அந்நஜாத் மார்ச் -1989

in 1989 மார்ச்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்நஜாத்

இஸ்லாமிய  இலட்சிய  மாத  இதழ்

நோக்கம் : 3  விளக்கம் : 11

ஷஃபான் : 1409    மார்ச் -1989

இதழின் உள்ளே…..

                    *     அன்புடன் அழைக்கிறோம்!

*     நபிவழியில் நம்  தொழுகை!

*     பிரித்து வேறுபடுத்த வேண்டாம்

*   வறுமையின் விபரீதங்கள்!

*   மெய்ப்பொருள் காண்போம், அவ்வழி நடப்போம்!

*    அவதூறு ஓர் ஆய்வு

*    முக்காலமும் அறிந்த இறைவனுக்குமா இடைத்தரகர்

*    பக்திப் பரவசம் பாரீர்!

*    ஐயமும்! தெளிவும்!!

*    விமர்சனங்கள்!  விளக்கங்கள்!!

அன்புடன் அழைக்கிறோம்!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இஸ்லாத்தை முழுமையாகச் செயல்படுத்தும் உன்னத சமுதாயமாக இந்தச் சமதாயம் மாற வேண்டும். அந்த உன்னத நிலையைக் கண்ணால் பார்த்து மற்ற சமுதாயங்கள் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என்பதே எமது பேரவா. அதற்கு இந்தச் சமுதாயத்தில் புகுந்துள்ள மூட நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் வேரோடு – வேரடி மண்ணோடு ஒழிக்கப்பட வேண்டும். அல்லாஹ்வுக்கும் அடியார்க்குமிடையில் இடைத்தரகர்களாகப் புகுந்துள்ள  புரோகிதர்கள் முற்றிலுமாக அகற்றப்படாதவரை இது சாத்தியமே இல்லை.

எனவே புரோகிதம் எந்த? எந்த? வகையில் இந்தச் சமுதாயத்தைச் செல்லரித்து, சீரழித்து வருகிறதோ,அவை அனைத்தையும் தெளிவுபடுத்தி அவற்றை அகற்றும் பெரும் முயற்சிலேயே அந்நஜாத் ஈடுபட்டுள்ளது. குர்ஆன், ஹதீஸைச் சொல்லும் பத்திரிகை அந்நஜாத் என்று சகோதரர்கள் அறிமுகப்படுத்துவதாக அறிகிறோம். இதனால் காலப்போக்கில் முஸ்லிம்கள் மார்க்கம் என்றால் அந்நஜாத்தைத் தூக்கிப் பிடிக்கும் வேண்டாத நிலை உருவாகலாம்.

1400 ஆண்டுகளாக குர்ஆன், ஹதீஸ் இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில் மக்கள் வழிகேட்டில் சென்றதற்குரிய பிரதான காரணம் என்ன? மக்களுக்குக் குர்ஆன், ஹதீஸை விளங்கும் ஆற்றல் இல்லை. மவ்லவி இனமே அவற்றை விளக்கிச் சொல்ல முடியும் என்ற தவறான நம்பிக்கையை ஊட்டி மக்களை குர்ஆன், ஹதீஸை விட்டும் தூரப்படுத்தியதேயாகும்.

இப்போது மவ்லவிகளில் சிலர் ஒருபடி இறங்கி வந்து முஹ்க்கமாத் வசனங்களை எல்லாரும் விளங்கிக் கொள்ள முடியும். முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்கிக் கொள்ள, மவ்லவிகளாகிய எங்கள் தயவு தேவைதான் என்று கூறத் தொடங்கியுள்ளனர். எப்படியும் புரோகிதத்தை முற்றாக ஒழிக்காத வரை இந்த சமுதாயத்திற்கும், உலகிற்கும் விமோசனம் இல்லை என்பதே உண்மையாகும்.

எனவே குர்ஆன், ஹதீஸை எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் எளிதாக விளங்கிக் கொள்ளும் நபி(ஸல்) அவர்களின் காலத்து எளிய நடைமுறைகளைச் செயல்படுத்தி, தமிழகமெங்கும் பயிற்சி முறைகளை உண்டாக்கி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க முயன்று வருகிறோம். அந்த அடிப்படையில் இந்த மாதம் (மார்க். 24, 25,25 தேதிகளில் சென்னையில் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். (விபரங்களுக்கு 50ம் பக்கம் பார்க்க) அனைவரும் கலந்து, விளங்கி சேவையாற்ற அன்புடன் அழைக்கிறோம்.

**************************************************************

நபி வழியில் நம் தொழுகை

தொடர் : 27 அபூ அப்திர் ரஹ்மான்

நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்து கிருபை செய்பவனாக இருக்கிறான். (3:31)

என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

சென்ற பிப்ரவரி 89 இதழில் நடு இருப்பில் அமருவதும், தஷஹ்ஹுது  (அத்தஹிய்யாத்து) ஓதுவதும் சுன்னத்து,, அத்தஹிய்யாத்து பற்றி இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் விமர்சனம், நடு இருப்பில் அத்தஹிய்யாத்துடன் ஸலவாத்தை இணைத்தோதுவதன் நிலை, நடு இருப்பிலிருந்து எழும் முறை, கடைசி இருப்பு அதில் அமரும் முறை ஆகியவற்றின் விபரங்களைப் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் இவ்விதழில் அடுத்துள்ள நிலைகளைப் பார்ப்போம்.

சென்ற பிப்ரவரி 89 நபி வழியில் நம் தொழுகைத் தொடரில் கடைசி இருப்பில் அமரும் முறை எனும் பகுதியின் தொடர்ச்சி :

நபி(ஸல்) அவர்கள் இரண்டாவது ரகாஅத்தில் அமரும்போது, நமது இடது காலின் மீது உட்கார்ந்து, வலது காலை (அதன் பாதத்தை) தட்டிக் கொள்வார்கள். ஆனால் கடைசி ரகாஅத்தில் அமரும்போது, (இடது காலின் மீது உட்காராமல்) இடது காலை முன்பக்கம் நகர்த்தி, வலது கால் பாதத்தை தட்டி வைத்துக் கொண்டு, நமது புட்டத்தைத் தரையில் வைத்து உட்காருவார்கள். (அபூஹுமைத்(ரழி), புகாரீ)

இவ்வறிவிப்பு கடைசி இருப்பில் அமரும்போது மட்டும் இடது காலை முன் பக்கம் நகர்த்தி, வலது கால் பாகத்தை தட்டி வைத்த நிலையில் புட்டத்தைத் தரையில் வைத்து உட்கார வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

இருப்பில் மற்றொரு வகை அமைப்பு :

நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் உட்காரும்போது, தமது இடது காலின் பாதத்தைத் தமது தொடைக்கும், கரண்டைக் காலுக்குமிடையில் வைத்துக்கொண்டு, (இந்நிலையில் புட்டம் தரையில் இருக்கும்)  தமது வலது கால் பாதத்தை (தட்டி வைத்துக் கொள்ளாமல்) அதைப் படுக்கை வசமாக மடக்கி வைத்துக் கொள்வார்கள். (அப்துல்லாஹிப்னிஜ்ஜுபைர்(ரழி), முஸ்லிம், அபூதாவூத்)

ஆகவே மேற்காணும் முறைகள் அனைத்தும் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றிருப்பதால், சமய சந்தர்ப்பங்களுக்கேற்ப இவற்றில் எதனையும் எடுத்து அமல் செய்து கொள்ளலாம்.

கடைசி இருப்பில் “அத்தஹிய்யாத்து” ஓதும் நிலை:

தொழுகையில் கடைசி இருப்பு பர்ளாயிருப்பது போன்றே அதில் “அத்தஹிய்யாத்து” ஓதுவதும் பர்ளாகும்.

எங்கள் மீது “தஷஹ்ஹுது” (அத்தஹிய்யாத்து) பர்ளாக்கப்படுவதற்கு முன்னர், நாங்கள் “அஸ்ஸலாமு அல்லாஹி” (அல்லாஹ்வின்மீது ஸலாம் உணடாவதாக!) என்று (விபரமறியாமல்) கூறிக்கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் “அத்தஹிய்யாத்துல்லாஹி” (அனைத்து வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்வுக்கே உரியன) என்பதைக் கூறுங்கள் என்றார்கள். (இப்னு மஸ்ஊத்(ரழி), தாருகுத்னீ, பைஹகீ)

மேற்காணும் அறிவிப்பில் “அத்தஹிய்யாத்து லில்லாஹி” என்பதைக் கூறுங்கள் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும் வாசகம், ஏவல் வினையின் அடிப்படையில் கட்டளையாக உள்ளது.

இதன்படி நபி(ஸல்) அவர்கள் தமது தொழுகைகள் அனைத்தும் இருப்பின்போது, வேறு எதனையும் ஓதாது. சதா இதனையே ஓதி வந்திருப்பதையம், மேலும் என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள் என்று ஆணையிட்டிருப்பதையும் முன்வைத்து அத்தஹிய்யாத்து “அப்துஹூ வரசூலுஹூ” வரை ஓதுவது பர்ளு என்பதாக அறிகிறோம்.

அத்தஹிய்யாத்துக்குப் பின் “ஸலவாத்து” ஓதுவதன் நிலை:

கடைசி இருப்பில் அத்தஹிய்யாத்து “அப்துஹூ வரசூலுஹூ” வரை ஓதிய பின், ஸலவாத்தோதுவது சுன்னத்தாகும். சிலர் கடைசி இருப்பில் “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்” என்பது மட்டுமின்றி, வஅலா ஆலிமுஹம்மத்” என்பதையும் அத்துடன் இணைத்தோதுவதும் பர்ளு என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் ஸலவாத்தோதுவது பர்ளு என்று கூறுவதற்குப் போதுமான சான்றுகள் ஹதீஸ்களில் கிடையாது.

அவர்கள் காட்டும் சான்றுகள் பின்வருமாறு :

சுத்தமில்லாமலும், என்மீது “ஸலவாத்து” ஓதாமலும் தொழும் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), தாருகுத்னீ, பைஹகீ)

இவ்வறிவிப்பில் ஜாபிருல் ஜஃஃபீ எனும் நம்பகமற்றவரும் அம்ருபின் ஷம்ரு எனும் பேச்சு எடுபடாதவரும் இடம் பெற்றுள்ளனர். ஆகவே இது பலவீனமான அறிவிப்பாகும்.

ஒருமுறை ஒருவர் தமது தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தோதாமல், துஆ ஓதிக்கொண்டிருப்பதைச் செவியுற்றுக் கொண்டிருந்த நபிஸல்) அவர்கள் இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறிவிட்டு, அவரை அழைத்து உங்களில் ஒருவர் தாம் தொழும்போது, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பின்னர் நபி மீது ஸலவாத் தோதிவிட்டு, அதன்பிறகு தமது தேவைகளு்காக அல்லாஹ்விடம் துஆ செய்து கொள்வாராக! என்று கூறினார்கள். (ஃபனாலத்துபின் உபைத்(ரழி) திர்மிதீ, அபூதாவூத், நஸயீ)

இவ்வறிவிப்பில் ஸலவாத்தோதுவது பர்ளு என்பதற்கானச் சான்று அவர்கள் கருதுவது போல் எதுவுமில்லை. மாறாக தொழுகையில் ஸலவாத்தோதுவது பர்ளு இல்லை என்பதற்கான சான்றுகள் இருக்கிறது. ஏனெனில், தொழுகையில் ஸலவாத்தோதாமல் தொழுது முடித்த ஒருவரை அழைத்து, நீர் தொழுகையில் ஸலவாத்தோதிவிட்டு பின்னர் துஆ ஓத வேண்டும் என்று துஆ ஓதுவதன் ஒழுங்கு முறையைத்தான்  நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கற்றுக் கொடுத்தார்களே அன்றி,  ஸலவாத்தோதுவது பர்ளு – கட்டாயக்கடமை என்பதாக அவரை நோக்கிக் கூறவில்லை. அவ்வாறு பர்ளு என்று இருக்குமானால் அவர்கள் ஸலவாத்தோதாது தொழுதவராயிருப்பதாக, மீண்டும் அவரைத் தொழும்படி கட்டளையிட்டிருப்பார்கள். அவ்வாறு அவரை நபி(ஸல்) அவர்கள் மீண்டும் தொழும்படி கட்டளையிடாதிருப்பதே தொழுகையில் ஸலவாத்தோதுவது பர்ளு அல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

நபி(ஸல்) அவர்கள் “அத்தஹிய்யாத்து”வை “அப்துஹூவரசூலுஹூ” வரைக் கற்றுக் கொடுத்துவிட்டு, தொழக்கூடியவர் இதன் பின்னர் தமக்கு விருப்பமான, துஆவைத் தேர்ந்தெடுத்து அதனை) ஓதிக் கொள்வாராக! என்று கூறியுள்ளார்கள். (அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

இவ்வறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் “அப்துஹூ வரசூலுஹூ” வரை ஓதியபின், தமக்கு விருப்பமான துஆவைத்  தேர்ந்தெடுத்து அதனை ஓதிக் கொள்வாராக” என்று கூறியுள்ளார்கள். ஸலவாத்தோதுவது பர்ளு என்றிருந்தால் “ஸலவாத்தோதிவிட்டு, தமக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து  அதனை ஓதிக் கொள்வாராக” என்று கூறியிருப்பார்கள்.

ஆகவே, மேற்காணும் ஹதீஸ்களிலிருந்து, தொழும்போது கடைசி இருப்பில் ஸலவாத்தோதுவது பர்ளு அல்ல. அது சுன்னத்துதான் என்பதை உணருகிறோம்.

தொழுகையில் ஓதப்படும் ஸலவாத்தின் வாசகம் :

அல்லாஹும்ம – ஸல்லி – அலா – முஹம்மதின் – வஅலா  – ஆலி –  முஹம்மதின் – கமா – ஸல்லைத்த – அலா – இப்றாஹீம் – வஅலா – ஆலிம் – இப்றாஹீம் – இன்னக்க – ஹமீதும்மஜீத் – அல்லாஹும்ம – பாரிக் – அலா – முஹம்மதின் – வஅலா – ஆலி முஹம்மதழின் – கமா – பாரக்கத்த – அலா – இப்றாஹீம் – வஅலா – ஆலி இப்ராஹீம் – இன்னக்க – ஹதீதும்மஜீத்.

பொருள் : யா அல்லாஹ்! நீ இப்றாஹீம் அவர்கள் மீதும் அவர்களின் கிளையார் மீதும் அருள் புரிந்ததுபோல், முஹம்மத் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார் மீதும் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீயே புகழப்படுவோனும், மகிமை மிக்கோனுமாவாய் யா அல்லாஹ்! நீ இப்றாஹீம் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார் மீதும் பரக்கத் செய்ததுபோல், முஹம்மத் அவர்கள் மீதும், அவர்களின் கிளையார் மீதும் பரக்கத் செய்தருள்வாயாக! நிச்சயமாக நீயே புகழப்படுவோனும், மகிமை மிக்கோனுமாவாய்.

அப்துல்லாஹ் பின் ஈஸா என்பவர், அப்துர் ரஹ்மான்பின் அபிலைலா என்பவரிடமிருந்து பின்வருமாறு, தான் செவியுற்றதாக அறிவித்துள்ளார். ஒருமுறை என்னை கஃபுபின் உஜ்ரா(ரழி) அவர்கள் சந்தித்து, நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதோர் விஷயத்தை உமக்கு அன்பளிப்பாக எடுத்துக் கூறவா? என்று கேட்க, அதற்கவர்கள் நல்லது எடுத்துக் கூறுங்கள் என்றார். அதற்கவர்கள் நாங்கள் ஒருமுறை நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே!  உங்கள் மீது எவ்வாறு ஸலாம் கூறவேண்டும் என்பதை அல்லாஹ் எங்களுக்கு (அத்தஹிய்யாத்தில் தாங்கள் “அஸ்ஸலாமு அலைக்கும் அய்யுஹன தபிய்யு” என்று கற்றுத் தந்திருப்பதன் மூலம்) கற்றுக் கொடுத்துவிட்டான். ஆகவே (கண்ணியமிக்க) வீட்டையுடையவர்களாகிய உங்கள் மீது, எவ்வாறு ஸலவாத்துக் கூற வேண்டும்? என்று கேட்டோம். அப்போதவர்கள் அல்லாஹிம்ம ஸல்லி  அலாமுஹம்மதின் – வஅலா – ஆலி – முஹம்மதின் கமா – ஸல்லைத்த – அலா – இப்றாஹீம் – வஅலா – ஆலி – இப்றாஹீம் – இன்னக்க – ஹமீதும்மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா – முஹம்மதின் – வஅலா – ஆலி – முஹம்மதின் ….. என்ற மேற்காணும் ஸலவாத்தை ஓதும்படி கூறினார்கள். (புகாரீ)

மேற்காணும் இந்த ஸலவாத்து, ஸஹீஹுல் புகாரீயில் இதே அமைப்பில் சிறிதும் முன்பின் இல்லாது கிதாபுல் அன்பியாவில் இப்றாஹீம்(அலை) அவர்களின் தொடரில் இடம் பெற்றுள்ளது. இது வேறு ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றிருப்பினும்,பெரும்பாலான அறிவிப்புகளில் இந்த ஸலவாத்தின் வாசக அமைப்பு சிறிது முன்பின்னாகக் காணப்படுகிறது. இதைப் போன்றே ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள மற்ற ஸலவாத்துக்களையும் ஓதிக் கொள்ளலாம். (ஸலவாத்தின் பொருள் மேலே தரப்பட்டுள்ளது)

கடைசி இருப்பில் துஆ ஓதுவது சுன்னத்தாகும்.

கடைசி இருப்பில் அத்தஹிய்யாத்தும், ஸலவாத்தும் ஓதியபின், துஆ ஓதுவது சுன்னத்தாகும். கடைசி இருப்பில் ஒருவர் தாம் அத்தஹிய்யாத்து ஓதியபின் தமக்கு விருப்பமான துஆவைத் தேர்ந்தெடுத்து ஓதிக்கொள்வாராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, சிலர் அல்லாஹும்மஃஃபிர்லீ – வலி – வாலிதய்ய – வலி – உஸ்தாதி – வலி – ஜமீயில் மூமினின – வல்மூமினாத்…. என்று ஹதீஸில் காணப்படாததோர் துஆவை ஓதி வருவது ஆகுமானதாயிருப்பினும், ஹதீஸில் காணப்படும் துஆவை ஓதுவதுதான் மேல் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. இந்த அடிப்படையில் தான் அபூபக்கர்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் தான்தொழுகையில் ஓதுவதற்கான துஆவைத் தமக்குக் கற்றுத் தரும்படி கேட்க, நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு ஒன்றைக் கற்றுத் தந்துள்ளார்கள். அந்த துஆ புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

புகாரீ, முஸ்லிமில் இடம் பெற்றுள்ள அந்த துஆவின் விபரம் :

1. ஒருமுறை அபூபக்ரு ஸித்தீக்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் நமக்குத் தொழுகையில் ஓதுவதற்கான துஆ ஒன்றைக் கற்றுத் தரும்படி கேட்க, அதற்கு நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு ஓதும்படி கூறினார்கள். அல்லாஹும்ம – இன்னீ – ழலம்த்து – நஃப்ஸீ – ழுல்மன் – கஸீரன் – வலா – யஃஃபிரூஸ் – ஸுனூ – இல்லா – அன்த்த – ஃபஃஃபிர்லீ – மஃஃபிர்த்தன் – மின் – இன்திக் – வர்ஹம்னீ – இன்னக்கா அன்த்தல் – கஃபூருர் – ரஹீம்.

பொருள் : யா அல்லாஹ்! நான் எனக்கே அதிக அளவில் அநியாயம் செய்துவிட்டேன். பாவங்களை மன்னிப்பவன் உன்னையன்றி வேறொருவனுமில்லை. ஆகவே உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பளித்து, எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீரே மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்.

2. நபி(ஸல்) அவர்கள், தஷஹ்ஹுது (அத்தஹிய்யாத்து)க்கும் ஸலாம் கொடுப்பதற்குமிடையில் இறுதியாக பின்வரம் துஆவை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹும்மஃஃபிர்லீ – மா – கத்தம்த்து – வமா – அக்கரீத்து – வமா – அஸ்ரத்து – வமா – அஃலன்த்து – வமா – அஸ்ரஃபத்து – வமா – அன்த்த – அஃவமு – பிஹீ – மின்னி – அன்த்தல் – முகத்திமு – வ – அன்த்தர் – முஅக்கிரு – லாஇலாஹ – இல்லா – அன்த்த. (அலி(ரழி), முஸ்லிம், திர்மிதீ)

பொருள் : யா அல்லாஹ் நான் முற்படுத்தியவற்றையும், பிற்படுத்தியவற்றையும், நான் மறைமுகமாகச் செய்தவற்றையும் – பகிரங்கமாகச் செய்தவற்றையும், நான் விரையம் செய்தவற்றையும், மேலும் (என்னைப் பற்றி) என்னைவிட, நீ அதிகமாக அறிந்துள்ளவற்றையும் எனக்கு மன்னித்தருள்வாயாக! நீதான் முற்படுத்துவோனும், பிற்படுத்துவோனுமாயிருக்கின்றாய், வணங்கி வழிபடுவதற்குரியவன் உன்னையன்றி வேறில்லை.

3. உங்களிலொருவர் தாம் அத்தஹிய்யாத்தோதும் போது, நான்கு விஷயங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்வாராக!  என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்வருமாறு தாம் ஓதினார்கள்.

அல்லாஹும்ம – இன்னீ – அஊது – பிக்க -மின் – அதாபி – ஜஹன்னம் – வமின் – அதாபில் – கப்ரி – வமின் -ஃபித்னத்தில் – மஹ்யா – வல் – மமாத்திவமின் – ஃபத்னத்தில் – மஸீஹித் – தஜ்ஜால். (அபூஹுரைரா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

மற்றொரு அறிவிப்பில் அல்லாஹும்ம – இன்னீ – அஊது – பிக்க – மின் – அதாபில் – கப்ரி – வமின் – அதா பின்னார்…. என்றும் உள்ளது.

பொருள் : யாஅல்லாஹ்! நான் உன்னிடம் நரக வேதனையை விட்டும், கப்ருடைய வேதனையை விட்டும், வாழ்வின்போதும், மரணத்தின்போதும் ஏற்படும் சோதனையை விட்டும், மேலும் மஸீஹுத்தஜ் ஜாலின் சோதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

************************************************************************

குர்ஆனின் நற்போதனைகள் : தொடர் – 5

பிரித்து வேறுபடுத்த வேண்டாம் தொகுப்பு : A. முஹம்மது அலி, M.A.M.Phil.

1. நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றமை பாராட்டுவதில்லை. (2:285)

2. வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த குர்ஆன் என்னும்) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை. (88:4)

3. தங்களிடம் ஞான (வேத)ம் வந்தபின்னர் தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவேயன்றி அவர்கள் பிரிந்து போகவில்லை. (42:14)

4. நிச்சயமாக அல்லாஹ்வையும், அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, நாம் அத்தூதர்களில் சிலர் மீது ஈமான் கொள்வோம். சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர். (இறை நிராகரிப்புக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக்கொள்ள நினைக்கிறார்கள். (4:150)

5. யார் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) கொடுப்பான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும்  (4:152) இருக்கின்றான்.

6. (மூமின்களே!) நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும்: இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம். அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்டமாட்டோம், இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீராக. (2:186, 3:84)

7. நம்பிக்கையாளர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். தவிர ஷைத்தானுடைய அடிச்சுவட்டை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களின் பகிரங்கமான பகைவன் ஆவான்.

8. நிச்சயமாக ஷைத்தான் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்புக்குரியவர்களாய் இருப்பதற்காகவேதான். (35:6)

(அடுத்தத் தொடர் :அல்லாஹ்வின் பார்வையில் இரு பிரிவுகளே!)

*************************************************************************

பொருளியல் : 3.

வறுமையின் விபரீதங்கள்!

இறையடிமை

2. உயிர்வதை உண்டாதல் : உறுபசியின் காரணமாக உயிர்வதை செய்யக் கூடாது என்பதை அல்குர்ஆன் அறுதியிட்டுக் கூறுகிறது.

(மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்து விடாதீர்கள். நாம் அவர்களுக்கும் உணவளிப்போம். உங்களுக்கும் (அளிப்போம்) அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக பெரும் பாவமாகும். (அல்குர்ஆன் 17:31)

அஞ்ஞான காலத்து அரபி மக்கள் வறுமையின் காரணமாகப் பெண் குழந்தைகளை உயிரோடு மண்ணில் புதைக்கும் கண்மூடித்தனமான பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இணை வைத்தலுக்கு அடுத்தபடியான பெரும்பாவம், தனது உணவில் பங்கேற்கவரும் என அஞ்சி, தனது குழந்தைகளைக் கொல்லுதல்” என்று நபி(ஸல்) எச்சரிக்கை செய்தார்கள். வறுமைக்கு அஞ்சி பச்சிளம் பாலகர்களை பதைக்கப் பதைக்க கொல்லுதல் அஞ்ஞான காலத்து அரபு மக்கள் மட்டும் செய்து வந்தார்கள் என்று கருத வேண்டாம். இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இந்தியத் திருநாட்டில் சேலம் மாவட்டத்தில் ஓர் ஊரில் வறுமைக்கு அஞ்சி, பிறந்த பச்சிளம் குழந்தைகளின் வாயில் நெல்லை போட்டுக் கொல்லுவதை வழக்கமாய் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு சிசுவதை செய்யப்படாத குடும்பமே அவ்வூரில் இல்லையென்று பத்திரிக்கைச் செய்தி கூறுகின்றது. பசியின் காரணமாக, நான் பெற்ற பச்சிளம் குழந்தைகளை பதறப் பதறக் கொன்றொழிக்கும் பழக்கம் வரலாற்றின் ஏடுகளை தன் ரத்தத்தினால் கரையாக்கி இருக்கின்றது.

தாயன்பிற்கு இணையாக வேறொன்றில்லை என்று போற்றும் இப்பாரினில், தாயே தான் பெற்ற மழலைகளை வறுமைக்கும், பசிக்கும் அஞ்சி, பிள்ளையோ பின்ளை என்று ரூ. 5க்கும் ரூ. 10க்கும் விற்பனைப் பொருளாக்கிவிட்டதை நாம் மறந்தா போய்விட முடியும்? மனிதப் பண்புகளைப் படைத்தவனைத் தவிர பாங்காய் பகன்றிட வேறு எவரால் முடியும்? அதனால் தான் தாயன்பினை உலகில் படைத்திட்ட பேரருளாளன், வறுமைக்கு அஞ்சி சிசுக்களை வதைக்காதீர்கள் என்று வன்மையாய் கண்டிக்கின்றான்.

எது நீதி : பிறருக்கு அஞ்சி பெற்றோர்களிடம் தஞ்சம் புகும் தளிர்மேனிகளுக்கு பெற்றோர்களே பகைவர்களானால் பேரருளாளனும் (அர்ரஹ்மான்) பொறுப்பானோ? பிறகு உலகில் வாழ்வேது? அமைதிதான் ஏது? பச்சிளம் பிள்ளைகளுக்கு படைப்பாளனன்றோ அல்காலிக்) பசியாற்றுகிறான்! அவ்வாறிருக்க “பெற்றவர்களென”  உரிமை கொண்டாடும் பெற்றோர்கள் “வல்லோனின்” (அல்-அஸீஸ்) சாட்சழகளை வகையின்றி கொன்றிட ஏது உரிமை என பெரியவன் (அல் – கபீர்) கேட்கும் கேள்வியின் பொருள் புரியாதவர்கள் நிலை யாதோ? குழந்தைகளைத் தன் வயிற்றிலும், வீட்டிலும் சிறிது காலம் வைத்திருக்கும் உரிமை பெற்றிருக்கும் பெற்றோர்கள், தாங்கள் அவர்களின் பாதுகாவலர்கள் என்பதை மறந்திட்டு தாங்களே அவர்கள் மீது முழு உரிமைப் பெற்றவர்கள் என்று தவறாய் உணர்ந்து குழந்தைகளைப் பாதுகாக்காமல் பழுதுபட ஒழித்துவிடலாம் என்று முனைந்திட்டால் உரிமை கொடுத்தவன் விட்டுவிடுவானா? நாங்கள் செய்த தவறென்ன? ரஹ்மானே! பிறந்திட்டவுடனேயே புதை குழிதான் எங்கள் புகழிடமோ? என்று தளிர் மேனிகள் கேட்கும் கேள்விகளுக்கு “நீதிவானின்” (அல்-அத்ல்) தராக, கல்நெஞ்சப் பெற்றோர்களின் தீமையின் எடை அதிகரித்து விட்டது என்று நியாயத்தை நிலைநாட்டுகிறது.

4. வேறு விளைவுகள் : வறுமையும், பசியும் சமுதாய அமைதியின்மைக்கு அடிகோலுகின்றன. உலகில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான  புரட்சிகளுக்கும், இரத்தம் சிந்துதலுக்கும் வறுமையும் பசியுமே காரணமாய் அமைந்து இருக்கின்றன. விபச்சாரம், சூதாட்டம், கொலை, கொள்ளை போன்ற மானக்கேடான விஷயங்கள் வறுமையின் தூண்டுதலால் விளைகின்றன.

ஒரு நாட்டின் செல்வம் அந்நாட்டில் உள்ள ஆரோக்கியமான மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமைந்திருக்கிறது என்பர். பொருளியல் வல்லுநர்கள், வறுமையும், பசியும் மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, பொருளாதார மேம்பாட்டிற்கு பயனில்லாதவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது.  (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

************************************************************************

மெய்ப்பொருள் காண்போம் : அவ்வழி நடப்போம்.

தொடர் : 1  – Er.H.அப்துல் ஸமது, சென்னை.

இங்ஙனம் தனி மனிதனாகவும், வழிகாட்டியாகவும், எல்லாக் கடமைகளையும், பணிகளையும் செம்மையாக நிறைவேற்றினார்கள். இவ்விரு நிலைகளிலும் நபி(ஸல்) அவர்கள் சொன்னவை, செய்தவை, அங்கீகரித்தவை யாவும் அல்லாஹ்வின் தூதர் குர்ஆன் தரும் மறையை மக்களுக்கு கற்பிக்க மேற்கொண்டவைகளாகும். அவை நாம் ஏற்றுக் கடைபிடிக்க வேண்டுவன. நமக்கும், ரசூல்(ஸல்) அவர்களுக்கும் உள்ள தொடர்பும் பிணைப்பும் இவைதான். இந்தத் தாற்பரியத்தைத் தெளிவாக உணராதவர். எந்தப் பலன்களை மனித இனம் பெற வேண்டும் என்ற நோக்குடன் நபி(ஸல்) அவர்கள் அனுப்பப் பட்டவர்களோ அப்பலன்களை பெற இயலாது.

நபித்துவத்தைப் பற்றி தவறானக் கருத்துக்களையும், கோட்பாடுகளையும், செயல்முறைகளையும் உருவாக்கி, அவைகளுக்கொப்ப வாழும் இன்னொரு சாரார் சூபிகள் ஆவர்.  குர்ஆன், நபிவழி(ஹதீது) இவைகளின் அடிப்படையில் எழுந்த “ஷரியத்” வெளிரங்கமான ஞானம் ஆன்மீகப் பயிற்சி, உள்ளுணர்வு, அனுபவம், காட்சழ இவைகளின் மூலம் இறைவனிடமிருந்து நேரடியாகப் பெறுவது “தரீக்கத்” எனும் அந்தரங்க ஞானம்” என்பது இவர்களின் சித்தாந்தம், ஷரீயத்” நல்கும் வெளிரங்கமான அறிவை நபி(ஸல்) அவர்கள்  பொது மக்களுக்குக் கற்பித்தனர்.  தரீக்கத் எனும் அந்தரங்க ஞானத்தை நபி(ஸல்) அவர்கள் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட ஒருசிலருக்கு மாத்திரமே புகட்டினர்.  இத்தகைய  அந்தரங்க  ஞானம் மிகவும்  இரகசியமாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு பிற்காலத்தில் வெகுசிலருக்கு அறிவிக்கப்பட்டது. இச்சிறப்புக்குரியவர் தாங்களே என்று நபிகள் விளம்புகின்றனர். நபி(ஸல்) அவர்கள் நல்கிய உண்மைகளுக்கு வேறுபாடும் பிரிவுகளும் புனைந்து, தவறான சித்தாந்தங்களை உருவாக்கிவிட்டனர் சூபிகள் இறைவனையும் அவனது தனி இயல்புகளையும் சீராகவும் முழுமையாகவும் மக்கள் உணர்ந்து கொள்ள. இத்தகைய சித்தாத்தங்கள் தடைகளாக நின்றதோடல்லாமல் நபி(ஸல்) அவர்களைப் பற்றி தவறான கருத்துக்களும் தோன்றக் காரணங்களாயின. சூபிகளில் ஒரு சாரார் “தரீக்கத்”திற்கு மாத்திரமே முக்கியத்துவம் அளிக்கின்றனர். இறைவனை உணர்வதில் அவர்களின் ஷெய்கு முகியதீன் இப்னு அல் அரபி நபிமார்களைவிட ஒரு உயர்ந்த தரத்தை உடையவராக கருதுகின்றனர். நபிமார்களின் தரங்களைக் குறித்து இத்தகைய அவநம்பிக்கை உடையவர்கள் நிச்சயமாக செம்மையான இறை உணர்வு (தக்வா) பெறவியலாத முழுமையான (தக்வா) இறை உணர்வு நபிமார்கள் மூலமே பெறவியலும் என்ற  திடச் சிந்தை வேண்டும்.

நம்மிடையே பிறிதொரு சாரார், நபி(ஸல்) அவர்களை கண்ணியமிக்க ஒரு பிறவியாக அல்லாமல், வேறெந்தச் சிறப்புக்கும் உரியவராக ஏற்பதில்லை. சமுதாயத்தின் வழக்கத்தையும் நம்பிக்கையும் மீறத் திராணியற்று நபி என்றழைத்து ஓரளவு கண்ணியம் நல்குவர். வாழ்க்கையில் எந்தத் துறையிலும் நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பு அறுதியானது என்ற கோட்பாடும், அன்னாரின் அறிவுரைகளை ஏற்று வாழ்வது கொண்டே இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெறவியலும் என்ற நம்பிக்கையும் இத்தகையவர்களுக்கு உடன்பாடற்றவையாகும் நபி(ஸல்) அவர்கள் கற்பித்தவை, அன்றைய காலக்கட்டத்தில் நிலவிய சூழ்நிலைக்குகந்தனவாக விளங்கின  என்பதில் சந்தேகமில்லை என்று ஒப்புதல் வழங்குவர். எனினும் இன்றைய விஞ்ஞான யுகத்திற்கும் அவையே ஏற்றவை என்று கோருவது அறிவீனம் என்று தீர்ப்பு வழங்கத் தயங்கமாட்டார்கள். இவர்களின் மன இச்சைக்குகந்தவைகளாகவும் இந்நவீன காலத்தில் கண்ணியமிக்கவை என இவர்கள் கருதுபவைகளையும் மாத்திரமே நம்பகமானவை என்று கூறவும் முன்வருவர். இவை அல்லாத எதையும்  மனப்பூர்வமான ஏற்றுக் கொள்ளுவதில்லை என்றாலும் நபி(ஸல் கற்பித்தவைகளுக்கு எதிராக ஏதேனும் கூறவும் மாட்டார்கள். இவைகளின் இத்தகைய செயல்பாட்டிற்கு ஆற்றலின்மையும், சுய சிந்தனை இல்லாமையும், கோழைத்தனமுமே காரணங்களாகும்.

மேலே கூறப்பட்டவர்களல்லாமல், நம்மிடையே பெரும்பான்மையினர், நபி(ஸல்) அவர்களிடம் குருட்டுத்தனமான நம்பிக்கையும் பக்தியும் கொண்டுள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். அவரவரின் சலன சித்தத்திற்கும் வினோதப் போக்கிற்கும் ஏற்ப நபி(ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து அன்னாரின் புகழ்பாடி அவ்வப்போது விழாக்கள்ட கொண்டாடுகின்றனர். இத்தகைய விழாக்களை ஆடம்பரமாகவும் குதூகலமாகவும் கொண்டாடுவதால் நபி(ஸல்) அவர்கள் மீது அவர்களுக்குற்ற கடமைகளை நிறைவேற்றிவிட்டதாகத் திருப்தியடைகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட நோக்கம் யாது? அன்னாரின் அறிவுரைகள் யாவை? அவர்கள் நம்மீது சாட்டியப் பொறுப்புக்கள் எவை? இவைகளுக்கேற்ப நாம் செயலாற்ற வேண்டுவது எங்ஙனம்? இவைகளைப் பற்றிய சிந்தையும், கவலையும் கிஞ்சிற்றும் உண்டாவதில்லை என்னும்போது இவைகளை நிறைவேற்றாதிருப்பது பற்றி கூற வேண்டியதில்லை.

தாங்கள் நடத்தும் விழாக்களும், கடைப்பிடித்தொழுகும் ஆசாரங்களும் நபி(ஸல்) அவர்கள் கற்பித்தவைகளுக்கு முற்றிலும் முரணானவை என்பதையும் உணருவதில்லை. ஆத்மீக வழிகாட்டிகள் எனக்கோரும் அறிவிலிகளாகிய சில “பீர்” மார்களும், மார்க்க அறிஞர்கள் எனப் பறைசாற்றும் மவ்லவிகளில் ஒரு கூட்டத்தாரும், நபி(ஸல்) அவர்கள் மீது இத்தகையவர்கள் கொண்டுள்ள கண்மூடித்தனமான  பயபக்தியை தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். “ஷரியத்”தைப் பேணி, அதை ஒட்டி வாழவேண்டும் என்ற  நியதியினின்றும் விதிவிலக்குத் தமக்குத் தாமே வழங்கிக்கொண்ட சூபிகளும், மக்களின் இத்தகைய பண்பாடுகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். மக்களின் கண்மூடித்தனமான இத்தகைய பயபக்தியை ஊக்குவிப்பதே தங்களுக்குப் பாமர மக்களிடையே செல்வாக்கும் புகழும் ஈட்டித் தருவதோடு ஓர் உயர்ந்த ஆத்மீகத் தரத்தையும் புனைந்து கொள்ள இலகுவான  வழியெனக் கண்டனர்.  நபி(ஸல்) அவர்கள் மீது  அவர்கள்  என்றும் கோராத இறைத் தன்மையை ஏற்றி மிகைப்படுத்திக் காட்டினர். நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள பக்தியை வெளிக்காட்ட மக்களுக்கு புதிய ஆதாரங்களைப் போதித்தனர். புதிய இம்முறைகளின் மூலம் ‘ஷரீஅத்’தின் ஆதிக்கத்தைத் தளர்த்தி, மன இச்சைக்கு ஏற்ப வாழ உரிமையைத் தேடிக் கொண்டனர். நபி(ஸல் அவர்களை வாயால் புகழ்ந்தேத்துவதில் திருப்தியடைந்து,  இறைவனை உணர வழழிகோலும் ஈமானின் கோட்பாடுகள் யாவையும் தாக்கியதோடல்லாமல், இறையுணர்(தக்வா)விற்கு மெருகேற்றி ஒளிவூட்டும் கிரியைகளையும் ஒழுக்க நெறிகளையும் களையச்செய்து விட்டனர். நேர்வழிகாட்டி இறைநெறியில் மக்களை இட்டுச் செல்ல பாவப்பட்ட நபி(ஸல்) அவர்களின் பெயராலேயே மக்களை இறை நெறியினின்றும் அகற்றி வழிகேட்டிலும் பாவங்களிலும் அமிழ்த்தி விட்டனர்.

நபி(ஸல்) அவர்களின் வாயிலாகவே நாம் இறை உணர்வு(தக்வா) பெற சாத்தியமாகும். மேலே விவரிக்கப்பட்ட தவறானக் கருத்துக்களுக்கும், இடையே நிலவ வேண்டிய யதார்த்த முறையான பந்தம் ஈடுபாடு இவைகளுக்க முரணானவை. திருமறை கற்பிக்கும் வகையில் நபி(ஸல்) அவர்கள் காண்பித்த வழியில், அவர்களோடு நம் பந்தமும் தொடர்பும் அமைந்தாலே, நாம் இறைவனை செம்மையாக உணர்ந்து அவனை சீராக அணுக முடியும். உரிய நன்மைகளும், பலன்களும் கிட்டும்.

நபி(ஸல்) அவர்களோடு நம் பந்தமும் தொடர்பும் நான்கு அம்சங்களை அடித்தளமாகக் கொண்டு நிலைபெற வேண்டும்.

1. நம்பிக்கையும், திட நம்பிக்கையும் (Faith and Trust)

2. கீழ்ப்படிதல் (Obedience)

3. அடியொற்றி பின்பற்றுதல் (Pursuance)

4. பாசம் (அன்பு)  (Love)

நபி(ஸல்) அவர்களோடு நமக்குள்ள உறவு, முதற்கண் ஈமானின் அடிப்படையில் உருவாக வேண்டும். முகம்மது(ஸல்) அவர்கள் இறுதி நபி என்று நாம் மனவுறுதி (Faith) கொள்ளுவதோடு, அவர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை (Trust) யும் ஏற்பட வேண்டும். அன்னார் நம்பகமானவர், உண்மையாளர் என்பதில் திடச்சித்தமும் (Conviction)  அவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும் ஆழியக் கருத்துக்கள் அடங்கியவை என்ற வாய்மையில் தளராத நம்பிக்கை(Trust)யும் வேண்டுமட். அவர்கள் காட்டிய வழியே இம்மை வாழ்க்கைச் செறிவிற்கும், மறுமையின் இரட்சைக்கும் உகந்தது என்று உறுதி பூண்டு, அவ்வழி நடக்குங்கால் வந்ததும் இடர்பாடுகள் எத்தரமும் எத்துணைதான் ஆயினும் அவ்வழி நின்று, பிறலாது நிலைநிற்கும் மனப்பாங்கும் வேண்டும். நபி(ஸல்)அவர்கள் காட்டிய ஒழுக்க நெறி காலவரம்பு இன்றி, என்றும் மனித வர்க்கத்தின் மேம்பாட்டிற்கு இன்றியமையாதது என்ற திடச்சித்தம் வேண்டும். இறைவனை உணர, அன்றும், இன்றும், என்றும் அம்மார்க்கம் ஒன்றேயல்லாது வேறு வழி இல்லை என்ற நம்பிக்கை வேறூன்றிட வேண்டும்.

அல்லாஹ்வே தன்னுடைய இரட்சகன் என்றும், இஸ்லாமே தன் (வாழ்க்கை நெறி) மார்க்கம் என்றும், முகம்மது(ஸல்) அவர்களே நபி(இறைத்தூதர்) என்றும் (உறுதியாக நம்பி) திருப்தி கொண்டவரே ஈமானின் இனிமையைச் சுவைத்தவர் ஆவார். (முஸ்லிம்)

இந் நபிமொழிக்கேற்ப ஈமான் ஈட்டுத்தரும் நற்பேறுகளை நுகர்ந்திட, மேலே விவரித்த மனத்திடம் இன்றி, வாயளவில் முகம்மது(ஸல்) அவர்கள் (இறைவனின் தூதர்) நபி என்று கூறுவது மாத்திரம் போதுமானதல்ல. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

************************************************************************

“அவதூறு” ஓர் ஆய்வு!  – அபூ பாத்திமா

துரதிஷ்டவசமாகச் சமுதாயத்தில், சத்தியத்தைக் குழிதோண்டி புதைத்து, அசத்தியத்தை அரங்கேறச் செய்யும் செயல்கள் அவசியமானவையாகக் கருதப்படுகின்றன. அதற்கு நேர்மாற்றமாக அசத்தியத்தை அழித்து சத்தியத்தை நிலைநாட்டும் செயல்கள் அவசியமற்றவையாகவும் கருதப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு இப்படிப்பட்ட கெடுதிகளைத் தெளிவுபடுத்தும் நோக்கத்துடன், சத்தியத்தை அழித்து அசத்தியத்தை வளர்க்கும் தக்லீது,  தஸவ்வுஃப், பித்அத் போன்றவற்றின் விளக்கங்களை ஆய்வுக்கட்டுரைகளாக நஜாத்தில் இடம் பெறச் செய்தோம்.

இந்த இதழில் அதே வரிசையில், சத்தியத்தைக் குழிதோண்டி புதைத்து அசத்தியத்தை வளர்க்கத் துணைபோகும் அவதூறு பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை இடம் பெறுகிறது. பொதுவாக, சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபடும் சத்தியவான்கள் மீது அவதூறுகள் அள்ளி வீசப்படும். ஆனால் அவற்றைத் தெளிவுபடுத்தாமல், அந்த அவதூறுகளைப் பொருட்படுத்தாமல், மெளனம்  சாதித்துக் கொண்டு, அவர்கள் தங்கள் பிரச்சாரப்பணியைத் தொடர வேண்டும் என்று சிந்தனைத்திறன் கொண்ட செயல்வீரர்களும் விரும்புகின்றனர். அதற்கு மாற்றமாக அவர்கள் அந்த அவதூறுகளுக்கு விடையளிக்க முற்பட்டால், அவை பற்றிய விளக்கங்களை மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்தால் அது தவறு என்றும்,சொந்தப் பிரச்சினையை மார்க்கப்பிரச்சினையோடு கலப்பதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். இவர்களின் எண்ணத்தில் அவதூறு மார்க்கப் பிரச்சினை அல்ல: சொந்தப் பிரச்சினை என்ற கருத்தே மிகைத்திருக்கிறது. இந்த தவறான எண்ணத்திற்கும் சிறந்த முற்போக்குச் சிந்தனையாளர்களும் பலியாகியுள்ளனர். எனவே குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் “அவதூறு” பற்றி ஆராய்வோம்.

அவதூறு பற்றி அல்குர்ஆன் :

எவனேனும்  யாதொரு குற்றத்தையோ, பாவத்தையோ செய்து அதனைத் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது அதனைச் சுமத்தினால், நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும், பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான்”

தன் குற்றத்தை மறைத்து, பிறரைக் குற்றப்படுத்த அவதூறு பயன்படுகிறது. அது பெரும்பாவம் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.

(அவதூறு கூறிய) அவர்கள், அதற்கு வேண்டிய நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அதற்குரிய சாட்சிகளை அவர்கள் கொண்டு வராததனால், நிச்சயமாக  அவர்கள் தாம் பொய்யர்கள் என்று அல்லாஹ்விடத்தில் ஏற்பட்டு விட்டது” (24:13)

இந்த வசனம், தங்கள் குற்றச்சாட்டுகளை உரிய ஆதாரங்களுடனும், சாட்சிகளுடனும் நிரூபிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு செய்யாமல் வெறுமனே கூறித்திரிபவர்கள் பொய்யர்களாகவும், அவதூறு பரப்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

(அவதூறான) இதனை நீங்கள் (ஒருவரிடமிருந்து ஒருவராக உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் (திட்டமாக) அறியாத விஷயத்தை, உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகின்றீர்கள். இதனை நீங்கள் இலேசாகவும் மதித்துவிட்டீர்கள். ஆனால் இதுவோ, அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க மகத்தானதாக  இருக்கிறது”. (24:15)

இந்த வசனம் அவதூறைக் கூறியவரிடமிருந்து உரிய ஆதாரங்களையும், சாட்சிகளையும் பெறுவது கடமை. அதனை விட்டு, அவற்றைக் கூறித்திரிவது மகத்தான பாவம் என்பதை விளக்குகின்றது.

எவர்கள் விசுவாசங்கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத (குற்றத்)தை (ச் செய்ததாக)க் கூறி தொல்லைப்படுத்துகிறார்களோ. அவர்கள், நிச்சயமாக(ப் பெரும்) அவதூறுகளையும், பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர். (33:58)

அவதூறுகளை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்காமல் (உண்மையாக இருந்தால்தான் கட்டாயம் நிரூபிக்க முடியும்) வெறுமனே கூறித் திரிபவர்கள் உண்மை முஸ்லிம்களுக்குத் தொல்லை கொடுக்கிறவர்கள்,  அவதூறு செய்கிறவர்கள், பாவத்தைச் சுமந்து கொள்கின்றனர் என்று முத்திரை இடுகின்றது இந்த வசனம்.

அவதூறு பற்றி ஹதீஸ் :

 என்னுடைய கற்பின் மாண்பைப் பற்றி “வஹீ” அருளப் பெற்றும், நபி(ஸல்) மிம்பரில் ஏறி நின்று அச்செய்தியை எடுத்துரைத்து (அது பற்றிய இறை வசனங்களையும்) ஓதினர். பின்னர் மிம்பரிலிருந்து இறங்கியதும் இரு ஆண்களுக்கும், ஒரு பெண்ணுக்கும் (இறைக் கட்டளைப்படி கசையடி கொடுக்க) பணித்தார்கள். எனவே அவர்களுக்குக் கசையடி கொடுக்கப்பட்டது. (அவ்வாறு கசையடி பெற்றோர் ஹஸ்ஸான்பின் ஸாபித்(ரழி) மிஸ்தஹ்பின் அஸாஸா (ரழி), ஹிம்னது பின்து ஜஹ்ஷ்(ரழி) ஆகியோர் ஆவர். (ஆயிஷா(ரழி), அபூதாவூத்)

இந்த ஹதீஸ், அவதூறு பரப்புவோர் பகிரங்கமாகக் கசையடி பெறும் குற்றத்தைச் செய்கின்றனர் என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்த அவதூறில் சம்பந்தப்பட்டவர்கள் நபி(ஸல்) அவர்களும், அவரது அன்பு மனைவி ஆயிஷா(ரழி) அவர்களும் என்பதால் தங்களது சுய விளம்பரத்திற்காக இத்தண்டனை அளிக்கப்படவில்லை. மாறாக அப்படி அவதூறுக்கு ஆளாகியவர் அதைத் தெளிவுபடுத்த முற்படுவது மார்க்கமே தான் அல்லாது சுயநலமோ, தனது பெருமையை விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் செயல்படுவதோ இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. யூசுப்(அலை) மீது அஜீஜின் மனைவி வீண்பழி சுமத்தி அவதூறு கூறியபோது அதனை ஆதாரத்துடன் விளக்கியுள்ளதை நாம் திருகுர்ஆனில் 12:28-30 வசனங்களில் காணலாம். அங்கு தனது சுயவிளம்பரத்திற்காக யூசுப்(அலை)அதனைச் செய்யவில்லை. தனது பொறுப்பை நிலைநாட்டவே செய்தார்கள் என்பது தெளிவு.

நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், கலீபாக்களின் காலத்திலும் அவதூறு பரப்பியவர்களுக்கு பகிரங்கமாக கசையடி கொடுக்கப்பட்டு வந்துள்ளது. விபச்சாரம், மது அருந்துதல் போன்ற பெரும் பாவமாக அவதூறு பரப்புவது கணிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை இது ஊர்ஜிதம் செய்கின்றது.

அவதூறு என்றால் என்ன?

இப்போது அவதூறு என்றால் என்ன? அவதூறைப் பரப்புகிறவர்கள் யாராக இருக்க முடியும்? என்பதைப் பார்ப்போம்.

அவதூறு என்றால் செய்யாததைச் செய்ததாக மற்றவர் மீது வீண் பழி சுமத்துவதும், செய்த ஒன்றைத் திரித்துக் கூறுவதும் ஆகும். சத்தியத்தைப் போதித்த நபிமார்கள் அனைவர் மீதும் அசத்தியத்தில் இருந்தவர்கள் அவதூறு பரப்பினார்கள். அதாவது சத்தியத்தை முறையாக எதிர்க்க ஆற்றல் இல்லாது போகும்போது அசத்தியத்தில் இருப்பவர்கள் உபயோகிக்கும் ஆயுதமே அவதூறாகும். சத்தியத்தில் இருப்பவர்கள் உபயோகிக்கும் ஆயுதமே அவதூறாகும். சத்தியத்தில் இருப்பவர்கள் அவதூறை ஆயுதமாகக் கொள்ளவேண்டியதில்லை. ஆனால் அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டால் விளக்க வேண்டிய அவசியத்திலிருப்பதை மேற்கண்ட அன்னை ஆயிஷா(ரழி) ஹதீஸ் மூலம் கண்டோம். காரணம், சத்தியத்தை உரிய  ஆதாரங்களுடன் நிலைநாட்ட முடியும். எனவே நபிமார்கள் அவதூறை ஆயுதமாகக் கொள்ளவே இல்லை. அதே சமயம் நபிமார்களை எதிர்த்த அசத்தியத்திலிருப்பவர்களுக்கு அவதூறுகளே சிறந்த ஆயுதங்களாகப் பயன்பட்டன. அதாவது “அயோக்கியவர்களின் கடைசிப் புகலிடம் இன்றைய அரசயில்” என்று கூறுவது போல் “அசத்தியவான்களின் கடைசிப் புகலிடம் அவதூறுகளாகும்”.

சத்தியம் பரவாமல் தடுப்பது அவதூறு :

இதிலிருந்து நமக்கு என்ன தெளிவாகத் தெரிகின்றது? சத்தியத்தை உரிய ஆதாரங்களுடன் எதிர்க்க முடியாது. அதே சமயம் சத்தியம் மக்களிடம் பரவாமல் தடுப்பது பொய்யர்களின் தலையாய குறிக்கோளாக இருக்கிறது. எனவே சத்தியத்தைப் போதிப்பவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசிவிட்டால், மக்கள் சந்தேகத்திற்காளாகி சத்தியவான்களின் சத்திய போதனைக்கு செவி கொடாமல் விலகிச்சென்று விடுவார்கள். ஆக எப்படியோ அவர்களின் குறிக்கோள்  நிறைவேறி விடுகின்றது. இது சத்தியம் பரவாமல் ஷைத்தான் செய்யும் சூழ்ச்சியாகும். அதனால்தான் நபிமார்கள் மீது அவதூறுகள் பரப்பப்பட்டவுடன், அல்லாஹ் சுடச்சுட அவற்றிற்குப் பதில் அளித்து தெளிவுபடுத்தியுள்ளான். இன்று சிந்தனையாளர்களும் நினைப்பது போல் அவதூறுகள் மார்க்கப் பிரச்சினை இல்லை. அவர்களின் சொந்தப் பிரச்சினை என்று அல்லாஹ் விட்டு வைக்கவில்லை. அவதூறுகள் களையப்படுவது மார்க்கத்தின் முக்கியமான ஒரு அங்கமாகவே இருக்கிறது என்பதற்குக் குர்ஆன், ஹதீஸில் ஆதாரங்கள் பல இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை மேலே கண்டோம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவதூறுகளைக்  களைவது பற்றி இன்று குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு மாற்றமாக, மனித அபிப்பிராயமான – தப்பான எண்ணமே சிந்தனையாளர்களுக்கு மத்தியிலும் நிலவுகிறது. இதனால் ஏற்படும்ட கெடுதிகளை விரிவாகப் பார்ப்போம்.

உணர்ந்தவர்களும் சத்தியத்தைச் சொல்ல முன் வராததற்கு அவதூறே காரணம் :

அதாவது, சத்தியப் பிரச்சாரம் செய்பவர்கள் மீது அள்ளி வீசப்படும் அவதூறுகளைக் களைய முற்படுவது அவர்களின் கடமையோ. உரிமையோ அல்ல. மாறாக  அது அவர்களின் கடமையோ, உரிமையோ அல்ல. மாறாக அது அவர்களின் சுய விளம்பரத்திற்காகச் செய்யப்படும் முயற்சி என்றும், இஃலாஸ் அற்ற நிலை என்றும், தனிப்பட்ட விவகாரம் என்றும் கருதப்படுகின்றன. இதனால் சத்தியம் பிரச்சாரத்தில் இறங்கும் துணிவு பெரும்பாலான அறிஞர்களுக்கு இல்லாமல் போய்விடுகின்றது. சத்தியப் பிரச்சாரத்தில் இறங்காவிட்டால்  அவதூறுகள் பரப்பப்படும் நிலை இல்லையல்லவா?

பொதுவாக  மனித இயல்பின்படி அவனுக்கென்று ஒரு கெளரவம், அந்தஸ்து, செல்வாக்கு இருக்கின்றன. இவற்றில் நஷ்டம் ஏற்படுவதை மனிதனால் சகிக்க முடியாது. சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது, அவர்கள் மீது அவதூறுகள் சுமத்தப்பட்டு, அதன் காரணமாக இவற்றிற்குப் பங்கம் ஏற்படத்தான் செய்யும். அவதூறுகளைக் களைந்து கொள்ளும் அவர்களின் உரிமையையும், தவறாக மார்க்கத்தின் பெயரால் அறிஞர்களும் பறித்துக்கொள்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் சத்தியப்பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அன்றிலிருந்து இன்று வரை சத்தியத்தை உணர்ந்துள்ள பல அறிஞர்கள் அதனைப் பகிரங்கமாக மக்கள் முன் எடுத்து வைக்க முன்வராததற்கு இதுவே காரணமாகும்.  இப்படிப்பட்ட எண்ணற்ற அறிஞர்களை நாம் சந்திக்கத்தான் செய்கிறோம். மக்களிடம் தங்களுக்கு இருக்கும் செல்வாக்குப் போய்விடுமே என்ற ஒரே காரணத்தால் சத்தியத்தைத் துணிந்து சொல்லும் மன உறுதி அவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. ஆக அவதூறுகளைக் களைவது மார்க்கப் பிரச்சினை இல்லை என்று தவறான கொள்கையைக் கொண்டிருப்பதால், சத்தியத்தை உணர்ந்தவர்களில் பெரும்பாலானோர்,  அந்த சத்தியத்தை மக்கள் முன் எடுத்து வைக்காது மறைக்கும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவதூறுகளைக் களைய முற்படுவதை ஹிமாலயத் தவறாகக் கருதும் சிந்தனையாளர்களில் பலர், இப்படிப்பட்ட அவதூறுகளினால் தங்களின் செல்வாக்கு போய்விடுமே என்று அஞ்சி தாங்கள் அறிந்துள்ள உண்மைகளையும் மக்களுக்கு அறிவிக்காமல் மறைத்துக் கொள்ளும் சுபாவமுடையவர்களாக இருப்பதுதான்.

துணிந்து பிரச்சாரத்தில் இறங்குபவர்களின் முயற்சிகளும்  அவதூறால் பாழ் :

அவதூறுகள் களையப்படாமல் விடப்படுவதால், பெரும்பாலான அறிஞர்கள் சத்தியப் பிரச்சாரத்திலிருந்து ஒதுங்குவது ஒரு பக்கம் இருக்க, தங்கள் கெளரவம், அந்தஸ்து, செல்வாக்குப் பாதிக்கப்படுவதையும், பொருட்படுத்தாமல்,  துணிந்து சத்தியப்பிரச்சாரத்தில் ஈடுபடும் விரல் விட்டு எண்ணப்படும் வெகு சிலரின் சத்திய முயற்சியின் விளைவு என்ன ஆகிறது தெரியுமா?

அவர்களின் முயற்சி விழலுக்கிரைத்த நீராக ஆகிவிடுகிறது. அவர்களின் முயற்சிக்கு அல்லாஹ்விடம் கூலி இருப்பிலும் மக்களுக்கு பலன் ஏற்படுவதில்லை) அவர்கள் மீது சுமத்தப்படும் அவதூறுகள் வளையப்படாமல் அப்படியே இருப்பதன் காரணமாக, மக்கள் அவர்கள் மீது கொண்டுள்ள வீண் சந்தேகமும் அப்படியே நிலைத்துவிடுகிறது. எனவே அவர்களின் சத்திய உபதேசங்கள் மக்களிடையே உரிய பலனை அளிப்பதில்லை. இங்கும் ஷைத்தான் தனது முயற்சியில் பெரும் வெற்றி கொண்டு விடுகிறான். அல்லாஹ்வின் தூதரான  நபி(ஸல்) அவர்களைப் பற்றியே, நபித்தோழர்களின் உள்ளங்களிலேயே ஷைத்தான் வீண் எண்ணத்தை போட்டுவிடுவான் என அஞ்சி, ஒருமுறை இரவில் சென்று கொண்டிருந்தபோது, கூட இருப்பவர் தனது மனைவி ஸபிய்யா(ரழி) என நபி(ஸல்) தெளிவுபடுத்தினார்கள் (புகாரி) என்றால், சாதாரண சத்தியப்பிரச்சாரகர்கள் பற்றி ஷைத்தான் எப்படிப்பட்ட வீண் எண்ணங்களைக் கொள்ளச்செய்வான் என்பது தெளிவாகவே தெரிகின்றது. இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களே தானே வலிய வந்து அழைத்து தெளிவுபடுத்தியதைப் போல், நாம் வீண் சந்தேகங்களைக் களையாது விட்டுவிட்டால், அவை சத்தியப் பிரச்சாரத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை சிந்தனையாளர்கள் உணர்தல் வேண்டும்.

அவதூறு களையப்படுவதின் அத்தியாவசியம்  பாரீர் :

மூஸா(அலை) அவர்கள் இயற்கையிலேயே மிகவும் வெட்கப்படும் சுபாவமுடையவர்கள். எனவே எப்போதும் தனது உடம்பை துணியால் மறைத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் இன உறுப்பில் ஓதம் இருப்பதாக வீணர்கள் அவதூறு பரப்பினார்கள். உண்மையில் இந்தக் கோளாறு யாரிடம் காணப்பட்டாலும் அதற்கு அவர் பொறுப்பாளர் அல்லர். அவரைக் குறை சொல்லவும் முடியாது. அந்தக் குறையுடையவர் சத்தியப் பிரச்சாரம் செய்ய தகுதியற்றவர் என்று யாரும் சொல்லவும் மாட்டார்கள். எனவே இந்த அவதூறு மூஸா(அலை) அவர்களின் சத்தியப் பிரச்சாரத்தைப் பாதிக்கும் ஒன்றல்ல. அப்படிப்பட்ட அவதூறு ஒன்றையே சத்தியப் பிரச்சாரம் செய்பவர் மீது சுமத்தப்படுவதையே அல்லாஹ் பொறுக்கவில்லை. அந்த அவதூறைக் களைய மூஸா(அலை) அவர்களின் இயற்சை சுபாவத்திற்கும் விரோதமாக அவர்களை நிர்வாணமாகச் செல்லும் சூழ்நிலையை உருவாக்கி, மறைக்கப்பட வேண்டிய அவர்களின் இன உறுப்பை மக்கள் பார்க்கும்படி செய்து அந்த அவதூறைக் களைந்திருக்கின்றான். (33:69 பார்க்க தஃப்ஸீர் இப்னுகதீர்) மனித அபிப்பிராயப்படி இது மிகவும் அநாகரீகமான செயல் செய்யக்கூடாத செயல். அவதூறைக் களைவதற்கு இப்படியா மறைக்க வேண்டிய இன உறுப்பைக் காட்டுவது? என்றே யாரும் கேட்பார்கள். அல்லாஹ் ஏன் இவ்வாறு செய்திருக்கின்றான்? அவதூறு அதைவிடக் கொடியது. அநாகரீகமானது. அசிங்கமானது, சத்தியத்தை அழிப்பது. எனவே அதைக் களைந்தேயாக வேண்டும் என்பதை காட்டத்தான் அவ்வாறு செய்துள்ளான் என்பது புரிகிறதல்லவா?

நபி(ஸல்) அவர்கள் தனது தீன்வழி பிரச்சாரத்தை ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்து அல்லாஹ்வின் நாட்டப்படி – இறந்துவிட்டனர். உயிர் வாழ்ந்தவர்கள் பெண்மக்கள் மட்டுமே. எனவே நபி(ஸல்) அவர்களின் சத்தியப் பிரச்சாரத்தை எதிர்க்கத் திராணியற்ற அன்றைய மக்கா குறைஷிகள். சந்ததி அற்றவர் இந்த முஹம்மது என்று ஏசினர். ஆண் வாரிசற்றவர் என எண்ணி நகையாடி அவதூறுகளைப் பரப்பினர். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தை இருப்பதும், இல்லாததும் மார்க்க விஷயமல்ல. இருப்பினும் இந்த அவதூறுக்கு அல்லாஹ் பதிலளிப்பதைப் பாருங்கள்.

நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். (108:3) குர்ஆனில் மிகச் சிறிய சூராவான இதில் வேறு வசனமாகக் கூறி அவதூறைக் களைவதைப் பாரீர்.

சத்தியப் பிரச்சாரத்தைப் பாதிக்காத அவதூறுகளே இந்த அறவு கடுமையான முறைகளில் களையப்பட்டனவென்றால், சத்தியப் பிரச்சாரத்தைப் பாதிக்கும் அமானித மோசடி, பொய், திருட்டு, ஊழல், சோரம் போதல் போன்ற அவதூறுகளைக் களைய எவ்வளவு கடுமையான நடவடிக்கையில் இறங்கினாலும் அது நியாயமானதே என்பதை சிந்திக்கும் திறன் படைத்தோர் உணராமல் இருக்க முடியாது. அவதூறு சுமத்தப்பட்டோர் அந்த அவதூறைக் களைந்து கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகளை அநாகரீகமான முயற்சி என்றோ, சுயநல முயற்சி என்றோ, இஃலாஸ் இல்லாமல் செய்யும் முயற்சி என்றோ, பேர் புகழுக்காக செய்யப்படும் முயற்சி என்றோ, இது மார்க்கப் பிரச்சினை இல்லை. அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை என்றோ அறிந்தவர்கள் கூறமாட்டார்கள். அப்படிக் கூறுகிறவர்கள் சத்தியத்தை மறைத்து அசத்தியத்தை அரங்கேற்றவே துணை போகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

சல்மான் ருஸ்தியின் அவதூறுகள் :

சல்மான் ருஸ்தியின் “சாத்தானிய வசனங்கள்” இன்று முஸ்லிம் உலகையே கொதிப்படையச் செய்துள்ளது. ஈரான் அரசு இங்கிலாந்து பிரஜையான  சல்மான் ருஸ்தியைக் கொல்பவருக்கு பல கோடி, ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்துள்ளது. (இந்த அறிவிப்பு குர்ஆன், ஹதீஸ்படி சரியா? தவறா? என்பது தீர்க்கமாக ஆராய்ந்து விளங்க வேண்டிய விஷயம்) இது மனிதனின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் கொடிய செயல் என மேற்கத்திய நாடுகள் கொக்கரிக்கின்றன. உண்மை என்ன?

சல்மான் ருஸ்தி, நபி(ஸல்) அவர்களின் அல்லது அவர்களின் மனைவிகளின் அல்லது நபித்தோழர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற உண்மையான ஒரு சம்பவத்தை விமர்சித்திருந்தால் இஸ்லாமிய உலகு கொதிப்படைந்திருக்காது. அல்லது குர்ஆனிலுள்ள இறைக் கட்டளைகளை விமர்சித்திருந்தால், நாடுபவர்கள் இதனை ஏற்கட்டும், நாடுபவர்கள் இதனை நிராகரிக்கட்டும். (18:29) என்ற இறை வசனப்படி சல்மானை விட்டு விடலாம். அல்லது நாஸ்திகர்களைப்போல் இறைவனையே விமர்சித்திருந்தாலும் இஸ்லாமிய உலகு இந்த அளவு உணர்ச்சி வசப்பட்டிருக்காது. ஆனால் சல்மான் ருஸ்தியோ இரண்டு பெருங்குற்றங்களைச் செய்திருக்கிறான். ஒன்று, தன்னை முஸ்லிம் என்று மக்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே அவன், அவனிடம் இருக்க வேண்டிய நம்பிக்கைக்கு விரோதமாக அல்லாஹ்வையும், அவனது வேதத்தையும், அவனது தூதரையும், அந்தத் தூதரின் மனைவிகளையும், நபித்தோழர் களையும் எவ்வித ஆதாரமுமின்றி இழிவுபடுத்தி முர்த்தத்தாக – சத்திய வழிவிட்டு பிறழ்ந்து வழிகேட்டில் சென்று விட்டான். இதனை வேண்டுமானால் மேலை நாட்டினர் “இஸ்லாத்தின்” நேர்வழியின் அருமை தெரியாமல் லேசாக நினைக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை முறையாக இன்றும் விளங்கிக் கொள்ளவில்லையே. ஆனால் சல்மான் ருஸ்தி செய்துள்ள இரண்டாவது பெருங்குற்றம், மனிதனாக வாழ விரும்பம், மனிதனால் வாழும் ஒவ்வொருவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் குற்றமாகும். அதாவது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையிலோ, அவர்களது அருமை மனைவிகளின் வாழ்க்கையிலோ, நபித் தோழர்களின் வாழ்க்கையிலோ இடம் பெறாத சம்பவங்களை கற்பனையாக இட்டுக் கட்டியும் வேறு பல சம்பவங்களை திரித்தும் வீண்பழி சுமத்தி எழுதி இருப்பதுதான் – அவதூறாக எழுதி இருப்பதுதான். ஆம்! சத்தியத்தை எதிர்க்க வக்கற்ற மேலை நாட்டினர் முர்த்தத் சலமான் ருஸ்தியைக் கொண்டு அவதூறுகள்  மூலம் சத்தியத்தை அழித்து அசத்தியத்தை  அரங்கேறச் செய்ய முற்பட்டுள்ளனர்.

சல்மான் ருஸ்தியை இஸ்லாமிய உலகம் பறக்கணிப்பது அவரது எழுத்துச் சுதந்திரத்தை எதிர்த்து அல்ல.அவர் எழுதியிருப்பது தவறானது; உண்மைக்குப் புறம்பானது. இல்லாதவற்றைக் கூறியும், இருப்பதைத் தவறாகத் திரித்துக் கூறியுமிருப்பதால் தான் என்பதை வாசகர்கள் அறியவும். எனவே அவரது பொய், அவதூறுக்காகவே அதில் உலகமும் எதிர்க்கிறது. இதனைப் பேச்சுச் சுதந்திரம் என்றோ, எழுத்துச் சுதந்திரம் என்றோ, கருத்துச் சுதந்திரம் என்றோ மனிதத் தன்மையுள்ள மனிதர்கள் சொல்லமாட்டார்கள். சலமான் ருஸ்தியால் மேற்கத்திய நாடுகளில் பரப்பப்பட்டுள்ள அவதூறுகளைக் களைந்து, அவற்றின் உண்மை நிலைகளை தெளிவாக எடுத்து வைக்க முஸ்லிம் உலகு கடமைப்பட்டுள்ளது. இதுவே அவர்களின் சிந்தனையில் படிந்துள்ள அழுக்குத் திரைரய அகற்றப் பயன்படும். இந்த வகைக்கு ஈரான் அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட முன்வந்தால் அதனைப் பாராட்டலாம்.

அவதூறு களையப்படாவிட்டால் அசத்தியம் வேகமாகப் பரவும் :

அடுத்து, அவதூறுகள் களையப்பட்டால் விடப்படுவதால் சத்தியப்பிரச்சாரகர்களின் பிரச்சாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதற்கு நேர்மாற்றமாக அசத்தியப் பிரச்சாரகாரர்களின் அசத்திய பிரச்சாரத்திற்கு ஷைத்தான் எந்த அளவு வலுவைக் கொடுக்கிறான் என்பதைப் பார்ப்போம்.

சத்தியத்தைப் பலவீனமடையச் செய்து, அசத்தியத்தை பலமடையச் செய்வதே ஷைத்தானின் நோக்கமாகும். இந்த அடிப்படையில் சத்தியப் பிரச்சாரகர்கள் மீது சுமத்தப்படும் அவதூறுகளை பூதகரமாகப் பரவச் செய்து அவர்களின் சத்தியப் பிரச்சாரத்தைப் பரவாமல் தடுப்பதோடு, ஒழுக்கமற்றவர்களும், பொய்யர்களும், புரட்டர்களும் தங்களின் பேச்சுத் திறமை, எழுத்து வன்மை இவற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மார்க்கத்தின் பெயரால் செய்யும் அசத்தியப் பிரச்சாரத்தை வேகமாக மக்களிடையே பரவச் செய்கிறான். சத்தியத்திலிருப்பவர்கள், அசத்தியத்திலிருப்பவர்கள் மீது அவதூறு பரப்புவதில்லை. அவ்வாறு செய்து சத்தியத்தை நிலை நாட்டத் துணியவும் மாட்டார்கள். அதே சமயம் அசத்தியத்திலிருப்பவர்கள் சத்தியத்திலிருப்பவர்கள் மீது துணிந்து அவதூறு பரப்புவார்கள். இப்போது அவதூறுகள் களையப்படாமல் விடப்படுவதால் சத்தியவான்கள் மீது மக்களுக்கு வீண் சந்தேகமும், அசத்தியவான்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையும் ஏற்பட வழி ஏற்படுகின்றனது. காரணம் அசத்தியவான்கள் மீது சத்தியவானகள், அதுபோல அவதூறு பரப்ப அனுமதியில்லை. இதனால் மக்களிடையே அசத்தியம் பரவுமா? சத்தியம் பரவுமா? என்பதை சிந்தனையாளர்கள் உணர வேண்டும். அவதூறுகள் களையப்படாமல் விடப்படுவது. எப்படி எல்லாம் சத்தியம் பரவுவதைப் பாதிக்கின்றது என்பதை ஆழ்ந்து சிந்தித்து விளங்கவேண்டும். வழிகேடர்களும், சுயநலவாதிகளும், அற்பர்களும் மார்க்கத்தின் பெயரால் மக்களிடையே செல்வாக்குப் பெற, அவர்களால் சத்தியவான்கள் மீது சுமத்தப்படும் அவதூறுகள் களையப்படாமல் விடப்படுவதே காரணமாகின்றது. அவதூறுகளைக் களையும் முயற்சியில் சிந்தனைத்திறன் கொண்ட செயல் வீரர்கள் துணிந்து இறங்கி, அவதூறுகள் பரப்பித் திரிபவர்களிடம் அவற்றிற்குரிய ஆதாரங்களையும், சாட்சிகளையும் கேட்டு நிர்பந்தித்தால் அவர்களின் குட்டு வெளிப்பட்டுவிடும்.  மறுமையில் அவற்றிற்குரிய தண்டனைகளை அனுபவிக்கத்தானே போகிறார்கள் என்று விடக்கூடாது. அப்போதுதான் அவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அந்த அற்பர்கள் இனிமேல் சத்தியவான்கள் மீது அவதூறு பரப்ப முற்படவும் மாட்டார்கள். காரணம், அதன் விளைவை இங்கேயே கடுமையாக அனுபவிக்க நேரிடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது.

முடிவுரை : அவதூறு பரப்புவோரைப் புறக்கணிப்பீர் :

அன்று இஸ்லாமிய ஆட்சியில் அவதூறு பரப்பியவர்களுக்குக் கசையடி கொடுக்கப்பட்டதுபோல், இன்று கசையடி கொடுக்க முடியாவிட்டாலும், அவர்களை இனங்கண்டு அவர்கள் என்னதான் திறமையான பேச்சாளர்களாக இருந்தாலும், எழுத்தாளர்களாக இருந்தாலும் அவர்களை, சுய சிந்தனையாளர்களான செயல்வீரர்கள்  புறக்கணிக்க வேண்டும். அவதூறு பரப்புகிறிவர்கள் ஒருக்காலும் சத்தியவான்களாக இருக்க முடியாது என்று உறுதி கொண்டுஅவர்களைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட பொய்யர்களும், புரட்டர்களும், தங்களின் பேச்சு, எழுத்துத் திறமைகளைக் கொண்டும், சத்தியவான்களின் மீது அவதூறு பரப்புவது கொண்டும், மக்களிடையே செல்வாக்குப் பெற்று மக்களை வழிகெடுத்து அவர்கள் சுய ஆதாயம் அடைவது தடுக்கப்படும்.

சத்தியம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, அசத்தியம் அரங்கேற வேண்டும் என்று விரும்புகிறவர்கள் மட்டுமே, சத்தியவான்கள் தங்கள் மீது சுமத்தப்படும் அவதூறுகளைக் களைந்து, தங்களின் சத்திய நிலையை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபடுவதை அநாகரிக முயற்சி என்றும், சுயநல முயற்சி என்றும், இஃலாஸ் அற்ற நிலை என்றும், பெயர் விளம்பரத்திற்குச் செய்யப்படும் முயற்சி என்றும், அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை என்றும் சொல்லமுடியும். அதற்கு மாற்றமாக அசத்தியம் அழிக்கப்பட்டு சத்தியத்தை நிலைபெறச் செய்ய விரும்பம் சிந்தனைத்திறன் மிக்க செயல்வீரர்கள், அவதூறுகளைக் களைய செய்யப்படும் முயற்சி, மார்க்கத்தை நிலைநாட்ட செயய்யப்படும் அடிப்படை முயற்சிகளில் ஒன்று என்பதையும் பொய்யர்களும், புரட்டர்களும், அற்பர்களும் மார்க்கத்தின் பெயரால் செல்வாக்குப் பெறுவதைத் தடுத்து, சத்தியவான்களின் சத்தியப் பிரச்சாரம் மக்களிடையே வேகமாகப் பரவி சத்தியம் நிலைநாட்டப்படச் செய்யப்படும் அரியதொரு முயற்சி என்பதையும் புரிந்து கொள்வார்கள் என்று கூறுகிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அவதூறின் கெடுதிகளை விளங்கி அதைவிட்டு விலகிக் கொள்வதற்கும், அவதூறு பரப்புவோர் அசத்தியவான்களே என்பதையும் புரிந்து, அவர்களைப் புறக்கணித்துச் செயல்படுவதற்கும் அருள் புரிவானாக!

***********************************************************************

முக்காலமும் அறிந்த

இறைவனுக்குமா இடைத்தரகர்?

1988-ம் வருடம் டிசம்பர் மாத நஜாத் வெளியீட்டில் அவுலியாக்களிடம் தேவைகளுக்கு வேண்டுகோள் வைப்பது வழிகேடான முறை” என்பதைக் கண்டித்து “ஜ.உ.ச. பதில் தருமா? என்ற தலைப்பில் ஒரு விமர்சனம் வெளிவந்தது. சகோதரர்களுக்கு நன்கு தெரிந்ததே. அதில் நெல்லை ஜ.உ.ச.பொதுச் செயலர் மெளலவி ஹம்சா தங்கள் 7.11.88ல் ஆற்றங்கரை பள்ளி தர்கா கந்தூரி விழாவில் நடந்த மார்க்கப் பொதுக்கூட்டத்தில் :

இறந்துபோன அவுலியாக்களிடம் நேரடியாக உதவி கேட்கலாம்.. சிபாரிசு செய்யச் சொல்லிக் கேட்க வேண்டாம். அவுலியாக்கள் நமது தேவைகளை நிறைவேற்றித்தர வல்லமை பெற்றவர்கள். எந்த ஊரிலும், எந்த தர்காவிலும் அடக்கப்பட்டுள்ள எந்த அவுலியாவிடமும் உங்கள் தேவைகளை நேரடியாகக் கேட்டும் பெறலாம். செய்யது அலி பாத்திமா அவர்களிடமே நேரில் கேளுங்கள். அவர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவார்கள். இதுவே மார்க்கத்தின் தெளிவான நிலை. நெல்லை ஜ.உ.ச. பொதுச் செயலர் என்ற நிலையில் நான் இதைக் கூறுகிறேன்.

என்று மார்க்கத்திற்கு வழிகேடான ஒருமுறையை வலியுறுத்தி, மார்க்கத்திற்குக் கேடு விளைவிக்கும் பாதையை வகுத்துக் கொடுத்தார். அக்கூட்டத்தில் நடந்த விபரங்கள் அனைத்தும் நஜாத் பத்திரிகைக்கு செய்திகளாக வந்தன. அதன்பேரில் நஜாத் பத்திரிகை சமுதாய நலம் கண்ணோட்டத்தில் அவருடைய மார்க்கச் சொற்பொழிவு சமுதாயத்தை வழிகேட்டில் இட்டுச் செல்வதற்குக் காரணமாக அமையும் என்று கருகி, மக்களுக்கு மார்க்கத் தெளிவு கொடுக்க வேண்டும் என்று நல்லெண்ணத்துடன் அவர் சொற்பொழிவைக் கண்டித்து பத்திரிகையில் எழுதி வெளியிட்டோம்.

அதை மெளலவி ஹம்சா தங்கள், தன்னைத் திட்டமிட்டு அவமானப்படுத்தி எழுதியதாகத் தவறாகப் புரிந்து, தன்னுடைய அறிவாற்றலைக் கேவலப்படுத்தி விட்டதாக நினைத்துக்கொண்டு நஜாத் பத்திரிகை ஆசிரியருக்கு நஷ்டயீடு கோரி வழக்குத் தொடரப்போவதாக வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு மார்க்க விளக்கத்துடனும், குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடனும் ஆசிரியர் அனுப்பிய பதில் இங்கு மார்க்கத் தெளிவு உண்டாக்கும் நோக்கத்துடன் இடம் பெறுகிறது. மார்க்க உண்மைகள் சமுதாயத்திற்கு முன் வைக்கப்பட வேண்டியவை. மறைக்கக் கூடியவையல்ல. மார்க்கத் தெளிவு சமுதாயத்திற்கு ஏற்பட இந்த பதில் நோட்டீஸில் கண்ட உண்மைகள் காரணமாக அமைய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இதை நஜாத் பத்தரிகையில் பிரசுரம் செய்கிறோம். மாறாக யாரும் இதை தவறானக் கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம். நஜாத் பத்திரிகை, சமுதாயத்திற்கு மார்க்கத் தெளிவு கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

மேலும் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குதற்கோ, அவமானப்படுத்துவதற்கோ எவ்வித நோக்கமும் நஜாத்திற்கு இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆனால் சமுதாயத்தில் யாராக இருந்தாலும், மார்க்க விரோத காரியங்களில் சொல்லாலோ, செயலாலோ, எழுத்தாலோ ஈடுபட்டு மார்க்கத்தைக் கேவலப்படுத்தி வழிகேடான முறையில் கொண்டு சொல்ல நினைத்தால் அதை நஜாத் பத்திரிகை கண்டிக்காமல் விடாது என்பதையும் அறிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியரது எதிர்வாத பதில்

அனுப்புநர் :

K.M.H. அபூ அப்தில்லாஹ்
ஆசிரியர் : அந்நஜாத்
51-B. ஜாபர்ஷா தெரு,
திருச்சி-8.

பெறுநர் :

மெளலவி ஹம்ஸா தங்கள்,
செயலர், நெல்லை ஜ.உ.ச. சங்கர்  நகர்,
நெல்லை கட்டபொம்மன் மாவட்டம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாங்கள் வக்கீல் திரு, எம்.பி. அழகிய நம்பி பி.ஏ.பி.எல்ஈ மூலம் அனுப்பிய 3.1.1989 தேதியிட்ட கையெழுத்திடாத நோட்டீஸும் 30.1.1989 தேதியிட்ட கையெழுத்திடப்பட்ட நோட்டீஸும் பெறப்பட்டு, இன்று என்னுடைய எதிர்வாத பதிலை தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.

1. நான் இந்த பதில் நோட்டீஸில் ஒப்புக்கொள்ளாத, தங்கள் நோட்டீஸில் கண்டுள்ள விஷயங்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. மார்க்த்திற்கு முரணானவை என்பதை முதலில் தங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இஸ்லாமிய மார்க்கத்தில் யார் தவறு செய்தாலும் தவறு என்று சுட்டிக்காண்பிக்க  ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிமை இருப்பதும், கண்டிக்க உரிமை இருப்பதும் தங்களுக்கு நன்கு தெரிந்த விஷயம். இதில் யாருக்கும் அபிப்ராய பேதம் இருக்க முடியாது.

2. தங்கள் நோட்டீஸில், நான் தங்களின் மார்க்க அறிவை திட்டமிட்டு கேவலப்படுத்த வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில், மனம் போன் போக்கில் திரித்து என் பத்திரிகையில் எழுதியுள்ளதாக கூறியிருப்பது தவறு. எனக்கும் தங்களுக்கும் எந்தக் காலத்திலும் நேரடி சந்திப்பு கிடையாது. விரோதமும் கிடையாது. அப்படியிருக்க நான் உங்கள் மீது கெட்ட எண்ணம் கொள்ள அவசியமில்லை. மார்க்க விஷயங்களில் குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் மாறுபட்ட கருத்துக்களை யார் பேசினாலும் எழுதினாலும் அதைக் கண்டித்து எழுதும், அதே வேளை பொதுமக்கள் விரும்பிப் படித்துவரும் எம்முடைய பத்திரிகை இஸ்லாமிய வரம்புக்கு மீறி செல்லாது. தாங்களும் நம் பத்திரிகை ஆதரவாளர்  போல் தெரிகிறது. எம் பத்திரிகையைப் படித்து விஷயத்தைச் சரியாக புரிந்துகொள்ளாமல் ஏதோ கோபத்தில் தாறுமாறாக விஷயங்களை வக்கீலிடம் சொல்லி நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. தாங்கள் சற்று நிதானமாகவும், சிந்தனையோடும் அல்லாஹ்வுக்குப் பயந்த நிலையில் எம் பத்திரிகையில் கண்ட விஷயத்தை மீண்டும் ஒருமுறை படித்தால் உங்களுக்கே உண்மை விளக்கம் கிடைக்கும். ஆத்திரமோ, அனுதாபமோ இல்லாமல் நடுநிலை மனதோடு தாங்கள் பத்திரிகையின் பக்கங்களைப் படிக்கவும், மீண்டும் மீண்டும் படிப்பதால் அல்லாஹ் நாடினால் உங்களுக்கே உண்மை விளக்கம் கிடைக்கலாம்.

3. தாங்கள் ஆற்றங்கரை பள்ளி தர்கா கந்தூரி ஆண்டு விழாவையொட்டிய நிகழ்ச்சியில் கலந்து தங்கள் உரையில் “அவ்லியாக்களிடம் வேண்டுகோள் வைப்பது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல” என்று பேசியதை தங்கள் வக்கீல் நோட்டீசில் ஒப்புக்கொண்டுள்ளீர்கள். இந்த விஷயம் குர்ஆன், ஹதீஸ் சட்டத்துக்கு உட்பட்டதா? அல்லது மாறபட்டதா? என்பதுதான் வாதத்துக்குரிய மையமான பிரச்சினை. அதனைத் தாங்கள் புரிந்து விளக்கம் பெற்றுவிட்டால், தாங்கள் மறு கணமே தங்கள் நோடீஸை வாபஸ் வாங்கிக் கொண்டு தங்களுக்கு விளக்கம் கிடைத்தமைக்காக எனக்கு நன்றி சொல்ல முற்படுவீர்கள். ஆனால் நாங்கள் விளக்கம் கிடைத்த பிறகும் மீண்டும் மனமுரண்டாகவும், வரட்டு விதண்டாவாதம் பேசுபவராகவும் இருக்கக் கூடாது என்பது நிபந்தனை. அல்லாஹ் தங்களுக்கு நேரிய விளக்கம் கொடுத்து அதை ஏற்றுக் கொள்ளும் ஒரு மன நிலையும் தருவானாக! ஆமீன்.

4. என்னால் முடிந்தவரை டிசம்பர் 88  நஜாத் பத்திரிகையிலே ஜ.உ.ச. பதில் தருமா? என்ற தலைப்பில் தங்களுடைய கூற்று இஸ்லாமிய  ஷரீயத்துக்கு முற்றிலும் மாறானது என்பதுடன். வழிகேட்டுக்குக் கொண்டு செல்லும் கொள்கை என்பதை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கம் கொடுத்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்(ஜல்)வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நடைமுறை காரியங்களில் கெட்டது (நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்கள், பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத்(ரழி), நூல் : புகாரீ, முஸ்லிம்)

நபி(ஸல்) கூறினார்கள். “யஹூதிகளையும், நஸாராக்களையும், அல்லாஹ் சபித்துள்ளான். அவர்கள் தங்களது நபிமார்களுடைய கபுறுகளை வணக்க ஸ்தலமாக்கிவிட்டனர்” (புகாரி : ஆகவே நபிமார்களுடைய சமாதிகளையும், வலிமார்களுடைய சமாதிகளையும் கெளரவிக்கும் விஷயத்தில் எல்லை மீறி அவர்களிடம் நம் தேவைகளை வைத்து துவா செய்தால் அதனால் சமுதாயத்தில் “ஷிர்க்” என்னும் மாபாதகம் படர்ந்து பிடிக்க ஏதுவாகும். மேலும் அல்லாஹ்வின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உள்ளாக நேரிடும் என்பதை நமது சமுதாயத்திற்கு உணர்த்தவே மேற்கண்ட ஹதீஸ் சொல்லப்பட்டுள்ளது. மற்றும் ஒரு ஹதீஸ் அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு முன்பிருந்தோர் அவர்களது நபிமார்களுடையவும், அவர்களிடையே வாழ்ந்த நல்லடியார்களுடையவும் அடக்க ஸ்தலங்களை வணக்க ஸ்தலங்களாக ஆக்கினார்கள். ஆனால் நீங்கள் சமாதிகளை வணங்குமிடமாக்காதீர்கள். நிச்சயமாக நான் அதை உங்களுக்கு விலக்கியுள்ளேன் (ஹராம்)”. இவ்வாறு கபுறுள்ள இடங்களில் இறைவனை தொழவும் கூட நபி(ஸல்) தடை செய்த நிலையில் உத்தம சமுதாயமென திருமறையால் புகழப்பட்ட முஸ்லிம்கள் இன்று தங்களது தேவைகளைத் தங்களது இறைவனிடம் கேட்க வேண்டுமென்பதை மறந்து தம்மைப் போன்ற சிருஷ்டிகளின் கல்லறைகளிலே மண்டியிட்டு முறையீடு செய்வதைப் பற்றி எவ்விதம் விளங்குவது? அது அநாகரிகமில்லையா? அது ஷிர்க் ஆகுமா, இல்லையா? என்பதை தங்களைச் சிந்திக்க வேண்டுகிறேன். நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அல்லாஹ்வே! என்னுடைய அடக்கஸ்தலத்தை வணக்கத்துற்குரிய விக்கிரகமாக்கி விடாதே”. மேலும் எச்சரிக்கிறார்கள். என்னுடைய அடக்கஸ்தலத்தை நீங்கள் உற்சவ ஸ்தலமாக்கி விடாதீர்கள். (நஸயீ) மனித வர்க்கத்துக்கே அருட்கொடையாக அனுப்பப்பட்ட உத்தமத் திருநபி(ஸல்) தமது அடக்க ஸ்தலத்தை எடுத்துக்காட்டி இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்றால், இன்று நமது சமுதாயத்தினரிடையேயுள்ள சிலர், அவுலியாக்களின் சமாதிகளிலும், தர்காக்களிலும் நடத்துகின்ற பேய் கூத்துகளுக்கு ஏதாகிலும் அர்த்தமுண்டா என்பதையும் தாங்கள் சிந்திக்கவேண்டும்.

பரிசுத்தத் திருமறையில் “முஷ்ரிக்குகள்” எனக் கூறப்பட்டவர்கள் ஏகத்துவத்தில் இணை வைப்பவர்களே. சூறே பாத்திஹாவில் அல்லாஹ்(ஜல்) இய்யாக நஃபுது வஇண்ணாக நஸ்தகன்” என்று சொல்லித்தருகிறான். அதன்மூலம் அவனுக்கு இணை வைக்கும் முறையில் கற்றாரை வணங்கவும், மாற்றாரிடம் உதவி தேடவும் செய்தால் அல்லாஹ்வின் வல்லமையை நிராகரிப்பதற்குச் சமமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். பெரும்பாலான முஸ்லிம்கள் இதர சமுதாயத்தினரைப் போலவே தங்கள் தேவைகளை வேண்டுதல்களை அவுலியாக்களின் சமாதிகளை நாடிச் சென்று சிரம் குனிந்து குறைபாடுகளை முறையிடுகின்றனர். இவர்களது முறையீடுகளை அந்த நல்லடியார்களாகிய அவுலியாக்கள் செவியுறுகிறார்களா? பரிசுத்த குர்ஆன் கூறுகிறது. “நபியே! மரித்தோருக்கு கேட்கும்படி செய்ய நிச்சயமாக உம்மால் முடியாது”. (27:80)

மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். “நம்மை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவேயன்றி நாம் இவர்களை வணங்கவில்லை”. (39:3)

இவர்கள் அல்லாஹ்விடத்தில் எங்களுக்குச் சிபாரிசு செய்கின்றனர்” என்று கூறுகின்றனர். (10:18)

பிரார்த்தனை அல்லது தேவைகளை முறையீடு செய்வது என்பதும் வணக்கமேயாகும். சிபாரிசு செய்யத் தகதி பெற்றவர்களெனக் கருதி மறைந்த பெரியார்களின் விக்கிரகங்களை அன்றைய அரபியர்கள் வணங்கியும், பிரார்தித்தும் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள்  கூறுகிறார்கள். பிரார்த்தனை என்பதே வணக்கம்தான்” (நுஃமானுபின் பஷீர்(ரழி), அஹ்மத், திர்மிதி) பிரார்த்தனை வணக்கத்தின் மூளை”. (அனஸ்(ரழி), திர்மிதி) மேலும் அல்லாஹ்வும் திருமறையில் கூறுகிறான். நீங்கள் என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வேன். (40:60)

பிரார்த்தனையைப் பற்றி நபி(ஸல்) கூறுகையில் மேற்கண்ட திருவசனத்தை எடுத்துக் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே”. (7:194)

அவனே அழைக்கத் தகுதியுடையோன். எவர்கள் அவனையன்றி அழைக்கிறார்களோ அவர்களுக்கு, அவர்கள் யாதொரு பதிலும் கூறமாட்டார்கள். (18:14)

தங்களது தேவைகளுக்காக அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களைவிட வழிகெட்டவர்கள் எவருமே இல்லை என்று இத்திருவசனம் தெளிவுபடுத்துகிறது. மேலும் திருமறை கூறுகிறது. (நபியே!) நீர் கூறும் நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இறைவனையே அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்கமாட்டேன்”. (72:20)

அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தித்து அழைக்கவும், அதில் மற்றெவரையும் பங்காளியாக்காமலிருக்கவும், அல்லாஹ்வின் தூதருக்கு மேற்கண்ட திருவசனத்தின் மூலம் கொடுக்கப்பட்ட கட்டளை இது. இறைவனைத் தவிர பிரார்த்திக்கப்படுகின்றவர்கள் அவுலியாக்களாயினும், ஸ்தூல வஸ்துகளாயினும் பலன் ஒன்றே. அல்லஸீன தத்வூனமின் தூனில்லாஹி – அல்லாஹ்வைத் தவிர நீங்கள் பிரார்த்திக்கிறவர்கள்” என்ற வாக்கியத்தில் அல்லாஹ்வைத் தவிர என்ற வார்த்தை “விக்கிரகம்” கொடிமரம், தாபூத் போன்ற ஸ்தூல வஸ்துக்களைக் குறிப்பது போலவே மலக்குகள், நபிமார்கள், அவுலியாக்கள் போன்ற சிறப்புக்குரியவர்களையும் குறிப்பதாகும். மேலும் திருமறை கூறுகிறது.

இந்நிராகரிப்போர் நம்மை விட்டுவிட்டு நம்முடைய அடியார்களைத் தங்களுக்கு உதவியாளர்களாக எடுத்துக்கொள்ளலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (18:102) இத்திருவசனத்தில் காணுகின்ற “இபாதீ” என்ற சொல் நம்முடைய அடியார்களை என்ற வார்த்தை  விக்கிரகங்களைப் பற்றியது அல்ல. மறைந்த மகான்களைத்தான் குறிக்கின்றத என்பது எடுத்துக்காட்டத் தேவை மகான்களைத்தான் குறிக்கின்றது என்பது எடுத்துக்காட்டத் தேவையில்லை.

(7:194) அஃராப் என்ற அத்தியாயத்தில் 194வது வசனத்தில் அல்லாஹ் இதை விளக்கமாகவும் வலியுறுத்தியும் கூறுகிறான். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் அழைக்கிறார்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்களது தேவைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள். உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும். அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவர்கள் உங்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாயிருப்பதுடன் தனக்குத்தானே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்களாயிருக்கின்றனர். (7:197)

இத்திருவசனங்கள் அல்லாஹ்வைத் தவிர பிரார்த்திக்கப்படுகின்றவர்களெல்லாம் நம்மைப் போன்றே படைக்கப்பட்வர்கள்தாம் என்றும், படைக்கப்பட்டவர் கள் என்ற முறையில் மானிட சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் உண்டு எனக் கருதுவது மிகத்தவறு என்பதை தெளிவுபடுத்துவதுடன், மரணமடைந்தோர் தமக்குத்தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன. திருகுர்ஆனில் மேலும் ஒரு தெளிவான வசனம் இந்த காபிர்கள் அல்லாஹ்வாகிய நம்மை விட்டுவிட்டு, நம்முடைய அடியார்களை அவ்லியாக்களாக எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? நிச்சயமாக அப்படிப்பட்ட காபிர்களை உபசரிக்க, நாம் நரகத்தைச் சித்தப்படுத்தியிருக்கிறோம்”. (18:102)

இப்படிப்பட்ட வசனங்கள் மூலமாக அல்லாஹ் குர்ஆனில் எப்படி கட்டளையிட்டிருக்கிறானோ, அந்த கட்டளைகளுக்கு நபி(ஸல்) எப்படி விளக்கம் கொடுத்தார்களோ அப்படி நடக்க வேண்டும். அல்லாஹ்வோ, நம்முடைய நபியோ “வலிமார்களின் தர்காக்களுக்கு சென்று, உங்கள் தேவைகளைக் கேளுங்கள்” அவர்கள் கொடுப்பார்கள்” என்று எங்கேயாவது சொல்லியிருந்தால், தாங்கள் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் கொடுங்கள். உங்களால் நிச்சயமாகக் கொடுக்க முடியாது. ஆனால் வாதத்துக்காக சிலர் குர்ஆனுக்கு தங்கள் இஷ்டம்போல் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுக்கிறார்கள். அல்லாஹ் அவர்களை மாறுபாட்டுக்காரரர்கள், குழப்பக்காரர்கள் என்று 3:7ல் வர்ணிக்கிறான். நபி(ஸல்) அவர்களும் இப்படிப்பட்ட குழப்பக்காரர்களை விட்டும் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கிறார்கள். தாங்கள் மேற்கூறிய குர்ஆன், ஹதீஸ் விளக்கங்களிலிருந்து அவ்லியாக்களிடம் தேவை களுக்காக வேண்டுகோள் வைப்பது மார்க்கத்துக்கு முற்றிலும் முரண்பட்ட செயல், முஸ்லிம்களை வழிகேட்டின்பால் கொண்டு சென்று ஷிர்க் என்ற மன்னிக்கப்படாத குற்றத்திற்கும், குஃப்ர் என்ற பெரும்பாவத்திற்கும் காரணமாக அமைந்துவிடும் என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

தாங்கள் தர்காவுக்குச் சென்று தர்கா உர்சில் கலந்து அங்கு நடைபெற்ற கூட்டத்தில் முஸ்லிம் மக்களிடையே மார்க்கத்துக்கு விரோதமான, மக்களை வழிகேட்டுக்கு கொண்டு செல்லும் ஒரு செய்தியை சொன்னால், தாங்கள் மெளலவி, ஆலிம் என்ற முறையில் எதைச் சொன்னாலும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக தவறான கருத்துக் கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். தாங்கள் அன்று கூட்டத்தில் பேசிய கருத்து இஸ்லாத்துக்கு முற்றிலும் முரண்பாடானது. குர்ஆன், ஹதீஸை உதாசீனம் செய்து இஸ்லாத்தின் அடித்தளமான தெளஹீதைத் தகர்த்து கபுரானிகளிடம் உதவி கோர தாங்கள் மக்களை தூண்டியத கண்டிக்கத்தக்க  செயல், தாங்கள் கொண்டுள்ள பாதை வழிகேடான. தாங்கள் வேண்டுமானால் அந்த வழிகேடான பாதையைச் சரியானது  என்று கருதி தமக்குள் வகுத்துக் ளொள்ளலாம். ஆனால் அதையே தாங்கள் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்து அவர்களைத் திசை திருப்ப முற்படுவது முற்றிலும் முறைகேடான செயல் என்பதாக நான் மட்டும் கூறவில்லை. இஸ்லாத்தைச் சிறிது கற்றுணர்ந்த மக்கள் அனைவரும் கூறுவதோடு, உடனே இதனைக் கண்டித்து போர்க்கொடி தூக்கவும் தயாராகிவிடுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தாங்கள் கூறியுள்ளபடி தங்களது கவுரவம், பெருமையை விட எனக்கு இஸ்லாம் பெரியது. அதனுடைய அடித்தளமான தெளஹீது கொள்கைக்கு ஊறு விளைவிக்கும் தங்கள் பிரச்சாரத்தை நான் பத்திரிகையாளன் என்ற முறையில் எனக்கு வந்த தகவல்படி நான் கண்டித்து எழுதாமல், வேறு யார் செய்யப் போகிறார்கள்? எனக்கு தங்களிடம் தனிப்பட்ட விரோதமோ, குரோதமோ கிடையாது. நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். “மார்க்கப் புறம்பான செயல் நடக்கக் கண்டால் கைகளால் தடுக்கவும், முடியாவிட்டால் நாவினால் தடுக்கவும், அதுவும் முடியாவிட்டால் மனதினாலாவது தவறு என்று வருந்தி விலகிக் கொள்ளவும். இது ஈமானின் இறுதி நிலை” (முஸ்லிம் முஅத்தா, அபூதாவூது, திர்மிதி, நஸயீ) நான் முஸ்லிம் என்ற முறையிலும், பத்திரிகையாளன் என்ற முறையிம் தங்களது கருத்து தெளஹீதை தகர்க்கக் கூடியது. வழிகேட்டுக்குக் கொண்டு செல்லும் பாதை என்று மக்களுக்கு காண்பித்ததில் நான் எந்த தவறும் செய்யவில்லை. தங்களது தவறுகளை உணர்ந்து (மேற்கூறிய குர்ஆன், ஹதீஸ்களை, படித்த பிறகு) திருத்தி அல்லாஹ்விடம் தெளபா செய்து மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள். தங்களுக்கு மேலும் என் கூற்றுக்கு ஆதாரங்கள் தேவைப்பட்டால் இதோ தமிழ்நாட்டிலுள்ள பெரிய அரபி மதரஸாக்களின் ‘பத்வா’ – மார்க்கத் தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறேன்.

கேள்வி : தர்காக்கள், அவ்லியாக்கள் முன் “யாகவுஸ் யாமுஹ்யத்தீன்” என்று அழைத்து, அவர்கள் தங்கள் ஹாஜத்துக்களை, தேவைகளை நிறைவேற்றுவதாக நம்பி ஒரு முஸ்லிம் வேண்கோள் வைப்பது, கூப்பிடுவது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?  இந்த நம்பிக்கை உடையவரின் பின்னால் தொழுகை கூடுமா?

பதில் : 1, லால்பேட்டை மன்பஉல் அன்வார் மதரஸாவின் பத்வா (மார்க்கத் தீர்ப்பு) பத்வா நம்பர் : 1681, 23-8-82.

யாகவுஸ் யாமுஹ்யத்தீன் யாசைகு அப்துல் காதர் ஜைலானி போன்ற வஜீபாக்களை இமாம்களானாலும், மற்றவர்களானாலும் சரியே ஓதுவதும், நம்பிக்கை கொள்வதும் கூடாது. விலக்காகும் (ஹராம்).

2. வேலூர் பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபி மதரஸாவின் பத்வா – (13.8.1982) அல்லாஹ் ஒருவனட், அவன் அனைத்திம் பரிபூரணமானவன். அவன்தான் அனைவரையும் படைத்தான். அவன்தான் அனைவருக்கும் உதவி அளிக்கிறான். எல்லாப் படைப்பினங்களின் சத்தங்களை ஒரே நேரத்தில் கேட்கிறான். அவனே உதவியும் செய்கிறான். ஆகவே, அல்லாஹ்வை அதிகம் திக்ரு செய்யுங்கள். அவனிடமே தனது தேவைகளைக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் படைப்பினங்களிடம் ஷிர்க் செய்ய வேண்டாம். ஈமானைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஷிர்க் குப்ரை விட்டு தவிர்த்துக் கொள்ள வேண்டும். வினாவில் கூறப்பட்டது  கூடாது. இமாம் அவ்வாறு செய்தால் அவரை பின்பற்றுவது கூடாது.

3. ஈரோடு மதரஸா தாவூதிய்யாவின் பத்வா : முஹ்யத்தீன் ஆண்டகை(ரஹ்), அவர்கள், யார் எங்கிருந்து அழைத்தாலும் அதைக் கேட்கிறார்கள். அங்கு ஆஜராகி அவர்களது தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் என்ற மூட நம்பிக்கை இஸ்லாமியக் கொள்கைக்கு முரண்பட்டதாகும். யார் எங்கிருந்து அழைத்தாலும் அதைக் கேட்டு அவைகளை நிவர்த்தி செய்து வைப்பது அல்லாஹ் ஒருவனுக்கே உரிய தன்மையாகும்.

ஆதாரம் : மஜ்மூ அத்துல் பத்வா, பாகம் 1, பக்கம் 73.

மெளலவி : நைனார் முகமது,

மெளலவி : முகம்மது ஷரிப் காசிமி

மெளலவி : முகம்மது இல்யாஸ்

மெளலவி : அப்துர் ரஹ்மான்

மேற்கண்ட மார்க்கத் தீர்ப்புகளைத் தந்திருப்பவர்கள் தாங்கள் ஏற்றிருக்கும் சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள், பெரும் அரபிக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எங்களை விட ஒருபடி மேலே சென்று அவர்கள் உங்களைப் போன்ற  இத்தவறான கொள்கை படைத்தவர் பின்னால் தொழுவதே கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளதை சிந்தித்துச் செயல்படுங்கள்.

இதற்கு மேல் ஏதாவது ஆதாரம் வேண்டுமா?  தங்கள் கருத்து மெளட்டீக காலத்து வழிகேட்டை உண்டுபண்ணும் கருத்து என்பதற்குக் குர்ஆனிலும், ஹதீஸிலும் இன்னும் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. தங்கள் கருத்து வழிகேடானது என்பதை தாங்கள் இப்போது சிந்தித்து ஒப்புக்கொண்டு, அல்லாஹ்விடம் தெளபா செய்வீர்கள் எனக் கருதுகிறேன். எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை என்னுடையது. ஒப்புக்கொள்வது அல்லது உதாசீனப்படுத்துவது என்பது உங்களைச் சார்ந்தது.

இதற்கப்பாலும் தாங்கள் பிடிவாதம் கொண்டு தெளஹீது கொள்கைக்கு மாற்றமான கருத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டு தாங்கள் குறிப்பிட்டபடி என்மீது அநியாயமாக வழக்கு தொடர்ந்தால் அதை வரவேற்கிறேன். நீங்கள் செயலராக இருக்கும் ஜ.உ.ச. தலைவர் மவ்லவி அபுல் ஹஸன் ஷாதவி அவர்களையே என் கூற்றுக்கு ஆதாரமாக சட்சியம் சொல்ல இன்ஷா அல்லாஹ் அழைக்கவேண்டிவரும். அவர் தெளஹீது கொள்கைக்குப் புறம்பான விஷயங்களைக் கண்டிப்பதில் தயங்கமாட்டார். முஸ்லிம் சமுதாயத்தில் அறியாமையினால் கப்ரு சடங்குகளில் மூழ்கியிருக்கும் மக்கள் இதன் காரணமாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு, வழிகேடான கப்ரு சடங்குகளிலிருந்து விடுபட்டுச் சீர்திருத்தி எந்தத் தேவைகளையும், பிரார்த்தனைகளையும், வணக்கங்களையும் அல்லாஹ்(ஜல்)விடமே கேட்க வேண்டும் என்று புரிந்து கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ள தங்கள் வழக்கு உதவியாக இருக்கும். ஆனால் அவ்வாறு உண்மைக்குப் புறம்பாக அவதூறு வழக்குத் தொடர்ந்தால் அதனால் எனக்கு ஏற்படும் எல்லாச் செலவுகளும் தங்களையே கட்டுப்படுத்தும் என்பதை மட்டும் தங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடத்தை எழுப்ப முயற்சி செய்வது அறிவுடைமை ஆகாது. சிந்தித்துச் செயல்படவும்.

தங்கள் அன்புச் சகோதரர்

K.M.H. அபூ அப்தில்லாஹ்

ஆசிரியர்

இடம் : திருச்சி-8.

தேதி : 15.03.1989

*************************************************************************

உண்மைச் சம்பவம்

பக்திப் பரவசம் பாரீர்!

(சிரிக்காதீர்கள்! சிந்தியுங்கள்!!)

பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து மேல் விஷாரத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதனைத் திறந்து வைக்க கண்ணியமிக்க மக்கா கஃபத்துல்லாஹ்வின் இமாம் ஷெய்கு முஹம்மது இப்னு அப்துல்லாஹ் அஸ்-ஸபீல் அவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பள்ளியின் திறப்பு விழா 10.2.1989ல். அன்று மஃரிபு தொழுகைக்கு ஷெய்கு இமாமத் செய்து பள்ளியைத் திறந்து வைப்பதாகத் திட்டமிடப்பட்டது. 10.2.1989 வெள்ளியன்று சென்னை வந்தடைந்தார் ஷெய்கு அவர்கள். அவர் மேல் விஷாரம் – செல்வதற்கு முன் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள வாலாஜா பள்ளியில் குத்பா (பயான்), ஜும்ஆத் தொழுகை நடத்தி வைக்க வேண்டப்பட்டது. ஷெய்கு அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

10.2.1989 வெள்ளி ஜும்ஆத் தொழுகை மக்கா கஃபத்துல்லாஹ் பள்ளியின் இமாம் ஷெய்கு முஹம்மது இப்னு அப்துல்லாஹ் அஸ்-ஸபீல் நடத்தி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. பெருநாள் தொழுகையைப் போன்று பெரும் கூட்டம் அப்பள்ளியில் குழுமியது. மக்கா ஷெய்குவின் பயானைக் கேட்க எல்லோரும் ஆவலோடு வந்திருந்தனர். ஜும்ஆத் தொழுகையை நடத்த வந்த ஷெய்கு அவர்கள் அரபியில் குத்பா கொடுத்தார்கள். முதல் குத்பாவில் இஸ்லாத்தின் அடித்தளமான ஏகத்துவத் (தெளஹீ)தைப் பற்றி பேசினார். இரண்டாவது குத்பாவில் இன்றைய முஸ்லிம்கள் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டுமென ‘சமுதாய ஒற்றுமையைப்’ பற்றி பேசினார். அவரது குத்பா பிரசங்கம் தெளிவாகவும், இரத்தினச்சுருக்கமாகவும், குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அழகாக அமைந்தது. ஆனால் அச்சொற்பொழிவுகள் நமது மக்கள் விளங்கும் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை.

குத்பா பயானுக்குப் பின் ஜும்ஆத் தொழுகை இரண்டு ரகாஅத்துக்கள் தொழ வைத்தார் கஃபத்துல்லாஹ் இமாம் தொழுகை முடிந்தது. தொழ வைத்த கஃபத்துல்லாஹ், இமாம் அவர்கள், நபி(ஸல்) வழியில் திரும்பி உட்கார்ந்து தஸ்பீஹ்களை ஓதிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பர்லானத் தொழுகைக்குப் பின்னும் இமாம் ஒரு துஆ ஓத, பின் தொழுதவர்கள் அனைவரும் (புரிந்தோ, புரியாமலோ) ஆமீன் போடும் இந்நாட்டு முஸ்லிம்கள் வழக்கப்படி மக்கா ஷெய்கும் துஆ ஓதுவார் என மக்கள் எதிர்பார்த்தனர். எனவே, அவரது துஆ அனைவருக்கும் கேட்கும்படியிருக்க அவருக்கு முன்னால் மைக் (ஒலி பெருக்கி) வைக்கப்பட்டது.

தனக்கு முன்னால் மைக் வைக்கப்பட்டதைக் கண்ட மக்கா ஷெய்கு அவர்கள், தான் செய்த பயான் பேதவில்லை. இன்னும் பயான் செய்யத்தான் மைக்கை வைத்திருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டார். பர்லானத் தொழுகைக்குப் பின் ஓதப்படும் கூட்டு துஆ நபி வழியல்ல. நபி(ஸல்) அப்படி ஒரு பழக்கத்தைக் காட்டித் தந்ததற்கு ஆதாரமேயில்லை. பின் வந்தவர்களால் புகுத்தப்பட்ட புதுமை (பித்அத்) வழி அது என்பது உலக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்ததே! ஒருசில தக்லீத்வாதிகளைத் தவிர அனைவருக்கும் இது தெரிந்த உண்மை. கஃபத்துல்லாஹ்விலும் ஏன்? பல்வேறு அரபு நாடுகளின் பள்ளிகளிலும் இப்பழக்கமில்லை. ஹஜ் செய்து வந்திருப்பவர்கள் இதனை நேரில் கண்டிருக்கலாம்.

எனவே, மக்கா ஷெய்கு அவர்கள் அப்படி ஒரு துஆ ஓதுவதைப் பற்றியே நினைக்கவில்லை. மக்கள், தான் இன்னும் பயான் செய்ய வேண்டுமென நினைக்கிறார்கள் என்று உண்மையான (இஃலாசான) எண்ணத்துடன் தனது பயானை அரபியில் ஆரம்பித்தார். பர்லானத் தொழுகைக்குப் பின் அரபியில் கூட்டு துஆ கேட்டே பழக்கப்பட்ட நமது முஸ்லிம் தோழர்கள், அவர் பயான் செய்ய ஆரம்பித்து மூச்சுவிடும் இடமெல்லாம் ஆமீன்! ஆமீன்! என உரக்கக் கூறலாயினர். இதனைக் கண்டு துனுக்குற்ற மக்கா ஷெய்கு என்ன செய்வதெனத் தெரியாமல் இப்படி செய்வதெல்லாம் தவறாகும்” எனப் பொருள் படக் கூறியுள்ளார். பாவம்! அதையும் அவர் அரபியில் கூறவே அதற்கும் ஆமீன் போடலாயினர். எனவே, ஷெய்கு மன வேதனையுடன் தனது பயானை முடித்தார்.

அடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள் நமது தமிழக  முஸ்லிம்களின் பக்தி பரவசத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறத. ஜும்ஆத் தொழுகை முடிந்ததும் அனைவரும் இமாம் அவர்களுக்கு கைகுலுக்கும்(மூஸாபஹா) நமது நாட்டு வழக்கப்படி எல்லோரும் கைகுலுக்க முண்டியடித்து வந்தனர். சாதாரண இந்திய இமாம்களுக்கே அன்று கைகுலுக்க அதிகமானவர்கள் வருவர். அதுவும் கஃபத்துல்லாஹ் இமாம் என்றால் கேட்கவும் வேண்டுமோ? எப்படியாவது அவரிடம் கைகுலுக்க வேண்டும். கண்ணியமிக்க கஃபத்துல்லாஹ் இமாம் அரபி ஷெய்கு அவரிடம் கைகுலுக்குவதால் பெரும் பரக்கத், ரஹ்மத் இறங்கும் எனவும் பலர் முண்டியடித்தனர்.. பாவம் இப்படிப்பட்ட ஒரு பழக்கத்தைக் காணாத கஃபத்துல்லாஹ் இமாம் தன்னால் முடிந்தவரை கைகுலுக்கியுள்ளார். கூட்டம், நெரிசலைக் கண்டவர்கள் அவரை எப்படியாவது அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அவருடன் நேரில் கைகுலுக்க முடியாதவர்கள் அவரது உடலையாவது தொட்டுவிட வேண்டுமென முண்டியடித்து, அவரது உடவில் கை, முதுகு, நெஞ்சு, தோள் எனத் தடவலாயினர். அப்படியும் முடியாதவர்கள் அவரது உடைகளையாவது தடவ முயற்சித்துள்ளனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமையால் அவர் அணிந்திருந்த தொப்பி, துண்டு போன்றவை காணாமல் போயின. கஃபத்துல்லாஹ்வை மூடியுள்ள கருப்புத் துணியைக் கொண்டு வந்து பிரோம் போட்டு வீட்டில் மாட்டி வைப்பதாலட் பரக்கத் ஏற்படும் என நம்பும் நமது தமிழக முஸ்லிம்கள் கஃபத்துல்லாஹ் இமாமின் துணியை சும்மா விடுவார்களா? எனவேதான் அவரது தொப்பி, துண்டுகளைப் பறித்துப் போயினர். போலும்! அல்லாஹ் அறிந்தவன். வெகு சிரமத்துடனட் ஷெய்கு வெளியே வந்தார்.

கஃபத்துல்லாஹ் இமாம் “பீர்”  “தங்கள்” ஆக்கப்பட்டார் :

மேல் விஷாரம் பற்றி திறப்புக்கான பயான் மேடையில் அமர்ந்திருந்த கஃபத்துல்லாஹ் இமாம் அவர்களுக்கு அருந்த பாணம் கொடுக்கப்பட்டது. அவர் சிறிது குடித்துவிட்டு கீழே வைக்க, உடனே அப்பானம் பாத்திரத்துடன் காணாமல் போய்விட்டது. தேடியபோது கஃபத்துல்லாஹ் இமாம் அவர்களின் எச்சில் பட்ட பானம் பலரின் கைகளில் தீர்த்தமாகப் பரிணமித்துக் கொண்டிருந்தது. ஒரு சில முக்கியமானவர் (மெளலவி)கள்) கூட இதனை மகிமை பொருந்திய தீர்த்தமாக ருசி பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது இச்செயலைக் கண்டு. கஃபத்துல்லாஹ் இமாம் அவர்கள் முகம் சுளித்து நகைத்தார் என்பது வேறு விஷயம்.

(ஒரு வேளை அரபு நாடுகளில் பணம் படைத்தவர்கள், வயதானவர்கள், கற்றவர்களுக்கு ஷெய்கு என்று சொல்லப்படுவதை, நம் பகுதிகளில் தவறாகப் பயன்படுத்தப்படும். தர்க்காவின் ஷெய்கு என்று கருதிக் கொண்டார்கள் போலும்!)

இஸ்லாமிய  தோழர்,  தோழிகளே!

இந்த உண்மைச் சம்பவத்தை உங்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் முஸ்லிம்களை கேலி செய்வது நமது நோக்கமல்ல. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல கற்றுத் தேர்ந்த ஆலிம்கள், அறிஞர்கள் இருக்கிறார்கள். அரபி பாண்டித்யம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். கஃபத்துல்லாஹ் இமாம் அவர்களின் குத்பா பயானை மொழி பெயர்த்து மக்கள் அறியத்தராமல் இருந்தது ஏன்? அங்குதான் விஷயமிருக்கிறது.

கஃபத்துல்லாஹ் இமாம் அவர்கள் குர்ஆன், ஹதீஸை மட்டுமே பேசினார். எந்த தக்லீதையும் அவர் வரவேற்கவில்லை. மாறாக  ஷிர்க், பித்அத்துக்களைச் சாடினார். அவர் சுன்னத் வல்ஜமாஅத்தான ஹனபி, ஷாபிஈ, மாலிக்கி, ஹம்பலி குரூப்பைச் சார்ந்தவரல்லர். மற்றவர்களின் கூற்றுப்படி அவர் கைரு முகல்லிது, குர்ஆன், ஹதீஸ் மட்டும் போதுமெனக் கூறும் ஒரு அடிப்படை தெளஹீதுவாதி, அவரது சொற்பொழிவை மக்களுக்கு மொழிபெயர்த்திருந்தால், பலர் தாங்கள் செய்துவரும் ஷிர்க், பித்அத்துக்கள் பற்றிய ஓரளவு அறிவு பெற்றிருப்பார்கள். அதனைத் தடுக்கவே அவரது பயான் மொழி பெயர்க்கப்படவில்லை போலும்.

மாறாக ஒரு சிலர் குத்பா பயானை எப்படி, எப்போது மொழி பெயர்ப்பது என்று வினவலாம். குத்பாவின்போதே முடியாவிட்டாலும் தொழுகை முடிந்த பிறகாவது செய்திருக்கலாம். உண்மைகளை அறிய இம்மொழிபெயர்ப்பு அவசியமாகியிருக்கும்.

அடுத்து தொழுகைக்குப்பின் கூட்டு துஆ அவசியமானது. அத்துஆ ஓதாவிட்டால் தொழுகை முடிந்ததாக ஆகாது என்று இன்று நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கையைத் தகர்க்க இம்மவ்லவிகள் முன்வராதது ஏனோ? யாமறியோம். அல்லாஹ் நன்கறிவான். வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து சென்ற கஃபத்துல்லாஹ் இமாம் போன்றவர்கள் நம்மைப் பற்றியும், நமது முஸ்லிம் அறிஞர்களைப் பற்றியும் என்ன நினைப்பார்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள். முஸ்லிம்களை குறை கூறுவதைவிட இங்குள்ள இஸ்லாமிய அறிஞர்கள் ஒழுங்காக இஸ்லாத்தை மக்களுக்குக் காட்டவில்லை என்றுதானே நினைப்பார்கள். இதனால் நம்மனைவருக்கும் இழுக்கல்லவா? யோசியுங்கள்.

அடுத்து, சென்ற வருடத்திய ஜமாஅத்துல் உலமா கூட்டத்தில் சுன்னத் வல்ஜமாஅத் கூட்டத்தைச் சாராதவர்களை பள்ளிக்குள் பயான் செய்யவிடக் கூடாது. அவர்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டுமெனத் தீர்மானம் இயற்றப்பட்டது. சுன்னத் வல்ஜமாஅத் கூட்டத்தைச் சாராத – இவர்களாலேயே வஹ்ஹாபி என அழைக்கப்படும் – கஃபத்துல்லாஹ் இமாம் அவர்களை உங்களது பள்ளியில் பயான் செய்ய வைத்து, அவரது பயானையும் துஆவாக்கி ஆமீன் போட்டீர்களே! உங்களது தீர்மானம் என்னவாயிற்று?! அவரை நீங்களே “பீர்” “தங்களாக்கி” மகிமைப்படுத்தினீர்களே! இதுவா இஸ்லாம்?

அவருடன் கைருலுக்குவதாலும், அவரைத் தொட்டு முந்துவதாலும் பலன், நன்மை கிடைக்குமென நம்பியுள்ள முஸ்லிம்களைத் திருத்த முன் வாருங்கள். உண்மையான இஸ்லாத்தை குர்ஆன், ஹதீஸ்களில் உள்ளத உள்ளபடி உரைக்க முன்வாருங்கள். அதற்காக எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் சந்திக்க சங்கநாதம் முழங்குங்கள். அப்போதுதான் ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள் என உரிமை கொண்டாட முடியும்.

இல்லையெனில் :

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் இந்தியாவிலிருந்து அனைத்து முஸ்லிம்களும் பாகிஸ்தான் சென்றுவிட்டனர். இப்போது இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், அதற்குப்பின் மதமாறியவர்கள் என்று அரபு நாடுகளில் இன்றும் பலர் நினைப்பதுபோல் ஆகிவிடும். இதுபோன்ற பித்அத், அநாச்சாரங்கள், அவர்கள் கூறுவதுபோல் “முந்தாநாள் முஸ்லிமான முஸ்லிம்கள் இவர்கள்” என்பதை உலகுக்குப் பறைசாட்டும். சிந்தியுங்கள்! சீர்படுங்கள். அல்லாஹ் நமது முயற்சிகளுக்கு வலுவூட்டுவானாக! ஆமீன்!

********************************************************************************************************************************************************************************

ஐயமும்!  தெளிவும்!!

ஐயம் : சிலர் “மிஃராஜ்” இரவு என்பதாக ரஜபு மாதத்தின் 27வது இரவையும், “பராஅத்” இரவு என்று ஷஃபான் 15வது இரவையும் ஏற்படுத்திக் கொண்டு இவ்விரவுகளில் தமது இஷ்டத்திற்கு பலவகையான நஃபிலானத் தொழுகைகளைத் தொழுவதோடு, மிஃராஜ் பராஅத்தை முன்னிட்டு நோன்பு பிடிக்கவும் செய்தார்கள். குறிப்பாக ஷஃபான் 15வது இரவில் நீண்ட ஆயுளுக்காகவும், பலாமுஸீபத்துகள் நீங்குவதற்காகவும், ரிஜ்கு பரகத்தாக கிடைப்பதற்காகவும் மஃரிபுக்குப் பின் மும்முறை யாஸீன் ஓதி துஆ கேட்கிறார்கள். மேற்காணும் இவற்றிற்கெல்லாம் குர்ஆன், ஹதீஸின்படி ஏதேனும் ஆதாரமுண்டா? எஸ்.எச்.எம்.நவலி,  இலங்கை, ரைஹானா, பொன்மலை.

தெளிவு : மிஃராஜ் ரஜபு பிறை 27ல் தான் நடைபெற்றது என்பதற்கு முறையான ஆதாரம் எதுவுமில்லை. இமாம் ஜுஹ்ரீ, உர்வா ஆகியோர் ரபீஉல் அவ்வலில் நடந்ததாகவும், மற்றும் சிலர் வேறு மாதங்களில் நடந்ததாகவும் கூறுகிறார்கள். (தப்ஸீர் இப்னுகதீர்) ஆகவே நபி(ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் நடந்தது உண்மை. அதனை ஏற்றுக்கொள்வது ஒரு முஸ்லிமின் கடமை. ஆனால் அது ரஜபு மாதத்திலா, ரபீஉல் அவ்வல் மாதத்திலா? அது எப்போது? எந்த விதத்தில் நிகழ்ந்துள்ளது? என்பது பற்றிய சர்ச்சை நமக்குத் தேவையில்லை. சில ஏடுகள் மிஃராஜை இறை சந்திப்பு என்று கூறுவது தவறு. மிஃராஜ் பயணத்தில் நபி(ஸல்),  அல்லாஹ்வை நேரடியாகப் பார்க்கவில்லை என்பதே சரி.

இவ்வாறே பராஅத் இரவு பற்றி அலசிப் பார்க்கும்போது, அப்படி ஒரு இரவு உண்டு. அது புனிதமிக்க இரவு என்று கூறினார்கள் என்பதற்கு குர்ஆன், ஹதீஸின் வாயிலாக எவ்வாதாரமுமில்லை. குர்ஆனில் “பராஅத்” என்று 9-ம் சூரா (அத்தியாயம்) துவங்குகிறது. அதற்கும் இந்த இரவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஸஹீஹான ஹதீஸ்களில் “பராஅத் இரவு” என்ற பெயர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஷஃபானிலிருந்து மறு ஷஃபான் வரை மரணிப்படிவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகிறது என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸும் முறையானதல்ல.

மேலும் இவ்விரு இரவுகளில் விசேஷத் தொழுகை தொழ வேண்டுமென்றோ, வேறு எந்த வகையான உபரியான அமல்கள் செய்ய வேண்டும் என்றோ, இவ்விரு இரவுகளை முன்னிட்டு அன்றைய தினம் நோன்பு பிடிக்க வேண்டும் என்றோ, நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதற்கு ஸஹீஹான ஹதீஸ்களில் அறவே ஆதாரமில்லை. அது மட்டுமின்றி அவ்வாறு ஆதாரம் இருப்பதாக எவராலும் காட்டவும் முடியாது என்பதை உறுதியாக கூறுகிறோம்.

மேற்குறிப்பிட்ட வகையில் பராஅத் இரவில் மும்முறை வானில் ஓதி துஆ செய்ய வேண்டும் என்பதற்கான ஆதாரமும் ஸஹீஹான ஹதீஸ்களில் கிடையாது. (பராஅத் இரவு என்றில்லாமல்) பொதுவாக இரவில் யாஸீன் ஓதுபவர் அதிகாலையில் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக எழுவார் என்றும், இவ்வாறே இரவில் “துகான்” என்ற சூராவை ஓதுபவரும் அதிகாலையில் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக எழுவார் என்றும் அபூஹுரைரா(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டதோர் ஸஹீஹான ஹதீஸ் “அபூயஃலா” வெனும் ஹதீஸ் தொகுப்பில் காணப்படுகிறது. நல்ல அமல்தான் என்று எதையும், யாரும், எப்படியும் செய்யலாம் என்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

நாம் கட்டளையிடாத ஒரு செயலை ஒருவர் (தன்னிச்சையாகச்) செய்தால் அது மறுக்கப்படவேண்டியதொன்றாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அன்னை ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஐயம் உலகத்தின் ஆதிமொழழி என்ன? முதலாவதாக ஆதம்(அலை) அவர்கள் பேசிய மொழி என்ன? எம்.ஏ.ஜின்னா, பொரையார்.

தெளிவு : ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை வெளியிட உதவும் ஒரு வழியே மொழியாகும். உலகத்தின் ஆதி மொழி என்ன? ஆதம்(அலை) பேசிய மொழி என்ன? என்று தெரிந்து கொள்வதால் பயன் எதுவுமில்லை. இதனைத் தெரிந்து கொள்ளாததால் நமது ஈமானில் எந்த குறையும் ஏற்படப்போவதில்லை.

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தத் தமிழ் என்றும், ஆதம்(அலை) பேசியது தமிழ் மொழிதான் எனவும் ஒரு சிலர் கூறித் திரிவதற்குக் குர்ஆன், ஹதீஸில் ஆதாரமில்லை. மனிதன் தன் கருத்துக்களை பிறருக்கு உணர்த்த உண்டாக்கும் ஒலியே மொழியாகும். இதற்குமேல் மொழி பற்றி பெருமைப் பேசுவது வீணாகும். இப்படிப்பட்ட சர்ச்சைகளில் ஈடுபடுவதால் உலக முஸ்லிம்களிடையே மொழிப்பற்றால் விரிசல்கள் ஏற்படத்தான் வாய்ப்பேற்படுகிறது.

அல்லாஹ்வுக்கு எல்லா மொழிகளும் தெரியும். நாம் கேட்கும் பிரார்த்தனைகள் எந்த மொழியிலிருந்தாலும், எவ்வித மொழி பெயர்ப்பாளருமின்றி விளங்கும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ் என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, எல்லா மொழியும் அல்லாஹ்வுக்குரியது என முடிவு கொள்வோமாக! அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம் : ஒருவரிடம் தான் கடனாக பணம் கொஞ்சம் வாங்கினேன். அக்கடனைத் திருப்பித் தரும் வரை கடன் கொடுத்தவர் என்னிடம் ஏதாவது சாப்பிட்டாலும், எனது வீட்டின் நிழலில் நின்றாலும் இவைகள் வட்டியாகுமா? ஏ.எல்.ஏ. அப்துஸ்ஸமது, ரியாத்.

தெளிவு : உங்களில் ஒருவர் மற்றொருவருக்குக் கடன் கொடுக்கிறார். கடன் வாங்கியவர் கடன் கொடுத்தவருக்கு ஒரு பொருளை அன்பளிப்பாகத் தருகிறார். அல்லது தனது வாகனத்தில் இலவசமாகப் பிரயாணம் செய்ய அனுமதிக்கிறார் எனில் கடன் கொடுத்தவர் அந்த அன்பளிப்பைப் பெறவோ, அவரது வாகனத்தில் இலவசமாகப் பிரயாணம் செய்யவோக் கூடாது. ஆனால், இவ்விருவரும் இதுபோன்ற பரோபகாரத்தை முன்பே செய்பவர்களாக இருந்தாலேயன்றி”. அறிவிப்பு : அனஸ் பின் மாலிக்(ரழி), ஆதாரம் : இப்னுமாஜ்ஜா, பைஹகீ.

மேலும் விளக்கத்தைப் பெற பிப். 89 இதழில் “உணரப்படாத தீமைகள்” எனும் தலைப்பிலுள்ள “வட்டி” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

ஐயம் : முஸ்லிம்களுக்கு மாற்று மதத்தைச் சேர்ந்த டாக்டர் கத்னா செய்யலாமா?   ஏ.எஸ்.எம்.சல்மீ, ரியாத்.

தெளிவு : முஸ்லிம் குழந்தைகளுக்குக் கத்னா செய்வதை ஒரு அழகிய சுன்னத்தாக்கினார்கள் நபி(ஸல்) அவர்கள்.  ஆனால் அந்த கத்னாவை ஒரு முஸ்லிம் (டாக்டர்)  தான் செய்யவேண்டுமென்ற ஷர்த்து எங்கிருப்பதாக நாம் காணவில்லை. முஸ்லிமல்லாதவரால் அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம் : இலங்கையில் திருமண நிகழ்ச்சிக்குப் பின் 7 நாட்களுக்குள் முதலிரவில் புதுமணத் தம்பதிகள் உடலுறவு கொள்டபின் மறுநாள் இரவு (மெளலூத்) சாப்பாடு தருகிறார்கள். மெளலூது ஓதுபவர். லெப்பைமார்கள் எல்லாம் வந்து சாப்பிட்டுவிட்டு ரூ.5, 10 என அன்பளிப்பாக வாங்கிச் செல்வார்கள்.  மெளலூது ஓதாமல் சாப்பாடு கொடுப்பதற்கு ஆதாரம் இருக்கின்றதா?   ஏ.எஸ்.எம்.சல்மீ, ரியாத்.

தெளிவு : இலங்கையில் நடக்கும் இந்த அனாச்சாரம் இஸ்லாத்தில் பித்அத் (புது கண்டுபிடிப்பு) ஆகும். வருந்துகிறோம். தங்களுக்கு ரூ.5, 10 வேண்டுமென்பதற்காக உண்மையை உரைக்காமலிருக்கும் அம்மெளலவிகளுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!.

திருமணம் முடித்த புதுத் தம்பதிகள் 7 நாட்களுக்குள் முதலிரவு அனுபவிக்க வேண்டுமென்ற வரைமுறையில்லை. மணமுடித்த இரவே கூட முதலிரவில் கூடலாம். மறுநாள் வலீமா என்றப் பெயரில் மணமகன் விருந்தளிக்கலாம்.

அப்துர்ரஹ்மான் இப்னு அலஃப்(ரழி) என்ற நபித்தோழர் காலை பஜ்ர் தொழுகைக்கு வருகையில் அவரது சட்டையில் சந்தனக் கலர் இருப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்கிறார்கள். தனக்கு முந்திய இரவு திருமணம் நடந்ததாகக் கூறுகிறார்கள். ஒரு ஆடேனும் அறுத்து வலிமா விருந்தளிக்குமாறு நபி(ஸல்) கூறினார்கள். அதன்படி நபித்தோழரும், வலிமா விருந்தளித்தார்கள். இந்த ஹதீஸை நாம், முஸ்னத், அஹ்மது போன்ற நூல்களில் காணலாம். நபி(ஸல்) அவர்கள் போர் பிரயாணத்தில் சபிய்யா(ரழி) அவர்களை மணமுடித்து மறுநாள் பிரயாணத்திலேயே வலீமா விருந்தளித்ததற்கும், இப்னு சஃத், இப்னு அஸாகீர் போன்ற நூல்களில் ஆதாரமிருக்கிறது. வேறு எந்த சடங்குகளும் நடக்கவில்லை. நடந்ததற்கு ஆதாரமுமில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம் : மாட்டின் இறைச்சியை, தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டால் மக்ரூஹ் என்று இலங்கையில் உள்ள மெளலவிகளட் கூறுகிறார்கள். இது உண்மையா? ஹதீஸ் ஆதாரத்துடனட் விடை தாருங்கள்.   ஏ.எஸ்.எம்.சல்மீ, ரியாத்.

தெளிவு : அல்லாஹ் தன் நல்லடியார்களுக்கு (இவ்வுலகில் செல்வச் செழிப்பால்) வெளியாக்கியுள்ள (ஆடை) அலங்காரத்தையும், தூய்மையான (உயர்த்த) ஆதாரத்தையும் (ஹராமெனவும், பக்ரூஹ் எனவும்) தடுப்பவன் யார்? என்று (நபியே!) கேட்பீராக!  (அல்குர்ஆன் : 7:32)

அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விளக்கிக் கொண்டீர்?  என (66:1) நபி(ஸல்) அவர்களையே அல்லாஹ் கண்டிப்பதை அந்த மெளலவிகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.

இலங்கையில் “உயிர்வதைக் கூடாது” என்பதைக் கொள்கையாகக் கொண்ட புத்த மதத்தவரின் கொள்கைப்படி “பசுவதைத் தடுப்பின் அடிப்படையில்” என்பதைக் கொள்கையாகக் கொண்ட புத்த மதத்தவரின் கொள்கைப்படி, “பசுவதைத் தடுப்பின்” அடிப்படையில் அவர்களை மகிழ்விக்க  அம்மெளலவி கூறியுள்ளார் என நினைக்கின்றோம். அல்லாஹ்வும், ரசூல்(ஸல்) அவர்களும் அனுமதித்ததை ஹராமெனவும், மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) என்றும் தடுப்பது பெரும் பாவமான காரியம். இதனை அவருக்கு எடுத்துக் கூறி விளங்கச் செய்யுங்கள். உடல் நலனை அனுசரித்து தொடர்ந்து சாப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்வது நலம். நம்மனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்.

உங்களிடம் கேள்வி கேட்டவர் மெளலவி என்பதால் இவ்வளவு விளக்கமாக எழுதியுள்ளோம். அவரை சிறிது ஹதீஸ் நூல்களைப் புரட்டிப் பார்க்கச் சொல்லுங்கள். விளக்கம் பெறலாம். அல்லாஹ் அவருக்கும், நம்மனைவருக்கும் நல்வழிகாட்டுவானாக! ஆமீன்.

ஐயம் : வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவர், அவர் முதலாளி ஹஜ் செய்வதற்காக இனாமாகத் தரும் பணத்தில் ஹஜ் செய்தால் அது பர்லா? நஃபிலா? ஏ.அஹ்மது மகீம், தோஹா, கத்தர்.

தெளிவு : முதலாளி, ஹஜ் செய்வதற்காக வேலையாளுக்கு இனாமாகப் பணம் தந்தால் ஹஜ் செய்வது கூடும். ஹஜ் செய்பவர் ஹஜ் செய்ய வசதி பெறுகிறார்.

ஹஜ் செய்வதற்குரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். (3:97)

இக்குர்ஆன் வசனப்படி அவருக்கு ஹஜ்ஜுக்கான வசதிகள் கிடைக்கிறது. அவர் இதுவரை ஹஜ் செய்யாமலிருந்தால் அது அவருக்கு(கடமை) பர்லாகிறது. முன்பே ஹஜ் செய்திருந்தால் இது அவருக்கு நஃபிலாகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம் : எனது சகோதரர் வியாபாரம் செய்கிறார். அவர் என்னிடம் ஒரு தொகையைப் பெற்று அதை இரு வருடங்கள் கழித்துத் தருவதாகக் கூறி, அதற்கு மாதா மாதம் கொஞ்சம் லாபமாகத் தந்தால் தருவதாகக் கூறி, அதற்கு மாதா மாதம் கொஞ்சம் லாபமாகத் தந்தால் அது ஹலாலாகுமா? ஏ.அஹ்மது மகீம், தொஹா, கத்தர்.

தெளிவு : உங்களது வியாபாரத் தோழருக்கு நீங்கள் கடன் கொடுத்து அவ்வியாபாரத்தில் ஏற்படும் லாப, நஷ்டத்தில் பங்கேற்க தயார் என்றால் அது ஹலாலாகும். லாபத்தில் மட்டும் பணம் தரவேண்டும். அது மாதாமாதம் ஒரு  குறிப்பிட்ட தொகைத் தரவேண்டும் என்று சரத்துக்களை இட்டால் அது வட்டியாகும்.

மாதாமாதம் அவர் தரும் பணத்தை வாங்கத் தயாராகும் நீங்கள், சில மாதங்கள் லாபம் கிடைக்காமையால் தராமலிருந்தாலும் ஏற்க தயாராக வேண்டும். வருடக் கடைசியில் நஷ்டம் ஏற்பட்டிருந்தால் நீங்கள் கொடுத்த பணத்திற்கான நஷ்டத்தையும் கழித்து ஏற்கத் தயாராக வேண்டும். இதற்கு நீங்கள் தயாரானால் அப்பணம் ஹலாலாகும். பிப். 89 இதழில் உணரப்படாத தீமை – வட்டி கட்டுரையையும் பார்வையிடவும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம் :  பழிக்குப்பழி வாங்க மார்க்கத்தில் அனுமதியுண்டா? அல்-ஹாஜிரா, அத்திக்கடை.

தெளிவு : உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும், காயங்களுக்குச் சமமான) காயங்களாகவும், நிச்சயமாகப் பழிவாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும் ஒருவர் (பழிவாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரம் ஆகும்.  (5:45)

பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற சராசரி மனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ், பழிக்குப்பழி வாங்குவதை மேலே கண்ட வசனத்தில் அனுமதிக்கிறான். இருப்பினும் சிறப்பானது “மன்னித்து மறந்து அனுமதிக்கிறான்” எனவும் எடுத்துரைக்கிறான் அல்லாஹ், தாங்கள் சராசரி மனிதனாக இருக்க விரும்புகிறீர்களா? சிறந்தவராக  இருக்க விரும்புகிறீர்களா? என்பதை நீ்ங்களே முடிவு செய்யுங்கள். அல்லாஹ் நேர்வழி காட்ட போதுமானவன்.

ஐயம் : மாமியார், மருமகள் சண்டைகளை எப்படி தீர்த்து வைப்பது? அல்ஹாஜிரா, அத்திக்கடை.

தெளிவு : நமது பெண்களிடம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான இஸ்லாமிய அறிவு இல்லாமையே இது போன்ற சில்லரைச் கண்டைகளுக்கு காரணமாகும். ஓரளவு குர்ஆன், ஹதீஸ், அடிப்படையிலான இஸ்லாமிய அறிவிருந்தால் அவரவருக்குரிய உரிமைகளை, கடமைகளை, அல்லாஹ், ஆகிரத் மீதுள்ள பயத்தில் செய்வார்கள் பிரச்சனைகள் வராது.

எனவே தமது இஸ்லாமியப் பெண்மணிகளுக்கு இஸ்லாமிய அறிவை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் அடிக்கடி போதிக்க வசதி செய்யுங்கள். இந்த மாமியார் – மருமகள் சண்டை மட்டுமில்லை. எல்லாச் சண்டைகளும் நின்றுவிடும். அல்லாஹ் இம்முயற்சிக்கு உதவியளிப்பானாக!

ஐயம் : வேதங்களுடைய பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம். (அல்குர்ஆன் 5:5) என அல்லாஹ் கூறுகிறான். இதன் அடிப்படையில் கிறித்துவப் பெண்களை நாம் மணமுடிக்கலாமா? ஏ.உபைதுர்ரஹ்மான், தமாம்.

தெளிவு : இதற்குத் தெளிவான பதிலை நாம் ஜூலை 1987 இதழில் வெளியிட்டோம். அதற்கு வந்த விமர்சனங்களையும் ஆதாரப்பூர்வமாக நாம் விளக்கி 1987 ஆகஸ்ட் இதழில் கொடுத்துள்ளோம். தயவு செய்து பார்வையிடவும்.

ஐயம் : ஒருவர், குர்ஆனை அவர் மொழியில் ஓதி விளங்கி அமல் செய்கிறார். அரபி மொழியில்  பார்த்து ஓதத் தெரியாது. இதற்கு தண்டனை உண்டா? குர்ஆனை அரபி மொழியில் ஓதத் தெரியாதவருக்கு தண்டனை உண்டென ஒருசிலர் வாதிடுகின்றனர். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விபரம் தரவும். ஏ.உபைதுர் ரஹ்மான், தமாம்.

தெளிவு : அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் இதை நினைத்து நல்லுணர்வு பெறுவதற்காகவும் பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை (நபியே!) உம்மீது இறக்கினோம். (38:29)

மக்கள்  இதைக் கொண்டு எச்சரிக்கைப்படுவதற்காகவும், …………….. அறிவுடையோர் உபதேசமு(ம் நல்லுணர்வு)ம் பெறுவதற்காகவும் (அல்லாஹ் அறிவித்த) நல்லறிவிப்பாகும். (14:52)

இவ்வசனங்கள் மூலம் “குர்ஆன்” நமக்கு அல்லாஹ் அளிக்கும் நல்லுணர்வாகவும், அறிவு, பொக்கிஷமாகவும், (பாவ எண்ணம் வருகையில்) எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது என்பதை அறியலாம்.

இப்படிப்பட்ட அறிவுப் பெட்டகத்தை அல்லாஹ்விடமிருந்து வஹி மூலம் பெற்று வழங்கிய நபி(ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத “உம்மீ” என்பதை அக்குர்ஆனே 7:157,158 வசனங்களில் தெளிவாக்குகிறது. மேலும் அந்த “உம்மீ” நபி(ஸல்) வந்த கூட்டத்தைப் பற்றி விமர்சிக்கையில் கீழ்வரும்படி கூறுகிறான் அல்லாஹ்.

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பிவைத்தான். (62:2)

நபி(ஸல்) அவர்களின் தோழர்களைக் கணக்கிட்டால், லட்சக்கணக்கானவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவினரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். பெரும்பான்மையினர் எழுதப் படிக்கத் தெரியாதவர்(உம்மீ) களாக இருந்தனர் என்பது சரித்திரச் சான்றாகும். அதனையே மேலே கண்ட குர்ஆன் வசனமும் படம் பிடித்துக் காட்டுகிறது. பிலால்(ரழி) போன்ற பெரும் ஸஹாபிகளுக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. அரபி மொழியில் குர்ஆனைப் பார்த்து ஓதத் தெரியாது. எல்லாம் அவர்கள் செவிவழியில் கேட்டு விளங்கியவையாகும். மனனம் செய்ததாகும். நீங்கள் குறிப்பிடும் ஒருசிலரின் வரட்டு வாதத்தின்படி நபித்தோழர்களில் பெரும்பான்மையினருக்கு குர்ஆனை அரபி மொழியில் பார்த்து ஓதத் தெரியாது. எனவே அவர்களுக்கு தண்டனை உண்டு என்கிறீர்களா?

குர்ஆனை எந்த மொழியிலும் ஓதியோ அல்லது கேட்டோ அதன் கருத்தினை விளங்கிச் செயல்படுவதே சாலச் சிறப்பாகும். அதனையே அல்லாஹ் விரும்புகிறான். அதற்கே குர்ஆன், இறக்கப்பட்ட நல்லறிவிப்பு என்பதையும் மேற்கண்ட (38:29,  14:52) வசனங்களில் கண்டோம்.

அரபி மொழியில் பார்த்து ஓதத் தெரியாவிட்டால் தண்டனை கிடைக்குமென வாதிடுவதெல்லாம் குர்ஆனையும், ஹதீஸ் வழிமுறைகளையும் செவ்வனே அறியாதவர்களின் விதண்டாவாதமாகும். அவர்களது சரித்திர அறிவின்மையையும் காட்டுகிறது.

ஆனால் தினசரி ஐவேளைத் தொழுகை போன்ற வணக்கங்களில் குர்ஆன் வசனங்களை, திக்ரு, தஸ்பீஹ்களை அரபியில் ஓத வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டு இருப்பதால், அவைகளை நாம் அரபியில் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். தேவையான சூராக்களை பிலால்(ரழி)  போல நாமும் செவி வழியாகக் கற்றுக் கொண்டாலும் போதுமானது. அரபி மொழியில் பார்த்துத்தான் ஓதிக் கற்க வேண்டுமென்பது கட்டாயக் கடமையில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

***********************************************************************

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : ஸிமாக் இப்னு ஹர்ப் மூலம் அறிவிக்கப்படும் தற்கொலை சம்பந்தப்பட்ட ஹதீஸை பலவீனமானது என்று சொல்லும் நீங்கள் அதே ஸிமாக் இப்னு ஹர்ப் மூலம் அறிவிக்கப்படும் ளுஹர் தொழுகையில் ஓதப்படும் சூரா பற்றிய ஹதீஸை ஏற்றுக் கொள்கிறீர்களே! எப்படி? அஹ்மது இப்ராஹீம், புளியங்குடி.

விளக்கம் : அதற்குரிய காரணத்தைத் தெளிவாகவே அந்நஜாத் அக். 88 இதழ், பக்கம் 50ல் வெளியிட்டுள்ளோம்.

அதாவது “வேறு ஹதீஸ்கள் மூலம் நிலைநாட்டப்பட்ட ஒரு கருத்தை ஒட்டி, ஸிமாக் இப்னு ஹர்ப் இடம்பெறும் ஹதீஸ்கள் வந்தால் “ஹஸன்” என்ற அடிப்படையில் அந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை” என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம்.

ஸிமாக் இப்னு ஹர்ப் மூலம் அறிவிக்கப்படும் தற்கொலை சம்பந்தப்பட்ட ஹதீஸின் கருத்தை வலியுறுத்தும் வேறு ஹதீஸே கிடையாது என்பது தெளிவு. மேலும் அந்த ஹதீஸை மட்டுமே வைத்து “தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை தொழ வைக்கக்கூடாது” என்ற அசலான ஒரு விஷயத்தில் முடிவுசெய்ய வேண்டியுள்ளது. இப்படி அசலான ஒரு விஷயத்தில் முடிவு செய்ய அவரின் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதல்ல என்றே தெளிவுபடுத்தியிருந்தோம்.

ஆனால் அவர் அறிவிக்கும் ளுஹ்ர் தொழுகையில் ஓதப்படும் சூரா அளவு பற்றிய ஹதீஸின் கருத்தை வலியுறுத்தும் வேறு பல ஹதீஸ்கள் இருக்கின்றன. மேலும் அந்த ஹதீஸை வைத்து அந்த குறிப்பிட்ட சூராவை மட்டும்தான் ஓதவேண்டும். வேறு எந்த சூராவையும் ஓதக்கூடாது என்று அசலான எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த வேறுபாடுகளை கவனித்தால் உங்கள் ஐயம் தீர்ந்துவிடும்.

விமர்சனம் : சூராபிகள் பத்திரிகை ஒன்றில் பணத்துக்காகத்தான் நீங்கள் இருவரும் சண்டை போட்டுப் பிரித்து, ஜெய்னுலாப்தீன் தங்களையும், நீங்கள் ஜெய்னுலாப்தீனையும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதாகவும், இன்னும் பல அவதூறுகளையும் சுமத்தி எழுதியுள்ளனர். இதைப் பார்க்கும்போது எங்களைப் போன்றவர்களுக்கு உண்மை நிலை தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் எங்களை கேலி செய்யும் சூழ்நிலைக்கு நாங்கள் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் மிகுதியான நண்பர்களும் ஆளாகியுள்ளனர். உண்மையிலேயே காசுக்காக தீனை விற்கும் கூட்டம், உங்களைப் பார்த்து காசுக்காக தீனை விற்பதாகக் குற்றம் சுமத்துவது மிகுந்த மனவேதனையைத் தருகிறது.  இதற்கு விடிவே இல்லையா? எம்.இ.முஹம்மது இஸ்மாயீல், கொடிக்கால்பாளையம்.

விளக்கம் : மற்றவர்கள் தன்னைத் திருடன் என்று சந்தேகிக்கக் கூடாது என்பதற்காக, திருடனே, திருடன், திருடன் என்று கூவிக்கொண்டு ஓடித்தப்புவது ஒரு வகை கைதேர்ந்த  தந்திரம். அதுபோல் மார்க்கத்தை விற்பவர்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு. மார்க்கச் சேவையில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து,  பணத்திற்காக மார்க்கத்தை விற்பதாகக் கூக்குரலிடுவது வாடிக்கை. அத்தகையவர்களின் பிதற்றல்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. பணத்தைக் குறிக்கோளாக நாம் கொண்டிருந்தால், சவூதி அரசின் கொள்கையான ஸரபிக் கொள்கையையும், பல அரபு நாடுகளில் கோடிக்கணக்கான ரூபாய்களுடன் இயங்கி வரும் இயக்க அமைப்புகளையும் சரிகாணாமல், மிக வன்மையாகக் கண்டிக்கும் துணிவு நமக்கு ஏற்பட்டிருக்காது என்பதைச் சாதாரண அறிவு படைத்தவர்களும் அறிந்து கொள்ள முடியும்.

குராபி மவ்லவிகளை முன்னோடிகளாகக் கொண்டு, இப்போது இந்த மவ்லவிகளும் அதே பல்லவியைப் பாடத் தொடங்கி, வெறும் வாயை மென்றவர்களுக்கு அவலைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் நீங்கள் குறிப்பிட்டுள்ள குராபிப் பத்திரிகையில் வந்த செய்திகள், இவர்கள் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் நான்கு நல்ல மனிதர்களைக் கொண்டு மோசடி, ஊழல் பிரச்சினைகளுக்கு முடிவு கண்டிருக்க முடியும். அதையும் மீறிப் போனால், நீதிமன்றங்களை அணுகி தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டிருக்க முடியும். நாம் கூறுவது நடைமுறை சாத்தியமற்ற ஒரு விஷயம் அல்ல.

ஏதோ சில காரணங்களால் இதில் எதுவுமே சாத்தியமில்லை என்று வைத்துக்கொள்வோம். நாமெல்லாம் மறுமையை உறுதியாக நம்பிச் செயல்படும் முஸ்லிம்கள் அமானித மோசடி செய்தவர்கள் மறுமையில் நிச்சயமாகத் தப்ப முடியாது. தங்கள் நன்மைகளிலிருந்து மோசடி செய்ததற்குரிய பங்கை அவர்களுக்குக் கொடுத்தேயாக வேண்டும். நன்மைகள் இல்லை என்றால் மோசடிக்கு ஆளாகியவர்களின் தீமைகளைச் சுமந்தாக வேண்டும். இழந்தவர்கள் தங்கள் உரிமைகளை எப்படியும் பெற்றுக்கொள்வார்கள். அதற்கு மாற்றமாக அவற்றை அவதூறுகளாகப் பரப்பித் திரிவதால், பிரசுரங்கள், பத்திரிகைகளால் வெளியிடுவதால், இழந்த உரிமைகளை ஒருபோதும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. இது அவர்கள் அறியாததல்ல.

அல்லது மோசடி செய்வதையே தொழிலாகக் கொண்டு, நாம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தால், அவர்கள் தம்மைத் திருத்த முயன்று, அதில் தோல்வியுற்று, அதன்பின் இப்படி பிரசுரங்கள் வெளியிட்டு மக்களுக்கு நம்மை அடையாளம் காட்டினால் அதனை நியாயம் என்று ஏற்றுக் கொள்ளலாம். அப்படியும் இல்லை. அந்நஜாத்தை மட்டும்தான் நமக்குச் சொந்தமாக்கி அமானித மோசடி செய்து விட்டதாக அவதூறு பரப்புகிறார்கள்.

அப்படியானால் இதனை அவர்கள் ஏன் செய்கிறார்கள் தெரியுமா? அவர்கள் நோக்கம் இதுதான். நம்மீது கனங்கள் கற்பித்து, அந்நஜாத் மூலம் நடந்து வரும் நற்பணியை முடங்கச் செய்ய வேண்டும். அந்நஜாத் வெளிவராமல் தடுத்துவிட வேண்டும் என்பதுதான். எனவேதான் அவதூறுகளை எமது சொந்தப் பிரச்சனையாகக் கருதாமல், மார்க்கப் பிரச்சினையாக எண்ணி, குர்ஆன், ஹதீஸ் வழியில் அவதூறுகளைத் தெளிவுபடுத்த முற்படுகிறோம்.

அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் “அஹ்லஹதீஸ், முஜாஹித், அஹ்லுல் குர்ஆன் வல்ஹதீஸ் போன்ற பிரிவுப் பெயர்களையும், இந்தப் பிரிவுப் பெயர்களை இணைத்துச் சொல்லப்படும் ஸலபிக் கொள்கையையும், ஜ.உ.சபை அமைப்பையும், சமுதாயத்தையும், மவ்லவிகளாகிய நாங்களும், எங்களை ஆதரிப்பவர்களும் ஏகமனதாகச் சரிகாண்கிறோம். இந்த விஷயங்களில் அபூஅப்தில்லாஹ் மட்டுமே மாறுபட்ட கருத்தில் இருந்து வருகிறார். மவ்லவிகளாகிய நாங்கள் எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும் அவர் பிடிவாதமாக மறுத்து வருகிறார். அவை சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் அந்நஜாத்தில் இடம் பெறுவதை பிடிவாதமாக மறுத்தார். அவரின் இந்தப் பிடிவாதப் போக்கு எங்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவரோடு இணைந்து செயல்பட முடியாது என்று நாங்கள் முடிவு செய்து, அவரைவிட்டு வெளியேறிவிட்டோம்” என்று மக்கள் முன் உள்ளதை உள்ளபடி எடுத்து வைத்திருந்தால், இந்த அளவு பிளவு ஏற்பட்டிருக்குமா? சமுதாயத்தில் ஏற்பட்டு வந்த நல்லதொரு மறுமலர்ச்சி பாழ்பட்டிருக்குமா? குராபிகள் இவ்வாறு எழுதவும், பேசவும் துணிவு கொல்வார்களா? என்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு வாதத்திற்காக அவர்கள் கூறும் தொகை அல்ல, அதைவிட ஆயிரம் மடங்கு பெரிய தொகை அமானிதமோசடி செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையிலும் முறையாக ஊழல்களை நீக்கி ஒழுங்கு செய்வதைவிட்டு பிளவை உண்டாக்கி, அவதூறு பரப்புவது கொண்டு, 1986 ஏப்ரலிலிருந்து டிசம்பர் வரை ஏற்பட்ட பிரமிக்கத்தக்க இஸ்லாமிய மறுமலர்ச்சியைப் பாழ்படுத்தியது நீதியாகுமா? இந்த அநீதிக்கு இவர்கள் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அல்லாஹ்வின் அச்சம் இருந்தால் இவ்வாறு செய்திருப்பார்களா? தீனுடைய மறுமலர்ச்சியைப் பாழ்படுத்தியதற்கு இந்த உலகையே ஈடாக கொடுத்தாலும் அது ஈடாகாது என்பதே நீதிமான்களின் தீர்ப்பாக இருக்க முடியும்.

பத்திரிகை நமது பெயரால் வெளிவருவதை, நமக்குச் சொந்தப்படுத்திக் கொண்டதாக அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் அனைவரின் ஆலோசனை ஒப்புதலுக்குப் பிறகே நமது பெயரால் வெளியிட பதிவு செய்யப்பட்டது என்பதற்கு சாட்சிகளும், ஆதாரங்களும் இருக்கின்றன. இன்று பல பதிவு செய்யப்பட்ட இயக்கப் பத்திரிக்கைகளே தனியொருவர் வெளியிடுவதாகவே வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஏன்? இன்று அவர் ஆசிரியராக இருக்கும் பத்திரிகையும், அவர் எழுதிவரும் இன்னொரு பத்திரிகையும் தனியொருவர் பெயராலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால்தான் மார்ச் மாதத்தில் அரசாங்கச் சட்டப்படி வெளியிடவேண்டிய உரிமை மற்றும் விபரங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் விட்டிருக்கிறார்கள். ஒன்று அரசாங்கச் சட்டம் தெரியாமல் விட்டிருக்கவேண்டும் அல்லது வெளியிடுவதால் தனியொருவர் பெயரில் இருப்பதை அறியும் மக்கள், அந்நஜாத் விஷயமாக அவர்கள் பரப்பித் திரியும் அவதூறைப் புரிந்து கொள்வார்கள் என்ற காரணத்திற்காக விட்டிருக்க வேண்டும்.  மற்ற பத்திரிகைகள் தனியொருவர் பெயரில் வெளிவருவதை (அரசாங்கச் சட்டப்படி அப்படி தனி ஒருவரே பொறுப்பேற்க வேண்டும்) ஏற்றுக் கொள்ளும் இவர்கள், அந்நஜாத் நமது பெயரால் வெளிவருவதை மட்டும் ஹிமாலயத் தவறாக எடுத்துச் சொல்லுவதின் இரகசியம்  என்ன?

உண்மை இதுதான். மற்றவர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைத்துக் கொள்வதுபோல், நம்மை அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு வளைத்துக் கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரமும், அவர்களின் புரோகித மனப்பான்மைக்கு நாம் துணைபோகவில்லை என்ற ஆத்திரமும், அவர்கள் இஷ்டப்பட்டதை எல்லாம் அந்நஜாத்தில் வெளியிட முடியவில்லை என்ற ஆத்திரமும் தவிர வேறு காரணமில்லை. மார்க்கத்தை வைத்து வயிறு வளர்ப்பது மட்டும்தான் புரோகிதம் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல, அரபிக் கற்றவர்கள்-அறிஞர்கள். எனவே நாங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள். மற்றவர்கள் கீழானவர்கள் என்று இருமாப்பு எண்ணம் கொள்வதும் புரோகிதந்தான் இவர்கள் திளைத்திருக்கிறார்கள். அதனால்தான் முத்தஸாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ்வும் அறிவான், அரபிக் கற்ற அறிஞர்களாகிய நாங்களும் அறிவோம் என்று மற்ற புரோகிதர்களைப் போல், குர்ஆன் வசனத்திற்குத் தலைகீழ் பாடம் சொல்லித் தருகிறார்கள். மவ்லவி அல்லாத நாம், மார்க்கம் எழுதுவதை ஜீரணிக்க முடியாமல் மவ்லவிகள் எழுதித் தருவதை நம் பெயரில் வெளியிடுவதாக அவதூறு பரப்புகிறார்கள்.

இன்னொருவர் பெயரால் இவர் வெளயிடும் துண்டுப் பிரசுரங்களைப் படிக்கும் முகல்லிதுகளைத் தவிர சுய சிந்தனையாளர்கள், அவர் தமக்குத் தாமே முரண்படுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஒன்றிலுள்ளதையே திரித்து மற்றொன்றில் வெளியிடுவதைப் புரிந்து கொள்ள முடியும். தனிப்பிரசுரம் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். அதுவும் வெளிவரட்டும். அனைத்திற்கும் உரிய ஆதாரங்களுடன் விளக்கங்கள் கொடுத்து, சமுதாய நலன் கருதி அவர்களின் அவர்களின் வேஷத்தைக் கலைக்க நமக்கு கடமையும், உரிமையும் இருப்பதால் அதனை முறையாகச் செய்து மக்களுக்குத் தெளிவு படுத்துவோம். இந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரேஒரு வழிதான் இருக்கிறது. அத்தா இப்னு ஸாயிப், ஸிமாம், இப்னு ஹர்ப், கலீபா போன்ற விஷயங்களில் அந்த அறிஞர் அவ்வாறு கூறியுள்ளார். 

இந்த நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று கூறி சிந்தனை மயக்கத்தை உண்டாக்கி மக்களை திசைத் திருப்புவது போல், இந்த மோசடி, ஊழல் புகார்களைக் கூறி சிந்தனை மயக்கத்தை உண்டாக்கவோ, மக்களை திசைத் திருப்பவோ முடியாது. இரு சாராரின் வாக்குமூலங்கள், சாட்சிகள், ஆதாரங்கள் அனைத்தையும் எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, பொறுமையோடு, நடுநிலையோடு அலசினால், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று சொல்வது போல் இன்னார் குற்றவாளி, இன்னார் நிரபராதி என்ற முடிவுக்கு நிச்சயமாக வந்துவிட முடியும். அல்லது இன்ன விஷயங்களில் இன்னார் குற்றவாளி, இன்னார் நிரபராதி என்று முடிவு செய்திட முடியும். இது முடியாத காரியமல்ல. அவ்வாறு முடிவு செய்துவிட்டால் யார் பொய்யராக இருக்கிறாரோ, அவரே முன்னால் குறிப்பிட்டுள்ள விஷயங்களிலும் பொய் கூறுகிறார். தனது வாதத்திறமையால் சிந்தனை மயக்கத்தை உண்டாக்கி மக்களை திசைத் திருப்புகிறார் என்ற முடிவுக்கும் எளிதாக  வந்துவிட முடியும்.

அமானித மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகளில் தங்களது வாதத் திறமை, பேச்சு வன்மையைக் கொண்டு சிந்தனை மயக்கத்தை உண்டாக்கி, மக்களை திசைத் திருப்ப முடியாது என்ற காரணத்தால் அவை பற்றி பேச, விவாதிக்க, நிரூபிக்க முன்வராமல் பின்வாங்குகிறார்கள். எனவே, உங்களைப் போன்ற துடிப்புள்ள, கொள்கைப் பிடிப்புள்ள செயல்வீரர்களுக்கு நாம் வைக்கும் அன்பு வேண்டுகோள். 

உங்களைப்  போன்ற  நடுநிலையான பத்து வாலிபர்கள் சேர்ந்து, இருவரையும் ஒரு இடத்தில் உட்கார வைத்து, எத்தனை நாட்களானாலும் சரி, இருவரது  வாக்குமூலங்கள்,  சாட்சிகள், ஆதாரங்கள் அனைத்தையும் பொறுமையோடும், சிந்தனையோடும், அல்லாஹ்வுக்கு பயந்து, சத்தியம் வெளிப்படவேண்டும் என்ற தூய நோக்கோடு, நடுநிலைக் கண்ணோடு அலசி ஆராய்ந்தால் நிச்சயமாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும் என்று நாம் உறுதியாகச் சொல்கிறோம். அந்த முடிவை நீங்களே மக்களுக்குப் பகிரங்கமாக அறிவித்து, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும்.  அவர்கள் கூறும் அவதூறுகளில் ஒன்று உண்மையானாலும் அதற்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ளவும், பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்கிறோம் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறொம். 1987 டிசம்பர் இதழிலும் வெளியிட்டோம். இப்போதும் நாம் தயாராகவே இருக்கிறோம். மார்க்க நலனிலும், சமுதாய நலனிலும் அக்கரை கொண்ட, துடிப்புள்ள கொள்கைப் பிடிப்புள்ள நடுநிலை வாலிபத் தோழர்களே! முன்வாருங்கள்!

விமர்சனம் : ஹதீஸ் தொகுப்பின் அட்டவணையில் நான்கு பெரும் இமாம்களில் இமாம் மாலிகி, இமாம்  ஷாபியி,  இமாம் ஹம்பவி ஆகியோரின் தொகுப்பை மட்டும் குறித்து உள்ளீர்கள். இமாம் அபூஹனீபா ஹனபீ இமாமின் தொகுப்பை ஏன் குறிப்பிடவில்லை? அவர் தொகுப்பு செய்யவில்லை என்றால் உலமாக்கள் கூறும் ஹனபீ சட்டம் என்பது யார் தொகுத்தது என  நீங்கள் கருதுகிறீர்கள்?  எஸ்.ஸலீம், விருத்தாசலம்.

விளக்கம் : இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்கள் தொகுத்ததாக ஆதாரப்பூர்வமான நூல் எதுவும் இல்லை என்பதே உண்மையாகும். அப்படி இருப்பதாகச் சொல்லுகிறவர்கள் அந்த நூலைக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள். உலமாக்கள் கூறும் ஹனபிச் சட்டம் என்பது யாரால் தொகுக்கப்பட்டது என்ற கேள்விக்கு, தங்களை ஹனபிகள் என்று சொல்லிக் கொள்வோரே பதில் அளிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

Previous post:

Next post: