எல்லா பிரிவினை இயக்கங்கள், ஜமாஅத்துகளை விட்டும் தப்பி ஓடுங்கள்..

in 2018 செப்டம்பர்

எல்லா பிரிவினை இயக்கங்கள், ஜமாஅத்துகளை விட்டும் தப்பி ஓடுங்கள்..

 MTM. முஜீபுதீன், இலங்கை

ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகையில், அல்ஃபாத்திஹா ஸூராவை ஓதுவது கடமையாகும். அதில் அல்லாஹ் கடைசியாக குறிப்பிடும் மூன்று வசனங்களையும் அறிவதும் அவசியமாகும். அதில் நீ என்னை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல என்று ஓதி முடிக்கிறோம். இதில் ஐந்தாவது, ஆறாவது வசனங் களை கவனியுங்கள். அது “நீ என்னை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி” என காணப்படுகின்றது. இது அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அல்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின்உண்மை ஹதீஃத்களின் வழியும் ஆகும். இவையிரண்டுமே சத்திய வழிகளாகும். இவ்விரண்டிலும் எல்லா நபிமார்களுக்கும் அருளப்பட்ட கலப்படமற்ற நேர் வழிகளும் அடங்கும்.

இந்த வழியே நபித் தோழர்களை உண்மை மூஃமின்களாகவும், முஸ்லிம்களாகவும் வாழ வழிகாட்டியது. அதற்கு முன் இருந்த எல்லா பிரிவினை வழிகளை அல்லது கோணல் வழிகளை விட்டும் பாதுகாத்தது. இங்கு “நேரான வழி என்பதைக் குறிக்க அல்குர்ஆனில் “அஸ்ஸிராத்துல் முஸ்தகீம்” எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. அது “கோணல் இல்லாத நேரான பாதை என்பதை குறிக்கும் இது கோணல் இல்லாத இறைமார்க்கமே,நேரான பாதை என இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் விளக்கியுள் ளார். இது கலப்படங்கள் சேராத நேரான வழி ஆகும். எல்லாகலப்படங்களையும் நபித்தோழர்கள் இனங்கண்டு, அவற்றை இனங்காட்டினர். தவிர்த்து வாழ்ந்தனர்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நேரான வழி (எனும் இஸ்லாமு)க்கு அல்லாஹ் ஓர் உவமை கூறுகிறான். அது ஒரு சாலை போன்றது. அந்தச் சாலையின் இரு மருங்கிலும் இரு சுவர்கள் உள்ளன. அவற்றில் சிறந்த தலைவாயில்களும், தலைவாயில்களில் தொங்கும் திரைகளும் உள்ளன. சாலையின் நுழை வாயிலில் அழைப்பாளி ஒருவர் இருந்து கொண்டு “மக்களே”! அனைவரும் சாலையில் நேராகச் செல்லுங்கள். (இடையிடையே) வளைந்து போய்விடாதீர்கள். சாலைக்கு மேலே ஒருவர் இருந்து கொண்டு, சாலை யின் இரு மருங்கில் உள்ள வாசல்களில் ஒன்றைத் திறந்து பார்க்க யாரேனும் முற்பட்டால் “உனக்குக் கேடுதான். அதைத் திறக்காதே. மீறித் திறந்தால் அதற்கு நுழைய வேண்டியதுதான்” என்றுகூறுவார். இந்த நேரான சாலைதான் இஸ்லாம் இரு புறமும் உள்ள சுவர்கள் அல்லாஹ்வின் சட்ட வரையறைகளாகும். திறந்த வாசல்கள் என்பவை அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டுள்ள விஷயங்களாகும்.

சாலையின் நுழைவாயிலில் என்று அறை கூவல் விடுக்கும் அழைப்பாளி இறை நெறிநூல் ஆகும். சாலைக்கு மேலேயிருந்து எச்சரிக்கை விடுப்பவர். ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் உள்ள அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்ட உபதேசி (மனச்சாட்சி) ஆகும். நூல்: திர்மிதீ, முஸ்னத் அஹ்மத். இந்த நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் இறை அருள் பெற்ற நபிமார்கள், சித்தீக்கீன் (வாய்மையாளர்கள்) ஷிஹதாஃகள் (வீரத்தியாகிகள்) ஸாலிஹீன் (நல்லோர்) என பல படித்தரங்களை சொர்க்கத்தில் வைத்துள்ளான். இவர்கள் பண்புகளை அல்லாஹ்வின் தூதர் கூறியுள்ளார்கள். இதனை நபிக்கு பின் யார் என தங்களாகவே தீர்மானிக்க முடியாது. நபி(ஸல்) அவர்களின் இறப்பின் பின் பல அறிஞர்கள் பல புத்தகங்கள் எழுதியுள்ளனர். அவற்றில் படிப்பினைகள் நிறைய உண்டு.

ஆனால் அவற்றில் அல்குர் ஆனும், நபி(ஸல்) அவர்களின் ஆதாரமான செய்திகளும் உண்டு. அத்துடன் அவற்றில் பலவீனமான ஹதீஃத்களும் உண்டு. முன்னைய நபிமார்களின் வரலாறுகளும் உண்டு. ஆனால் அல்குர்ஆனில் அல்லது நபி(ஸல்) அவர்களின் உண்மை ஹதீஃத்களில் காணப்படாத மறைவான செய்திகளும் உண்டு. அவற்றில் சில முன்னிலை யூத, கிறிஸ்தவ நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவையும் உண்டு. அதுபோல் ஹதீஃத் நூல்கள் என பல உண்டு. அவற்றிலும் பலவீனமான பல செய்திகள் உண்டு. இதனை இஸ்லாமிய அறிஞர்கள் ஆதாரத்துடன் இனங்காட்டியுள்ளனர். அவற்றில் பல அறியப்படாமல் எமது வணக்க வழிபாடுகளில் நுழைந்துள் ளன. ஆகவே நாம் மிகவும் எச்சரிக்கையாக எமது நற்செயல்களை செய்தல் வேண்டும்.

இவை கவனிக்கப்படாதுவிடின் யூத, கிறித்தவர்களின் தன்மைகள் எமது வாழ்விலும் சேர்ந்து விடும். அன்று மூசா(அலை) ஈசா(அலை) ஆகியோர் தம்மை முஸ்லிம் என்ற அவர்களின் மொழியில் கூறினர். மூசா (தன் சமூகத்தாரிடம்) என் சமூகத் தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர் களாக (முஸ்லிம்களாக) இருந்தால் அவ னையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 10:84) “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்டதையும்,இன்னும் இப்ராஹீம் இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூசா, ஈசா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசம் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 3:84)

மேலும் (ஈசாவே!) நான் (உம்முடைய) நெருங்கிய நண்பர்களுக்கு, “என் மீதும் என் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அறிவித்தேன். அப்போது அவர்கள், நாங்கள் நம்பிக்கை கொண்டோம், நாங்கள் (அல்லாஹ்வுக்கு) அடிபணிந்தவர்கள் (முஸ் லிம்கள்) என்பதற்கு நீரே சாட்சியாக இருப்பீராக” என்று (உம்மிடம்) கூறியதை எண்ணிப் பார்ப்பீராக. (அல்குர்ஆன் : 5:110-111) இந்த வசனங்கள் தவ்ராத்தையும், இன் ஜீலையும் பெற்ற மக்களை முஸ்லிம் என்று அழைக்கவே பணிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் யூத, கிறிஸ்தவர் என்னும் பல பிரிவுப் பெயர்களை இட்டனர். தமக்கென புத்தகங்களையும் எழுதி வேறுபட்டனர். பல பிரிவுகளாக பிரிந்தனர். ஒற்றுமை இழந்தனர். அல்ஃபாத்திஹா ஸூராவில் கடைசி வசனத்தை ஒவ்வொரு முஸ்லிமும் எச்சரிக் கையுடன் கவனமாக கவனிப்பது அவசியமாகும். குர்ஆனில் கூறப்பட்ட அவர்கள் யார்? அவர்களின் பண்புகள் என்ன என சிந்திப்பது அவசியமாகும்.

அத்துடன் அவர்கள் பற்றி அல்குர்ஆனும் நபிமொழிகளும் எவ்வாறு எச்சரிக்கின்றன எனப் பார்ப்பது அவசியமாகும். அவர்களிடம் அல்லாஹ்வினால் வழங்கப் பெற்ற தெளராத், ஸபூர், இன்ஜில் இறைநெறி நூல்கள் இருந்தன. முன்னைய நபிமார்களின் போதனைகளும் இருந்தன. அவர்கள் பல பிரிவுகளாக இயக்கங்களாக பிரிந்தனர். அவர்களை பிரித்தவர்கள் யார்? இவர்களின் இறைநெறி நூல்களுக்கு உரிமை பாராட்டிய குருமார்களா? அவர்கள் அல்லாஹ் வழங்கிய இறைநெறி நூல்களை பல பிரிவுகளாக பிரித்தனர். உண்மை நபிமார்களின் வரலாறுகளை கோணலாக்கினார்கள். புதுப் புத்தகங்களை எழுதினார்கள். அவற்றை அல்லாஹ்விடம் இருந்து வழங் கப்பட்ட இறைநெறி நூல்கள் போல் நம்பினார்கள் என அல்குர்ஆன் விளக்குகின்றது. அந்த மதகுருமார்கள் அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலால் ஆக்கினர். அது போல் அல்லாஹ் ஹலால் ஆக்கிய ஒன்றை ஹராம் ஆக்கினர். சிந்தியுங்கள். அதனை யூதர்களின் அறிஞர்கள் அறிந்து இருந்தனர்.

அதுபோல் கிறிஸ்தவர்கள் அறியாமலேயே நம்பினர். குருமார்களை வழிபட்டனர். அல்லாஹ்வின் சட்டங்களை நிராகரித்தனர். தற்போது அவர்கள் வழிப்படுவது அல்லாஹ்வின் இறை நெறி நூல்களையா? அல்லது பின்வந்த அறிஞர்கள் எழுதிய பொய்யும் மெய்யும் கலந்த புத்தகங்களையா? சிந்தியுங்கள். இவ்வாறான பிரிவினை மார்க்கங்களினால் மக்களை நரகில் விழுவதிலிருந்து பாதுகாக்க முடியுமா? இதே வழியை முஸ்லிம்களிலும் பல பிரிவினர் பின்பற்றுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள் அல்லவா? சிந்தியுங்கள்.

இத்தீய வழிகளிலிருந்து தப்புவதற்கு ஒவ்வொரு முஸ்லிம்களும் அல்குர்ஆனையும், உண்மை நபி மொழிகளையும் சிந்தித்து பார்ப்பது அவசியம் அல்லவா? முஸ்லிம்கள் பல இயக்கங்களாகவும், பிரிவுகளாகவும் பிரிந்து, பிரிவுக் கூட்டங்களை (ஜமாஅத்துகளை) உருவாக்குவர் என நபி(ஸல்) எச்சரித்துள்ளனர். அவர்கள் அல்லாஹ் ஏற்படுத்திய முஸ்லிம் என்ற பெயர்களுக்கு மேலதிகமாக, புது இயக்க பெயர்களை சூட்டியுள்ளனர். புது ஜமாஅத்துகளை உருவாக்கியுள்ளனர். ஏன் அவர்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்திய முஸ்லிம் ஜமாஅத் என்று அழைத்துக் கொள்ள முடியாது? அப்படியான முஸ்லிம் ஜமாஅத் இல்லாது விடின் தனித்துவமாக முஸ்லிமாக இருக்க வேண்டாமா? சிந்தியுங்கள். அல்லாஹ் காட்டிய நேர்வழியின் படியும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளின் படியும் வாழவேண்டும் என நினைக்கும் முஸ்லிம்களே! சிந்தியுங்கள். நீங்கள் ஒரு பிரிவு ஜமாஅத்தில் சேர்ந்து விடின், அப்பிரிவுகளை ஆதரிக்காத உண்மை அறிஞர்களை வெறுப்பீர்கள். ஒரு முஸ்லிம் அறிஞர் உண்மை ஹதீஃத்களை ஆதாரமாக காட்டி எச்சரிக்கலாம். அதனை உங்களால் ஏற்க முடியாது போகும்.

யூதர்கள் சத்தியத்தை அறிந்த பின் அதனை நிராகரித்தார்கள். அது போல் உங்கள் இயக்க வழிபாடு உங்களை உண்மையின் பக்கம் அல்லது நேர்வழியில் செல்வதைத் தடுக்கும். உண்மைகளை மறுக்க துணிவுடன் வழிகாட்டும். இதன் காரணமாகவே பிரிவினையை ஊக்குவிக்கும் மெளலவிமார்கள் ஒரு கூட்டத்தை தன் பொய்மை வழியில் வைத்துப் பாதுகாக்க முடியும். நீங்கள் இந்த பிரிவினை இயக்கங்களில் சேர்ந்தால் சத்தியம் என அறிந்த ஒன்றையும் நீங்கள் யூதர்கள் போல் நிராகரித்து விடுவீர்கள். உங்கள் குருமார்களினால் எழுதப்பட்ட அல்லது இனங்காட்டப்பட்ட நன்மையும், தீமையும் கலந்து “தகனுன்” களங்கப்பட்ட புத்தகங்களை அல்குர்ஆனை விட சிறந்ததாக மதிப்பீர்கள். அவர்கள் அல்குர்ஆனை அரபு மொழி யில் ஓதும்படி கூறுவார்கள்.

ஆனால் அரபு மொழியை கற்பிக்க மாட்டார்கள். அல்குர் ஆன் மொழிபெயர்ப்புக்களை பார்க்காதே அவை வழிகெடுக்கும் என்பார்கள். உண்மையும், பொய்மையும் கலந்த புத்தகங்களை பார்க்கும்படி தூண்டுவார்கள். அல்லாஹ்வின் பள்ளிவாயில்களில் அல்குர்ஆன் அஜமிகளிடம் அரபியில் மட்டுமே இருக்கும். ஆனால் நன்மையும், தீமையும் கலந்த மனிதனால் எழுதப்பட்ட புத்தகங்கள் தமது தாய் மொழியில் இருக்கும். அல்குர்ஆனையும், உண்மை ஹதீஃத்களையும் பார்த்து சிந்திக்க மாட்டார்கள். கிறிஸ்தவர்கள் போல் படிக்காததினால் வழி தவறியவர்களின் நிலை மிகவும் தாழ்வாக இருக்கும். மார்க்கத்தினை தூய வடிவில் படிக்காதவர்களை மிகவும் இலகுவாக இயக்கங்கள் கவர்ந்து கொள்ள முடியும். நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டாத புதுமையான வணக்கவழிபாடுகள் மக்களுக்கு அழகாக இருக்கும். இந்த பிரிவினை இயக்கங்கள் முதலில் அல்குர்ஆனைக் காட்டுவார்கள்.

அழகாக கிளிப்பிள்ளை போல் ஓதுவதற்கு கற்றுக் கொடுப்பார்கள். பின் தமது மெளலவிமார்களின் கலப்படம் சேர்ந்த பயான்களை மக்கள் முன் மொழிவார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களின் 23 வருட போதனைகளை உள்ளடக்கிய சத்திய மார்க்கம் மக்களிடையே எடுபடாது. இயக்கவாதிகளின் தொழுகை, நோன்பு, ஜகாத், பிரார்த்தனை போன்ற எல்லாச் செயற்பாடுகளும் களங்கப்பட்டதாக இருக்கும். இதனால் அறிவு மிக்க கிறிஸ்தவர்கள் வழி தவறியது போல், முஸ்லிம்களும் வழி தவறுவதற்கு வழிவகுக்கும். அல்லாஹ் அல்குர்ஆனில் மக்களை முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள் என்று எச்சரித்துள்ளான். நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் (அல்லாஹ்வுக்கு முற் றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த நிய்யமத்களை (அருட்கொடைகளை) நினைத்துப் பாருங்கள்.

நீங்கள்(பிரிந்து) பகைவர்களாக இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள். அதனிலும் அவன் உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்துகளை வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். மேலும் (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும், உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன்: 3:102-104) ஆகவே முஸ்லிம் மக்களே! இந்த பிரிவினை இயக்கங்களிலிருந்தும், பிரிவினை மெளலவிகளிடமிருந்தும் தப்பி ஓடுங்கள், அவ்வாறு செய்யின் முஸ்லிம் சமுதாயத்தில் ஒற்றுமை நிலைக்கும். ஒருவரோடு ஒருவர் இரக்கம் உடையவர்களாக மாறுவீர்கள்.

இதனால் நீங்கள் தொழும் போது ஓதும் “நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி (அது) உன் கோபத்துக்கு ஆளா னோர் வழி அல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல” என கேட்கும் பிரார்த்தனை அல்லாஹ்வின் அருளால் பயன் தரும். அல்லாஹ் எம்மை முஸ்லிமாக அன்றி மரணத்தை அடையாதீர்கள் என பல வசனங்களில் எச்சரிக்கின்றான். பிரிவினை இயக்கங்களில் சேர்வதினால் நீங்கள் கலப்பட வழிகளையே பின் தொடர வேண்டி வரும். ஆகவே யார் அல்குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான ஹதீஃத்களை முன் வைத்து சத்தியத்தை கூறுகிறார்களோ! அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். நபி(ஸல்) காட்டாத தவறான வழிகளை விட்டுவிடுங்கள். அல்லாஹ் என்னையும், உங்களையும் பிரிவினை இயக்கங்களில் இருந்து பாது காப்பானாக. உண்மை முஸ்லிம்களாக இறப்பை சந்திக்க செய்வானாக. இவ்வாறு அன்றி (அல்குர்ஆன் : 10:90) வசனத்தில் கூறுவது போல் ஃபிர்அவ்னை போல் முடிவை ஆக்கி விடாதே! எங்களை பாதுகாப்பாயாக!

Previous post:

Next post: