அந்நஜாத் செப்டம்பர் – 2016

in 2016 செப்டம்பர்

செப்டம்பர் 2016 

துல்கஃதா-துல்ஹஜ் 1437

ஜனநாயக சாபக்கேடு!

உலகின் பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜனநாயக ஆட்சி முறை என்றால் மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பப்படி ஆட்சி நடத்துவதாகும். மக்களில் பெரும்பான்மையினர் கல்வியறிவற்றவர்களாகவும், மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு வாழ்பவர் களாகவும், எளிதில் ஏமாறுகிறவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் அறிஞர்களிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இல்லை என்றால் தங்களின் விலை மதிப்பற்ற பொன்னான வாக்குகளை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் இழக்க முன்வருவார்களா?

அதன் விளைவு முற்றிலும் தகுதியற்றவர்களே ஆட்சியில் அமரும் வாய்ப்பே பிரகாசமாக இருக்கிறது. இன்று நாட்டில் நீக்கமற நிறைந்து காணப்படும் கொலை, கொள்ளை, திருட்டு, ஏமாற்று, மோசடி, வஞ்சகம், சூது, லஞ்சம், கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை, வரதட்சணை கொடுமை, பெண்கள் எரித்துக் கொல்லப்படுதல் இப்படி அனைத்தும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றன.

நீதித் துறையே அநீதித் துறையாக உருமாறி வருகிறது. பணம் இருந்தால் எத்தனைக் கொலைகளையும் செய்துவிட்டு, மக்கள் மத்தியில் எவ்வித சலனமுமின்றி நடமாடும் நிலை ஏற்பட்டுவிட்டது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்களே அதுபோல் ஜனநாயக ஆட்சி முறை சாபக்கேடு ஆட்சி முறையாகவே இருக்கிறது.

ஜனநாயகம் என்றால் நீதியோ, அநீதியோ அதுவல்ல விவகாரம், பெரும்பான்மை மக்களைத் திருப்தி செய்ய வேண்டும் என்ற எண்ணமே ஆட்சியாளர்களிடமும், நீதிபதிகளிடமும் காணப்படுகிறது. சமீபத்திய உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் எமது கூற்றை உறுதிப்படுத்துகின்றன.

நாட்டின் கோடிக்கணக்கான பொருளாதாரம் ஜனநாயக ஆட்சி முறையால் வீணடிக்கப்படுகின்றது. ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி மக்களுக்கு மிகமிகத் தேவையான ஒரு திட்டத்தைத் துவங்கி இருக்கும். அதற்காகப் பல்லாயிரம் கோடி செலவிட்ட நிலையில் ஆட்சி மாறிவிட்டால் புதிதாக ஆட்சியில் அமரும் கட்சி அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிடும்.

மக்கள் பணம் பல்லாயிரம் கோடி வீணடிக்கப்படுவதைப் பற்றிப் புதிய ஆட்சியாளருக்குக் கவலை இருக்காது. அதற்கு மாறாக அத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மக்கள் செல்வாக்கு முன்பு ஆட்சியிலிருந்த கட்சிக்குச் சென்றுவிடுமே என்ற கவலையும், அத்திட்டத்தில் தங்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறதே என்ற கவலையுமே மிகைத்திருக்கும். சேது கால்வாய்த் திட்டம் முடக்கப்பட்டிருப்பதும் சென்னையில் துறைமுகம் நோக்கிப் பறக்கும் சாலைத் திட்டம் முடக்கப்பட்டிருப்பதும் இதற்கு நல்லதொரு உதாரணம்.

ஜனநாயக ஆட்சி முறையால் பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தச் சிறுபான்மையினருக்கு எவ்வளவு பெரிய கொடுந்துன்பங்கள் ஏற்பட்டாலும் ஆட்சியாளர்கள் அதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். ஹிந்துத்துவாவினரால் அரங்கேற்றப்பட்ட பல குண்டுவெடிப்புகள் பல வன்முறைச் செயல்கள், மும்பை கலவரம் இவை அனைத்தை யும் மூடி மறைக்க முற்பட்டும் அதை எல்லாம் தாண்டி அவை வெளிச்சத்திற்கு வந்த பின்னரும், மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தன? நடவடிக்கை பூஜ்யம்.

அதே சமயம் பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்த சிறுபான்மையினரைச் சேர்ந்த அப்பாவிகள் மீது எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க வாய்ப்புக் கொடுக்காமல் ஒருதலைப்பட்சமாக அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் பார்க்கிறோம். பல அப்பாவிகள் பல்லாண்டுகள் ஜாமீன் மறுக்கப்பட்டு விசாரணைக் கைதிகளாகவே சிறையில் வாடுவதையும், அவர்களின் இளமை தொலைக்கப்படுவதை யும், முதுமைக் காலத்தில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுவிக்கப்படுவதையும் பார்க்கிறோம்.

உள்நாட்டில் இப்படிப்பட்ட அலங்கோலங்கள், அட்டூழியங்கள் நிறைந்து காணப்படுகிறது என்றால் பக்கத்து நாடுகளும் பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்த நீதியைக் குழிதோண்டிப் புதைக்கின்றன. இந்தியா ஹிந்துக்களைப் பெரும்பான்மையாகவும் முஸ்லிம்களை சிறுபான்மையாகவும் கொண்ட நாடு. இந்தியாவிலிருந்து 1947-ல் பிரிக்கப்பட்ட பாகிஸ்தானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், ஹிந்துக்கள் சிறுபான்மையாகவும் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானும் அதன் உளவுத் துறையும் திட்டமிட்டு இந்தியாவில் வன்முறை-நாசகாரச் செயல் களைச் செய்யத் தீவிரவாதிகளை ஊடுறுவச் செய்கிறது என்று தொடர்ந்து இந்தியா குற்றப்பத்திரிகை வாசித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மாறாக அதே குற்றச்சாட்டை பாக்கிஸ்தான் இந்தியா மீது வாசித்துக் கொண்டிருக்கிறது. உண்மை என்ன? ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தி அவர்களின் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ள முற்படுகின்றனவே அல்லாமல் சத்தியத்தை நீதியை நிலைநாட்ட முற்படுவதில்லை.

இந்திய அரசு ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தா லும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முற்படுவதில்லை, காரணம் வாக்கு வங்கி. அதேபோல் பாகிஸ்தான் பெயரளவு முஸ்லிம் தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்கள் திட்டமாக வெளிப்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்படுவதில்லை. காரணம் வாக்கு வங்கி.

இதுபோல் இன்னும் எண்ணற்ற அநீதமான செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படி ஜனநாயக ஆட்சி முறை நாட்டில் அநீதி, அநியாயம், அட்டூழியம், அக்கிரமம் என பஞ்சமா பாவங்கள் பெருக வழிவகுக்குமே அல்லாமல் நீதி நியாயத்தை, அமைதியை, வளமான வாழ்வை நிலைநாட்ட ஒருபோதும் உதவாது.

காரணம் சட்டங்களை இயற்றுகிறவர்கள் யாரோ அவர்களுக்குச் சாதகமாகவே அந்த சட்டங்கள் அமையும். அமெரிக்கச் சட்டம் அமெரிக்கனுக்குச் சாதகமாகவே இருக்கும். பிரிட்டனின் சட்டம் பிரிட்டனுக்குச் சாதகமாகவே அமையும். அதிலும் அங்குள்ள பெரும்பான்மை மக்களுக்குச் சாதகமாகவே அமையும். இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சட்டம் அதை வகுத்த மேல் ஜாதியினருக்குச் சாதகமாகவே இருக்கிறது. இப்படி மனிதச் சட்டங்கள் அவரவர்களுக்குச் சாதகமாக ஒரு தலைப் பட்சமாக இருக்குமே அல்லாமல், நடுநிலையோடு நீதி நியாயத்தை நிலைநாட்டும் முறையில் மனிதச் சட்டங்கள் ஒருபோதும் இருக்காது.

உலகின் நாடுகள் அனைத்தும் இன்று மனிதர்கள் வடிவமைத்த சட்டங்களைக் கொண்டு இயங்கி வருவதால், உலகம் அமைதி இழந்து தவிக்கிறது. அமைதி கிலோ என்ன விலை என கேட்கும் அளவுக்கு அமைதி அருகிவிட்டது. எங்கு பார்த்தாலும் அமைதியற்ற நிலை. மனிதநேயம் மறக்கடிக்கப்பட்ட நிலை. மனித இரத்தம் ஆறாக ஓடும் பரிதாப, கேவல நிலை. ஆறறிவு மனிதன் ஐயறிவு மிருகங்களைவிட கேடுகெட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட பரிதாபம்.

மனிதன் இங்கு மட்டும் நிம்மதி இழந்து நரக வாழ்க்கை வாழவில்லை. இவ்வுலக வாழ்க்கை மனிதன் தனது உணவுத் தேவையே நிறைவேற்ற வயலில் வேலை செய்வது போன்ற மிகமிகக் குறுகிய வாழ்க்கை. மனிதன் தன் மரணத்திற்குப் பின்னர் சந்திக்க இருக்கும் வாழ்க்கையே நிரந்தரமானது. அந்த நிரந்தர வாழ்க்கையை நரக வாழ்க்கையாக்கிக் கொள்ளும் மிருகங்களை விட கேடுகெட்ட வாழ்க்கையையே ஜனநாயக, சர்வாதிகார, சோசலிச, கம்யூனிச சித்தாந்தங்களின்படி மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

மனிதன் மனித நேயத்துடன், இரத்த பாசத்துடன் மனநிம்மதியான அமைதியான, வளமான வாழ்க்கையை அற்பமான இவ்வுலகில் வாழ்வதோடு மட்டுமில்லாமல், நிரந்தரமான மறு உலகிலும் முழுமையான மனதிருப்தியுடனும், சுபீட்சமாக வாழ விரும்பினால், மனிதன் அவனைப் படைத்து அவனுக்கு அழகிய வாழ்க்கைத் திட்டத்தைக் கொடுத்துள்ள இணை துணை தேவை இல்லாத தன்னந்தனியனான ஏகன் இறைவன் கொடுத்துள்ள இறுதி வாழ்க்கை நெறிநூலின்-அல்குர்ஆனின் சட்ட திட்டங்களின்படி நடக்க முன்வரவேண்டும். இதற்கு முன்னர் இறைவன் அருளிய ஹிந்து வேதங்கள், யூத தோரா, கிறிஸ்தவ பைபிள், இன்னும் முன்னைய அனைத்து மதங்களின் வேதநூல்கள் இவை அனைத்திலும் பொதிந்துள்ள சத்திய, நேர்வழி கருத்துக்கள் அனைத்தையும் இறைவன் இறுதி நெறிநூல் அல்குர்ஆனில் இடம்பெறச் செய்துள்ளதோடு, அரசுகள் முன்னைய கரன்சி நோட்டுகளைச் செல்லாது என ரத்து செய்வது போல் முன்னைய அனைத்து வேதங்களையும் இரத்து செய்துள்ளான் என்பதை ஏற்று அதன்படி நடந்தால் மட்டுமே உலகம் உய்ய வழி பிறக்கும்.

ஹஜ் பெருநாள் சிந்தனைகள்:

தியாகத் திருநாள்…

– இப்னு ஹத்தாது

மறுபதிப்பு : 1986 ஆகஸ்ட்

இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் பேரால் இந்த உம்மத்துக்கு அறிமுகப்படுத்தியது இரண்டு ஈத்கள்(பெருநாட்கள்) மட்டுமே, ஒன்று ஈகைத் திருநாள். மற்றொன்று தியாகத் திருநாள், இரண்டு பெருநாட்களும் மாபெரும் இலட்சிய அடிப்படையில் அமைந்துள்ளன. ரமழான் முழுதும் நோன்பு நோற்று, தனது அத்தியாவசியத் தேவைகளை இறை ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு, தடுத்துக் கொள்வதன் மூலம், ஏழைகளின், இல்லாதவர்களின் நிலை எப்படி இருக்கும்? அவர்களின் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றை அனுபவத்தால் உணரவைத்து, இல்லாதோருக்கு ஈந்து மகிழ்ந்து கொண்டாடும் ஒரு நன்னாளாக ஈகைத் திருநாள் அமைந்துள்ளது. அதேபோல், நாம் அல்லாஹ்வின் அடிமைகள், அடிமை எஜமானனின் கட்டளைகளுக்குப் பூரணமாகக் கட்டுப்படவேண்டும்.

அப்து(அடிமை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரியே என்று அடிமைத்தன்மையை முழுமையாகப் பிரதிபலிக்கும் பொன்னாளாகத் தியாகத் திருநாள் அமைந்துள்ளது. நமக்கு “முஸ்லிமீன்” என்று பெயரிட்ட அல்லாஹ்வின் பிரியத்திற்குரிய தூதர் நபி இப்றாஹீம்(அலை) அவர்களது வாழ்வோடு இணைந்த இறை அடிமைத் தன்மையின் முழுமையான வடிவத்தை நாம் ஞாபகப்படுத்துவதன் மூலம், அதன் பிரதிபலிப்புகள் நம்மிலும் ஏற்பட, முயற்சிகள் செய்வோமாக.

நபி இப்றாஹீம்(அலை) அவர்களது வாழ்வின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே, இளமைப் பருவத்திலிருந்தே அல்லாஹ் ஒருவனுக்கே வழிபடவேண்டும்; அவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவனல்லாத யாருக்கும், எதற்கும் வழிப்படுவது மாபெரும் குற்றம் என்ற அடிப்படை உண்மையில் அவர்களுக்கிருந்த தெளிவு, அந்த மாபெரும் உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதால் ஏற்படும் பயங்கரமான எதிர்ப்புகள், இன்னல்கள், சகிக்க முடியாத கஷ்டங்கள் அனைத்தையும் பொறுமையோடு சகித்துக் கொண்டு, தான் கொண்ட தெளஹீதை நிலைநாட்டும் பணியிலேயே கண்ணாயிருத்தல், எந்த நிலையிலும் தனது “ரப்’பின் திருப்பொருத்தமே தனது வாழ்வில் இலட்சியம், அதற்காக அன்பு மனைவியை இழக்க நேரிட்டாலும், அன்பு மகனை இழக்க நேரிட்டாலும், அது சாதாரண தியாகமே என்ற உயர்ந்த எண்ணம், தனக்கு விபரம் தெரிந்ததி லிருந்து, மடியும் வரை அல்லாஹ்வுக்கென்றே வாழ்ந்து, மடிந்த தியாக வாழ்க்கை இவை அனைத்தும் நமக்கு அழகிய முன்மாதிரிகளாக அமைந்துள்ளன.

இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். (குர்ஆன் : 3:95) இப்றாஹீம்(அலை) அவர்களின் தந்தை ஆஜர் ஒரு புரோகிதர். பெரியார்களின் சிலைகளை வடித்து, தெய்வங்கள் என்று மக்களை நம்பவைத்த, இந்தத் தீய செயல் இப்றாஹீம்(அலை) அவர்களின் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளத்திலே தீ எனச் சுடுகின்றது. பால் மணம் மாறாத அந்தப் பாலப் பருவத்திலேயே தன் தந்தையை நோக்கிச் சொல்கிறார்கள். என் அருமைத் தந்தையே, உங்கள் கைகளால் வடித்தெடுத்த இந்தப் பெரியார்களின் சிலைகளை தெய்வமென்று நம்பி, மக்களை வழிபடச் சொல்கிரீர்களே? இது நியாயந்தானா? நமது அற்ப உலக வாழ்வுக்காக மக்களை நரகப் படுகுழியில், படு நாசத்தில் விழச் செய்வது சரிதானா? நாளை நம்மைப் படைத்த அந்த அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் விடுவானா? என்று கேள்விக்கணைகளை அடுக்கடுக்காக அள்ளி வீசினார்கள். பெற்ற தந்தைக்கோ அளவுகடந்த கோபம் வருகின்றது.

நான் பெற்ற பிள்ளை என்னையே எதிர்ப்பதா? எனது குடும்ப, வயிற்றுப் பிரச்சனையில் மண்ணை அள்ளிப் போடுவதா? என்று அங்கலாய்க்கிறார். மகனே! இதுதான் நமது பிழைப்படா! இதை விட்டால் நாம் உயிர் வாழ்வது எப்படியடா? குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்பாக வந்து முளைத்திருக்கிறாயே! என்று அதட்டுகிறார். நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் இந்த இடத்தில், பெற்று வளர்த்த தன் தந்தைக்கு வழிப்படுவதை விட, தன் தந்தையையும் தன்னையும் மற்றும் அகிலமனைத்தையும் படைத்துப் போ´த்துப் பரிபாலித்து வரும், அந்த அல்லாஹ் ஒருவனுக்கு வழிப்படுவதே தனது தலையாய கடமை என்ற தெளிவான முடிவுக்கு வருகிறார்கள். தனது செயல் தன்னையும் தனது குடும்பத்தையும் உலக வாழ்வில் பாதிக்கிறதே என்பதையும் பொருட்படுத்தாமல், மக்களிடம், மக்களே இந்தப் பெரியார்களின் சிலைகள் மனிதக் கைகளால் செய்யப்பட்டவை; வெறும் சிலைகளே! இவற்றாலோ, இவற்றிற்குரிய பெரியார் களாலோ, உங்களுக்கு ஆகப்போவது ஒன்று மில்லை! இவற்றையோ, இவற்றிற்குரியவர் களையோ வணங்குபவர்கள் அறிவீனர்களே! நஷ்டவாளிகளே! அப்படிப்பட்டவர்கள் இப்பெரியார்களின் சிலைகளை வாங்கிக் கொள்ளலாம் என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தப் பிரச்சாரம் தந்தை ஆஜருக்கு வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சியது போல் வேதனையைக் கொடுத்தது. கடுங்கோபமுற்று மகனைப் பார்த்து, “நீ என் கண்ணிலும் விழிக்காதே, உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்” என்று வீட்டை விட்டே துரத்தி அடிக்கிறார். இதிலிருந்து நீ விலகிக் கொள்ளவில்லையானால் உன்னை நிச்சயமாகக் கல்லால் எறிவேன், என்னை விட்டும் என்றென்றும் தூரப் போய்விடு. (குர்ஆன்: 19:49) என்றார். ஆதரிப்பார் யாரும் இல்லாமலும் ஒதுங்குமிடம் இன்னதென்று தெரியாத நிலையிலும் அந்த இளம் வயதிலேயே அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வைத் துத் தனித்துத் தனது உலக வாழ்வைத் துவக்குகிறார் கள் இப்றாஹீம்(அலை) அவர்கள், அடுக்கடுக்காக இடுக்கண்கள் வந்த போதிலும் கொண்ட கொள்கையை, ஏகத்துவப் பிரச்சாரத்தை, சிலை, கபுரு உடைப்புப் பிரச்சாரத்தை இப்றாஹீம்(அலை) அவர்கள் கைவிடுவதாக இல்லை. துணிவாகத் தொடர்கிறார்கள்.

ஓர் இடத்திலே வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டுச் சென்று விடுகிறார்கள். தாங்கள் வணங்கும் தெய்வங்கள் இவ்வாறு சின்னாபின்னப்படுத்தப்பட்டு நொறுங்கிக் கிடப்பதைக் கண்ட ஊர் மக்கள் பதைபதைக்கிறார்கள். கடுமையான கோபத்திற்குள் ளாகிறார்கள். விசாரிக்கும்போது, இப்றாஹீம் என்ற பெயராம், வாலிபனாம், அவன் தான் நமது தெய்வங்களை ஏளனம் செய்கிறவன், அவன்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அழைத்து வந்து-இல்லை இழுத்து வந்து இப்றாஹீம்(அலை) அவர்களை விசாரிக்கின்றனர். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அதோ அந்தப் பெரிய சிலையிடம் கேட்டுப் பாருங்கள் என்று அந்த மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். தன் முன்னால் நடந்தது கூடத் தெரியாத வெறும் சிலை களையா தெய்வம் என்று வணங்குகிறீர்கள் என்று குத்திக்காட்டுகிறார்கள். (குர்ஆன்: 21:60-67)

துணிச்சலாக, சிலை, கபுரு வணக்கம் கூடாது என்று எடுத்துரைக்கிறார்கள். பிரச்சனை முற்றி இறுதியில் மன்னன் நம்ரூதின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தப்படுகிறார்கள். மன்னன் என்ற பயமோ நடுக்கமோ இப்றாஹீம்(அலை) அவர்களுக்குச் சிறிதும் இல்லை, தைரியமாக நெஞ்சுயர்த்தி, தான் கொண்டுள்ள அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்ற கொள்கையை, மன்னனிடமே எடுத்துச் சொல்கிறார்கள். முடிவு நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்படுகிறார்கள். அல்லாஹ்(ஜல்) உத்தரவு கொண்டு, கரிக்கும் நெருப்புக் குண்டம் சுகம் தரும் சோலையாக மாறுகின்றது. (குர்ஆன்: 21:68,69)

நபி இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு, இதோடு சோதனை முடிந்துவிட்டதா? இல்லை! மீண்டும் தொடர்கின்றது, தொடர்கதை போல், அன்புக் கினிய ஆசை மனைவியையும், பல்லாண்டு காலம் ஏங்கி, இறைவனிடம் பன்முறை வேண்டிப் பெற்ற அருமைப் பச்சிளம் பால்குடி மகனையும், மனித சஞ்சாரமே அற்ற பக்கா(மக்கா) பாலைவனத்தில் கொண்டு விடுமாறு இறை உத்தரவு வருகின்றது. இதனால் இறைவனுக்கு என்ன லாபம் என்று சிந்திக்கவில்லை இப்ராஹீம்(அலை), பந்தம், பாசம், ஆசை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து விட்டு இறை உத்தரவைத் தலைமேல் கொண்டு செயல்படுவதே அடிமையின் கடமை என எண்ணி, இறை உத்தரவை நிறைவேற்றத் துணிகிறார்கள். ஆதரிப்பார் யாரும் இல்லாத கடும் பாலைவனத்திலே அருமை மனைவியையும், அன்பு மகனையும் கொண்டுபோய் விட்டு விட்டு, நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு திரும்புகிறார்கள் நபி இப்றாஹீம் (அலை), எங்களுக்கேன் இந்தக் கடுஞ்சோதனை? இதைத்தான் உங்கள் இறைவன் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறானா? என்ற பாச மனைவியின் கேள்விக்கு ஆம்! என்ற பதிலே இப்றாஹீம்(அலை) அவர்களிடமிருந்து கிடைக்கின்றது.

அப்படியானால் அந்த இறைவன் எங்களுக்குப் போதுமானவன் என்று அன்பு மனைவியாரும் ஆறுதல் அடைகிறார்கள். நாட்கள் செல்கின்றன. கொண்டுவந்த உணவுப் பொருள், தண்ணீர், அனைத்தும் தீர்ந்துவிட்டன. பசியின் கொடுமையினால் பச்சிளம் பாலகனுக்குப் பால் இல்லை. பல நாட்கள் தாயும், சேயும் பட்டினி, பசி தாங்காது சேய் வீறிட்டு அழுகின்றது. தனயனின் பசித்துயர் தாங்காது, தாயின் உள்ளம் படாத பாடுபடுகின்றது. மகனின் பசி போக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும், குறைந்தபட்சம் வறளும் நாவை ஈரப்படுத்திக் கொள்ளக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்காதா? என்று ஏங்குகின்றது பெற்ற உள்ளம். அதற்காக இங்கும் அங்கும் ஓடுகிறார்கள். அன்று அவர்கள் ஓடிய ஓட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். தனயனின் கால்களுக்கடியிலேயே “ஜம்ஜம்’ நீரைப் பெருக்கெடுத்தோடச் செய்து ஹஜ்ஜுக்கு வரும் ஆண்கள், பெண்கள் அனைவரும் அவர்கள் அன்று ஓடிய அந்த மலைகளுக்கிடையே ஓடுவதை ஹஜ்ஜின் ஒரு அமலாகவும் “ஜம்ஜம்’ தண்ணீரை ஒரு புனிதப் பொருளாகவும் ஆக்கி விட்டான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன். துன்பம் முடிவுற்றதா? இல்லை! சோதனை இன்னும் தொடர்கின்றது.

பச்சிளம் பாலகன் வளர்ந்து ஓடியாடித் திரிகின்ற பருவம். இடையிடையே இப்ராஹீம்(அலை) பக்கா (மக்கா) வந்து அன்பு மனைவியையும், ஆசை மகனையும் பார்த்துச் செல்கிறார்கள். ஒருநாள் நபி இப்றாஹீம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப்பெற்ற அருமை மகனைத் தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இங்கு, நபிமார்களின் கனலில் ஷைத்தான் வரமுடியாது என்பதால் இறை உத்தரவு என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வின் நாட்டம் அதுதான் போலும், அவனது நாட்டத்தை நிறைவேற்றுவதே அடிமையாகிய தனது கடமை என முடிவெடுத்து, தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விபரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயில்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது. அன்புத் தந்தையே அல்லாஹ்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளனாகவே காண்பீர்கள் (குர்ஆன் : 37:102) என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள். முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! இந்த இடத்திலே, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முன்னால், தங்கள் பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அனைத்தும் ஒன்றுமே இல்லை.

அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவுறச் செய்வதே அடிமைகளின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனயனும் எந்த அளவு உணர்ந்திருந்தார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆம்! தாங்கள் கண்ட கனவைச் செயல்படுத்த, பெற்ற மகனைத் தன் கரங்களாலேயே அறுத்துப் பலியிடத் துணிந்து அழைத்துச் செல்கிறார்கள். எந்த உள்ளமும் பதைபதைக்காமல் இருக்க முடியாது. கடுமையான சோதனைக் கட்டம். இப்றாஹீம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பிள்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையில் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்கிறான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை. ஷைத்தானைக் கல்லால் அடித்துத் துரத்துகின்றார்கள். ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று கலைக்கப் பார்க்கிறான். பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை.

மாறாக அல்லாஹ்வின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கின்றது என்று கூறி ஷைத்தானை அடித்துத் துரத்துகிறார்கள். இறுதியில் பலியிடப்போகும் மகனை நெருங்குகிறான். சாதக வார்த்தைகளைக் கூறுகின்றான். தந்தையோ வயது முதிர்ந்தவர், நீயோ வாழவேண்டிய வயது, உலக வாழ்க்கைய இனிமேல்தான் அனுபவிக்க வேண்டும். இந்த நிலையில் உன்னைப் பலியிடப் போகின்றாரே உன் தந்தை, அதற்கு நீ இடங் கொடுக்கலாமா? தனயனும் ஷைத்தானின் சாதக வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி, இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ, தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்கமுடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள். தந்தை, தாய், தனயன் மூவரின் செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அதன் ஞாபகர்த்தமாக ஹாஜிகள் இன்றும் மூன்று இடங்களில் கல் எறிவதை, ஹஜ்ஜின் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான் அல்லாஹ்(ஜல்). இறுதியில் இப்றாஹீம் (அலை) அவர்கள் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களைக் கீழே கிடத்திக் கழுத்தில் கத்தியை ஓட்டத் தயாராகிறார்கள்.

ஆம்! மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு எந்த அளவு வழிப்பட்டு நடக்கிறான்? என்று அல்லாஹ் சோதிக்கிறானேயல்லாமல், அந்தச் சோதனையால் மனிதன் தன் முன் காணப்படும் வேதனையில் சிக்கவைக்க வேண்டுமென்பது, அல்லாஹ்(ஜல்)வின் விருப்பமன்று. எண்ணற்ற தடங்கல்கள் ஏற்பட்ட பின்பும் தனக்கு வழிபடும் ஒரே நோக்கம் தவிர வேறு நோக்கம், தந்தை, தாய் தனயன் மூவருக்கும் இல்லை, இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட பின் அந்த வேதனை அவர்களுக்கு ஏன் ஏற்படவேண்டும்? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நாடினான் போலும்! இதோ இறைவன் கூறுகிறான், ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு(இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை, யா இப்றாஹீம்! என்று அழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கும் நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.

நிச்சயமாக இது தெளிவாக ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹீம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம். (குர்ஆன் : 37:103-110) இப்றாஹீம்(அலை) அவர்களின் தியாக உணர்வை அல்லாஹ்(ஜல்) ஏற்றுக்கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும் வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான். ஆம்! அல்லாஹ்வின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால், அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டதால், அந்தச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நமக்கு ஒரு ஈகையே (பெருநாளையே) அல்லாஹ்(ஜல்) கொடுத்திருக்கிறான்.

வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹீம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவராலும் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட கஃபத்துல் லாஹ்வை வலம் (தவாஃப்) வருவதை ஒரு வணக்கமாகவே அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்று கஃபத்துல்லாவைக் கட்டிய இடத்தை (மகாமே இப்றாஹீம்) தொழும் இடமாக அல்லாஹ் ஆக்கிவிட்டான். (குர்ஆன் : 2:125)

தியாகத் திருநாள் தரும் படிப்பினை இவை தான். நாம் அல்லாஹ்வின் அடிமைகள், அவனே நமது எஜமானன். நாம் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுக்காகவே மடிவதே நமது நீங்காத இலட்சியமாகும். (நீர்) கூறும்! எனது தொழுகை, எனது (ஹஜ்ஜின் கிரியைகள்) தியாகம், என் வாழ்வு, என் மரணம் (அனைத்தும்) ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே. (குர்ஆன்: 6:162)

எந்த ஒரு காரியத்திலும் நமது, நமது மனைவி மக்களது, உலக மக்களது அபிலாசைகளை விட, அல்லாஹ்(ஜல்)வின் கட்டளையை நிறைவேற்ற முற்படுவதே நமக்கு வெற்றியையும் இறுதியில் மகிழ்ச்சியையும் அளிக்கும். மறுமையில் ஈடில்லாப் பெரும் பேறுகளைத் தரும். நமது, நமது மனைவி, மக்களது, உலக மக்களது அபிலாசைகளுக்கு இடம் கொடுத்தால், ஷைத்தானின் வலையில் சிக்கி விடுவோம். நாம் எதை எதிர்பார்த்தோமோ, அந்தச் சந்தோசமும் நம்மை விட்டுப் போய்விடும். இறுதியில் ஷைத்தான் நம்மை மீளா நரகில் கொண்டு சேர்த்து விடுவான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. அதிலிருந்து மீட்சி இல்லாமலும் போகலாம். ஆகவே இது விஷயத்தில் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது கடமை. படிப்பினை பெறுவோமாக ஆமீன்.

அடுத்து, இங்கு இன்னொரு படிப்பினையும் பெற முடிகின்றது. நபிமார்கள், வலிமார்கள், நல்லடியார்கள் இவர்கள் அனைவரும் இறைவனுக்குப் பூரணமாகக் கட்டுப்பட்டு, தியாக வாழ்க்கை வாழ்ந்ததன் காரணமாகத்தான் இறைவனிடத்தில் உயர் பதவிகளையும், இறை திருப்தியையும் பெற்றுக் கொண்டார்கள், இன்று மக்களுக்கு மத்தியில் பெரிதுபடுத்திக் காட்டப்படும் மாயாஜால வித்தைகள் போன்ற மந்திர தந்திரக் கதைகளை வைத்து அல்ல! உதாரணமாக, ஒரு பெரியார் இன்னொரு வரது கோழியைப் பிடித்து அறுத்துச் சமைத்துச் சாப்பிட்டு விட்டார், கோழிக்குச் சொந்தக்காரன் வந்து சண்டையிட்டான். உடனே, சாப்பிட்டு எறிந்த எலும்புகளை எல்லாம் சேர்த்து, உயிர் பெற்றுவிடு என்று அந்தப் பெரியார் சொன்ன மாத்திரத்தில் கோழி உயிர் பெற்று எழுந்துவிட்டது என்று கதை சொல்வார்கள். நபி(ஸல்) அவர்களுக்கே பிறரது பொருளை அனுமதி இன்றிச் சாப்பிட உரிமை இல்லை என்றால், இந்தப் பெரியாருக்கு எங்கிருந்து அனுமதி கிடைத்தது. ஹறாமைச் சாப்பிட்டவர் எப்படி “கராமத்’ காட்டமுடியும்? ஊரான் வீட்டுக் கோழியை அறுத்துச் சாப்பிட்ட இந்தக் கதையையும் இறைவனுக்காகப் பெற்ற மகனையே அறுக்கத் துணிந்த, இப்றாஹீம்(அலை) அவர்களின் தியாக வரலாற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இறைவன் எதைப் பொருந்திக் கொள்வான் என்று சிந்தியுங்கள். நபிமார்களுக்குரிய முஃஜிசாத்தாக இருப்பி னும், வலிமார்களுக்குரிய கராமத்தாக இருப்பினும் அல்லாஹ்வின் அனுமதி இன்றி, அவர்கள் விரும்பியவுடன் செய்ய முடியாது. எந்த ஒரு தூதருக்கும் அல்லாஹ்வின் உத்தரவின்றி அற்புதம் கொண்டுவர முடியாது. (குர்ஆன்: 40:78)

மேலும் அவை அவர்களுக்குரிய சாதாரண அடையாளங்களில் ஒன்றே அல்லாமல் இன்று நம்மவர்கள் பெரிதுபடுத்திக் காட்டும் அளவுக்கு முக்கிய இடத்தைப் பெற்றவை அல்ல. அவர்களது சிறப்பெல்லாம், அவர்களது ஈமானையும் தக்வாவையும் வைத்துத்தான். (குர்ஆன் : 10:63, 49:13)

இந்த மாயாஜாலக் கதைகளை வைத்து அல்ல. இந்தக் கட்டுக்கதைகளைச் சொல்லித்தான் பெரியார்களின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதில்லை. குர்ஆன், ஹதீஃதுக்கு ஒத்த அவர்களின் உண்மையான போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னாலே போதும். நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் வரலாற்றிலும், அவர்கள் கூர்மையான கத்தியைக் கொண்டு இஸ்மாயீல்(அலை) அவர்களின் கழுத்தை அறுத்தார்கள், கழுத்து அறுபடவில்லை, அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆகிவிடுவோமோ என்ற அச்சத்தில், ஆத்திரமுற்று பக்கத்திலிருந்த பாறாங்கல்லில் கத்தியை ஓங்கி அடித்தார்கள்.

பாறாங்கல் இரண்டாகப் பிளந்துவிட்டது, என்று இங்கும் ஒரு மாயாஜால மந்திரக் கதையை இட்டுக் கட்டியிருக்கிறார்கள். கீழ்க்குறிப்பிடப்படும் குர்ஆன் வசனங்களை மீண்டும் ஒருமுறை உற்று நோக்குங்கள். ஆகவே அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, இப்றாஹீம் அலை, மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை யா இப்றாஹீம் என்றழைத்தோம். திடமாக நீர் கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான, பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
(குர்ஆன் : 27:103-107)

சாதாரண அறிவு படைத்தவனும் இவ்வவசனங்களைப் பார்த்த மாத்திரத்தில் இப்றாஹீம்(அலை) மகனை முகம் குப்புறக் கிடத்தியவுடன், அல்லாஹ் அவரை அழைத்துவிட்டான், அறுக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை, அப்படிப்பட்ட கதைகளெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் தான் என்பனவற்றைப் புரிந்து கொள்ள முடியும். உண்மைக்குப் புறம்பான, மாயாஜால மந்திரக் கட்டுக்கதைகளைப் பெரியார்கள் வலிமார்கள் விஷயத்தில் சொல்லிச் சொல்லிப் பழக்கப்பட்டு விட்ட ஒரு சாரார் அந்தப் பழக்கதோசத்தில் குர்ஆன் தெளிவாக பறைசாற்றிக் கொண்டிருக்கும், ஒரு சம்பவத்திலும், தங்கள் புழுகுமூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இங்கு இன்னொன்றையும் கவனித்து விளங்கிக் கொள்ளுங்கள். குர்ஆனைக் கொண்டு நிலைநாட்டப்பட்ட ஒரு உண்மைச் சம்பவத்திலேயே இப்படி மாயாஜால மந்திரக் கதைகளை உண்டாக்கியவர்கள் ஆதாரப்பூர்வமில்லாத வலிமார்கள் வரலாறுகளில் எந்த அளவு புழுகு மூட்டைகளை அள்ளி விட்டிருப்பார்கள் என்பதைச் சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ள முடியும். இந்த வகையில் உருவானது தான். செத்த கோழியும் உயிர் பெற்று எழுந்த கதையாகும்.

இவற்றிற்கெல்லாம் மூல காரணம் என்ன என்று பார்க்கும்போது வலிமார்கள் விஷயத்தில் அளவு கடந்த கட்டுக் கதைகளையும் மாயாஜாலக் கதைகளையும் கட்டிவிட்டு, பாமர மக்களுக்கு மத்தியில் வலிமார்களைப் பற்றி ஒரு இமேஜை உண்டாக்கி, சுருங்கச் சொன்னால் குறை´ காபிர்களைப் போல், அவர்களைக் குட்டித் தெய்வங்களாக்கி, அதன் மூலம் சமுதாயத்தில் கபுரு வணக்கத்தை உண்டாக்கி வயிறு வளர்க்க வேண்டும், பிழைப்பு நடத்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய நோக்கமாகும். அல்லாஹ்(ஜல்) இந்தக் கயவர்களின் மாயவலையிலிருந்து இந்தச் சமுதாயத்தைக் காத்தருள்வானாக. மனிதரில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக்கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி (அவற்றை ஜனங்களுக்குச் சொல்லி) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து அறிவின்றி (ஜனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (குர்ஆன் : 31:6)

குர்ஆன், ஹதீஃதுகளுக்கு மாற்றமான, இட்டுக் கட்டப்பட்ட மாயாஜாலக் கட்டுக்கதைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, குர்ஆன், ஹதீஃதுகளை மட்டும் வைத்துச் செயல்படுவதை இந்த “ஈத்” இலட்சியமாகக் கொள்வோமாக!

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு!

மறுபதிப்பு : 1987 ஜன.-பிப்.

இன்று இஸ்லாமிய சமுதாயத்தின் பெரும் பகுதியினர் “தக்லீத்” என்ற பெயரில் மரியாதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக் கொண்டு, குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணானவற்றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழிதவறிச் செல்வதால், “தக்லீத்”தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம். குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்டிருப்பவை மார்க்கமாகிவிட்டதற்கான முக்கிய காரணங்களை நாம் கவனிப்போம்.

பரீட்சையில் காப்பி அடிப்பதே தக்லீத்!

அவர்கள் சொல்லைக் கேட்டு, அவற்றின் அழகானதைப் பின்பற்றுவார்கள்; அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியது இத்தகையோரைத்தான். இவர்களே அறிவுடையவர்கள். (அல்குர்ஆன்:39:18)

என்ற இந்த இறை கட்டளைப்படி ஒருவரின் சொல்லைக் கேட்டு அல்லது எழுத்தைப் பார்த்து, அதில் அழகானதை அதாவது குர்ஆன், ஹதீஃதுக்கு ஒத்ததை எடுத்துப் பின்பற்றுவது “தக்லீத்” ஆகாது.

நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் “திக்ரை” உடையவர்களிடம் கேளுங்கள். (அல்குர்ஆன் 16:43) என்ற வசனத்தில் கேட்டு விளங்கிச் செயல்படச் சொல்கிறானே அல்லாமல், “கல்லிதூ அஹ்லத் திக்ரி” என்று திக்ரை உடையவர்களை தக்லீத் செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை.

கேட்டு விளங்குவதற்கும், கண்மூடிப் பின்பற்று தலுக்கும் (தக்லீத்) மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.

கணக்குத் தெரியாத மாணவன் ஆசிரியரிடம் கேட்பது என்றால், அந்தக் கணக்கின் ஆரம்பம் முதல் இறுதி விடை வரை எப்படிப் போடுவது என்பதைத் தெரிந்து, தனது மூளையில் ஏற்றிக் கொள்வதைத்தான் குறிக்கும். போடும் முறை அறியாமல் இறுதியில் வரும் விடையை மட்டும் தெரிந்து கொள்வது கணக்கை அறிந்து கொண்டது ஆகாது. கண்ணை மூடிக்கொண்டு கடைசியில் உள்ள விடையை மட்டும் அறிந்து கொள்வது போன்றது தான் தக்லீத் ஆகும். இது தடை செய்யப்பட்டது என்பதை எந்தப் புத்திசாலியும் மறுக்கமாட்டான்.

பரீட்சை எழுதும் மாணவர்களில் திறமை மிக்கவனிடம், மந்தப் புத்திக்காரன், பரீட்சைக்கு முன் கேட்டு, கேள்விகளையும் விடைகளையும் புரிந்து மனதில் இருத்திக்கொண்டு, பரீட்சையில் சுயமாக எழுதுவதே அவனுக்கு உண்மையான நன்மையைத் தரும். அவன் தனது திறமையில் நம்பிக்கை இழந்து, பக்கத்தில் உள்ளவனைப் பார்த்து காப்பி அடிப்பது, உண்மையில் பரீட்சை எழுதியது ஆகாது. பிடிபட்டால் கடுமையாகத் தண்டிக்கப்படுவான். காப்பி அடித்து பாஸாகிவிட்டாலும் ஆற்றல் மிக்கவனாக ஆக முடியாது.

மனிதர்களால் நடத்தப்படும் பரீட்சைகளில் அவர்களை ஏமாற்றி காப்பி அடிக்க வாய்ப்பாவது கிடைக்கும். ஆனால் அல்லாஹ்(ஜல்) நடத்தும் இந்த வாழ்க்கைப் பரீட்சையில் அல்லாஹ்வை ஏமாற்றி காப்பி அடிக்கவும் முடியாது என்பதை முஸ்லிம் பொதுமக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். தக்லீத் என்பது வாழ்க்கைப் பரீட்சையில் காப்பி அடிப்பது தான். ஆகவே முகல்லிதுகள் எப்படி வெற்றி பெற முடியும் என்பதை அவர்களே சிந்திக்கட்டும்.

வெள்ளைத் தாளில் கருப்பு மையில் எழுதுவது மட்டும் தான் பரீட்சை என்று பரீட்சையைப் பற்றி விளங்காமல் சொல்பவர்கள் மட்டுமே இந்தக் கண்மூடிப் பின்பற்றவை (தக்லீதை) சரிகாண முடியும். அதல்லாமல் மாணவனுடைய திறமையை அறிந்து கொள்வதற்காகத்தான் பரீட்சை நடத்தப்படுகிறது என்பதை அறிந்த நடுத்தர அறிவு படைத்தனும் இதை ஒப்புக்கொள்ளமாட்டான். தக்லீதின் நிலை குறித்து இதற்கு மேலும் விளக்க அவசியப்படாது என்று கருதுகிறோம்.

விளங்கிச் செயல்படுவது தக்லீத் அல்ல!

இந்த அடிப்படையில் பிக்ஹு சட்டங்களைத் தந்த இமாம்கள், ஹதீஃத் நூல்களைத் தந்த இமாம் கள் அதற்குப் பின்னால் வந்த பல நூறு இமாம்கள், ஏன்? சாதாரண நபர் முதல் யார் சொல்லி இருந்தாலும், அல்லது எழுதி வைத்திருந்தாலும் அவை குர்ஆன், ஹதீஃத்படி இருக்கின்றதா? என்று பார்த்து விளங்கி ஏற்று நடப்பதை அல்லாஹ்(ஜல்) அனுமதிக்கிறான். அதேபோல யாருடைய கூற்றாக இருந்தாலும் அது குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தால் அதைப் புறக்கணித்தலே அல்லாஹ்(ஜல்)வுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருக்கும். இவைகளுக்கான பல ஆதாரங்களை நமது டிசம்பர் 1986 இதழில் பல ஆயத்துக்கள் ஹதீஃத்களின் அடிப்படையில் காட்டியுள்ளோம்.

அல்லாஹ்(ஜல்) விளங்க அருள் புரிவானாக!

குர்ஆனை அனைவருக்கும் விளக்குவதே கட்டாயக் கடமை:

தக்லீதை நியாயப்படுத்துவோர் கூறக்கூடிய அடுத்த ஆதாரத்தைப் பார்ப்போம்.

அதாவது குர்ஆனையும், ஹதீஃதையும் உங்க ளைப் போன்ற பாமர மக்களால் விளங்க முடியாது. எங்களைப் போன்ற மெளலவிகளின் கூட்டம் தான் விளங்க முடியும். எங்களுக்கு விளங்கி நாங்கள் எதைச் சொல்கிறோமோ அதை நீங்கள் சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் அவர்கள் தக்லீதை நியாயப்படுத்த எடுத்து வைக்கின்ற அடுத்த ஆதாரம். இது சரிதானா? என்பதை குர்ஆன் ஹதீஃத் வழியில் ஆராய்வோம்.

இப்படி அல்லாஹ்(ஜல்)வும் அவனது ரசூல்(ஸல்) அவர்களும் சொல்லி இருந்தால் எவ்வித மறுப்பும் இன்றி ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் குர்ஆனின் எந்தப் பக்கத்திலும் அப்படிப்பட்ட அறிவிப்பைப் பார்க்க முடியவில்லை. ஹதீஃதிலும் பார்க்க முடியவில்லை. குர்ஆனிலும், ஹதீஃதிலும் இல்லாத இந்த விதியை விதித்தது யார்? அதுவும் தெரியாது. அதையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதே முஸ்லிம்களின் தலை எழுத்துப் போலும்!

ஜின் வர்க்கத்தையும், மனித வர்க்கத்தையும் என்னை அடிபணிவதற்காக அன்றிப் படைக்கவில்லை. (அல்குர்ஆன் : 51:56)

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். (அல்குர்ஆன் 67:2)

இந்த இரு வசனங்களின்படி அனைவரும் அல்லாஹ்வை அடிபணியக் கடமைப்பட்டுள்ளனர். அனைவரும் சோதனைக்கு உட்பட்டவர்கள்; யாருக்கும் விதிவிலக்கில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. பரீட்சை என்றால் அனைவரும் விளங்கித்தான் ஆகவேண்டும். யாரும் யாரையும் காப்பி அடிக்கக் கூடாது. இந்த அடிப்படையில் முயற்சி செய்தால் குர்ஆனையும், ஹதீஃதையும் அனைவரும் விளங்கிக் கொள்ளமுடியும் என்பதே உண்மையான பேச்சாகும்.

நம்முடைய விஷயத்தில் யார் முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு நம் வழிகளை எளிதாக்கு வோம். (அல்குர்ஆன் : 29:69)

இதற்கு மாற்றமாகச் சொல்கிறவர்கள் ஏதோ சுயநலத்திற்காகவே சொல்கிறார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ளமுடியும். குர்ஆன் விளங்கிக் கொள்ள எளிதானது, தெளிவானது, சந்தேகத்திற்கு இடமில்லாதது என்பதற்கு குர்ஆனில் பல வசனங்களே சான்றுகளாக இருக்கின் றன. (அல்குர்ஆன் : 12:1, 15:1, 16:64, 27:1, 28:2, 36:69, 43:2, 54:17,22,32,40)

குர்ஆனை நம்புவதா? மனிதக் கூற்றுக்களை நம்புவதா? பொது மக்களாகிய நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

உண்மை என்னவென்றால் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறையை விட்டு, மனித அபிப்பிராயங்களின்படி கல்வித் திட்டத்தை அமைத்துக் கொண்டதால் இந்த சமுதாயத்திற்கு இத்தனை பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறை, முஸ்லிமான ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அவர்கள் பத்து வயதினர்களான இளஞ்சிரார்களாக இருந் தாலும் எண்பது வயது கிழடுகளாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மூன்று அல்லது நான்கு ஆயத்துக்களாக நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தில் நின்றும் மூன்று அல்லது நான்கு ஹதீஃத்களாகப் படிப்படியாக அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு குர்ஆனையும், ஹதீஃதையும் எளிதான முறையில் கற்றுக் கொள்வதாகும். இந்த அழகான முறையை விட்டு, சமுதாயத்தில் வலுவில்லாத ஒரு சாராரின் குழந்தைகளை (சமுதாயத்தில் 5% கூட இருக்காது) ஆரம்பத்திலிருந்தே சுய நம்பிக்கை அற்றவர்களாகவும், மார்க்கம் தெரியாதவர்களை சார்ந்திருப்பவர்களாகவும் ஆகும் சூழ்நிலையில் மார்க்கக் கல்வி என்ற பெயரால் குர்ஆன், ஹதீஃதோடு மனித அபிப்பிராயங்களையும் கலந்து எழுதப்பட்ட பிக்ஹு நூல்களைக் கற்றுக் கொடுக்கும் முறையை நாடு முழுவதும் உண்டாக்கி வைத்திருக்கிறோம். இந்த முறை மாறி சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குர்ஆனையும், ஹதீஃதையும் கற்றுக் கொள்ளும் நபி(ஸல்) அவர்களது காலத்து கல்வித் திட்டம் அமுல்படுத்தப்படாதவரை, இந்த சமுதாயத்திற்கு விடிவே இல்லை.

குர்ஆன் இறங்கியது பாமர மக்களுக்காகவே!

உண்மையில் குர்ஆன் எழுதப் படிக்கத் தெரியாத, அறியாமையிலும் பகிரங்க வழிகேட்டிலும் மூழ்கி இருந்த மக்களுக்காகத்தான் இறங்கியது.

எழுத்தறிவில்லாத ஜனங்களுக்காக அவர்களிலேயே ஒரு தூதரை அவன் அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும் அவர், அவனுடைய வசனங்களை அவர்களுக்குப் படித்துக் காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு நெறி நூலையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். (அல்குர்ஆன்: 62:2)

இந்த வசனத்தின்படி நபி(ஸல்) அவர்களது காலத்தில், எழுதப் படிக்கத் தெரியாத 95% சஹா பாக்கள் குர்ஆனை நபி(ஸல்) அவர்களின் விளக்கத் தின் துணையோடு தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். ஆனால், அதே சமயத்தில் நாங்கள்தான் கற்றவர்கள், அரபி இலக்கண இலக்கிய விற்பன்னர்கள், கவிஞர்கள் என்று மார்தட்டிய தாருந் நத்வாவைச் சார்ந்த அன்றைய காலத்து உலமாக்களுக்கு, மத விற்பன்னர்கள் என்று மக்களால் போற்றப்பட்டவர்களுக்கு குர்ஆனை விளங்கிக் கொள்ள முடிய வில்லை. தலைசிறந்த அறிஞர்கள் என்று போற்றப் பட்டவர்களை வடிகட்டிய ஜாஹில்கள் என்றும், வடிகட்டிய ஜாஹில்கள் என்று தூற்றப்பட்டவர்களை தலைசிறந்த அறிஞர்கள் என்றும் உலகம் சொல்லும் ஒரு மாபெரும் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்திக் காட்டியது. உண்மையில் இது ஒரு பெரும் அதிசயம்தான்.

அகந்தை ஆகாது!

ஆம்! நாங்கள்தான் கற்றவர்கள் அரபி இலக்கண இலக்கியம் அறிந்தவர்கள் என்று அகந்தையுடன் மார்தட்டும் அறிஞர்கள் குர்ஆனை விளங்க முடி யாது (7:146) அரபியைச் சரிவர உச்சரிக்கத் தெரியாதவர்களாக இருந்தாலும் பயபக்தியுடையவர்களாகவும், (புலன்களுக்கு எட்டாத) மறைவானவற்றை நம்பியவர்களாகவும், ஐங்காலத் தொழுகையை அதனதன் நேரத்தில் தவறாமல் நிறைவேற்றக் கூடிய வர்களாகவும், அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவர்களா கவும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதையும், அதற்கு முன்னால் அருளப்பட்டதையும் நம்பிய வர்களாகவும் இருந்து கொண்டு குர்ஆனை படித்து விளங்க முற்பட்டால் நிச்சயமாக குர்ஆனைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியும். இது அல்லாஹ் (ஜல்) கொடுக்கும் உத்திரவாதம். (அல்குர்ஆன்: 2:2-5) திருவசனங்களின் கருத்து) இதை மறுப்பவர்கள் முஸ்லிம்களாக இருக்கமுடியாது.

இன்றைய தேவை என்ன?

இந்தச் சமுதாயத்திற்கு இன்று மிக மிகத் தேவை தக்வா(பயபக்தி)வுடைய வாழ்வும், குர்ஆனிலும், ஹதீஃதிலும் பாடுபடும் முயற்சியும் மட்டுமே, அதற்கு மேல் அரபி இலக்கண இலக்கியம் இருந்தால் அதை நாம் வரவேற்கிறோம்; மறுக்கவில்லை. இன்னும் பாடுபடுபவர்களில் சிலருக்கு ஞானத்தை அல்லாஹ் அதிகமாகவும் கொடுத்துவிடலாம் இது அல்லாஹ் அவருக்குக் கொடுத்தச் சிறப்பு ஆகும்.

(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே ஞானத்தைக் கொடுக்கின்றான். ஆதலால் எவர் ஞானம் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் நிச்சய மாக அநேக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார். ஆயினும் அறிவாளிகளைத் தவிர(மற்றெவரும்) உணர்வு பெறமாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:269)

இந்த வசனப்படி இந்தச் சிறப்பைப் பெற்றவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக்கொண்டு, அந்த ஞானத்தைக் கொண்டு மற்ற மக்களுக்கும் குர்ஆன், ஹதீஃதை (மனித அபிப்பிராயங்களை அல்ல) விளங்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே அல்லாது சமுதாயத்தை இரு பிரிவினர்களாக்கி, நாங்கள்தான் மார்க்கத்தைப் போதிக்கும் உரிமை பெற்றவர்கள் நாங்கள் சொல்வதைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதாரங்கள் கேட்காமல் ஏற்று நடக்க வேண்டும் என்று சமுதாயத்தில் உயர்வு தாழ்வை உண்டாக்க ஒருபோதும் முனையக் கூடாது. அல்லாஹ்வுக்கும், அடியார்களுக்குமிடையில் தரகர்களை உண்டாக்க முனையக்கூடாது. இதனால்தான் தக்லீத் என்னும் கண்மூடிப் பின்பற்றலும் மதப் பிரிவுகளும் சமுதாயப் பிளவுகளும், வீழ்ச்சிகளும் ஏற்படுகின்றன.

உங்களுக்காக உங்கள் இறைவனால் அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்; அவனையன்றி மற்றெவரையும் உங்களுக்குப் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றாதீர்கள். நீங்கள் நல்லுணர்வு பெறுவது வெகு சொற்பமே. (அல்குர்ஆன்: 7:3)

இந்த வசனத்தில் இப்போது நாம் எங்களுக்குக் குர்ஆனைத் தெரியாது, ஹதீஃதைத் தெரியாது. அவற்றை அறிந்துகொள்ள அரபியும் தெரியாது. அதற்கு அவகாசமும் இல்லை. அந்த நாதாக்கள் எல்லாம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மார்க்கத்திற் காக அர்ப்பணித்தவர்கள். பகல் இரவென்று பாராது பாடுபட்டவர்கள். குர்ஆனையும், ஹதீஃதையும் கரைத் துக் குடித்தவர்கள், அரபி இலக்கண இலக்கியங்களில் தேர்ந்தவர்கள், பதினாறு கலைகளையும் கற்றுத் தேர்ந்த விற்பன்னர்கள், குர்ஆனைப் பற்றியும், ஹதீஃதைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாத தையா நாங்கள் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ஆகவே அவர்களை எங்களது பாதுகாவலர் களாக்கி, எங்கள் இமாமாக ஆக்கி அவர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்கிறோமே இதைத்தான் மிக வன்மையாக அல்லாஹ்(ஜல்) கண்டித்துக் கூறுகிறான். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறோம் என்றால் நாமாகப் பின்பற்றவில்லை. அல்லாஹ் (ஜல்) தன் நெறிநூலில் அவர்களைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்று பல வசனங்களில் கட்டளை இட்டதை வைத்தே பின்பற்றுகிறோம். வேறு யாரையும் பின்பற்ற அல்லாஹ்(ஜல்) வசனம் எதையும் இறக்கி வைக்கவில்லை. அதனால் நபி(ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாரையும் அது ஒருவராக இருந்தாலும் சரி பலராக இருந்தாலும் சரி, நல்லவர்களாக இருந்தாலும சரி, கெட்டவர்களாக இருந் தாலும் சரி பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றவே கூடாது.

இதைத்தான் அந்த மரியாதைக்குரிய 4 இமாம்கள் எங்களை தக்லீது செய்யாதீர்கள். ஆதாரங்களை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடக்காதீர்கள் என்று தெளிவாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அப்படி இருந்தும் அல்லாஹ்(ஜல்) சொல்வது போல் நம்மில் வெகு சிலரே இந்த உண்மையை உணரக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் (யூத கிறித்தவர்கள்) தங்கள் மதகுருக்களையும் பாதிரிகளையும் அல்லாஹ்வை விட்டு ரப்புகளாக ஆக்கிவிட்டனர். (அல்குர்ஆன்:9:31) என்ற திருவசனம் இறங்கியபோது, கிறித்துவராக இருந்து பின்னர் இஸ்லாத்தில் இணைந்த அதீ இப்னு ஹாதம்(ரழி) என்ற நபி தோழர் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங் கிக் கொண்டிருக்கவில்லையே! (கடவுள்களாக ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகிறானே) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியவற்றை ஹராம் என்றும் (கண்மூடித்தனமாக) நீங்களும் கருதினீர்கள் அல்லவா?

அதுதான் அவர்களை கடவுள்களாகக் கருதியதற்கு நிகரானது என்று விளக்கம் தந்தார்கள். ஆதாரம் : அஹ்மத், திர்மிதீ

இந்த நிகழ்ச்சியிலிருந்து எவரையும் கண்மூடித் தனமாகப் பின்பற்ற எவருக்கும் அனுமதி இல்லை. மார்க்க அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதற்குரிய ஆதாரங்களை அறியமுற்படாமல் பின்பற்றுவது மிகப்பெரும் குற்றம் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்குத் தெளிவாக்குகின்றது. (2 : 256,257)

அல்லாஹ்(ஜல்) நம் அனைவருக்கும் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து அவனது நேர்வழியில் நடக்க அருள் புரிவானாக. ஆமீன்!

குறிப்பு : அன்று 1987ல் இக்கட்டுரை வெகு சூப்பராக அமைந்துள்ளது என்று வரம்பு மீறி எம் முன்னால் புகழ்ந்தவர்தான் இன்று அதற்கு மாறாக அவதூறுகள் பரப்புகிறார் பொய்யன் பீ.ஜை.

மரணத்திற்கு பின்…

மறுமை வெற்றி மாத இதழ்

நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். (4:78)

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். (3:185)

இதில் (இப்பூமியில்) உள்ள அனைவரும் அழிபவர்கள்; உமது இறைவனாகிய அல்லாஹ்வின் முகமே மிஞ்சும். பூமியாகிய இதன் மீது உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே, மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உன் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். (55:26,27)

நம்மில் யாரேனும் மரணித்தால் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்னவென்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை. இறந்தவரின் உடலை அடக்கச் செல்லும் மையவாடியில் கூட ஜனாஸாவுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்பது தெரியாமல் ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமையான ஜனாஸா தொழுகையில் பங்கேற்காமல், உஹது மலையளவு நன்மையை புறக்கணித்து ஊர்க்கதை பேசிக் கொண்டு இருப்பதைக் காண்கிறோம். இந்த நிலையை மாற்றுவதற்கு எங்களால் முடிந்த சிறு முயற்சி தான் இந்த ஆக்கம். குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுரைகளின்படி நடந்து இம்மையிலும், மறுமையிலும் நன்மை பெறுவோமாக! ஆமீன்.

1. மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள், மரணிக்கும்போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரழி) இப்னுஹிப்பான் : 7/272

2. கண்களை கசக்கி மூடுதல் :

அபூஸலமா இறந்தபோது அங்கு வந்த நபி(ஸல்) அவரது பார்வை மேல் நோக்கி இருந்தது. அதை கசக்கி மூடிவிட்டு பிறகு உயிர் கைப்பற்றப்பட்டால் பார்வை அதை தொடர்கிறது என்று கூறினார்கள். பிறகு பின்வரும் துஆவை கூறினார்கள். யா அல்லாஹ்! அபூஸலமாவிற்கு பாவமன்னிப்புச் செய்வாயாக! நேர்வழி பெற்றவர்களில் அவரது தரத்தை உயர்த்துவாயாக, இறைவனே எங்களுக்கும், அவருக்கும் பாவமன்னிப்பு செய்வாயாக. அவரது கப்ரில் அவருக்கு விஸ்தீரணத்தை நல்கி அதில் ஒளியை ஆக்குவாயாக என்று கூறினார்கள். உம்முஸல்மா(ரழி), முஸ்லிம்

3. இறந்த வீட்டில் :

இறப்பெய்தவரை பார்க்கச் சென்றால், நீங்கள் நன்மையானவற்றைக் கூறுங்கள், நிச்சயமாக வானவர்கள் நீங்கள் கூறுவதற்கு ஆமீன் கூறுகிறார்கள்.

4. கணவனை இழந்த மனைவி செய்ய வேண்டிய பிரார்த்தனை :

அபூஸலமா இறந்த செய்தி அறிந்த நபி(ஸல்) அவருடைய மனைவி உம்முஸலமாவிடம் பிரார்த்தனை செய்ய சொன்ன முறை, யா அல்லாஹ் எனக்கும் அபூ ஸலமாவிற்கும் பாவமன்னிப்புச் செய்வாயாக! அவரிலிருந்து எனக்கு அழகான ஒரு முடிவை தந்தருள்வாயாக! எனக் கூறினார்கள். அல்லாஹ் அவரை விடச் சிறந்தவரான நபி(ஸல்) அவர்களைக் கணவராகத் தந்தான். உம்முஸலமா(ரழி) முஸ்லிம்.

5. ஒப்பாரி வைத்து அழக்கூடாது :

துன்பங்கள் வரும்போது கண்ணத்தில் அடித்துக் கொள்பவன், சட்டையைக் கிழித்துக் கொள்பவன், மடத்தனமான வார்த்தைகளால் கூக்குரல் இடுபவன் நம்மைச் சார்ந்தவன் இல்லை என நபி(ஸல்) கூறினார்கள். புகாரி:1294, 1297, 1298, 3519

6. குளிப்பாட்டுதல் : ஒற்றைப் படையாக குளிப்பாட்ட வேண்டும் (1,3,5,7) நபி(ஸல்) மகள் (ஜைனப் ரழி) இறந்த போது அங்கு வந்த நபி(ஸல்) ஒற்றைப்படையாக குளிப்பாட்டுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். உம்மு அதிய்யா(ரழி) புகாரி 167, 1255,1256

7. மைய்யித்தை குளிப்பாட்டுபவரின் கவனத்திற்கு : 

ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூராபிவு(ரழி), பைஹகீ: 395, ஹாகிம் : 505, தப்ரானி : 315

8. ஆரம்பம் :

நபி(ஸல்) அவர்களின் மகளுடைய உடலைக் குளிப்பாட்டிய பெண்களிடம் “இவரது வலப் புறத்திலும், உளூச் செய்யும் உறுப்புகளில் இருந்தும் ஆரம்பியுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். உம்மு அதிய்யா(ரழி) புகாரி: 1254, 1263) குறிப்பு : மையத்திற்கு ஒளு இல்லை.

9. வாசனை பொருட்கள் :

நபி(ஸல்) கூறினார்கள். மைய்யத்தை இலந்தை இலை நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கு அதிகமான தடைவை குளிப்பாட்டுங்கள்; கடைசி யில் கற்பூரத்தை சேர்த்து கொள்ளுங்கள். புகாரி : 1253,1254,1259,1261,1263

10. எலும்புகள் :

நிச்சயமாக மைய்யித்தின் எலும்புகளை முறிப் பது, உயிருடன் இருக்கும்போது அதன் எலும்புகளை முறிப்பது போலாகும். ஆயிஷா(ரழி) அஹமது, அபூதாவூது
குறிப்பு : மைய்யித்தை குளிப்பாட்டும்போதும், கபனிடும்போதும் மைய்யித்துதானே என்று அதன் எலும்புகளை வளைக்கவோ முறிக்கவோ கூடாது.

11. பெண் மைய்யித்தின் முடி பற்றியது :

நபி(ஸல்) மகள்களில் ஒருவர் மரணமாகி விட்டதும், நாங்கள் குளிப்பாட்டி முடித்தோம்; மைய்யித்தின் முடியை மூன்று சடைகளாய் பின்னி அதை மைய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டுவைத்தோம். உம்மு அதிய்யா(ரழி) புகாரி: 1262 ணூணூ. கபனிடுதல் :

12. ஆடை:

ஆடைகளில் சிறந்தது வெள்ளை நிற ஆடை, உங்களில் இறந்தவருக்கு வெள்ளை நிற ஆடைகளில் கபனிடுங்கள். அஹ்மத் : 2109,2349,2878,3171, 3251

13. மூன்று ஆடைகள் :

நபி(ஸல்) இறந்ததும் யமன் தேசத்தின் பருத்தியிலான வெண்ணிற மூன்று ஆடைகளால் கபனிடப்பட்டது. அம்மூன்றில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை. ஆயிஷா(ரழி) புகாரி மைய்யித்தை குளிப்பாட்டிய பிறகு மூன்று முறை மணமூட்டுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர்(ரழி) அஹமது, பைஹகீ

14. இஹ்ராம் அணிந்தவர் இறந்தால் எப்படி கபனிடுவது.

ஹஜ்ஜில், இஹ்ராம் அணிந்த ஒருவர் இறந்த போது, அவருடைய உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரு ஆடைகளால் கபனிடுங்கள்; நறுமணம் பூசவேண்டாம். அவரது தலையை மூடவும் வேண்டாம். ஏனெனில் அவரை அல்லாஹ் மறுமை யில் தவ்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்புவான் என நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புகாரி: 1265,1266,1267,1268,1850,1851)

15. ஜனாஸா தொழுகையில் இமாம் எங்கே நிற்க வேண்டும்?

1. ஆண் மைய்யத்திற்கு தலைக்கு நேராகவும்,

2. பெண் மைய்யத்திற்கு நடுப்பகுதியில் நிற்கவும்,

3. தொழுகையில் பாங்கும், காமத்தும் இல்லை. திர்மிதி : 955, அஹ்மத் : 1483

16. மைய்யத்து தொழுகையை தொழ வைக்கும் உரிமை யாருக்கு?

வாரிசுகளுக்குத் தான் உண்டு. பிறர் தொழ வைக்க வேண்டும் என்றால் அனுமதி கோர வேண்டும். அப்துல்லாஹ் பின் உபை என்பவருக்கு தொழ வைக்க நபி(ஸல்) அவர்கள் அவரது மகனிடம் அந்த ஜனாஸாவிற்கு தொழ அனுமதி கேட்டார்கள். அனுமதி கொடுத்த பின்பே தொழ வைத்தார்கள். இப்னு உமர்(ரழி) புகாரி

17. தொழுகையில் எத்தனை தக்பீர் :

நபி(ஸல்) நஜ்ஜா´ மன்னருக்காக தொழ வைத்தபோது, நான்கு தக்பீர் மட்டும் கூறி தொழ வைத்தார்கள். ஜாபிர்(ரழி) புகாரி, முஸ்லிம் முதல் தக்பீரில் ஸுரத்துல் பாத்திஹாவும், இரண்டாம் தக்பீரில் ஸலவாத்தும், மூன்றாவது தக்பீரில் (துஆவும்) அல்லாஹும் மஃபிர்லஹு, வ ஆஃபியஹு, வஃபு அன்ஹு வ அக்ரிம் நுஜ்லஹு வ வஸ்ஸிஹ் முத்கலஹு வஃஸில்ஹு பில்மாஇ வத்தல்ஜி, வல்பர்தி, வநக்கிஹி மினல் கதாயா கமா நக்கைத தவ்பல் அப்யள மினத்தனஸ் வஅப்தில்ஹு தாரன் கைரன் மின் தாரிஹி வஅஹ் லன் கைரன் மின் அஹ்லிஹி வஜவ்ஜன் கைரன் மின் ஜவ்லிஸி வஅத்ஹில்ஹுல் ஜன்னத் வஅஇத்ஹு மின் அதாபில் கப்ரி வமின் அதாபின் நாரி.

நான்காவது தக்பீரில் (துஆவும்) அல்லாஹும்ம ஃபிர் லிஹைய்யினா வமய்யதினா வஸநீரினா வகபீரினாவதகரினா வஉன்ஸானா வஷாஹிதினா வகாபிநீனா, அல்லாஹும்ம மன் அஹ்யய்தஹு மின்னர் பஅஹ்யிஹி அலல் இஸ்லாம் வமன் தவப்பய்தஹு மின்னா வதவப்பஹு அலல் ஈமான். அல்லாஹும்ம லாதஹ்ரிம்னா அஜ்ரஹு வலா தப்தின் னாபஃதஹு

18. மைய்யத்தை எடுத்துச் செல்லும் முறை :

ஜனஸாவை விரைந்து கொண்டு செல்லுங்கள்!

ஜனஸாவை விரைந்து கொண்டு செல்லுங்கள்! அது நல்லதாக இருந்தால் நல்லதை நோக்கி விரைந்து கொண்டு சென்றவர்களாவீர்கள். கெட்டவரின் உடலாக அது இருந்தால் உங்கள் தோள்களிலிருந்து கெட்டதை (சீக்கிரம்) இறக்கி வைத்தவர்களாவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி), புகாரி: 1315

நடந்து வருபவர்கள் ஜனாஸாவிற்கு முன்னால், பின்னால் வலது, இடது புறமும் வரலாம். வாகனத்தில் வருபவர்கள், ஜனாஸாவிற்கு பின்னால் வர வேண்டும். முகிரா பின் Uபா(ரழி) அஹமது, நஸயீ, திர்மிதி.

19. மைய்யத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் கூலி:

யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின் றாரோ அவருக்கு ஒரு கீராத் நன்மை உண்டு. யார் அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள் கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மை உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கீராத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது. அதற்கவர்கள் இரண்டு பெரிய மலை களைப் போன்ற அளவு(நன்மை) என்றார்கள். (புகாரி: 1325)

20. அடக்கம் செய்யும் முறை :

 1. ஆழமாகவும், அகலமாகவும் கபுரை தோண்ட வேண்டும். அஹ்மது, அபூதாவூது.

2. கபுரில் வைக்கும் போது ஓதும் துஆ பிஸ்மில்லாஹி, வபில்லாஹி, வ அலா மில்லதிராஸுலில்லாஹி

பொருள் : அல்லாஹ்வின் பெயரைக் கொண்டும், அல்லாஹ்வின் வழிப்படியும் ரசூல்(ஸல்) அவர்களின் மார்க்கச் சட்டப்படியும் இந்த மைய்யத்தை அடக்கம் செய்கிறேன்.

21. அடக்கம் செய்யக்கூடாத நேரங்கள் :

சூரியன் உதிக்கும் போதும், உச்சிக்கும் வரும் போதும், மறையும் போதும் ஆகிய மூன்று நேரங்க ளில் நாங்கள் தொழுவதையும், இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர் கள் தடுத்தார்கள். முஸ்லிம் : 1373 22. மைய்யத்தை அடக்கியதும் தனித் தனியாக உங்கள் சகோதரருக்கு பின்வருமாறு துஆ செய்ய வேண்டும்.

1. பாவமன்னிப்பு கேட்பது,

2. மலக்குகள் கேள்வி கேட்கும்போது மன உறுதியை கேட்கவும். ஏனெனில் அவர் இப்போது கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். முஸ்லிம்

23. மைய்யத்திற்கு துஆ செய்வது :

எந்த முஸ்லிமாவது மரணித்து அவரது ஜனாஸா தொழுகையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத நாற்பது பேர் பங்கெடுத்துக் கொண்டால் அவர் விஷயத்தில் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை என்று கூறினார்கள். குரைப் முஸ்லிம் : 1577 24.

இறந்தவருக்கு துக்கம் எத்தனை நாள் :

இறந்தவருக்கு மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று நபி(ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். கணவரைத் தவிர கணவர் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்தலாம். உம்மு அதிய்யா(ரழி) புகாரி 313, 5314, 5343 25.

இறந்தவரை ஏசக் கூடாது :

நபி(ஸல்) கூறினார்கள் இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள். ஆயிஷா(ரழி), புகாரி : 1393

முக்கியமாக முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை!

முஸ்லிம்களில் 99.99% மக்கள் மார்க்க அறிஞர்கள், மதகுருமார்கள் என்று அவர்கள் முழுமையாக நம்பும் இப்புரோகிதர்களிடம் அளவுக்கதிகமான ஈடுபாட்டுடனும், குருட்டு நம்பிக்கையுடனும் அவர்கள் சொல்லுவதை அப்படியே இறைவாக்காக நம்பிச் செயல்படுகின்றனர். இப்புரோகிதர்களே மார்க்கத்தில் முழு அதிகாரம் பெற்றவர்கள் என்று வாதிடுகின்றனர்.

உலகியல் கல்விகளில் எப்படி அவற்றைப் போதிக்க, விளக்க ஆசிரியர்கள், ஆசான்கள் இருக்கிறார்களோ அதேபோல் மார்க்கத்தைப் போதிக்கவும் இந்த ஆலிம்கள் அவசியம் என வாதிடுகின்றனர். முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையும், வாதமும் எந்த அளவு தவறானவை என்பதை அல்குர்ஆனின் பல இறைவாக்குகளையும், மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளக்கூடாது, அதனால் ஏற்படும் கெடுதிகள், மறுமையில் அவர்கள் அடையவிருக்கும் நரக வேதனைகள் இவை பற்றி அல்குர்ஆனில் காணப்படும் சுமார் 65 இறைவாக்குகளையும்(முன்னர் அந்நஜாத்தில் வெளிவந்தவை) நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் இந்த மதகுருமார் களின் இழிநிலையைத் தெளிவாக அறியமுடியும்.

மார்க்கத்தை விளங்க அரபி மொழியை அல்லாஹ் கடமையாக்காத நிலையில் அதைக் கடமையாக்கும் இப்புரோகிதர்கள் முன்னர் நாம் எடுத்தெழுதிய 60 இறைவாக்குகளை நிராகரிக்கிறார்கள், அவற்றிற்கு மாறாகக் கூறி பொய்யர்கள் ஆகிறார்கள், பாவிகள் ஆகிறார்கள், அநியாயக்காரர்கள் ஆகிறார்கள், பாவம் செய்வோர் ஆகிறார்கள், அக்கிரமக்காரர்கள் ஆகிறார்கள், வரம்பு மீறிய பொய்யர்கள் ஆகிறார்கள், அல்லாஹ்வின் சாபத்திற்குரியவராகிறார்கள் என்பதையும், அப்படிப்பட்ட இப்புரோகிதர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டமாட்டான் என்பதை 23 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

இப்புரோகிதர்கள் ஷைத்தானைவிட கேடுகெட்ட நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எப்படி என்று பாருங்கள். அல்லாஹ் ஆதத்திற்கு சுஜூது செய்யக் கட்டளையிட்டான். ஷைத்தான் அக்கட்டளையை நிராகரித்தான். ஆதம் மண்ணினால் படைக்கப்பட்டவர், நான் நெருப்பினால் படைக்கப்பட்டவன் என பெருமை பேசினான். நரகத்திற்கு ஆளானான். அடுத்துப் பாருங்கள். இந்த மதகுருமார்கள் அரபி மொழி கற்றதால் மற்றவர்களை விட மார்க்கம் அறிந்தவர்கள் என பெருமை பேசுகிறார்கள். ஷைத்தானின் பெருமை யிலாவது சிறிதளவாவது நியாயம் இருக்கிறது.

நெருப்பை விட மண் தாழ்ந்தது தான். ஆயினும் அல்லாஹ்வின் கட்டளையைப் புறந்தள்ளியதால் சபிக்கப்பட்டான், நரகம் புகுந்தான். இந்த மதப்புரோகிதர்களிடம் இந்த அளவு தானும் நியாயம் இல்லை. இவர்களும் மனிதர்கள் தான். அற்ப இந்திரியத்துளியிலிருந்து வந்தவர்கள் தான். இவர்களால் அவாம்கள்-பாமரர்கள் என்று இழிவாகக் கருதப்படுகிறவர்களைவிட எவ்விதத்திலும் உயர்வானவர்கள் இல்லை.

இன்னும் தெளிவாகச் சொன்னால் பாமரர்களை விட தரம் தாழ்ந்தவர்கள், எப்படி? இவர்கள் மவ்லவி-ஆலிம் படிப்புப் படிக்க அரபி மதரஸாவுக்குள் நுழைந்ததிலிருந்து பட்டம் பெற்று வெளியே வரும் வரை இவர்களால் அவாம்கள்-பாமரர்கள் என்று கூறப்படும் பொதுமக்களின் உழைப்பில் ஓசிச் சோறு-தண்டச் சோறு சாப்பிட்டே காலத்தை ஓட்டுகிறார்கள். அவாம்களின் கைகள் இவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் மேலேயும், இவர்கள் வாங்குவதன் மூலம் இவர்களின் கை கீழேயும் இருப்பதை இவர்களால் மறுக்க முடியுமா? முடியாது. வாங்கும் கீழே இருக்கும் கையை விடக் கொடுக்கும் மேலே இருக்கும் கையே மேலானது-சிறந்தது என்பது இறுதி இறைத்தூதரின் அமுத வாக்கு. சரி! மவ்லவியாகி வெளியே வந்த பின்னராவது சுயமாக தங்கள் கைகளால் உழைத்துச் சாப்பிடுகிறார்களா? அதுவும் இல்லை. வாழ்நாள் முழு வதும் பாமரர்களிடம் கையேந்தும் நிலையிலேயே இருக்கிறார்கள்.

சுமார் 65 இறைவாக்குகளுக்கு முரணாக அவற்றை நிராகரித்து அதாவது குஃப்ரிலாகி மார்க்கத்தை மத மாக்கி அதையே தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ளனர். 2:174 கூறுவது போல் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. இப்போது சொல்லுங்கள் இந்த போலி ஆலிம் வர்க்கம் இவர்களால் அவாம்கள்-பாமரர்கள் என்று இழிவாகக் கருதப்படுகிறவர்களை விட கீழ் நிலையில் இருக்கிறார்களா? அல்லது மேல் நிலையில் இருக்கிறார்களா? கற்றவர்களும் கல்லாதவர்களும் சமமாவார்களா? (39:9)

குருடனும் பார்வையுடையவனும் சமமா? (35:19) நம்பிக்கை கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் (58:11) போன்ற இறைவாக்குகளைக் காட்டித் தங்களுக்கு மக்களிடையே உயர் அந்தஸ்து இருப்பதாக வாதிடுவார்கள். இதுவும் தவறான வாதமாகும். காரணம் இந்த ஆலிம்கள் பெற்றிருப்பது அல்லாஹ் சொல்லும் கல்வி ஞானம் இல்லை, அதாவது குர்ஆன், ஹதீஃத் ஞானமில்லை. தங்கள் பிழைப்பை நடத்தக் கற்றுள்ள புரோகிதக் கல்வியாகும். தெளிவாகச் சொல்வதாக இருந்தால் அன்று நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்த தாருந்நத்வா ஆலிம்களும், அதன் தலைவனும் மக்களால் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என்று போற்றப்பட்டவனும் பெற்றிருந்த புரோகிதக் கல்வியாகும்.

ஆனால் நபி(ஸல்), அவர் களை எப்படி அடையாளம் காட்டினார்கள். தாருந் நத்வாவை மூடர்களின் சபை என்றும், அதன் தலைவனை அபூஜஹீல் என்றுமே அடையாளம் காட்டினார்கள். அன்றுபோல் இன்றும் மக்களால் மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், ஷேக்குகள் என்றும், தலைவர்கள் “ஹஜ்ரத் கிப்லா” “தாஜுல் அவ்லியா” போன்ற பட்டங்களால் பெருமையாக அழைக்கப்படுகிறவர்களும் புரோகிதக் கல்வி கற்ற மூடர்களாகவே இருக்கிறார்கள். மனாருல் ஹுதா ஜூன் 2010 மாத இதழ் பக்கம் 13-ல் வணிகம் இஸ்லாமிய பார்வை என்ற தலைப்பில் ஒரு மவ்லவியே எழுதிய ஆக்கத்தில் 25 நபிமார்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்கள் அனைவரும் தங்கள் கைகளால் வேளாண்மை, ஒட்டகம், ஆடு, மாட்டுப் பண்ணை, வியாபாரம், பலவகைத் தொழில் என உழைத்துச் சாப்பிட்டதாக அவர்களே எடுத்து எழுதியுள்ளனர்.

அதைப் பார்த்தாவது இப்புரோகிதர்களுக்குப் புத்தி வரவேண்டாமா? மார்க்கப் பிரசாரம் செய்த நபிமார்கள் அனைவரும் சுயமாக உழைத்துச் சாப்பிட்டே மார்க்கப் பணிபுரிந்துள்ளார்கள், அவர்கள் செய்த அதே மார்க்கப் பணியை நாமும் நம் கைகளால் உழைத்துச் சாப்பிட்டுக் கொண்டு மட்டுமே செய்யவேண்டும். நாமே மக்களை அவாம்கள்-பாமரர்கள் எனச் சொல்லிக் கொண்டு அவர்களிடமே கையேந்தலாமா? இதைவிட கேவலம், இழிவு, இறைவனுடைய சாபத்திற்குரிய செயல் வேறு உண்டா? என சிந்தித்து உணர்வு பெற வேண்டாமா? நேர்வழி பெற வேண்டாமா?

இப்படி மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதால்தானே ஷைத்தானைப் போல், அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளான அல்குர்ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து அவற்றை நிராகரித்து காஃபிராகும் பெரும் பாவிகளாக நேரிடுகிறது என்பதைச் சிந்தித்துத் திருந்த வேண்டாமா? ஆம்! இந்த மவ்லவிகள், ஆலிம்கள், அல்லா மாக்கள், ஷேக்குகள், மார்க்கம் அறிந்தவர்கள் என பெருமை, ஆணவம் பேசும் இவர்கள் இப்புரோகிதத் தொழிலை விட்டு விடுபடாதவரை அவர்கள் ஒருபோதும் நேர்வழிக்கு வரப்போவதில்லை. அவர்களது புரோகிதத் தொழில் அல்லாஹ் அல்குர்ஆனின் 2:74, 5:13, 6:125 இறைவாக்குகள் கூறுவது போல் அவர்களது உள்ளங்கள் சுருங்கி, இறுகி கற்பாறைகள் போல் ஆகிவிட்டதால் அவர்கள் நேர்வழிக்கு வருவது குதிரைக் கொம்பே. தாருந்நத்வா ஆலிம்களில் பெரும்பான்மையினர் நேர்வழிக்கு வந்தனரா? அவர்களின் தலைவனும் அபுல் ஹிக்கம் ஞானத்தின் தந்தை என அவர்களால் போற்றப் பட்டவனான அபூ ஜஹீல் நேர்வழிக்கு வர முடிந்ததா? இல்லையே.

ஓர் உமர்(ரழி) போல், ஓர் அலீ(ரழி) போல் அப்புரோகிதர் தொழிலை விட்டு வெளியேறியவர்கள் நரக நெருப்பிலிருந்து ஈடேற் றத்தைத் தந்து வெற்றி பெற்று சுவர்க்கம் நுழையும் பாக்கியம் பெற்றார்கள். மவ்லவிகளே, ஆலிம்களே, அல்லாமாக்களே, ஷேக்குகளே உங்கள் நிலை பற்றி நாம் இப்படி மிகக் கடினமாக, உங்களுக்கு ரோசம் வந்து சிந்தித்துத் தெளிவு பெற்று, நீங்கள் அனைவரும், உங்கள் பின் கண்மூடி வரும் மக்கள் கூட்டமும் நரகிலிருந்து தப்ப வேண்டும், வெற்றி பெற வேண்டும், சுவர்க்கம் நுழைய வேண்டும். யாம் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டும் என்ற அளவில்லா ஆசை காரணமாகவே எழுதியுள்ளோம்! ஷைத்தானைப் போல் பெருமை கொள்ளாதீர் கள். நாங்கள்தான் கற்றறிந்த மார்க்க விற்பன்னர்கள் என மார் தட்டாதீர்கள். பெருமை கொள்ளாதீர்கள். நாங்கள்தான் ஆலிம்கள், மற்றவர்கள் அவாம்கள் என மக்களை இழிவாக எண்ணாதீர்கள்.

மக்களை இழிவாக எண்ணுவது ஆணவத்தின்-பெருமையின் வெளிப்பாடே. அணுவத்தனை பெருமை உடையவனும் சுவர்க்கம் நுழைய முடியாது என்பது இறுதித் தூதர்(ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆலிம்கள் என மார் தட்டாதீர்கள், உலமாக்கள் சபை என தனிச் சபை அமைத்துச் சமுதாயத்தைப் பிளவுபடுத்தாதீர்கள். 41:33ல் அல்லாஹ் கட்டளையிடுவது போல் நாங்களும் முஸ்லிம்களில் உள்ளவர்களே, எங்களுக்கென்று ஒரு தனி அமைப்பு வேண்டாம் என்ற உன்னத முடிவுக்கு வாருங்கள். 21:92 23:52ல் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் அமையவும், மீண்டும் இந்த முஸ்லிம் சமுதாயம் அது இழந்துவிட்ட பழம் பெருமையையும், உன்னத நிலையையும் அடைய உங்களின் பங்களிப்பைத் தர முன்வாருங்கள். 3:139, 24:55 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்க முன்வாருங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக.

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!!

 MTM. முஜீபுதீன், இலங்கை

ஜூன் 2016 தொடர்ச்சி……

ஒவ்வொரு முஸ்லிமும் இறுதி நாள் மீது நம்பிக்கை கொள்வது அவசியமாகும். ஒரு மனிதனின் வாழ்க்கை இந்தப் பூமியுடன் முற்றுப் பெறுவதில்லை. அவன் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை யின் பிரதிபலனாக மறுமை வாழ்க்கை அமைகின்றது. மனிதன் இறந்ததின் பின் கப்ருடைய வாழ்க்கையும், அதன்பின் மறுமை வாழ்க்கையும் அமைகிறது. மறுமையில் மனிதன் சுவர்க்கம், நரகம் ஆகியவற்றில் அல்லாஹ் நாட்டத்தின்படி அவன் பூமியில் வாழ்ந்த வாழ்க்கைக்கு அமைய பெற்றுக்கொள்ள முடியும்.

மறுமை என்பது “கியாமத்”துடைய வாழ்க்கை எனலாம். உலகில் மனித வாழ்க்கையை பின்வருமாறு வகுத்துக் கொள்ளலாம். அதில் இம்மை வாழ்க்கை, மண்ணறை வாழ்க்கை, பின் யுக முடிவு நாள் அல்லது கியாமத் நாள், அதன் தொடராக முடிவில்லாத மறுமை வாழ்க்கை அமையும். இதில் அல்லாஹ்வின் விசாரணை, நரகம், சுவர்க்கம் போன்றன அமையும். சாதாரணமாக மறுமையுடைய வாழ்க்கை என்பது மனிதனின் உயிர் பிரிந்தவுடன் மறுமை ஆரம்பித்து விடுகின்றது. மறுமை வாழ்க்கை இம்மையில் நாம் செய்யும் நன்மை தீமைக்கமைய, அல்லாஹ்வின் அருளைப் பொறுத்து அமையும்.

இம்மை வாழ்க்கை ஒரு மனிதன் பூமியில் மரணிக்கும் வரையிலுள்ள வாழ்க்கையாகும். இதனை மறுமை வாழ்க்கையின் விளை நிலம் எனலாம். ஒவ்வொரு காலத்திலும் இறைத்தூதர்கள் மூலம் அல்லாஹ் இறைநெறி நூல்களை வழங்கியுள்ளான். அதன்படி வாழ்பவர்களுக்கே மறுமை வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். ஆனால் மனிதனை வழி கெடுக்கும் பிரதான பொறுப்பை ஷைத்தான் எடுத்துள்ளான். அவனுக்கு மறுமை நாள் வரை மனிதனை வழிகெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான். அவன் அல்லாஹ்வின் நேர்வழியிலிருந்து தவிர்த்து வாழவே வழிகாட்டுவான். அவ்வழியில் செல்பவர்களே அல்லாஹ்வுக்கு இணை துணைகளை ஏற்படுத்துவர். அவர்களே அல்லாஹ்வின் வழியை விட்டு ஷைத்தானின் வழியில் செல்வர். அவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பர். இம்மை மட்டுமே வாழ்க்கை என்று நம்புவர். மனித சுய எண்ணங்களுக்கமைய நன்மை தீமைகளை வகுத்து வாழ்வர். இவர்களை நாம் இறைவனை மறுப்பவர்கள் என்று அழைப்போம்.

அத்துடன் இம்மை வாழ்க்கையின் இன்னொரு பிரிவையும் ஷைத்தான் தோற்றுவித்துள்ளான். அவர்கள் இறைவன் இருப்பதை நம்புவர். ஆனால் அவனுக்கு நிகராக ஷைத்தானையும், ஜின்களையும், மலக்குகளையும், இறைத்தூதர்களையும், குருமார்களையும், சந்நியாசிகளையும், நல்ல மனிதர்களையும், புதைகுழிகளையும், இயற்கையையும், கற்பனைகளையும் சிலைகளாக அமைத்து வணங்குவர். மரணத்தின் பின் மீண்டும் பல வடிவில் பூமியில் வாழ்வதாக நம்புவர். தான் மரணித்ததன் பின் தமது ஆவி பல சேட்டைகளைச் செய்தபடி பேய் பிசாசாக அலைவதாக நம்புவர். தமக்கு ஏற்ற விதத்தில் நன்மை தீமைகளை வகுத்துக் கொண்டு வாழ்வார்கள். இவை யாவும் நரகை அடையவே வழிகாட்டும் என அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் வழிகாட்டினான். அல்லாஹ் இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம் கூறி, மறுமையில் நடக்கவிருப்பதை பற்றிக் கூறுவதை அவதானியுங்கள்.

மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக. அது நாம் வானத்திலிருந்து இறக்கிவைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந் (து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக்கொண்டு போய்விடுகின்றது. மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கிறான். (48:45) செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக்கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத் தக்கவையாகவும் இருக்கின்றன. (நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம். அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம். (அந்த நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்கமாட்டோம்.

அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டுவரப்படுவார்கள். நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்போதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள். ஆனால், நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள். (என்று சொல்லப்படும்)

இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும். அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர். மேலும் அவர்கள், எங்கள் கேடே! இந்த ஏட்டுக்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ, பெரியவையோ எதையும் வரையறுக்காது அது விட்டு வைக்கவில்லையே! என்று கூறுவார்கள். இன்னும், அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள். ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான். (அல்குர்ஆன்: 18:45-49)

மனிதன் இந்தப் பூமியில் நிரந்தரமாக வாழ வந்தவன் அல்ல. ஒவ்வொரு மனிதனும், உயிரினங்களும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும். அதை எந்த மனிதனும் மறுக்க முடியாது. ரூஹைப் பற்றிய அறிவுகூட மனிதனுக்கு இல்லை. பின்வரும் இறைவசனத்தை அவதானியுங்கள்.

(நபியே!) உம்மிடம் ரூஹை (உயிரை) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். ரூஹு என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமே அன்றி வேறில்லை எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் : 17:85)

எந்த மனிதனுக்கும் உயிர் கொடுக்கும் ஆற்றல் இல்லை. இது அல்லாஹ்வின் வல்லமையினால் ஆனதாகும். அவ்வாறிருக்க மனிதன் ஏன் அல்லாஹ்வை விட்டு வேறு படைப்புகளிடம் மண்டியிடவேண்டும்? வணங்கி வழிபட வேண்டும். அறிவுமிக்க மனித சமுதாயமே! நீங்கள் அல்குர்ஆனை வாசித்து சிந்தித்துப் பார்க்கக் கூடாதா? மரணத்தின் பின் மறுமை வாழ்க்கை இருப்பது உறுதியானதாகும். அதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டாம். ஆகவே இம்மை வாழ்க்கை வீணும் விளையாட்டும் அல்ல. அது மறுமையின் விளைநிலம் ஆகும். நீங்கள் மறுமையில் இடம்பெறும் நியாயத் தீர்ப்பு நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் மரணம் அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக்கூடிய ஏக நாயன் வேறு யாரும் இல்லை எனவும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் இறைத் தூதருமாவார்கள் என்ற நம்பிக்கைக்கமைய அமைதல் வேண்டும். இந்த நம்பிக்கையின் பொருள், உங்கள் நடைமுறை வாழ்க்கையில் பூரணமாக எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் அமைந்திட வேண்டும். அப்போதே உங்கள் இம்மை, கப்ரு, மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றதாக அமையும்.

மனிதன் மரணம் அடைந்தபின் அவனின் ஆத்மா ஒரு மறைதிரைக்குப் பின் சென்றடைகிறது. அல்குர்ஆன் இதனை பின்வருமாறு கூறுகின்றது.

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன் என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக் குத்) திருப்பி அனுப்புவாயாக! என்று கூறுவான்.

நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய் வதற்காக (என்றும் கூறுவான்) அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே (யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு (பர்ஜஃக் என்னும்) திரையிருக்கிறது. (அல்குர்ஆன்: 23:99,100)

இன்று பல நாடுகளில் மனிதன் மரணத்தின் பின் மூன்றாம் நாளில் அல்லது ஏழாம் நாளில் அல்லது நாற்பதாவது நாளில் உயிர் பெற்று மேலே செல்வதாக பல நம்பிக்கைகள் உண்டு. இன்னும் சில சமூகத்தினர் அவர்களின் ஆத்மா இரத்தம் குடிக்கும் பேயாக அலைவதாகவும் நம்பிக்கைகள் உண்டு. இதனை உலவவிட்டவர்கள் மனிதர்களிடம் பணம் கறக்க முற்படும் புரோகித குருமார்களினதும், ஏமாற்றும் பில்லி சூனியம் செய்வர்களினதும் செயற்பாடுகளாகும். இவை மடமையான நம்பிக்கை களாகும். எந்த இறைத்தூதர்களும் இவ்வாறு சொல்லியதில்லை. இது ஷைத்தானின் விளையாட்டு ஆகும்.

இஸ்லாத்தின் பார்வையில் ஒரு மனிதன் மரணித்துவிட்டால் உயிருடன் இருக்கும் மக்களுக்கு சில கடமைகள் உண்டு. இது அரசனாக இருப்பினும், ஏழைக் குடிமகனாக இருப்பினும் அவ்வாறே செய்யப்படும். மரணித்த சடலத்தை குளிப்பாட்டுதல், எளிமையாக கபனிடல், வெண்மையான ஆடையால் கபனிடுவது சிறந்தது. பின் மரணம் அடைந்தவருக்காக தொழுகை நடத்துவது, பின் விரைவாக நல்லடக்கம் செல்தலும் ஆகும். இவ் வெளிமையான நடைமுறைகளை விடுத்து மரணித்தவருக்காக பெண்கள் ஆடைகளை கிழித்துக் கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும், சோக இசைகளை இசைத்துக் கொண்டும் இலட்சக்கணக்கான பணத்தை ஆடம்பரமாக வீண் விரயம் செய்வது இஸ்லாமிய நடைமுறையல்ல. காரணம் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மரணத்தை அடைவது அல்லாஹ்வின் நிர்ணயமாகும். அதிலிருந்து தப்ப யாருக்கும் முடியாது.

ஆனால் உயிருடன் இருக்கும் அவர்களின் ஊர் மக்கள் உறவினர் இறந்தவரின் குடும்பத்திற்காக உதவிகள் செய்யலாம். அதாவது மரணித்தவரின் வீட்டினருக்காக அந்நாட்களில் உணவு சமைத்துக் கொடுக்கலாம். ஆறுதல் கூறலாம். மரணத்திற்கான நான்கு கடமைகளிலும் கலந்து கொள்ளலாம். முஸ்லிமான நிலையில் மரணித்தவருக்காக பிரார்த்திக்கலாம். அத்துடன் அவருடைய குடும்பத்தில் அல்லது பிள்ளைகள், அவர் கடன்பட்டிருந்தால் அதனைத் தீர்க்கலாம். அவர் நோன்பு, ஹஜ்ஜு கடமையானவராக இருப்பின் அவருக்காக அதனை நிறைவேற்றலாம். அவர் தானதருமம் செய்ய நாடியிருப்பின் அவர் கடன் தீர்த்த பின் சொத்துப் பங்கீடுகளுக்குப் பின் அவற்றை பிள்ளைகள் நிறைவேற்றலாம். ஒருவர் மரணித்தால் அவர் பிள்ளைகள் மூன்று நாளும் அவர் மனைவி குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அல்லது நான்கு மாதம் பத்து நாள் துக்கம் அனுஷ்டிக்கலாம். அதை விடுத்து அவர் குடும்பத்தினர் ஏழு, முப்பது, நாற்பது, அறுபது, நூறு, வருடா வருடம் என துக்கம் அனுஷ்டிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிமுறை அல்ல.

சில சமூகத்தினர் மரணித்தவரின் சடலத்தை எரித்து விடுவர். இது இஸ்லாத்தின் நடைமுறை அல்ல. இன்னும் சில சமூகங்களில் மரணித்த சடலத்தை அழகாக கழுவி நருமணம் பூசி கொண்டு வந்து அடக்கத்தளத்தில் வைத்து அடக்கத்தள மண்ணில் நீர் அல்லது பன்னீரைக் கலந்து கழுவி சுத்தப்படுத்திய முகத்தில் வைப்பர். இன்னும் சிலர், சில இந்திய சமுதாயங்களின் வழக்கத்துக்கமைய அடக்கதளத்துக்கு மேல் சிறிய பானையில் நீரைக் கொண்டு வந்து கொட்டுவர். இவைகள் எல்லாம் இஸ்லாத்தில் உண்டா? சிந்தியுங்கள்.

மனிதன் மரணித்தது முதல் உலகம் அழியும் வரையுள்ள வாழ்க்கை மண்ணறை வாழ்க்கை யாகும். இதனை திரைமறைவு உலகம் (ஆலமுல் பர்ஸக்) என்றும் குறிப்பிடுவர். இங்கு மனிதன், அவன் உலகில் இறைதூதரின் வழிகாட்டலுக்கமைய நடந்து கொண்ட முறைகளைப் பொருத்து சுக துக்கங்களையும், தண்டனைகளையும் அனுபவிப் பான். அல்குர்ஆனும், ஹதீஃத்களிலும் மண்ணறை வாழ்க்கையிலும் பாவிகளுக்கு வேதனை இருப்பதாக கூறுகின்றது. அவதானியுங்கள் (அல்குர்ஆன் 6:93, 9:101, 40:45-46) மேலும் புகாரி: 1369-ம் ஹதீஃத். நபி(ஸல்) அவர்கள் மண்ணறை வேதனையை விட்டுப் பாதுகாப்புத் தேடியதைத் தாம் செவியுற்றதாக காலித் பின் ஸயீத்(ரழி) உடைய மகன் கூறினார்கள். புகாரி: 1376 ஹதீஃத்.

மேலும் ஒரு மனிதன் மரணித்தபின் மண்ணறையில் வைக்கப்பட்ட பின் இரு வானவர்கள் வந்து பின்வருமாறு கேள்வி கேட்பார்கள். அவதானியுங்கள் கீழ்வரும் ஹதீஃத்களை.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனது தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களது செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரு மலக்குகள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய் என்று முஹம்மது(ஸல்) குறித்துக் கேட்பார். அவன் முஃமினாயிருந்தால் இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன் எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்தில் உள்ள உனது இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்.

அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்.

அவன் நயவஞ்சகனாகவோ, நிராகரிப்பாளனாகவோ இருந்தால் இந்த மனிதர் விசயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்கப்படும்போது எனக்கொன்றும் தெரியாது மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன் எனக் கூறுவான். உடனே நீ அறிந்திருக்கவில்லை. (குர்ஆன்) படித்து விளங்கியதுமில்லை என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்தியல்களால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும், தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான். புகாரி: 1374

ஆகவே மனிதர்களே! மண்ணறைகளில் மனிதர்கள் விசாரிக்கப்படுவது உண்மையாகும். முன்னைய இறைத்தூதர்களும் இதனைக் கூறியிருக்கிறார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து கொள்ளுங்கள். அல்குர்ஆனை ஓதி சத்திய உண்மைகளை அறிந்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி அடைய முஹம்மது(ஸல்) அவர்களை விசுவாசித்து நேர்வழியைத் தெரிந்து கொள்ளுங்கள். ஆகவே மக்கள் ஆதாரம் இல்லாது சொல்லிக் கொண்டிருந்தவைகளை கண்மூடிப் பின்தொடராதீர்கள். அவ்வாறு வழிப்படுவீர்களேயானால் நீங்கள் நரகைச் சென்றடைய வேண்டி வரும். அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து கொள்ளுங்கள்.

மறுமை நாளும், விசாரணையும் :

உலகம் அழிந்ததின் பின் அல்லாஹ்வினால் எல்லா உயிர்களும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் நாள் “மறுமை நாள்” அதாவது “கியாமத் நாள்” அல்லது “அஸ்ஸாஅத்” என அழைக்கப்படும் நாள் இதுவாகும். இந்நாளில் நியாயத் தீர்ப்பு வழங்கப்படும். அந்நாளிலேயே மனிதர்களுக்கு அவர்கள் இம்மையில் செய்த நல்லறங்களும், தீமைகளும் விசாரிக்கப்படும். பின் நன்மை செய்தோர்களுக்கு சுவர்க்கமும், தீமை செய்து மிகைத்தவர்களுக்கு நரகமும் வழங்கப்படும். அத்துடன் அல்லாஹ்வையும், இறைத்தூதர்களையும் நிராகரித்து இறைவனுக்கு இணை வைத்தவர்களுக்கு நிரந்தர நரகம் கிடைக்கும் நாள்.

அன்று அரேபியாவில் நபி(ஸல்) அவர்கள் மனிதன் மரணித்த பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்று கூறியபோது சத்தியத்தை நிராகரித்தவர்கள் மறுத்தனர். அதற்கு அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் பின்வருமாறு எச்சரிக்கை விடுகின்றான்.

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையில் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும்.

பெற்றோர்களின் கவனத்திற்கு….

எஸ். முகம்மது ஸலீம்

பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தமது குழந்தைகளுக்கு குர்ஆனுடைய கல்வியைப் புகட்டி அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் வாழக் கற்றுக் கொடுப்பது கடமையாகும். குறிப்பாக பள்ளிப் பருவத்தில் இருக்கும்போதே எந்த மாதிரியான பாடங்களைப் படிக்கக்கூடாது என்பதை தமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

இந்த அடிப்படையில், முஸ்லிம் ஒருவரால் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலமாக நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றில் கடந்த ஆண்டு இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த எனது மகளின் பாடப் புத்தகத்தில் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற பாடல் எழுதப்பட்டிருந்தது.

அப்போது நானும் எனது மனைவியும் இந்தப் பாடலின் அர்த்தத்தை எங்களது குழந்தைக்கு விளக்கிக் கூறி முஸ்லிம்களாகிய நாம் இதைப் பாடக்கூடாது என்று சொன்னோம். நாங்கள் கூறியதை புரிந்து கொண்ட எனது மகள் தனது ஆசிரியரிடம் அல்லாஹ் ஒருவன் மட்டுமே உண்மையான இறைவன். ஆகையால் இந்தப் பாடலை பாடமாட்டேன், எழுதமாட்டேன் என்று கூறியுள்ளாள்.

இதைப் போன்றே அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக்கூடிய நாட்டுப்பண் போன்ற எந்தப் பாடல்களையும் பாடமாட்டேன் என்றும் கூறியுள்ளாள். தற்போது அதே பள்ளியில் எனது மகள் மூன்றாம் வகுப்பிற்குச் சென்ற சில வாரங்களிலேயே வேண்டுமென்றே பிரச்சனை செய்யும் நோக்கத்தில் பள்ளி தலைமை யாசிரியரும் மற்றொரு நிர்வாகியும் என்னை அழைத்துப் பாடப் புத்தகங்களில் போதிக்கப்படும் அனைத்துப் பாடங்களையும் உங்களது குழந்தை கட்டாயம் படிக்க வேண்டும், இல்லையயன்றால் உங்களது குழந்தையை எங்களது பள்ளியில் படிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள்.

குறிப்பாக முஸ்லிம்களை முன்னேற்றப் போகிறோம். முஸ்லிம்களை முன்னேற்றாமல் ஓயமாட்டோம், பிற மக்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம் என்று கூறக்கூடிய கட்சியை சார்ந்த ஒருவரும் பள்ளி நிர்வாகத்தில் உள்ளார். அவர் மார்க்கத்தின்படி நடப்பதாக இருந்தால் எங்கள் பள்ளியிலிருந்து வெளியேறி வேறு பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்த்து விடுங்கள் என்று மிக சாந்தமாக கூறினார். அப்போது நாம் அவரிடம் நமது குழந்தையை எதை படிக்க வேண்டும் எதை படிக்கக் கூடாது என்பதை குர்ஆன் முடிவு செய்யும்.

அதன் அடிப்படையில் குர்ஆனுக்கு எதிராக உள்ள எந்த பாடத்தையும் என் மகள் படிக்க மாட்டாள் என்று அல்லாஹ்வின் அருளால் உறுதியாகக் கூறிவிட்டோம். இது தொடர்பாக மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தினோம். இறுதியாக பள்ளி நிர்வாகத்தினர் உங்கள் குழந்தை எந்தெந்த பாடங்களை படிக்கமாட்டாள் என்பதை எழுதி தாருங்கள் என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டதற்கு ஏற்ப நாம் அவர்களுக்கு எழுதிக் கொடுத்த கடிதத்தை மற்ற சகோதர சகோதரிகள் அறிந்து கொண்டு தங்களது குழந்தைகளையும் இணை வைப்பிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இதை அனுப்பியுள்ளேன்.

குறிப்பு : பள்ளியின் பெயரை பகிரங்கப்படுத்தாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

ஆகையால் அனுப்புநர், பெறுநர் போன்ற விபரங்களை வெளியிடவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் அவர்களுக்கு, நாம் வாழக்கூடிய இந்திய நாட்டில் பல்வேறு வகையான சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்களில் ஒவ்வொருவரும் பல்வேறு கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். இந்த அடிப்படையில் முஸ்லிம்களாகிய நாங்கள், இரண்டு கடவுள்களைக் கற்பனை செய்யாதீர்கள். அவன் ஒரே ஒரு கடவுளே.

எனவே எனக்கே பயப்படுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (குர்ஆன்: 16:51)

உங்கள் இறைவன் ஒருவனே. (குர்ஆன்:37:4)

என்கின்ற குர்ஆனின் வசனங்களின் அடிப்படையில் ஒரே ஒரு கடவுளை மட்டும் வழிபட்டு வாழ்ந்து வருகிறோம். இந்த ஒரு கடவுளுக்குச் சமமாக வேறு யாரையும், எதனையும் சொல்லாலோ, செயலாலோ வழிபடக்கூடாது என்ற கொள்கையில் வாழ்ந்து வருகிறோம். மேலும், அந்த ஒரு இறைவனுக்கு மட்டுமே சொந்தமான பண்புகளிலோ, அதிகாரத்திலோ படைப்பினங்கள் எதனையும் கூட்டாக்கக் கூடாது என்று குர்ஆனில் இறைவன் வகுத்துத் தந்த உயர்ந்த கொள்கையை வாழ்வியல் நெறியாக பின்பற்றி வாழ்ந்து வருகிறோம்.

முஸ்லிம்களாகிய நாங்கள் சொல்லக்கூடிய இந்த ஒரே கடவுள் கொள்கைக்கு இடரளிக்கும் வகையில் பாட புத்தகங்களில் ஒருசில இடங்களில் ஒருசில வரிகள் இடம் பெற்றிருப்பதை காண முடிகிறது.

உதாரணத்திற்கு இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இயற்றிய நாட்டுப்பண் என்ற பாடலை எடுத்துக் கொள்வோம். இதில் இந்திய தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கின்றாய். இந்தியாவின் இன்ப துன்பங்களை கணிக்கின்ற தாயே! உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி! என்று எழுதப்பட்டுள்ளது. ஓர் உண்மையான முஸ்லிம் ஒருபோதும் மேற்கண்ட வரிகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் இன்ப துன்பங்களை ஏற்படுத்துகின்ற ஆற்றல் அதிகாரம் அனைத்தும் அகில உலகத்தையும் படைத்து பராமரிக்கும் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது.

ஒருவருக்குத் துன்பத்தை, இன்பத்தை ஏற்படுத்தப் படைப்பினங்கள் எவருக்கும் அதிகாரம் இல்லை. அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் (அதை தடுப்பவன் யாருமில்லை) அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். (குர்ஆன் : 6:17)

மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்துவிட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அதற்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். குர்ஆன்:35:2 கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து அவனது துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பிரதிநிதியாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? (நீங்கள்) குறைவாகவே சிந்திக்கிறீர்கள். (குர்ஆன்: 27:62)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளை தடுப்பவன் யாரும் கிடையாது. (குர்ஆன்:10:107) ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். (குர்ஆன் : 6:64)

நம்மைப் படைத்த இறைவன் மட்டும்தான் நமக்கு இன்ப துன்பங்களைத் தரமுடியும் எனும்போது வானங்களையும், பூமியையும் படைத்த உண்மையான இறைவனுக்கு எதிராக உள்ள இந்த பாடலை முஸ்லிம்கள் எப்படிப் பாடமுடியும்? இந்த பாடலை முஸ்லிம்கள் பாடக்கூடாது என்றவுடன் முஸ்லிம்களுக்கு தேச நலனில் அக்கறை கிடையாது என்று நினைத்து கொள்ளக்கூடாது. மாறாக இதே பாடலை ஒரு இஸ்லாமிய நாட்டில் அரபு மொழியிலோ, உருது மொழியிலோ பாடச் சொன்னாலும் உண்மையான முஸ்லிம்கள் பாடமாட்டார்கள் என்பதையும் நினைவூட்டுகிறேன்.

அடுத்து மூன்றாம் வகுப்பு அறிவியல் பாடம் பக்கம் 101ல் பல்வேறு விலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்து மனிதன் குரங்கிலிருந்து வளர்ச்சி பெற்று வந்தவன் என்பதை நிரூபித்தவர் சார்லஸ் டார்வின் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நம்மையும் அனைத்து உயிரினங்களையும் படைத்த ஏக இறைவன் மனித படைப்பைத் துவக்கியதைப் பற்றி கூறியுள்ளதை பாருங்கள். அவனே (அல்லாஹ்வே) உங்களைக் களிமண்ணால் படைத்தான். பின்னர் (மரணத்திற்கான) காலக்கெடுவை நிர்ணயித்தான். (திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதற்கு) குறிப்பிட்ட மற்றொரு காலக்கெடுவும் அவனிடத்தில் உள்ளது. பின்னரும் நீங்கள் சந்தேகப்படுகின்றீர்களே! (குர்ஆன் : 6:2)

சேற்றிலிருந்து கருப்புக் களிமண்ணால் வடிவமைத்து மனிதனைப் படைத்தோம். (குர்ஆன் :15:26)

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். குர்ஆன் : 23:12

மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்து துவக்கினான். (குர்ஆன் : 32:7)

நம்மை படைத்த இறைவன் மிகத் தெளிவாக மனிதனை களிமண்ணால்தான் படைத்தேன் என்று கூறியிருக்கும்போது இதற்கு எதிராக டார்வின் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? டார்வின் கூறிய தத்துவம் அனுமானத்தின் அடிப்படையில் கூறிய தத்துவம்தானே தவிர இது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை கிடையாது. 1809ல் இருந்து 1882 வரை வாழ்ந்த டார்வின் தான் உயிரோடு வாழ்ந்த காலத்தில் எந்த குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்துவிட்டு இவ்வாறு கூறினாரா என்றால் ஒரு காலத்திலும் இவ்வாறு பார்த்துவிட்டு கூறவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இறைவனை மறுப்பதற்காக உருவாக்கப்பட்ட டார்வின் தத்துவத்தை நவீன விஞ்ஞான உலகமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. டார்வினின் தத்துவம் உண்மையென்றால் இன்று உலகின் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் சில குரங்குகள் மனிதனாக மாறிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது கருவுற்ற பெண் குரங்குகள் மனித குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். நாம் கூறும் இந்த செயல் உலகின் எந்த பகுதியிலாவது நடைபெறுகிறதா? நடைமுறை சாத்தியமற்ற, விஞ்ஞான உலகில் நிரூபிக்கப்படாத, இறைவனுக்கு எதிரான இந்த தத்துவத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இன்னும், இதுபோன்ற இறைவனுக்கு எதிராக எந்தெந்த பாடங்கள் உள்ளதோ அந்த பாடங்களை முஸ்லிம்கள் படிக்கக்கூடாது. முஸ்லிம்கள் தங்களது வழிப்பாட்டு உரிமையில் முழு சுதந்திரத்தோடு செயல்பட்டு குழந்தைகள் கல்வியை கற்றுக் கொள்ளும் உரிமையை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், முஸ்லிம் மாணவிகளின் ஒழுக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளி நேரத்தின்போது தலைக்கு முக்காடு அணிவதை பள்ளி நிர்வாகம் கட்டாயமாக்கியதை போன்று, படைத்த இறைவனுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட பாடங்களைப் படிப்பதை விட்டும் பள்ளி நிர்வாகம் முஸ்லிம்களை விலக்கி வைக்க வேண்டும் என்பதை யும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு : எனது குழந்தை இந்தந்தப் பாடங்களை படிக்க மாட்டாள் என்று எழுதி தாருங்கள் என்று கேட்டிருந்தீர்கள். பொத்தாம் பொதுவாக எனது குழந்தை இந்தந்த பாடங்களை படிக்கமாட்டாள் என்று எழுத முடியாது. ஏன் படிக்க மாட்டாள் என்பதை தகுந்த காரணத்தோடு சொல்வதுதான் முறையானது. அதனடிப்படையில் சிறிது விளக்கத்தோடு கடிதம் எழுதியுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : இலங்கையிலுள்ள “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற ஜமாஅத்தின் தலைவருக்கு பைஅத் செய்தவர்கள் மட்டுமே நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள், மற்றவர்கள் காஃபிர்கள். அவர்களைப் பின்பற்றித் தொழுவதும் கூடாது. அவர்கள் ஜமாஅத்திலும் இல்லை. ஐயாமுல் ஜாஹிலிய்யா காலத்தவர்களைப் போல் மரணமடைவார்கள் என்று பேசி வருகிறார்கள். இது நபி வழியா? S.M. ரியால், மாவனல்ல, இலங்கை

தெளிவு : உண்மையில் பாகிஸ்தானிலும், இலங்கையிலும் செயல்படும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக விட்டுச்சென்ற ஜமாஅத்துல் முஸ்லிமீனாக அந்த ஜமாஅத் இருக்குமேயானால் 1980களிலேயே நாம் அந்த ஜமாஅத்தில் இணைந்திருப்போம். ஆனால் பெயர் மட்டும்தான் நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற ஜமாஅத்தாக இருக்கிறதே அல்லாமல், அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும், காலம் காலமாக மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கும் மதகுருமார்களின் நடைமுறைகளேயாகும்.

முஹம்மது(ஸல்) அவர்கள் நபியாகத் தேர்வு செய்யப்படும்போது, அன்று குறைஷ்களை தாருந் நத்வா ஆலிம்களே ஆட்டிப் படைத்துக் கொண்டி ருந்தனர். தங்களைக் கற்றறிந்த மேதைகள்-ஆலிம்கள், மற்றவர்கள் அவாம்கள் என இழிவுபடுத்தி வந்தனர். மார்க்கம் சொல்ல தாங்களே அதிகாரம் பெற்றவர்கள் என ஆணவம் பேசினர். எழுதப் படிக்கத் தெரியாத அவாமான இந்த முஹம்மது எப்படி மார்க்கம் பேசலாம் என ஆணவம் பேசி நபி (ஸல்) அவர்கள் கூறிய குர்ஆன் வசனங்களையே குறைஷ்கள் கேட்கவிடாமல் தடுத்தனர்.

நபி(ஸல்) அவர்களோ ஆலிம்கள் எனப் பெருமை பேசிய அவர்களை ஜாஹில்கள் என்றும், அவர்களின் தலைவன் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என வாயார குறைஷ்கள் புகழ்ந்தவனை அபூ ஜஹீல்-மடமையின் தந்தை எனவும் மக்களுக்கு அடையாளம் காட்டினார்கள். தாருந்நத்வா அரபு மதரஸாவை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். அந்த இடத்தில்தான் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனப் பிளவுபடுத்தும் இப்புரோகிதர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் சூட்டிய பட்டம் ஜாஹில்கள்-மடையர்கள். அதன் தலைவன் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என்பவனுக்குச் சூட்டியப் பட்டம் அபூஜஹீல்-மடைமையின் தந்தை என்பதாகும்.

ஒவ்வொரு நபியின் காலத்திலும் அவர்களைக் கடுமையாக எதிர்த்துப் பேயன், பயித்தியக்காரன், பொய்யன், வழிகேடன், அயோக்கியன் என இல்லாத பட்டங்களைச் சூட்டி அவர்களின் நேர்வழிப் பேச்சை மக்கள் கேட்கவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த இம்மதகுருமார்கள், அந்நபிமார்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் சமுதாயத்திலும் திருட்டுத்தனமாகப் புகுந்துகொண்டு, அந்நபிமார்களை வரம்பு மீறி வானளாவப் புகழ்ந்து, தெய்வ நிலைக்கு உயர்த்தி அவதாரங்கள் ஆக்கி, வழிகெடுத்து நரகில் தள்ளும் பித்அத்களை மார்க்கமாக்கி, மக்களை நரகில் தள்ளுவதுதான் இப்புரோகிதர்களின் வாடிக்கை.

நபி(ஸல்) அவர்கள் தன்னோடு இருந்தவர்களை முரீது என்றோ, சிஷ்யர் என்றோ, தொண்டர் என்றோ சொல்லவில்லை. மாறாக தோழர்கள்-ஸஹாபாக்கள் என்றே அறிமுகப்படுத்தினார்கள். தமது சமுதாயத்தை ஆலிம்-அவாம் என்று வேறுபடுத்திக் காட்டவில்லை. 5% கூட தேறாத ஆலிம் வர்க்கம் 95% பெரும்பாலான மக்களை ஆட்டிப் படைக்கும், ஏமாற்றி வஞ்சிக்கும் இழிநிலையை நடைமுறைப்படுத்திக் காட்டவில்லை.

9:71, 41:33, 103:1-3 வசனங்கள் கூறும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும், “என்னிடமிருந்து ஒரேயயாரு செய்தி கிடைத்தாலும் அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள்.” (புகாரீ) என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கும் அடிபணிந்து ஆலிம்-அவாம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மார்க்கம் கற்றுக் கொடுப்பது, கற்றுக் கொள்வதுமாக இருக்க வேண்டும் என்பதே ஒரே நேர்வழி.

நபி(ஸல்) அவர்கள் இடித்துத் தரைமட்டமாக்கிய ஆலிம்-அவாம் வேறுபாட்டையும், புரோ கித மதரஸாவையும் மீண்டும் தூய இஸ்லாமிய மார்க்கத்தில் பித்அத்தாக-வழிகேடாக நுழைத்து வயிறு வளர்ப்பவர்கள் தான் இம்மவ்லவிகள். எவன் புரோகித மதரஸாவில் ஓதி மவ்லவி பட்டம் பெற்ற ஆலிம் என பெருமைப்படுகிறானோ, தன்னை மவ்லவி என அறிமுகப்படுத்துகிறானோ அதை வயிற்றுப் பிழைப்பாக ஆக்குகிறானோ அவன் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கைப்படி வடிகட்டிய மூடன் ஆவான். அவன் மார்க்கம் சொல்ல அருகதையற்றவன் ஆவான்.

ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த பெயரில் உலகின் எந்தெந் தப் பகுதிகளில் எத்தனை ஜமாஅத்துகள் இருந்தாலும், அவற்றில் ஆலிம்-அவாம் என்ற பிரிவு-வேறுபாடு இருந்தால், மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல எங்கள் உலமாக்கள் இருக்கிறார்கள் என்று சமுதாயத்தைப் பிளவுபடுத்தினால், எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து தூய மார்க்கத்தை மதமாக்கி அதையே தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருந்தால், அவர்களும் இப்புரோகிதக் குட்டையில் ஊறிய மட்டைகளே. பித்அத்களை நடைமுறைப்படுத்தி நரகை நோக்கி நடைபோடுகிறவர்களே. மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளு பவர்களே; மவ்லவி-ஆலிம், மார்க்கம் கற்ற மேதை என உண்மையின்றி பெருமை பேசும் எந்த மவ்லவியும் இதில் வேறுபட முடியாது. (பார்க்க : 7:146)

மக்களுக்கு நேர்வழியைத் துல்லியமாக, தெளிவாக, திட்டமாக, நேரடியாகக் காட்டும், ஆதத்தின் சந்ததிகள் அனைவருக்கும் சொந்தமான இறுதி வழிகாட்டி நெறிநூல் குர்ஆன் குறிப்பாக யாருக்கு இறங்கியது என்பதைத் திட்டமாக 62:2 இறைவாக்குக் கூறுகிறது. படித்துப் பாருங்கள். “அவன்தான் எழுத்தறிவில்லா(அவாம்) மக்களிடம் அவனுடைய வசனங்களைப் படித்துக் காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்” (ஜுமுஆ 62:2)

இந்த குர்ஆன் வசனத்திலிருந்து என்ன பட்டவர்த்தனமாகத் தெரிகிறது? பாமர மக்களுக்கு குர்ஆன் அவர்களது தாய்மொழியில் படித்துக்காட்டப்பட்டால், ஆலிம் எனப் பெருமை பேசும் இம்மவ்லவிகளை விட தெளிவாக சரியாக அவர்களே விளங்குவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக, குன்றிலிட்ட தீபமாக விளங்கவில்லையா? அதே சமயம் ஆலிம் எனப் பெருமை பேசும் இம்மவ்லவிகளை அல்லாஹ் குர்ஆனை விளங்குவதை விட்டும் திருப்பி விடுகிறான்.

நேரடியாக குர்ஆன் வசனங்களைக் காட்டினாலும் நம்பி ஏற்கமாட்டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்பார்கள் என்று 7:146 இறைவாக்குக் கூறி இந்த மவ்லவிகளை நேரடியாக அடையாளம் காட்டுகிறது. இதன் பின்னரும் இந்த மவ்லவிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்லலாமா? ஆக ஆலிம்-அவாம் என சமுதாயத்தில் பிளவை-பிரிவை வேறுபாட்டை ஏற்படுத்தும் இம்மவ்லவிகள் அவர்கள் தங்களை ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று சொல்லிக்கொண்டாலும், வேறு எந்தப் பிரிவில் செயல்பட்டாலும் அவர்கள் பகிரங்கமான வழிகேடர்கள்; நாளை நரகை நிரப்பி அங்கு அவர்களும் அவர்களது பக்தர்களும் ஒப்பாரி வைப்பதை புலம்பித் தள்ளுவதை குர்ஆன் 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 வசனங்கள் அம்பலப்படுத்துகின்றன.

இவற்றிலுள்ள பெருமையடித்தோர் சாட்சாத் இம்மவ்லவிகளே. இப்புரோகிதப் பண்டாரங்கள் அற்பமான அழிந்துபோகும் இவ்வுலக வாழ்க்கையில் கொடிய ஹராமான வழியில் தங்கள் ஒரு ஜான் வயிற்றை நிரப்ப, 21:92, 23:52 குர்ஆன் வசனங்கள் கூறும் ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தை ஆலிம்-அவாம் என கூறுபோட்டு முடிந்தது. அடுத்து நரகை நிரப்ப இருக்கும் (பார்க்க : 32:13, 11:118,119) பெருங்கொண்ட முஸ்லிம்களில் கணிசமான ஒரு கூட்டத்தைத் தங்கள் பின்னால் அணிவகுக்கச் செய்ய, தங்கள் வழிகெட்டக் கொள்கையை ஏற்காத முஸ்லிம்களுக்கு குஃப்ர் ஃபத்வா கொடுத்து முஸ்லிம் சமுதாயத்தை மேலும் பிளவுபடுத்தி உலகியல் ஆதாயங்களை அடையக் குறியாக இருப்பார்கள்.

குர்ஆனை முழுமையாக, முறையாகப் படித்து அறிகிறவர்கள் முஸ்லிம் என்று சொல்பவர்களை, அவர்கள் உள்ளத்தால் ஒப்புக்கொள்ளாமல்,வெறும் நுனி நாவினால் முஸ்லிம் என்று சொன்னாலும் அவர்களுக்கே காஃபிர் ஃபத்வா கொடுக்கக்கூடாது; அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே அத்தீர்ப்பை நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கிறான் என்று கூறும் 10:19, 41:45, 42:14,21 இறைவாக்குகளை இம்மவ்லவிகள் கண்டுகொள்ள மாட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களின் கண்முன்னே தங்களை முஸ்லிம்கள் என்று நாவளவில் மட்டும் சொல்லிக் கொண்டு, குறைஷ் காஃபிர்களுடன் சேர்ந்து கும்மாளம் அடித்ததை, உண்மை முஸ்லிம்களை நையாண்டி செய்ததை (பார்க்க : 2:8-20) பார்த்த பின்னரும், நபி (ஸல்) அவர்களுக்கு, நாளை மறுமையில் அவர்கள் அடையப்போகும் நரக தண்டனை, வேதனைப் பற்றி எச்சரிக்கும் அதிகாரம் பெற்றிருந்தார்களே அல்லாமல் அவர்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்தது, தமது உம்மத்திலிருந்து வெளியேற்றும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று கூறும் பல வசனங்களை பெருமை பேசும் இம்மவ்லவிகளின் கண்களிலிருந்து அல்லாஹ்வே மறைத்துவிடுகிறான். (பார்க்க : 7:146,175-179, 27:14, 45:23, 47:25) ஆக மவ்லவிகளான இப்பிரிவினைவாதிகள் துணிந்து மற்றப் பிரிவினருக்கு குஃப்ர் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்தி ஆதாயம் அடைவதில் தான் குறியாக இருப்பார்கள்.

இதில் பாகிஸ்தான், இலங்கை ஜமாஅத்துல் முஸ்லிமீன் இரண்டிற்கும் தலைமை தாங்கும் மவ்லவிகளும் விதிவிலக்கல்ல. இவ்வுலகில் முஸ்லிம் என்று கூறிக்கொண்டு ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் துணிந்து வீம்பாக ஈடுபடுபவர்களுக்கு குர்ஆன், ஹதீஃத் இவை இரண்டையும் காட்டி அவற்றை விட்டு தெளபா செய்து மீளாவிட்டால், நாளை அவர்கள் அடையப்போகும் கடும் தண்டனையையும் நரக நெருப்பையும் குர்ஆன் வசனங்கள், ஹதீஃத்கள் இவற்றைக் காட்டிக் கடுமையாக எச்சரிப்பது மட்டுமே உண்மை முஸ்லிம்களின் கடமை.

அதற்கு மாறாக அவர்கள் அவற்றில் வீம்பாக மூழ்கி இருந்தாலும் அதைக் காரணம் காட்டி அவர்களுக்கு இவ்வுலகில் குஃப்ர் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவு படுத்தும் அதிகாரம் இறுதி நபிக்கே இல்லை என்பதைப் பல குர்ஆன் வசனங்கள் கூறுவதை அல்லாஹ் இம்மவ்லவிகளின் வீண் பெருமை காரணமாக அவர்களின் கண்களிலிருந்தே மறைத்து விடுவதைப் பல குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று நபி நடைமுறைப்படுத்திக் காட்டியபடி செயல்படும் இம்மவ்லவிகள் இந்த வசனங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல், 5:44,45,47 குர்ஆன் வசனங்கள்தான் அவர்களுக்கு வேண்டாதவர்களுக்கு குஃப்ர் ஃபத்வா கொடுக்கப் பெரிய ஆதாரமாகப் போய் விட்டது.

இந்த மதகுருமார்களான, புரோகிதர்களான மூட முல்லாக்கள் ஒன்றைத் தெளிவாக விளங்க மறுக்கிறார்கள். செயல்படுத்த வேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டிய குர்ஆனின் முஹ்க்க மாத் வசனங்கள் நேரடியாக என்ன கூறுகின்ற னவோ அவைதான் அவற்றின் பொருள். அவற்றை மேல் விளக்கம், சுயவிளக்கம் கொடுத்து மறைப்ப வர்களை 2:159 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரும் சபிக்கிறார்கள்; அவர்கள் நரகவாதிகள். (பார்க்க : 2:160, 161,162)

அப்படியே முஹ்க்கமாத் வசனங்களுக்கு மேல் விளக்கம் கொடுப்பதாக இருந்தால், 2:213, 16:44,64 இறைவாக்குகள் கூறுவதுபோல் அந்த அதிகாரம் நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமே உண்டு. மனிதர்களில், மவ்லவிகளில் யாருக்கும் அந்த அதிகாரம் இல்லவே இல்லை. அப்படி வேறு அபிப்பிராயம் சொன்னால் 33:36 இறைவாக்குச் சொல்வது போல் அந்த மவ்லவிகள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்.

5:44,45,47 குர்ஆன் வசனங்கள் இவ்வுலகில் நடக்கும் கொலை, கொள்ளை, களவு, விபச்சாரம் போன்றவற்றிற்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கொடுக்கும் தீர்ப்பைப் பற்றிக் கூறுகின்றனவே அல்லாமல், எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ர், ஷி´ர்க், பித்அத்களில் ஈடுபடுபவர்களுக்கு குஃப்ர் ஃபத்வா கொடுப்பதற்கு ஆட்சியாளர்களுக்கோ மவ்லவிகளுக்கோ அதிகாரம் கொடுக்கும் வசனங்கள் அல்ல.

மூட முல்லாக்கள் அவர்களின் வழிகெட்ட கொள்கைக்கு சம்பந்த மில்லா வசனங்களைத் திரித்து வளைத்து சுய விளக்கம் கொடுத்து தங்களின் மூடக் கொள்கையை நிலைநாட்ட முற்படுவார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். ஆக இலங்கை ஜமாஅத் முஸ்லிமீன் அமீர் தனக்கு பைஅத் செய்யாதவர்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுப்பது பெருத்த வழிகேடாகும். நாளை நரகில் கொண்டு சேர்க்கும். தானும் வழிகெட்டு, தன்னை நம்பியுள்ள அப்பாவி முஸ்லிம்களையும் வழிகெடுத்து நரகில் தள்ளும் ஒவ்வொரு பிரிவு மவ்லவிகளும் தாங்கள்தான் நேர்வழியில் இருப்பதாகவும் மற்ற பிரிவுகளே வழிகேட்டில் இருப்பதாகவும் ஃபத்வா கொடுக்கின்றனர்.

ஆனால் நேர்வழியில் இருப்பது யார் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று 17:84 இறைவாக்குப் பறைசாற்றுகிறது. மேலும் யார் நாங்கள் தான் நேர்வழியில் இருக்கிறோம் என்று பெருமையடிக்கிறார்களோ அவர்கள் 4:49, 53:32 இறைவாக்குகளை நிராகரிக்கிறார்கள் என்பதே எதார்த்தமாகும். ஒரே நேர்வழியை (6:153) காட்டும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு.

இறுதி நபிக்கே அந்த அதிகாரம் இல்லை என்று குர்ஆனில் பல வசனங்கள் கூறிக்கொண்டிருக்க நான் நேர்வழி காட்டுகிறேன், என்னிடம் பைஅத் செய்யுங்கள். என்னிடம் பைஅத் செய்யாதவர் காஃபிர் என்று ஒருவன் சொன்னால் அவன் 33:36 இறைவாக்குச் சொல்வது போல் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறான் என்பதுதான் உண்மை. இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடன் வஹியின் தொடர்பில் இருந்தார்கள். அவர்களிடம் பைஅத் செய்ததில் அர்த்தம் இருக்கிறது.

நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த கலீஃபாக்களிடம் பைஅத் செய்ததில் அர்த்தம் உண்டு. இந்த நிலையில் சாதா ரண ஒரு நபர் தன்னிடம் பைஅத் செய்தவர்கள் மட்டுமே முஸ்லிம்; மற்றவர்கள் காஃபிர்கள் என்று சொன்னால் அவன் எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக்கிறான் என்பது புரிகிறதா? இல்லையா? பித் அத்தான வழிகெட்ட தரீக்காவாதிகளின் ஷைகுகளிடம் முரீதுகள் பைஅத் செய்வதற்கும் இதற்கும் வேறுபாடு உண்டா?

எப்படி ஷைகுகளிடம் முரீதுகள், மனிதன் கையிலிருக்கும் மையித்-பிணம் போல் ஆக்கப்படுகிறார்களோ, அதுபோல் இலங்கை ஜமாஅத்துல் முஸ்லிமீனின் அமீரும், தனது பக்தர்களை மையித் போல் ஆக்கி அவர்களை அடக்கியாள விரும்புகிறார். ஒருவரது குர்ஆன், சுன்னா போதனைகளைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு, அவரை அமீராக ஏற்று செயல்படுவதை மார்க்கம் தடை செய்யவில்லை. அந்த அமீரும் குர்ஆன், சுன்னாவுக்கு முரணாக ஒன்றைக் கட்டளையிடமுடியாது. அப்படிக் கட்டளையிட்டால் அதில் அந்த அமீருக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை என்று 4:59 இறைவாக்கு வழிகாட்டுகிறது.

பாவமான காரியங்களில் அமீருக்குக் கட்டுப்படக்கூடாது என்று நபி(ஸல்) அவர்களும் வழிகாட்டி இருக்கிறார்கள். இலங்கை ஜமாஅத்துல் முஸ்லிமீன் அமீரோ, சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனக் கூறுபோடுவது, கொடிய ஹராமான வழியில் மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வது, இன்னும் இவை போன்ற ஹராமான காரியங்களில் தங்கள் முரீதுகளை வழிபட வைக்கவே பைஅத்தை வலியுறுத்துகிறார். பைஅத் செய்யாதவர் காஃபிர் என்கிறார்.

ஆக இலங்கையிலிருக்கும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் பெயரில் மட்டும்தான் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலை ஏற்றிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளில் பெரும்பாலானவை அல்லாஹ் அல்குர்ஆனில் தாஃகூத்-மனித ஷைத்தான்கள் என்று கண்டிக்கிறானே அந்த மதகுருமார்களின் பித்அத்தான-வழிகெட்ட-நரகில் சேர்க்கும் செயல்பாடுகளாகவே இருக்கின்றன.

எப்படி இன்று முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு பெரும்பாலான முஸ்லிம்கள் முஸ்லிம் விரோத செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்களோ அதுபோல்தான் இலங்கை ஜமாஅத்துல் முஸ்லி மீனும் செயல்படுகிறது. இலங்கை ஜமாஅத்துல் முஸ்லிமீன் நபி(ஸல்) அவர்கள் “எனது உம்மத்தை 73 பிரிவுகளாகப் பிரியும்; அதில் ஒரேயயாரு பிரிவு மட்டுமே நேர்வழி நடக்கும் ஜமாஅத்; இதர 72 பிரிவுகளும் வழிகெட்டு நரகில் புகும் ஜமாஅத்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ள, பித்அத்தான வழிகெட்ட ஜமாஅத்களின் பட்டியலில்தான் இலங்கை ஜமாஅத்துல் முஸ்லிமீன் பிரிவும் அடங்கும். தங்களிடம் பைஅத் செய்யாதவர்கள் காஃபிர்கள் என்று இவர்கள் சொல்கிறார்களே இதுவும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கு முரணாகும். நபி(ஸல்) வழிகெட்ட 72 பிரிவினரையும் எனது உம்மத் என்று குறிப்பிடுகிறார்களே அல்லாமல், அவர்கள் முஸ்லிம்கள் இல்லை, எனது உம்மத்தினர் இல்லை என்று கூறி வழிகாட்டவில்லை.

எனவே தங்களை முஸ்லிம்கள் என்று கூறி செயல்படுகிறவர்களை யார் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை காஃபிர்கள் என்று இவ்வுலகிலேயே ஃபத்வா கொடுத்து முஸ்லிம் உம்மத்தைப் பிளவுபடுத்துகிறார்களோ அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை 33:36, 42:21, 49:16 வசனங்களைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

இவர்கள் அல்லாஹ்வுக்கும் மேல் அல்லாஹ்வாகிறார்கள். (நவூதுபில்லாஹ்) நபி மூசா(அலை) அவர்களுக்கே இல்லாத துணிச்சல்-அதிகாரம் (பார்க்க : 20:48,51,52) இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கே இல்லாத துணிச்சல் அதிகாரம் தங்களுக்கிருப்பதாக (பார்க்க : 3:128, 69:44-47)

நம்பி, கொடிய ஹராமான வழியில் மார்க்கத்தை மதமாக்கி அதையே தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட ஒட்டுமொத்த மதகுருமார்களும் வழிகேடர்களாக இருந்து கொண்டு மக்களை வழிகேட்டின் பக்கமே இழுத்துச் செல்வார்கள் என்பதை விளங்கி, அவர்களின் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆனையும், சுன்னாவையும் பற்றிப் பிடிப்பவர்கள் மட்டுமே நேர்வழி பெற முடியும்.

மேலும் 2:38, 4:44, 6:26, 7:3,37, 11:31, 17:84, 20:123, 27:14, 7:146,175-179, 45:23, 47:25 இந்த வசனங்கள் அனைத்தையும் நேரடியாகப் படித்து தெளிவு பெறுங்கள். இலங்கை ஜமாஅத்துல் முஸ்லிமீன் அமீரிடம் பைஅத் செய்தவர்கள் மட்டும்தான் ஜமாஅத்தில் இருக்கிறார்கள். பைஅத் செய்யாதவர்கள் ஜமாஅத்தோடு இல்லை. தனியாக இருக்கிறார்கள். அவர்கள் அய்யாமுல் ஜாஹிலிய்யா மரணத்தையே சந்திப்பார்கள் என்று புதுக்கரடியும் விடுகிறார்கள். இது அவர்களின் இயக்க வெறியையே அம்பலப்படுத்துகிறது.

காதியானிகள் மிர்சா குலாமை நபியாக ஏற்று பைஅத் செய்யாதவர்கள் முஸ்லிம்கள் இல்லை, காஃபிர்கள் அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று சொல்வதற்கும், இலங்கை ஜமாஅத் துல் முஸ்லிமீன் அமீர் தன்னிடம் பையத் செய்யாதவர்கள் முஸ்லிம்கள் இல்லை, காஃபிர்கள், அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று சொல்வ தற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இரண்டும் பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்.

இறைப்பணி செய்த அனைத்து நபிமார்களும் “நாங்கள் முஸ்லிம்களில் உள்ளவர்கள்-மினல் முஸ்லிமீன்” என்று மட்டுமே கூறியதாக பல குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. அந்த நபிமார்கள் செய்த இறைப்பணி, இறுதித் தூதருடன் நபிமார்களின் வருகை முற்றுப்பெற்று, அவர்கள் செய்த இறைப்பணி அவர்களின் உம்மத்தினர் மீது சாற்றப்பட்டுள்ளது. (பார்க்க : 3:110, 9:71)

தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இறைப் பணியைச் செய்யும் இந்த உம்மத்தினரும் தங்களை முஸ்லிம் களில் உள்ளவர்கள்-மினல் முஸ்லிமீன் என்று மட்டுமே தங்களை அறிமுகம் செய்து கொள்ள வேண் டும் என்று 41:33 இறைவாக்கு வழிகாட்டுகிறது. ஆம்! முஸ்லிம்கள் ஜமாஅத்தாகச் செயல்பட வேண்டுமே அல்லாது, தனியே செயல்பட அனுமதி இல்லை. இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு நான் எந்த ஜமாஅத்திலும் இல்லை.

நான் முஸ்லிம் என்று கூறிக்கொண்டு மார்க்கப் பணி செய்வதாக நடிப்பவர்கள் அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்து மரணத்தைச் சந்திப்பார்கள். நாளை நரகில் புகுவார்கள் என்பதை நாமும் மறுக்கவில்லை. அதற்கு மாறாக சிலோன் ஜமாஅத்துல் முஸ்லிமீன் அமீரிடம் பைஅத் செய்யாதவர்கள் அய்யாமுல் ஜாஹிலியா மரணத்தைத் தழுவுவார் கள், நரகவாதிகள் என்று கூறுவது வழிகேடாகும்; இவர்களே நரகத்தை அஞ்சிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளார்கள். அல்லாஹ் பெயரிட்டு (பார்க்க : 22:78)

நபி (ஸல்) நடைமுறைப்படுத்திக் காட்டிய ஜமாஅத்துல் முஸ்லிமீனில் மட்டுமே செயல்படவேண்டும். இது அல்லாத பெயர்களில் செயல்படுவது பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதேபோல் நபி(ஸல்) அவர்களின் மரணத் திற்குப் பின் அதாவது வஹீ முற்றுப் பெற்றபின் மார்க்க அடிப்படையில் கற்பனை செய்யப்பட்ட ஆலிம்-அவாம் பிளவு பித்அத்-வழிகேடு, மார்க்கத்தை தங்கள் வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வது பித்அத்-வழிகேடு, மவ்லவி அல்லாத முஸ்லிம்கள் அவர்களின் தாய்மொழியில் குர்ஆனைப் படித்தாலும் அவர்களால் குர்ஆனை விளங்க முடியாது என்று உண்மையின்றி பெருமை பேசுவது பித்அத்-வழிகேடு, 5% தேறாத மவ்லவிகள் 95% முஸ்லிம்களை தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைக்க முற்படுவது பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும்,

ஆக நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் மார்க்க அடிப்படையில், நபிமார்கள் செய்த பிரசார பணி என்று கூறிக்கொண்டு கற்பனை செய்யப்பட்ட அமல்கள், செயல்பாடுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பித்அத் வழிகேடு நரகில் சேர்க்கும் என்பதை உறுதியாக ஏற்று 3:102,103,110, 9:71, 41:33 குர்ஆன் வசனங்களுக்கு முற்றிலும் முழுவதுமாக அடிபணிந்து குர்ஆன், சுன்னா அடிப்படையில் பெயரிலும், அமல்களிலும் யார் செயல்படுகிறார் களோ அவர்கள் மட்டுமே 6:153 இறைவாக்குச் சொல்வதுபோல் நேர்வழி நடந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கம் புகும் நன்மக்கள்.

ஆதத்தின் சந்ததிகளில் அவர்கள் மிகமிக சொற்பமானவர்களே. குர்ஆனில் “கலீல்” என்று வரும் வசனங்களையும், 2:1-86, 7:3, 18:102-106, 59:7 வசனங்களையும் படித்து அறிந்து கொள்ளுங்கள். அதற்கு மாறாக “அக்ஃதர்” என்று வரும் குர்ஆன் வசனங்களையும், 32:13, 11:118,119, 25:30, 12:106 வசனங்களையும், ஆதத்தின் வழித்தோன்றல் களில் ஒவ்வொரு 1000திலும், 999 பேர் நரகத்திற்குரியவர்கள், அதிலும் யஃஜூஜ், மஃஜூன் கூட்டத்தினர் ஆயிரத்திலும், ஆயிரம் பேரும் நரகம் புகுவார்கள் என்று கூறும் புகாரீ 3348, 4741, 6530 ஹதீஃத்களையும் நேரடியாகப் படித்து உறுதியாக அறிந்து கொள்ள முடியும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் 3:103 கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து குர்ஆனை பற்றிப் பிடித்து அதன் நேரடிக் கட்டளைகளுக்கு எவ்வித சுயவிளக்கம் மேல் விளக்கம் கொடுக்காமல் உள்ளது உள்ளபடி நடந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கம் புக அருள் புரிவானாக. வஸ்ஸலாம்.

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : சென்ற ஆகஸ்ட் 2016, பக்கம் 16-ல் பிறை சம்பந்தப்பட்ட கட்டுரையில், பிற மதகுருமார்கள் பண்டிகை கொண்டாட்டங்கள் ஒருங்கிணைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அவர்களது கணிப்புக்கள் தவறுவதில்லை என்றும் இஸ்லாமிய புரோகிதர்களின் கணிப்புக்கள் பிழையானது என்றும் கூறுகிறீர்கள். இது தவறான குற்றச்சாட்டாகும். என்னுடன் பணிபுரியும் இந்து சகோதரர் பஞ்சாங்க கணிப்பில் எத்தனையோ முறைகள் தவறுகள் நேர்ந்துள்ளதாக கூறுகிறார்.

எத்தனையோ தீபாவளி தேதிகள், மாற்றி தவறாக குறிப்பிட்டுள்ளனர். இப்போது நடைமுறையில் உள்ள பஞ்சாங்க கணிப்பின்படி இம்மாதம் ஏற்படும் “குருபெயர்ச்சி” கூட தேதிகளின் அடிப்படையில் விமர்சனத்துக்குள்ளாகி விட்டது. சில பஞ்சாங்க கணிப்பில், ஆகஸ்ட் 2 என்றும் சில பஞ்சாங்கத்தில் “ஆகஸ்ட் II” என்றும் சிலதில் ஆகஸ்ட் II இரவு 9 என்றும், சிலதில் ஆகஸ்ட் II காலை 6.30 என்றும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. ஆகையினால், முஸ்லிம் மதகுருமார்களை மட்டும் ஒரேயடியாக குறை கூறவேண்டாம் என்று நினைக்கிறேன் (இன்று மத பஞ்சாங்கங்கள் அனைத் துமே “சந்திரனை வழிகாட்டியாக கொண்டே கணிக்கப்படுகின்றது) அபூ இத்ரீஸ், சிங்கப்பூர்.

விளக்கம் : இந்து மதகுருமார்கள் நேர்வழி நடக்கிறார்கள், முஸ்லிம் மதகுருமார்கள் கோணல் வழிகளில் செல்கிறார்கள் என்ற கருத்தில் நாம் எழுத வில்லை. அனைத்து மதங்களின் மதகுருமார்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே; வழிகேடர்களே; தங்களை நம்பித் தங்கள் பின்னால் வரும் பெருங்கொண்ட மக்களை நரகை நோக்கி இட்டுச் செல்கிறார்கள் என்பதைத் தெளிவாக நாம் சொல்லி வருகிறோம்.

சந்திர நாள்காட்டியில் அதாவது பிறை விவகாரத்தில் முஸ்லிம் மதகுருமார்களை விட இந்து மதகுருமார்கள் சரியாக இருக்கிறார்கள் என்றே நாம் குறிப்பிட்டுள்ளோம். சூரியன், சந்திரன், பூமி மூன்று கோள்களும் நேர்கோட்டிற்கு வந்து சங்கமம் (Conjunction) இடம்பெறும் நாளை சந்திர ஒளி மறைக்கப்படும் நாள், அமாவாசை என்று இந்து மதகுருமார்கள் சரியாகக் கூறுகிறார்கள். அமாவாசையிலும் சங்கமத்திற்கு, முன்னுள்ள கழியும் மாதத்தின் இறுதிப் பகுதி தேய்பிறை என்று இறந்தவர்களுக்கான சடங்குகளையும், சங்கமத்திற்குப் பின்னுள்ள பகுதியை புதிய மாதத்தின் வளர்பிறை என்று கூறி அதில் மங்களகரமான காரியங்களைச் செய்கின்றனர். அமாவாசைக்கு அடுத்த நாளை பிரதமை அதாவது புதிய மாதத்தின் முதல் நாள் என்று சரியாகத்தான் கணக்கிடுகிறார்கள்.

முஸ்லிம் மதகுருமார்களின் கற்பனைக் கட்டுக் கதையான பாட்டிமை என்ற பிதற்றலோ, 3-ம் பிறையை முதல் நாளாகக் கொள்ளும் மடமையோ இந்து மதகுருமார்களிடம் இல்லை. சங்கமத்திற்கு (Conjunction) அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளை பிரதமை அதாவது முதல் நாளாகக் கொள்ளாமல், இரண்டாம் நாளை அல்லது மூன்றாம் நாளை முதல் நாளாக (பிரதமை) கொள்ளும் நடைமுறை இந்து மதகுருமார்களிடையே இருந்தால் எடுத்துக் காட்டுங்கள். அல்லது முஸ்லிம்கள் பிளவுபட்டு, முதல் நாள், இரண்டாம் நாள் மூன்றாம் நாள் என 3 தினங்கள் பெருநாள் கொண்டாடியது போல், இந்துக்கள் பிளவுபட்டு தீபாவளியை 3 நாட்கள் கொண்டாடும் ஆதாரத்தைக் காட்டுங்கள். உங்கள் விமர்சனம் நியாயம் என்று ஏற்றுக் கொள்கிறோம். மற்ற அவர்களின் வழிகேடுகளை நாம் நியாயப்படுத்துகிறோம், சரிகாணு கிறோம் என்ற எண்ணம் தவறு என்பதைச் சுட்டிக் காட்டுவது எமது கடமை.

விமர்சனம்: முஸ்லிம்களின் நடைமுறையில் கண்ணால் காணும் பிறை 3 என்பதே உங்கள் குற்றச்சாட்டு, 3-ம் பிறையை முதல் பிறையாக கணிக்கின்றனர் என்கிறீர்கள். அப்படியானால், நபி(ஸல்) காலத்தில் முதல் பிறை என்று கணித்தது 3-ம் பிறையை தானா? அபூ இத்ரீஸ், சிங்கப்பூர்.

விளக்கம் : மாதக் கடைசியில் காலையில் கிழக்கே உதித்து மாலையில் மேற்கே மறையும் பிறை பார்த்துப் பிறை பிறந்துவிட்டது. மாதம் ஆரம்பித்து விட்டது, நாள் ஆரம்பித்து விட்டது என்ற மூடநம்பிக்கையை நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தவும் இல்லை; கற்றுத் தரவும் இல்லை. அந்த மூட நம்பிக்கை நபி(ஸல்) பிறப்பதற்கும் 570+383=953 வருடங்களுக்கு முன்னர் யூதர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டதாகும். நபி(ஸல்) அவர்களது நபித்துவ காலத்தில் எப்படி குறைஷ்களிடம் மூட நம்பிக்கையான சிலைகள் வழிபாடு இருந்ததோ அதேபோல் யூதர்களிடம் 3-ம் பிறையை முதல் பிறையாகக் கொள்ளும் மூட நம்பிக்கை இருக்கவே செய்தது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் அந்த மூட நம்பிக்கையைப் பின்பற்றவில்லை.

அதற்கு மாறாக அல்லாஹ்வின் 2:189, 36:39 குர்ஆன் வசனங்களுக்குக் கட்டுப்பட்டு அன்றாடம் பிறையின் வளர்ச்சி, தேய்வுகளை அவதானித்து வந்தார்கள். இப்படி அன்றாடம் பிறையின் தோற்றத்தை அவதானித்தக் காரணத்தால் நபிதோழர்களிடையே இந்த மாதம் 29-ல் முடியும் என்றும் இல்லை இல்லை 30-ல்தான் முடியும் என்றும் கருத்து வேறுபாடு உண்டானது. அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் இப்படி கருத்து வேறுபாடு கொண்டு பிளவுபடாதீர்கள்.

36:39 இறைவாக்குக் கூறும் பிறையின் இறுதிக் காட்சியை (உர்ஜூனில் கதீம்) கிழக்கில் சூரிய உதயத்திற்கு முன்னர் பார்த்து, அடுத்த நாளை (சங்கமம்) கழியும் மாதத்துடன் சேர்த்து மாதத்தை நிறைவு செய்யுங்கள் என்ற கருத்தில் வழிகாட்டியுள்ளார்கள். அன்று நபி(ஸல்) காலத்தில் சூரிய சுழற்சியையும், சந்திர சுழற்சியையும் துல்லியமாகக் கணக்கிடும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை. இதையே நபி(ஸல்) அவர்கள் “லாநக்த்துபு வலா நஹ்ஸுபு” என்று கூறி இருக்கிறார்கள்.

இன்று அந்தக் கணக்கீட்டு முறையும், பல வருடங்களின் மாதங்களின் துவக்கத்தைப் பதிவு செய்யும் நிலையும் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. வருடா வருடம் இடம்பெறும் சூரிய, சந்திர கிரகணங்கள் நூறு வருடங்களுக்கும் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதை, அவை குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்டநேரங்களில் தவறாது இடம் பெறுவதை சொந்த அனுபவத்தில் பார்த்து வருகிறோம். ஆக கணக்கீடு நூற்றுக்கு நூறு சரி என்பதை இது நிரூபிக்கிறது. இந்த மூட முல்லாக்கள் எப்படி ஆகாசப் பொய்யைக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் தெரியுமா? கணக்கீடு நூற்றுக்கு நூறு சரிதான்.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் கண்ணுக்குத் தெரியும் 3-ம் பிறையைத்தான் முதல் பிறையாகக் கொண்டு செயல்படக் கூறி இருக்கிறார்கள் என்று வடிகட்டினப் பொய்யைத் தொடர்ந்து கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அதாவது 2:189, 6:96, 7:54, 9:36,37, 10:5, 13:2, 14:33, 16:12, 17:12, 21:33, 25:61, 29:61, 31:29, 35:13, 36:40 39:5 மற்றும் 55:5 ஆக இத்தனை குர்ஆன் வசனங்கள் சூரியனும், சந்திரனும் துல்லியக் கணக்கின்படியே சுழல்கின்றன என்று கூறுவதை நபி(ஸல்) அவர்கள் நிராகரித்துவிட்டு சந்திரச் சுழற்சியைப் புறக்கண்ணால் பார்த்து தீர்மானிக்கச் சொன்னதாக அண்டப் புளுகைக் கூறி கடந்த 1200 வருடங்களாக மக்களை ஏமாற்றி வஞ்சித்து நரகில் தள்ளி ஜின் இன ஷைத்தானுக்கு இந்த தாஃகூத் என்ற மனித இன ஷைத்தான்கள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். இம்மவ்லவிகள் இக்கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் இன்று இவர்கள் அமைத்திருக்கும் ஹிலால் கமிட்டி அமைத்திருப்பது போல் ஹிலால் கமிட்டி அமைத்ததைக் கூறும் ஹதீஃதைக் காட்ட வேண்டும். மாதக் கடைசியில் மட்டும் பிறை பார்த்த ஹதீஃதைக் காட்டவேண்டும்.

அதுவும் மேற்கில் மாலையில் பிறை பார்த்த ஹதீஃதைக் காட்ட வேண்டும். மஃறிபு ஜமாஅத்தைக் கோட்டை விட்டுவிட்டு மறையும் பிறையைப் பார்த்த ஹதீஃதைக் காட்ட வேண்டும். வெளியூரிலோ, உள்ளூரிலோ பிறை பார்த்தத் தகவலை உடனடியாக தமக்கு அறிவிக்கக் கட்டளையிட்ட ஹதீஃதைக் காட்டவேண்டும்.

இவற்றில் ஒரேயொரு ஹதீஃதைக் கூட இந்த மூட முல்லாக்களால் காட்ட முடியாது. அப்படியானால் மவ்லவிகள் நபி(ஸல்) அவர் கள் புறக்கண்ணுக்குத் தெரியும் பிறை பார்த்து 3-ம் நாளை 1-ம் நாளாக கொள்ளக் கட்டளையிட்டார்கள் என்று கூறுவது அண்டப்புளுகா? இல்லையா? ஆகாசப் பொய்யா? இல்லையா? ஆக இம்மவ்லவிகள் மார்க்க விஷயத்தில் இப்படி அப்பட்டமான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதோடு, அவர்கள் நரகிற்குச் செல்வதோடு, அப்பாவி பொதுமக்களையும் நரகில் தள்ளுகிறார்கள். இம்மூட முல்லாக்களை 4:44 மற்றும் பல இறைவாக்குகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

கடந்த 1200 வருடங்களாக இம்மூட மவ்லவிகள் கொயபல்ஸைப் பின்பற்றி தொடர்ந்து 3-ம் பிறையை கண்ணால் பார்த்து மாதத்தைத் துவங்கச் சொல்லி நபி(ஸல்) கூறி இருக்கிறார்கள் என்று கூறி வருவதால் அப்பொய்க் கூற்று முஸ்லிம்களின் உள்ளத்தில் புரையோடிப் போயிருக்கிறது. இரத்த நாளங்களில் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் நீங்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் முதல் பிறை என்று கணித்தது 3-ம் பிறையைத்தானா என்று கேட்டிருக்கிறார்கள்.

உண்மை இதுதான். நபி(ஸல்) அவர்கள் கண்ணுக்குத் தெரியும் 3-ம் பிறையை 1-ம் பிறையாகக் கொள்ளக் கட்டளை இடவே இல்லை. இது இந்த மவ்லவிகள் கூறும் அண்டப்புளுகு, ஆகாசப் பொய். யூதர்களே 3-ம் பிறையை 1-ம் பிறையாகக் கணித்தார்கள். நபி(ஸல்) அவர்களது காலத்தில் முஸ்லிம்கள் தினசரி பிறையின் தோற்றத்தை அவதானித்து வந்தார்கள். 36:40 இறைவாக்குக் கூறும் மாத இறுதியில், இறுதியாகக் காட்சி தரும் உர்ஜூனில் கதீம் என்ற பிறையை சங்கமத்திற்கு முதல் நாள் கிழக்கில் சூரிய உதயத்திற்கு முன்னர் பார்த்து வந்தார்கள். சந்திர ஒளி முற்றிலும் மறைக்கப்படும் அடுத்த நாளை (கும்ம, குப்பிய) கழியும் மாதத்துடன் சேர்த்தார்கள். அடுத்த நாளை புதிய மாதத்தின் முதல் நாளாக (பிரதமை) கொண்டு மாதத்தை ஆரம்பித்தார்கள்.

இதுதான் நபிகாலத்து சரியான நடைமுறையாகும். நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு இந்த மூட முல்லாக்கள் திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்தில் புகுந்து கொண்டு நடைமுறைப்படுத்திய யூத மத கலாச்சாரமே 3-ம் பிறையை 1-ம் பிறையாகக் கொள்ளும் மூட நம்பிக்கையாகும். குர்ஆன், ஹதீஃதுக்கு நேர்முரணான வழிகேடாகும். (பார்க்க : புகாரீ : 3456,7319)

விமர்சனம் : பிறை பார்ப்பது இபாதத் அல்ல என் பது முடிவானால், இது விஷயத்தில் 3 பெருநாள் கொண்டாட இடம் கொடுக்காமல், “சுன்னத் ஜமாஅத்தினருடன்” சேர்ந்து ஒரே நாளில் பெருநாள் தொழுகைக்கு ஒன்று கூட நீங்கள் தயாரா? அபூ இத்ரீஸ், சிங்கப்பூர்.

விளக்கம் : ஆரம்பத்திலிருந்தே ஈத் கொண்டாட்டம் தான். அதுவும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒட்டுமொத்தச் சமுதாயமும் பள்ளியில் அல்ல வெளியில் ஒன்று கூடி கொண்டாடுவதுதான் ஈத். நோன்பை ரமழான் ஒன்றில் ஆரம்பித்து முடிவில் முடித்து விடுவது கட்டாயக் கடமை. அதை முன்பின் ஆக்குவது 9:37 இறைக்கட்டளைப்படி குஃப்ரை ஏற்படுத்தும் செயல். எனவே அதில் மாற்றம் செய்ய முடியாது. ஈத் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது நபிவழியே அல்லாமல் கட்டாயக் கடமை இல்லை. ஈத் தொழுகையை ஒருவன் தொழாமல் விட்டால் அதற்குரிய நன்மை கிடைக்காமல் போகுமே யல்லாது குற்றச் செயல் அல்ல. எனவே சு.ஜ.வினர் ஈதைக் கொண்டாடும் 3-ம் நாளில் கொண்டாடுவதில் எமக்கு எவ்வித மறுப்பும் இல்லை.

இதை ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருவதோடு வலியுறுத்தியும் வருகிறோம். அதேசமயம் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி ஒரு சாரார் சரியான நாளில் ஈத் தொழுகை நடத்தினால், சமுதாயத்தைப் பிளவுபடுத்தியக் குற்றம் அவர்களைத்தான் சாரும். அந்தத் தொழுகையில் கலந்து கொள்பவர்கள் அக்குற்றத்திற்கு ஆளாகமாட்டார்கள். 3-ம் நாளில் கொண்டாடும் அவர்களும் 1-ம் நாளில் கொண்டாடும் இவர்களும்தான் சமுதாயப் பிளவுக்கு காரணகர்த்தாக்கள். அதில் கலந்து கொள்பவர்கள் அல்ல. எனவே சரியாக 1-ம் நாளில் தொழுபவர்கள் பின்னால் நாம் தொழுது கொள்கிறோம்.

விமர்சனம் : வஹி தொடர்பில் இருந்த நபி(ஸல்) அவர்கள் 3-ம் பிறையை முதல் பிறையாக தவறாக கணிப்பதை இறைவன் சுட்டிகக்காட்டாமல் இருந்து விட்டான் என்று நினைப்பது மனதிற்கு ஆறுதலாக இல்லையே… (வஹி என்பதே உடனுக்குடன் தவறு களை சுட்டிக் காட்டுவதே) அபூ இத்ரீஸ், சிங்கப்பூர்.

விளக்கம் : நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் 3-ம் பிறையை 1-ம் பிறையாகக் கொள்ளவுமில்லை. அவ்வழிகேட்டை நபி(ஸல்) அவர்கள் தமது உம்மத்துக்குப் போதிக்கவுமில்லை. அப்படிச் செய்திருந்தால் நீதியை நிலைநாட்டும், நேர்வழியைக் காட்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் நபியைக் கடுமையாகக் கண்டித்துத் திருத்தி இருப்பான். சும்மா விட்டிருக்க மாட்டான். 3-ம் பிறையை 1-ம் பிறையாகக் கணக்கிட நபி(ஸல்) அவர்கள் கூறவே இல்லை.

ஒரே நேர்வழி மார்க்கத்தை எண்ணற்ற கோணல்வழிகள் மதங்களாக்கி முழுக்க முழுக்க கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்க்கும் இம் மூட முல்லாக்கள் நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தும் மிகக் கொடிய பழியாகும். இம்மவ்லவிகளின் உள்ளங்கள் கொடிய ஹராமான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றால் வளர்வதால் அவர்களின் உள்ளங்கள் 2:74, 5:13, 6:43,125, 57:16 இறைவாக்குகள் கூறுவது போல் கற்பாறைகள் போல் இறுகிவிட்டன.

எனவே நேரடி குர்ஆன், ஹதீஃத் போதனைகளை ஏற்கமாட்டார்கள். அது மட்டுமல்ல. உண்மையின்றி ஆலிம், அல்லாமா, மார்க்கம் கற்ற மேதைகள், அவாம்கள் குர்ஆனை விளக்க முடியாது என்று வீண் பெருமை பேசுவதால் இம்மவ்லவிகளை அல்லாஹ்வே குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பி விடுவதாகவும், குர்ஆன் வசனங்களை நேரடியாகக் காட்டினாலும் ஏற்கமாட்டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

வழிகேடுகளை-கோணல் வழிகளையே நேர்வழியாகக் கொள்வார்கள் என்று அல்லாஹ் தெளிவாக-நேரடியாக 7:146 இறைவாக்கில் கூறி இருந்தும், இந்த மவ்லவிகளை நம்பி அவர்கள் பின்னால் சுய சிந்தனையின்றி செல்பவர்கள் நாளை நரகையடைந்து பிதற்றுவதை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 குர்ஆன் வசனங்கள் அம்பலப்படுத்துகின்றன. நேரடியாகப் படித்து படிப்பினை பெறுவோர் மட்டுமே நேர்வழி நடந்து சுவர்க்கம் புகமுடியும்.

விமர்சனம் : அல்குர்ஆனின் கட்டளையின்படியும், ஸஹீஹான சுன்னாவின்படியும், “என்னை நான் முஸ்லிம் என்று கூறியவனாக வேறு எந்த பிரிவிலோ ஜமாஅத்திலோ இணையாமலும் இருந்து வருகிறேன்.” யாரும் என்னை கேட்டால், “நான் முஸ்லிம் ஜமாஅத்/ஜமாஅத்துல் முஸ்லிமீனில் இருக்கிறேன்” என்று பதிலளிக்கிறேன்.

ஆனால், நீங்கள் சென்ற இதழில் (ஆகஸ்ட் 2016, பக்கம் 19-ல்) முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்பவர்களும், பித்அத் வழிகேடு செய்பவர்கள், நரகில் சேர்ப்பவர்கள் என கூறுகிறீர் கள். எவரிடமும் இணையாமல், தனித்த நிலையில் தம்மையும் தம் குடும்பத்தாரையும், “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்று கூறிக்கொள்பவர் எப்படி பித்அத்வாதியாக முடியும். (எல்லா பிரிவுகளையும் விட்டு ஒதுங்கி, மரணம் வரை மரவேர்களை சாப்பிட்டு காலத்தை போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே) என்கிற நபி(ஸல்) அவர்களின் கட்டளையை பின்பற்றுபவர் பித்அத்வாதியாக முடியுமா? (ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்கிற தமிழ்நாட்டு பிரிவு ஜமாஅத்தின் “அமீராகிய” அபூ அப்தில்லாஹ்வை தலைமையாக ஏற்பவர்தான் உண்மையான முஸ்லிமா? W.H. ரஹ்மத்துல்லாஹ், சிங்கப்பூர்.

விளக்கம் : 41:33 இறைவாக்கு நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? நபிமார்கள் செய்த மார்க்கப் பணியான நன்மைகளைக் கொண்டு மக்களை ஏவுவதும் தீமைகளைக் கொண்டு மக்களைத் தடுத்துக் கொண்டு, தானும் அதன்படி நற்செயல்களைச் செய்யும் ஒவ்வொருவரும் தங்களை முஸ்லிம்களில் உள்ளவன்-மினல் முஸ்லிமீன் என்று மட்டுமே அழைத்துக் கொள்ளவேண்டும் என்றே கட்டளையிடுகிறது. நபிமார்கள் அனைவரும் தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்றே அறிமுகப்படுத்தினார்கள் என்று பல குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.

இந்த வசனங்களின் போதனைப்படி எப்படிப்பட்ட உயர் மார்க்கப் பணி புரிகிறவர்களும், சுயமாகக் கற்பனை செய்து பிரிதொரு தனிப் பெயரைச் சூட்டிக் கொள்ளாமல் தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த அழகிய முறையில் செயல்பட வேண்டும். அல்லாஹ்வுக்கும், தங்களுக்கும் இடையில் மூட முல்லாக்களின் கூற்றுப்படி அவாமான அபூ அப்தில்லாஹ்வையோ ஆலிம்-அல்லாமா-மார்க்கம் கற்ற மேதைகள் என பெருமை பேசும் மவ்லவிகளையோ இடைத்தரகர்களாகப் புகுத்தாமல் நேரடியாக குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பற்றிப் பிடித்து அவற்றின் நேரடி போதனைப்படி நடக்கவேண்டும் என்று பல குர்ஆன் வசனங்களைக் காட்டியே கூறிவருகிறோம். நான் எந்த ஜமாஅத்திலும் இல்லை. நான் “முஸ்லிம்” என்று மட்டும் கூறிக்கொண்டு தனித்துச் செயல்படுவது நேர்வழி இல்லை, வழிகேடு-நரகில் கொண்டு சேர்க்கும் என்றே தெளிவுபடுத்தி இருந்தோம்.

அதற்கும் தனித்திருக்கும் ஆட்டைத்தான் ஓநாய் பற்றிக் கொள்ளும். அதேபோல் தனித்துச் செயல்படும் முஸ்லிமைத்தான் ஷைத்தான் பற்றிக் கொண்டு, அவரை நரகில் சேர்ப்பான் என்றே தெளிவுபடுத்தி இருந்தோம். ஒவ்வொரு பகுதியிலிருப்பவர்களும் தங்களுக்குள் ஓர் அமீரைத் தெரிவு செய்து கொண்டு முஸ்லிம் ஜமாஅத்தில் உள்ளவர்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற அல்லாஹ் பெயரிட்டு, நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக்காட்டி முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்றுள்ள ஜமாஅத்தில் செயல்பட வேண்டும். புதிய புதிய பெயர்களைக் கற்பனை செய்து சூட்டிக்கொண்டு செயல்படக் கூடாது என்றே கூறி வருகிறோம்.

இன்றைய காலக்கட்டத்தில் முஸ்லிம்களுக்கு விமோசனம் ஏற்பட்டு 24:55, 3:139 இறைவாக்குகள் கூறுவது போல் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்படுவதாக இருந்தால் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று நபி காட்டித் தந்த பெயரில் செயல்படுகிறவர்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் தகுதியானவரைத் தங்களின் அமீராகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

அந்த அமீர் பதவிக்கு சந்திரக் கணக்குப்படி 77 ஆண்டுகளைக் கடந்து கொண்டிருக்கும் நாம் தகுதி பெறமாட்டோம் என்று தெளிவாகச் சொல்லி வருகிறோம். அந்தந்தப் பகுதிகளில் தனித்துச் செயல்படக் கூடாது. இருவர் மூலராக இருந்தாலும் ஜமாஅத் தொழுகை எப்படி வலியுறுத்தப்பட்டிருக்கிறதோ அதேபோல் ஒருவரை அவர்களே அமீராகத் தெரிவு செய்து குர்ஆன், ஹதீஃத் வழிகாட்டல்படிச் செயல்படவேண்டும் என்றே கூறுகிறோம்.

இதுவும் 3:102, 103 இறைக் கட்டளைகள்படியேயாகும். ஜமாஅத்துல் முஸ்லிமீனில் உள்ளவன் என்று கூறிக்கொண்டு செயல்படுவது வழிகேடு என்று நாம் கூறவில்லை. நான் முஸ்லிம், எந்த ஜமாஅத்திலும் இல்லை என்று கூறித் தனித்துச் செயல்படுவது 3:102 இறைக் கட்டளையை நிராகரிக்கும் வழிகேடு, நரகில் சேர்க்கும் என்றே சொல்கிறோம்.

1987லிலிருந்து பொய்யன் பீ.ஜை. கற்பனை செய்து ஜமாஅத்துல் முஸ்லிமீன் அபூ அப்தில்லாஹ்வின் பிரிவு ஜமாஅத் என்று கூறிவரும் தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய்க் கூற்றை அப்படியே உள்ள வாங்கிக் கொண்டு நீங்களும் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்கிற தமிழ்நாடு பிரிவு ஜமாஅத்தின் அமீராகிய அபூஅப்தில்லாஹ்வை தலைமையாக ஏற்பவர்தான் உண்மையான முஸ்லிமா? என்று கேட்டு எழுதி இருக்கிறீர்கள்.

அப்படி கடந்த 33 ஆண்டுகளில் ஒரு முறையாவது எம்மை அமீராக ஏற்றுக் கொண்டவர்களே உண்மையான முஸ்லிம்கள் என்று எழுதியதாக, கூறியதாக ஆதாரம் இருக்கிறதா? அமீர் பதவிக்கு நாம் தகுதியானவன் இல்லை என்று பலமுறை நஜாத்தில் எழுதி இருக்கிறோம். பொய்யன் பீ.ஜையின் வார்ப்பில் உருவானவர்கள்தான் இப்படிப் பிதற்ற முடியும். “எனது உம்மத் 73 பிரிவுகளாகப் பிரியும் அதில் ஒரேயயாரு பிரிவு மட்டுமே சுவர்க்கம் செல்லும். எஞ்சிய பிரிவுகள் அனைத்தும் நரகம் புகும் ” என்ற நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்படி ஜமாஅத்துல் முஸ்லிமீனும் ஒரு பிரிவுதான். ஆயினும் அந்த நேர்வழி பிரிவுக்கும் எஞ்சியுள்ள நரகம் புகும் வழிகெட்ட பிரிவுகளுக்கும் உள்ள வேறுபாடு, அந்தப் பிரிவு 21:92, 23:52 இறைவாக்குகளுக்கு அடிபணிந்து ஒரே சமுதாயமான-உம்மத்தை ஒருபோதும் பிளவுபடுத்தத் துணிய மாட்டார்கள்.

ஒருவன் தன்னை முஸ்லிம் எனக் கூறிக்கொண்டு சபரிமலை, திருப்பதி, வேளாங்கன்னி என அனைத்து சிலை வழிபாடுகள் நடக்கும் இடங்களுக் குச் சென்று வந்தாலும், அவனுக்கு அவன் செய்யும் கொடிய ஷிர்க்-இணை வைப்பை குர்ஆன், ஹதீஃத் கொண்டு எச்சரிப்பது மட்டுமே நம் கடமை; அவன் அதை ஏற்காமல் வீம்பாக அந்த இணை வைப்பைத் தொடர்ந்து செய்தாலும், அவன் காஃபிர், முஷ்ரிக் என இவ்வுலகில் தீர்ப்பளிக்க முற்படமாட்டார்கள்.

இதைத்தான் 3:128, 20:50,51,52, 42:14,21 இறைவாக் குகளும் இன்னும் சில இறைவாக்குகளும் உறுதிப்படுத்துகின்றன. அதிகாரம் பெற்ற அல்லாஹ்வே அந்த அதிகாரத்தை இவ்வுலகில் பயன்படுத்தி உடனுக்குடன் தீர்ப்பளிக்கவில்லை. நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கிறான். இந்த இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடி பணிந்து நேர்வழி நடக்கும் உண்மை முஸ்லிம்கள் ஒருபோதும் முஸ்லிம் என்று சொல்லும் எவருக்கும் முஸ்லிம் இல்லை.

காஃபிர், முஷ்ரிக் என இவ்வுலகில் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்த மாட்டார்கள். எவர் பின்னாலும் தொழக்கூடாது என்று சட்டம் சொல்லமாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் வழிகேட்டில் சென்று நரகை நிரப்பும் 72 பிரிவினரையும் சேர்த்தே எனது உம்மத்-சமுதாயம் எனத் தெளிவாக நேரடியாகக் கூறி இருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களே எனது உம்மத் என்று நேரடியாகக் கூறி இருக்கும் நிலையில் அதை நிராகரித்து இந்த மூட முல்லாக்கள் ஆளாளுக்கு குஃப்ர் ஃபத்வா கொடுப்பது அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுப்பது எத்தனைப் பெரிய வழிகேடு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஜமாஅத்துல் முஸ்லிமீனில் இருக்கும் நேர்வழி நடக்கும் பிரிவு ஒருபோதும் யாருக்கும் அவர்கள் எப்படிப்பட்ட குஃப்ர், ஷிர்க், வழிகேடுகளில் இருந்தாலும் குஃப்ர் ஃபத்வா கொடுக்கமாட்டார்கள்.

அப்படி ஃபத்வா கொடுப்பவர்கள் தங்களை ஜமாஅத்துல் முஸ்லிமீனில் இருப்பவர்கள் என்று சொன்னாலும் அவர்கள் நரகம் புகும் வழிகெட்டப் பிரிவுகளில்தான் இருப்பார்கள். இப்படி நரகம் புகும் 72 பிரிவினரும் ஒருவருக்கொருவர் குஃப்ர், ஷி´ர்க் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்தத்தான் செய்வார்கள். நேர்வழி நடக்கும் உண்மை முஸ்லிம்கள் மட்டுமே தங்களுக்கென்று ஒரு தனிப் பெயரைச் சூட்டிக் கொள்ளாமலும், ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற அல்லாஹ் பெயரிட்டு நபி(ஸல்) நடைமுறைப்படுத்திய பெயரில் மட்டுமே செயல்படுவார்கள்.

விமர்சனம் : சில நேரங்களில், உங்களையும் நபி(ஸல்) அவர்களையும் இணைத்து ஒரே தரத்தில் சேர்த்து சொல்கிறீர்களே அது ஏன்? “நபி(ஸல்) அவர்களை புறக்கணிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களை மனநோயாளி என்றார்கள், அபூ அப்தில்லாஹ்வையும் மனநோயாளி என்கிறார்கள். இன்னும் எத்தனை எத்தனையோ வி­யங்களில் நபி(ஸல்) அவர்கள் பணியும், உங்களின் பணியும் சமமாகவே எழுதி வருகிறீர்கள். இதன் காரணம் என்ன? (மிர்ஸா குலாம் அஹ்மது இப்படித்தான். தன் பிரச்சாரத்தை அடித் தளமாக ஆரம்பித்தார் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு நினைவூட்டுகிறேன்) A. சித்திக் அலீ, சிங்கப்பூர்.

விளக்கம் : 33:21 என்ன கூறுகிறது? அல்லாஹ் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது என்று கூறி தைரியம் தருகிறது. அதேபோல் குர்ஆன், ஹதீஃத் போதனையை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்பவர்களுக்கு பெரும்பான்மை மக்கள் கடும் துன்பம் தருவார்கள். நிந்தனை செய்வார்கள். மனவேதனையைத் தருவார்கள், அப்போது, இறைத்தூதராகிய நான் மக்களிடம் பட்ட பாட்டை நினைவுபடுத்தி ஆறுதல் கொள்ளுங்கள் என்ற கருத்தில் நபி(ஸல்) அவர்களும் வழிகாட்டி இருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில் மூட முல்லாக்கள் அவதூறாக பொய்ச் செய்திகளைப் பரப்பி, நாம் எடுத்து வைக்கும் குர்ஆன், ஹதீஃத் போதனைகளை மக்கள் கேட்கவிடாமல் தொடர்ந்து தடுத்து வருவதால், இறைச் செய்திகளை நேர்வழியை மக்களுக்கு எடுத்து வைத்த நபிமார்களும், உண்மையான முஃமின்களும் இப்படித்தான் பரிகாசிக்கப்பட்டார்கள், அவதூறுகள் பரப்பப்பட்டார்கள், நோவினை செய்யப்பட்டார்கள் என்பதை உணர்ந்து, மக்கள் அவர்கள் கூறும் குர்ஆன், ஹதீஃத் கருத்துக்களைக் கேட்டு உள்வாங்கி, நேர்வழியை அறிந்து அதன்படி நடக்கத் தூண்டும் நோக்கத்துடன் அவ்வாறு எழுதி வருகிறோம்.

மற்றபடி நீங்கள் கூறுவது போல், அந்தத் தவறான வழிகெட்ட எண்ணம் இருந்தால், அந்நஜாத் ஆரம்பித்த 1986லிலிருந்து 5:3, 3:19,85 இறைக்கட்டளைகள்படி மார்க்கம் நிறைவு பெற்று முற்றுப்பெற்றுவிட்டது. இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் பதிந்து பாதுகாக்கப்பட்டுவிட்டது. புதிதாக இறைவனிடமிருந்து வஹி மூலம் செய்திகளை பெற்றுத் தர புதிய நபி வரவேண்டிய அவசியமே இல்லை.

இறுதி நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு (33:40) நபிமார்கள் வரமுடியும் என்று நம்புகிறவன் பெருத்த வழிகேடன், நாளை நரகில் இருப்பான். எவன் தன்னை நபி என வாதிடுகிறானோ அவன் தார்ப்பாயில் வடித்தெடுத்தப் பொய்யன், அண்டப் புளுகன், ஆகாசப் பொய்யன் என்று தொடர்ந்து எழுதி வருவதெல்லாம் உங்கள் பார்வையில் படவில்லையா? “காதியானிகளின் ஆகாசப் புளுகு” என்று ஒரு தனி நூலே வெளியிட்டோமே அதை நீங்கள் பார்க்கவில்லையா? நபி என்று வாதமிடும் வழிகெட்ட எண்ணம் இருந்தால் இப்படி எல்லாம் எழுத முடியுமா? சிந்தியுங்கள்!

அப்படி நபி என்று வாதிட ஆரம்பித்தால் நாளை நரகை நிரப்ப இருக்கும் ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 நபர் என்ற பெருங்கூட்டம் இருக்கிறதே அதில் கணிசமான பெருங் கூட்டம் நம் பின்னால் அணி வகுப்பார்கள். அந்தப் பெருங்கூட்டத்தோடு நாளை நரகம் புக நேரிடும் என்பதையும் நாம் தெளிவாக விளங்கி வைத்திருக்கிறோம். மிர்சா குலாமுடன் ஒப்பிட்டிருக்கிறீர்களே அவரைப் போல் எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு சுய விளக்கம் மேல் விளக்கம் கொடுத்து (பார்க்க : 2:159, 33:36)

மக்களை வழிகேட்டிலாக்குகிறோமா? குர்ஆன், ஹதீஃதை உள்ளது உள்ளபடி மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம். மனிதர்களில் எவரையும் அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக, புரோகிதர்களாக, பூசாரிகளாகப் புகுத்தாமல் குர் ஆனை, ஹதீஃதை நேரடியாகப் படித்து விளங்கி அதன்படி நடக்கக்கூறுகிறோம். இதுவும் 2:186, 7:3, 18:102-106, 59:7 இறைக் கட்டளைகள் படியே! அமீர் பதவிக்கே ஆசைப்படாத நிலையில் நபி என்று வாதிட முற்படுவோமா? சிந்தியுங்கள்!

விமர்சனம் : அண்ணன் பீ.ஜை. அவர்கள், TNTJ ஜமாத்தார்கள் என்ற இமாமையும், பள்ளி வாசலி லும் பின்பற்றி தொழலாம். அதில் ஏதும் குறை யில்லை. காரணம், உம்ரா, ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் மஸ்ஜிதுல் ஹறம் மற்றும் மதீனா பள்ளியில் தொழ வைப்பதை பின்பற்றுகிறோம். ஆகையால் மவ்லீது ஓதுபவரோ, தர்கா அனாச்சாரங்களை ஆதரிப்பவரோ எவராயிருப்பினும் அவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்களே. தக்லீத் செய்யும் தலையாட்டி பொம்மைகளே. அவர்கள் ஓதும் கிராஅத் (குரல் வளம்) நன்றாக இருக்கிறது என்பதற்காக இமாம் பணிக்கு அமர்த்தப்பட்டவர்களேயயாழிய “தர்கா, மவ்லீது அனாச்சாரங்கள் கூடும்” என்று பத்வா கொடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் அல்ல.

ஆகையால், இம்மாதிரி இமாம்களை பின்பற்றி தொழுவது குற்றமில்லை. ஆனால், ஃபத்வா கொடுக்கும் அந்தஸ்தில் உள்ள அறிஞர்கள் என்று மக்களால் அழைக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களைத்தான் அவர்கள் ஷி´ர்க் பித்அத்வாதிகளாய் இருக்கும் பட்சத்தில் பின்பற்றி தொழக்கூடாது என்கிற நவீன ஃபத்வா கொடுக்கும் பீ.ஜை. அண்ணனின் கூற்று அல்குர்ஆன் சுன்னா அடிப்படையில் சரியானதா? A.தஸ்னீம் அலீ, சிங்கப்பூர்.

விளக்கம் : பொய்யன் பீ.ஜை. கடந்த 30 வருடங்களில் எத்தனை அந்தர் பல்டிகள் அடித்து எப்படி எல்லாம் மாறி மாறி ஃபத்வா கொடுத்து வருகிறார் என்பதை அவர் கடந்த 30 ஆண்டுகளாக அந்நஜாத், புரட்சி மின்னல், அல்ஜன்னத், வான்சுடர், அல்முபீன், மக்கள் உரிமை, ஏகத்துவம், உணர்வு, தீன்குல பெண்மணி என அவர் எழுதி வந்த, எழுதி வரும் இதழ்கள் அனைத்தையும் படித்து அறிந்தவர்கள் அவர் மரத்துக்கு மரம் தாவும் குரங்கைவிடக் கேடு கெட்டவர் என்பதை அறிய முடியும்.

உண்மையில் குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுப்பவர்களைப் பின்பற்றி தொழுவது கூடாது என்று இவ்வுலகில் ஃபத்வா கொடுக்கும் அதிகாரத்தை அல்லாஹ் நபிமார்களுக்கும் கொடுக்கவில்லை என்று குர்ஆன் வசனங்கள் கூறவில்லை என்றால், குஃப்ர், ஷிர்க் ஃபத்வாவுக்கு முதல் தகுதி பொய்யன் பீ.ஜைக்கே. 42:14,21, 49:16 இறைவாக்குகள் கூறும் மிகப்பெரிய குஃப்ரில், ஷிர்க்கில் மூழ்கி இருப்பது பொய்யன் பீ.ஜையே. ஆனால் அவருக்கோ மற்றும் மதகுருமார்களுக்கோ குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுத்து, அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுப்பது பெரும் வழிகேடு, நாளை நரகில் சேர்க்கும் என எச்சரிக்கிறோம்.

Previous post:

Next post: