ஐயமும்! தெளிவும்!!

in 2018 மார்ச்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : மூன்றாம் பாலினம் பற்றி இஸ்லாத்தின் பார்வை என்ன? அவர்களுக்கு பெற்றோர்களின் சொத்தில் பங்கு என்ன? அவர்களை இறந்தால் குளிப்பாட்டுவது யார்? S.M. நாசர், நாகர்கோவில்

தெளிவு : மூன்றாம் பாலினம் கிடையாது. அவர்கள் ஆண்தான், அவர்களுக்கு ஆண் களுக்குரிய அனைத்து சொத்துரிமைச் சட்டங்களும் செல்லுபடியாகும். மேலும் அவர்கள் ஆண்களாக இருப்பதால் இறந்துவிட்டால், ஆண்களே குளிப்பாட்டுவதற்கு அனுமதி உண்டு. இஸ்லாம் இவர்களை ஆண்களாகத் தான் முடிவெடுக்கிறது. இவர்கள் எந்த விதத்திலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்கப்பட முடியாதவர்கள். உலகில் ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தைத்தான் இறைவன் படைத்திருக்கிறான். இதை தவிர செயற்கை பாலினமாக மாற முனையும் இவர்களை ஒருக்காலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை. திருகுர்ஆன் பார்வையில் பாலினம் என்பது இரண்டு மட்டுமே. உலகில் இரண்டு பாலினம் மாத்திரமே உள்ளது என்பதை குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது.

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிருத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் வி­யத்திலும் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். அல்குர்ஆன் : 4:1

மேற்கண்ட வசனத்தில் ஆதம்(அலை) அவரின் துணையை படைத்து அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் படைத்தான் என்று குறிப்பிடுவதிலிருந்து உலகில் ஆண், பெண் ஆகிய இரு பாலினத்தைத் தவிர வேறு பாலினம் எதையும் இறைவன் படைக்கவில்லை என்பது உள்ளங்கையில் நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரிகிறது. ஆண்மையற்றோர் பற்றி நபியவர்களின் வார்த்தை :

உம்மு ஸலமா(ரழி) அறிவித்தார் : (ஒரு நாள் என் கணவர்) நபி(ஸல்) அவர்கள் என் அருகில் இருந்து கொண்டிருந்தார்கள். அங்கு எங்கள் வீட்டில் (பெண் களைப் போல் நடந்து கொள்ளும்) “அலி’ ஒருவனும் இருந்து கொண்டிருந்தான். அந்த “அலி’ என் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு அபீ உமைய்யாவிடம், “நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றி யளித்தால், ஃகைலானுடைய மகளை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். (அவளை நீ மணந்து கொள்) ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு) டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளுடனும் வருவாள்” என்று (அவளுடைய மேனி அழகை வர்ணித்துக்) கூறினான். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், “இவன் உங்களிடம் ஒருபோதும் வரக்கூடாது’ என்று கூறினார்கள். புகாரி : 5235

அரவாணிகள் என்று தங்களை அழைக்கும் இவர்கள் ஆண்கள் என்பதால் தான் நபியவர்கள் அவர்களை பெண்கள் இருக்கும் இடத்திற்கே வரவிடக் கூடாது என்று தடுக்கிறார்கள். இவர்கள் பெண்களிடம் தங் களை பெண்களைப் போல் காட்டிக் கொண்டு அவர்களுடைய அங்க அவயவங்களை நோட்டமிடும் கீழ்தரமான காரியங் களை செய்பவர்கள் அதனால் இவர்கள் ஒருபோதும் பெண்களுடன் தொடர்பு வைக்க அனுமதிக்கக் கூடாது என்பது நபியவர்களின் தெளிவான வார்த்தை.

இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களை யும் சபித்தார்கள். மேலும் அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெளியேற்றினார் கள். உமர்(ரழி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள். புகாரி : 6834 இந்த ஹதீஃத்களிலிருந்து ஆண், பெண் இரண்டு பாலினர்தான் உண்டு என்று தெரிகிறது.

ஐயம் : ஒருவன் தன் மனைவியை ஒரே சயமத்தில் முத்தலாக் கூறினால் அவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என்ற சட்டம் நியாய தர்மத்துக்கும், ­ரீயத் சட்டத்துக்கும், நமது அரசியல் சட்டத்துக்கும் எதிரானது என்பதில் சந்தேகமில்லை. ஒரே சமயத்தில் முத்தலாக் கூறுவதற்கு “”குர்ஆன்” அடிப்படையில் ஆதாரம் இல்லை என்பதால், நமது மார்க்க அறிஞர்களின் தவறான போதனையால் சிலர் தன் மனைவிக்கு ஒரே சமயத்தில் முத்தலாக் கூறி பள்ளி வாசல் நிர்வாகத்தினரின் சிபாரிசின் பேரில் “”அரசு டவுன் காஜி” என்பவரிடமிருந்து விவாக விலக்கு சான்றும் பெறுகின்றனர். எனவே இப்படி சான்று வழங்கும், சிபாரிசு செய்பவர்களுக்கும் தண்டனை உண்டு என் றால் அது நியாயமாகுமா? சுல்தான்ஜி, ஆத்தூர்.

தெளிவு : அல்பகரா 2:226 முதல் 233 வரை படித்துப் பார்ப்பவர்கள் கணவன் மனைவியை தலாக் சொல்லி தற்காலிகமாகப் பிரிவது எப்படி நிரந்தரமாகப் பிரிவது எப்படி என்பதைத் திட்டமாகத் தெளிவாகப் போதிப்பதை அறியமுடியும். தலாக் என்பது மூன்று வெவ்வேறு தவணைகளில் மட்டுமே. ஒரே நேரத்தில் தலாக், தலாக், தலாக் என்று சொல்வதல்ல என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதை உறுதிப்படுத்த 2:228 இறை வாக்கு “”அத்தலாக்கு மர்ரத்தானி” அதாவது மீட்டிக் கொள்ளும் தலாக்கு இரண்டு தவணைகளில் என்று கூறுவதோடு மீட்ட முடியாத தலாக்கு முத்தலாக்கு ஒரே தவணையில் அல்ல. மூன்று தவணைகளில் சொல்லப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதற்கு மேலதிக விளக்கமாக நபி(ஸல்) அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று அல்ல பல தலாக் சொன்னாலும் அது ஒரேயொரு தலாக்தான் என்று உறுதிப்படுத்தியி ருக்கிறார்கள்.

இவை அல்லாமல் அல்குர்ஆனில் 2:187, 4:20, 33:49, 65:17 வசனங்களையும் நேரடியாகப் படித்து நம்மைப் படைத்துப் பரிபாலித்து வரும் அல்லாஹ் தலாக் பற்றி வலியுறுத்தியுள்ளதை அறிந்து கொள்ள முடியும். இரவும், பகலைப் போல் தெள்ளத் தெளிவாகிருக்கும் குர்ஆன், ஹதீஃத்களை விட்டு இம்மவ்லவிகள் தங்கள் ஆபாக்களான முன்னோர்களின் வழிகெட்ட நடைமுறைகளை ஆதாரமாகத் தருவதின் இரகசியம் என்ன? குர்ஆன், ஹதீஃதைப் புறக்கணித்து முன்னோர்களின் நடைமுறைகளைப் பின்பற்றுவோர் நாளை ஒதுங்குமிடம் நரகம் என்று பல குர்ஆன் வசனங்கள் கூறுவதை பார்க்கும்போது இம்மையில் தண்டனை கொடுப்பது நியாயமோ இல்லையோ என்று தெரியாது. ஆனால் மறுமையில் நிச்சயமாக தண்டனை உண்டு என்பது புலனாகிறது.

Previous post:

Next post: