குர்ஆனைப் பொருளுணர்ந்து படிப்போம்!

in 2018 மே

குர்ஆனைப் பொருளுணர்ந்து படிப்போம்!

முஸ்தபா, ஈரோடு

அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாமை வாழ்வாகக் கொண்ட முஸ்லிம்களாகிய நாம் அதன் ஆதாரமான குர்ஆனைப் படித்து அதன் பொருளை உணர்ந்து வாழ்கிறோமா? அல்லது குர்ஆனின் உயர்ந்த உபதேசங்களைப் படிக்காமல் மனம்போன போக்கில் வாழ்கிறோமா? என்பதை இக்கட்டுரையின் வாயிலாக பார்ப்போம்.

குர்ஆன் யாருடைய வார்த்தை?

உண்மையை மட்டுமே உள்ளடக்கிய குர்ஆன் கூறுகிறது : இது மிகைத்தவனும் அறிவு மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறங்கிய வேதம் (40:2) அன்ஸலஹு பி இல்மிஹீ (4:166) (அல்லாஹ்வாகிய) அவன் தனது இல்மைக் கொண்டே இதை (குர்ஆனை) இறக்கியுள்ளான். அல்லாஹ்வின் மிக உயர்ந்த நுட்பமான ஞானத்திலிருந்து வெளியான குர்ஆன் உலகில் உள்ள எந்த நூலோடும் ஒப்பிடவே முடியாத தனித்தன்மை வாய்ந்தது. எனவேதான் இணையற்ற இறைவனான அல்லாஹ் குர்ஆனை தன்னுடைய அறிவு என்கிறான். அல்லாஹ்வின் ஞானம் நிரம்பிய “வஹீ” (இறைச் செய்தி)யான குர்ஆன் ஆன்மீக உலகிலும் அறிவுலகிலும் ஏற்படுத்திய தாக்கத்தை சமூகப் புரட்சியை வரலாறு நெடுகிலும் காணலாம்.

சமூக மாற்றத்திற்கான விதை :

இன்றைய முஸ்லிம்களின் மிக அவசியத் தேவை சமூக மாற்றமே! ஈமானிலும், வணக்க வழிபாட்டிலும் பின்னோக்கிச் செல்லும் நமக்கு குர்ஆனின் வழிகாட்டுதல்கள் முக்கியத் தேவையாகும். நபி(ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பு அறியாமை எனும் இருளில் மூழ்கிக் கிடந்த அரபுச் சமூகத்தை அல்லாஹ்வின் அருள் பெற்ற சமூகமாக்கி அவர்களை ஈமானிய வாழ்வு கொண்ட அறிவிற் சிறந்த மேன்மையான பண்பாடுகளையுடைய உயர் சமுதாயமாக உருவாக்கியதும், உத்தம நபித்தோழர் களைத் தந்ததும் அல்குர்ஆன் தான் என்பது வரலாற்று உண்மையாகும்.

இறைநெறி நூலை மறந்தால் வழி தவறும் அபாயம் :

நம் சமூகத்தில் தனிமனித ஒழுக்கங்கள், நற் குணங்கள் குறைந்து அறியாமை மேலோங்கியதற்கு நாம் குர்ஆனைப் பொருளுணர்ந்து படிக்காததே பிரதான காரணமாகும். உலகச் சமூகத்திற்கு குர்ஆனைச் சேர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்ட முஸ்லிம்களிடத்தில் குர்ஆனிய அறிவு அரிதாகி விட்டது வேதனை தரும் உண்மை. நமக்கு முன் வாழ்ந்த நெறிநூல் வழங்கப்பட்ட சமுதாயங்கள் வழிதவறிப் போனதெல்லாம் தங்களுக்கு வழங்கப்பட்ட இறை நெறிநூல் வழிகாட்டுதல்களை தாங்களே படித்து உணராததுதான் காரணமாகும்.

வாழும் அற்புதம் :

ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப் பட்ட அற்புதம் அல்குர்ஆன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பார்க்க புகாரீ: 4981)

இத்தகைய குர்ஆனை அரபியிலும், தமிழிலும் நாம் படிக்கும் போது அதன் உயர்தரத்தையும், இலக்கிய நயத்தையும் மேலும் மிக நுட்பமான சொல் ஆளுமையையும், பளிச்சென்று புரியும் எளிய நடையையும் தெளிவாக உணரலாம். அறிவியல், வணிகவியல், குடும்பவியல் இது போன்ற மனிதகுலத்திற்குத் தேவையான அனைத்துத் துறைகளையும் அலசும் அல்குர் ஆனைப் படிக்க நேரம் ஒதுக்காத நாம் வீணான நிகழ்ச்சிகளைத் தேடி வலைத்தளத்தில் சிக்கி வாழ்க்கையையே பாழாக்குகிறோம். உயி ரோட்டமானதும், உயிருள்ளவர்களை எச்சரிப்பதுமான குர்ஆனின் தொடர்பற்று வாழ்வதினால் தான் அது நம்மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நம் வீடுகளில் பாதுகாப்பாக, மரியாதையாக ஓரங்கட்டப்பட்டுவிட்டது.

தனிமனித சுய சீர்திருத்தத்தில் தொடங்கி உலகை ஆளும் மிகப் பெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்கும் பேரொளியான குர்ஆனை விளங்காமல் சிறந்த சமுதாயமென நம்மையே நாம் கூறிக் கொண்டிருப்பது மடமையின் உச்சமாகும்.

முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமைக்கு வழி:

ஒன்றுபட்டே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் முஸ்லிம் சமுதாயம் நிற்கிறது. உலக அறிவிலிருந்து உள்ளூர் நிகழ்வுகள் வரை நம்மிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகள், பிரிவுகள், பிரச்சனைகள் அனைத்திற்குமான தீர்வு அல்குரானாகும். அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை (அல்குர்ஆனை) பற்றிக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள் (3:103) என்ற இறைவசனத்தின் மூலம் குர்ஆனை முழுமையாக விளங்கி அதனைப் பற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரலாம். உலகெங்கும் அழிவுகளும், ஆபத்துகளும், குழப்பங்களும் சூழ்ந்து முஸ்லிம்களை நசுக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்கான ஒரே கேடயம் அல்லாஹ்வின் கயிறான அல்குர்ஆன் மட்டுமே!

அனைத்திற்கும் தீர்வு அல்குர்ஆனே!

அலி(ரழி) கூறினார்கள் : ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டேன். என்னிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து “முஹம்மதே! உங்கள் சமுதாயத்தார் உங்களுக்குப் பின்னர் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து விடுவார்கள்” என்று கூறினார்கள். அப்போது நான் ஜிப்ரீல்! அதற்கு தீர்வு என்ன? என்றேன். அல்லாஹ்வின் நெறிநூல் தான் (தீர்வாகும்) அதன்மூலம் அல்லாஹ் ஒவ்வொரு சர்வாதிகாரியையும் முறியடித்தான். அதை (குர்ஆனை) பற்றிப் பிடித்துக் கொண்டவர் வெற்றி பெற்றார். அதைக் கைவிட்டவர் அழிந்தார் என இரண்டு தடவை கூறினார்.

பிறகு அது (உண்மை, பொய் ஆகியவற்றை) பிரித்தறிவிக்கும் தெளிவான சொல்லாகும். கேலிக்குரியதல்ல. (திரும்பத் திரும்ப ஓதுவதால் நாவுகள் அதனை இற்றுப் போகச் செய்து விடுவதில்லை. அதன் அற்புதங்கள் முடிந்து விடுவதில்லை அதில் உங்களுக்கு முன் நடந்த செய்தியும், உங்களிடையே தற்போது நடைபெறும் பிரச்சனைகளுக்குத் தீர்வும், உங்களுக்குப் பின்னர் நடக்கவிருப்பவை பற்றிய செய்திகளும் இருக்கின்றன (அஹ்மத் 666).

மேற்கண்ட நபிமொழி உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கும் ஏற்கத் தக்க அற்புதமான தீர்வுகள் அல்குர்ஆனில் தான் உள்ளது என்பதை விவரிக்கிறது. கடந்த கால, நிகழ்கால, மற்றும் வருங்கால செய்திகளையும் உள்ளடக்கிய ஆழமான குர்ஆனின் அறிவைப் பெற முயற்சிக்காமல் புறக்கணித்து விட்டதால் தான் இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வை நோக்கி இறைமறுப்பாளர்களிடம் போய் நிற்கின்ற அவல நிலை ஏற்பட்டு விட்டது.

எச்சரிக்கை :

“என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்” என்று இத்தூதர் கூறினார். (25:30) குர்ஆனை அலட்சியப்படுத்தும் முஸ் லிம்கள் நபியவர்களின் இந்த வாக்குமூலத்தை உணர வேண்டாமா? மலைகூட குர்ஆனின் அழுத்தத்தால் அல்லாஹ்வின் அச்சத்தால் நொறுங்கும் (59:21) ஆனால் அதை விடவும் இறுகிப் போய்விட்டதா நம் இதயங்கள்? ஏன் நம் உள்ளங்களில் குர்ஆன் இன்னும் நுழையவில்லை? படிக்க(ஓத) வேண்டியது எனும் பொருள் கொண்ட குர்ஆனை படித்தறியாமலேயே வாழ்வது குர்ஆனுக்கு நாம் செலுத்தும் கண்ணியமா? அவமரியாதையா?

முஸ்லிம்களாகிய நாம் எக்காரணத்தைக் கொண்டும் குர்ஆனை (படித்து)க் கற்றுக் கொள்வதை விட்டுவிடக் கூடாது. ஏனெனில் குர்ஆன் தான் நம் வாழ்வின் வழிகாட்டி, உள்ளங்களில் புரையோடிய நோய்களுக்கான அருமருந்து. அதை மறந்து வாழ்வது நம்முடைய மறுமை வாழ்வை கேள்விக்குறியாக்கிவிடும். குர்ஆனை விளங்குவது சிரமமானதல்ல. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப் பினை பெறுவோர் உண்டா? (54:40) என்று அல்லாஹ் கேட்கிறான். ஏகனால் எளிதாக்கப் பட்ட குர்ஆனை உளத்தூய்மையோடு தினசரி சில வசனங்களை கவனமாக வாசித்தோமென்றால் அல்லாஹ் விளக்கம் தருகிறான். எனவே நம் ஈமானுக்கு சான்றாக விளங்கும் குர்ஆனைப் படித்து அதனை முழுவதுமாக அறிவோமாக! அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? 47:24)

Previous post:

Next post: