ஆதிகால வேதங்களும்! இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!!

in 2018 டிசம்பர்

நவம்பர் தொடர்ச்சி……

உலகில் பலம் மிக்க உயிரினங்களான சிங்கம், புலி போன்றவை ஆடு, மாடு, மான் போன்ற மிருகங்களை வேட்டையாடி தனது உணவுத் தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றன. அத்துடன் அவை தாம் உணவாக உட்கொள்ளும் சந்தர்ப்பத்தில் மட்டுமே அந்த சாதுவான உயிரினங்களை கொல்கின்றன. அவை தமது தேவைக்கமை யவே மிருகங்களை உணவாக உபயோகிக்கின்றன. அவை வீண் விரயமாக அறிவில்லாத சில மனிதர்களைப் போல், தாம் உண்பதற்குப் பயன்படுத்தும் உயிரினங்களைக் கொல்வதில்லை. அத்துடன் சிங்கம், புலி போன்ற உயிரினங்களை எந்த மிருகங்களும் கொன்று உண்பதில்லை. எனினும் ஊன் உண்ணும் மிருகங்களின் இனவிருத்தியிலும் அதிகமாக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றின் இனவிருத்தி காணப்படுகின்றன. ஆகவே மனிதன் உணவாக பயன்படுத்தும் உயிரினங்களை இறைவன் கூடியளவில் பல்கிப் பெருகக்கூடிய அமைப்பிலேயே அவற்றின் இனவிருத்தியை ஏற்படுத்தி வைத்துள்ளான்.

உலகில் இறைவன் படைத்துள்ள இயற்கை வளங்களை மனிதன் தமது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் உலகிலுள்ள சகல இயற்கை வளங் களையும் மனிதன் கண்டபடி பயன்படுத்த முடியாது. அவற்றின் ஆக்க செயற்பாட்டை கவனித்தே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதே அவற்றிலி ருந்து இன்றைய சமுதாயமும், எதிர்கால சமுதாயங்களும், எக்காலங்களிலும் அதிக மான பயன்பாட்டை அடைந்து கொள்ள முடியும். மறுக்க முடியுமா? ஆகவே இவை எல்லாவற்றையும் படைத்த அல்லாஹ், இறைநெறி நூல்கள் மூலம் இவற்றை எவ்வாறு பயன்படுத்தல் வேண்டும் என வழி முறைகளை அமைத்துத் தந்துள்ளான். சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மாடு, யானை, மரங்களும், பறவைகளும், மனிதர்களும், மனித சமுதாயத்திற்கும், உலகிற்கும் பல உதவிகளையும், நன்மைகள் நிறைந்த தொழிற்பாடுகளையும் செய்து வருகின்றன. அதனால் அவற்றை மனிதர்கள் கடவுளாக கொண்டு வணங்க முடியுமா? அவ்வாறு வணங்குவது மடமையும், பெரும் பாவமுமாகும். ஆகவே உயிரினங்கள் எல்லாவற்றையும் படைத்து பரிபாலித்துக் காக்கும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குதல் வேண்டும். இதுவே அறிவுடைய மனித சமுதாயத்திற்கு மீட்சி பெறுவதற்கான வழி ஆகும்.

அல்லாஹ், மனிதனை ஏனைய ஜீவராசிகளைப் போல் அல்லாது தமது தேவைகளுக்கமைய தமது அறிவை விருத்தி செய்து கொண்டு, புதுமைகளை படைத்து அதனைக் காலத்திற்குக் காலம் அபிவிருத்தி செய்து கொள்ளக்கூடிய ஆற்றலை கொடுத்துப் படைத்துள்ளான். இதனால் மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற தேவைகளை அபிவிருத்தி செய்து கொள்ள முடிகின்றது. அத்துடன் மனிதன் தமது அடிப்படைத் தேவைகளை இயற்கை மூலவளங்களைப் பயன்படுத்தி, தமது விருப்பங்களுக்கமைய பல பொருட்களாக மாற்றி நவீனமாகவும், இலகுவாகவும் பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது.

உதாரணமாக மனிதன் தனது தேவை களை எவ்வாறு பல வகையான விருப்பங் களாக காலத்திற்குக் காலம் மாற்றிப் பயன்படுத்தினான் என்பதை கவனியுங்கள். அவ்வாறு கவனிப்பின் அல்லாஹ் படைத்த இயற்கையை கவனித்து மனிதன் தனது அறிவை விருத்தி செய்துள்ளதை கவனிக்கலாம். இதன் அடிப்படையில் மனிதன் தனது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து கொள்ள அல்லாஹ்வின் அருளால் முடிகின்றது. கவனியுங்கள்.

1, ஆரம்பத்தில் மனிதன் தனது உடைத் தேவைகளை இலைகளைக் கொண்டு நிறைவு செய்தான். ஆனால் இன்று மனிதன் தனது மானத்தை மறைக்க பல வகையான உடைகளைப் பயன்படுத்துகிறான்.

 1. ஆரம்பத்தில் மனிதன் கால்நடையாக மக்கா சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றினான். பின் ஒட்டகம் போன்ற மிருகங்களைப் பயன்படுத்தினான். இன்று எத்தனை வகையான வாகனங்களை மனிதன் கண்டுபிடித்து விட்டான்.
 2. ஆரம்பத்தில் மனிதன் சூரியனின் ஒளிக்கதிர் மாற்றங்களைப் பார்த்து தொழுகைக்குரிய நேரங்களை கணித்தான். ஆனால் இன்று அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அறிவைப் பயன்படுத்தி கணித முறைக்கமைய எத்தனை சாதனங்களை கொண்டு நேரங்களை சரியாக அறிந்து கொள்கின்றான்.
 3. அன்று மனிதன் சந்திரனில் விழும் ஒளிக் கீற்றை கவனித்து புறக்கண்களினால் கண்ட தலைப் பிறையைப் பார்த்து பல சிரமங்களுக்கு மத்தியில் மாதங்களைக் கணிப்பிட்டான். ஆனால் இன்று கணித அடிப்படையில் அல்லாஹ் அமைத்த நாட்களை மிகத் துல்லியமாக முன்கூட்டியே அறிந்து தனது செயல்களை உரிய நாட்களில் நிறைவேற்றிக் கொள்கின்றான்.

இது போல் மனிதன் அல்லாஹ்வின் இயற்கைப் படைப்புகளின் அறிவைப் பயன்படுத்தி விஞ்ஞானம், சுகாதாரம், போக்குவரத்து ஆகியவைகளின் தொடர்பால் உற்பத்தித் துறைகளில் எத்தனை கண்டுபிடிப்புகளை பொருட்களிலும், சேவைகளிலும் உருவாக்கி விட்டான். இன்று இதன் அடிப்படையில் அல்லவா மனிதனின் பொருளாதார தரம் நிர்ணயிக் கப்படுகின்றது. இத்தனை வளர்ச்சி கண்ட நவீன மனிதன் ஏன் எல்லாவற்றையும் படைத்த ஏக இறைவனுக்கு சமமாக அவன் படைத்த படைப்புகளை இணை, துணையாக நம்பிக்கை கொண்டு கொள்ளவேண்டும். அல்குர்ஆனின் ஒளி யின் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்கக் கூடாதா? சிந்தியுங்கள்.

பொருளாதாரத்தின் இன்றைய நிலை:

இன்று உலகில் முதலாளித்துவப் பொருளாதாரம் பிரதான செல்வாக்கைப் பெருகின்றது. அதன் சிறப்பியல்பு சந்தை விலையை கவனித்து அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாகும். இஸ்லாத்திலும் சந்தை விலை இறைவனினால் நிர்ணயிக்கப்படுகின்றது. அதில் மாற்றம் செய்யக்கூடாது என ஹதீஃத்கள் கூறுகின்றன. ஆனால் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பல பிரதிபலன்கள் காணப்படுகின்றன.

அவைகள் :

 1. வருமானப் பகிர்வில் கூடிய ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன.
 2. செழிப்பும், மந்தமும் மாறி வரும் பொருளாதாரம்.
 3. இலாபத்தின் அடிப்படையில் வளப் பகிர்வு, இதனால் வளங்கள் வீண் விரயம்.
 4. மனித சமுதாயத்திற்கு தீமை தரும் பொருள் கூடியளவில் உற்பத்தி.
 5. தொழிலாளர் சுரண்டப்படல்.
 6. அதிக விதமான மக்களிடையே உடலுழைப்பும், வறுமையும்.
 7. பணவீக்கமும், வேலையின்மையும்,
 8. உற்பத்தியாளரின் இலாப நோக்கம், இதனால் சமுதாய பிரதிபலன்கள் உற்பத்தியிலும், நுகர்விலும் காணப்படல்.
 9. தனிமனித ஆதிக்கம் சந்தையில் அதிகம்.

இப்பண்புகள் அதிகளவில் கலப்புப் பொருளாதாரத்திலும் காணப்படுகின்றன. இதனால் அப்பொருளாதாரங்களில் உற்பத்தி, முதலீடு, நுகர்வு போன்றவற்றில் ஒரு குழப்ப நிலையும், மூன்றாம் கட்சியினருக்கு பல பிரதிபலன்களையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அரசு பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதாரக் கருவிகளைப் பயன்படுத்தி தலையிடுவதால் முதலாளித்துவப் பொருளாதாரம் தோல்வியைத் தழுவியுள்ளது. இதே போல் சமதர்மப் பொருளாதாரங்களிலும் அரச திட்டமிடலில் பல குறைபாடுகள் காணப்படுவதால் அப்பொருளாதாரங்களும் தோல்வியையே சந்தித்து வருகின்றன. இன்று உலக பொருளாதாரங்கள் தோல்வி கண்டுள்ளன. இதைத் தவிர்க்க சில உலக நாடுகள் பொருளாதார, அரசியல் ரீதியாகக் கூட்டணிகளை அமைத்து, பொருளாதாரங்களை தமது நாடுகளுக்கு சாதகமாக மாற்றவும் ஏனைய நாடுகளுக்குப் பாதகமாகவும் பல தந்திரங்களை கையாளுகின்றன. இதனால் உலகில் பொருளாதார, அரசியல் கருவிகளைப் பயன்படுத்தி பொருளாதாரப் போர் நடைபெறுவதை அறிவுடைய சமுதாயங்களினால் அறிந்து கொள்ள முடிகின்றது. இதனால் அதிகமான நாடுகளில் போட்டியும், பொறாமையும், யுத்தங்களுக்கு வழி அமைத்துள்ளன. அந்த நாடுகளில் பஞ்சமும், வறுமையும், போசாக்கில்லாத நிலையும் அதிகரித்துள்ளன. வியாபாரத்தில்களவும், பொய்மையும், ஏமாற்றமும் அதிகரித்துக் காணப்படுகின்றன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துள்ளன. இதனால் சமூகப் பிரச்சனைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவ்வாறான பிரச்சினை களுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதை அல்லாஹ்வின் இறுதி இறை நெறி நூலான அல்குர்ஆனும், இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் போதனைகளும் எவ்வாறு வழிகாட்டுகின் றன என சுருக்கமாக கவனிப்போம்.

சமநிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டும் மார்க்கம் இஸ்லாம் :

உலகில் வாழும் சகல சமுதாயங்களுக் கும் அவர்களின் தேவைகளையும், விருப் பங்களையும் பூர்த்தி செய்வதற்கு பொருட்களும், சேவைகளும் அவசியமாகின்றன. இவற்றில் இயற்கையாக கிடைக்கும் நீர், காற்று, சூரிய ஒளி போன்றவை தேவைக்கு மேலதிகமாக காணப்படும் போது அவை பொருளாதாரப் பொருட்களாக கொள்ளப் படுவதில்லை. அவற்றை மனிதர்கள் விலை கொடுக்காமலே பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் மனித தேவைக்கு குறைவாகவுள்ள பல பொருட்களை மூலவளங்களைப் பயன்படுத்தி மனித முயற்சியைக் கொண்டு உற்பத்தி செய்து கொள்ள வேண்டி உள்ளது. அவற்றைப் பொருளாதாரப் பொருட்கள் எனக் குறிப்பிடலாம். அப் பொருட்களைத் தனி மனிதர்களும், அரசும் இலாப நோக்குடனும், சமூக நன்மை கருதியும் உற்பத்தி செய்வது அவசியமாகும்.

இந்த பொருளாதாரப் பொருட்கள் சேவைகளில் சில தனி மனிதர்களுக்கு சில நன்மைகளைக் கொடுத்தாலும் மொத்த மனித சமுதாயத்திற்கும், உலகுக்கும் தீமை களை தோற்றுவிக்கின்றன. அவ்வாறான சில பொருட்களை உற்பத்தி செய்வதை இறைவன் தடுத்துள்ளான். இன்னும் சில பொருட்களை உற்பத்தி செய்தாலும் அவற்றை மனிதர்கள் உட்கொள்வதற்கு அல்குர்ஆன் தடைகளை விதித்துள்ளது. இவை யாவும் எம்மைப் படைத்த அல்லாஹ் மனிதர்களுக்கு நன்மை கிடைக்க ஏற்படுத்திய ஏற்பாடுகளாகும். அவற்றை மீறும் போதே மனித சமுதாயத்தில் அழிவுகள் ஏற்படுவதுடன், மனிதன் செய்யக் கூடாத பாவமான கருமமாக அமைகின்றன. அத்துடன் மனிதன் பயன்படுத்த அனுமதித்த அருமை யான பொருட்களை தனி மனிதனுக்கும், சமுதாயத்துக்கும் நன்மை கிடைக்கும் விதமாகவே பயன்படுத்த இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. அவற்றை வீண் விரயம் செய்யவும், மற்றவர்களுக்கு பயன்தராத முறையில் வீணாக செலவு செய்யாது பதுக்கி வைப்பதையும் இஸ்லாம் தடுக்கின்றது. அல்குர்ஆனும், இறுதி இறைத்தூதரின் போதனைகளும் பொருட்களை மனிதன் எவ்வாறு பயன்படுத்தல் வேண்டும் என பல சட்ட நியதிகளை வகுத்துத் தந்திருக்கின்றது. அவைகளை மீறுவது இம்மையிலும், மறுமையிலும் நஷ்டத்தினைத் தேடித்தர வல்லது ஆகும். ஆகவே அவற்றை மீறாமல் அல்லாஹ்வின் கட்டளைக்கமைய நடப் பதே இஸ்லாமிய பார்வையில் வணக்கமாக கொள்ளப்படுகின்றது.

 (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: