நபி(ஸல்)அவர்கள் எந்த தேதியில் பிறந்தார்கள்?

in 2018 நவம்பர்

  1. முஹம்மது ஸலீம், ஈரோடு

நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் பனிரெண்டாம் தேதியில் பிறந்தார்கள். ஆகையால் இந்த மாதத்தில் பனிரெண்டு நாட்கள் பள்ளிவாசல்களில் மெளலிது ஓத வேண்டும் இந்த மாதத்தில் அதிகமதிகம் மீலாது விழாக்கள் நடத்தப்படவேண்டும். இதன் மூலமாக நபியின் புகழை நாடெங்கும் பரப்ப வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள மவ்லவிகள் கூறி வருகிறார்கள். உண்மையில் நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பனிரெண்டாம் தேதியில் தான் பிறந்தார்களா? இது குறித்து அனைவரும் ஒரு மித்த கருத்தில்தான் உள்ளார்களா? அல்லது மாறுபட்ட கருத்துகள் ஏதேனும் உள்ளதா என்பதை குறித்து சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த அனைத்து தரப்பு அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட வரலாற்று நூலான “அல்பிதாயா வந்நிஹாயாவில்” எழுதப்பட்டிருப்பதை அப்படியே தருகிறோம்.

நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம் மற்றும் தேதி :

மிகப் பெரும்பாலானவர்களின் கருத்துப்படி நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம் “ரபீஉல் அவ்வல்” மாதமாகும். அம்மாதத்தில் எந்தத் தேதி என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ரபீஉல் அவ்வல் மாதத்தின் இரண்டாம் தேதி என்பது ஒரு கூற்று இதனை இப்னு அப்தில் பர்(ரஹ்) அவர்கள் தனது “அல்இஸ்தீஆப்” எனும் நூலில் கூறி யுள்ளார்கள். இதே கூற்றை “அல்வாகிதீ” (ரஹ்) அவர்களும் பதிவு செய்துள்ளார்கள்.”

ரபீஉல் அவ்வல் மாதத்தின் எட்டாம் தேதி” என்பது இன்னொரு கூற்று. இதனை இப்னு ஹஸ்ம்(ரஹ்) வாயிலாக “அல்ஹுமைதி(ரஹ்) அவர்கள் எடுத்தெழுதியுள்ளார்கள். இதனையே முஹம்மத் பின் ஜுபைர் பின் முத்இம்(ரஹ்) அவர்கள் கூறுவதாக இமாம் மாலிக் உகைல், யூனுஸ் பின் யஸீத்(ரஹ்) உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். வரலாற்றறிஞர்கள் இதனையே சரி கண்டுள்ளதாக இப்னு அப்தில் பர்(ரஹ்) அவர்கள் எடுத்தெழுதியுள்ளார்கள் பெரும் ஹதீஃத் துறை அறிஞர் முஹம்மத் பின் மூசா அல்குவார்ஸிமி(ரஹ்) இக்கூற்றை உறுதிபடக் கூறியுள்ளார்கள். ஹாஃபிள் இப்னு திஹ்யா(ரஹ்) அவர்கள் தனது “அத்தன்வீர் ஃபீ மவ்லிதில் பUரின் னதீர்” எனும் நூலில் இக்கூற்றை வலுவானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் பத்தாம் தேதி பிறந்தார்கள் என்பது இன்னொரு கூற்றாகும். இதனை இப்னு திஹ்யா (ரஹ்) அவர்கள் தமது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள். இப்னு அசாகிர்(ரஹ்) அவர்களும் முஜாலித்(ரஹ்) அவர்களும் இதனைப் பதிவு செய்துள்ளார்கள். ரபீஉல் அவ்வல் பனிரெண்டாம் தேதி என்பது இன்னொரு கூற்று இதனை இப்னு இஸ்ஹாக்(ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இப்னு அபீனஸபா(ரஹ்) அவர்கள் தமது முஸன்னஃப் நூலில் ஜாபிர்(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஆகியோர் கூறியதாக பதிவு செய்திருப்பதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யானையாண்டில் ரபீஉல் அவ்வல் மாதத்தின் பனிரெண்டாம் நாள் திங்கட்கிழமை அன்று பிறந்தார்கள். திங்கட்கிழமையில்தான் நபித்துவம் கொடுக்கப்பட்டது. அந்தக் கிழமையில் தான் விண்ணுலகிற்கு (மிஃராஜ் பயணம்) அழைத்துச் செல்லப்பட்டார்கள் அவர்கள் ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டதும், மரணித்ததும் அந்தக் கிழமையில்தான்.

இந்தக் கூற்றுதான் மிகப் பெரும்பாலானவர்களிடம் பிரபலமானதாகும். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் பதினேழாம் நாள் பிறந்தார்கள் என்பது இன்னொரு கூற்று இதனை ´யாக்களில் சிலர் கூறுவதாக ´யா ஒருவரால் எழுதப்பட்ட “இஃலாமுல் வரா பி அஃலாமில் ஹுதா” எனும் நூலில் இந்த கருத்து இடம் பெற்றிருப்பதாக இப்னு திஹ்யா(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ரபீஉல் அவ்வல் இருபத்து இரண்டாம் நாள் என்பதும் ஒரு கூற்றாகும். இதனை இப்னு ஹஸ்ம் அவர்கள் கூறுவதாக அவர்களின் மகன் “அல்வஸீர் இபூராஃபிஉ” அவர்கள் கூறுவதாக அவர்களின் மகன் “அல்வஸீர் அபூராஃபிஉ” அவர்கள் எழுதியிருப்பதை இப்னு திஹ்யா(ரஹ்) அவர்கள் எடுத்தெழுதியுள்ளார்கள். ஆனால் ரபீஉல் அவ்வல் எட்டாம் தேதி என்று இப்னு ஹஸ்ம் கூறுகிறார்கள் என்பதே சரியாகும் அவர்கள் வாயிலாக ஹுமைதீ அவர்கள் இவ்வாறே எழுதியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம் குறித்து இன்னொரு கூற்று “அவர்கள் ரமழான் மாதத்தில் பிறந்தார்கள்” என்பதாகும். ஸுபைர் பின் பக்கார் இவ்வாறு கூறுவதாக இப்னு அப்தில் பர்(ரஹ்) எடுத்தெழுதுகிறார்கள். இது மிக வினோதமான கூற்றாகும். இந்த அவரது கூற்றுக்கான சான்று என்னவென்றால், நபி(ஸல்) அவர்களுக்கு ரமழானில்தான் வஹீ அறிவிக்கப்படுவது துவங்கியது. அவர்களுடைய நாற்பதாவது வயதின் நிறைவில்தான் அது நடந்தது. அப்படியயனில் அவர்களின் பிறப்பு ரமழானில்தான் நிகழ்ந்திருக்கும். இதுதான் அவர் கூறும் ஆதாரம். இது ஆய்வுக்குரியதாகும். அல்லாஹ் நன்கறிந்தவன்.

ஸுபைர் பின் பக்கார்(ரஹ்) கூறியதாவது : அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் மாதம் 11,12,13 ஆகிய) நாட்களில் “ஜம்ரத்துல் உஸ்தா”வுக்கு அருகில் உள்ள (´அபு அபீதாலிப் எனும்) அபூதாலிப் கணவாயில் வைத்து நபி(ஸல்) அவர்களை அவர்களின் தாயார் கருவுற்றார். மக்காவிலுள்ள ஹஜ்ஜாஜ் பின் யூதஃபின் சகோதரர் முஹம்மத் பின் யூசுஃப் என அறியப்படும் வீட்டில் ரமழான் மாதம் பனிரெண்டாம் நாளில் நபியவர்கள் பிறந்தார்கள்.

இச்செய்தியை வரலாற்றாசிரியர் இப்னு அசாகிர்(ரஹ்) அவர்கள் கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார்கள். முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் நபி(ஸல்) அவர்களை அவர்களின் தாயார் கருவுற்றார். ரமழான் மாதத்தின் பனிரெண்டாம் நாள் திங்கட்கிழமையன்று பிறந்தார்கள். அது யானைப்படை அழிக்கப்பட்ட இருபத்து மூன்றாவது வருடமாகும். (அல்பிதாயா வந்நிஹாயாவில் எழுதப்பட்டுள்ளது இத்துடன் முடிகிறது)

மேலும் மக்காவில் இயங்கிவரும் “ராபியத்துல் ஆலமில் இஸ்லாமி” என்ற நிறுவனத்தினரால் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட “அர்ரஹீக் அல்மக்தூம்” என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதையும் பாருங்கள். அகிலத்தின் அருட்கொடை, இறைத்தூதர்களின் தலைவர் மக்காவில் பனூஹா´ம் பள்ளதாக்கில் ரபீவுல் அவ்வல் மாதம் 9ம் தேதி (கி.பி.571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள். அது யானைச் சம்பவம் நடைபெற்ற முதலாவது ஆண்டு. மேலும் “அனூ ஷேர்வான்” என்ற கிஸ்ராவின் ஆட்சி முடிவுக்கு வந்த நாற்பதாம் ஆண்டு. இக்கருத்தையே அறிஞர் முஹம்மது ஸுலைமான் உறுதிப்படுத்துகிறார். நூல் ரஹ்மத்துலில் ஆலமீன்.

நபி(ஸல்) அவர்கள் பிறந்த தேதி குறித்து வரலாற்றாசிரியர்களிடையே மாறுபட்ட பல கருத்துகள் இருக்கும்போது அவைகளை மக்களிடம் சொல்லாமல் மறைத்து விட்டுத்தான் இந்த ஆலிம்கள் மீலாது விழா கொண்டாடுகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் பனிரெண்டில்தான் பிறந்தார்கள் என்றால் அதை நபி(ஸல்) அவர்கள் தான் கூறவேண்டும்.

நான் ரபீஉல் அவ்வல் பனிரெண்டாம் தேதியில் பிறந்தேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை. மேலும் ஸஹாபாக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் பனிரெண்டாம் தேதியில் பிறந்தார்கள் என்று கூறிக்கொண்டு அதை ஒட்டி பள்ளிகளில் மெளலூது ஓதியதாகவே எந்த ஒரு ஆதாரமுமில்லை. நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் பனிரெண்டாம் தேதியில் பிறந்தார்கள் என்று கூறி அதை ஒட்டி மவ்லூது, மீலாது என்று சொல்லிக் கொண்டு செயல்படுவது நபியின் வரலாற்றை மறைத்து பேசுபவர்களின் நடைமுறையாகும் என்பதை சமுதாயம் உணர வேண்டும்.

குறிப்பு : இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் எழுதிய “அல்பிதாயா வந்நிஹாயா” என்ற நூலில் தமிழில் நபிமார்கள் வரலாறு என்ற பெயரில் இதுவரை ஏழு பாகங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஐந்தாம் பாகத்தில் பக்கம் 74லிருந்து 77 வரை இடம் பெற்றிருக்கும் மொழி பெயர்ப்பையே இந்த கட்டுரைக்கு பயன்படுத்தியுள்ளேன்.

Previous post:

Next post: