குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? 

in 2018 அக்டோபர்,குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? 

ஆய்வுத் தொடர் – 9

அபூ அப்தில்லாஹ்

செப்டம்பர் தொடர்ச்சி…..

39:23 வசனத்தில் “வர்ராஸிகூனஃபில் இல்மி” என்பவர்களைப் பற்றிய எவ்வித குறிப்பும் இல்லை. “யக்­வன ரப்பஹும்” என்று பொதுவாக தங்கள் ரப்பை அஞ்சுப வர்களைப் பற்றியே சொல்லப்பட்டிருக்கிறது என்பதையாவது அவர்கள் கவனிக்க வேண்டாமா? அவர்களது கூற்றுப்படி கல்வி யில் திறமைமிக்கோர் மட்டுமின்றி, தங்கள் ரப்பை அஞ்சும் அனைவரும் “முத்தஷாபிஹாத்” வசனங்களின் உண்மைப் பொருளை அறிந்து அவர்களின் மேனி சிலிர்க்கிறது என்று பொருள் ஏற்பட்டு, கல்வியில் திறமை மிக்கோர் மட்டுமே அறிகிறார்கள் என்ற அவர்களின் கூற்றுக்கே அவர்கள் முரண்படுவதும் அவர்களுக்குத் தெரியவில்லையா?

ஒரே வசனத்தில் பல பொருள்கள் முரண் பாடில்லாமல் பெறப்படும் நிலைக்கும். முழு குர்ஆனின் சுமார் 6666 வசனங்களும் முரண்பாடில்லாமல் ஒத்திருக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசம் இவர்களுக்குத் தெரியவில்லையா? 3:7 வசனத்தில், ஒரே வசனத்தில் பெறப்படும் பல பொருள்களினால் ஏற்படும் தடுமாற்ற நிலையும், 39:23 வசனத்தில் முழு குர்ஆனிலுள்ள சுமார் 6666 வசனங்களும் முரண்பாடில்லாமல் காட்சியளிப்பதினால் ஏற்படும் ஆச்சரிய நிலையும் ஒன்றாகுமா? “முத்தஷாபிஹாத்” என்ற பதம் இருந்து விட்டால் இவர்கள் இஷ்டப்படி பொருள் கொண்டு விட முடியுமா?

3. தஃவீல் : மூன்றாவதாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய அரபி பதம் “தஃவீல்” ஆகும். இப்பதம் சிறிய உச்சரிப்பு வித்தியாசங்களுடன் 3:7, 4:59, 7:53, 10:39, 12:6,21,36,37,44,45, 100,101, 17:35, 18:78,82 ஆகிய குர்ஆன் வசனங்களில் காணப்படுகிறது. இவற்றில் 10:39, 12:6,21,36,44,45,100,101, 18:78,82 ஆகிய வசனங்களில் தஃவீல் எனும் பதம் விளக்கம் என்ற பொருளிலும், 4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் முடிவு என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளதை அறிகிறோம். இப்போது அவர்கள் சர்ச்சை செய்யும் இடமான 3:7 வசனத்தில் “தஃவீல்” என்ற பதம் என்ன பொருளில் இடம் பெற்றுள்ளது என்பதைத் தீர்க்கமாக நாம் அறியக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அதற்கு முன் குர்ஆனில் காணப்படும் 3:7 வசனத்தைத் தவிர இதர எல்லா வசனங்களிலும் இந்த “தஃவீல்” என்ற பதம் மனிதர்களுடன் இணைத்துச் சொல்லப்படும் நிலையில், இந்த 3:7 வசனத்தில் மட்டும் “வமா யஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹ்” என்று அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லப்படுகிறது என்பதை நம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த இடத்தில் அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லப்படும் “தஃவீல்” என்ற பதத்திற்கு விளக்கம் என்று பொருள் கொள்ளுவது பொருந்துமா? முன் பக்கங்களில் இதனை நாம் தெளிவுபடுத்தி இருக்கிறோம். இங்கு தஃவீல் என்ற அரபி பதத் திற்கு விளக்கம் என்று பொருள் கொடுத்தது மட்டுமல்லாமல்,”முத்தஷாபிஹாத்” தொடர் கட்டுரை முழுவதும் “முத்தஷபிஹாத்” வசனங்களை விளக்குவது என்ற அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. அல்குர்ஆன் 3:7 வசனத்திலுள்ள “தஃவீல்” என்ற பதத்திற்கு விளக்கம் என்பது பொருள் அல்ல.

4:59, 7:53, 17:35 ஆகிய வசனங்களில் உள்ளது போல் (இறுதி) முடிவு என்ற பொருள் மட்டுமே கொள்ள முடியும் என்பது உறுதியாகி விட்டால், அவர்களின் “முத்தஷாபிஹாத்” கட்டுரைத் தொடர் முழுவதுமே அடிப்படையின்றி பொருளற்றதாகிவிடும். விளக்கத்தை அறிவது என்றால் என்ன? தமிழ் அகராதியில் விளக்கங்காணுதல் என்பதற்கு ஆராய்ந்தறிதல் எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. புரியாதிருந்த ஒரு விஷயத்தை சுய ஆய்வுக்குப் பிறகோ அல்லது பிறரது விளக்கத்திற்குப் பிறகோ புரிந்து கொள்ளுவதை “விளங்குதல்” அல்லது “விளக்கத்தை அறிதல்” என்று சொல்லப்படும்.

அறியாதிருந்த ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதைக் கூட விளங்குதல் என்று சொல்லப்படுவதில்லை உதாரணமாக, எக்ஸ் என்பவர் இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். இந்தச் செய்தி தெரியாதிருந்த ஒருவரிடம் இன் னொருவர் வந்து எக்ஸ் இறந்து விட்ட செய்தி உங்களுக்குத் தெரியுமா? என்றோ, அல்லது எக்ஸ் இறந்து விட்ட வி­யத்தை அறிவீர்களா? என்றோதான் கேட்பார். எக்ஸ் இறந்து விட்டதை விளங்கிக் கொண்டீர்களா? என்றோ ஒருபோதும் கேட்க மாட்டார். அதே சமயம் அவருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவரது ஐந்து வயது மகன், இறந்து விடுவது என்றால் என்ன அப்பா? என்று கேட்கிறான்.

இப்போது தந்தை மகனுக்கு இறந்து விடுவது என்றால் என்ன என்பதைத் தனது மகன் புரிந்து கொள்ளுமாறு விளக்கி விட்டு, அதன்பின் மகனைப் பார்த்து விளங்கிக் கொண்டாயா? என்றோ, அல்லது விளக்கத்தை அறிந்து கொண்டாயா? என்றோ கேட்பார். இந்த உதாரணத்திலிருந்து அறி வதற்கும், விளங்குவதற்கும் உள்ள வேறு பாட்டை எளிதாக உணர முடியும். இந்த அடிப்படையில் “தஃவீல்” என்ற பதம் விளங்குதல் என்ற பொருளில் வந் துள்ள வசனங்களைப் பார்ப்போம்.

12ம் அத்தியாயத்தில் எட்டு இடங்களில் இந்த “தஃவீல்” என்ற பதம் வந்துள்ளது. இவை அனைத்தும் யூசுப்(அலை) அவர்களுக்கு இறைவன் கற்றுக் கொடுத்த கனவின் விளக் கத்தைப் பற்றிக் கூறுகின்றன. கனவுகள் சம்பந்தமாக புரியாதிருந்தவைகளை யூசுப் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்த விளக்கத்தினால் மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள். இந்த இடங்களில் தஃவீலுக்கு விளக்கம் என்ற பொருள் மிகச் சரியானதேயாகும். அடுத்து 18ம் அத்தியாயத்தில் இரண்டு இடங்களில் (18:78, 18:82) இந்த “தஃவீல்” என்ற பதம் வருகிறது. அந்த இரண்டு இடங்களிலும் மூஸா(அலை) அவர்களுக்குப் புரியாதவைகளை, அல்லாஹ் அருளிய ஞானத்தைப் பெற்றிருந்த ஒரு அடியார் விளக்கியதற்குப்பின் மூஸா(அலை) அவர்கள் விளங்கிக் கொண்டார்கள். “எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கத்தையும் உமக்கு திட்டமாக அறிவித்து விடுகிறேன்” (18:78) (பார்க்க : 18:65லிருந்து 82 வரை)

இந்த இடங்களிலும் தஃவீலுக்கு விளக்கம் என்ற பொருளே பொருத்தமானது. இந்த இடத்தில் ஒரு வி­யத்தை வாசகர்களு டைய கவனத்தில் கொண்டு வராமல் இருக்க முடியாது. முகல்லிது மவ்லவிகள் “இந்த உம்மத்திலுள்ள ஆலிம்கள் பனீ இஸ்ராயீல்களில் தோன்றிய நபிமார்களைப் போன்றவர்கள்” என்ற கருத்திலுள்ள ஓர் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃதை பற்றிப் பிடித்துக் கொண்டு, அதற்கு ஆதாரமாக மூஸா(அலை) அவர்களுக்கும், இமாம் கஸ்ஸாலிக்கும் இடையில் நடந்ததாக ஒரு சம்பஷணையையும் கற்பனை செய்து எழுதி வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். காதியானிகளும் இந்த இட்டுக் கட்டப்பட்ட ஹதீஃதை தூக்கிப் பிடித்தே, நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபிமார்கள் வர முடியும் என்ற தங்களின் சொத்தை வாதத்தை நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள். முகல்லிது மவ்லவிகள் இந்த உம்மத்தி லுள்ள ஆலிம்கள் பனீ இஸ்ராயீல்களில் தோன்றிய நபிமார்களைப் போன்றவர்கள் என்று தான் வாதித்து வருகிறார்கள்.

ஆனால் 3:7 வசனத்திலுள்ள முத்தஷாபி ஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை இந்த உம்மத்திலுள்ள “வர்ராஸிகூன ஃபில் இல்மி” என்ற கல்வியில் திறமைமிக்கோரும் அறிவார்கள் என்று சொல்லுவதன் மூலம் அந்த நபிமார்களை விட இந்த உம்மத்தி லுள்ள ஆலிம்கள் உயர்ந்தவர்கள் என்று கற்பனை செய்பவர்களின் நிலை பற்றி நமக்கு வேதனையாக இருக்கிறது. அடுத்து 10:39 வசனத்தில் இடம்பெற்றுள்ள “தஃவீல்” என்ற பதத்திற்கும் விளக்கம் என்ற பொருள் பொருத்தமானதேயாகும். எஞ்சியுள்ள 3 வசனங்கள்.

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள், இன்னும் அல்லாஹ்வின் தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள், உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங் கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்” 4:59 “”இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) முடிவையன்றி வேறு எதை எதிர்பார்க்கிறார்கள்?” 7:53 “மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள், (இன்னும்) சரி யான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகும். முடிவில் பலன் தருவதில் அழகானதுமாகும்.

7:35 இந்த மூன்று வசனங்களில் இடம் பெற்றுள்ள “தஃவீல்” என்ற பதத்திற்கு விளக்கம் என்று பொருள்படுத்திப் பாருங்கள். அந்த வசனங்களின் அர்த்தம் தெளிவற்றதாகி விடும். முடிவு என்று பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கிறது. ஆயினும் இந்த வசனங்களில் “தஃவீல்” என்ற பதம் அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லப்பட வில்லை. இந்த நிலையில் 3:7 வசனத்தில் அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லப்பட்டி ருக்கும் “தஃவீல்” என்ற பதத்திற்கு விளக்கம் என்று பொருள் கொடுத்து அல்லாஹ்வையும் விளக்கம் பெறும் மனித நிலைக்குத் தாழ்த்துவது எவ்வளவு பெரிய ஹிமாலயத் தவறு.

அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வழிகேடான செயல் என்பதை உணரவேண்டும். எனவே 3:7 வசனத்தில் அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்லப்பட்டிருக்கும் “தஃவீல்” என்ற பதத்திற்கு விளக்கம் என்ற பொருள் ஒருக்காலும் கொள்ள முடியாது. “முத்தஷாபிஹாத்” வசனங்களில் மனிதர்களிடையே ஏற்படும் பொருள் தடுமாற்றத்தைத் தீர்த்து வைக்கும் அதிகாரம் முடிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கிறது என்ற பொருளில் “முத்தஷாபிஹாத்” வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பொருள் கொள்வதே சரியாகும். அதேபோல் 3:7 வசனத்தில் இடம் பெறும் “வப்தி காஅ தஃவீலிஹ்” என்ற பாகத்திலுள்ள தஃவீல் பதத்திற்கு விளக்கம் என்ற பொருள் கொள்ளாது முடிவு தேடி அதனைப் பின்பற்றுவது என்று பொருள் கொள்வதே மிகப் பொருத்தமாகும். காரணம் “முத்தஷாபிஹாத்” வசனங்களில் விளக்கங்கள் தேடுவது தவறல்ல. ஆனால் அவற்றில் இறுதி முடி வெடுத்து மார்க்கமாக்கிப் பின்பற்ற முற்படுவதே குற்றமாகும். மேலும் “முத்தஷாபிஹாத்” வசனங்களில் தர்க்கம் புரிவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அது பற்றிய ஹதீஃத் வருமாறு.

 நபி(ஸல்) அவர்கள் 3:7 வசனத்தை “உலுல் அல்பாப்” முடிய ஓதினார்கள். பின்னர், “பல பொருளுடைய வசனங்களில் குதர்க்கம் புரிபவர்களை நீங்கள் காணின் இவர் களைப் பற்றித்தான் இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிட்டு இருக்கிறான் என்று அறிந்து, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ளுங்கள்” என்று தனது உம்மத்தை(சமூகத்தை) எச்சரித்தார்கள். (ஆயிஷா(ரழி), புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

அல்குர்ஆனில் “தஃவீல்” என்ற பதம் வரும் இடங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்தபின் 3:7 வசனத்தில் இடம் பெற்றுள்ள “தஃவீல்” என்ற பதத்திற்கு விளக்கம் என்று பொருள் கொள்வது தவறு. இறுதி முடிவு உண்மைப் பொருள் என்று கொள்வதே மிகச் சரியாகும் என்பதும் மிகத் தெளிவாகப் புரிகிறது. மேலும் அதற்கு முயற்சிகள் செய்து ஆய்ந்து பெறும் விளக்கம் என்று பொருள் கொள்வது, அல்லாஹ்வும் முயற்சிகள் செய்து ஆய்ந்து விளங்க வேண்டிய மனித நிலையிலேயே இருக்கிறான் என்ற தப்பான-ஷிர்க்கான-இணைவைக்கும் கொடிய முடிவுக்கு நம்மைக் கொண்டு சேர்த்துவிடும்.

அல்லாஹ் சர்வ வல்லமை மிக்கவன், முக்காலமும் அறிந்தவன், முயற்சிகள் செய்து விளங்கும் நிலையில் அவன் இல்லை. அல்லாஹ் அறிகின்றான் என்று சொல்வதற் கும், மனிதன் அறிகிறான் என்று சொல்வதற்குமே மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தி யாசம் இருக்கிறது. இந்த நிலையில் முயற்சி களுக்குப் பின், ஆய்வுகளுக்குப் பின் விளங் கும் விளக்கத்தை அறிவது என்பதை அல்லாஹ்வுடன் இணைத்துச் சொல்வது மாபெரும் குற்றமாகும். வழிகேடாகும், ஏன்? ஷிர்க்குமாகும். எனவே 3:7 வசனத்தில், “”முத்தஷாபிஹாத் வசனங்களின் விளக்கத்தை அல்லாஹ்வையும், கல்வியில் திறமை மிக்கோரையும் தவிர மற்றவர்கள் அறிய மாட்டார்கள்” என்று பொருள் கொள்வது ஹிமாலயத் தவறு-வழிகேடு-ஷிர்க்கை உண்டாக்கும் தவறு.

அதன் சரியான விளக்கம் வருமாறு :

“முத்தஷாபிஹாத் வசனங்களின் (உண்மைப் பொருளை) முடிவை அல்லாஹ் அல்லாத வேறு யாரும் அறிய மாட்டார்கள்” கல்வியில் திறமை மிக்கோர் “நாங்கள் இவற்றில் நம்பிக்கை கொள்கிறோம். இவை அனைத்தும் எங்கள் ரப்பிடமிருந்து வந்தவைதான்” என்று கூறுவார்கள்.

இதுவே முறையான சரியான பொருளாகும் அடுத்து இந்த 3:7 வசனத்தை ஹதீஃத்களைக் கொண்டு விரிவாக ஆராய்வோம். ஹதீஃத்களின் வெளிச்சத்தில் 3:7 வசனம்: அல்குர்ஆனில் நாம் பார்த்தது போல் அல்ஹதீஃதிலும் “முஹ்க்கமாத்”, “முத்தஷாபிஹாத்” பதங்கள் என்னென்ன பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என ஆராய்வோம்.

முஹ்க்கமாத் : “வஇதர ஹழரல் கிஸ்மத்த உலுல்குர்பா, வல்யத்தாமா வல் மஸாக்கீன்” (4:6) எனும் ஆயத்து குறித்து இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறும்போது, “இது முஹ்கமானது (செயல்படுத்தப்பட வேண்டியது) மன்சூக்(மாற்றப்பட்டது) அல்ல” என்று கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி, தஃப்ஸீர்) இந்த ஹதீஃதிலிருந்து உறுதி செய்யப்பட்ட திட்டமான ஒன்றுக்கு “முஹ்க்கமாத்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

முத்தஷாபிஹாத் : ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது, இவை இரண்டுக்குமிடை யில் (“முஷ்தபிஹாத்”) சந்தேகமானவையும் உள்ளன. இவற்றை மக்களில் அநேகர் அறிந்து கொள்ள மாட்டார்கள். (நுஃமானு பின் பUர், புகாரி, முஸ்லிம்) இந்த ஹதீஃதிலிருந்து தீர்க்கமாகத் தெரியாத, சந்தேகத்திற்கிடமானவற்றைக் குறிக்க “முஷ்தபிஹாத்” எனும் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெளிவாகப் புரிகின்றது. இவை தவிர முத்தஷாபிஹாத் வசனங்கள் பற்றியே குறிப்பிடும் ஹதீஃத் வருமாறு: நபி(ஸல்) அவர்கள் 3:7 வசனத்தை “உலுல் அல்பாப்” முடிய ஓதினார்கள்.

பின்னர் “பல பொருளுடைய வசனங்களில் குதர்க்கம் புரிபவர்களை நீங்கள் காணின், இவர்களைப் பற்றித்தான் இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிட்டு இருக்கிறான் என்று அறிந்து, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாய் இருந்து கொள்ளுங்கள்” என்று தனது உம்மத்தை (சமூகத்தை) எச்சரித்தார்கள். (ஆயிஷா(ரழி), புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி) இந்த ஹதீஃதை ஆழ்ந்து நோக்கும் போது, முத்தஷாபிஹாத் வசனங்களில் தர்க்கம் புரிவது எவ்வளவு விபரீதமானது என்பது தெளிவாகப் புரிகிறது. முஹ்க்கமாத் வசனங்களில் தீர்க்கமான பொருள் இருப்பதால் அவற்றில் யாராவது தர்க்கம் புரிந்தால் அது எளிதாக சாதாரண அறிவு படைத்தவருக்கும் புரிந்து விடும். உதாரணமாக 8×8 = 64 இது தீர்க்கமான ஒரு கணக்கு. கணிதம் தெரியாதவர்கள் 64 என்பதற்குப் பதிலாக 68 என்றோ, 66 என்றோ, 56 என்றோ தவறுதலாகச் சொன்னால் 8×8லும் மாறுபட்டக் கருத்துகள் (முத்தஷாபிஹாத்தான நிலை) இருக்கின்றன என்று சொல்லமாட்டோம். 64 அல்லாத எண்ணிக்கையை யார் சொன்னாலும், கணிதம் தெரியாதவர்கள் தடுமாறினாலும் தெரிந்தவர்கள் அதனை நிராகரித்து விடுவார்கள். தடுமாற்றத்திற்கு வழியே இல்லை.

அதே சமயம் வானவெளியிலுள்ள விண்மீன்களின் துல்லியமான எண்ணிக்கையைத் திட்டவட்டமாக எண்ணிச் சொல்ல முடியுமா? இதில் பலரும் பல எண்ணிக்கைகளைச் சொல்ல வாய்ப்புண்டு. அங்கு 8மு8 = 64 என்பதற்குப் பதிலாக வேறு எண்ணிக்கைகளைச் சொன்னவர்கள் அனைவரும் கணித அறி வில்லாதவர்கள் என்று சொல்வது போல் இங்கு யாருடைய கூற்றையும் நிராகரித்து விடவும் முடியாது. இங்கு ஒருவர் தான் சொன்ன எண்ணிக்கையே சரியானது என்று வாதிடுவாரானால் நிச்சயமாக ஒருவருக்கொருவர் தர்க்கித்துக் கொள்ளவே செய்வர். இந்த தர்க்கத்திற்கு ஒரு முடிவும் செய்ய முடியாது. அப்படியானால் அது வீண் தர்க்கமேயாகும். இப் போது இதே கண்ணோட்டத்தோடு முஹ்க்கமாத் வசனங்களையும், முத்தஷாபிஹாத் வசனங்களையும் பற்றிச் சிந்தியுங்கள். முஹ்க்கமாத் வசனங்கள் 8×8 = 64 என்ற தீர்க்கமான கணக்கைப் போல், தீர்க்கமான பொருளைக் கொண்டவை. அவற்றில் வேறு பொருளைச் சொல்லக் கூடியவர்களை அறியாதவர்கள் என்று ஒதுக்கி விடலாம்.

ஆனால், அதற்கு மாறாக “முத்தஷாபிஹாத்” வசனங்கள் வானவெளியிலுள்ள விண்மீன்களை எண்ணிச் சொல்வது போன்ற தீர்க்கமற்ற நிலையிலுள்ள வசனங்களாகும். இந்த வசனங்களில் பலரும் பலவிதமான விளக்கங்களைச் சொல்லலாம். யாருடைய விளக்கம் தீர்க்கமானது என்று யாராலும் சொல்லமுடியாது. இந்த நிலையில் ஒருவர் தன்னை “வர்ரஸிகூனஃபில் இல்மி” ஆழ்ந்த அறிவுடையவர்களைச் சேர்ந்தவர் என்றும் முத்தஷாபிஹாத் வசனத்திற்கு தீர்க்கமான விளக்கம் தனக்குத் தெரியும் என்றும் சொல்லி ஒரு விளக்கத்தைச் சொல்லுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் சொல்வதுதான் தீர்க்கமானது என்று யார் முடிவு செய்வது?

எந்த அடிப்படையில் செய்வது? இந்த நிலையில் இன்னொருவர் தானும் “வர்ராஸி கூனஃபில் இல்மி”யைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு அதே வசனத்திற்கு இன்னொரு விளக்கத்தைத் தந்தால் இவர்கள் இருவரில் யார் சொல்வது சரி? யார் உண்மையான “வர்ராஸிகூனஃ பில் இல்மி”யைச் சேர்ந்தவர்கள் என்று வாதாடி முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு தீர்க்கமான முடிவைச் சொல்லும் அந்த இருவருமே வழிகேட்டிலேயே இருக்கிறார்கள் என்பது இந்த ஹதீஃதின்படி புரிகிறதல்லவா? அவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி நமக்கு நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள் அல்லவா? இப்போது சொல்லுங்கள் “முத்தஷாபிஹாத்” வசனங்கள் பற்றி அவற்றின் தீர்க்கமான விளக்கத்தை உண்மைப் பொருளை “வர்ராஸிகூனஃபில் இல்மி” -ஆழ்ந்த அறிவுடையோர் என்போம் சொல்லி, முத்தஷாபிஹாத் வசனங்களை முஹ்க்கமாத் வசனங்களாக மாற்றிவிட முடியாது என்பது இந்த ஹதீஃத் விளக்கத் திலிருந்து தெளிவாகிறதா? இல்லையா?

Previous post:

Next post: