“லிபாசுத் தக்வா” (இறையச்சம் எனும் ஆடை) – 3

in 2018 செப்டம்பர்

N.  அலி, கல்லிடைக்குறிச்சி

ஆகஸ்ட் மாத தொடர்ச்சி…

சென்ற இதழில் லிபாசுத் தக்வாவின் சிறப்புகளையும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் பார்த்தோம். இந்த இதழில் லிபாசுத் தக்வாவுடன் தொடர்புடைய வி­யத்தைப் பார்ப்போம்.

நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அஞ்சக் கூடியவர்கள் அறிஞர்கள்தாம் (ஆலிம்கள் தான்) 35:28

மேற்கண்ட குர்ஆன் வசனத்தைக் காட்டி ஆலிம்கள்தான் அஞ்சுவார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. மேடைகளிலும் முழங்கப்படுகிறது. இதன் மூலம் லிபாசுத் தக்வா ஆலிம்களுக்குத்தான் சாத்தியம் என்ற தோற்றம் முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது உண்மை என்ன? என்பதை இப்பொழுது பார்ப்போம். சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம், தவ்ஹீத், ஆலிம் JAQH மதனிகள் வழிகெட்ட அனைத்துப் பிரிவு ஆலிம்களும் அவர்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் பிணக்குகள் இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தில் ஆலிம் என்ற அடையாளம், தனிப்பிரிவு உண்டு என்பதில் மட்டும் அனைவரும் ஒருமித்து ஒன்றுபட்டு ஓங்கி குரல் கொடுக்கிறார்கள் முஸ்லிம் சமூகம் ஒன்றுபடுவது சாத்தியமில்லை என்று கூறும் அனைத்துப் பிரிவு ஆலிம்களும் ஆலிம்கள் என்ற வி­யத்தில் மட்டும் ஒன்றுபட்டு முஸ்லிம் சமூகத்தை வஞ்சிக்கிறார்கள்.

முதலில் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களைப் பார்ப்போம். இஸ்லாத்தில் ஆலிம்கள் என்ற தனிப்பிரிவு, மத்ஹப் பிரிவு இல்லை இந்த சமுதாயம் ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் என்று கூறும் குர்ஆன் வசனங்களை (பார்க்க 23:52,53, 21:92, 6:153, 3:105, 42:14, 3:103) ஆதாரமாகக் காட்டி மார்க்க அறிவை அவர்களிடம் கொண்டு போய் சேர்த்தாலும் அந்த அறிவை ஏற்று ஆலிம்கள் அல்லாஹ்வை அஞ்சினார்களா? இல்லையே! இத்தனைக்கும் 23:52,53, வசனங்களில் “ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் நானே உங்கள் இரட்சகன் எனக்கே அஞ்சுங்கள்” என்கிறான் அல்லாஹ் அந்த ஆயத்தை காட்டியும் அஞ்சவில்லையே ஏன்?

ஷிர்க், பித்அத், தக்லீத், புரோகிதம், தர்ஹா போன்ற ஈமானை நாசமாக்கும் குர்ஆன் கண்டிக்கும் விஷயங்களை (பார்க்க : 4:48, 4:116, 3:19, 3:85, 7:3, 18:106, 42:21, 9:31 இன்னும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஹதீஃதுகள்) ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டி அறிவையூட்டினால் ஆலிம்கள் என்ற நிலையில் அதை ஏற்று அல்லாஹ்வை அஞ்சி இந்த சமூகத்தை செம்மைப்படுத்தினார்களா? இல்லையே ஏன்? “ஆலிம்கள்” என்ற நிலையில் மேற்சொன்ன விஷயங்கள் அனைத்தும் அவர்களாகவே முன்வந்து இந்த சமூகத்துக்கு செய்யவேண்டிய பணிகள் அவர்கள் இதை செய்யாத நிலையிலும் அவர்களின் சிந்தனைக்கு இதைக் கொண்டு செல்வோர்களை தூற்றி சுய விளக்கம் கொடுத்து பலஹீனமான ஹதீஃதுகளை கொடுத்து சமுதாயத்தை சுற்றலில் விட்டு சுய லாபம் அடையும் இந்த ஆலிம்கள்தான் அல்லாஹ்வை அஞ்சுகிறார்களா? முஸ்லிம் களே சிந்தியுங்கள்! மார்க்கப் பணிக்கு கூலி, அழைப்பு பணிக்கு கூலி, இமாமத் பணிக்கு கூலி ஹராம் என்று சொல்லும் குர்ஆன் வசனங்களைக் (பார்க்க : 36:21, 34:86, 52:40, 26:109, 127,145, 180) காட்டி உங்களுடைய வருமானம் ஹராமான முறையில் இருக்கிறது என்ற அறிவை “ஆலிம்களிடம்” கொண்டு போய் சேர்த்தாலும் அதை ஏற்று அல்லாஹ்வை அஞ்சினார்களா? இல்லையே ஏன்?

அடுத்து தவ்ஹீத் ஆலிம்கள், JAQH மதனிகள், JAQH ஆலிம்கள் அனைத்துப் பிரிவு ஆலிம்களையும் பார்ப்போம்.

இஸ்லாத்தில் 4:48, 4:116, 31:13 போன்ற வசனங்களை ஏற்று ர்க்கை மிக கடுமையாக எதிர்ப்பார்கள் இஸ்லாத்தின் பெயரால் உள்ள மூட பழக்க, வழக்கங்களையும், அனாச்சாரங்களையும் மிக கடுமையாக எதிர்க்கிறார்கள் இவர்கள் எந்த அளவு கடுமை காட்டுகிறார்களோ, அதே அளவு கடுமை காட்ட வேண்டிய புரோகிதம் (9:31, 18:106, 42:21, 7:3) தக்லீத் (7:3, 18:106) பிரிவுகள், பிளவுகள் 3:103, 3:105, 6:153, 23:52,53, 21:92, 42:14, 3:19, 10:93, 2:213, 98:4) மார்க்கப் பணிக்கு கூலி கூடாது (36:21, 34:86, 33:47, 52:40, 26:109,127, 145:180) பிரிவு பெயர்கள் கூடாது (22:78, 41:33, 12:71, புகாரி (த.மொ) 7804 ஹதீஃத்) பிறை விஷயத்தில் (2:189, 36:39, 10:5, 55:5, 6:96, 97:5) இந்த விஷயங்கள் அவர்களுடைய அறிவுக்கு எட்டிய பின்னரும் அல்லாஹ்வை அஞ்சினார்களா? இல்லையே!

மேற்சொன்ன வி­யங்கள் அனைத்தும் ஆலிம்கள் என்ற நிலையில் அவர்களாகவே முன் வந்து இந்த சமூகத்துக்கு செய்ய வேண்டிய பணிகளாகும். இதை அவர்கள் செய் யாத நிலையிலும் அவர்களின் சிந்தனைக்கு இதை கொண்டு செல்வோர்களை தூற்றி பொய்யான அவதூறுகளை பரப்பி சுய விளக்கம் கொடுத்து சமுதாயத்தை சுற்றலில் விட்டு சுயலாபம் அடையும் இந்த ஆலிம்கள் அல்லாஹ்வை அஞ்சுகிறார்களா? முஸ்லிம்களே சிந்தியுங்கள்!

இதில் ஹைலைட்டான விஷயம் என்ன வென்றால் எண்ணற்ற குர்ஆன் வசனங்களையும், ஏற்றுக் கொள்ளத்தக்க ஹதீஃத்களையும் ஏறிட்டுப் பார்க்காத இவர்கள் அவர்களின் கற்பனையில் உதித்த இயக்கங்களின் பைலாவை கடைப்பிடிப்பதில் கடுமை காட்டுகிறார்கள். அதிலும் குறிப்பாக குர்ஆன், ஹதீஃத் ஆதாரமில்லாத இணை வைக்கும் இமாம் பின்னால் நின்று தொழக் கூடாது, வரதட்சணை திருமணத்தில் கலந்துக் கொள்ளக் கூடாது பெண் வீட்டுவிருந்து ஹராம், மாற்றுக் கருத்துடையவர்களிடம் ஸலாம், கலாம் கூடாது, அதிலும் JAQH மதனிகள் பிறை விஷயத்தில் எண்ணவும் மாட்டோம், எழுதவும் மாட்டோம் என்ற ஹதீஃதை எண்ணவும் கூடாது, எழுதவும் கூடாது என்று கூறுவதன் மூலமாக சமுதாயத்தை அறியாமை இருளில் தள்ளுகிறார்கள். இதுதான் அல்லாஹ்வை அஞ்சும் இலட்சணமா?

மதரஸாக்களில் மார்க்கம் கற்ற ஆலிம்களின் நிலை இப்படியயன்றால் தங்களின் அறிவால் தீவிரமாக ஆராய்ச்சி செய்து அண்டங்களிலும், அணுக்களிலும் ஒளிந்திருக்கும் உண்மைகளை கண்டுபிடித்து உலகுக்கு அறிவிக்கும் அறிவியலாளர்கள் நிலை என்ன? அண்டங்களிலும், அணுக்களிலும் மறைந்திருக்கும் வியத்தகு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு மனிதனுடைய ஆறறிவு தேவைப்படுகிறது பல நூற்றாண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால் அந்த உண்மைகளுக்குப் பின்னால் எந்த அறிவும் ஆற்றலும் இல்லையாம் அவை எல்லாம் வெறுமனே தானே தன்னிச்சையாக இயங்குகிறதாம். என்னே ஒரு அறிவியல்! என்னே ஒரு அறிவியல் முரண்பாடு! இந்த அறிவியல் அறிவு நாத்திகத்துக்கு வழிகாட்டியதேயல்லாமல் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு வழிகாட்டியதா? இல்லையே!

நீண்ட காலமாக பகுத்தறிவு நாத்திகம் பேசிய பெரியார்தாசனுக்கு அவருடைய பகுத்தறிவு அல்லாஹ்வை பற்றி அச்சத்தை ஏற்படுத்தியதா? இல்லையே! மாறாக “மறுமை என்ற ஒன்று இருந்தால்” என்ற ஒரு நொடி அச்சமே அவரை இஸ்லாத்தை ஏற்று அல்லாஹ்வை அஞ்சச் செய்தது. இப்பொழுது நீங்களே முடிவு செய்யுங்கள். ஆலிம்கள்தான் அஞ்சுகிறார்களா? அல்லது அஞ்சுவோரே ஆலிம்களா?

உச்சகட்டமாக அனைத்து பிரிவு ஆலிம்களும், ஒருவருக்கொருவர் வழிகேடர், காஃபிர் குஃப்ர் ஃபத்வா கொடுக்கிறார்கள் இதுதான் “ஆலிம்கள்தான் அஞ்சுவார்கள்” என்பதற்கு அர்த்தமா? 35:28 வசனத்தின் ஆலிம்கள்தான் அஞ்சுவார்கள்” என்ற மொழிப் பெயர்ப்பை அவர்களாலேயே நடைமுறையில் உண்மைப்படுத்த முடியவில்லை.

குர்ஆன், ஹதீஃத் ஒளியில் அஞ்சுவோரே ஆலிம்கள் :

குர்ஆன், ஹதீஃத் ஒளியில் அஞ்சுவோரே ஆலிம்கள் என்பதற்கே அடுக்கடுக்கான அல்குர்ஆன் வசனங்கள் சான்று பகர்கின்றன. முதலில் அல்லாஹ்விடத்தில் கண் ணியமுடையவர் அஞ்சக் கூடியவரே என்று குர்ஆன் சொல்கிறது (பார்க்க 49:13) இதை விளக்கும் விதமாக அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) கூறும் ஏற்கதக்க நபிமொழியான ஒரு செல்வந்தர், ஒரு ஷஹீத், ஒரு ஆலிம் என்று மூன்று பேரை பற்றிய செய்தியாகும்.இதில் ஒருவர் ஆலிமாக இருந்தும் அல்லாஹ்வுக்கு அஞ்சி மனத்தூய்மையுடன் பணி செய்யாத தால் நரகத்துக்கு போவதை தெளிவாக கூறுகிறது. அந்த ஆலிம் அல்லாஹ்விடத்தில் கண்ணியத்தை எதிர்பார்க்காமல் மக்களிடத்தில் கண்ணியத்தை எதிர்பார்த்ததால் இந்த நிலை அல்லாஹ்விடத்தில் கண்ணியம் பெற வேண்டுமாயின் அதற்கான வழியைத்தான் 49:13 கூறுகிறது. ஆம்! ஆலிமாக இருந்தால் மட்டும் போதாது அஞ்சக்கூடியவராக இருக்க வேண்டும்.

இப்பொழுது 35:28 வசனத்திற்கு “ஆலிம்கள்தான் அஞ்சுவார்கள்” என்று மொழிப் பெயர்ப்பவர்கள் யாரிடத்தில் கண்ணியத்தை எதிர்பார்க்கிறார்கள் அல்லாஹ்விடத்திலா? மக்களிடத்திலா? அல்லாஹ்விடத்தில் என்றால் 49:13 கூறுகிறபடி அஞ்சுவோரே ஆலிம்கள் என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடத்தில் என்றால் 35:28 வசனத்திற்கு “ஆலிம்கள் தான் அஞ்சுவார்கள்” என்று எடுத்துக்காட்டுவதன் மூலமாக மக்களிடத்தில் ஆலிம்கள் தக்வாதாரிகள், பயபக்தியாளர்கள் என்ற கண்மூடித்தனமான கண்ணி யத்தை எதிர்பார்ப்பதாகும். இது நபிமொழி கூறும் மக்களிடத்தில் கண்ணியத்தை எதிர்பார்த்த ஆலிமைப் போன்றதாகும். இதில் எதை தேர்வு செய்யப் போகிறீர்கள். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மனிதகுலத்தின் முதல் ஆலிம் நம்முடைய தந்தை ஆதம் நபி (பார்க்க : 2:31) அந்த ஆதம் நபிக்கு அல்லாஹ்வின் நேரடி கட்டளையை கடைப்பிடிக்க முடியவில்லை ஷைத்தானுடைய மயக்கு மொழிகளில் மயங்கி மாறு செய்கிறார்கள். சுவனத்தை விட்டு வெளியேறுகிறார்கள். ஆத் மற்றும் ஸமூத் சமூகத்தார் நல்லறிவுடையவர்கள் (முபஸ்ஸிரீன்கள்) என்றும் அந்த நல்லறிவுக்கு ஷைத்தானுடைய தீய செயல்களே அழகாக தெரிந்தன. நேர்வழி பெறுவதற்கு அந்த நல்லறிவு பலன் அளிக்கவில்லை என்று குர்ஆன் சொல்கிறது (பார்க்க: 29:38).

அல்லாஹ்வுடைய தூதர் தேர்ந்து எடுக்கப்பட்ட குறைஷிக் குலத்தில் ஆலிம்களுக்கு பஞ்சமா என்ன? மக்களால் அபூ ஹிக்கம் என்றழைக்கப்பட்டவரும் இருக்கத்தான் செய்தார். ஆனால் அல்லாஹ் தன்னுடைய தூதராக அவரை தேர்ந்து எடுக்காமல் ஆடு மேய்க்கும் அவாமான-உம்மியான (62:2) முஹம்மது(ஸல்) அவர்களை தேர்ந்து எடுத்தான் அந்த தூதருக்கு அல்லாஹ்வை அஞ்சுவதற்காக வழங்கப்பட்ட அல்குர்ஆன் (பார்க்க : 20:113, 39:28) மக்களால் அபூ ஹிக்கம் என்றழைக்கப்பட்டவருக்கு பலன் அளிக்கவில்லை. மாறாக அல்லாஹ் தன்னுடைய தூதர் மூலமாக அபூஹிக்கமை (அறிவின் தந்தை) அபூ ஜாஹில் (மடமையின் தந்தை) என்று அடையாளம் காட்டினான் அல்லாஹ் இந்த வரலாறு தெரியாதவர்களா? ஆலிம்கள்!

பயபக்தி உடையவருக்கு அல்குர்ஆன் கூறும் சிறப்புகளைப் பாருங்கள் :

1. பயபக்தி உடையவர் அல்லாஹ்விடம் கண்ணியமுடையவர். (பார்க்க : 49:13)

2. பயபக்தி உடையவருக்கு பிரித்தரியும் தன்மை வழங்கப்படும். (பார்க்க: 8:29)

3. பயபக்தி உடையவருக்கு குர்ஆன் நேர்வழி காட்டும். (பார்க்க : 2:2)

4. பயபக்தி உடையவருக்கு எளிதான வழியை ஏற்படுத்துவான் (பார்க்க : 65:2)

5. பயபக்தி உடையவருக்கு சுவனம் தயார். (பார்க்க 3:15, 3:133, 39:73, 34:76, 27:33)

அடுத்து வணக்க வழிபாடுகளில் பிரதானம் தக்வாவே என்பதைப் பாருங்கள்.

1. அஞ்சி நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்வது (பார்க்க 5:93)

2. நம்பிக்கைக் கொண்டு அஞ்சுவது (பார்க்க : 10:63, 41:18)

3. தொழுகையில் அச்ச நிலை (பார்க்க: 23:2, 2:45, 2:21)

4. நோன்பு இறையச்சத்திற்கு (2:183)

5. குர்பானியின் மூலம் தக்வா (22:37)

6. பள்ளிவாசலின் அஸ்திவாரம் தக்வா (9:109, 110)

7. அல்லாஹ்வுடைய தண்டனைக்கு பயந்து ஜகாத் (3:180, 9:34,35)

8. ஹஜ்ஜுக்கு தயார் செய்வதில் சிறந்தது தக்வா. (பார்க்க : 2:197)

இங்கு நாம் விளங்க வேண்டியது வணக்க வழிபாடுகள் ஆலிம், அவாம் வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொதுவா னவை (ஹஜ், ஜகாத் தவிர) அப்படியானால் ஆலிமுக்கு தேவை இறை அச்சமே என்பதை தான் குர்ஆனில் அறிஞர்கள் (உலமா) என்ற பதம் இரண்டு இடங்களில் தான் இடம் பெறுகிறது (பார்க்க : 35:28, 26:197) அதிலும் 26:197ல் “பனூ இஸ்ராயீலின் அறிஞர்கள்” என்று குறிப்பிடுகிறது. பொதுவாக அறிஞர்கள் என்று குறிப்பிடுவது 35:28ல் மட்டுமே. ஆனால் குர்ஆனில் முத்தக்கீன்-அஞ்சக் கூடியவர் என்ற பதம் அதிகமான இடங்களில் இடம் பெறுகிறது. ஒருசில இடங்களில் உலில் அல்பாப் என்ற அறிஞர்களைப் பற்றி பேசுகிறது அதை பார்ப்போம்.

உலில் அல்பாப் யார்?

குர்ஆனில் 3:7 14:52, 2:269, 2:197, 2:179, 39:18 போன்ற இடங்களில் உலில் அல்பாப் அறிஞர்களைப் பற்றி பேசுகிறது. உலில் அல்பாப் என்பதால் அல்லாஹ்வை அஞ்சுவார்கள் என்று சொல்லவில்லை மாறாக “வத்தக் கூனி யா உலில் அல்பாப்” உலில் அல்பாப்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் என்று 2:197ல் சொல்கிறது அடுத்து யா உலில் அல்பாப் கிஷாஸ் சட்டத்தில் வாழ்வு இருக்கிறது இதன் மூலம் அஞ்சக்கூடியவராகலாம் (2:179) இதன்மூலம் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டும் என்பதில் உலில் அல்பாப்களும் தப்பவில்லை. அதே சமயம் இன்றைக்கு ஆலிம்கள் என்று சொல்வோருக்கும் உலில் அல்பாப்புக்கும்-மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது.

ஏனெனில் அல்லாஹ் 39:18ல் உலில் அல்பாப்பின் தன்மைகளை தெளிவாக அடையாளம் காட்டுகிறான். அதாவது உலில் அல்பாப்கள் மார்க்கம் என்ற விஷயத்தில் யார் எழுதினாலும், பேசினாலும் அதை காது கொடுத்து செவியேற்று அதில் குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்ட அழகான விஷயங்களை ஏற்றுக் கொள்வதோடு அதை பின்பற்றவும் செய்வார்கள் என்று கூறுகிறான். இத்தகைய தன்மையை இன்றைக்கு ஆலிம்கள் என்று சொல்வோரிடம் நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒன்றாகும்.

இதற்கு கட்டுரையில் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய வி­யங்களே போதுமான சான்றாகும். சுன்னத்வல் ஜமாஅத் ஆலிம்கள் தவ்ஹீத் ஆலிம்கள் JAQH மதனிகள் வழிகெட்ட அனைத்துப் பிரிவு ஆலிம்களின் இத்தகைய நிலைக்கு காரணத்தை குர்ஆன் தெளிவாக விவரிக்கிறது வாழ்க்கை நெறியாக வழங்கப்பட்ட தீனூல் இஸ்லாத்தை (பார்க்க : 5:3, 3:19, 3:85) தங்களுடைய வயிற்று பிழைப்பாகக் கொண்டதும் அஞ்சுவதற்காக அருளப்பட்ட அல்குர்ஆனை கற்று அல்லாஹ்வுக்கு அஞ்சாமல் “ஆலிம்” என்று நியாயமின்றி பெருமை அடிப்பதாலும் நேர்வழியைக் கண்டாலும் அதை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். வழிகேட்டை கண்டால் அதையே எடுத்துக் கொள்வார்கள் என்று குர்ஆன் சொல்கிறது. (பார்க்க : 7:146)

ஒரு சமூகத்தாருக்கு நேர்வழி அளித்த பின்னர் “அஞ்சிக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ”தெளிவாக எடுத்துரைக்காத வரை அவர்களை வழிகேட்டில் ஆழ்த்துவது அல்லாஹ்வின் நியதி அல்ல. நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் (குர்ஆன் 9:115) இந்த வசனத்தின் மூலம் ஒட்டுமொத்த சமூகமே அல்லாஹ்வை அஞ்சும் விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகிறது. இன்றைய நிலையில் இந்த சமூகம் அலட்சியமாக இருக்கும் அஞ்ச வேண்டிய விஷயத்தைப் பாருங்கள். ஒன்றுபட்ட ஒரே சமுதாயமாக எனக்கே அஞ்சுங்கள் (பார்க்க : 23:52,53) என்கிறான் அல்லாஹ். உம்மத் அஞ்சாமல் அலட்சியமாக இருப்பதால் உருக்குலைந்து நிற்கிறது.

ஒரே நேர்வழியைப் பின்பற்றுங்கள், பிரிவுகளில் சென்று வழி தவறாதீர்கள் இதன் மூலம் இறை அச்சம் பெறுவீர்கள் (பார்க்க 6:153) என்கிறான் ஏகன் அல்லாஹ் உம்மத் அச்சம் பெறாமல் அலட்சியமாக இருப்பதால் பிரிவுகளில் சிக்கி பரிதாப நிலையில் இருக்கிறது. பிறை விஷயத்தில் “நஸீவு கூடாது குஃப்ர்” என்று கூறிவிட்டு அந்த வசனத்தின் இறுதியில் “அறியுங்கள் அச்சமுடையோருடன் அல்லாஹ் இருக்கிறான்” என்று முடிக்கிறான் ஏகன் அல்லாஹ் (பார்க்க : 9:36) இதை அறியாமல் பிறை வி­யத்தில் பிணங்கிக் கொண்டு பிரிந்து நிற்கிறது உம்மத். இந்த உம்மத் ஆலிம்-அவாம் பாகுபாடு இல்லாத, பிரிவுகள் இல்லாத பிறை விஷயத்தில் பிணக்குகள் இல்லாத ஒன்றுபட்ட ஒரே சமுதாயமாக எழுச்சி பெற அல்லாஹ் அருள்புரிவானாக. புகழ் அனைத்தும் ஏகன் அல்லாஹ்வுக்கே.

Previous post:

Next post: