காளிச்சரண் சரப்! இந்தப் பெயரை சமீபத்தில் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் ஒரு பிரபலம். பாஜகவை சார்ந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர். இவர் செய்த அசிங்கம் தேர்தல் பணிக்காக சென்றுகொண்டு இருந்தவர். வழியில் பொது இடத்தில் காரை நிறுத்தி, அருகிலிருந்த கட்டிடச் சுவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இவரின் இந்த அருவருப்பான செயலைக் காட்டும் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருக்கிறது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு சுகாதாரப் பணிகள் ராஜஸ் தானின் ஜெய்ப்பூர் நகரில், நடத்தப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, இதுபற்றி விளக்கம் கேட்டு ஜெய்ப்பூர் மாநகராட்சி அமைச்சருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அமைச்சரிடமிருந்து பதிலில்லை. அமைச்சரைத் தொடர்பு கொள்ள முடியாதவாறு, அமைச்சரின் மொபைல் ஸ்விட்ச் ஆஃப்பில் இருக்கிறதாம். இந்நிலையில் மாநில அமைச்சரே பொது இடத்தில் சிறுநீர் கழித்துள்ள சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ராஜஸ்தான் பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், தான் செய்தது தவறு என்று கூட ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத மனிதராக இவர் இருக்கும் நிலை தான். ஏனென்றால், இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று இவர் கூறியதாக தரமான பத்திரிகை ஒன்று சான்று பகர்கிறது.
சுகாதாரத்துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சரே சுகாதாரமற்ற செயலை செய்து விட்டு, இது பெரிய விசயம் இல்லை என்று கூறும் அளவுக்கு தூய்மை இந்தியா திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இத்துறையில் மட்டுமின்றி, மற்ற துறை களிலும் ஆரோக்கியமற்ற செயல்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு கல்புர்க்கி போன்ற எழுத் தாளர்கள் கொலை, மாட்டுக் கறி தடை, மாட்டுக்கறி கொலைகள், சங்பரிவாரங்களால் சிறுபான்மையினரும், தலித்துகளும் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள், தகவல் பரிமாற்ற ஆய்வு சட்டம், தமிழகத்தை அழிக்கும் மீத்தேன், தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் தண்ணீர் பிரச்சனையை விட மோசமான நிலமையால் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே வி.குரும்பபட்டி ஊரே தண்ணீர் இல்லாமல் அழியும் அவலம், பெட்ரோல், டீசல் 200% வரி உயர்வு, மருந்துகள், ரயில் கட்டணம், கேஸ் ஆகியவைகளின் விலை உயர்வு, பெரு முதலாளிகளின் கடன் தள்ளுபடி, உதய மின் திட்டம் கிடப்பில், ராணுவ உணவில் முறை கேடு, புல்லட் ரயில் கிடப்பில், சஹாரா நிறுவன லஞ்சம், பாபா ராம் தேவுக்கு நில ஒதுக்கீடு என்று இன்னும் இன்னும்… சமீபத்தில் நடந்து கொண்டிருக்கின்ற அதிர்ச்சியும், ஆச்சரியமும் தரும் நிகழ்வை கவனியுங்கள்.
குஜராத்திலுள்ள வைர வியாபாரி நிரவ் மோடி என்பவர். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் நாட்டின் பிரதம மந்திரியை கட்டி தழுவி இருந்ததாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து சில தினங்களில், மும்பையிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஒன்றில் 300 கோடி ரூபாய் பணத்தை இவர் முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த 15 நாட்களுக்குள் இவர் முறைகேடாக பயன்படுத்திய பணத்தின் மொத்த மதிப்பு 11,500 கோடி ரூபாய் என திடுக்கிடும் தகவலை வங்கி அறிவித்துள்ளது. சிபிஐ இவரை கைது செய்து விசாரிக்க முன் வந்தபோது, இவர் சர்வ சாதாரணமாக வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. செல்வாக்கு மிகுந்த வர்கள் நம் நாட்டில் சுலபமாக எதை வேண்டு மானாலும் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பித்து ஓடி விட முடியும் என்பதற்கு இவரும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகிறார். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நம் இந்தியாவிலா, இதுவா தூய்மை இந்தியா என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர். மக்கள் எதையும் மறந்து விடும் குணம் கொண்டவர்கள் என்பதால், அரசு தம்மை திருத்திக் கொண்டு நற்செயல்கள் செய்வார்களே யானால், மீண்டும் மக்களே உங்களை ஆட்சியில் அமர்த்தி விடுவார்கள். அரசு முயற்சிக்குமா? பொறுத்து இருந்து பார்ப்போம்.