குழந்தைகள் கடத்தல் !

in 2018 ஜூலை

ஜூலை 2018 ­

ஷவ்வால் – துல்கஃதா – 1439

குழந்தைகள் கடத்தல் !

“வாட்ஸ்அப்” போன்ற சமூக வலைதளங்களில் சமீப காலமாக பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் வருத்தம் தரக்கூடிய மிக முக்கிய செய்தி யாதெனில் “குழந்தைகள் கடத்தல்” இந்த வார்த்தையைக் கேட்டவுடனே எல்லா தரப்பு மக்களும் குறிப்பாக பெற்றோர்கள் நெஞ்சம் பதைபதைக்கின்றனர். குழந்தைகளை ஈன்றெடுத்து, ஆசை ஆசையாய் அவர்கள் மீது அன்பு செலுத்தி வளர்த்துக் கொண்டிருக்கும் தமது குழந்தைகள் கடத்தப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. காணாமற்போன குழந்தைகளின் பெற்றோர்கள் படும் துயரத்தை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஊண் உறக்கமின்றி சுய நினைவை இழந்துவிட்டவர்களைப் போல ஆகிவிடும் இவர்களின் துயரை வேறு எதைக் கொண்டும் ஈடு செய்திட முடியாது-காணாமற் போனவர்கள் கிடைத்தாலொழிய! சமூக வலைதளங்களில் காணவில்லை என்ற செய்தியைக் கண்டவுடன் அக்குழந்தை எந்த மதத்தை சார்ந்தது என்றெல்லாம் பார்ப்பதில்லை. குழந்தையின் பெயர் வேறு மதத்தினரின் பெயராக இருந்தாலும், குழந்தை புகைப்படத்தில் நெற்றியில் பொட்டு வைத்திருந்தாலும்,

“யா அல்லாஹ்! பெற்றோர்களிடம் அக் குழந்தையை சேர்த்து விடுவாயாக! என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம். நமக்குத் தெரிந்த அனைவருக்கும் அச்செய்தியை பகிர ஆரம்பித்து விடுகிறோம்.

அத்துடன் நின்று விடுவதில்லை; அக்குழந்தை கிடைத்துவிட்டதா என்ற செய்தி வருகிறதா என்று தினமும் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறோம். குழந்தை கிடைத்து விட்டால், பெரும்பாலும் எந்த பெற்றோரும் தெரிவிப்பதில்லை. ஆனால் காணாமற்போன குழந்தைகளை எண்ணி தங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களை எண்ணி நாம் மட்டும் குழந்தை கிடைத்துவிட்டதா என்று செய்தியைத் தேடிக் கொண்டிருப்போம்.

தமிழ்நாட்டில் தினந்தோறும் ஐந்து குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்று மாநில காப்பகம் வெளியிட்ட ஆதாரப்பூர்வமான தகவல் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கிறது. பல குழந்தைகள் காவல் துறையினராலோ அல்லது சமூக வலைதளங்களை பயன்படுத்தும் நல்ல மனிதர்களாலோ மீட்கப்பட்டு வருகின்றனர் என்ற செய்தி ஆறுதலைத் தந்தாலும் மீட்கப்படாத குழந்தைகளை எண்ணி பிரச்சனையிலிருந்து நிரந்தர அமைதி பெற முடியவில்லை.

“காணவில்லை” என்ற செய்தியுடன், கடத்தப்படும் குழந்தைகள் சமூக விரோதிகளால் பொது இடங்களில் பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றனர் என்ற செய்தியும் சேர்ந்து கொண்டு நம்மை மென்மேலும் கலக்கம் அடையச் செய்கின்றன.

இவைகள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மற்றொரு புறம், இச்செய்தியின் தாக்கம் விபரீத விளைவுகளை நிகழ்த்தி வருவது இன்னும் நம்மை பீதியில் ஆழ்த்துகிறது. குழந்தைத் திருட்டில் வட இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியன செய்தியால் குழந்தைகள் கடத்துபவர் என சந்தேகப்பட்டு, வேலூர் மாவட்டத்தில் வட இந்தியர் ஒருவரை சிலர் அடித்துக் கொன்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பெண்மணி ஒருவரை கும்பல் ஒன்று அடித்துக் கொன்றுள்ளது. சென்னையில் உள்ள பழவேற்காட்டில் பாலம் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு அப்பாவியை அப்பகுதி மக்கள் அடித்துக் கொன்று பிணமாக்கி விட்டனர்.

தாறுமாறாக செய்திகள் மனிதர்களை சிந்திக்கவிடாமல், கொடூரமான வழிகளில் இட்டுச் செல்லும்படி நேர்ந்துவிட்டது. சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இந்த படுகொலைகளுக்கு அரசின் மெத்தனப்போக்கு, காவல்துறையின் பொறுப்பற்ற செயல் என்றெல்லாம் குற்றம் சாட்டிக் கொண்டிராமல், இதை தடுத்து நிறுத்து வதற்கு ஒவ்வொருவரும் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வரவேண்டும். உண்மை இல்லாத செய்திகளை மக்களிடம் பரப்பிவரும் ஊடகங்களுக்கு இதில் முக்கியமான பங்கு இருக்கத்தான் செய்கிறது. ஊடகச் செய்திகளை உண்மை என்றெண்ணி மற்றவர்களுக்கு அப்படியே பகிர்ந்து விடுவது பொறுப்பற்ற தன்மை என்பதை ஊடக பயன்பாட்டாளர்கள் இனியாவது உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

Previous post:

Next post: