அமல்களின் சிறப்புகள்…

in 2018 டிசம்பர்

அமல்களின் சிறப்புகள்…

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையி லிருந்து,12 ­வ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.

திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி…

பக்கம் 384, பத்தி2ல் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்திகள்.

“அல்லாஹ்வை அதிகமாக திக்ர் செய்யுங்கள்” என்று குர்ஆனின் மூலம் கட்டளையிட்டுள்ளான். இரவிலும், பகலி லும், நீரிலும், நிலத்திலும், பிரயாணத்திலும், உள்ளூரிலும், வறுமையிலும், செழுமையி லும், நோயிலும், சுகத்திலும், மெதுவாகவும், சப்தமிட்டும் அனைத்து நிலைகளிலும், அனைத்து நேரங்களிலும் திக்ர் செய்யுங்கள் என்பது அதன் கருத்தாகும்.

எமது ஆய்வு :

அசி புத்தகம் தமது வழக்கமான பாணியில் குர்ஆனுடைய அத்தியாயம் மற்றும் ஆயத்து எண்ணை குறிப்பிடாமல் இருப்பது போல, இங்கும் அமைதி காத்து விட்டனர். மேற்கண்ட வசனம் 33வது அத்தியாயம் 41வது ஆயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். அதிகமாக நினைவு கூறுங்கள்” என்ற இக் கருத்தும், மேலும் பல அர்த்தங்களில் திக்ர் என்ற வார்த்தை குர்ஆனில் பல ஆயத்துக்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் நாம் முன்னமே விரிவாக பார்த்துள்ளோம்.

இதில் கவனிக்க வேண்டிய வி­யம் யாதெனில், சப்தமிட்டு திக்ர் செய்யலாம் என்பது இந்த ஆயத்தின் கருத்து என்று இப் புத்தகம் வலியுறுத்துகிறது. ஆயத்தில் அப்படி எதுவும் சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை நீங்களே பாருங்கள். இதுதான் ஆயத்து: “யா அய்யுஹல்லதீன ஆமனுத் திக்ருல்லாஹ திக்ரன் கஸீரன்”. இப்போது இந்த ஆயத்தின் அர்த்தத்தை நீங்களே பாருங்கள்.

  1. யா அய்யுஹல்லதீன் ஆமனு: ஈமான் கொண்டவர்களே!
  2. திக்ருல்லாஹ் : அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.
  3. திக்ரன் கஸீரன் : அதிகமாக நினைவு கூறுங்கள்.

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்! அதிகமாக நினைவு கூறுங்கள்! என்பதுதானே இந்த ஆயத்தின் அர்த்தம்.

இப்பொழுது சொல்லுங்கள்.இந்த ஆயத்தில் சப்தமிட்டு திக்ர் செய்யச் சொல்லி இருக்கிறதா? இல்லையே! “சப்தமிட்டும், அனைத்து நிலைகளிலும், அனைத்து நேரங் களிலும் திக்ர் செய்யுங்கள் என்பது அதன் கருத்தாகும்” என்று எழுதியிருப்பது, குர்ஆனுக்கு முரண்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்பது தெளிவாகி விட்டது.

எப்படி திக்ர் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டு இருப்பது வேறொரு ஆயத்தில் கூறப்பட்டுள்ளது. அக் கட்டளை 7வது அத்தியாயத்தின் 205வது ஆயத்தில் இருக்கிறது. அந்த வசனத்தை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இப்போதும் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த ஆயத்தாவது : “(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத் தோடும், சொல்லில் உரத்த சப்தம் இல்லாமல் காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நீர் நினைவு கூறுவீராக! மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்”. (அல்குர்ஆன் : 7:205)

சப்தமில்லாமல் திக்ர் செய்ய வேண்டும் என்பது இறைக் கட்டளை; ஆனால், சப்தமாக திக்ர் செய்யலாம் என்பது இப்புத்தகத்தின் கட்டளை என்பதை இப்போது அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

ஆக, முற்றிலுமாக அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக உங்களை செயல்பட வைப்பதே அமல்களின் சிறப்பு என்கின்ற இப்புத்தகத்தின் எண்ணம் என்பது அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகி விட்டது. இப்புத்தகத்தின் சூழ்ச்சியை அறியாமல், தப்லீக் ஜமாஅத்தினரால்தான் நாங்கள் தொழுவதற்கே ஆரம்பித்தோம் என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். ஷைத்தான் பெரும் பொய்யனாக இருந்தாலும், உண்மையை சொல்லியும் இருக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கும் ஹதீஃதை இப்போது கவனியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் ரமழானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து “உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறினேன். அதற்கவர், “நான் ஓர் ஏழை; எனக்கு குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது; என்று கூறினார். அவரை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், “”அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், “இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும், தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரை விட்டு விட்டேன்! என்றேன்.

அதற்கு, “நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால், அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிக்க) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங் கியபோது அவனைப் பிடித்தேன். “உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறினேன். அதற்கவன் “என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது, இனி நான் வரமாட்டேன்” என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், “அபூ ஹுராராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், இறைத்தூதர் அவர்களே! அவன் கடும் தேவையும், குடும்பமும் இருப்பதாக முறையிட்டான். எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்” என்றேன். “நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான், திரும்பவும் உம்மிடம் வருவான்” என்றார்கள்.

மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்த போது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, “உம்மை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன். இனிமேல் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்” என்று கூறினேன். அதற்கவன், “”என்னை விட்டு விடு! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்” என்றான். அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன். “நீர் படுக்கைக்கு செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், “”நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள்.

“இறைத் தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான். அதனால் அவனை விட்டுவிட்டேன்” என்றேன். “அந்த வார்த்தைகள் என்ன?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பம் முதல் கடைசி வரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற வானவர் ஒருவர் இருந்து கொண்டிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் அவர் கூறினார் எனத் தெரிவித்தேன். நபித் தோழர்கள் நன்மை யானதைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர்?” என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். “தெரியாது” என்றேன். “அவன்தான் ஷைத்தான்!” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) ஸஹீஹுல் புகாரி, ஹதீஃத் எண் : 2311 (ரஅக)

இப்போது சொல்லுங்கள்! நீங்கள் அனைவரும் குர்ஆனைப் பின்பற்றுவீர்களா? அல்லது குர்ஆனுடன் ஒத்துப் போகாத அசி புத்தகத்தைப் பின்பற்றுவீர்களா? ஷைத்தான் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஃதின்படி, அமல்களின் சிறப்பு புத்தகம் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக உள்ள அத்தனை விஷயங்களையும் மக்கள் பெரிதுபடுத்தாமல் இருப்பதற்கான காரணம் யாதெனில், பல விஷயங்களில் குர்ஆன், ஹதீஃதுகளில் இருப்பதை எழுதி நல்ல பிள்ளை வேஷம் போட்டுக் கொண்டிருப்பது தான். இன்ஷா அல்லாஹ் இது பற்றி அடுத்த தொடரில் காண்போம். இன்ஷாஅல்லாஹ்,         இனியும் வரும்…

Previous post:

Next post: