தில் இடமுண்டா? என பார்க்கும்போது, அதற்கு இட முண்டு என்பதற்கே ஆதாரம் கிடைக்கிறது. ஒரு ரமழானில் பிறை பார்த்த செய்தி மாலையில் கிடைக்கும்போது, நோன்பை விடும்படியும் அடுத்த நாள் காலை பெருநாள் திடல் வரும்படி நபி (ஸல்) கட்டளையிட்ட ஹதீஸ் இதை உறுதிப்படுத்துகிறது. ஷவ்வால் 1லேயே பெருநாள் தொழுகை தொழ வேண்டும் என அடம் பிடிப்போர் தொழுகைக்குரிய காலை நேரம் கடந்து விட்ட பின்னர் பிறை பார்த்த செய்தி கிடைத்ததால் அடுத்த நாள் வரும்படி நபி(ஸல்) கட்டளையிட்டார்கள். ஆனால் ஷ்வ்வால் பிறை பிறந்து விட்டது எனத் திட்டமாக முன்கூட்டியே அறிந்துள்ள நாம் எப்படி மறுநாள் தொழுவது எனக் கேட்கின்றனர். தொழுகைக்குரிய நேரம் கடந்து விட்டால் அது கடந்ததுதான். அது எப்படி அடுத்த நாள் காலையில் வர முடியும். முஹர்ரம் 10ல் யூதர்களும் நோன்பு நோற்கிறார்கள் என்பதை அறிந்த நபி(ஸல்) அடுத்த ஆண்டு உயிரோடிருந்தால் 9,10 இரு நாட்கள் நோன்பு நோற்பேன் என்று கூறினார்கள் என்ற செய்தி நமக்குக் கிடைக்கிறது. அடுத்த நாள் நோன்பு பிடிப்பதாக இருந்தால் நாளையும் நோன்பு நோற்பேன் என்றே சொல்லி இருக்க முடியும். இதன்படி பார்த்தால் காலை நேரம் கடந்து விட்டதால், மறு நாள் காலை பெருநாள் திடல் வரக் கட்டளையிட்டார்கள் என்று விளங்குவதை விட, அன்று இன்றுபோல் மின் வெளிச்சமில்லாத இரவு நேரத்தில் ஆண்கள் பெண்கள் அனைவரும் பெரு நாள் திடலில் ஒன்று கூடி கொண்டாடுவது சாத்திய மில்லை என்ற காரணத்தால்தான் மறுநாள் காலை அனைவரையும் பெருநாள் திடல் வரும்படிக் கட்டளையிட்டார்கள் என்று எண்ணுவதே பொருத்தமானதாகும்.

எனவே இன்றைய சூழலில் பிறை பற்றிய கருத்து வேறுபாடு நிலவுவதால் முஸ்லிம் ஆண்கள், பெண்கள் அனைவரும் சேர்ந்து ஒன்று கூடும் இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ பெருநாள் கொண்டாடுவது மார்க்க முரணான செயல் அல்ல. இதை ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். (பார்க்க அந்நஜாத் டிசம்பர் 2000 தலையங்கம் ஈத்-பெருநாள்) ஆனால் ஜாக் மத்ஹபினர் முன்னர் கணினி கணக்கீட்டை ஏற்றுச் செயல்படலாம் என்ற முடிவுக்கு வந்த பின்னரே பெருநாளைப் பிற்படுத்தக் கூடாது; ஷவ்வால் ஒன்றிலேயே கொண்டாடியே தீரவேண்டும் என்று பிடிவாதமாகச் செயல்பட்டனர். சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் தீய நோக்கு பெருநாள் கொண்டாடுவதிலும் வெளிப்பட்டது.

அப்போது பெருநாள் தொழுகை சுன்னத்தான தொழுகை; தொழுதால் நன்மையுண்டு. தொழா விட்டால் ஏன் தொழவில்லை என்ற கேள்வியோ, தண்டனையோ இல்லை, ஆனால் சமுதாயத்தைப் பிளவு படுத்துவது குற்றம் என்றும் தெளிவுபடுத்தினோம். ஆனால் ஜாக், ததஜ மத்ஹபுகளை நியாயப்படுத்திப் பல நொண்டிக் காரணங்களைச் சொல்வது போல், ஷவ்வால் ஒன்றிலேயே தொழுதாக வேண்டும் என்று பல நொண்டிக் காரணங்களை கூறி நியாயப்படுத்தினார்கள்.

சுன்னத்தான பெருநாள் தொழுகைக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கும் அச்சகோதரர்கள், தங்கள் ஊர்களில் முகீமாக இருக்கும்போது, ஐங்கால தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஜமாஅத்தோடு தொழுவதற்கும், அவற்றின் முன்பின் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான 10 ரகாஅத்துகளையும் விடாது தொழுவதற்கும் எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அவர்களே தங்கள் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளட்டும். இவற்றில் குறைபாடுடையவர்கள், முஸ்லிம் ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்வுடன் கொண்டாடக் கூடிய பெருநாள் தொழுகையை ஷவ்வால் ஒன்றிலே தொழுதே தீரவேண்டும், அதனால் சமுதாயம் பிளவு பட்டாலும் பரவாயில்லை என்பார்களானால் அவர்கள் செல்வது நேர்வழியா? அல்லது கோணல் வழியா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும், ஜாக், ததஜ மத்ஹபுகளிலுள்ள மார்க்க முரணான வெறி போன்றதொரு வெறியே இதுவும் என்றே நேர்வழி நடப்பவர்கள் முடிவுக்கு வர முடியும்.

இவ்வளவு தெளிவாக விளக்கியும், ஒரு சாரார் சமுதாயத்தைப் பிளவு படுத்தி உரிய நாளிலேயே பெருநாள் தொழுகை நடத்த முடிவு செய்து செயல் படுத்துகிறார்கள் என்ற நிலையில், சமுதாய ஒற்றுமை காக்க விரும்பும் சகோதரர்கள் என்ன செய்வது? அவர்களுடன் சேர்ந்து உரிய நாளில் தொழுவதா? அல்லது ஒரு நாளோ, இரு நாளோ கடந்து தவறான நாளில் தொழுபவர்களுடன் சேர்ந்து தொழுவதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அனைவரும் ஒன்று கூடிக்கொண்டாட வேண்டியதிலும் பிளவை ஏற்படுத்தி விட்டார்கள். பிளவு ஏற்படக் காரணமானவர்களே அதற்குப் பொறுப்பு. இப்போது சமுதாய ஒற்றுமை விரும்பிகள் உரிய முதல் நாளில் தொழுபவர்களுடன் தொழுதாலும், உரிய நாள் தவறி 2ம் நாளிலோ, 3ம் நாளிலோ தொழுபவர்களுடன் தொழுதாலும், சமுதாயப் பிளவுக்கு அவர்கள் ஒருபோதும் காரணமாக மாட்டார்கள். ஆயினும் உரிய முதலாம் நாளில் தொழுவதே ஏற்புடையதாகும். அவர்கள் பிளவுக்குத் துணை போகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தவறாகும்.
உரிய நாளில் தொழுபவர்களுடன் சேர்ந்து தொழுவதால் பிளவுக்குத் துணை போகிறார்கள் ஒற்றுமை விரும்பிகள் என்று குற்றப்படுத்தினால், 2-ம் நாளோ, 3ம் நாளோ தொழுபவர்களுடன் சேர்ந்து தொழுதாலும் நாள் தவறி தொழுவதால் சமுதாயப் பிளவிற்குக் காரணமானவர்களுக்குத் துணை போனதாகவும் குற்றப்படுத்த முடியும். யாருடன் சேர்ந்து தொழுதாலும் அதே நிலைதான். உரிய நாளில் தொழுபவர்களுடன் சேர்ந்து தொழுவதே சிறப்பு.

இது பெருநாள் கொண்டாட்டம் பற்றிய நிலை. இப்போது இதே அடிப்படையில் நோன்பையும் ஊரோடு ஒத்து ரமழான், 2ம் நாளிலோ, 3ம் நாளிலோ நோற்க ஆரம்பித்து ­வ்வால் 1ம் நாளிலோ 2ம் நாளிலோ முடித்து சமுதாய ஒற்று மைக் காக்கலாமே என்ற ஐயம் எழலாம். இங்கு கவனமாகச் சிந்திக்க வேண்டும். நோன்பு குறிப்பிட்ட நாட்களில் நோற்பது கட்டாயக் கடமை, நோற்காமல் விடுவது பெருங்குற்றம். அதே போல் ஷவ்வால் முதல்நாள் பெருநாள் தினம் அன்று நோன்பு நோற்பது ஹராம். பெருங்குற்றம். அல்குர்ஆன் அல்பகரா 2:185 கூறுவது போல் ரமழான் மாதம் பிறந்து விட்டதைத் திட்டமாகத் துல்லியமாக அறிந்த நிலையில் ஒருவன் நோன்பு நோற்பதைத் தவறவிட்டால், பின்னர் வாழ்நாள் முழுதும் நோன்பு நோற்றாலும் விட்ட நோன்பிற்கு ஈடாகாது என்பது நபி(ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கை. (அபூ ஹுரைரா(ரழி) புகாரி, அபூ தாவூத், திர்மிதி, அல்ஹதீஸ் 3875)

அல்லாஹ் இந்த 2:185 இறைவாக்கில் எவர் ரமழான் மாதத்தை அடைகிறாரோ-மாதத்தில் நுழைகிறாரோ-மாதத்திற்கு சாட்சியாகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்றே கட்டளை யிட்டுள்ளான். அரபி பதம் “ஃபமன் ஷஹித’. இந்த 2:185 இறைவாக்குப்படி ரமழான் மாதத்தை அடைவதைத் திட்டமாக அறிந்து கொள்வது நிபந்தனையாக இருக்கிறதே அல்லாமல், பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை அல்லாஹ் நிபந்தனையாக்கவில்லை. பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை நபி(ஸல்) அவர்கள் நிபந்தனையாக்கினார்கள் என்று இந்த மவ்லவிகள் கூறிவருவது, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாக, அதை நிபந்தனையாக்கினார்கள் என்று அவர்கள் மீது பெரும்பழியைப் போடுவதாகும். நரகில் கொண்டு சேர்க்கும் பெருங்குற்றமாகும். அன்று பிரயாணத்திற்கு ஒட்டகம் சாதனமாக இருந்தது போல், வெளியூர் தகவல் அறிய ஆள் நேரில் வந்து சொல்வது சாதனமாக இருந்தது போல், ஐங்கால தொழுகைகளின் நேரங்களை அறிய சூரியன் சாதனமாக இருந்தது போல், மாதம் பிறப்பதை அறிய சந்திரன் சாதனமாக இருந்ததே அல்லாமல் பிறையைக் கண்ணால் பார்ப்பது நிபந்தனையாக்கப்பட வில்லை என்பதை நடுநிலையோடு சுயமாகச் சிந்திக்கும் நான்காம் வகுப்பு மாணவனும் விளங்குவான். யாசீன் 36:21ல் அல்லாஹ் கூறுவதுபோல் சம்பளத்திற்கு மார்க்கம் பேசுகிறவர்கள் விளங்க முடியாது. மாதம் பிறந்துவிட்டதை அறிந்து கொள்வது நிபந்தனையாக்கப்பட்டுள்ளதே அல்லாமல் பிறையைப் புறக் கண்ணால் பார்ப்பதை மார்க்கம் கடமையாக்கவில்லை.

இந்த நிலையில் இன்றைய நவீன கண்டு பிடிப்பான கணினி கணக்கீட்டின் மூலம் 500 வருடங்களுக்குப் பின்னர் ஏற்படும் சூரிய, சந்திர கிரகணங்களை இன்றே துல்லியமாக எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் கணக்கிட்டுச் சொல்ல முடியும் என்றால், மாதம் பிறப்பதைக் கணக்கிட்டுச் சொல்வது (ஜுஜுபி) அவ்வளவு எளிதானது. எனவே இந்த மூட முல்லாக்களின் குருட்டு ஃபத்வாவை நம்பி, ரமழான் மாதம் இந்தத் தேதியில் இந்தக் கிழமையில் இத்தனை மணிக்கு இத்தனை நிமிடத்திற்கு இத்தனை வினாடிக்குப் பிறந்து விட்டது என்பதைத் திட்டமாக எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் துல்லியமாக அறிந்த நிலையில், பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையில் நோன்பு நோற்பதை ஆரம்பிக்காமல் இருப்பது பெருங்குற்றமாகும். அதேபோலவே ஷவ்வால் பிறந்து விட்டது எனத் திட்டமாகத் துல்லியமாகத் தெரிந்த நிலையில் அன்று நோன்பு நோற்பதும் பெருங்குற்றமாகும். அன்று 1431 வருடங்களுக்கு முன்னர் இன்று இருக்கும் நவீன கருவியான கணினி (Computer) இருந்து துல்லியமாக மாதம் பிறப்பதை திட்டமாகத் தெரிந்த நிலையில் அதைப் புறக்கணித்துவிட்டு நபி(ஸல்) பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை கடமையாக்கினார்கள் என்று சொல்கிறார்களா இந்த மவ்லவிகள்?
அடுத்து பெருநாள் கொண்டாடுவது ஊரார் அனைவரும் சேர்ந்தேயாகும். ஆனால் நோன்பு நோற்பது ஒவ்வொருவரின் தனித்தனி அமலாகும். ஒருவர் நோன்பு நோற்றிருக்கிறாரா? இல்லையா? என்பது அடுத்தவருக்குத் தெரியாது. எனவே உரிய காலத்தில் நோன்பை நோற்று உரிய காலத்தில் நோன்பே முடிப்பது சமுதாய பிளவை ஒருபோதும் ஏற்படுத்தாது. எனவே பெருநாளை காரணம் காட்டி நோன்பு நோற்பதைப் பிற்படுத்துவது குற்றமாகும்.

நீங்களே பெருநாள் தேதியன்று ஒருநாளை குறிப்பிட்டு விட்டு அந்த நாளில் பெருநாள் தொழுகையை நடத்த முன் வராவிட்டால் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்கிறீர்களா? என சிலர் கேட்கலாம். துல்லியக் கணக்கீட்டின்படி பெருநாளை இன்ன தேதியில் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடுகிறோமே அல்லாமல் அந்தத் தேதியில் சமுதாயத்தைப் பிளவுபடுத்திக் கண்டிப்பாகக் கொண்டாடியே தீரவேண்டும் என்று நாம் சொன்னதே இல்லை. டிசம்பர் 2000 இதழிலேயே முஸ்லிம் சமுதாயத்தில் இப்புரோகித மவ்லவிகள் ஏற்படுத்தியுள்ள குழப்பம் தீர்ந்து முஸ்லிம்கள் உண்மையை உணரும் வரை, ஒரு நாளோ, இரு நாளோ கழித்து பெருநாள் கொண்டாடுவதை மார்க்கம் தடை செய்யவில்லை என்பதைத் தெளிவு படுத்தியுள்ளோம். நாம் எதைச் சொல்கிறோமோ அதையே செயல் படுத்துகிறோம். மற்றபடி 2:44ல் அல்லாஹ் கடிந்து கூறுவது போல் எம்மை மறந்து ஊருக்கு உபதேசம் செய்யும் மாபாதகச் செயலை ஒருபோதும் செய்ய மாட்டோம்.

அடுத்து நாம் கூறுவதை நாமே நடைமுறைப் படுத்தாவிட்டால், அந்த சத்தியம், நேர்வழி எப்போது நடைமுறைக்கு வரும்? என சிலர் கேட்கலாம். சூரியன் மூலம் நேரத்தை அறிந்து தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் கடிகாரம் பார்த்து தொழ ஆரம்பிக்கும்போதும், இப்புரோகித மவ்லவிகள் இப்படித்தான் மக்களைக் குழப்பி வழிகெடுத்தார்கள். அவர்களது வழி கெடுக்கும் நோக்கம் நிலைத்ததா? இன்று அவர்களும் கடிகாரம் பார்த்துத் தொழவில்லையா? அதேபோல் மாதம் பிறக்கும் விடயத்திலும் அவர்கள் மக்களைக் குழப்பி வழி கெடுப்பது ஒரு போதும் நீடிக்காது. கடந்த 10 ஆண்டுகளிலேயே பொதுமக்களிடம் ஒரு மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ஜாக், ததஜ மத்ஹபினரிலும் பலர் சரியான நாளில் நோன்பை ஆரம்பித்துச் சரியான நாளில் நோன்பை முடிக்கிறார்கள்.

இப்புரோகித மவ்லவிகளைக் குருட்டுத்தனமாக நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் அப்பாவி முஸ்லிம்கள் மீது நாம் அனுதாபம் கொள்ள வேண்டுமே அல்லாது அவர்கள் மீது ஆத்திரப் படக்கூடாது. அவர்களைப் பகைவர்களாகப் பார்க்கக் கூடாது. அவர்களுடன் அன்பாகப் பழகி அனுதாபத்துடன் நடந்து வந்தால் அவர்களும் உண்மையை உணரும் வாய்ப்பு ஏற்படும். ஜாக், ததஜ புரோகிதர்களின் மூடத்தனமான ஃபத்வாக்களை நம்பாமல், அல்லாஹ் 43:34ல் “நன்மையும் தீமையும் சமமாக மாட்டா; நீர் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்குமிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகி விடுவார்’ என்று கூறி இருப்பதை ஏற்று, நபி(ஸல்) அவர்களுக்குப் பகைவர்களாக இருந்த குறைஷ்களோடு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அனுமதித்த விடயங்களில் அவர்களுடன் நல்ல முறையில் நடந்துள்ளார்கள்; அதனால்தான் அவர்களது அமானிதப் பொருள்களை நபி(ஸல்) அவர்க ளிடம் ஒப்படைத்திருந்தார்கள் என்பதை அறிகிறோம்.

நபி(ஸல்) அவர்களின் இந்த அழகிய முன் மாதிரியை 33:21 கட்டளைப்படி ஏற்று, நாள் தவறி நோன்பை நோற்று நாள் தவறி நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடும் அவர்களுடன் நாமும் சேர்ந்து ஒன்றுபட்டுக் கொண்டாடும் போது, அவர்களும் பகைமையை மறந்து நேர் வழிக்கு வர வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இறுதியாகச் சமுதாய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு கட்டாயக் கடமையான தொழுகை விடயத்திலேயே நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நபி(ஸல்) அவர்களின் வழி காட்டல் அழகிய முன்மாதிரியாக இருக்கிறது.

(கடமையான) தொழுகையை அதற்குரிய நேரம் தவறித் தொழக்கூடிய கூட்டத்தினரை நீங்கள் அடைய நேரிடும்; அவர்களின் காலத்தை நீங்கள் அடைந்தால், உங்கள் இல்லங்களிலேயே (உரிய நேரத்தில்) தொழுது கொள்ளுங்கள். பின்பு அவர்களுடனும் தொழுங்கள்! அவர்களைப் பின் பற்றித் தொழும் தொழுகையை உபரியான (நஃபில்) தொழுகையாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) கூறினர். இப்னு மஸ்வூது(ரழி) நஸயீ.

கட்டாயக் கடமையை உரிய காலத்தில் நிறை வேற்ற வேண்டும். மார்க்கம் அனுமதிக்கும் விடயங்களில் சமுதாயத்துடன் இணைந்து செயல்பட்டு சமுதாய ஒற்றுமை காக்க வேண்டும் என்பது இதில் தெளிவாகிறது. அல்லாஹ் அருள் புரிவானாக!

Previous post:

Next post: