ஸஹாபாக்களின் அறிவுரைகளை அலட்சியம் செய்யலாமா?

in 2018 அக்டோபர்

S. முஹம்மது ஸலீம், ஈரோடு

குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்றி நடக்க வேண்டும். இதில்தான் முஸ்லிம் களது மறுமை வெற்றி உள்ளது. ஆகவே ஸஹாபாக்கள் உட்பட எந்த ஒரு தனி மனிதனின் சொந்த கருத்துக்களையும் ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது என்று TNTJஇயக்கத்தினர்கள் ஓங்கி உரத்து கூறி வருகிறார்கள். குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதில் குர்ஆனை முறையாக படிக்கும் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது இதே வேளையில் இந்த சமுதாயத்தில் மிகச் சிறந்த மனிதர்களான ஸஹாபாக்கள் குர்ஆன், ஹதீஃதிற்கு முரணில்லாமல் கூறும் கருத்துக்களையும் TNTJ இயக்கத்தினர்கள் இது ஸஹாபியின் சொந்தக் கருத்து ஆகவே இதை ஏற்க வேண் டிய அவசியமில்லை என்று சர்வசாதாரணமாக கூறிவருகிறார்கள்.

குர்ஆனுக்கும், ஹதீஃதிற்கும் முரண்படாமல் ஸஹாபாக்கள் சொந்தக் கருத்தைக் கூறினால் இதை நிராகரிக்கும் இவர்கள் தங்களது தலைவர்களது சுயக்கருத்துக்களை எந்தவிதமான சுய சிந்தனையும் இல்லாமல் அதை அப்படியே பின்பற்றுவதை பெரும் பாக்கியமாக கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஸஹாபாக்களுக்கு ஒரு நீதி தங்க ளது இயக்கத் தலைவர்களுக்கு ஒரு நீதி என்ற அடிப்படையில் செயல்படும் இவர்களது நடவடிக்கை நபிவழிக்கு எந்தளவு உடன்பட்டது என்பதை பார்த்துவிட்டு, ஸஹாபாக்களின் மிகச் சிறந்த அறிவுரைகளில் ஒரு சிலவற்றையும் பார்ப்போம்.

நபியவர்கள் அனுமதி :

அப்துல்லாஹ் பின் மஸ்ஊது(ரழி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “யார் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவராக இறந்து விடுகிறாரோ அவர் நிச்சயமாக நரகம் செல்வார்” என்று கூறியதை நான் கேட்டேன். நான் (அதே கருத்தை) “யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்” என்று கூறினேன். நூற்கள் : புகாரி 6683, முஸ்லிம் 150

நபி(ஸல்) அவர்கள் ஒரு கருத்தை ஒரு வாக்கியத்தில் சொல்ல அதே கருத்தை வேறொரு வாக்கியத்தில் இப்னு மஸ்ஊது(ரழி) அவர்கள் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் இப்னு மஸ்ஊது(ரழி) அவர்களை கண்டிக்கவோ, எதிர்க்கவோ, ஆட்சேபனை எதுவும் செய்யவோ இல்லை. மாறாக அங்கீகரிக்கவே செய்தார்கள். குர்ஆன், ஹதீஃதிற்கு முரணில்லாமல் ஸஹாபாக்கள் சொந்தக் கருத்தை கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்பதற்கு மேற்கண்ட ஹதீஃத் தெளிவான ஆதாரமாக உள்ளது. நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்த ஒரு விஷயத்தை அதை தடை செய்யும் விதமாக பிரச்சாரம் செய்யும் TNTJ இயக்கத்தினர்கள் நபிமொழிகளை முறைப்படி புரிந்து கொள்ளாமல் தங்களது தலைவர்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மட்டுமே புரிந்து கொண்டு தானும் வழிகெட்டு மற்ற மக்களையும் வழிகெடுக்கும் பணியையே செய்து வருகிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

நண்பர்களிடத்தில் பழகும் விதம் :

உபைதுல் கின்தீ(ரஹ்) கூறினார்கள் :

அலீ(ரழி) அவர்கள் (கவாரிஜ்களில் ஒருவரான) இப்னுல் கவ்வாஃ அவர்களிடம் “உம் நண்பனை அளவோடு நேசிப்பீராக! என்றாவது ஒருநாள் உம்மை கோபமூட்டுபவனாக அவன் ஆகிவிடக்கூடும். உமது எதிரியை அளவோடு வெறுப்பீராக! என்றாவது ஒருநாள் உமது நேசனாக அவன் ஆகக்கூடும்” என்று கூறினார்கள். நூல்: அல் அதபுல் முஃப்ரத் 1321

அஸ்லம்(ரஹ்) கூறுகிறார்கள் :

உமர் இப்னு கத்தாப்(ரழி) அவர்கள் “உமது நேசம் அதை கடந்ததாகவும் உமது கோபம் நாசத்திற்கு காரணமாகவும் இருக்க வேண்டாம்” என்று கூறினார்கள். அப்போது நான் அது எப்படி? என்று கேட்டேன். “நீர் நேசித்தால் குழந்தையை நேசிப்பதை போன்று அளவு கடந்து நேசிக்கிறாய். நீர் கோபப்பட்டால் உம் தோழனுக்கு நாசம் ஏற்படுவதை விரும்புகிறாய்” என்று உமர்(ரழி) கூறினார்கள். நூல்: அல்அதபுல் முஃப்ரத் 1322

மிகச் சிறந்த நபித்தோழர்களான உமர் (ரழி), அலீ(ரழி) ஆகியோரது இந்த அறிவுரை யாருக்கு தேவைப்படுகிறதோ இல் லையோ குர்ஆன், ஹதீஃத் மட்டும்தான் மார்க்கம் என்று சொல்பவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஏனென்றால் குர்ஆன், ஹதீஃத் மட்டும்தான் மார்க்கம் என்று சொல்பவர்கள் ஒன்றாக சேர்ந்திருக்கும்போது ஒருவரையயாருவர் அளவு கடந்து நேசித்துக் கொண்டும், இவரைப் போல் அறிஞர் யாரும் உண்டா என்று ஒருவரை ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து கொண்டும், நட்பை வளர்த்து வருகிறார்கள் பிறகு ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணக்குகள் ஏற்படும்போது சண்டையிட்டுக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக் கொண்டு சாபமிடும் அளவிற்கு சென்று விடுகின்றனர் இந்த மோசமான நிலை ஏற்படாமலிருக்க மேற்கண்ட அறிவுரைகளின்படி நமது நட்பை நடுநிலையோடு அமைத்துக் கொண்டால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கலாம். மேலும் ஸஹாபாக்கள் கூறிய இந்த அறிவுரை கூட நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு நபிமொழியை ஒட்டியே அமைந்துள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதோ அந்த நபிமொழி.

“உன் நண்பனையும் ஓர் அளவோடு நேசி! ஒரு நாள் அவனும் உன் பகைவனாகலாம். உன் பகைவனையும் ஓர் அளவோடு பகை! அவனும் ஒருநாள் உன் நண்பனாகலாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) நூல் : திர்மிதி 1920

நேரான பாதையுடன் கூடிய நல்லறமே சிறந்தது :

இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள் :

நிச்சயமாக நீங்கள் மார்க்கச் சட்ட நிபுணர்கள் அதிகமாகவும் உரை நிகழ்த்துபவர்கள் குறைவாகவும், யாசகம் கேட்பவர்கள் குறைவாகவும் கொடுப்பவர்கள் அதிகமாக வும் உள்ள காலத்தில் இருக்கிறீர்கள். அதில் நல்லறம் செய்வது மனோ இச்சையை வழிநடத்தும். உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும் அக்காலத்தில் சட்ட நிபுணர்கள் குறைவாகவும், உரை நிகழ்த்துபவர்கள் அதிகமாகவும், கேட்பவர்கள் அதிகமாகவும் கொடுப்பவர்கள் குறைவாகவும் இருப்பார்கள். அதில் மனோ இச்சை நல்லறம் செய்வதை வழிநடத்தும் அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக கடைசிக் காலத்தில் அழகிய நேரிய பாதை சில நல்லறங்களை விடச் சிறந்தது. நூல் : அல்அதபுல் முஃப்ரத் 789

இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களின் பண்புகளை கூறியதோடு பிற்காலத்தில் வாழும் மக்களின் பண்புகள் எப்படி இருக்கும் என்பதை மிகத் துல்லியமாக கூறியுள்ளார்கள். இன்று பெரும்பாலோர் தனது கருத்தை நியாயப்படுத்துவதற்காக எடுத்து வைக்கும் வாதங்களில் “எனக்கு இந்த கருத்து சரியென்று படுகிறது. ஆகையால் இதை பின்பற்றுகிறேன்” என்று கூறி தனது மனோ இச்சையின் அடிப்படையில் வழிபாடுகளை அமைத்துக் கொள்வதை சர்வசாதாரணமாக நாம் பார்த்து வருகிறோம். முஸ்லிம்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் நல்லறங்களை செய்யத்தான் செய்கிறார்கள்.

இதைவிட நேரான பாதையுடன் கூடிய நல்லறமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர வேண்டும். மேலும் நபி(ஸல்) அவர்களது காலத்திலும் சொர்க்கத்திற்கு நன்மாராயம் சொல்லப்பட்ட நான்கு கலீஃபாக்களின் காலத்திலும் பேச்சாளர்கள் மிக குறைவாகவே இருந்துள்ளார்கள். ஆனால் இன்று ஆலிம் என்று சொல்லிக் கொண்டும், அண்ணன் என்று சொல்லிக் கொண்டும், தாயீ என்று சொல்லிக் கொண்டும், ஒவ்வொரு இயக்கத்திலும் பல நூறு பேச்சாளர்கள் உருவாகி உள்ளதை அந்தந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் பட்டியலிட்டு மகிழ்ந்து வருகிறார்கள். இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் கூற்று நமது காலத்தில் உண்மையாகி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

தூங்குபவருக்கும் மன்னிப்பு :

உம்முத்தர்தா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

(என் கணவர்) அபுத்தர்தா(ரழி) அவர்கள் இரவில் தொழும்போது அழ ஆரம்பித்தவர்களாக “இறைவா என்னுடைய தோற்றத்தை நீ அழகாக்கி விட்டாய். ஆகவே என்னுடைய குணத்தையும் அழகாக்குவாயாக” என்று காலை நேரம் வரும் வரை கூறிக் கொண்டே இருந்தார்கள். அப்போது நான் “அபுத்தர்தாவே இரவு முழுக்க குறுகிய நற் குணம் பற்றியே நீங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தீர்களே?” என்று கேட்டேன். அப்போது அபுத்தர்தா(ரழி) அவர் கள் “உம்முத்தர்தாவே ஒரு முஸ்லிமான அடியானின் நற்குணம் அழகியதாக இருப்பின் அவனுடைய அழகிய நற்குணத்தால் சுவர்க்கத்தில் அவனை அது புகுத்திவிடும். அவனின் குணம் தீயதாக இருப்பின் அவனு டைய தீய குணம் அவனை நரகில் புகுத்தி விடும். ஒரு முஸ்லிமான அடியான் தூங்கிக் கொண்டிருக்கும் போதும் அவனுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்படும்” என்று கூறி னார்கள். “அபுத்தர்தாவே ஒருவன் தூங்கிக் கொண்டிருக்க அவனுக்கு எவ்வாறு பாவ மன்னிப்பு வழங்கப்படும்” என்று நான் கேட்டேன். “அவனுடைய சகோதரன் இரவில் நின்று வணங்கி தஹஜ்ஜத் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறான் அல்லாஹ் அவனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கிறான்.

மேலும் தூங்கிக் கொண்டிருக்கும் தன் சகோதரனுக்காகவும் பிரார்த்தனை செய்கிறான். அவன் விஷயத்திலேயும் அவனது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்கிறான். என்று அபுத்தர்தா(ரழி) கூறினார்கள். நூல்: அல்அதபுல் முஃப்ரத் 290

தஹஜ்ஜத் தொழக்கூடிய பழக்கம் உடையவர்கள் தனக்காக மட்டும் பாவமன்னிப்பு கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கும் தனது பெற் றோர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் சகோதர சகோதரிகளுக்காகவும் பாவமன்னிப்பு கேட்கவே செய்வார்கள். இந்த பாவமன்னிப்பு கேட்டவருக்கும், யாருக்காக பாவமன்னிப்பு கேட்கப்பட்டதோ அவருக்கும் நிச்சயம் பயன் தரவே செய்யும். இந்த கருத்தைத்தான் அபுத்தர்தா(ரழி) அவர்கள் மிக அழகான முறையில் பதிவு செய்துள் ளார்கள்.

தன்னை மறந்துவிடுவது :

அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள் :

உங்களுள் ஒருவர் தம் சகோதரனின் கண்ணில் உள்ள சிறு துரும்பை பார்க்கிறார் (ஆனால்) தன் கண்ணில் உள்ள பெரும் கட்டையை மறந்துவிடுகிறார். (அடுத்தவர் களின் சிறிய குறையைக் கூட பெரிதாகப் பார்க்கிறார்கள் ஆனால் தன்னிடம் உள்ள பெரும் குறைகளை கண்டு கொள்வதில்லை) நூல் : அல்அதபுல் முஃப்ரத் 592

அம்ரு இப்னு ஆஸ்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள் :

ஒரு மனிதனைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன் விதி அவனுக்கு நிகழ்ந்தே தீரும் என்றிருக்க விதியை விட்டு அவன் வெருண்டோடுகிறான். மேலும் மனிதன் தன் சகோதரனின் கண்ணில் உள்ள துரும்பை காணுகிறான். தன் கண்ணில் உள்ள மரக்கட்டையை விட்டுவிடுகிறான். நூல்: அல் அதபுல் முஃப்ரத் 886

தன்னிடம் இருக்கும் பெரும் பெரும் குறைகளையயல்லாம் கண்டு கொள்ளாமல் மற்றவர்களது சிறிய சிறிய குறைகளையெல்லாம் பெரிதுபடுத்தி அதை கடுமையாக விமர்சிக்கும் பழக்கம் முஸ்லிம்களிடையே அதிகரித்து வருவதை காணமுடிகிறது. சீர்த்திருத்தத்தை தன்னிடமிருந்து, தன்னுடைய குடும்பத்தாரிலிருந்து ஆரம்பிக்காமல் தன்னை மறந்துவிட்டு அடுத்தவர்களை நோக்கி மட்டுமே விமர்சனங்களை அள்ளி விடுவது மிக மோசமான நடைமுறையாகும். இந்த நடைமுறையை கண்டித்தே அபூ ஹுரைரா(ரழி) அவர்களும் அம்ரு இப்னு ஆஸ்(ரழி) அவர்களும் எளிதான உதாரணத்தைக் கொண்டு விளக்கியுள்ளார்கள்.

பேச்சாளர்களுக்கு அறிவுரை :

ஹாரிஸ் பின் முஆவியா அல்கிந்தீ(ரஹ்) அவர்கள் கூறியதாவது :

நான் உமர் பின் அல்கத்தாப்(ரழி) அவர்களிடம் மூன்று விஷயங்கள் குறித்து கேட்பதற்காக மதீனாவிற்குப் புறப்பட்டேன். மதீனாவுக்கு வந்ததும் என்னிடம் உமர்(ரழி) அவர்கள் உமது வருகைக்கு காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நான் தங்களிடம் மூன்று விஷயங்களைப் பற்றி கேட்பதற்காக (வந்தேன்) என்று கூறினேன். அதற்கவர்கள் அவை யாவை? என்று கேட்டார்கள்…

மக்களுக்கு உரை நிகழ்த்துவதைக் குறித்து “மக்கள் உரை நிகழ்த்தும்படி என்னிடம் விரும்பிக் கேட்கின்றனர் (நிகழ்த்தலாமா) என்று கேட்டேன். அதற்கு உமர் (ரழி) அவர்கள் “உமது விருப்பம்” என்று பதில் சொன்னார்கள். அவர்களின் பதில் (என்னை வெளிப்படையாக) தடுக்க விரும்பாதது போன்று இருந்தது. நான் “தங்களின் சொல்லை முடிவாக எடுத்துக் கொள்ளவே விரும்பினேன்” என்றேன். அதற்கு உமர் (ரழி) அவர்கள் நீர் (மக்களிடையே) உரை நிகழ்த்தப் போய் உமது உள்ளத்தில் அந்த மக்களை விட உம்மை உயர்வாக கருதி (பெருமை) கொள்ளும் நிலை ஏற்படும் தொடர்ந்து அவர்களுக்கு நீர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தால் உம்மைக் குறித்து இன்னும் கூடுதலாக நீர் உயர்வாக கருதி விடுவீர். இறுதியில் அவர்களை விட நீர் “ஸுரய்யா” (எனும்) நட்சத்திர கூட்டத்தின் அளவிற்கு உயர்ந்தவர் என்ற எண்ணம் ஏற் பட்டுவிடும். இதனால் அல்லாஹ் உம்மை அந்த பெருமையின் அளவுக்கேற்ப மறுமை நாளில் அவர்களின் கால்களுக்கு கீழே (மிகத் தாழ்ந்த நிலைக்குத்) தள்ளி விடுவான் என்று கூறினார்கள். நூல் : அஹ்மத் 106

மார்க்க விஷயங்களில் தங்களை விட அறிந்தவர் என்று ஒருவரை நினைத்து மக்கள் அவரை சொற்பொழிவு நிகழ்த்த அழைத்து அதன் பிறகு சொற்பொழிவை கேட்ட பிறகு ரொம்ப அருமையான பேச்சு இப்படியயாரு பயானை என் வாழ்நாளில் நான் கேட்டதே கிடையாது. எல்லாருக்கும் புரியும்படி மிகத் திறமையாக பேசினீர்கள் என்று பேச்சாளரை பாராட்டி மக்கள் கூறும்போது நிச்சயமாக பேச்சாளருக்கு பெருமை ஏற்படவே செய்யும். மற்ற மக்களுக்கு ஒன்றும் தெரியாது நான்தான் கற்றுத் தரவேண்டும் என்ற நிலைக்கு தன்னைத் தானே உயர்வாக கருதிக் கொண்டு சொற் பொழிவு நிகழ்த்துவதற்காக மட்டுமே படிக்கும் நிலை ஏற்படும்.

இதனால் தன்னையும், தனது குடும்பத்தினர்களையும் மறந்து விட்டு ஊருக்கு உபதேசம் செய்யும் நிலையும் ஏற்படும். இந்த மோசமான நிலைக்கு பேச்சாளர்களை அழைத்து செல்வதற்கு பெருமையே காரணமாகும். இதனால்தான் உரை நிகழ்த்துவதை குறித்து எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்ளுமாறு பேச்சாளர்களுக்கு உமர்(ரழி) அவர்கள் உபதேசித்துள்ளார்கள். நாம் அலட்சியம் செய்ய முடியாத இன்னும் இதுபோன்ற ஏராளமான அறிவுரைகளை ஸஹாபாக்கள் கூறியுள்ளார்கள். இந்த அறிவுரைகள் மூலமாக தேவையான படிப்பினை பெற்று அல்லாஹ்விடம் நற்பலனை அடையக்கூடிய மக்களாக நாம் ஆகவேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

குறிப்பு : ஸஹாபாக்களை பின்பற்றலாம் என்பதற்காகவோ, குர்ஆன், ஹதீஃதிற்கு முரணாக ஸஹாபாக்கள் கூறினாலும் அதை எடுத்து பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியோ இந்த கட்டுரை எழுதபடவில்லை. மாறாக யார் யாரோ கூறும் சொந்தக் கருத்துக்களை எந்தவிதமான எதிர் கேள்வியும் கேட்காமல் அதை அப்படியே நம்பி பின்பற்றும் முஸ்லிம் சமுதாயம், ஸஹாபாக்களின் மிகச் சிறந்த அறிவுரைகளை எடுத்துக்காட்டும்போது இது ஸஹாபியின் சொந்தக் கருத்து என்று கூறி அதை மட்டப்படுத்தி அலட்சியம் செய்வதை கண்டித்தே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. குர்ஆன், ஹதீஃதை மட்டுமே ஒவ்வொரு முஸ்லிமும் பின்பற்ற வேண்டும் என்பதை மீண்டும் நாம் இங்கு அழுத்தமாக பதிவு செய்து கொள்கிறோம்.

Previous post:

Next post: