அந்நஜாத் மே – 2016

in 2016 மே

மே 2016

ரஜப் -­ ஷஃபான் 1437

ஜனநாயக தேர்தல் முறை!

தமிழகத்தில் மே 16 அன்று சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரும் பான்மை மக்கள் யாரை ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்ப்பதே ஜனநாயகம். இது மனிதக் கற்பனையில் உதித்த ஒரு வழிகேடே அல்லாமல் நேர்வழி இல்லை. பெரும்பான்மை மக்கள் சத்தியத்தை நேர்வழியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கோணல்வழிகளை, வழிகேடுகளைத்தான் நேர்வழியாகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று குர்ஆன் 6:116 முதல் எண்ணற்ற வசனங்களில் நேரடியாக அல்லாஹ் கூறியுள்ளான். ஆம்! அயோக்கியர்களும், கொலைகாரர்களும், அராஜகப் பேர்வழிகளும், மக்கள் சொததை அநியாயமாகவும், அட்டூழியங்கள் மூலமும், லஞ்ச லாவண்யங்கள் மூலமும் அபகரிக்கும், பாவம், புண்ணியம் பற்றி சிறிதும் கவலைப்படாத மனித நேயம், மனிதா பிமானமற்ற இரண்டு கால் மிருகங்களே ஆட்சியாளர்களாக இந்த ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்தப் பேருண்மையை சமீபகால அரசியல் நடப்புகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தேர்தலில் வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு ஒவ்வொரு கட்சியும் எப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்களை, பொய் வாக்குறுதிகளை, பொய்யுரைகளை, இன்னும் பல ஏமாற்று சாகசங்களை நிகழ்த்தி வருகிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்கத்தானே செய்கிறோம். இவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புவதைவிட அறியாமை வேறொன்றும் இருக்க முடியது.

இன்னொரு கோணத்திலும் பாருங்கள். இன்று நடைபெற்று வரும் ஜனநாயகத் தேர்தல் முறை உண்மையிலேயே பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி முறையாக ஒருபோதும் அமையாது. கடந்த பாராளுமன்றத் தேர்தல் மூலம் ஆட்சியில் அமர்ந்துள்ள மோடி அரசுக்குக் கிடைத்தது வெறும் 31% மக்களின் ஆதரவு மட்டுமே.

எஞ்சியுள்ள 69% மக்கள் மோடி அரசுக்கு எதிரானவர்களே. அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு எம்.பி.யும் 25% அல்லது 30% மேல் வாக்குப் பெற்றிருக்கமாட்டார். மே 16ல் தேர்தல் நடைபெற்று மே 19ல் வாக்குகள் எண்ணப்பட்டப் பின் பாருங்கள். ஒரு எம்.எல்.ஏ. கூட 30% வாக்குகளுக்கு மேல் பெறுவது அபூர்வமாக இருப்பதையே காண்பீர்கள். இதுவா பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி நடக்கும் ஜனநாயக ஆட்சி முறை.

ஆக ஜனநாயக ஆட்சி முறை என்பதும் ஓர் ஏமாற்று வித்தை. பெரும்பான்மை மக்களின் விருப் பப்படி தேர்ந்தெடுக்கப்படடுள்ள பிரதிநிதிகள் என்பதும் ஓர் ஏமாற்று வித்தையே. ஆக முறை தவறி தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.க்கள் மக்கள் நலன் நாடி சேவையாற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியுமா? அதுவும் கோடிக் கணக்கில் விளம்பரம், கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது, வாக்காளர்களுக்கு லஞ்சம் என செலவிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் செலவிட்டப் பணத்தைப் பத்து மடங்கல்ல நூறு மடங்கல்ல அதை விட அதிகமாகக் குவிக்க முறை தவறி பாடுபடுவாரா? மக்கள் தொண்டாற்றுவாரா? ஐந்தாண்டு காலத்தில் நூறு தலைமுறைக்குச் சொத்துச் சேர்ப்பதில் தான் குறியாக இருப்பார்.

லட்சியமா கக் கொள்வார். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயிலலை. எப்படிப்பட்ட துன்பத் துயரங்களில் மூழ்கினாலும் பரவாயில்லை. பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லை. தனது லட்சியமான நூறு தலைமுறைக்குச் சொத்துச் சேர்ப்பதில்தான் குறியாக இருப்பார். நடுத்தர ஏழை, எளிய மக்கள் ஒரு வேளைக் கஞ்சிக்கே திண்டாடும் நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள், கோடி கோடியாகப் பணம் குவிக்கும் பெரும் பணக்காரர்கள் மேலும் மேலும் சொத்துச் சேர்க்க உதவி, அவர்களிட மிருந்து தங்கள் பங்கை அநீதமான வகையில் பெறவே தங்கள் பதவிக் காலத்தைப் பயன்படுத்துவார்கள். ஆக எதிர்வரும் ஐந்தாண்டில் வெற்றி பெற்றுப் பதவியில் அமர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களின் வருமானத்தைப் பன்மடங்குப் பெருக்கிக் கொள்வார்கள்.

அதிலேயே அவர்களின் முழுக்கவனமும் இருக்கும். மக்களுக்குச் சேவையாற்றத்தானே நாம் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். அது நமது கடமை அல்லவா? என்ற நேரிய சிந்தனை அவர்களுக்கு ஏற்படுவதை மக்கள் சொத்தைச் சூறையாடும் அவர்களின் தீய முயற்சி தடுத்துவிடுகிறது. ஜனநாயக ஆட்சி முறையின் லட்சணம் இதுதான்.

இந்த இடத்தில் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம்களின் அப்போதைய பிரதான கட்சியின் உறுப்பினர் இப்போதைய தலைவருடன் அவரது அச்சகத்தில் பேசிக்கொண்டிருந்தோம். புத்தாநத்தம் கலவரம் நடந்த காலகட்டம் ஒரு பத்திரிகை நிரூபர் வந்து பேட்டி எடுத்தார். அப்போது அந்த சகோதரர் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொடுத்தார்.

நிரூபர் சென்றவுடன், ஏன் பாய் இப்படி உண்மைக்கு புறம்பான செய்திகளை உண்மைச் செய்திகள் போல் கூறினீர்கள் என்று கோட்டோம். அப்போது அவர் நமக்களித்த பதில்தான் எம்மைத் திடுக்கிடச் செய்தது.

பாய் இன்றைய அரசியலுக்கு வந்துவிட்டால், மனசாட்சியைத் தூக்கி வெளியே வைத்துவிட வேண்டும். அப்படியானால்தான் அரசியலில் பிழைப்பு நடத்த முடியும் என்று கூசாமல் பதில் சொன்னார். இது சுமார் 50 வருடங்களுக்கு முன்னிருந்த அரசியல் நிலை இன்று 2016ல் அரசியல் வியாபாரிகள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இறைவன் மீது உறுதியான நம்பிக்கையுடைய வன், அதாவது முழுமையான ஈமானுடையவன் ஒருபோதும் இந்த ஜனநாயக ஆட்சி முறையை சரி காணமாட்டான். பல சுய கருத் துக்களைக் கூறி ஜனநாயக ஆட்சி முறையை நியாயப்படுத்தமாட்டான். அதில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களுக்கு நற்சேவைகள் செய்ய முடியும் என்று நம்பமாட் டான். ஆட்சியைக் கொடுப்பதும், பறிப்பதும் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கிறது. ஆட்சியில் அமர்ந்தால் அல்லாஹ் குர்ஆனின் கூறும் ஆட்சி முறையையே பின்பற்றவேண்டும். மனிதக் கருத்துக்களினால் ஆன ஆட்சிமுறை இறை நிராகரிப்பில்-குஃப்ரில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என உறுதியாக நம்புவான். தேர்தல் களத்தில் நேரடியாக இறங்குவதோ, தேர்தலில் நிற்பவர்களுக்கு வாக்குகள் சேகரிப்பதோ நபிவழியல்ல, நபிவழிக்கு முரணான செயல் என்பதை உறுதியாக நம்புவான். யார் மறு உலகை விட மிகமிக அதிகமாக இவ்வுலகையும், அதன் ஆசாபாசங்களையும் விரும்பு கிறார்களோ அவர்கள் மட்டுமே ஜனநாயக ஆட்சி முறையை சரி கண்டு அதில் மூழ்குவார்கள் என்பதையும் முழுமை யாக விளங்குவான்.

2:186 இறைக்கட்டளைப்படி அவர்கள் அல்லாஹ்வை முழுமையாக நம்பவில்லை. அவர்களின் ஈமானில் ஓட்டை இருக்கிறது என்பது அவர்கள் ஐங்காலத் தொழுகைகளையும் அதனதன் நேரத்தில் பள்ளி சென்று இமாமுடன் ஜமாஅத்தாகத் தொழுது அல்லாஹ் குர்ஆனில் அகீ முஸ்ஸலாத்-தொழுகையை நிலைநாட்டுவார்கள் என்று சொல்வது போல் தொழுகையை நிலைநாட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள். ஆக முழுமையான ஈமானையுடைய ஒரு முஸ்லிம் ஐங்காலத் தொழுகைகளையும் அதனதன் நேரத்தில் பேணித் தொழுபவர் ஒருபோதும் அற்பமான இவ்வுலகின் பேர் புகழ், பட்டம் பதவி, உலகியல் ஆதாயங்கள் போன்ற அற்ப ஆசைக்கு அடிபணிந்து மனிதக் கற்பனையில் உருவான ஜனநாயக ஆட்சி முறையை ஒருபோதும் சரிகாண மாட்டார். அதில் ஈடுபட மாட்டார்.

பஜ்ர் தொழுகையின் சுன்னத்தான தொழுகையே உலகின் முதல் பணக்காரனை விட உயர்ந்த மதிப்பைப் பெற்றுத் தரும் என்றால் பர்ழான தொழு கைகளின் உயர் நிலையைப் புரிந்தவன் இந்த ஆட்சி முறையில் மயங்கமாட்டான். அதில் ஈடுபட்டு தனது ஈமானையும், அமல்களையும் பாழ்படுத்த மாட்டான். குர்ஆனை அன்றாடம் பொருள் அறிந்து படித்து வருபவர்கள் மட்டுமே இந்த உண்மையை அறிய முடியும்.

ஜனநாயக ஆட்சி முறையில் இத்தனை கேடுகள் நிறைந்திருந்தாலும் அதில் நேரடியாக ஈடுபடக் கூடாது என்றிருந்தாலும், முஸ்லிம்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், அதை முஸ்லிம்களின் எதிரிகள் துஷ்பிரயோகம் செய்ய இடம் அளிக்கக் கூடாது. மேலும் முஸ்லிம்களின் பெயர்கள் அவர்கள் வாக்களிக்காத காரணத்தால் அப்பட்டியலிலிருந்து அரசு முஸ்லிம்களின் பெயர்களை அகற்ற இடம் அளிக்கக்கூடாது. அதனால் முஸ்லிம்கள் நாடற்றவர்களின் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்ற நன்னோக்கில் வாக்குச் சாவடிக்குச் சென்று ஆட்சியில் அமர வாய்ப்பில்லாத ஒருவருக்கோ அல்லது நோட்டாவிலோ பதிவு செய்து நாமும் வாக்களித்தோம் என்ற நிலையை நிலைநாட்டுவதே நல்லது. அது நாம் ஜனநாயக ஆட்சி முறையை ஆதரித்தோம் என்று நினைப்பது தவறாகும். எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை என்பது குர்ஆனின் பல வசனங்கள் கூறும் தெளிவாகும். தோற்பவர்களுக்கு வாக்களிப்பது அல்லது நோட்டாவில் பதிவிடுவது ஹராம் என்று கூற குர்ஆன், ஹதீஃதில் எவ்வித ஆதாரமும் இல்லை. நோட்டாவில் பதிவிடுவதே அவர்களில் யாரும் ஆட்சிக்குத் தகுதி பெற்றவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதேயாகும்! வாக்களித்து அநியாயக்காரர்களை ஆட்சியில் அமர்த்துவதுதான் ஹராம்! கிலாஃபத்-இறையாட்சியை அமைக்கப் போகிறோம், அதற்காக ஜிஹாத்-போர் செய்கிறோம் என்று பிதற்றிக்கொண்டு தற்கொலைப்படைத் தாக்குதல் மூலமும், துப்பாக்கியால் சுட்டும் கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பது அதைவிட மகாக் கொடிய ஹராமான செயலாகும் என்பதே குர்ஆன் கூறும் உண்மையாகும்.

உணவின்றி அமையாது உலகு!

அ. உமர் பாருக்

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகப் பழகிய உணவு பரோட்டா. இன்றைய நகரவாசிகள் முதல் கிராமத்து மக்கள் வரை பரோட்டாவைத் தவிர்த்து யோசிக்க முடியாத அளவுக்கு நம்மோடு ஒன்றிப்போய்விட்ட அசத்தல் டிபன் வகை.

தமிழகத்தின் பல பகுதிகளில் பரோட்டா என்பது கோதுமை மாவில் செய்யப்படும் பதார்த்தமாகவே இருந்து வந்தது. ஆனால், மைதாவில் தயாரிக்கப்படும் புதிய பரோட்டா வருகைக்குப் பின்பு, கோதுமையில் செய்யும் உணவு, கோதுமை ரொட்டியாக மாறிவிட்டது. நம் உணவுப் பழக்கத்தில் தவிர்க்க முடியாத அளவுக்கு இணைந்தி ருக்கிறது பரோட்டா.

மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் இன்று கால் பதிக்கத் துடிக்கும் மிக முக்கியமான, லாபகரமான தொழில் மருத்துவம். ஓர் அமெரிக்க நிறுவனம், இந்தியாவில் எந்தவிதமான மருத்துவமனைகள் எதிர்காலத்தில் தேவை? என சர்வே செய்தது. எதிர்கால மருத்துவமனைகளின் தேவையை இப்போது எப்படிக் கணிக்க முடியும் என்கிறீர்களா?

ஒரு நகரத்தின் இன்றைய உணவுப் பழக்கத்தை வைத்து, எதிர்காலத்தில் எந்தவிதமான மருத்துவ மனைகள் அங்கு தேவைப்படக்கூடும் என்பதைக் கணிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். உதாரணமாக நம் தமிழ்நாட்டின் இன்றைய வாழ்க்கை முறையில் டாஸ்மார்க் விற்பனை சிறப்பாக இருக்கிறது என்றால், அடுத்த 10 ஆண்டுகளில் கல்லீரல் சிறப்பு மருத்துவமனைகளின் தேவை மிக அதிகமாக இருக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதுபோல, நம்முடைய அன்றாட உணவுப் பழக்கங்களைக் கொண்டு, நமக்கு எதிர்காலத்தில் தேவைப்படப்போகிற சிறப்பு மருத்துவமனைகளைப் பட்டியல் எடுத்து விடலாம். அப்படி ஒரு பட்டியலைத் தயார் செய்துகொண்டு, முதலீட்டுக்கு ரெடியாக இருக்கின்றன பல பன்னாட்டு நிறுவனங்கள்.

இந்த அடிப்படையில் நம் உணவுப் பழக்கத்தை நாமே ஆராய்வோம். நம்முடைய இரவு உணவு களில் ஆகப் பெரிய சதவிகிதத்தை பரோட்டாக்கள் பிடித்துக் கொண்டன என்பது நமக்குத் தெரியும். மிகச் சமீபமாக பல்வேறு ஊடகங்களிலும் மிக முக்கிய இடத்தை பரோட்டாக்கள் பிடித்துக் கொண்டாலும், மறுபடி மறுபடி அதன் விளைவுகளைப் பேசவேண்டிய அவசியம் இருக்கிறது.

கேரளாவில் அமைப்புகளால் நடத்தப்பட்ட பரோட்டா எதிர்ப்புப் போராட்டங்கள், இப்போது தமிழ்நாட்டில் கோவில்பட்டி பசுமை இயக்கம், கோவை பரோட்டா எதிர்ப்பு இயக்கம் எனப் பரவியிருக்கின்றன. மலையாளத் தொலைக்காட்சிகளின் விவாத அரங்குகளில் பலமுறை பரோட்டா பற்றிய விவாதம் கிளம்பியிருக்கிறது.

கோதுமையிலிருந்து தோல் நீக்கப்பட்டு எஞ்சியுள்ள கழிவுப் பொருட்களால் மஞ்சள் நிற மைதா மாவு தயாராகிறது. இது நீண்ட காலமாகப் பசையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தெற்காசிய நாடுகளில் கோதுமைக் கழிவுகளில் இருந்து மட்டும் அல்லாமல், மரவள்ளிக் கிழங்கிலிருந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது.

மைதாவை வெள்ளையாக்குவதற்காக பென் ஸாயில் பெராக்சைடு என்ற ரசாயனம் பயன்படுத் தப்படுகிறது. இந்த பென்சாயில் பெராக்சைடு பயன்படுத்தப்படும் மைதா போன்ற உணவுப் பொருட்களை இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகியவை தடை செய்துள்ளன. ரசாயன மருந்துகள் அதனுடைய பக்க விளைவு காரணமாக தடை செய்யப்படுவது வழக்கம்தான். ஆனால், ஓர் உணவுப் பொருள் அதன் விளைவுகள் காரணமாக தடை செய்யப்படுகிறது என்றால், அதனுடைய பாதிப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மைதாவில் இது மட்டும் பிரச்சனை அல்ல. இதைவிட மிக முக்கியமான விஷயம் மைதா மாவை மிருதுவானதாக மாற்றப் பயன்படும் இன்னொரு ரசாயனம்தான். கோதுமை கெட்டியான மாவாக இருக்கிறது. அதிலிருந்து தயாரிக்கப்படும் மைதா எப்படி மென்மையாக இருக்கிறது? நமக்கு கோதுமை ரொட்டியைவிட மைதாவால் தயாரிக்கப்படும் நாண், பரோட்டா போன்ற பொருட்கள் பிடித்துப் போனதற்கு அதன் மென்மைதான் காரணம்.

இவ்வாறு, கெட்டியாக இருக்கும் மைதாவை மென்மையானதாக மாற்ற ஆலோக்சான் என்ற ரசாயனம் பயன்படுகிறது. அலாக்சான் எங்கு பயன்படுகிறது தெரியுமா? மருந்துகளைப் பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடங்களில், அதை வைத்து அங்கு என்ன செய்கிறார்கள்?

ஆங்கில மருத்துவத்தில் ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமானால், விலங்குகளுக்கு அந்த நோயை வரவழைத்து, பின்பு மருந்து கொடுத்துப் பரிசோதிப்பார்கள். வலிக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்றால் எலி, முயல் போன்ற விலங்குகளைக் காயப்படுத்தி அல்லது அவற்றுக்கு வலியை வரவழைத்து, அதற்குப் பிறகு மருந்துகளைக் கொடுத்து சோதனை செய்வார்கள்.

இந்த ஆய்வுக்கூடங்களில் எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதற்காக, ஒரு ரசாயனத்தைப் பயன்படுத்துகிறார்கள். அந்த ரசாயனம் எலிகளின் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்களை அழித்துவிடுகிறது. இன்சுலின் சுரப்பு படிப்படியாகக் குறைந்து எலிகள் “”டயாபடிக் எலிகள்” ஆக மாறுகின்றன. இவ்வாறு சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வு செய்யப்படுகிறது. சர்க்கரை நோயை எலிகளுக்கு வரவழைக்கும் ரசாயனம் தான் அலோக்சான், நாம் இதே பொருளைப் பயன்படுத்தி மைதா மாவை மென்மையாக்குகிறோம்.

அலோக்சானின் ரசாயனப் பாதிப்புகளோடு தயாராகும் மைதா, ஏற்கெனவே உள்ள பென்சாயில் பெராக்சைடு நஞ்சோடு இணைந்து, நம் உடலைப் பதம் பார்க்கிறது. மைதா அறிமுகமான காலம் முதல் இப்போது வரை நாள்தோறும் உயர்ந்து கொண்டிருக்கும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில், மைதாவின் பங்கு மகத்தானது. பல நோய்களுக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அவற்றில் ஒன்றுதான் சர்க்கரை நோய், உடலில் இன்சுலின் சுரக்கவில்லை அல்லது குறைவாகச் சுரக்கிறது என்பது சர்க்கரை நோய்க்குக் காரணம் என்று நமக்குத் தெரியும். ஆனால் இந்த இன்சுலின் ஏன் குறைந்துபோகிறது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.

நம்முடைய அன்றாடப் பழக்கவழக்கங்களில், தினசரி உணவுகளில் கலந்துள்ள ரசாயனங்களை, நோய்க்காரணிகளை நாம் ஆய்வுக்கு உட்படுத்தாமல், எந்த ஆராய்ச்சியும் நிறைவு பெறப்போவது இல்லை. இவ்வளவு பிரச்சனை உள்ள மைதாவை நாம் அப்படியே சாப்பிடுவது இல்லை. நாம் ஏற்கனவே பார்த்த, உடல்நலத்தைக் கெடுக்கும் ரீஃபைண்டு ஆயிலோடு சேர்த்துத் தயாரிக்கிறோம். நச்சு ரசாயனங்களின் கூட்டணியை ஏற்படுத்துகிறோம்.

நம் உடலின் ஆரோக்கியத்தைச் சீர்குலைப் பதற்கு இதைவிட வேறு காரணங்கள் தேவையா என்ன?

பரோட்டாவுக்கு மாற்றாக, சிறுதானியங்களில் வகைவகையான ரொட்டிகளைச் செய்து தரலாம். கேழ்வரகு, கோதுமை போன்றவை ரொட்டி வகைகளுக்குச் சிறந்தவை. இவ்வளவு நாள் விளைவுகளை அறியாமல் பரோட்டாவைச் சாப்பிட்டு வந்திருக்கிறோம். ஆனாலும், நம் உடல் எதிர்ப்புச் சக்தியால் நமக்கு ஒன்றும் ஆகவில்லை. இப்போது பரோட்டா பற்றி தெரிந்ததும் குழந்தைகள் சாப்பிடும் பரோட்டாவை அச்சுறுத்தி உடனடியாகப் பிடுங்கிவிடாமல், படிப்படியாக மாற்று உணவுகளை அறிமுகம் செய்து நிறுத்திவிடலாம். குழந்தைகள் உணவைப் பொறுத்தவரை, காய்ச்சல் வயிற்றுப்போக்கு போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு, குழந்தைகள் அவற்றிலிருந்து குணமாகும்போது, உணவு முறை மாற்றத்தைச் செய்வது, சிறப்பான பலன் தரும்.

எமனாகும் புரோட்டா :

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக் குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின. பரோட்டாவும் பிரபலமடைந்தது.

இப்போது பரோட்டாவின் மூலப் பொருளான மைதாவில்தான் பிரச்சனை துவங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பலவகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நம் பிறந்தநாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட.

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பன்சாயல் பெரோசிடே (Benzyl Peroxide) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மை யாக்குகிறார்கள். அதுவே மைதா. Benzyl Peroxide நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள Protein உடன் சேர்ந்து நீரழிவு நோய்க்கு காரணியாய் அமைகிறது. இது தவிர  Alexon என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது.

மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccharine, Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. இதில்  Alexon சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது. ஆக பரோட்டாவில் உள்ள Alexon மனிதனுக்கும் நீரழிவு நோய் வர துணை புரிகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உலகந்தது அல்ல, மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும். இதில் சத்துகள் எதுவும் இல்லை, குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த Bakery பண்டங்களை உண்ணத் தவிர்ப்பது நல்லது. Europe Union, UK. China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல் இருதய கோளாறு, நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு. நாமும் விழித்துக் கொள்வோம். நம் தலைமுறை காப்போம்.

 டாக்டர் மு.அமல்ராஜ்

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

 MTM. முஜீபுதீன், இலங்கை

நவம்பர் 2015 தொடர்ச்சி……

மனிதர்களிடம் நேர்வழி(காட்டி) வந்தபோது, ஒரு மனிதரையா அல்லாஹ்(தன்) தூதராக அனுப்பினான் என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை வேறெதுவும் தடுக்கவில்லை. (நபியே!) நீர் கூறும், பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்)தூதராக இறக்கி யிருப்போம் என்று,

எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன் நிச்சயமாக அவன் தான் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின்றான் என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 17:94-96)

அன்று நபி(ஸல்) அவர்கள் அல்குர்ஆனைப் படித்துக் காட்டியபோது குறை´ நிராகரிப்பாளர்களும், இறை நெறிநூல் வழங்கப்பட்டும், இறைத் தூதர்களை தெய்வ குமரர்களாக மாற்றி வணங்கியவர்களும் எதிர்த்தனர். அவர்களுக்கு அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் பதிலளித்தான். அல்குர்ஆனைப் பார்க்காது, அதனை நிராகரித்தவர்களை அல்லாஹ் குருடனாகக் கூறுகின்றான். அவதானியுங்கள்.

யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேரைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான். (அல்குர்ஆன்: 17:72)

மேலும், அல்குர்ஆன் மூலம் நேர்வழி அடையாது வழிகேட்டின் பக்கம் வாழ்கிறார்களோ அவர்கள் மறுமையில் குருடனாக எழுப்பப்படும்போது அவர்கள் அல்லாஹ்விடம் கேட்பதை அவதானியுங்கள்.

எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும். மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாகவே எழுப்புவோம் என்று கூறுவான்.

(அதற்கு இறைவன்) இவ்விதம் தான் இருக்கும். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன அவற்றை நீ மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று கூறுவான்.

ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கிறானோ அவனுக்கு அவ்வாறு தான் நாம் கூலி கொடுப்போம். மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் : 20:124-127)

ஆகவே, அல்லாஹ்வின் அல்குர்ஆனைப் பார்க்காது நிராகரித்தவன் குருடனாகத்தான் உண்மையில் இருப்பான் எனக் குறிப்பிடுகின்றது. அத்துடன் முன்னைய இறைத்தூதர்களுக்குப் பல அற்புதங்களை செய்து காட்டுவதற்காகப் பணித்தான். ஆனால் இறுதி இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட பிரதானமான அற்புதம் அல்குர்ஆனாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒவ்வோர் இறைத் தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய இறைநெறி அறிவிப்பு (வஹீ) தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். (புகாரி: 4981)

அறிவுமிக்க மனித சமுதாயமே அல்குர்ஆனை அவதானித்து ஆராய்ந்து பாருங்கள். அப்போது உங்களுக்குப் புரியும் அல்குர்ஆன் ஒரு மனிதனால் கற்பனை செய்து எழுதப்பட்டதல்ல. இது ஏக இறைவனால் கற்பனை செய்யப்பட்டு அருளப்பட்டது எனத் தெரிய வரும். சிந்தியுங்கள் அல்குர்ஆனை அவதானித்துப் பாருங்கள்.

அதில் எத்தனையோ விஞ்ஞான உண்மைகள் மறைந்து இருப்பதைக் காண்பீர்கள். அவற்றில் சில மனிதனால் நிரூபிக்கப்பட்டவைகளாகவும், பல எதிர்காலத்தில் நிரூபிக்க வேண்டியவைகளாகவும் இருக்கும். இந்த உண்மைகளை 1437 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எழுத வாசிக்கத் தெரியாத மனிதனால் கூறமுடியுமா? ஒருபோதும் முடியாது அல்லவா? அது அல்லாஹ்விடம் இருந்து முஹம்மது(ஸல்) அவர்களுக்கு வந்தமையினாலேயே, அல்குர்ஆனில் எந்தப் பிழைகளும் இன்றி, முரண்பாடுகளும் இன்றி உண்மைகள் இடம்பெற முடிகின்றது. அல்குர்ஆனில் காணப்படும் சில உண்மைச் செய்திகளை அவதானியுங்கள்.

ஒரு வருடத்திற்கு 12 மாதங்களே என்ற உண்மை

அன்று பல நாடுகளில் மாதங்களின் எண்ணிக்கை பலவிதமாக அமைந்திருந்தன. சில மக்கள் மாதம் 10 எனவும், இன்னும் சில மக்கள் மாதம் 12 எனவும், இன்னும் சில நாடுகளில் வேறு விதமாகவும் இருந்தது. ஆங்கில மாதங்களிலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஆனால் அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது. அவதானியுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வின் பதிவுப் புத்தகத்தில் வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். (அல்குர்ஆன்: 9:36)

ஒரு சந்திர மாதத்தின் நாட்கள் 29 நாட்களாக அமையும், சந்தேக நாளாயின் 30 நாளாக பூரணப்படுத்த முடியும்.

அன்று சந்திர மாதங்களை மக்கள் பலவாறு கணித்தனர். அந்த காலங்களில் சந்திரன் பற்றிய விஞ்ஞான வான்கலை வளர்ச்சி அடைந்திருக்க வில்லை. முதல் பிறை கணிப்பதில் பிழைகள் இடம் பெறக்கூடிய காலம். அன்று மக்காவில், மதீனாவில் வாழ்ந்த மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் சில வணக்க வழிபாடுகளுக்காக வியாபாரத் தேவைகளுக்காக கணக்கீடுகளை அறிந்தே வைத்திருந்தனர். உதாரணமாக அவர்கள், 1,2,3,4,7,8,11,10,12,13,14,15,29,30, 33,34,40,100,700 இப்படி எண்களைப் புரிந்து செயற்படக் கூடியவர்களாகவே இருந்தனர். ஆனால் அவர்கள் இயற்கையாக சந்திரனில் முதல் பிறை ஒளிக்கீற்றை விஞ்ஞான அல்லது கணித முறையில் கணிப்பிட்டு மாத நாட்களை கணிக்க, எண்ணத் தெரியாத உம்மிகளாக இருந்தனர். ஆகவே பல சிரமங்களுக்கு மத்தியில் ஒருவர் அல்லது இருவர் பார்த்து வெளிப்படுத்தும் செய்தியின் அடிப்படையிலேயே சந்திர மாதத்தின் முதல் நாள் கணிப்பீடுகள் தீர்மானிக்கப்பட்டது. இதனால் மக்காவிலும், மதீனத்திலும் வேறு வேறு நாட்களில் மாத நாட்கள் வேறுபட்டன. பின்வரும் ஹதீஃதில் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறைக் கணிப்பீடு பற்றி விளக்குவதைப் பாருங்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும். (முஸ்லிம்:1966)

விஞ்ஞானிகள் சந்திர மாதம் அடைவதற்கு அண்ணளவாக 29.5 நாள் எடுப்பதாகக் குறிப்பிடுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் இதனை 1437 ஆண்டுகளுக்கு முன் மாதம் 29 நாள் எனவும் சந்தேகமாயின் 30 நாளாக எண்ணிக் கொள்ளும்படி வான்கலை வளர்ச்சி அடையாத அக்காலத்தில் இப்படிப் பணிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள், நாம் எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயம் (உம்மத்துன் உம்மிய்யா) ஆவோம் எழுதுவதை நாம் அறியமாட்டோம். கணிதத்தை யும் (வான்கலையும்) நாம் அறியமாட்டோம். மாதம் என்பது சில வேளைகளில் இப்படியும், இப்படியும், இப்படியும் (இருபத்தொன்பது நாட்களாக) இருக்கும் என்று (மூன்று தடவை) கூறி, மூன்றாவது தடவையில் பெருவிரலை மடக்கிக் கொண்டார்கள். மேலும், மாதம் என்பது (சில வேளைகளில்) இப்படி யும், இப்படியும், இப்படியும். அதாவது முப்பது நாட்களாகும்) இருக்கும் என்று கூறினார்கள். (முஸ்லிம் : 1970)

அன்று அல்லஹ் ஏற்படுத்திய சந்திரனின் இட நிலைகளை கணித முறையில் அல்லது விஞ்ஞான முறையில் கணிக்க அல்லது கண்டு அறிய முடியாத சமுதாயமாக இருந்தனர். ஆகவே அவர்கள் தமது இயலுமைக்கேற்ப மாதங்களைக் கண்டு கணித்தனர். ஆனால் அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் சூரியனும், சந்திரனும் ஏன் படைக்கப்பட்டன எனவும், அவை எந்த அடிப்படையில் செயல்படுகின்றன என மனிதனுக்கு ஆராய்ந்து அறிந்து, அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து கொள்ளும்படி குறிப்பிடுவதை அவதானியுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ்தான், வித்துகளையும், கொட்டைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கிறான். இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் அவனே வெளிப்படுத்துகிறான்; அவனே உங்கள் அல்லாஹ். எப்படி நீங்கள் திசை திருப்பப்படுகிறீர்கள்?

அவனே பொழுது விடியச் செய்கிறவன் (நீங்கள் களைப்பாறி) அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான். இவை யாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும்.

அவனே உங்களுக்காக நட்சத்திரங்களை உண்டாக்கினான். அவற்றைக் கொண்டு நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் நீங்கள் வழியறிந்து செல்கிறீர்கள். அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை இவ்வாறு விபரிக்கிறோம். (அல்குர்ஆன்: 6:95-97)

அல்லாஹ் சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்றவை படைக்கப்பட்டதன் காரணங்களை அல்குர்ஆன் மூலம் விபரிக்கிறான்.  அத்துடன் இவை இயங்குகின்ற முறையைப் பின்வருமாறு விபரிக்கிறான்.

அவன்தான் சூரியனை மின்னும் ஒளிமிகுந்ததாகவும், சந்திரனை (வெளிச்சந்தரக்கூடிய) பிரகாசமாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கை நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய அதற்கு, மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண் டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை; அவன் (இவ்வாறு) அறிவுடைய மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விபரிக்கிறான். (அல்குர்ஆன்: 10:5)

அல்லாஹ், சூரியனைத் தன்னைத் தானே சுடர் விட்டு ஒளி கொடுக்கக் கூடியதாக ஆக்கியுள்ளான். அதேபோல் சந்திரன் சூரியனின் மூலம் பிரகாசிக்கக் கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகிறான். அத்துடன் சூரியனையும், சந்திரனையும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், பருவ காலங்களின் கணக்கையும் காட்டுவதற்காக படைத்ததாக குறிப்பிடுகிறான். அத்துடன் மாறிவரும் பல படித்தரங்களையும் அமைத்துள்ளதாக கூறுகின்றான். அத்துடன் அவை அல்லாஹ் விதித்துள்ள வட்டவரைக்குள் செல்வதாக பின்வருமாறு கூறுகிறான் பாருங்கள். சூரியன் சந்திரனை நெருங் கிப்பிடிக்க முடியாது. இரவு பகலை முந்த முடியாது. அவை தமக்கு வழங்கப்பட்டுள்ள வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன என்ற உண்மையை உம்மி நபிக்கு எவ்வாறு சொல்ல முடிந்தது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அப்போது அல்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பது அறிந்து கொள்ள முடியும். சிந்திப்போர் உண்டா?

சூரியன் தானாக ஒளி கொடுக்கக் கூடியது. ஆனால் சந்திரன் சூரியனில் இருந்து ஒளியைப் பெற்று பிரகாசிக்கக்கூடியதாக உள்ளது. இந்த உண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுவதைப் பாருங்கள்.

இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன்: 71:16)

பூமி உருண்டை என்பதை பின்வரும் வசனம் வெளிப்படுத்துகிறது.

அன்று மக்கள் பூமி தட்டையானது என்றே நம்பினர். அந்த மக்களிடம் அல்குர்ஆன் பூமி உருண்டை வடிவானது என பின்வருமாறு கூறுகிறது. அவதானியுங்கள்.

(பூமியில்) இரு கீழ்த்திசைகளுக்கும் இறைவன் அவனே இரு மேல் திசைகளுக்கும் இறைவன் அவனே. (அல்குர்ஆன்: 55:17)

பூமி தட்டையாக இருப்பின் ஒரு மேற்குத் திசையும், ஒரு கீழ் திசையும் பூமியில் இருக்க முடியும். ஆனால், பூமி உருண்டையாக இருக்கும்போதே இரு கீழ்த் திசைகளும், இரு மேல் திசைகளும் இருக்க முடியும். மேலும் பின்வரும் நபி(ஸல்) அவர்களின் ஹதீஃதை அவதானியுங்கள். அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக்(உருண்டை வடிவில்) காட்டினான். அதில் சூரியன் உதிக்குமிடங்களையும் (கிழக்குப் பகுதிகள்) அது மறையுமிடங்களையும் (மேற் குப் பகுதிகள்) கண்டேன். அதில் எனக்குச் சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும். அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரழி), நூல்: முஸ்லிம் : 5538.

இந்த ஹதீஃத் மூலம் அன்று பூமி தட்டை என நம்பியிருந்த காலத்தில் அல்லாஹ் தூதருக்கு பூமியை சுருட்டி(சுழட்டிக்) கோளவடிவில் காட்டியுள்ளான். அதில் சூரியன் உதமாகும் இடத்தையும், சூரியன் மறையும் இடத்தையும் காணக்கூடியதாக இருந்ததாக குறிப்பிடுகிறார்கள். அன்று இந்த உண்மையை அல்லாஹ்வின் உதவியின்றிக் காண முடியுமா? சிந்தியுங்கள். அத்துடன் மறுமையில் அல்லாஹ் ரொட்டி சமைப்பதற்காக மா உருண்டை வடிவில் இருந்ததை தட்டி தட்டை வடிவில் ஆக்குவது போல் பூமியை ஆக்குவதாக குறிப்பிட்டான். பூமி தட்டை என நினைத்திருந்த சமுதாயத்திடம் பூமி உருண்டை என மறைமுகமாக குறிப்பிடுவதை கீழ் வரும் ஹதீஃத் குறிப்பிடுகின்றது. அவதானியுங்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், மறுமை நாளில் இந்த பூமி ஒரு ரொட்டியைப் போன்று (சம தளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றி) தட்டிப் போடுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த இறைவன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப் போடுவான். அதையே சொர்க்க வாசிகளுக்கு விருந்தாக்குவான் என்று சொன்னார்கள். (முஸ்லிம் : 5382)

உயிரினங்கள் நீரிலிருந்து படைக்கப்பட்டதாக விஞ்ஞானம் கூறுகின்றது.

அல்குர்ஆன் என்ன கூறுகிறது என்று பாருங்கள்.

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள்(நிராகரிப்போர்) பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? (அல்குர்ஆன்:21:30)

1437 ஆண்டுகளுக்கு முன் இந்த உண்மைகளை எழுத வாசிக்கத் தெரியாத உம்மி நபிக்கு அல்லாஹ்வின் உதவியின்றி இவற்றைக் கூறியிருக்க முடியுமா? முதலில் வானங்களும், பூமியிலும் இணைந்திருந்தன என்ற உண்மையை எப்படிக் கூற முடியும்? சிந்திக்க மாட்டீர்களா?

பூமியின் தோற்றம் பற்றி அல்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்தபின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே இவற்றையயல்லாம் நீங்கள் நினைத்துச் சிந்திக்கவேண்டாமா? வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒருநாள் ஒவ்வொரு காரியமும் அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த நாளின் அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். (அல்குர்ஆன்: 32:4,5)

அல்லாஹ்வின் கணக்கின்படி நாள் என்பது உலக நாட்கணிப்பினை விட வேறுபட்டதாகும். அவன் வானங்களையும், பூமியையும் படைத்த அமைப்பை பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

“தக்லீது” – ஓர் ஆய்வு!

அபூ ஃபாத்திமா

மறுபதிப்பு : செப்டம்பர் 1987

இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீஃதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும் என்று சொன்னவுடன், “தக்லீது” செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது, மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது. அந்நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது, காரணம் இவை எல்லாம் “தக்லீது” ஆகும் என்று உடனே சொல்லி விடுகிறார்கள். தக்லீது செய்யாமல் நடப்பதாக இருந்தால், சுயமாக ஞானோதயத்தில் விளங்கி நடக்க வேண்டும், இது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம் இல்லை. ஆகவே தக்லீது செய்துதான் ஆகவேண்டும், என்று தக்லீதை நியாயப்படுத்த பெரும்பாலான முஸ்லிம்கள் முனைகிறார்கள்.

இந்த ஹிமாலயத் தவறுக்கு அடிப்படைக் காரணம். “தக்லீது” என்றால், பின்பற்றல் என்ற தவறான பொருளை காலங்காலமாக அவர்கள் விளங்கி வைத்திருப்பதேயாகும்.

“தக்லீது” என்ற அரபி பதம் “பின்பற்றல்” என்ற பொருளை ஒருபோதும் தராது. ஆனால் தலைமுறை, தலைமுறையாகத் “தக்லீது” என்ற அரபி சொல்லுக்குப் “பின்பற்றல்” என்ற தவறான பொருள், சுயநலக்காரர்களால், அவர்களின் உலக ஆதாயம் கருதி கொடுக்கப்பட்டு, மக்களிடையேயும் அதுவே வலுவாக வேரூன்றி விட்டது.

அல்குர்ஆன் 6236 வசனங்கள் அனைத்திலும், ஹதீஃதுகள் அனைத்திலும் பல இடங்களில் பின்பற்றுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தும், ஒரு இடத்தில்கூட இந்த “தக்லீது” பதம் பயன்படுத்தப்படவில்லை என்பது முஸ்லிம்களின் ஆழந்த சிந்தனைக்குரிய ஒர வியமாகும். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் தவறான, பின்பற்றுதலுக்கும், இந்தத் “தக்லீது” பதம் பயன்படுத்தப்படவே இல்லை என்பதையும் முஸ்லிம்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டுகிறோம்.

“உங்கள் ரப்பிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள், அவனையன்றி வேறெவரையும் பாதுகாவலர்களாக்கி(க்கொண்டு) அவர்களைப் பின்பற்றாதீர்கள் எனினும் இதன்படி நல்லுணர்வு பெறுவோர் உங்களில் வெகு சொற்பமே”. (அல்குர்ஆன் : 7:3)

இந்த வசனத்தில் “வலாதத்தபிவூ” என்ற பதமே பின்பற்றாதீர்கள் என்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. “தக்லீது” என்ற பதம் பயன்படுத்தப் படவில்லை.

“எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்(ஸய்யிது)களுக்கும், எங்கள் பெரியார் (அகாபிரீன்)களுக்கும் வழிப்பட்டோம், அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள்” (அல்குர்ஆன்: 33:67) நரகவாதிகள் நரகில் வேதனை செய்யப்படும் போது அவர்களின் ஓலம் இது.

இங்கும் தவறான பின்பற்றுதலுக்கு (வழிபடுதல்) “அதஃனா” என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது மாறாக, “தக்லீது” என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை.

“அல்லாஹ் இறக்கி வைத்த இ(ந்நூலை)தைப் பின்பற்றுங்கள், என்று அவர்களிடம் கூறப்பட்டால் அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம். (அல்குர்ஆன்: 2:170)

இங்கு வழி தவறியவர்களும் “நத்தபிஃ” என்ற பதத்தையே தவறான பின்பற்றுதலுக்கு பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம். ஆனால், “தக்லீத்” என்ற பதத்தைப் பயன்படுத்தவில்லை.

ஆக குர்ஆன், ஹதீஃதுகள் முழுக்கத் தேடினாலும் பின்பற்றுதலுக்கு, அது சரியான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி, தவறான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி “”தக்லீத்” என்ற பதம் ஓரிடத்திலும் பயன்படுத்தப்படவில்லை என்பதைச் சகோதர, சகோதரிகள் தங்கள் உள்ளங்களில் நன்கு பதித்துக் கொள்ளவும். எவர் உங்களிடம் வாதம் செய்ய முன்வந்தாலும் குர்ஆனில் ஒரு வசனத்தையோ, உண்மை ஹதீஃதுகளில் ஒரு ஹதீஃதையோ, பின்பற்றுதலுக்கு “தக்லீத்” பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டச் சொல்லிக் கேளுங்கள். அப்போதுதான் உண்மை உங்களுக்குப் புரியவரும்.

குர்ஆனின் 5ம் அத்தியாயம் மாயிதாவில் 2, 97 இரண்டு வசனங்களில், தக்லீதைச் சேர்ந்த “கலாயித” என்ற பதம் மாலைகளால் அடையாளமிடப்பட்ட குர்பானி (பலி) மிருகங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹதீஃதுகளிலும் அடையாளமிடப்பட்ட குர்பானி மிருகங்களை “கலாயித” என்ற அரபி பதத்தின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

“தக்லீத்” என்னும் அரபி பதத்தின் மூலம் :

கல்லத-யுகல்லிது “தக்லீத்” கல்லதஹூ ஃபீகதா தபிஅஹு மின் ஃகய்ரி தஅம்முலின் வலாநழ்ரின்- எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.

கிறிஸ்தவர்களிடத்தில் தக்லீது :

அவர்களின் வேத நூல்களில் பதிவு செய்யப்பட்டது. அவர்களின் பாதிரிகளின் போதனைகளைக் காலங்காலமாக எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும். (முன்ஜித்-அரபி மொழி அகராதி)

குர்ஆன், ஹதீஃதுகளில் காணப்படாத “தக்லீத்” பதம் முன்னைய மதாவாதிகளால் பயன்படுத்தப்படுகின்றது. அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி வழிகெட்டுச் செல்லும் ஒரு கூட்டமே, தங்கள் சுயநலம் கருதி, இஸ்லாத்தில் இந்தத் தக்லீதை நுழைத்துள்ளனர் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.

இதை நபி(ஸல்) அவர்கள் 1437 வருடங்களுக்கு முன்பே அழகாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

“எனது சமுதாயத்திற்கு ஒரு காலம், பனூ இஸ்ரா யீல்களுக்கு வந்தது போல், ஒரு செருப்பிற்கு அடுத்த செருப்பு ஒத்திருப்பது போல் வந்து சேரும். அவர் களிலொருவன் தனது தாயிடம் (தவறு செய்ய) பகிரங்கமாக வந்திருந்தால், அவ்வாறே (தவறு செய்பவன்) எனது சமுதாயத்திலும் வருவான்.

நிச்சயமாக பனூ இஸ்ராயீல் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள். எனது உம்மத்தினர் 73 கூட்டங்களா கப் பிரிவார்கள். அவர்களில் ஒரு கூட்டத்தாரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் நரகத்தையடைவர். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு (நபி தோழர்கள்) அக்கூட்டத்தார் யார்? என்று கேட்க, (இன்றைய தினம்) நானும் எனது தோழர்களும், எவ்வாறு நடக்கிறோமோ, அவ்வாறே நடப்பவர்கள் என்று விடையளித்தார்கள். (வேறு எந்த தனிப் பெயரையும் நபி(ஸல்) அவர்கள் அந்த வெற்றி பெறும் கூட்டத்திற்குச் சூட்டவில்லை என்பது இங்கு ஊன்றி கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்) அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) நூல்கள்: திர்மிதீ, அஹ்மத், அபூதாவூத்

அபூதாவூதில் முஆவியா(ரழி) அவர்களின் வாயிலாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள், அவர்களிடையே தான்தோன்றித்தனமான வகையில், அனாச்சாரங்கள், வெறிநாய் கடித்த வனது உடலில் அதன் விஷயம், நரம்பு, தசைகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்றுவிடுவது போன்று, ஊடுருவிச் சென்றுவிடும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் முன்னோர்களை நீங்கள் சானுக்குச் சான், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள், அவர்கள் உடும்பின் துவாரத்திற்குள் புகுந்திருந்தாலும், அவர்களை (அப்படியே) பின்பற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நாங்கள் “யாரசூலுல்லாஹ்! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா கூறுகிறீர்கள்” என்று கேட்டோம் அதற்கு அவர்கள் “வேறு யாரை” என்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரழி) நூல் : முஸ்லிம்.

முன்னைய மதவாதிகளின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி அவர்கள் தக்லீதின் பேரால் செய்யும் காரியமான, “அவர்கள் இறைவனை விட்டு, தம் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் மரியமுடைய மகன் மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். (அல்குர்ஆன் 9:31) என்று இறைவன் சொல்வது போல், இவர்களும் தக்லீதின் பேரால், இறைவனை விட்டு தம் மவ்லவிகளை, இமாம்களைத் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் கடவுள் என்று வணங்கவில்லை. தம் பாதிரிகளின் கூற்றுக்கள், அவர்களின் வேதத்திற்கு முரணாக இருந்தாலும் எடுத்து நடந்தனர். இதேபோல் முகல்லிதுகள், குர்ஆன், ஹதீஃதுகளுக்கு நேர்முரணான காரியங்களை இமாம்கள் சொன்னார்கள், மவ்லவிகள் சொல்கிறார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் பின்பற்றுகின்றனர். நபி(ஸல்) அவர்கள், வழிகெட்டுச் செல்வோர் பற்றிக் கூறியவற்றை அப்படியே முகல்லிதுகள் முழுக்க முழுக்க நிறைவேற்றுகின்றனர்.

பனூ இஸ்ராயீல்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தது போல், முகல்லிதுகளும் பல வழி தவறிய கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு கூட்டமும் நபி(ஸல்) அவர்களை வழிகாட்டியாக ஏற்று நடக்கத் தவறி விட்டனர். அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒருவரை இமாமாக-தலைவராக ஏற்றுக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுகின்றனர். ஆக ஜோடி செருப்பில் ஒரு செருப்புக்கு மறு செருப்பு ஒத்திருப்பது போல், பனூ இஸ்ராயீல்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றுகின்றனர். இதிலிருந்து யூத கிறிஸ்தவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர்கள் முகல்லிதுகளே, குர்ஆன், ஹதீஃதுகளை மட்டும் எடுத்துச் செயல்படுகிறவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

இதேபோன்று சூபிஸ தத்துவமும் (தரீக்கா பிரிவுகள், சமாதிச் சடங்குகள்) இது முற்றினதால் ஏற்பட்டுள்ள துறவு மனப்பான்மையையும், நபி(ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாத்தில் இல்லை, குர்ஆன், ஹதீஃதுகளில் இவற்றிற்குரிய ஆதாரங்கள் எள்ளளவும் இல்லை. ஆனால் முன்னைய மதவாதிகளிடம், யூத கிறிஸ்தவர்களிடம் இவை இருந்து வருகின்றன. இவற்றையும் அவர்களிடமிருந்தே அப்படியே காப்பி அடித்து, இஸ்லாத்தில் நுழைத்து விட்டார்கள். எனவே இந்த தக்லீதையும், தஸவ்வுஃபையும் மதவாதிகளைக் காப்பியடித்து, எடுத்து நடப்பவர்கள் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறவர்களாகவோ, நேர்வழி நடப்பவர்களாகவோ, அல்லாஹ்வின் பொருத்தம் பெறக்கூடியவர்களாகவோ, ஒருபோதும் ஆக முடியாது என்பது தெளிவான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த வழிகேடுகளிலிருந்து வல்ல இறைவன் நம்மைக் காப்பானாக.

அவர்கள் (விசுவாசிகள்) தங்கள் இரட்சகனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல், அவற்றின் மீது விழமாட்டார்கள், (பார்த்துப் பரிசீலனை செய்து செயல்படுவார்கள்) அல்குர்ஆன்: 25:73

இந்த வசனத்திலிருந்து குர்ஆனை தக்லீது செய்வதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. (பார்வை, பரிசீலனையில் வரமுடி யாத, மறைவான வி­யங்களில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பது வேறு குர்ஆன் வசனங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது)

நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்குர்ஆன் : 3:31

இந்த வசனத்தில் நபி(ஸல்) அவர்களையே தக்லீது செய்யச் சொல்லப்படவில்லை, “இத்திபா” என்னும் விளங்கிப் பின்பற்றுதலே வலியுறுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில் மார்க்க விவகாரங்களைத் தவிர, (அல்லாஹ்வின் கட்டளை, ஒப்புதல் அடிப்படையில் சொல்லப்படுவது) நபி(ஸல்) அவர்களின் சொந்த விருப்பங்கள், அபிப்பிராயங்கள் அனைத்தும் நபிதோழர்களால் எடுத்து நடத்தப்படவில்லை என்பதற்குச் சரியான பல ஹதீஃது ஆதாரங்களைப் பார்க்க முடிகின்றது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் வசனங்களையே தக்லீது செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை, அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களையே “தக்லீத்” செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை, மாறாக சிந்தித்துப் பார்த்து செயல்படவே ஆணையிடுகிறான். இந்த நிலையில் வேறு யாரையும் “தக்லீத்” செய்ய அல்லாஹ் அனுமதித்து இருப்பானா? ஒருபோதும் அனுமதித்து இருக்கமாட்டான். முன் சொல்லப்பட்ட அல்குர்ஆன் 7:3 வசனம் “தக்லீதை” மிக வன்மையாக மறுத்தே இறக் கப்பட்டுள்ளதை அறிவுடையவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இதைத் தெளிவாக விளங்கி “தக்லீதை” விட்டு தவ்பா செய்ய முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கடமைப்பட்டிருக்கிறார்கள். அறிவுடையவர்கள் மட்டுமே முஸ்லிம்களாக இருக்க முடியும். “தக்லீதை” விட்டு தவ்பா செய்து நீங்காத வர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே தெளிவாகும்.

தக்லீதிற்கும், இத்திபாவிற்கும் உள்ள வேறு பாடுகள்:

1. சமீப காலத்தில் யூதர்கள் குர்ஆனில் பல இடைச் செருகல்களைச் சேர்த்து, லட்சக்கணக்கான குர்ஆன் பிரதிகள் அச்சடித்து, உலகம் முழுவதும் பரப்பினார்கள். அந்த குர்ஆனை பார்த்துப் பரிசீலனை செய்யாது அனைத்தும் இறைவனின் வசனங்கள் என்று நம்பிச் செயல்படுகிறவர்கள், “தக்லீது” செய்யும் முகல்லிதுகள் ஆவார்கள். அதைப் பார்த்துப் பரிசீலனை செய்து இடைச் செருகல்களை நீக்கி, இறைவன் வசனங்களை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள் “இத்திபா” செய்யும் விளங் கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

2. இதேபோல் ஹதீஃது நூல்களில், இட்டுக் கட்டப்பட்ட ஹதீஃதுகள், பலவீனமான ஹதீஃதுகள் இடைச் செருகல்களாக லட்சக்கணக்கில் நுழைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தையும் உண்மை ஹதீஃதுகள் என்று பார்த்துப் பரிசீலனை செய்யாமல் நம்பிச் செயல்படுகிறவர்கள் தக்லீது செய்யும் முகல்லிதுகள் ஆவார்கள். ஹதீஃதுகளைப் பார்த்து பரிசீலனை செய்து, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃதுகளையும், பலவீனமான ஹதீஃதுகளையும் நீக்கிவிட்டு, உண்மையான ஹதீஃதுகளை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள் “இத்திபா” செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

3. எந்த நூலில் எழுதப்பட்டிருந்தாலும், யாருடைய பேச்சாக இருந்தாலும், அவற்றை குர்ஆன், ஹதீஃதுகளோடு ஒத்துப் பார்த்து பரிசீலனை செய்யாமல், நம்பி எடுத்து நடப்பவர்கள், “தக்லீது” செய்யும் முகல்லிதுகள் ஆவார்கள். அவை மனிதர்களால் ஆக்கப்பட்டவை, அல்லது மனிதர்களால் பேசப்பட்டவை, வேதவாக்கல்ல என்ற உயர்ந்த நோக்கத்தோடு, அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்து, குர்ஆனுக்கும் உண்மை ஹதீஃதுகளுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும் எடுத்து நடப்பவர்கள், “இத்திபா” செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

4. அந்நஜாத்திலே வந்துவிட்டது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி, அவற்றைப் பார்த்து பரிசீலனை செய்யாமல் எடுத்து நடப் பவர்கள் “தக்லீது” செய்யும் முகல்லிதுகள் ஆவார்கள். அந்நஜாத்தில் வந்தாலும், அதில் எழுதுபவர்களும் மனிதர்களே, அவர்களிலும் தவறுகள் ஏற்படலாம் என்று அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்து குர்ஆனுக்கும், உண்மை ஹதீஃதுகளுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும் எடுத்து நடப்பவர்கள் “இத்திபா” செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

இப்போது தக்லீதுக்கும் (கண்மூடிப் பின்பற்றல்) இத்திபாவுக்கும் (விளங்கிப் பின்பற்றல்) உள்ள வேறுபாட்டை, நன்கு விளங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் ஈ அடிச்சான் காப்பி அடிப்பது “தக்லீது” ஆகும். “சார் அவன் மிகச் சரியாக எழுதுகிறான். அதனால்தான் நான் அவனைக் காப்பி அடிக்கிறேன்” என்று எந்த மாணவனும் சொல்ல முடியாது. காப்பி அடிப்பது அரசால் தடை செய்யப்பட்டிருப்பது போல், “தக்லீது” அல்லாஹ்வால் தடை செய்யப் பட்டுள்ளது. பரீட்சைக்கு முன் திறமையான மாணவனிடம், பரீட்சையில் வரும் கேள்விகளைப் பற்றிக் கேட்டு விளங்கிக் கொண்டு, பரீட்சையில் சுயமாக எழுதுவது அரசால் அனுமதிக்கப்பட்டிருப்பது போல், திறமைமிக்கவர்களிடம், குர்ஆனையும், ஹதீஃதுகளையும் அறிந்தவர்களிடம் (அவர்களின் கற்பனைக் கட்டுக்கதைகளையோ, யூகங்களையோ அல்ல)கேட்டு, குர்ஆன், ஹதீஃதுகளில் உள்ளவை தான் என்று விளங்கி எடுத்து நடப்பதை, அல்லாஹ் அனுமதிக்கிறான். இதற்கு “இத்திபா” என்றே சொல்லப்படும்.

இதற்குப் பிறகும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் தக்லீதுக்கும், இத்தியாவுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இரண்டும் ஒன்றுதான் என்றோ, தக்லீது செய்யாமல் மார்க்கத்தை எடுத்து நடக்க முடியாது என்றோ, சரியாக இருந்தால் தக்லீது செய்யலாம் என்றோ சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத தக்லீதை விட்டு முற்றிலும் தவ்பா செய்து மீள்வோமாக! அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட “இத்திபா” செய்யப் பழகுவோமாக!

தக்லீது : கண்மூடிப் பின்பற்றல், புரோகிதமும், இடைத்தரகர்களும் இஸ்லாத்தில் புகுந்து, ஐக்கிய சமுதாயத்தைக் கூறுபோட்டு சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது.

முகல்லிது : பார்த்துப் பரிசீலனை செய்யாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவன்.

இத்திபா : விளங்கிப் பின்பற்றல்-புரோகிதத்தையும், இடைத்தரகர்களையும் ஒழித்துக்கட்டி ஐக்கிய, சமத்துவ, சகோதரத்துவ, சமுதாயம் அமைய வழிவகை செய்கிறது.

முஸ்லிம் சமுதாயத்திற்கு தக்லீது வேண்டுமா? இத்திபா வேண்டுமா?

எவனொருவன் நேர்வழி இன்னதென்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத் தூதரை விட்டுப் பிரிந்து, (வேறு ஒருவரை இமாமாக ஆக்கிக்கொண்டு) முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான)வழியிலேயே செல்லிவிட்டு, நரகத்திலும், அவனை நுழையச் செய்வோம், அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (4:115)

குறிப்பு : தக்லீதின் பெரும் கெடுதிகள் பற்றி அந்நஜாத் ஆரம்பத்திலேயே அதுவும் தக்லீதை நியா யப்படுத்தும் மவ்லவி புரோகிதர்கள் அந்நஜாத்தை விட்டு வெளியேறிய ஆரம்பத்திலேயே இந்த ஆக்கம் செப்டம்பர் 1987 இதழில் இடம் பெற்று அதன் பின்னர் பலமுறை மறு பதிப்பும் செய்யப்பட்டுள்ளது.

அதுவே இந்த இதழிலும் இடம் பெற்றுள்ளது. அரபு மொழிப் பண்டிதர்கள் மட்டுமே குர்ஆனை சரியாக விளங்க முடியும். குர்ஆன் மொழி பெயர்ப்பைப் பார்த்து மார்க்கத்தை விளங்க முடியாது. மவ்லவிகளை தக்லீது செய்தே ஆகவேண்டும் என்று நம்பி ஆலிம்கள் என வீண் பெருமையே பேசும் (7:146) தர்கா, தரீக்கா, மத்ஹபு, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஸலஃபி, தவ்ஹீத் என எப்பிரிவு மவ்லவிகள் பின்னால் சென்றாலும் அவர்கள் தக்லீது செய்யும் முகல்லிதுகளே. அவர்கள் ஆறறிவு மனித ஜாதிகள் இல்லை. ஐயறிவு மிருக ஜாதிகளே (பார்க்க 5:2,97)

எவர்கள் இம்மவ்லவிகளை தக்லீது செய்வதை விட்டு விடுபட்டு, 2:186 இறைக்கட்டளைப்படி மவ்லவிகளை நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்பி, 7:3 இறைக்கட்டளைப்படி குர்ஆன், சுன்னாவை நேரடியாக அறிந்து அதன்படி நடப்பவர்கள் மட்டுமே இத்திபா செய்பவர்கள், நேர்வழி நடப்பவர்கள், நாளை சுவர்க்கம் நுழையும் நற்பாக்கியவான்களாகும்!

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : குர்ஆன் ஓதுவதைத் தவிர்த்து அரபி மொழி பற்றிய எந்த ஞானமும் இல்லாததால் மொழி பெயர்ப்புகளைப் படித்துத்தான் குர்ஆன், ஹதீஃதை விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே மொழி பெயர்ப்பாளர்களை தக்லீத் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவர்களில் யார் உண்மையான விளக்கம், சுய விளக்கம், மேல் விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. எனவே அரபி மொழியை முழுமையாகக் கற்றவர்கள்தான் யாரையும் தக்லீது செய்யாது சுயமாக விளங்கிக் கொள்ள முடியும். எனவே என் போன்றவர்கள் தக்லீது செய்தாக வேண்டும் என்கிறேன். ஆனால் அரபி மதரஸாவிற்குச் சென்று முறையாக 5 அல்லது 6 ஆண்டுகள் கல்வி கற்காத தாங்கள் யாரையும் தக்லீது செய்யாதீர்கள் என்கிறீர்கள். அது எப்படி சாத்தியம்?
S.M. நாஸர், நாகர்கோவில்

விளக்கம் : உங்கள் விமர்சனத்திற்கு விளக்கம் தருவதற்கு முன்னால் நாம் ஆரம்பத்திலிருந்து தெளிவாகச் சொல்லிவரும் ஒரு முக்கியமான ஒன்றை மீண்டும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். யாரையும் தக்லீது செய்யாதீர்கள் என்று நாம் சொல்லுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நாம் அப்படிச் சுயமாகச் சொன்னால் மார்க்க அடிப்படையில் அது கால் காசு அல்ல கால் தூசும் பெறாது. காரணம் மார்க்கத்தில் எமது சுய கருத்தைச் சொல்ல அணுவின் முனை அளவும் எமக்கு அனுமதி இல்லை. 33:36 குர்ஆன் வசனப்படி அது பகிரங்கமான வழி கேடு.

அந்நஜாத்தின் ஆசிரியராக பொய்யன் பீ.ஜை. 1986 ஏப்ரலிலிருந்து 1987 ஜூன் வரை இருந்த கால கட்டத்தில் அந்நஜாத்தையோ, எம்மையோ ஒரு போதும் தக்லீது செய்யாதீர்கள் என்று பகிரங்கமாக அவர் எழுத முன்வரவில்லை என்றாலும், நாம் ஆசிரியர் பொறுப்பை ஏற்றதிலிருந்து அந்நஜாத்தையோ, எம்மையோ ஒருபோதும் தக்லீது செய்யவே கூடாது என்று பகிரங்கமாக மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம், எழுதி வருகிறோம். இந்த நிலையில் “யாரையும் தக்லீது செய்யாதீர்கள்” என்று நாம் சொல்லுவதாக எழுதி இருக்கிறீர்கள், அது தவறு.

யாரையும் தக்லீது செய்யாதீர்கள் என்று நாம் சொல்லுவதற்கு அணுவளவும் எமக்கு அனுமதி இல்லை. 2:186, 7:3, 18:102-106, 33:36 குர்ஆன் வசனங்கள் கூறுவதையே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம். குர்ஆன் வசனங்கள் சுயநல மவ்லவிகளால் சுயவிளக்கம் கூறப்பட்டு 2:159 இறைவாக்குக் கூறுவது போல் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவதால், அதன் காரணமாக குர்ஆன் வசனங்களின் நேரடிக் கருத்துக்களைத் தெளிவாக, விரிவாக விளக்கும் கட்டாயம் எமக்கு ஏற்படுகிறது. இம்மவ்லவிகள் 2:159, 33:36 குர்ஆன் வசனங்களை நிராகரித்துத் தங்கள், சுய, மேல் விளக்கங்களைக் கூறாமல், சொல்வார்களானால், பாமரனும் அதைப் படித்துச் சரியாக, தெளிவாக நேர்வழியை விளங்கி அதன்படி நடக்க முடியும்.

அதனால்தான் கடந்த 30 வருடங்களாக, இந்தச் சுயநல மவ்லவிகளின் வசீகர, உடும்புப் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க அந்நஜாத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இந்த நூற்றாண்டில் சமுதாய மறுமலர்ச்சி அல்லாஹ்வின் நாட்டத்தில் இருந்தால் மட்டுமே அது நிறைவேறும். இப்போது உங்களின் விமர்சனத்தைப் பார்ப்போம்.

இறைவனின் இறுதித் தூதர் அவர்களின் மரணத்திற்குப் பின் மிகக் குறுகிய காலத்திலேயே, தூய இஸ்லாமிய மார்க்கத்தை மதமாக்கி அதனையே வயிற் றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள விஷக் கிருமிகளான மதகுருமார்கள் என்ற ஆலிம்(?) வர்க்கம், திருட்டுத்தனமாக, கொல்லைப்புற இடுக்கு வழியாகச் சமுதாயத்தில் நுழைந்த சுமார் 1200 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த “தக்லீத்” பூச்சாண்டி சமுதாயத்தில் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கிறது. தக்லீது முஸ்லிம்களின் உள்ளங்களில் புரையோடிப் போயிருக்கிறது. இரத்தத்தோடு கலந்து மனித உடம்பெல்லாம் வலம் வருகிறது. இந்த மாய பூச்சாண்டி வலையில் சிக்கியவர்கள் நாளை மறுமையில் 2:186, 7:3, 18:102-106 இறைவாக்குகளை நிராகரித்து-காஃபிராகி நரகம் புக இருக்கிறார்கள் எனக் கடுமையாக எச்சரிக்கிறோம்.

இதைப் புரிந்து கொள்ள எளிய உதாரணம் ஒன்று சொல்கிறோம். கவனமாகப் படியுங்கள்.

ஒரு நாட்டின் பிரதமர், உலகின் பல மொழிகள் பேசும் பல நாடுகளுக்குச் செல்லும் கட்டாயத்தில் இருக்கிறார். அவர் செல்லும் நாடுகளின் மொழிகள் அவருக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. எனவே தான் செல்லும் நாட்டின் மொழி தெரிந்த ஒருவரை மொழி பெயர்ப்பாளராக அழைத்துச் சொல்கிறார். இப்போது அந்த நாட்டுப் பிரதமர் அவரது மொழியில் சொல்லுவதை இந்த மொழிபெயர்ப்பாளர், இநதப் பிரதமருக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்த்துச் சொல்கிறார். இப்போது இந்தப் பிரதமர் அதைக் கேட்டு அதற்குரிய பதிலை தனது மொழியில் சொல்கிறார். அதை மொழி பெயர்ப்பாளர் அந்தப் பிரதமரின் மொழியில் மொழி பெயர்த்துச் சொல்கிறார். இப்போது இரண்டு நாட்டுப் பிரதமர்களும் அந்த மொழி பெயர்ப்பாளரை தக்லீது செய்கிறார்கள் என்று சொல்வீர்களா? இல்லையே?

இன்னும் இதிலுள்ள பேருண்மை என்ன தெரியுமா? மொழி பெயர்த்துச் சொல்லப்பட்ட விஷயங்களில் உள்ள உண்மை நிலைகளை இரு பிரதமர்களும் விளங்கிய அளவு அந்த மொழி பெயர்ப்பாளர் விளங்கி இருக்கமாட்டார். காரணம் என்ன தெரியுமா? இரு பிரதமர்களும் தங்கள் தங்கள் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு அன்றாட நடப்புகளோடு நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள். எனவே நடப்புகள் அவர்களுக்கு அத்துப்படி. அதனால் பரிமாறப்பட்டக் கருத்துக்களை மொழி பெயர்பாளரை விடத் துல்லியமாக அறியும் நிலையில் இருக்கிறார்கள்.

இதேபோல் 29:69 இறைக்கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து 2:186, 7:3 இறைவழிகாட்டல்படி மனிதர்களில் எவரையும் வழிகாட்டியாகக் (அவுலியா) கொள்ளாமல் அல்லாஹ்வையே முற்றிலும் முழுவதுமாக நம்பி, அவர்களின் தாய் மொழியிலுள்ள குர்ஆன் மொழி பெயர்ப்பைத் தொடர்ந்து பெரும் முயற்சியாக (ஜிஹாத்) முயற்சி செய்தால் அல்லாஹ் 29:69ல் வாக்களித்துள்ளபடி மொழி பெயர்ப்பில் தவறு இருந்தாலும் அதை தெளிவுபடுத்துகிறான்.

இதற்கு 35 வருடங்களுக்கு முன்னர் எமது வாழ்வில் நடந்த சம்பவமே போதிய ஆதாரம். கால் நூற்றாண்டுகளாகப் பொருள் அறியாது கிளிப் பிள்ளைப் பாடமாக குர்ஆனை தொடர்ந்து தினசரி கொண்டிருந்த காலத்திலிருந்து, எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மை விடுவித்து, குர்ஆனைப் பொருள் அறிந்து படிக்க ஆரம்பித்தத ஆரம்ப நிலை. இப்போதாவது கடந்த 30 வருட அனுபவத்தில் குர்ஆன் வசனங்களுக்கு அவற்றை அரபியில் படித்த உடன் பொருள் ஓரளவு விளங்குகிறது. அப்படி விளங்காத காலகட்டம்.

அப்போது மவ்லவி ஆ.க.அப்துல் ஹமீது பாக்கவியின் குர்ஆன் மொழி பெயர்ப்பு மட்டுமே இருந்தது. அதைத் தினசரி பொருள் அறிந்து படித்து வரும்போது, 39-ம் அத்தியாயம், 18-ம் வசனத்தில் “அவர்கள் (எத்தகையோரென்றால், நம்முடைய) வசனங்களைச் செவியுற்று அதிலுள்ள நல்லவைகளைப் பின்பற்றியும் நடக்கின்றார்கள்” (39:18) என்று மொழி பெயர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன், கிருபையுள்ள அல்லாஹ் எமது மனதில் அல்லாஹ்வுடைய வசனங்களில் நல்லவையும், அதற்கு மாறாக தீயவையும் இருக்க முடியுமா? என்ற ஐயத்தைப் போட்டான்.

பெரும் முயற்சிக்கு (ஜிஹாத்) பின் 39:18ல் இருப்பது அல்லாஹ்வின் வசனங்கள் (ஆயத்) அல்ல, மனிதர்களின் சொல் (கவ்ல்) என்ற தெளிவை அந்த வல்ல ரஹ்மானே தந்தான்.

அதேபோல் ஜான் டிரஸ்ட் ஆரம்பகால மொழி பெயர்ப்பில் 89:22 வசனத்தில் “வானவர் அணி வகுக்க ரப்பு வரும்போது” என்பதை “இறைவனும் வானவரும் அணிஅணியா வரும்போது” என்று தவறாக மொழி பெயர்த்திருந்ததையும் எல்லாம் வல்ல அல்லாஹ் எம் உள்ளத்தில் 29:69 வாக்குறுதிப்படி போட்டான். அதேபோல் கடந்த 30 வருடங்களாக குர்ஆனைப் பொருள் அறிந்து படித்து வருவதால், எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆனின் வசனங்களில் இம்மவ்லவிகள் செய்திருக்கும் பல தவறுகளை விளங்கும் அறிவைத் தந்துள்ளான்.

அதன் பின்னர்தான் குதிரைக்குக் கடிவாளம் இட்டிருப்பது போல், தப்லீஃகில் கடைபிடிக்கப்படும் ஆறு செயல்கள், அமல்களின் சிறப்பு இந்த இரண்டைத் தவிர வேறு எதையும் பார்க்காமலும், வேறு எவரின் பேச்சைக் கேளாமலும் கண்களையும், காதுகளையும் பொத்திக் கொண்டிருந்த நிலையை விட்டும் விடுபடும் பாக்கியத்தை அல்லாஹ் அவன் அருளால் தந்தான்.

அது மட்டுமல்ல, 39:17,18 இரு வசனங்களும் இன்னொரு பேருண்மையையும், எமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டின. 33:36 இறைவாக்குக் கூறுவது போல் யாரெல்லாம் மனிதக் கருத்துக்களை மார்க்கத்தில் புகுத்தி பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே தங்களின் முகல்லிது பக்தர்களை மற்றவர்களின் எழுத்துக்களைப் பார்ப்பதை விட்டும், பேச்சுக்களைக் கேட்பதை விட்டும் கடுமையாகத் தடுப்பார்கள். அவர்கள் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்கள்; அந்த ஷைத்தான்களின் வழிகெட்ட துர்போதனைக்கு அடிபணிந்து மற்றவர்களின் எழுத்தைப் பார்க்காமல், பேச்சைக் கேட்காமல் எவர்கள் தங்களைத் தடுத்துக் கொள்கிறார்களோ அவர்கள் அந்த மனித ஷைத்தான்களை வணங்குகிறார்கள் என்பது உறுதியாயிற்று. (பார்க்க : 9:31)

யார் அந்த மனித ஷைத்தான்களை வணங்குவதை விட்டும் தவ்பா செய்து மீண்டு, யார் எழுதினாலும் பார்த்து, யார் பேசினாலும் கேட்டு அவற்றிலுள்ள அழகானதை அதாவது குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டதை எடுத்து நடக்கிறார்களோ அவர்களே நேர்வழி நடப்பவர்கள், அறிவாளிகள், அல்லாஹ்வின் நன்மாராயம் பெற்றவர்கள் என்ற பேருண்மையும் அல்லாஹ்வின் அருளால் தெளிவாகப் புரிந்தது. ஆலிம்கள், அல்லாமாக்கள், பெரும் மேதைகள், மார்க்கம் சொல்ல தகுதி பெற்றவர்கள் என்று வீண் பெருமை பேசும் இந்த மதகுருமார்களின் உண்மை நிலையை உணர்ந்து அவர்களைப் புறக்கணித்துவிட்டு 3:103 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து நேரடியாக குர்ஆனைப் பற்றிப் பிடிக்கும்பெரும் பாக்கியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் 29:69ல் வாக்களித்துள்ளபடி எமக்குத் தந்தான். அவனுக்கே எல்லாப் புகழும்.

ஆக 2:186 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து அல்லாஹ்வை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி, 7:3 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆனையும், சுன்னாவையும் அவரவர்களின் தாய்மொழியில் படித்து, அவற்றில் 29:69 இறைவாக்குச் சொல்வது போல் பெரும் முயற்சி(ஜிஹாது) எடுப்பார்களானால் குர்ஆனின் மொழி பெயர்ப்புத் தவறாக இருந்தாலும் அல்லாஹ் அதன் சரியான அர்த்தத்தை அவன் 29:69ல் வாக்களித்துள்ளபடி புரிய வைப்பான்.

அதற்கு மாறாக 2:186, 7:3, 29:69 இறைவாக்குகளை நிராகரித்து அல்லாஹ்வை நம்பாமல், பெரும் முயற்சி(ஜிஹாத்) செய்தால் அல்லாஹ் நேர்வழி காட்டுவான் என்பதையும் நம்பாமல், எனக்கு அரபு தெரியாது, அரபு தெரிந்த மவ்லவிகள் மட்டுமே குர்ஆனை சரியாக விளங்குவார்கள், அவர்களை தக்லீது செய்வதே நேர்வழி என்று தன் மீதும் நம்பிக்கை இழந்து, எந்த மவ்லவியை தக்லீது செயதாலும், அவர் 18:102 இறைவாக்குக் கூறுவது போல், அல்லாஹ்வை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் அடியார்களான மவ்லவிகளைத் தங்களின் அவுலியாவாக-பாதுகாவலராக-வழிகாட்டியாக எடுத்துக் கொண்டார்களே அவர்கள் காஃபிர்கள் என்று அடையாளம் அல்லாஹ்வே காட்டுகிறான். அவர்களுக்கு நரகத்தைத் தங்குமிடமாகத் தயாரித்து வைத்திருப்பதாகவும் இதே 18:102 இறைவாக்கில் திட்டமாகக் கூறுகிறான்.

தம் செயல்களில் மாபெரும் நட்டவாளிகள் யார் தெரியுமா? என்று கேட்கச் சொல்லி, யாருடைய முயற்சி தக்லீதின் மூலம் பயனற்றுப் போயிருக்க, அவர்கள் பயனுள்ள நற்காரியங்களையே செய்வதாக மூடத்தனமாக நம்பிக் கொண்டிருப்பார்கள், அவர்கள் 2:186, 7:3, 18:102, 33:36 போன்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து இம்மதகுருமார்களை தக்லீது செய்வதால் அவர்களின் செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. நாளை மறுமையில் அவர்களின் செயல்கள் நிறுக்கப்படா. நரகமே அவர்களுக்குக் கூலியாகும். காரணம் அவர்கள் குர்ஆனின் வசனங்களையும், தூதரின் அழகிய நடைமுறையையும் நிராகரித்து ஏளனமாக எடுத்து, மதகுருமார்களை தக்லீது செய்வதேயாகும். இந்த உண்மையை 18:102 முதல் 106 வரை நீங்களே நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இன்னொரு கோணத்திலும் சிந்தியுங்கள். அரபு மொழி கற்றவர்கள் மட்டுமே குர்ஆனைச் சரியாக விளங்க முடியும். மொழிபெயர்ப்புகளைப் பார்த்து சரியாக விளங்க முடியாது என்றால் அன்று நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அரபு மொழியின் இலக்கணம், இலக்கியம், கவிதை என அனைத்துத் துறைகளிலும் கரைகண்ட பெரும் மேதாவிகளான தாருந்நத்வா உலமா பெருமக்கள்தானே முதன் முதலில் நேர்வழி பெற்றிருக்க வேண்டும். அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என அரபு மக்களால் வானளாவப் போற்றப்பட்ட அபூ ஜஹில் அல்லவா நேர்வழி பெற்றிருக்க வேண்டும். இன்றும் அரபு மொழியில் கரைகண்டவர்களான யூதர்கள் அல்லவா நேர்வழி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கெல்லாம் ஏன் நேர்வழி கிடைக்கவில்லை?

ஆம்! அவர்களிடமிருந்த, இருக்கும் கற்றறிந்த மேதைகள் என்ற வீண் பெருமையே அவர்கள் நேர்வழி பெறத் தடையாக இருந்தது. இப்போதும் இருக்கிறது, அதே போல் அரபு மொழி கற்ற மேதைகள் என்ற வீண் பெருமையே இன்றும் இந்த மவ்லவிகள் நேர்வழி பெறத் தடையாக இருக்கிறது. இந்த உண்மையை நீங்களே குர்ஆனில் காணப்படும் பெருமை பற்றிய வசனங்களை குறிப்பாக 7:146 வசனத்தை நேரடியாகப் படித்து அறியலாம்.

மேலும் அரபு மொழி கற்றவர்கள் மட்டுமே யாரையும் தக்லீது செய்யாமல் நேர்வழியை அறிய முடியும் என்பது உண்மையானால் 2:186, 7:3, 18:102-106, 33:36 போன்ற தக்லீதை மறுக்கும் குர்ஆன் வசனங்களுக்குத் தேவை என்ன? சிந்தியுங்கள். நாளை மறுமையில் அரபியர், அரபு மொழி கற்றவர்கள் அல்லாத இதர மொழிகள் பேசும் மக்கள், “யா அல்லாஹ் நீ எங்களுக்குப் புரியாத, விளங்காத அரபு மொழியில், உனது அகில உலக மக்களுக்கும் சொந்தமான இறுதி நெறிநூல் குர்ஆனை இறக்கிவிட்டதால், தக்லீது செய்யாமல் எங்களால் விளங்க முடியவில்லை. அதனால் இந்த மவ்லவிகளை நம்பி, அவர்களை தக்லீது செய்து வழிகேட்டில் சென்றுவிட்டோம். அதற்காக நீ எங்களைத் தண்டிப்பது என்ன நியாயம்? என்று கேட்க வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா? சிந்தியுங்கள். ஆக எந்த நிலையிலும் தக்லீதுக்கு மார்க்கத்தில் இடமே இல்லை. தக்லீது மிருகம் சம்பந்தப்பட்டது. (பார்க்க : 5:3, 97)

தக்லீது மார்க்கம் சம்பந்தப்பட்டதாகவும், அது மனிதர்கள் நடைமுறைப்படுத்த வேண்டியதாகவும் இருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக விளக்கி இருப்பானா? இல்லையா? மனிதனைச் சம்பந்தப்படுத்தி குர்ஆனிலோ, ஹதீஃதிலோ ஒரேயொரு ஆதாரத்தையேனும் யாரும் காட்ட முடியுமா? இல்லவே இல்லை. அதே சமயம் ஐயறிவு மிருகத்தைச் சம்பந்தப்படுத்தி 5:2,97 இரண்டு இடங்களில் குர்ஆன் குறிப்படுகிறது. அதுவும் பலிப் பிராணிகள் பற்றிக் கூறுகிறது. அதேபோல் தக்லீது செய்யும் முஸ்லிம்களும் பலிகிடாவாக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதே! எப்படி என்று பாருங்கள்? குதிரைக்குக் கடிவாளம், மாட்டிற்கு மூக்கணாங்கயிறு; இவற்றின் கயிறு எவன் கையில் இருக்கிறதோ அவன் இழுத்த இழுவைக்கு அம்மிருகங்கள் கட்டுப்படும். அதை மீறி அவை சுதந்திர மாகச் செயல்பட முடியாது. அதே போல்தான் தக்லீது என்ற கயிற்றை இந்த மதகுருமார்கள் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, ஆறறிவு மனிதர்களை ஐயறிவு மிருகங்களாகச் செயல்பட வைக்கிறார்கள். இம்மதகுருமார்கள் இந்த முகல்லிதுகளை நரகை நோக்கிச் செலுத்தினாலும் கண்மூடி அவர்கள் பின்னால் செல்லத்தான் செய்வார்கள்.

அதன் விளைவு நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு அப்போதுதான் சுய அறிவு வந்து இம்மதகுருமார்களைக் கண்டபடி வாய்க்கு வந்தவாறு திட்டுவார்கள். சபிப்பார்கள்.இதோ குர்ஆன் வசனங்கள் விவரிக்கின்றன. படித்துப் பாருங்கள். 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 குர்ஆன் வசனங்களை நேரடியாகப் பார்த்துப் படிப்பினைப் பெறுங்கள். யார் இவற்றைச் சிரமம் பாராமல், சோம்பல் படாமல் நேரடியாக குர்ஆனை விரித்துப் பார்ப்பார்களோ அவர்கள் இம்மவ்லவிகளின் பரிதாப வழிகெட்ட நிலையை அறிய முடியும். மேலும் அன்றாடம் 24 மணி நேரத்தில் வெறும் 30 நிமிடம் மட்டுமே ஒதுக்கி குர்ஆனைப் பொருள் அறிந்து படித்து வருவார்களானால் கொடிதிலும் கொடிய ஹராமான வழியில் தூய மார்க்கத்தைக் கலப்பட மதங்களாக்கி வயிறு வளர்க்கும் இந்த மவ்லவிகள் எப்படிப்பட்டக் கேவலப்புத்திக்காரர்கள், பாவம், பழிக்கு அஞ்சாதவர்கள், ஐயறிவு மிருகங்களை விடக் கேடு கெட்டவர்கள் என்பதை நீங்களே நேரடியாக அறிய முடியும். (பார்க்க : 7:146,175-179)

17:85 இறைவாக்குச் சொல்வது போல், குறை மதியுள்ள மனித அறிவு ஆயிரம் காரணங்களைக் கூறி தக்லீதை நியாயப்படுத்தினாலும் அது பகிரங்க வழிகேடுதான். ஆறறிவு படைத்த மனிதனுக்கும் ஐயறிவு மிருகங்களுக்குரிய தக்லீதுக்கும் கடுகளவும் சம்பந்தமே இருக்க முடியவே முடியாது.

எவன் கொடிய ஹராமில் வயிறு வளர்க்கும் மவ்லவிகளை அவர்கள் தர்கா, தரீக்கா, மத்ஹபு, மஸ்லக், முஜாஹித், இயக்க, கழக, ஜமாஅத், ஸலஃபி என எந்தப் பிரிவு மவ்லவியாக இருந்தாலும் அவர்களை தக்லீது செய்கிறவன் மனித ஜாதியாக இருக்க முடியாது. அவன் மிருக ஜாதியாக மட்டுமே இருக்க முடியும். ஆயினும் ஐயறிவு மிருகங்களுக்கு நாளை நரக வேதனை கிடையாது. ஆனால் ஆறு அறிவு மிருக ஜாதிகளுக்கு நாளை மறுமையில் அவர்கள் இந்த மவ்லவிகளை தக்லீது செய்த காரணத்தால் நிரந்தர நரகம்.

அவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு வேதனை தாங்க இயலாமல், இவ்வுலகில் எந்த மவ்லவிகள் மீது அபார நம்பிக்கை வைத்து அவர்களை தக்லீது செய்தார்களோ அவர்களையே மிகமிகக் கடுமையாகச் சபித்து, திட்டி,இரு மடங்கு வேதனை கொடுக்கும்படி அல்லாஹ்விடம் கோரிக்கை வைப்பதை நாம் எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகினறன. 7:146 இறைவாக்குக் கூறுவது போல் வீண் பெருமையால் வழிகேட்டில் இட்டுச் செல்லும் இம் மவ்லவிகளை முற்றிலுமாகப் புறக்கணித்து நிராகரித்துவிட்டு, தங்களைப் படைத்த அல்லாஹ் மீதே 2:186 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து 7:3 வசன வழிகாட்டல்படியும் 3:103 இறைக்கட்டளைப் படியும் பிரியாமல் ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடப்பவர்களே நேர்வழி நடப்பவர்கள். 6:153 இறைவாக்கை மதித்து நடப்பவர்கள். அவர்களே சுவர்க்கத்து நன்மாராயம் பெற்ற பாக்கியசாலிகள். சுவர்க்கத்துக்கு சொந்தக்காரர்கள். நாளை மறுமையில் அல்லாஹ்வை தங்கள் கண்களால் காணும் பாக்கியம் பெற்றவர்கள். அந்தச் சிறிய கூட்டத்துடன் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் இணைத்தருள்வானாக. ஆமீன்.

விமர்சனம் : இறைவசனம் 3:7 இலக்கண விதியின்படி இருவிதமான பொருள் கொள்ள இடமிருந்தாலும் புறச்சான்றின் அடிப்படையில் நாம் செய்த தமிழாக்கம்தான் சரியானது என்றும், தாங்கள் தங்களுடைய விளக்கம் சரியானது என்கிறீர்கள். யாரையும் தக்லீது செய்யாமல் இதனை விளங்கிக் கொள்வது எப்படி?

ஒருவர் இஜ்திஹாத் செய்து அறிந்ததை அவர் மட்டுமே எடுத்து நடக்க வேண்டும். ஒருவர் இஜ்திஹாத் செய்து அறிவிப்பதை மற்றவர்கள் எடுத்து நடப்பது இத்திபா அல்ல; தக்லீதாகும். (பார்க்க : ஏப்ரல் 2016 அந்நஜாத் இதழ்) மேற்படி வசனத்தை அரபி இலக்கண இலக்கியம் தெரிந்தால்தானே இத்திபா செய்ய முடியும்?
M. அபூநபீல், தேங்காய்பட்டினம்.

விளக்கம் : இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அறவே சம்பந்தமேயில்லாத, யூத கிறித்தவர்கள் நடைமுறைப்படுத்தி வரும் ஐயறிவு மிருகம் சம்பந்தப்பட்ட தக்லீதை, வி­க்கிருமிகளான மதகுருமார்கள் என்ற ஆலிம்கள் என வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகள் முஸ்லிம்களிடையே புகுத்தி கடந்த ஆயிரம் வருடங்களாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதனால் தக்லீத் என்ற மிருகம் சம்பந்தப்பட்ட வழிகேடு முஸ்லிம்களின் உள்ளத்தில் புரை யோடிப் போயிருக்கிறது. இரத்த நாளங்களிலெல்லாம் ஓடி ஆறறிவு மனிதனை ஐயறிவு மிருகமாக்கி வருகிறது. தக்லீது செய்யும் முஸ்லிம்கள் நரகை நோக்கி நடைபோடுகிறார்கள். (பார்க்க : 7:3, 18:102-106, 33:36,66-68)

குர்ஆனின் 6236 வசனங்களையும் படித்துப் பாருங்கள். 5:2,97 இரண்டு இடங்களில் பலிப் பிராணிகளான மிருகங்கள் சம்பந்தமாக “கலாயித” என்ற பதம் இடம் பெற்றிருக்கிறதே அல்லாமல், மனிதன் சம்பந்தப்பட்ட ஒரேயயாரு வசனத்தையும் இம்மவ்லவிகளால் காட்டவே முடியாது.

அல்குர்ஆனில் வழிகெட்டத் தலைவர்களைப் பின்பற்றி நாளை நரகம் புகும் மக்கள் பற்றிக் கூறும் இடங்களில் கூட இந்த “தக்லீது” பதம் இடம் பெற வில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆறறிவு மனிதனுக்கும், தக்லீதுக்கும் சம்பந்தமே இல்லை, தக்லீது ஐயறிவு மிருகம் சம்பந்தப்பட்டது என்பது உறுதியாகத் தெரியவில்லையா? மிருகங்களுக்குரிய தக்லீதை மனித சமூகத்தில் புகுத்தி அற்ப உலகியல் ஆதாயம் அடைகிறவர்கள், இந்த வானத்தின் கீழுள்ள படைப்புகளிலே ஆகக் கேடுகெட்டப் படைப்பு என்பதை உணர முடியாதவர்கள் இரண்டு கால் மிருகங்களாக மட்டுமே இருக்க முடியும். (பார்க்க : 7:175-179, 45:23, 47:25) தக்லீதுக்கும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமே இல்லை. தக்லீது மிருகங்களுக்குக்குரியது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆறாம் அறிவைப் பயன்படுத்தாத இரண்டு கால் ஐயறிவு மிருகங்கள் மட்டுமே தக்லீது செய்வார்கள்.

62:2 இறைவாக்கில் அல்லாஹ் திட்டமாகத் தெளிவாக குர்ஆனை எழுதப்படிக்கத் தெரியாத, அரபி இலக்கண இலக்கியம், கவிதை அறவே தெரியாத பாமர மக்களுக்காக, அந்தப் பாமரமக்களில் ஒருவரைக் கொண்டே அல்லாஹ் இறக்கி யருளினான். மெத்தப்படித்த மேதைகளுக்கு குர்ஆன் விளங்காது. சாதாரண பாமர மக்களுக்கே சரியாக குர்ஆன் விளங்கும் என்பது இம்மவ்லவிகளிடம் காணப்படும் பெருமை, ஆணவம், மமதை உறுதிப்படுத்தவில்லையா?. 1450 வருடங்களுக்கு முன்னர் குர்ஆனை எல்லாம் வல்ல அல்லாஹ் இறக்கி அருளும்போது, அதை அரபு மொழியின் இலக் கணம், இலக்கியம், கவிதை அனைத்திலும் மெத்தப் படித்த, கரைகண்ட தாருந்நத்வா உலமாக்களுக்கும் அதன் தலைவன் அபூ ஜஹீலுக்கும் குர்ஆன் விளங்கவில்லை. அதற்கு மாறாக எழுதப் படிக்கத் தெரியாத, தங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் அதைக் கூட விளங்காத கைநாட்டுப் பிரமுகர்களான ஹப´களுக்கும் அரபு அல்லாத, பிற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட பாமரர்-அவாம்களுக்குமே குர்ஆன் மிகமிகத் தெளிவாக விளங்கியது. இது அல்லாஹ்வின் அதி அற்புதமல்லாத வேறு என்னவாக இருக்கும்?

எல்லாம் வல்ல அல்லாஹ் 2:159 இறைவாக்கில் தான் அருளிய தெளிவான ஆதாரங்களையும், நேர் வழியையும் ஒட்டுமொத்த மனிதர்களுக்கு விளக்கி இருப்பதாகச் சொல்லி இருக்கிறானா? அதற்கு மாறாக அரபு இலக்கண இலக்கிய, கவிதைப் புலமைப் பெற்ற மேதைகளுக்கு விளக்கி இருப்பதாகச் சொல்கிறானா? சிந்தியுங்கள்! அல்லாஹ்வின் இந்த 2:159 வசனத்தின் போதனை உண்மையல்ல. அரபு மொழி மேதைகள் மட்டுமே குர்ஆனை விளங்க முடியும் என்று இந்த ஆலிம்கள் சொல்வது தான் உண்மை என்கிறீர்களா? ஆம்! இந்த மவ்லவிகள் 42:21 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்கும் பெருத்த வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை உங்களால் புரிய முடியவில்லையா?

இறைவசனம் 3:7 இலக்கண விதியின்படி இரு விதமான பொருள் கொள்ள முடியும் என்பதே பெருத்த வழிகேடாகும். குர்ஆனின் வசனங்கள் பற்றிக் கூறும் 3:7 இறைவாக்குத் திட்டமாகத் தெளி வாக இரண்டாவது பொருளுக்கு இடமே இல்லாத ஒரே பொருளுள்ள முஹ்க்கமாத் வசனமாகும். இந்த 3:7 வசனம் இரண்டாவது பொருளையும் தரும் முத்தஷாபிஹாத் வசனம் என்று கூறுகிறவனை விட பெருத்த வழிகேடன் இருக்க முடியவே முடியாது. காரணம் இந்த 3:7 வசனம் ஒன்றுக்கு மேல் பொருள் தரும் வசனமாக இருந்தால் அதன் மறைமுகப் பொருள் குர்ஆன் நடைமுறைப்படுத் தப்பட முடியாத வேதம்(?) என்பதாகும். நடைமுறைப்படுத்த முடியாததையா அல்லாஹ் இறக்கியுள்ளான். அதனால்தான் விஷக்கிருமிகளான மதகுருமார்கள் இறுதி நெறிநூல் குர்ஆனை செயல்படுத்த முடியாத வேதாந்தங்கள் நிறைந்த வேதம் என்று ஓயாது கூறி வருகின்றனர் போலும்.

முன்னைய நபிமார்களுக்கு அருளப்பட்ட நெறி நூல்கள் அதாவது தவ்றாத், ஜபூர், இன்ஜீல் போன்றவை மனிதக் கரம் பட்டு சிதிலமடைந்து, மாசு பட்டு, இரத்து செய்யப்பட்டு நடைமுறைச் சாத்தியமில்லாத வேதாந்தங்கள் நிறைந்த வேதங்கள் என அந்தந்த மதகுருமார்களால் ஆக்கப்பட்டது போல் வி­க்கிருமிகளான முஸ்லிம் மதகுருமார்களும், இறைவனால் பாதுகாக்கப்பட்டு (15:39) உலகம் அழியும் வரை நடைமுறையிலிருக்கும் குர்ஆனையும் நடைமுறை சாத்தியமில்லா வேதம் ஆக்கி வைத்துள்ளனர்; அதனால்தான் வேதம், வேதம் என்றே ஓயாது கூறிவருகின்றனர். குர்ஆன் இறைவனால் முழுமைப்படுத்தப்பட்டு, அருளப்படும்போதே பதிந்து பாதுகாக்கப்பட்டு உலகம் அழியும் வரை மனித குலத்தினர் நடைமுறைப்படுத்த வேண்டிய, இவ்வுலகையும், மறுமையையும், சீராகவும், செம்மையாகவும் அமைய நெறிப்படுத்தும் இறுதி இறைநூலாகும்.

குர்ஆனில் இரண்டு வகை வசனங்கள் மட்டுமே உண்டு. ஒருவகை மார்க்க அடிப்படையில் கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டிய வசனங்கள். அவை இரண்டாவது பொருளுக்கு இடமே இல்லாத ஒரேயொரு பொருளை மட்டுமே தரும் முஹ்க்கமாத் வசனங்கள். குர்ஆனின் அடிப்படையே (உம்முல் கிதாப்) இந்த ஒரே பொருளை மட்டுமே தரும் முஹ்க்கமாத் வசனங்களேயாகும். எஞ்சியவையான ஒன்றுக்கு மேல் பொருள் தரும் முத்தஷா பிஹாத் வசனங்களாகும். மார்க்க அடிப்படையில் இவற்றை ஒரே பொருளாக்கி பின்பற்றுவது பெரும் வழிகேடாகும். பொய்யன் பீ.ஜை. போன்ற உள்ளத்தில் சறுகுதல் எனும் வழிகேடுடையவர்களே சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுத்தி பிரிவினை ஏற்படுத்தும் தீய நோக்கத்துடன், சுயநலத்துடன் செயல்படுகிறார்கள். அதனால் பல பொருள் தரும் முத்தஷா பிஹாத் வசனங்களை ஒரே பொருளுள்ள முஹ்க்கமாத் வசனங்கள் ஆக்கும் வல்லமை அல்லாஹ்வைப் போல், கல்வியாளர்களுக்கும் உண்டு என ஆணவத்துடன் சொல்லத் துணிகிறார்கள்.

இதற்கு அவர்கள் கடைபிடிக்கும் தந்திரம் என்ன தெரியுமா? முஹ்க்கமாத் வசனங்களை விளக்கமான, தெளிவான வசனங்கள் என மொழி பெயர்க்கிறார்கள். இந்த அடிப்படையில் முத்தஷாபிஹாத் வசனங்களை விளக்கமற்ற, தெளிவற்ற வசனங்கள் எனக் கற்பிக்கிறார்கள். இந்த 3:7ல் காணப்படும் “தஃவீல்” என்ற பதத்தைக் காட்டி அது விளக்கத் தைத்தானே குறிக்கிறது என்று கூறி தங்கள் கண்மூடி பக்தர்களை துணிந்து ஏமாற்றி வருகின்றனர்.

உண்மை என்ன தெரியுமா? 3:7ல் உள்ள தஃவீல் பதம் விளக்கத்தைப் பற்றிக் கூறவே இல்லை. 4:59, 7:53, 17:35 இறைவாக்குகளில் காணப்படும் “”தஃவீல்” என்ற பதம் முடிவான கருத்தைப் பற்றிக் கூறுவது போல் இந்த 3:7ல் உள்ள “தஃவீல்” விளக்கத்தை அல்ல, முடிவான கருத்தையே கூறுகிறது. அதாவது பல பொருள் முத்தஷாபிஹாத் வசனங்களை ஒரே பொருள் முஹ்க்கமாத் வசனங்களாக்கும், வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்றே 3:7 வசனம் கூறுகிறது.

முத்தஷாபிஹாத் வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வும் அறிவான். அறிவுடையவர்களும் அறிவார்கள் என்று அல்லாஹ்வுடன் அறிஞர்களை இணைத்துக் கூறுவது எப்படிப்பட்ட வழிகேடு, கொடிய ஷி´ர்க் என்பதை அறியாத வடிகட்டின மூடர்களா இம்மவ்லவிகள்? அல்லாஹ்வுடன் அவனது இறுதித் தூதரையே இணைத்துச் சொல்வதை மார்க்கம் அனுமதிக்கவில்லை, அது பெருங்குற்றம் என்று மார்க்கம் சொல்லும் நிலையில், அறிவுடையவர்களை அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்வது எவ்வளவு பெரிய வழிகேடு, கொடிய ஷிர்க் என்பதை அறியாத மூடர்களா இவர்கள்? அறிஞர்களை அல்லாஹ்வுடைய நிலைக்கு உயர்த்துவதும், அல் லாஹ்வை முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்கும் நிலைக்கு அதாவது மனித நிலைக்குத் தாழ்த்துவதும் ஷிர்க்கிலும் மிகக் கொடிய ஷி´ர்க் என்பதை உணர முடியாத மக்கு மண்டுகங்களா இந்த மவ்லவிகள்? இதில் இன்னும் வழிகேடான சிந்தனை 3:7ல் அல்லாஹ்வும், அறிவுடையோரும் முத்தஷாபிஹாத் வசனங்களின் விளக்கத்தை அறிவார்கள் என்று இந்த விஷக்கிருமிகளான மவ்லவிகள் மொழி பெயர்க்கும்போது அந்த ஆற்றல் அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இல்லை என்ற விஷக் கருத்தும் இதில் வெளிப்படுகிறதே, விளங்கவில்லையா?

அந்த அளவு மூடர்கள் இல்லை இம்மவ்லவிகள். 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல், நேர் வழியை நன்கு அறிவார்கள். எப்படிப் பஞ்சமா பாவங்களையும், பாவங்கள்தான் என்று நன்கு அறிந்த நிலையில் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு அவற்றில் ஈடுபடும் கொடூர பாவிகளைப் போல் இம்மவ்லவிகளும் தங்கள் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு தங்கள் மனோ இச்சையைக் கடவுளாக்கி அதற்கு வழிபடும் பெரும் பாவிகளாக இருக்கிறார்கள்.

முத்தஷாபிஹாத் பல பொருள் தரும் வசனங்கள் என்றால் முஹ்க்கமாத் அவற்றிற்கு எதிர்மறையான ஒரே பொருள் தரும் வசனங்கள் என்பதை அறிய முடியாத மூடர்களாக இருக்க முடியுமா இம்மவ்லவிகள்? அப்படியானால் முஹ்க்கமாத் வசனங் கள் விளக்கமான, தெளிவான வசனங்கள் என்ற பிதற்றல் ஏன் தெரியுமா? முத்தஷாபிஹாத் வசனங்களின் முடிவான பொருள்களை அறிவுடையோரும் விளங்க முடியும் என்ற பிதற்றல் ஏன் தெரியுமா?

அப்படிப் பிதற்றினால்தான் 2:159 இறைவாக்குக் கூறுவது போல், குர்ஆன் வசனங்களை வளைத்து, திரித்து, மறைத்து தங்களின் வழிகெட்டக் கொள் கைகளுக்கேற்றவாறு விதவிதமான விளக்கங்களைக் கொடுத்து, தங்கள் தங்கள் வழிகெட்டப் பிரிவுக் கொள்கைகளை நியாயப்படுத்த முடியும். முஹ்க்கமாத் வசனங்கள் ஒரே பொருளைத் தரும் வசனங்கள் என்று உள்ளதை உள்ளபடி ஒப்புக் கொண்டால், அவர்களின் மனம் போனபடி, மனோ இச்சைப்படி விதவிதமான பொருளைத் தருவது முடியாதல்லவா? அதனால்தான் இந்தத் தந்திரம்.

தூய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் முஸ்லிம்கள். தூய இஸ்லாமிய மார்க்கத்திற்கு குர்ஆன், சுன்னா அடிப்படையிலான ஒரேயயாரு கொள்கை (அகீதா) மட்டுமே இருக்க முடியும். குர்ஆனின் முஹ்க்கமாத் வசனங்களுக்கு அவை நேரடி யாகச் சொல்லும் ஒரே கருத்தையே முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்து ஏற்றுக்கொண்டால் அங்கு பிரிவுக்கு, பிளவுக்கு இடமே இல்லை. அனைவரும் ஒரே கொள்கையில்-அகீதாவில் மட்டுமே இருப்பார்கள்.

ஆதம்(அலை) அவர்கள் காலத்திலிருந்தே ஒன்றுபட்டச் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி அற்பமான உலகியல் ஆதாயங்களை அடைந்து வரும் மதகுரு மார்களுக்கு ஒரே கொள்கை-அகீதா என்றால் அவர்களால் ஏற்க முடியுமா? ஜீரணிக்க முடியுமா? முஸ்லிம் மதகுருமார்களான இம்மவ்லவிகள் மட்டும் இதில் விதிவிலக்குப் பெற முடியுமா? ஒருபோதும் முடியாது. ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தைப் பல பிரிவினராகப் பிளவுபடுத்தினால்தான் இம் மவ்லவிகள் உலக ஆதாயங்களைப் பெருவாரி யாகப் பெறமுடியும். அப்படியானால்,

குர்ஆனிலுள்ள முஹ்க்கமாத் வசனங்கள் இரண்டாவது கருத்துக்கு அறவே இடமில்லாத ஒரே கருத்தை மட்டுமே தரும் வசனங்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களது ஹராமான வயிற்றுப் பிழைப்பை ஜாம் ஜாம் என நடத்த முடியுமா? ஒருபோதும் முடியாது.

அதேபோல் முத்தஷாபிஹாத் வசனங்கள் ஒன்றுக்கு மேல் பொருள் தரும் வசனங்கள். ஆனா லும் அவற்றை ஒரே பொருளாக்கிப் பின்பற்றுவது கூடாது. அவை மார்க்க அடிப்படையிலானவை அல்ல. உலகியல் நடைமுறைகள் பற்றி, அறிவியல் பற்றி இன்னும் பல அம்சங்களைக் கொண்டவை. அவற்றின் முடிவான கருத்தை அதாவது முத்தஷா பிஹாத் வசனங்களை முஹ்க்கமாத் வசனங்கள் ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்று 1987லிலிருந்து குர்ஆன், ஹதீஃத்களைக் கொண்டே பச்சைப் பிள்ளைக்குப் பாடம் நடத்துவது போல் விளக்கி வருகிறோம் “குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?” என்ற தனி நூலாகவும், அவர் களின் சுய விளக்கங்கள் அனைத்தும் பெரும் தவறு வழிகேடு என்று தெளிவுபடுத்தியும் உள்ளோம். ஆயினும் 7:146 குர்ஆன் வசனம் கூறுவது போல் இம் மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியை ஏற்கமாட்டார்கள் என்று அல்லாஹ்வே அவர்களை அடை யாளம் காட்டிய பின் யாரால் அவர்களை நேர்வழிப்படுத்த முடியும்?

இம்மவ்லவிகளின் பிரிவு-பிளவு சுயநலத் தீச் செயலின் காரணமாக ஏற்பட்டுள்ள 21:92, 23:52 இறைவாக்குகள் கூறும் ஒன்றுபட்ட ஒரே முஸ்லிம் சமுதாய நிலையைப் பாருங்கள். ´

ஷிஆக்களுக்குத் தனி அகீதா, அதிலும் பல உட்பிரிவு அகீதாக்கள். சுன்னத் ஜமாஅத் தனி அகீதா அதிலும், தேவ்பந்த் அகீதா, பரேல்வி அகீதா, ஹனஃபி அகீதா, ஷாஃபி அகீதா, மாலிக்கி அகீதா, ஹன்பலி அகீதா, அஹ்ல ஹதீஃத் அகீதா, முஜாஹித் அகீதா, ஸலஃபி அகீதா, 1987க்குப் பிறகு எத்தனை ஜமாஅத்கள், இயக்கங்கள், கழகங்கள் என அத்தனைப் பிரிவுகளுக்கும் தனித்தனி அகீதாக்கள். இந்தப் பிரிவினர் அனைவரும் தங்களை முஸ்லிம்கள் என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். அதே சமயம் முஸ்லிம்களிடையே இத்தனை கொள்கை பிரிவுகள்-அகீதாக்கள் இருக்க முடியுமா? என்ற அடிப்படைச் சாதாரண அறிவும் இல்லாதவர்கள் மனித ஜாதியா? முகல்லிது-மிருக ஜாதியா? பகுத் தறிவை பயன்படுத்தினால் அல்லவா சிந்திக்கப் போகிறார்கள். முகல்லிது-மிருக ஜாதிகளுக்குப் பகுத்தறிவு இருக்காதே! அதனால் வழிகெடுக்கும் விஷக்கிருமிகளான இந்த மவ்லவிகளிடம் வசமாகச் சிக்கிச் சீரழிகிறார்கள். இன்று குர்ஆனை நேரடியாகப் பார்த்துச் சிந்திக்கத் துணியாதவர்கள், 33:66-68 இறைவாக்குகள் கூறுவது போல் அவர்கள் நம்பிய வர்களையே நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு கடுமையாகத் திட்டப் போகிறார்கள்.

எனவே 3:7 இறைவாக்குக்கு இரண்டுவிதமான பொருள் கொள்ள இடமிருக்கிறது என்ற இந்த மூட முல்லாக்கள் சொல்வதை நம்பி ஏமாறாதீர்கள். அது ஒரேயயாரு பொருளை மட்டுமே தரும் முஹ்க்கமாத் வசனமாகும். முஹ்க்கமாத் வசனங்களில் ஒன்றுக்கு மேல் பொருள் எடுப்பது வழிகேடு. முத்தஷாபிஹாத் வசனங்கில் முடிவான பொருளைச் சொல்லி (தஃவீல்) எடுத்து நடப்பது வழிகேடு. இதைத்தான் 3:7 வசனம் உறுதியாகச் சொல்கிறது.

அந்நஜாத்தில் இடம் பெறும் குர்ஆன் வசனங் களை உடனுக்குடன் குர்ஆனை எடுத்துப் பார்ப்பவர்களுக்கு நாம் விளக்கம் சொல்வதாக எண்ணம் வரவே வராது. சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனங்களை நேரடியாக எடுத்து படித்து விளங்காமல், வெறுமனே அந்நஜாத்தில் எழுதப்பட்டுள்ளதை மட்டும் படிப்பவர்களுக்கு நாம் விளக்கம் சொல்வதாக எண்ணம் வரத்தான் செய்யும். அவர்களுக்கு அந்நஜாத்தை தக்லீது செய்யும் பரிதாப நிலை ஏற்படுவதற்கு நாம் பொறுப்பல்ல. 29:69 இறைக் கட்டளைப்படி குர்ஆனை அவர்களுக்குத் தெரிந்த மொழியில் மீண்டும் மீண்டும் படிக்க முற்படாதவர்கள் யார் பின்னாலும் செல்லும் முகல்லிதுகளாக மட்டுமே இருப்பார்கள்.

நபி(ஸல்) அவர்களது காலத்தில் அரபு இலக்கணம், இலக்கியம் கசடறக் கற்ற தாருந்நத்வா உலமாக்களுக்கு குர்ஆன் விளங்கவில்லை. வழிகேட்டில் மூழ்கி இருந்தார்கள். ஜாஹில்கள், அபூ ஜஹீல் என நபி(ஸல்) அவர்களால் அடையாளம் காட்டப்பட்டார்கள். அதற்கு மாறாக அரபு மொழியில் ஆரம்ப அச்சாரம் கூட தெரியாத கைநாட்டுப் பிரமுகர்கள், அரபு இலக்கணம், இலக்கியம் தெரிந்து கொண்டா குர்ஆனை விளங்கி நேர்வழிக்கு வந்தார்கள் என்பதைச் சிந்தியுங்கள். அரபு மொழியோ, அதன் இலக்கணம், இலக்கியம் பற்றிய அறிவோ குர்ஆனை விளங்க அவசியமே இல்லை. 29:69 இறைக்கட்டளைப்படி தங்களின் தாய்மொழியிலுள்ள குர்ஆனில் பெரும்பாடு (ஜிஹாது)படுவதே நேர் வழியைப் பெற்றுத்தரும்.

விமர்சனம் : நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன்:3:104)

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. (அல்குர்ஆன்: 4:85)

தேர்தலில் முஸ்லிம்களின் கடமை என்ன?

(அந்நஜாத் ஏப்ரல் 2016) கட்டுரையைப் படித்தேன், கட்டுரையை முழுமையாக படித்தபின் தெளிவாக ஒரு விஷயம் புரிகிறது. மார்க்கத்தில் நன்மை, தீமை என்று தெளிவாகப் பிரித்து காட்டிய பின் இதனை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்கள். பிறகு தெளிவாக மக்களை குழப்பும் புரோகிதராக இருக்கின்றீர்கள் என்று.

(பார்க்க. பக்: 3, அந்நஜாத் ஏப்ரல் : 2016) இந்த ஜனநாயகம் ஆட்சிமுறை குர்ஆனுக்கு முரணானது தான்.

ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒரு நிர்பந்த நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளீர்கள்! தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்!

ஜனநாயகம் இஸ்லாத்திற்கு மாற்றமானதுதான்; ஆனால் இன்றைய சூழலில் என்று கூறி பிற புரோகிதர்கள் போல் நீங்கள் மக்களை குழப்புகின்றீர்கள். சொல்வதைத் தெளிவாகக் கூறவும். ஹக்கு வேறு பாத்தில் வேறு என்று தெளிவாக இருக்கும்போது தாங்கள் இரண்டையும் ஒன்று சேர்க்க முயற்சி செய் கின்றீர்கள். நிச்சயமாக இரண்டும் ஒன்றாக ஆகமுடியாது என்பது நீங்களும் அறிவீர்கள் சிந்திக்கவும்.

அபூ அப்தில்லாஹ் ஆகிய உங்களுடைய கழுத்தில் கத்தியை வைத்து ஓட்டுபோட வேண்டும் என்று பாஸிச ஆட்சியாளர்கள் செய்கிறார்களா?

உங்களை கொடுமைப்படுத்தி நீங்கள் ஓட்டு போட்டுத்தான் ஆகவேண்டும் இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று உங்களுடைய கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார்களா?

அதேபோல தாங்கள் குர்ஆன் வசனம் குறிப்பிட்டது போல எந்த ஓர் ஆத்மாவையும் தன் சக்திக்கு மேல் நாம் சோதிப்பதில்லை என்கிற இவ்வசனத்தில் சக்தியின் அளவுகோல் என்ன?

எனவே நிர்பந்த நிலையில் முஸ்லிம்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று ஆணித்தரமாக சொல்லும் உங்களிடம் ஒருசில கேள்விகள்.

நிர்பந்தம் என்றால் என்ன? நிர்பந்தத்தின் அளவுகோல் என்ன?

மக்காவில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்த நபி(ஸல்) அவர்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் சுகபோகமாக வாழ்ந்திருக்கலாம்! ஏன் வாழவில்லை. மறுமை நாள்வரை ஹிஜ்ரத் மனித வாழ்வின் ஓர் திருப்புமுனையாக திகழ்ந்து வருகின்றது; எதற்காக இந்த நிகழ்வு சிந்திக்கவும்.

நிர்பந்தம் என்கிற குர்ஆன் வசனத்தை வைத்துக் கொண்டு தங்களால் இயன்றதை மட்டும் செய்து கொண்டு வருகிறார்கள் சமக்கால முஸ்லிம்களும்.

பாஸிச அரசாங்கத்தால் இன்றைக்கு இந்தியாவில் நீங்கள்(முஸ்லிம்கள்) வாழவேண்டுமானால் நீங்கள் அனைவரும் ராமருடைய பிள்ளைகளாகத் தான் வாழ வேண்டும் இதனை நிர்பந்தத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வீர்களா?

பள்ளிகளில் (மஸ்ஜித்களில்) பாங்கு சொல்வதற்குத் தடை, இந்தியாவில் குர்ஆன் ஓதுவதற்கு தடை, முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு என்று தனி சட்டம் கிடையாது (முஸ்லிம்கள்) இந்தியாவில் மாடு அறுக்க தடை, இன்னும் இதுபோன்ற பல காரணங்களைச் சொல்லலாம். இவை அனைத்தையும் நிர்பந்தம் என்கின்ற அடிப்படையில் செய்யா மல் இருக்க உங்களால் முடியும்.

ஜனநாயகம் தவிர மாற்று தீர்வே இல்லை எனும் தொனியில் ஜனநாயகத்தை எப்படியாவது இஸ்லா மிய முலாம் பூசி இஸ்லாமிய ஜனநாயகம் என நிலை நாட்ட துடிப்பது உண்மையில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு இறைத்தூதரின் வழிமுறைக்கும் மாறாகவே இருக்கின்றது. பெருமானார்(ஸல்) அவர்களுக்கு குறை´களுடன் அதிகார பகிர்வு செய்ய வாய்ப்பு கிடைத்தபோது அல்லாஹ் அதை மறுத்து இறை நிராகரிப்பாளர்களே நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன் என்று அல்லாஹ் வசனத்தை தெளிவாக இறக்கி அதிகார பகிர்வு நிராகரிப்பாளர்களுடன் சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்துகிறான். இன்றைக்குச் சில புரோகிதர்கள் கூறுகின்றார்கள்.

இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது அது இஸ்லாமிய அடிப்படையில் சரியா? தவறா? என்று ஆராய்வதோ இல்லை! எதுவரை அவ்வழியில் அல்லது அதில் ஈடுபடலாம் என்றோ தெளிவுபடுத்தாமல் இரண்டும் தீமைதான் இருந்தாலும் அதில் சிறிய தீமையை தேர்ந்தெடுப்பதன் மூலம் சமூகத்திற்கு நன்மை கிடைக்கும் என வாதிடுகின்றார்கள். இரண்டு தீமைகளில் சிறியதை தேர்ந்தெடுப்பது என்பது எப்போது சாத்தியப்படும் என்றால் இரண்டு தீமைகளும் இஸ்லாத்தால் விளக்கப்பட்டு எது சிறிய தீமை? எது பெரிய தீமை? என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

அப்படிச் சொல்லப்பட்டு இருக்கின்றதா என்று பார்த்தால் இல்லை? ஆனால் இன்றைக்கு அல்லாஹ் விதிக்காததை விதித்து அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்பட்டிருக்கின்றார்கள். நேரடியான குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுத்து குர்ஆனை நிராகரிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள்! இன்றைய மவ்லவிகள், மதனிகள், புரோகிதர்கள் முஃப்திமார்கள். (நபியே!) நீர் சொல்வீராக! இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும். நான் அல்லாஹ்வின்பால் (உங்களை) அழைக்கின்றேன், நானும் என்னைப் பின் பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம். அல்லாஹ் மிக தூய்மையானவன், ஆகவே அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன். அல்குர்ஆன் : 12:108

இறைவாக்குப்படி உங்களை நாம் நேரான சத்திய பாதையின்பால் அழைக்கின்றோம். இப்பாதையில் பயணிக்க முற்பட்டால் சோதனைகள், இன்னல்கள் வரும். முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள், (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள், (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள், அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள், (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள். அல்குர்ஆன் : 3:200 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், அது அன்பளிப்பாக இருக்கும் வரையில்! ஆனால், இந்த அன்பளிப்பு தீனின் இறைநெறியின் விவகாரத்தில் இலஞ்சமாக ஆகிவிடும்போது அதனை ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஆனால், ஏழ்மையும், வறுமையும் உங்களை நிர்பந்திக்கும்போது நீங்கள் அதனை விடுபவர்களாக இருக்கமாட்டீர்கள். தெரிந்து கொள்ளுங்கள், இஸ்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே குர்ஆன் எந்தச் திசையில் இருக்கின்றதோ, அந்தத் திசையில் நீங்களும் திரும்பிவிடுங்கள். கேட்டுக் கொள்ளுங்கள்! வெகு விரைவில் குர்ஆனை விட்டு ஆட்சியாளர்கள் பிரிந்துவிடுவார்கள். நீங்கள் குர்ஆனைக் கைவிடாதீர்கள். விரைவில் எத்தகைய ஆட்சியாளர்கள் தோன்றுவார்களெனில் அவர்கள் உங்கள் விஷயத்தில் தீர்ப்பு வழங்குவார்கள். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் அவர்கள் உங்களை வழிகெடுத்து விடுவார்கள்.

ஆனால் அவர்களுடைய கட்டளைக்கு நீங்கள் மாறு செய்தாலோ, உங்களைக் கொன்றுவிடுவார்கள். (அறிவிப்பாளர்) வினவினார், அல்லாஹ்வின் தூதரோ, அப்போது நாங்கள் எவ்வாறு செயல்படுவது? நபியவர்கள் பதிலளித்தார்கள் : ஈஸா(அலை) அவர்களின் தோழர்கள் என்ன செய்தார்களோ, அதைத்தான் நீங்களும் செய்யவேண்டும். அவர்கள் இரம்பத்தால் அறுக்கப்பட்டார்கள், கழுமரத்தில் ஏற்றப்பட்டார்கள், ஒரு மனிதன் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தவாறு உயிரை விடுவதென்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்துகொண்டு உயிர் வாழ்வதை விடவும் சிறந்ததாகும். (அறிவிப்பாளர் : முஆத் பின் ஜபல்(ரழி), நூல் : முஃஜமுஸ்ஸகீர், தபரானீ)
(S.Y.அரஃபாத், பரங்கிப்பேட்டை, செல்: 9489584540)

விளக்கம் : ஏப்ரல் 2016 அந்நஜாத் தலையங்கத்தை நடுநிலையோடு, விருப்பு, வெறுப்பின்றி படித்து விளங்கி இருந்தால் இப்படிப்பட்ட ஒரு விமர்சனம் எழுந்திருக்காது. தேர்தலில் வாக்களித்து வேட்பாளர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை ஆட்சியில் அமரவைப்பது நமது கடமை என்று நாம் எழுதி இருந்தால் உங்களது விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது; அல்லது ஜனநாயக ஆட்சி முறையே மிகச் சிறந்த ஆட்சி முறை என்று எழுதி இருந்தாலாவது உங்கள் விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது. அப்படி எழுதி இருக்கிறோமா? இல்லையே!

ஆட்சி முறைகளில் மிகக் கேடுகெட்ட ஆட்சி முறையே ஜனநாயக ஆட்சி முறை. மன்னராட்சியை விட சர்வாதிகார ஆட்சி முறையை விட கேடுகெட்ட ஆட்சி முறை ஜனநாயக ஆட்சி முறை என்பதற்கு 2:145, 6:116 வசனங்கள், மக்களில் மிகப் பெரம்பான்மையினர் வழிகேட்டில்தான் இருப்பார்கள் என்று கூறும் எண்ணற்ற வசனங்களைச் சொல்லி ஜனநாயக ஆட்சி முறையின் இழிநிலையைப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறோம்.

மேலும் வெற்றி பெறும் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும், தோல்வியுறும் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது என்று மூட நம்பிக்கையில் மக்கள் சொத்தை கொள்ளை அடிக்கும் கொள்ளையர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளோம். லஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்று விளக்கி இருக்கிறோம்.

வேட்பாளர்களில் நல்லவர் இருந்தால், அவர் தோற்றுவிடுவார் என்று நிச்சயமாகத் தெரிந்தாலும் அவருக்கு வாக்களித்து மனத்திருப்தி கொள்ளுங்கள். வேட்பாளர்களில் நல்லவர் ஒருவர் கூட இல்லாவிட்டால், நோட்டாவில் உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள் என்றே தெளிவுபடுத்தி இருந்தோம். உங்கள் வாக்கைப் பதிவு செய்யாமல் விட்டால், உங்கள் வாக்குகள் முஸ்லிம்களின் எதிரிகளுக்கே போய்ச்சேரும் ஆபத்தான நிலையும் இருக்கிறது என்று எச்சரித்திருந்தோம்.

நீங்கள் அக்கட்டுரையை மட்டும் மேலோட்டமாகப் படித்திருக்கிறீர்களே அலலாமல் அதிலுள்ள குர்ஆன் வசனங்களை நேரடியாக குர்ஆனில் படித்து விளங்கவில்லை என்பதே தெரிகிறது. எந்த ஓர் ஆத்மாவும் தன் சக்திக்கு மேல் நாம் சோதிப்ப தில்லை என்கிற இவ்வசனத்தில் சக்தியின் அளவுகோல் என்ன? நிர்பந்தம் என்றால் என்ன? நிர்பந்தத்தின் அளவுகோல் என்ன? என்று மூட முல்லாக்களை தக்லீது செய்து நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் இதை உறுதிப்படுத்துகிறது.

குர்ஆனின் முஹ்க்கமாத் வசனங்களுக்கு நாமோ அல்லது ஆலிம்கள் என பெருமை பேசும் மூட முல்லாக்களோ 2:159,186, 7:3, 33:36 குர்ஆன் வசனங்களை நிராகரித்து-காஃபிராகி சுய விளக்கம், மேல் விளக்கம் கொடுக்கும் நிலையில் அல்லாஹ் முழுமை பெறாத வசனங்களை இறக்கவில்லை. தெள்ளத் தெளிவான வசனங்களையே இறக்கி அருளியுள்ளான். எழுதப் படிக்கத் தெரியாத பாமரனும் காதால் கேட்டவுடன் விளங்கும் எளிய தெளிவான நிலையில்தான் அவ்வசனங்கள் இருக்கின்றன. நீங்களே நேரடியாக 2:233,286, 6:152, 7:42, 23:62 வசனங்களைப் படித்துப்பாருங்கள். நீங்களே நேரடியாக விளங்கமுடியும். 5:3 இறைவாக்கைப் படித்துத் தெளிவு பெறுங்கள்.

உதாரணமாகப் பாருங்கள். 2:233-ல், விவாகரத்துச் செய்யப்பட்டப் பெண்தான் பெற்றெடுத்தக் குழந்தைக்குப் பாலூட்டும் காலத்தில் அக்குழந்தை யின் தகப்பன், தாய்க்கும், சேய்க்கும் உணவு, உடை கொடுப்பது கடமை. அது அவனது சக்திக்கு உட்பட்டுத்தான் என்பதைக் கூறுகிறது. மற்றபடி கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு, நிர்பந்தித்தால் தான் அது குர்ஆன் வசனங்கள் கூறும் நிர்பந்தம் என்று மூட முல்லாக்கள் சொல்வதை அப்படியே நீங்கள் தக்லீது செய்து சொல்வது குர்ஆன், ஹதீஃத் வழியல்ல என்பதை விளங்கவும்.

வாக்களிப்பது ஹராம் என்று கூற முற்படும் நீங்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து உங்கள் பெயரை நீக்கிவிட்டு, நாடற்றவர் பட்டியலில் உங்கள் பெயரை இணைத்துக் கொள்ள நீங்கள் தயாரா? அதேபோல் முஸ்லிம்கள் அனைவரும் நாடற்றப் பிரஜைகள் ஆகவேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா? வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லிம்களின் பெயரை நீக்காமலும், வாக்களிக்காமலும் இருந்தால், உங்களின் பரம எதிரிகளுக்கே உங்களின் வாக்குகள் போய்ச் சேரும் ஆபத்தான காலகட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது நீங்கள் அறியாததா?

அது மட்டுமா? முஸ்லிம்கள்தான் வாக்களிப்ப தில்லையே! அவர்களின் பெயர்களை வாக்களர் பட்டியலில் ஏன் வீணாகப் பதிவு செய்து பக்கங்களையும், பணத்தையும் பாழடிக்க வேண்டும் என்று அரசே முஸ்லிம்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க நீங்கள் துணை போன குற்றத்திற்கும் ஆளாக நேரிடும். அதன் காரணமாக முஸ்லிம்களின் பல உரிமைகள் பறிக்கப்பட நீங்கள் காரணகர்த்தாவாக ஆகிறீர்கள். இப்படி முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். இந்த ஆபத்துகள் ஏற்படும் வழிகளைத் தவிர்க்க நோட்டாவிலாவது உங்கள் வாக்கைப் பதிவிட்டு விடுங்கள் என்றே நாம் எழுதி இருந்தோம்.

எந்தச் சூழ்நிலையிலும், எப்படிப்பட்டத் துன்பங்கள் நேரிட்டாலும் நீங்கள் வாக்களிப்பது ஹராம். நாங்கள் இஸ்லாமிய ஆட்சியை அதாவது கிலாஃபத்தை ஏற்படுத்த ஜிஹாது செய்து வருகிறோம் என்று கூறி அதில் முனைப்புக் காட்டுபவர்கள் குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்காத முகல்லிதுகளாகவே இருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் தங்களிலேயே இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டதவர்கள், மக்களுக்காக இறையாட்சியை-கிலாபத்தை ஏற்படுத்த ஜிஹாத் செய்கிறார்களாம். 61:2,3 இறைவாக்குகள் கூறுவது போல் மூடமுல்லாக்களை தக்லீது செய்து தங்களை மறந்து ஊருக்கு உபதேசம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.

குர்ஆனை முழுமையாகப் படித்துப் பாருங்கள். ஆதாரபூர்வமான ஹதீஃத்களை ஆராய்ந்து பாருங் கள். நீதமான நேர்மையான இறையாட்சியை- கிலாஃபத் ஆட்சியை 24:55 இறைவாக்குக் கூறுவது போல் நபிமார்களுக்கும், நல்லடியார்களுக்கும் அல்லாஹ்வே கொடுத்துள்ளான். (பார்க்க : 2:251) அல்லாஹ் கிலாபத்தை-இறையாட்சியைக் கொடுப் பதற்கு முஸ்லிம்கள் உண்மையான முஃமின்களாக இருந்து எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அதே 24:55 வசனத்தில் திட்டமாக-தெளிவாகக் கூறியுள்ளான் அல்லாஹ்.

அவர்கள் ஈமானில் தெளிவுடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2:186 இறைவாக்குக் கூறுவது போல் மனிதர்களில் எவரையும் நம்பி தக்லீது செய்யாமல் அல்லாஹ்வை மட்டுமே முற்றிலும் நம்பி, 7:3 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ் இறக்கியருளியுள்ள குர்ஆன், சுன்னாவை மட்டுமே பின்பற்ற வேண்டும். 33:36 இறைவாக்குக் கூறுவது போல் பகிரங்க வழிகேடான மனித கருத்துக்களை வேதவாக்காகக் கொள்ளக் கூடாது. ஹிஜ்ரி 400க்குப் பிறகு மதகுருமார்கள் கற்பனை செய்த ஹனஃபி, மாலிக்கி, ஷாஃபி, ஹன்பலி மத்ஹபுகளையோ, 500க்குப் பின் கற்பனை செய்யப்பட்ட தரீக்காக்களையோ, ஸலஃபி, அஹ்ல ஹதீஃத், முஜாஹித் போன்ற மஸ்லக்களையோ, ஜ.இ., ஜாக், ததஜ, இதஜ மற்றும் பல பிரிவுகளையோ பின்பற்றுகிறவர்களாக இல்லாமல், நபிமார்கள் அனைவரும் பிரகடனப்படுத்திய 22:78-ல் அல்லாஹ் பெயரிட்டுள்ள “முஸ்லிமீன்” மற்றும் 41:33-ல் அல்லாஹ் கூறும் “மினல் முஸ்லிமீன்”-முஸ்லிம்களில் உள்ளவன், 1450 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) நடைமுறைப்படித்திய “ஜமாஅத்துல் முஸ்லி மீன்” என்ற பெயரில் மட்டுமே செயல்பட அல்லாஹ் அனுமதித்துள்ளான்.

கபுருகளில் மண்டியிட்டுக் கொண்டிருக்கும் பெரும்பாலான்மை முஸ்லிம்கள், அதைத் தவ்பா செய்துவிட்டு மீண்டு நேர்வழிக்கு வந்துவிடக் கூடாது, தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தில் சு.ஜ. மவ்லவிகள் வஹ்ஹாபி பூச்சாண்டிக் காட்டுவது போல், பல இயக்கப் பெயர்களில் சிக்கி இயக்க வெறி கொண்டு செயல்படும் இயக்கப் பிரிவு மவ்லவிகள் தங்களின் பக்தர்கள் வழிகெட்ட பிரிவுகளை தவ்பா செய்து விட்டு, ஜமாஅத்துல் முஸ்லிம்களில் இணைவதால் தங்களின் ஹராமான வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்ற அச்சத்தில் இயக்கப் பிரிவு மவ்லவிகள் அல்லாஹ் பெயரிட்டு (22:78, 41:33) நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்ற (புகாரீ: (ஆ) 4/803) “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் எனப் பூச்சாண்டிக் காட்டுகின்றனர். 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தான் பெருங்கொண்ட முஸ்லிம் களுக்கு வழிகேட்டைத்தான் அழகாகக் காட்டி நரகை நிரப்பும் சபதத்தை நிறைவேற்றுகிறான்.

பெருங்கொண்ட சு.ஜ. முஸ்லிம்கள் வஹ்ஹாபி பூச்சாண்டியில் மயங்கிக் கட்டுண்டு குர்ஆன், ஹதீஃத் மட்டுமே நேர்வழி என்பதை உண்மை என்று தெரிந்தும் ஏற்க மறுக்கிறார்களோ அது போலவே, இயக்கப் பிரிவு, இயக்க வெறியில் சிக்கி, அவற்றில் மயங்கி, ஜமாஅத்துல் முஸ்லிமீன் அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் பூச்சாண்டியில் மயங்கி கட்டுண்டு 3:102,103 குர்ஆன் வசனங்கள் கூறும் முஸ்லிம்களுக்கு ஒரே ஜமாஅத்-ஒரே நேர்வழி என்ற உண்மை நிலையை அறிந்தும் ஏற்க மறுத்து வருகிறார்கள். மத்ஹபு பிரிவினரும், இயக்கப் பிரிவினரும் ஒரே தக்லீது குட்டையில் ஊறிய மட்டைகளே! ஆக இந்த மத்ஹபு, தரீக்கா, ஸலஃபி, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஜாக், ததஜ, இதஜ முதல் அனைத்துப் பிரிவுகளும் பகிரங்க வழிகேட்டில் இருக்கிறார்கள். இதை நாம் கூறவில்லை. எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. (பார்க்க. 3:103,105, 6:153,159, 12:108, 21:93, 23:53-56, 30:32, 42:13,14)

இந்த வசனங்களுக்குச் சுயவிளக்கம் கொடுத்து 1987க்குப் பிறகு கற்பனை செய்யப்பட்ட இயக்கங் களை மார்க்கமாக்கினால், சுமார் 1000 வருடங்க ளுக்கு முன்னர் கற்பனை செய்யப்பட்ட கபுரு வழிபாடு, தரீக்கா வழிபாடு, மத்ஹபு வழிபாடு போன்ற வழிகெட்ட வழிபாடுகளை அவரவர்கள் சுயவிளக்கம் கொடுத்து மார்க்கமாக்குவதையும் இந்த இயக்க வழிபாட்டுக்காரர்கள் ஏற்க வேண்டும். ஏற்பார்களா? அதற்கு மேலும் இந்த மதகுருமார்கள் சிலை வழிபாட்டை நியாயப்படுத்திச் சொல்லும் சுயவிளக்கத்தையும், கிறித்தவ மதகுருமார்கள் முக்கடவுள் வழிபாட்டை நியாயப்படுத்திச் சொல்லும் சுயவிளக்கத்தையும் இம்மவ்லவிகள் ஏற்க வேண்டும். ஏற்பார்களா? ஆறுகள் அனைத்தும் கடலில் போய்ச் சேருவது போல் மதங்கள் அனைத்தும் இறைவனிடமே போய் சேருகின்றன.

அனைத்து மதங்களும் சத்தியத்தை-நேர்வழியையே போதிக்கின்றன. எனவே எம்மதமும் சம்மதம் என்ற சுய விளக்கத்தையும் ஏற்கவேண்டும். ஏற்பார்களா? உலகிலுள்ள அனைத்து மதங்களினதும் மதகுருமார்களும் அவர்களை நம்பியுள்ளவர்களை, நேர்வழியில்தான் நடத்திச் செல்கிறார்கள் என்றால் இந்த தவ்ஹீத்(?) மவ்லவிகள் ஏற்பார்களா? இல்லையே! அவர்களின் சுய விளக்கங்கள் மார்க்கம் ஆகாதென்றால், இவர்களின் இயக்கங்களை மட்டும் இவர்கள் சுயவிளக்கம் கொடுத்து மார்க்கமாக்கினால் அது மார்க்கம் ஆகிவிடுமா? ஒட்டுமொத்த மவ்லவிகளும் தக்லீது என்ற ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்பது ஊர்ஜிதமாகவில்லையா? அந்த அடிப்படையில் ஜிஹாத் செய்து கிலாஃபத்தை-இறையாட்சியை ஏற்படுத்துவோம் என இல்லாத ஊருக்கு வழிசொல்லும் இவர்கள் மேலே விபரித்துள்ள ஏதாவதொரு வழிகெட்ட பிரிவில் ஐக்கியமாகி இருக்கிறார்கள்.

9:31 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வை ரப்பாக ஏற்கவில்லை. மிகச் சமீப காலத்தில் தவறான கிலாஃபத் கற்பனைக்கு வித்திட்ட மதகுருமார்களைத்தான் ரப்பாகக் கொண்டு அவர்களின் போதனைகளைத் தான் தக்லீது செய்கிறார்கள். அதனால்தான் அவர்கள் குர்ஆன், ஹதீஃத் போதனைக்கு முரணாகத் தற்கொலைப்படை, அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என அவர்களை எதிர்த்துப் போரிடாத அப்பாவி உயிர்களைச் சுட்டுப் பொசுக்கிறார்கள். ஆக 24:55 இறைவாக்குக் கூறும் ஈமான் அவர்களிடம் இல்லை; அவர்களின் ஈமான் கோளாறுள்ளதாக இருக்கிறது.

அடுத்து நற்செயல்களில் ஆக உயர்வான ஐங்காலத் தொழுகைகளில் அவர்களிடம் பேணுதல் இல்லை. அவர்கள் தொழுகிறார்களே அல்லாமல் ஐங்காலத் தொழுகைகளையும் அதனதன் நேரத்தில் ஜமாஅத்துடன் தொழுது தொழுகையை நிலைநாட்டுபவர்களாக இல்லை. (பார்க்க : 107:4-6) நபி தோழர்கள் யுத்த களத்தாலும் தொழுகையை விட்டதில்லை. ஐங்காலத் தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஜமாஅத்துடன் பேணித் தொழுபவர்கள் மட்டுமே தொழுகையை நிலைநாட்டும் சிறு கூட் டத்தினருடன் இருப்பார்கள். பஜ்ரு, இஷா இரண்டையும் மிக மிகப் பேணித் தொழுவார்கள்.

ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழாதவன் மார்க்கம் பற்றிப் பேச அருகதையற்றவன். அல்லாஹ்வை நம்பி அவன் வழிகாட்டல்படி நடக்காமல் 2:186, 7:3, 18:102-106, 33:36 இறை வாக்குகளை நிராகரித்து 9:31 இறைவாக்குச் சொல்வது போல் மனிதர்களில் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளவர்களை ரப்பாகக் கொண்டு ஜிஹாத் மற்றும் கிலாஃபத் பற்றிய நேரடிக் கருத்துகளுக்கு முரணாக 2:159 இறைவாக்குச் சொல்வது போல் அவற்றைத் திரித்து, வளைத்து மேல்விளக்கம் கொடுப்பதை வேதவாக்காகக் கொண்டு செயல்படுவதால் ஈமானில் இறைநம்பிக்கையில் ஓட்டை, ஐங்காலத் தொழு கைகளில் பேணுதலற்ற நிலை என அடிப்படையிலேயே கோளாறுள்ளவர்கள் கிலாஃபத்தை ஜிஹாத் மூலம் அடைவோம் என்பது வீண் பிதற்றல் தானே!

முஸ்லிம்களின் ஆரம்ப நிலையிலேயே மிகமிகச் சொற்பத் தொகையினராக இருந்த பத்ர், உஹத் யுத்தக் களங்களில் முஸ்லிம்களைக் கொன்று குவித்து இஸ்லாத்தைத் தலை எடுக்கவிடாமல் தரைமட்டமாக்கும் வெறியுடன் போர் செய்த எதிரிகளைப் பாட்டுப்பாடியும், இரவில் படுக்கைச் சுகம் அளித்தும், இன்னும் பல பணிவிடைகள் செய்யும் நோக்கத்துடன் யுத்த களத்திற்கு வந்திருந்த பெண்களையும், அவர்களின் கைக் குழந்தைகளையும் கொல்லவே கூடாது, புறமுதுகு காட்டி ஓடும் எதிரி வீரர்களையும் கொல்லக் கூடாது என்று மார்க்கம் திட்டமாகத் தெளிவாகச் சொல்லும் நிலையில், எதிரிகளல்லாத பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என சிறிதும் ஈவிரக்கமின்றி, கொடூரமாகச் சுட்டுப் பொசுக்குவது குர்ஆன், ஹதீஃத் கூறும் ஜிஹாதா? கிலாஃபத் ஏற்படுத்தும் முயற்சியா?

எப்படிப்பட்ட நிலையிலும், எப்படிப்பட்டச் சூழ்நிலையிலும் தற்கொலைக்கு மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்பது தெளிவாக இருக்கும் நிலையில் குர்ஆன் இறங்கி 1300 ஆண்டுகளுக்குப் பின்னர், ஹராமான வழியில் வயிற்றை நிரப்பும் மூட முல்லாக்களின் மூடத்தனமான தற்கொலைப்படை ஃபத்வாவை வேதவாக்காகக் கொண்டு செயல்படும் இவர்களா இறையாட்சியை கிலாஃபத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்?

முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் அரபு நாடுகளில் அன்றாடம் அரங்கேறும் அவலக் காட்சிகள், தற்கொலைப்படையினரால் கொன்று குவிக்கப்படும் லட்சக்கணக்கான மக்கள், மேலும் சுட்டுத் தள்ளப்படும் ஆயிரக்கணக்கான மக்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகக் குடியேறும் லட்சக்கணக்கான மக்கள், இதுவா கிலாஃபத்தை உண்டாக்கும் லட்சணம். ஜிஹாத், கிலாஃபத் எனக் கூப்பாடு போடும் இவர்கள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் அவப்பெயரை உண்டாக்கி, இஸ்லாத்தை தலைதூக்க விடாமல் ஆக்கிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் அயராது பாடுபடும் யூத இல்லுமினாட்டிகளின் கைப்பாவைகள் என்பதை அறியாத இளைஞர்களே இவர்களின் வலையில் சிக்குவார்கள். இவர்கள் தான் வரம்பு மீறி தேர்தலில் வாக்களிப்பது ஹராம் எனக் கூப்பாடு போடுவார்கள். தங்களிடமும், தங்கள் குடும்பத்தாரிடமும் இஸ்லாமிய ஆட்சியை, கிலாஃபத்தை ஏற்படுத்த வக்கற்றவர்கள் உலகளவில் இஸ்லாமிய ஆட்சியை- கிலாஃபத்தை ஏற்படுத்தப் போகிறார்களாம். \

இஸ்லாமிய ஆட்சி-கிலாஃபத் எப்போது மலரும்? அல்லாஹ் எப்படிப்பட்டவர்களிடம் ஆட்சியைக் கொடுப்பான் என்பதை ஏப்ரல் 2016 தலையங்கத்திலேயே குர்ஆன், சுன்னா ஆதாரங்களைக் கொண்டு தெளிவாக விளக்கி இருக்கிறோம். அதை முறைப்படி நடுநிலையோடு படித்து விளங்குகிறவர்கள் ஒருபோதும் கிலாஃபத், கிலாஃபத் எனப் பிதற்ற மாட்டார்கள். தோற்றுப் போகிறவனுக்கும் வாக்களிக்கக் கூடாது. நோட்டாவிலும் பதிவு செய்யக் கூடாது ஏன்? வாக்குச்சாவடிக்கே போவது கொடிய ஹராம் என்று வாய் கிழியக் கத்தும் இவர்கள் குர்ஆன், ஹதீஃத் நேரடியாகக் கூறும் எத்தனை கொடிய ஹராம்களை தினசரி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நடுநிலையோடு ஆராய்ந்தால் இவர்கள் நேர்வழி பெறமுடியும். அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைப்படி நடந்து வெற்றி பெற முடியும். துஆ செய்கிறோம்.

சர்வதேச திகதிக்கோடு ஏக இறைவன் இட்ட அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்

S.M. அமீர், நிந்தாவூர்,இலங்கை

ஏப்ரல் மாத தொடர்ச்சி…..

இரு கடல்கள் சந்திக்கின்ற அதே வேளையில் அவை ஒவ்வொன்றுக்கும் நிலையான கரிப்புத் தன்மை தனித்தனியாக உண்டு. அது கூடவோ, குறையவோ செய்யாது. அவ்வாறே தனித்தனியான அடர்த்தி, வெப்பம், நிறம் ஆகியவையும் உண்டு. இவற்றில் கூடுதல் அல்லது குறைதல் ஏற்படுவதில்லை. விமானத்தில் இருந்து கொண்டு குறிப்பிட்ட இடத்தை நோக்கினால் இது ஒரு கடல், அது ஒரு கடல் என வித்தியாசத்தை கண்டுகொள்ள முடியும். கி.பி. 1942ம் ஆண்டில் தான் விஞ்ஞானிகள் இந்த உண்மையைக் கண்டறிந்தனர்.

அதற்கு முன் 1873ம் ஆண்டு கடலை ஆய்வு செய்வதற்காக சேலஞ்ஜர் எனும் செயற்கைக் கோள் அனுப்பப்பட்டது. உப்புக் கடல்கள் எல்லாம் ஒரே தன்மையில் இல்லை, என அது கண்டறிந்தது. செங்கடலில் நீரலைகளின் சுழற்சி “அல்மன்திப்” நீரணையில் உள்ள தடுப்புக் கோட்டை அடையும் போது செங்கடலுக்கே அந்த அலைகள் திரும்பி விடும். இந்தியப் பெருங்கடலின் நீரலைகள் செங்கடலை நோக்கி இந்தத் தடுப்பை அடைந்து விட்டால் கீழ்நோக்கித் தாழ்ந்து விடும். அந்த நீர்ப்பந்து மறுபடி இந்தியக் கடலுக்கே திரும்பி விடும். இந்த எல்லைத் தடுப்பானது இந்தியக் கடல் செங்கடலுடனோ, செங்கடல் இந்தியக் கடலுடனோ கலந்து விடாமல் தடுக்கிறது. இதனால் இரு கடல்களின் தனித்தன்மைகள் தொடர்ந்து காக்கப்படுகின்றன.

அவ்வாறே ஸ்பெயின், மொரக்கோ இடையே உள்ள தாரிக் நீரிணையின் இரு கடல்கள் சந்திக்கும் புள்ளி செயற்கைக் கோளில் தென்பட்டது. இது ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களைப் பிரிக்கிறது. இந்த நீரிணைதான் மத்திய தரைக் கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இந்நீரிணையின் ஆழம் சுமார் 300 மீட்டர். இரு கரைகளுக்குமான இடைத்தூரம் குறைந்தபட்சம் 14 கிலோ மீட்டராகும். எமன் நாட்டுக்கும், எத்தியோப்பியாவிற்கும் இடையே செங்கடலானது பசுபிக் பெருங்கடலுடன் இணைகிறது. மத்திய தரைக்கடலும், செங்கடலும் ஓரிடத்தில் சங்கமிக்கின்றன. செங்கடலும் “அத்ன்” வளைகுடாவும் ஒரு நீரிணையில் சந்திக்கின் றன. இங்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு தடுப்பு இரு நீர்களும் கலந்து விடாமல் தடுப்பதைப் போன்றுள்ளது.

மத்திய தரைக்கடலும் அட்லாண்டிக் கடலும் சந்திக்கும் பகுதி 15 கி.மீ. வரை நீள்கிறது. இப்பகுதி யில் மூன்றாவது தன்மையுள்ள ஒரு நீர் இரு கடல் களையும் ஒட்டவிடாமல் பிரிப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தஃப்ஸீர் இப்னு கஸீர் : 6, பக்.494-501, 25:53, 27:61, 35:12, 55:19,20.

* நபி மூஸா(அலை) அவர்களது காலத்தில் மூழ்கடிக்கப்பட்டு பின்னால் வருபவர்களுக்குத் தகுந்த படிப்பினைக்காகப் பாதுகாத்து இன்றளவும் கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள எகிப்திய கொடுங்கோல் அரசனான ஃபிர்அவ்னின் உடலை பாதுகாப்பதற்கு இறைவன் பொறுப்பேற்றான். உனக்குப் பின் உள்ளோருக்கு நீ ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காக இன்றைய தினம் உன்னை உனது உடலோடு நாம் பாதுகாப்போம். 10:92 1881-ம் ஆண்டு எகிப்தின் தைருல் பஹ்ரீ அல்லது தீப்ஸில் கண்டெடுக்கப்பட்டு பின்னர் கெய்ரோ அருங்காட்சியகத்தில் ரோயல் மம்மி அறையில் இன்றும் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாப்பாக வைக் கப்பட்டுள்ளது. தஃப்ஸீர் இப்னு கஸீர் : 4, பக். 560

* ஆதம்(அலை) அவர்களுக்கு அடுத்து வந்த நபி நூஹ்(அலை) அவர்களையும் இறை விசுவாசம் கொண்டவர்களையும் சுமந்து கொண்ட கப்பல் கிழக்குத் துருக்கியில் குர்திஸ்தானில் உள்ள 16,853 அடி (5.137 கி.மீ) உயரமுள்ள ஜூதி மலையில் நிலை கொள்ளுமாறு இறைவன் கட்டளையிட்டான்.

இதுவே துருக்கியின் மிக உயர்ந்த இடமாகும் 2007ம் ஆண்டு கொங்கொங் மற்றும் துருக்கி ஆய்வுக் குழுவினர் இம்மலைச் சிகரத்தை ஆய்வு செய்து அக்கப்பலின் பாகங்களை கண்டெடுத்தனர். தஃப்ஸீர் இப்னு கஸீர் : 4, பக்கம்:630-632, அவரையும் (அவருடன்) கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்கு சான்றாக ஆக்கினோம். 29:15 பின்னர் அக்கப்பல் ஜூதி (மலை) மீது நிலைகொண்டது; அதை (மனிதர்களுக்கு)ச் சான்றாக விட்டு வைத்தோம். (இதனைக் கொண்டு) படிப்பினை பெறுவோர் உண்டா? 11:44, 54:15.

* ஆணிடம் இருந்து வெளிப்படும் உயிரணு பெண்ணிடம் இருந்து வெளிப்படுகின்ற சினை முட்டையுடன் இரண்டறக் கலந்து பிறகுதான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று ஒட்டித் தொங்கிக் கொண்டு மனிதனாக உருவாகிறது. ஆக மனித உற்பத்தியில் ஆணுடைய உயிரணுவும் பெண்ணுடைய சினை முட்டையும் இரண்டறக் கலந்தேயாக வேண்டும். எனும் பேருண்மையைக் காட்டி விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். 76:2 என்று பரிசுத்த குர்ஆன் கூறுகின்றது. தஃப்ஸீர் இப்னு கஸீர் : 6, பக். 156-162.

* கருவில் வளரும் குழந்தை 4 மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும். பின்னர் நாம் அந்த விந்துத் துளியை (ப் பற்றி தொங்கும்) கரு முட்டையாகவும் பின்னர் அந்தக் கருமுட்டையைத் தசைக் கட்டியாகவும் படைத்தோம். பின்னர் அந்தத் தசைக் கட்டிக்கு எலும்பைப் படைத்து (அந்த) எலும்புக்கு இறைச்சியை அணிவித்தோம்.

பின்னர் அதை வேறொரு (முழு மனிதப்) படைப்பாக உருவாக்கி னோம். மிக அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் அருள் வளமிக்கவன் ஆவான். 23:14 உங்களில் ஒருவர் தமது தாயின் வயிற்றில் 40 நாட்கள் விந்து வாக சேமிக்கப்படுகின்றனர். பின்னர் அதைப் போன்றே நாற்பது நாட்கள் அந்த விந்துத் துளி (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற ஒரு சதைப் பிண்ட மாக மாறிவிடுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத்(ரழி) புகாரி : 3208, 3332, 6594, 7454, முஸ்லிம் : 5145, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 6, பக்.156-162

* கருவறையின் தனித்தன்மை ஒவ்வொரு பெண்ணும் (அவளது கருவறையில்) சுமந்திருப்பதையும் கருவறைகள் சுருங்கி விரிவதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்டே உள்ளது. 13:8, தஃப்ஸீர் இப்னு கஸீர்:4, பக். 256-262.

* வயிறு, கர்ப்பப் பை, குழந்தையைச் சுற்றிப் போர்த்திருக்கும் உறை போன்ற உங்கள் தாய்மார் களின் வயிறுகளில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து அல்லாஹ் உங்களைப் படைக்கிறான். 39:6 மூன்று இருள்கள் என்பது கருப்பை இருள், (சிசுவுக்கு உறை போன்றமைந்த) நஞ்சுக்கொடி இருள், வயிற்றின் இருள் ஆகியவையாகும். இவ்வாறே இப்னு அப்பாஸ் (ரழி), முஜாஹித் (ரஹ்), இக்ரிமா(ரஹ்), ழஹ்ஹாக்(ரஹ்), கத்தாதா (ரஹ்), அப்துர் ரஹ்மான் பின் ஸைத்(ரஹ்) ஆகியோர் விளக்கமளித்துள்ளனர். தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 7, பக்கம் 883-886.

* இன்றைய தாவரவியலாளர்கள் கூறுவதாவது ஒவ்வொரு கனிகளிலும் ஆண், பெண், இனிப்பு, புளிப்பு, வெள்ளை, கறுப்பு, சிறியது, பெரியது, சதைப்பற்று உள்ளவை, சதைப் பற்றற்றவை என இரண்டு வகைகள் உள்ளன. பிரிட்டானிகா தகவல் களஞ்சியம், தஃப்ஸீர் இப்னு கஸீர்:4, பக்கம்:847-851, ஒவ்வொரு கனி வகைகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான் 13:3. மரம், செடி, கொடி, புற்பூண்டுகள் அனைத்திலும் ஜோடிகள், பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும் ஜோடிகள் 36:36. மனிதர்களிலும் ஜோடி கள், அவர்களிலிருந்தும் ஜோடிகள் 36:36. கால்நடைகளிலும் ஜோடிகள், அவன் உங்களுக்காகக் கால்நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாகப் படைத்தான் 3916. இன்னும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் அனைத்தையும் ஜோடிகளாகப் படைத்தவன் தூய்மையானவன். 36:36. மகத்துவம் பொருந்திய அல்லாஹ் ஒவ்வொரு பொருளிலும் நாம் ஜோடிகளைப் படைத்துள்ளோம். (இதன்மூலம்) நீங்கள் அறிவுரை பெறலாம் 51:49 என்று குறிப்பிடுகின்றான்.

ஆக விலங்கு, மனிதன், பறவை, பூச்சி, வண்டு என எல்லா உயிரினங்களிலும் ஆண் பெண் ஜோடிகளை இறைவன் படைத்துள்ளான். அவ்வாறே தாவர வர்க்கங்களிலும் ஆண் பெண் என ஜோடிகள் உண்டு. மகரந்த சேர்க்கை மூலமே இனப்பெருக்கம் நடக்கிறது. மலரின் மகரந்தம், மஞ்சள் நிறத்துகள், சூல் முடியில் சேரும் இனப்பெருக்க நிகழ்வே மகரந்த சேர்க்கை எனப்படுகிறது. மின்னியக்கத்திலும் இணைகள் இருப்பதாக நவீன அறிவியல் சொல்கிறது. இது அன்றைய மனிதர்கள் அறிந்திராத ஒன்றாகும். மின்சாரத்தில் பாசிடிவ்(+), நெகடிவ்(-) ஜோடிகளாலேயே மின்விளக்கு எரிகிறது. ஏனைய மின் உபகரணங்கள் செயற்படுகின்றன. ஏன் அணு சக்தியில் கூட ஜோடிகள் உண்டு என இன்றைய அறிவியல் சொல்கிறது. புரோட்டான், எலக்ட்ரான் ஜோடிகளாலேயே அணுவியக்கும் அமைந்துள்ளது. ஆக ஜோடிகள் (அஸ்வாஜ்) என்பது பொருளுக்குப் பொருள் வேறுபடலாம். இங்கு படைப்புக்களை மூன்றுக்குள் அல்லாஹ் அடக்கி விட்டான்.

1. தாவரம்,

2. உயிரினம்,

3. நீங்கள் அறியாத மற்றப் பொருட்கள். இதில் மின் அணு உள்ளிட்டவை அடங்கும். தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 7 பக்கம் 643-646. அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டுபிடித்திருக் கின்றான். உம். மின்சாரத்தில் பாசிட்டிவ்(+) நெகட்டிவ்(-) என்ற ஜோடிகள் இருக்கின்றன. அது போன்று அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரோன் என்று ஜோடிகள் இருக்கின்றன.

* ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளினால் தான். குழந்தை கர்ப்பத் தில் இருக்கும்போது நான்காவது மாதத்தில் உருவாகி விடும் ரேகைகள் இதுவரை சென்றவர்கள், இப்போது இருப்பவர்கள், இனி வருபவர்கள் என எத்தனைக் கோடி மனிதர்களானாலும் ஒரு மனித ருக்கு உள்ளது போல் மற்றொரு மனிதருக்கு இருக்காது. எனவேதான் தடய அறிவியல் துறை விரல் ரேகை நிபுணர்கள் இதை இறைவன் கொடுத்த முத்திரை என்று வர்ணிக்கிறார்கள். இது அல்லாஹ் அடியானுக்கு வைத்த அழியாத முத்திரையாகும். அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றல் உடையோரே. 75:4

* தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிக அண்மைக் காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்னர் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர். உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. கால்நடைகள் தீவனத்தைத் தின்று அசை போட்ட பின் அதன் சத்து குடலின் மேற்புறம் இரத்தமாகவும், நடுவில் பாலாகவும், கீழே சாணமாகவும் மாறி ஒவ்வொன்றும் அதன் அதன் இடங்களைச் சென்றடையும். சாணம் என்பது கெட்டியான நார்ப்பொருட்கள் கொண்ட சொரசொரப்பான தீவனக் கழிவாகும். இரைப் பைக்குள்ளே இருக்கும் தீவனக் கூழ் சாதாரண புரதமும் உறிஞ்ச முடியாத புரதமும் நிறைந்ததாகும். நுண்ணுயிர் புரதம் எனப்படும் சாதாரண புரதம் உற்பத்தியாவதற்குத் தேவையான நைட்ரஜன் தீவனக்கூழில் உண்டு. எளிதாக உறிஞ்சப்படும் சர்க்கரைச் சத்து மரக்கூறு, நார்ச்சத்து, மாச்சத்து ஆகியனவும் அதில் உள்ளன. ஆக உணவுக் கூழுக்கும், குருதிக்கும் இடைப்பட்ட நிலையில் ஆறுவகை சத்துக்கள் உற்பத்தியா கின்றன.

1. சர்க்கரைச் சத்து,

2.விரைவில் ஆவியாகும் எண்ணெய் அமிலம் இதுதான் பால் உற்பத்திக்கு அடிப்படைக் கூறாகும். இரைப் பைக்குள் இருக்கும் போது புளி(அமிலம்) 65%(சதவீதமும்) பரப்யோனிக் அமிலம் 20 சதவீதமும், எளிதில் ஆவியாகும் எண்ணெய் அமிலம் 15 சதவீதமும் உள்ளன,

3. மீத்தேன் அமோனியா போன்ற வாயுக்கள், 4. இனிப்புச் சுவை குறைவாக இருக்கும் சர்க்கரை,

5.புரதங்கள்,

6.எண்ணெய் சத்துகள். இவ்வாறு உருவாகும் பால் கால்நடைகளின் மடியில் போய்ச் சேருகிறது. மடி என்பது நாளங்களிலிருந்து வரும் குருதியால் உருவாகிறது. வெளியே தெரியும் பெரிய இரு நரம்புகளும் அதற்கு உண்டு. அதில் புரதப் பொருட்கள் பெரியளவில் சேமிக்கப் படுகின்றன. உடலின் ஓர் அங்கமாக விளங்கும் பால் மடி வலுவான இரு தசை நார்களால் உடலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அதிகமாக அசையாதும். மடியைச் சுற்றியுள்ள எண்ணெய் வகை மூலப் பொருள் பால் சுரப்பியின் உயிரணுக்கள் அனைத்தையும் மூடி இருக்கிறது. இந்த மூலப் பொருள்தான் மடியின் குழாயில் பாலை ஒன்று திரட்டி கறக்கும் போது காம்புகள் வழியாகப் பாலை வெளியேற்ற உதவுகிறது.

உடலில் உள்ள குருதியுடன் கலந்துதான் மடியில் பால் இருக்கும். ஆனால் மடிக் குருதிக்கு மட்டும் சில தனித்தன்மைகளும், சத்துகளும் இருப்பதும், உடலில் உள்ள மற்றக் குருதியில் அவை கலந்து விடாமல் தடுக்கப்படுவதும் படைப்பாளனின் பேராற்றலுக்குச் சரியான சான்றல்லவா? அரைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்துதான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை அதே வார்த்தைகளைச் சற்றேனும் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பரிசுத்த குர்ஆன் உணவுக் கூழுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான அருந்துவோருக்கு இதமான பாலை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் 16:66 என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான். தஃப்ஸீர் இப்னு கஸீர்:5, பக்.65-69

ஸ வேதனைகளை உணரக்கூடிய நரம்புகள் மனிதனின் தோலில்தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணரா தென்பது சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்பு. இதனால்தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊருகளைப் போட்டு அறுவைச் சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.

அதனால்தான் தீக் காயத்தில் தோல் முழுவதும் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் நாம் காண்கிறோம். நம் வசனங்களை மறுப்போரை விரைவில் நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம். (அங்கு) அவர்கள் வேதனையைச் சுவைத்துக் கொண்டே இருப்பதற்காக அவர்களின் தோல்கள் (நரக நெருப்பில்) வெந்து கருகும்போதெல்லாம் வேறு(புதிய) தோல்களை நாம் அவர்களுக்கு மாற்றிக் கொண்டேயிருப்போம். 4:56 தஃப்ஸீர் இப்னு கஸீர் : 2, பக். 582-585

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : நபி(ஸல்) எந்த சந்தர்ப்பத்திலாவது எந்த ஒரு நபி தோழரையாவது சபித்ததுண்டா?  S.N. யஹ்யா, காரைக்கால்.

தெளிவு : (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன்: 21:107). இவ்விறை வசனத்தை நிரூபிக்கும் நபிமொழியையும் பாரீர். அல்லாஹுவின் இவ்வருள் வாக்குப்படி நபி(ஸல்) அருட்கொடையாக இருந்தார்களேயன்றி சபிப்பவராக இருந்ததில்லை. தமது நபிதோழர்களில் எவரும் தவறு செய்துவிட்டால், அதனை பலர் அறிய, அல்லது தவறு செய்தவர் மனம் வருந்தும்படிக் கூட கூறமாட்டார்கள். தாம் பொது பயான் (ஃகுத்பா) செய்யும்போது உங்களில் ஒருசிலர் இந்தத் தவறு செய்வதைக் காண்கிறேன். (பெயர் குறிப்பிடமாட்டார்கள்) அது தவறு என உபதேசிப்பார்கள். (இப்னு ஹிஷாம்)

எனவே யாமறிந்தவரை நபி(ஸல்) எந்த ஒரு நபித்தோழரையும் சபித்ததாக காணமுடியவில்லை. ஆனால் செயல் அடிப்படையில் அல்லாஹுவின் ஆணைக்கு மாறு செய்பவர்களை மொத்தமாக சபித்துள்ளதற்கு ஆதாரங்களுள்ளன. அதனையும் அல்லாஹுவின் ஆணைப்படியே செய்தார்கள். நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் நெறிநூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் யார் மறைக்கிறார் களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான், சபிப்பதற்கு உரிமையுடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்குர்ஆன்: 2:159) இவ்விறை வசனப்படி சபிப்பதற்கு அல்லாஹுவிடமிருந்து உரிமை பெற்றவர்கள் உண்டு என்பதை அறியலாம். அவ்வுரிமை பெற்றவர்கள் வானவர்கள். ரசூல்மார்கள், நபிமார்கள் போன்றோர் முதலிடம் வகிக்கின்றனர். இவ்வுரிமைப் பெற்ற வானவர்க ளின் முக்கியமானவர் ஜிப்ரயீல்(அலை) அவர்களும், நபி(ஸல்) அவர்களும் மூன்று கூட்டத்தாரை சபிப்பதை கீழ்க்காணும் நபிமொழி மூலம் நன்கு உணரலாம்.

ரமழான் மாதத்தில் ஒரு குத்பாவின்போது எல்லா நபித்தோழர்களையும் மிம்பருக்கு அருகில் வர ஆணையிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் முதல் படியில் கால் வைத்ததும் “ஆமீன்’ என்றார்கள். இரண்டாவது படியிலும் “ஆமீன்’ என்றார்கள், மூன்றாவது படியிலும் ஆமீன் என்றார்கள். என்று மில்லாதபடி புதுமையாக நபி(ஸல்) அவர்கள் மிம்ப ரில் ஏறும்போது “ஆமீன்’ சொல்வதைக் கண்ட நபி தோழர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாமும், ஜிப்ரயீல்(அலை) அவர் களும் உரையாடியதை விளம்பினார்கள்.

அது வருமாறு: நபி(ஸல்) மிம்பரின் முதல் படியில் கால் வைத்த போது ஜிப்ரயில்(அலை): எவரொருவர் ரமழான் மாதத்தைப் பெற்று அதில் தமது பாவ மன்னிப்புக்கான நல்லமல் எதுவும் செய்து கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்.

ரசூல்(அலை) : ஆமீன்! (இவரது சாபத்தை ஏற்றுக் கொள்வாயாக!) இரண்டாவது படியில் கால் வைத்தபோது,

ஜிப்ரயீல்(அலை) : நபி(ஸல்) அவர்களை நினைவுபடுத்தப்படும்போது எவரொருவர் அவர்கள் மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவரும் நாசமாகட்டும். ரசூல்(ஸல்) : ஆமீன்! (இதனை ஏற்றுக் கொள்வாயாக) மூன்றாவது படியில் கால்வைத்தபோது, ஜிப்ரயீல்(அலை): எவரொருவர் தனது வயது முதிர்ந்த பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ அடையப்பெற்று அவர்கள் மூலம் சொர்க்கத்தை அடைந்து கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்.

ரசூல்(அலை) : ஆமீன்! (இதனை ஏற்றுக்கொள்வாயாக) அறிவிப்பு : கஃபு இப்னு உஜ்ரா(ரழி), ஆதாரம்: புகாரீ, திர்மிதீ, பைஹகீ, தப்ரானி, ஹாக்கிம், இப்னு ஹிப்பான்.

மேற்கண்ட ஹதீஃத் மூலம் ரமழானின் நற்செயல் செய்து அல்லாஹுவிடம் பாவமன்னிப்புக் கேட்பது அவசியம். நபி(ஸல்) அவர்களை நினைவு படுத்தப்பட்டால் கேட்போர் ஸலவாத் சொல்ல வேண்டும். வயோதிகர்களான பெற்றோருக்குப் பணிவிடை செய்ய வேண்டும். இந்நற்செயல்கள் செய்யாதவர் யாராக இருந்தாலும் அவர்கள் வானவர், ரசூல்(ஸல்) சாபத்திற்கு உரித்தாகுகிறார்கள் என்பதை அறியலாம்.

ஐயம் : வடக்கே தலை வைத்து தெற்கே கால் நீட்டியும், மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டியும் படுக்க வேண்டுமென்பது ரசூல்(ஸல்) காட்டித் தந்த முறையா? இதற்கு ஹதீஃதில் ஆதாரமுண்டா? அல்லது நமது நாட்டுக்கு மேற்கே கஃபத்துல்லாஹ் இருப்பதால் நாம் தரும் மரியாதையா? மு.அப்துல் ஹமீது, நிரவி.

தெளிவு : கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம், நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அல்லாஹுவின் முன்னிலையுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்திருப்பவன். எல்லாம் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 2:115) நன்மை(புண்ணியம்) என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வ தில்லை. ஆனால், நன்மை என்பது அல்லாஹுவின் மீதும், மலக்குமார்கள் மீதும், நெறிநூலின் மீதும், நபிமார்கள் மீதும், ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள பாசத்தின் காரணமாக பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்போருக்கும், (அடிமைகள், கடனாளி கள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல். இன்னும் தொழுகையை ஒழுங்காக கடைப்பிடித்து நிலைநாட்டி, முறையாக ஜகாத்(ஏழை வரி) கொடுத்து வருதல்(இவைகளே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்,(வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள், இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). அல்குர்ஆன்: 2:177

திசைகளுக்கு எவ்வித முக்கியத்துவமுமில்லை. அல்லாஹ் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறான் என்பதை முதல் குர்ஆன் வசனம் நிரூபிக்கிறது. ஒருசில திசைகளை சிறப்பாக்கி நன்மை கிடைக்குமென செயல்படுவதை இரண்டாவது இறைவசனம் மறுக்கிறது. உண்மையான நன்மை, புண்ணியம் எப்படி கிடைக்கும் என்பதையும் பட்டியலிட்டு காட்டுகிறது. அல்லாஹ் கூறும் இந்நற்செயல்களை செய்யாமல் ஒரு திசையில் கால் நீட்டுவது கூடாது. அத்திசையில் தலை வைக்க வேண்டுமென சிறப்பிப்பது அல்லாஹ் கூறும் அருள் மொழியும், நபி வழியுமல்ல. நபி(ஸல்) அவர்கள் படுக்கப் போகும்போது எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்பதை அறி வித்தார்களோ, அப்படி நடப்பதே நபிவழியாகும். தொழுகைக்கு ஒளூ செய்வது போல ஒளூ செய்ய வேண்டும். படுக்கையை தூய்மையாக உதறி விரித்து, நமது உடலின் வலப்புறத்தை சாய்த்து அல்லாஹும்ம பிஸ்மிக்க ரப்பீ வழஃத்து ஜன்பீ, வபிக அர்ஃ(ய்)பஉகு வ இன் அம்சக்தஹா நப்ஸீ ஃபர்ஹம்ஹா, வஇன் அர்சல்த்தஹா ஃய்பஹபழ் பிமா தஹ்பழ இபாதுக்கசாலிஹீன்.

பொருள் : யா அல்லாஹ்! எனது இரட்சகனே! உனது திருநாமத்தை உச்சரித்தவனாக, எனது உடலை சாய்க்கிறேன். உன்னைக் கொண்டு அதை உயர்த்து வேன். (நான் உறங்குகையில்) எனது உயிரை கைப்பற்றிக் கொண்டால் அதனை (சுவர்க்கம் தந்து) அருள்பாலிப்பாயாக! (விழிப்பது மூலம்) எனது உயிரை திருப்பி தந்தால்(தீய செயலிலிருந்து) உனது நல்லடியார்களை பாதுகாத்தது போல் பாதுகாப்பாயாக! ஆதாரம் : புகாரீ, முஸ்லிம், அஹ்மது. வடக்கே தலை வை! தெற்கே கால் நீட்டு! மேற்கே காலை நீட்டாதே! கிழக்கே தலை வைக்காதே! என்றெல்லாம் நபி(ஸல்) கூறியதற்கு ஆதாரமில்லை. தமிழகத்தில், மேற்கே கஃபத்துல்லாஹ் இருப்பதால் அத்திசையில் கால் நீட்டக் கூடாது என்று நினைக்கின்றனர்.

இதே அடிப்படையில் ஒரு சிலர் அவர்களது குல தர்ஹாவிருக்கும் திசை நோக்கியும் கால் நீட்டக்கூடாது என சட்டமியற்றி நடந்து வருவதைப் பார்க்கிறோம். இவை மூட நம்பிக்கையாகும். கிப்லாவை நோக்கி கால் நீட்டக் கூடாது என்பதற்கு எவ்வித குர்ஆன், ஹதீஃத் ஆதாரமுமில்லை. ஆனால் திறந்த வெளியில் கிப்லாவை முன் னோக்கியோ, பின்னோக்கியோ மலம், ஜலம் கழிப்பதற்கு தடை இருக்கிறது. நீங்கள் மலம், ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்நோக்கவும் வேண்டாம். பின் நோக்கவும் வேண்டாம். (அபூ அய்யூபில் அன்ஸாரி(ரழி), புகாரீ. அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்.

ஐயம் : நபி(ஸல்) மக்காவை விட்டு மதீனாவுக்கு (ஹிஜ்ரத) புறப்பட்டதிலிருந்து தானே நமது இஸ்லாமிய ஆண்டு கணக்கிடப்படுகிறது. அப்படியிருக்க ரபீயுல் அவ்வல் பிறை 12ல் ரசூலுல்லாஹ்(ஸல்) பிறந்தார்களென்றும், 40வது வயதில் நுபுவத் (நபிப்பட்டம்) வந்ததென்றும் கூறுகிறோமே அது எந்த ஆண்டைக்கொண்டு கணக்கிடப்ப டுகிறது. ஹிஜ்ரத் நபி (ஸல்) அவர்களின் 53-வது வயதில்தானே ஏற்பட்டது?! மு.அப்துல் ஹமீது, நிரவி.

தெளிவு : தாங்கள் குறிப்பிட்டது போல நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த ஆண்டிலிருந்தே இஸ்லா மிய ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பிக்கவில்லை. நபி(ஸல்) ஹிஜ்ரி 11-ல் வஃபாத்தானார்கள். அடுத்து அபூபக்கர் (ரழி) ஆட்சி நடந்தது. அவர்கள் 2டி வருடங்கள் ஆட்சி செய்து ஹிஜ்ரி 14ல் வஃபாத்தானார்கள். பின் உமர்(ரழி) ஆட்சி ஆரம்பமானது. அப்போதுதான் இஸ்லாமிய காலண்டர் உருவானது. ஹிஜ்ரி ஆண்டு என பெயரிடப்பட்டது.

ஆனால் அதற்கு முன்பும் 12 மாதங்களைக் கொண்ட வருட கணக்கு நடைமுறை யிலிருந்தது. அதற்கு இன்றைய அரபி மாதங்களின் பெயர்களும் இருந்துள்ளன என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஃதிலும் ஆதாரங்களுள்ளன. நிச்சயமாக அல்லாஹுவிடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டில்) பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை, இதுதான் நேரான மார்க்கமாகும். அல்குர்ஆன்:9:36 ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாயிருக்கும். (2:197) ரமழான் மாத்தில் குர்ஆன் இறக்கப்பட்டது. (2:185) போர் விலக்கப்ட்ட (ரசூல்(ஸல்) விளக்கப்படி, தல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு) சங்கைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால்… அல்குர்ஆன் : 9:5

மேற்கண்டவாறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்பே கணக் கிடப்பட்டுக் கொண்டிருந்தன வென்பதை அறியலாம். “அல்பிதாயா வந்நிஹாயா’ என்ற பெரும் சரித்திர நூல் எழுதிய இமாம் இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி ஆண்டு வருவதற்கு முந்திய காலங்களை ஆமுல்ஃபீல்(யானை வருடம்) எனக் குறிப்பிடுகிறார்கள். எனவே ரபீயுல் அவ்வல் மாதம் நபி(ஸல்) அவர்களுக்கு 40 வயதில் நபிப் பட்டம் கிடைத்தது. அனைத்தும் அன்றைய நடைமுறையில் இருந்த கணக்குப்படி கணக்கிடப்பட்டதுதான். அதனை மாற்றிவிடாதபடியே சந்திர ஓட்டத்தை (LUNAR SYSTEM) கணக்கிட்டு ஹிஜ்ரி ஆண்டு உமர் (ரழி) காலத்தில் உருவாக்கப்பட்டது. அன்றைய அரபிகளிடம் ஞாபக சத்தி அதிகம். தன் குதிரையின் எழுபது தலைமுறையைக் கூட ஞாபகத்தில் வைத்திருந்தனர்.

எனவே நாள், மாதம், ஆண்டு கணக்குகளை நினைவில் வைத்திருந்தது வியப்பில்லையே! அன்றைய “ஆமுல்பீல்’ கணக்கில் கொண்டிருந்தனர். அது உமர்(ரழி) காலத்தில் ஹிஜ்ரி யாக, ஹிஜ்ரத் நடந்த ஆண்டிலிருந்து புதுப்பிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்கள் புது ஹிஜ்ரி ஆண்டை உருவாக்கினார்களே ஒழிய முந்திய கணக்கை பொய்ப்பிக்கவில்லை என்பதை அறியவும். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.

குறிப்பு : திருவள்ளூரின் பிறப்பு பல நூறு ஆண்டு களுக்கு முன் நிகழ்ந்திருந்தாலும், வள்ளுவர் ஆண்டு என்று அண்மையில்தான் தமிழகத்தில் கணிக்கப் பட்டது.

ஐயம் : வியாழன் மாலை, வெள்ளி இரவு ஒவ்வொரு வாரமும் கடைகளிலும், பள்ளிகளிலும் பலாமுசீ பத்து நீங்கி பரக்கத் கிடைப்பதற்காக யாஸீன் ஓதி சிலர் காசு வாங்குகிறார்கள். இது மார்க்கத்தில் உள்ளதா? M.A.அப்துல் காதிர், விருதுநகர்.

தெளிவு : பலாமுசீபத்து என்ற பெயரில் பல அநாட் சாரங்கள் முஸ்லிம்களிடம் நிலவி வருகிறது. அவற் றில் இதுவும் ஒன்று. வியாழன் இரவை வெள்ளி இரவென்றும், ஒவ்வொரு வெள்ளி இரவு தான் யாஸீன் ஓதவேண்டுமென மார்க்கமாக்கியவர் யார்? என்பது எவருக்கும் தெரியாத உண்மை. தினமும் குர்ஆன் படியுங்கள்! நேரம் கிடைக்கும்போதெல்லாம் படியுங்கள்! நபி(ஸல்) அவர்கள் வாக்குப்படி கட்டாயம் நன்மை கிடைக்கும்.

வெள்ளி இரவு பலாமுசீபத்து நீங்க யாஸீன் ஓதுகிறார்கள் என்றால் அன்றுதான் பலாமுசீபத்து இறங்குகிறதா? மற்ற நாட்களில் இறங்குவதில்லையா? மற்ற நாட்களில் பலாமுசீபத்து இறங்காது என்பதை இவர்களுக்குக் கற்றுத் தந்தது யார்? இதற்கெல்லாம் பதில் சொல்லமாட்டார்கள். குர்ஆன் ஓதுவது தவறா? யாஸீன் ஓதக்கூடாதா? அல்லாஹுவின் கலாமை ஓதுவதால் நன்மைதானே! எனக்கூறி காசு தேடவே முற்படுவர்.

ஒவ்வொரு வெள்ளி இரவும் யாஸீன் ஓதி காசு வாங்கும் நீங்கள் குறிப்பிட்டபடி ஒருசில ஆலிம்கள் எவ்வித பலாமுசீபத்தும் இல்லாமல் சுபீட்சமாக இருக்கிறார்களா? என்பதைப் பாருங்கள். உங்களுக்கு உண்மை தெரிந்துவிடும். அவர்களது பொருளாதார வாழ்வில் பரக்கத் இல்லாததால்தான், அவர்கள் யாஸீனை வாராவாரம் வெள்ளி இரவுகளில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு தடவை ஒரு கடையில் வெள்ளி இரவு யாஸீன் ஒதுவதால் பரக்கத் அக்கடையில் ஏற்படு மென்றால், பல கடைகளில் பல தடவைகள் யாஸீன் ஓதும் ஒரு சில ஆலிம்களில் வாழ்வு எவ்வளவு பரக் கத்தாக இருக்க வேண்டும். இருக்கிறதா?

ஒவ்வொரு வியாழன் இரவும் பல கடைகளில் யாஸீன் ஓதிகாசு பெற்று பரக்கத் கிடைக்குமென கூறும் ஆலிம்கள் அடுத்த வியாழன் இரவுக்கும் யாஸீன் ஓதி காசு பெறும் நிலையிலேயே அவர்களுக்கு பரக்கத் இருக்கிறது என்பதையும் உணருங்கள். இவர்களைப் பற்றி நபி(ஸல்) அன்றே நமக்கு அறிமுகப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள். எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல்லாஹ்விடமே கேட்கட்டும். வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடையே (கூலி) கேட்பவர்கள் தோன்றுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: திர்மிதீ, அஹ்மது. குர்ஆனை ஓதுங்கள், அதன்மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள் என நபி(ஸல்) எச்சரித்தார்கள். ஆதாரம் : அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸா கீர்.

மேற்கண்ட ஹதீஸ்களை பார்வையிடுங்கள். வெள்ளி இரவு பலாமுசீபத்து, பரக்கத்து பெயரில் யாஸீன் ஓதி காசு வாங்குபவர்கள் எப்படிப்பட்ட வர்கள் என்பதை உணரலாம். அரபி படித்தவர்கள், குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள் என்ற ஒரே காரணத்தில் இஸ்லாமிய மக்களை இவர்கள் ஏமாற்றி வருகின்றனர். நாமும்குருட்டு நம்பிக்கையில் நடந்து வருகிறோம். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக! இது போன்ற மூடப் பழக்கத்திலிருந்து விடுபட்டு தினமும் அல்லது நேரம் கிடைக்கும் போது குர்ஆன் படித்து, படித்துக் கேட்டு அல்லா ஹுவின் அருட்கொடையை அள்ளிக் கொள்ளுங் கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.

ஐயம் : தொழும்போது இரு ஸுஜூதுகளுக்கும் இடையிலுள்ள சிறு இருப்பில் நபி(ஸல்) அவர்கள் எதையும் நாம் ஓதும் வகையில் கற்றுத் தந்திருக் கிறார்களா? நிஃமத் ஹுஸைன், கத்தார்.

தெளிவு : ஹுதைஃபா(ரழி) அறிவித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கு மத்தி யில் (உள்ள சிறு இருப்பில்) “அல்லாஹும் மஃஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வஹ்தினீ வர்ஜுக்னீ’ என்று ஓதிக் கொண்டிருந்தார்கள். (ஜைது பின் ஹுபாப் (ரழி) ஹாக்கிம்)

பொருள் : யா அல்லாஹ் என்னை மன்னித்தருள் வாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குறை களை நிவர்த்திப்பாயாக! எனக்கு நேர்வழி காட்டு வாயாக! எனக்கு (முறையாக) ரிஜ்கு தந்தருள்வாயாக!

ஐயம் : முஸ்லிம்களின் திருமணத்தின்போது பெண் னுடைய கழுத்தில் தாலி கட்டுவது அவசியமா? தாலி கட்டுவது பற்றி மார்க்கத்தில் ஏதேனும் கூறப் பட்டிருக்கிறதா? S.H.M.நாஸீர், ரியாத்

தெளிவு : திருமணத்தின்போது பெண்ணுடைய கழுத்தில் தாலி கட்டுவதென்பது அவசியமற்றதோர் செயலே யாரும். இதற்கு இஸ்லாத்தில் இம்மியளவும் ஆதாரம் கிடையாது. இத்தகைய அர்த்தமற்ற பழக்கங்கள் நம்மிடையே மாற்று மத பழக்க தோ­த்தினால் ஏற்பட்டவையாகும். அன்னை பாத்திமா(ரழி) அவர்கள் கூட தமது கழுத்தில் தாலிச் சங்கிலி போட்டிருந்தார்கள் என்று நமது தாய்மார்கள் பேசிக் கொள்வார்கள். அதற் கெல்லாம் ஹதீஃத்களில் அறவே ஆதாரமில்லை. திருமண சபையில் அன்னை பாத்திமா(ரழி) அவர்களோடு அலி(ரழி) அவர்களின் பெயரைச் சேர்த்து “கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வ பாத்திமத் திஜ் ஜஹ்ரா’ என்று யாரோ சுயமாக தயாரித்த அந்த துஆவில் இந்த வாசகத்தை ஓதும்போது ஹூம் ஹூம் தாலி கட்டுங்கள் என்று சபையிலுள்ளோர் கூறுவார்கள். அப்பொழுது தான் தாலி கட்டப்படும். இப்பழக்கம் அநேக இடங்களில் உண்டு. எடுத்துக் கூற ஆள் இல்லாததால் இதுபோன்ற சடங்கு முறை கள் நமது சமுதாயத்தில் வேரூன்றிப் போய் கிடக் கின்றன. அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத்துச் செய்வானாக.

ஐயம் : ஸலவாத்துன் நாரியா 4444 தடவை கூட்டாக சேர்ந்து சிலர் ஓதுகிறார்கள். இது மார்க்கத்தில் அனு மதியுள்ளதா? குர்ஆன் ஹதீஃத்படி விளக்கம் தரவும். M.A.அப்துல் காதிர், விருதுநகர்.

தெளிவு : இப்படி ஒரு ஸலவாத்தை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததில்லை. இதற்கான தெளிவான விளக்கத்தை அந்நஜாத் செப்டம்பர், அக்டோபர் 1986 இதழ்களில் ஸலவாத் என்ற தலைப்பில் காண்க.

ஐயம் : 1. நபி(ஸல்) அவர்கள் மீது மலக்குகளும், மூமின்களும் கூறும் ஸலவாத்துக்கு, நபி(ஸல்) அவர் களுக்கு அருள்புரியும்படி, அவர்கள் துஆ செய்கிறார் கள் என்பது, அர்த்தம் என்று கூறுவோமேயானால், அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மீது கூறும் ஸலவாத் துக்கு என்ன பொருள்? 2. பூமி அல்லாத செவ்வாய் போன்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்பு கிறார்கள். இது சம்பந்தமாக ஹதீஃத் விளக்கம் தேவை. அ.அப்துஸ்ஸலாம், மஞ்சக்கொள்ளை.

தெளிவு : 1. ஸலவாத் எனும் பதத்திற்கு பல பொருட்கள் உள்ளன. ஸலவாத் எனும் பதத்தை அல்லாஹ் வுடன் இணைத்துக் கூறும் போது ஒரு பொருளும், மற்றவர்களுடன் இணைத்துக் கூறும்போது பிரி தொரு பொருளும் அதற்குண்டு. பொதுவாக அருள்புரியுதல், அபிவிருத்தி செய்தல், நேசித்தல், புகழ்தல், உதவி ஒத்தாசை செய் தல், நற்பிரார்த்தனை புரியுதல் ஆகியவை அதன் பொருட்களாகும். அல்லாஹ்வுடன் “ஸலவாத்” எனும் பதத்தை இணைத்துக் கூறும்போது, அவன் அருள்புரிகிறான். அபிவிருத்தி செய்கிறான். நேசிக்கிறான், புகழ்கிறான், உதவி ஒத்தாசை செய்கிறான் என்பது பொருளாகும்.

ஆனால் அதை மலக்குகளுடன் இணைத்துக் கூறும்போது, அவர்கள் அருள்புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்கிறார். நேசிக்கிறார்கள், உதவி ஒத்தாசை செய்கிறார்கள், நற்பிரார்த்தனை புரிகிறார்கள் என்பது பொருளாகும். இவ்வாறே மூமீன்களுடன் அப்பதத்தை இணைத்துக் கூறும்போதும், அவர்கள் அருள்புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள், நேசிக்கிறார்கள், புகழ்கிறார்கள், உதவி ஒத்தாசை செய்கிறார்கள் என்பதே அதன் பொருளாகும். சுருங்கக் கூறின், அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் செய்கிறான் என்றால், அவன் அவர்கள் மீது அருள்புரிகிறான் என்றும் மலக்குகள் மூமின்கள், அவர்கள்மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள் என்றால், அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது அருள் புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள் என்பதாகவும் அறிகிறோம்.

எனவே, அல்லாஹ் நம்மை நோக்கி, மூமின்களே! நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறுங்கள்! என்று கட்டளையிட்டிருப்பதை நாம் உற்று நோக்கும்போது, நமது நாவினால் மட்டும் “அல்லா ஹும்ம ஸல்லி அலாமுஹம்மதி’ (யா அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மீது அருள்புரிவாயாக) என்று துஆ செய்வதோடு இருந்துவிடாது, மேற்கண்டபடி முழுமையாக “ஸலவாத்’தின் பொருட்கள் அனைத்தையும் அமுல்படுத்தும் வகையில் நபி(ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்தி, முறையாக அவர்களை நேசிப்பதுடன், அவர்கள் தமது உயிரினும் மேலாக பேணி வளர்த்து நம்மிடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற நம் தீனுல் இஸ்லாத்தின்படி நாமும் நடந்து, பிறரும் நடக்க ஆவனச் செய்வதும் அவசியம் என்பதை உணருகிறோம். 2. தாங்கள் கூறியிருப்பது போல் பூமி அல்லாத மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புவதாலும் நாம் அதை நம்புவதிலோ, அல்லது நம்பாது போவதிலோ, நமக்கு எதுவும் ஏற்படுவதற்கில்லை. அவற்றில் உயிரினங்கள் வாழ்வது குறித்து குர்ஆன், ஹதீஃத்களில் விபரங்களை நாம் பார்க்கவில்லை.

Previous post:

Next post: