மீண்டும் ஓர் ஆய்வு!
“தக்லீத்” ஓர் கூரிய பார்வை!
கு. நிஜாமுத்தீன்
இந்த தக்லீத் பிரச்சனை முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தில் மட்டும் தோன்றியதல்ல. மாறாக மனித சமுதாயம் படைக்கப்பட்ட காலந்தொட்டு ஷைத்தானின் மூலம் இந்த தக்லீத் நேசம் வளர்க்கப்பட்டு, அதன் மூலம் மனிதர்களுக்கு மகத்தான இழிநிலையும், ஷைத்தானுக்கு மகத்தான வெற்றியும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. சிருஷ்டிகளிலேயே மகத்தான சக்தியாகிய பகுத்தறிவைக் கொடுத்து படைக்கப்பட்ட மனிதன் உலக சம்மந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகப்படுத்தி விட்டு, தீன் விஷயத்தில் பகுத்தறிவை செல்லாப் பொருளாக மாற்றியதன் விளைவு.
இறைவனின் பார்வையில் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறான். தீனில் அவன் பார்வை முன்னோர்களை நோக்குகிறது. எங்கள் தந்தையர்கள் இவ்வாறு செய்தார்கள், எங்கள் உஸ்தாதுகள் இவ்வாறு செய்தார்கள். எங்கள் இமாம்கள் இவ்வாறு செய்தார்களென்று முன்னோர்களின் அடிச்சுவட்டை பின்பற்றுபவனாக செயல்படுகிறான். அதேசமயம் உலக சக விஷயங்களில் அவனது போக்கில் பெரும் மாற்றம் நிகழ்கிறது. தீன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவன் யாரை முன்மாதிரியாக எடுக்கிறானோ அதே உஸ்தாத்கள், இமாம்கள், தந்தையர்களாகிய முன்னோர்கள், மிருகங்கள் மீது பயணித்துள்ளார்கள். குடிசைகளில் வசித்துள்ளார்கள், சுவையற்ற உணவுகளை உட்கொண்டுள்ளார்கள். கிழிந்து-சுருங்கிய ஆடைகளை அணிந்து கொண்டு வாழ்க்கையை கழித்துள்ளார்கள். முன்னோர்களிடம் “தீன்” தேடும் இன்றைய மனிதன், அதே முன்னோர்களிடம் உலக வாழ்க்கையின் முன்மாதிரியை எடுக்க மறுக்கிறான். குடிசை வாழ்க்கையையும், மிருக சவாரிகளையும், சுவையில்லா உணவுகளையும், கிழிந்த ஆடைகளையும் எந்த மனிதனும் விரும்புவதில்லை.
உலக சம்மந்தப்பட்ட விஷயங்களில் புதிய பாதையையே விரும்புகிறான்; அதை அடைவதற்காக முயற்சிக்கிறான்; சில நேரம் வெற்றியையும் அடைகிறான். இங்கு இவனைப் பொறுத்த வரை, முன்னோர்கள் சன்னியாசிகளாக, உலகப் பற்று அற்றவர்களாக தென்படுகிறார்கள். அதனால் தான் அந்த முன்னோர்களின் உலக வாழ்வு நிலைகளை இவன் பின்பற்றுவதில்லை. அதே சமயம், தீன் விஷயத்தில் இவன் முன்னோர்களைக் கட்டித் தழுவக் காரணம் இவனிடம் தீன் கல்வி இல்லாமைதான்; அதற்கான முயற்சியின்மைதான்.
இங்கு தான் “தக்லீத்” என்ற நோயை ஷைத்தான் பரப்புகிறான். மார்க்க சம்மந்தமான விஷயங்களில் உடனுக்குடன் நேரடியாக மூல ஆதாரங்களை அணுகாமல் முன்னோர்களின் வழியைப் பின்பற்றுவதன் மூலம் மனித சமுதாயம் இழிநிலையை அடைந்துவிட்டது. இது இன்று, நேற்று நடப்பதல்ல; குர்ஆனை திறந்து ஆராய்வோமானால் நெடுங்காலமாக இந்த “தக்லீத் நோய்” மனிதனைப் பாழ்படுத்தி விட்டதை அறிவுபூர்வமாக உணரலாம். இந்த “தக்லீத் நோய்” பரவும் காலமெல்லாம் இறைவன் உடனுக்குடன் அந்த நோயை அழிக்கும் பொருட்டு நபிமார்களையும், அந்த நன்மக்களோடு தன் வாக்குறுதி, எச்சரிக்கையைத் தாங்கிய வேதங்களையும் அனுப்பி வைத்தான்.
அந்த இறைத்தூதர்களும் அயராது தக்லீதை எதிர்த்துப் பாடுபட்டுள்ளார்கள். இது சரித்திர உண்மை. இந்த சரித்திரங்களை குர்ஆன் ஆதாரங் கொண்டு பார்க்குமுன் “தக்லீத்” என்பதன் பொருளை உணர்வோம்! “தக்லீத்” என்றால் என்ன? மார்க்க விஷயத்தில் ஒருவரது சொல் செயலை அதற்கான மூல ஆதாரம் தேடாமல், ஆராயாமல், கண்மூடி ஏற்றுக் கொள்வது – பின்பற்றுவது தக்லீதாகும். தக்லீத் என்பதன் பொருளை நாம் விரி வாக விளங்கவேண்டுமானால், இப்படி உணரலாம். அதாவது இந்த தக்லீத் என்ற சொல்லை சிந்தனையாற்றல் உள்ள மனிதன் தன்னோடு சம்பந்தப்படுத்திக் கொள்ளவே கூடாது.
ஏனெனில் இச்சொல்லுக்குரிய விளக்கமே அதை நமக்கு ஊர்ஜிதப் படுத்துகிறது. தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அறிவை இழந்து, அல்லது நிராகரித்து, தாம் அந்தஸ்து மிக்கவராகக் கருதும் ஒருவருடைய கூற்றை அப்படியே ஏற்று கண்மூடி பின்பற்றுவதே தக்லீதின் பொருளாகும். இந்த தக்லீதை ஒன்று மிருகங்களுடன் ஒப்பிடவேண்டும் அல்லது அடிமைகளுடன் ஒப்பிட வேண்டும்.
- மிருக நிலை: மிருகங்களுக்கு எவ்வித பகுத்தறிவும், சுய புத்தியும் கிடையாது. அவை எந்த வழியில் நடத்தப்படுகிறதோ அந்த வழியிலேயே செல்லும். இங்கு தக்லீத் என்பது பிரிக்க முடியாத நிலை.
- அடிமைகள் : இவர்கள் ஒரு சமூகத்திற்குக் கீழ் கட்டுப்பட்டவுடன் அந்த சமூகத்தின் மேல் மட்டம் இடும் கட்டளைகளுக்கு அப்படியே அடிபணிய வேண்டும். நிர்வாணமாக நடந்து செல் என்றோ, மது அருந்து என்றோ கூறினால் அதைக் கண்மூடி செய்தே ஆகவேண்டும். இங்கு தக்லீத் மறுக்க முடியாத நிலை.
- மிருகங்களிடமிருந்து தக்லீதை பிரிக்க முடியாது.
- அடிமைகளால் தக்லீதை மறுக்க முடியாது. இந்த இரண்டு நிலைகளைத் தவிர்த்து மற்ற எந்த சூழலாக இருந்தாலும் தக்லீதை நியாயப்படுத்த முடியாது.
ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தாரின் தீன் விஷயத்தில் இந்த தக்லீத் ஒரு மகத்தான சாபக்கேடாக தொடர்ந்து வருகின்றது. அறிவுப்பூர்வமான ஆராய்ச்சிக்குட்படும் சட்டதிட்டங்களை வைத்துள்ள இந்த சமுதாயம், தக்லீதின் பிடியில் சிக்கி சின்னாப்பின்னப்பட்டு விட்டது. இறைவன் ஆதி மனித சமூகத்திற்கு இட்ட கட்டளை புறக்கணிக்கப்பட்ட நாள் முதல் தக்லீத் நேசம் ஓங்கி வளர ஆரம்பித்து விட்டது. இறைக் கூற்றும்,
தக்லீதின் வளர்ச்சியும் :
ஆதி மனிதர் ஆதம்(அலை) மற்றும் அவரது மனைவி இருவரையும் இறைக்கட்டளைக்கு மாறு செய்யுமாறு ஷைத்தான் தூண்டியதன் விளைவு. அவர்கள் சுவர்க்கத்தை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்படுத்தியது. இச்சந்தர்ப்பத்தில் இறைவன் அவர்களை பூமிக்கு அனுப்பும்போது இவ்வாறு கூறி அனுப்பினான். நாம் சொன்னோம், நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டு இறங்கிவிடுங்கள். (உங்களின் நல்வாழ்விற்காக) “மின்னீ ஹுதன்” என்னிடமிருந்து நேர்வழி வரும் போது, யார் நான் வகுத்த நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு “லா கவ்ஃபுன் அலைஹிம் வலா ஹும் யஹ்ஸனுன்” எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கிக்கவும் மாட்டார்கள். (2:38)
இறைவனின் இந்தக் கூற்று வெகு சீக்கிரமே அலட்சியப்படுத்தப்பட்டது. உடனடியாக இறைவன் தனது அறிவிப்பை மீண்டும் நினைவுறுத்த நூஹ்(அலை) அவர்களைத் தேர்ந்தெடுத்தான். நூஹ்(அலை) அவர்களின் பிரசாரமும் தொடர்ந்தது. அதற்கு நேர் எதிர்ப்பான ஷைத்தானின் பிரசாரமும் தொடர்ந்தது. மக்களை வழி கெடுக்க நபியின் போதனையை நிராகரிக்கச் செய்ய ஷைத்தான், முன் வாழ்ந்த நல்ல அடியார்கள் மீது குருட்டு பக்தியை, தக்லீத் நேசத்தை வளரச் செய்தான்; வெற்றியும் பெற்றான். நுஹ்(அலை) காலத்தில் “தக்லீத் நோய்” பரவ ஆரம்பித்தது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹி பெற்று மக்களுக்கு போதனை செய்யும்போது அந்த மக்கள் இந்த நற்போதனையைப் புறக்கணித்து…. உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள், இன்னும் (நம் சமூகத்தில் வாழ்ந்த பெரியார்களான) வத்து, ஸுவாஉ, யகூஈ, யஊக், நஸ்ரு ஆகியோரையும் நீங்கள் விட்டுவிடாதீர்கள். (71:23) என்று அச்சமூகத் தலைவர்கள் எதிர்வாதம் செய்து தக்லீதுக்கு தலை சாய்த்தார்கள் ஒரு நபியின் போதனைக்கு ஆதாரம் தேடி முன்னோர்களின் வாழ்வைப் பார்த்தார்கள். (நூஹ்வாகிய இவர் சொல்லக் கூடிய செய்திகளை) “நம் மூதாதையர்களிடம் நாம் கேள்விப்பட்டதேயில்லையே” என ஆச்சர்யப்பட்டார்கள். (23:24)
இப்படியாக இந்த தக்லீத் நோய் ஒவ்வொரு சமூகத்தாரிடமும் பரவ ஆரம்பித்தது. குறிப்பாக சொல்லப் போனால் ஒவ்வொரு நபியும் தக்லீதிற்கு எதிர்ப்பாகவே அனுப்பப்பட்டார்கள். சிலவற்றைக் காண்போம். ஆது(அலை) போதனையும், தக்லீதும் ! என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடமில்லை, மாறாக நான் அகிலங்களின் ரப்புடைய தூதனாவேன். நான் இறைவனின் தூதையே உங்களிடம் கூறுகிறேன். நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கிறேன் எனக் கூறினார். (7:68)
உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற் போதனை வந்துள்ளது பற்றி ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹ்வுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கி வைத்து உங்கள் உடல்களில் பலத்தை அதிகமாக்கியதையும் நினைவு கூறுங்கள். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று கூறினார். (7:69)
அதற்கு அம்மக்கள் எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டுவிட்டு அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காகவா எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும் எனக் கூறினார்கள். (7:70)
ஷிஐப்(அலை) சமூகத்தவரிடம் தக்லீத் : என் சமூகத்தாரே! அளவையிலும், நிலுவையிலும் நீதத்தை கைக்கொள்ளுங்கள், அவர்களுடைய பொருள்களைக் குறைத்து விடாதீர்கள், பூமியின் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள், நீங்கள் உண்மையான முஃமின்களாக இருந்தால் அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையாகும். நான் உங்களைக் கண் காணிப்பவன் அல்ல என (ஷிஐப்) கூறினார். (பதிலாக) அவர்கள், ஷிஐபே… நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறு உம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது எனக் கூறினார்கள். (11:85-87)
ஸாலிஹ்(அலை) சமூகத்தாரிடம் தக்லீத்: என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களை பூமியிலிருந்து உண்டாக்கி அதிலேயே உங்களை வசிக்கவும் செய்தான். எனவே அவனிடமே பிழை பொறுப்புத் தேடுங்கள். இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள், நிச்சயமாக என் இறைவன் (எல்லாவற்றிற்கும்) மிக அருகில் இருக்கிறான். (நம் பிரார்த்தனையை) ஏற்பவனாகவும் இருக்கிறான் எனக் கூறினார். (11:61) அதற்கு அவர்கள், ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடம் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர். (இப்போது) எங்களுடைய முன்னோர்கள் எதை வணங்கினார்களோ அதை விட்டும் விலக்குகிறீரா? நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப் பற்றி நாங்கள் பெருஞ்சந்தேகத்தில் இருக்கிறோம் எனக் கூறினார்கள். (11:62)
இப்ராஹிம்(அலை) சமூகத்தவரிடம் தக்லீத்: அவர் தம் தந்தையிடமும், சமூகத்தாரிடமும் நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர்கள், எங்கள் மூதாதையர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் எனக் கூறினார்கள். (இப்ராஹீமாகிய) அவர் நிச்சயமாக நீங்களும், உங்கள் மூதாதையர்களும் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருந்து வருகிறீர்கள் எனக் கூறினார். (21:52,53)
அவர் தம் தந்தையையும், சமூகத்தாரையும் நோக்கி “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்” எனக் கேட்டபோது, “”நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருப்போம்” எனக் கூறினார்கள். அதற்கவர்கள் “நீங்கள் அவற்றை அழைக்கும்போது கேட்கின்றனவா, அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா? அல்லது தீமை செய்கின்றனவா?” (எனக் கேட்டார்) (அப்போது அவர்கள்) “இல்லை எங்கள் முன்னோர்கள் இவ்வாறு சொல்லவே நாங்கள் கண்டோம்” எனக் கூறினார்கள். (26:70-74)
மூஸா(அலை) சமூகத்தாரிடம் தக்லீத் : உங்களிடம் சத்தியமே வந்தபோது இதைப் பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள். இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள் என மூஸா கூறினார். (அதற்கு) அவர்கள் எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பி விடவும், இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்ளவுமா எங்களிடம் வந்தீர்கள்? (10:77-78)
மூஸா அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட சூனியமேயன்றி வேறில்லை. இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை எனக் கூறினார்கள். (28:36)
இதுவரை நாம் கண்ட வசனங்களிலிருந்து இந்த தக்லீதின் தாக்கம் மனித சமுதாயத்தை எந்த அளவிற்கு அறியாமையின் பக்கம் இட்டுச் சென்றுள்ளது என்பதை உணரலாம். தமது முன்னோர்கள் மீது வைத்துள்ள குருட்டு பக்தியால் நபிமார்களையே எதிர்க்கக் கூடிய நிலை ஏற்பட்டு, அதன் மூலம் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளாக்கப்பட்ட எத்துணையோ சமூகத்தவரின் வரலாற்றை குர்ஆன் எடுத்துக் கூறுகிறது. விஷயம் இவ்வளவு தெளிவாக இருந்தும் இந்த குர்ஆனை வைத்து பெருமை பேசும் சமுதாயம் தக்லீத் என்ற மாயையிலேயே சிக்கித் தவிக்கின்றது.
இன்னும் சற்று ஆழ்ந்து சிந்திப்போமேயானால் ஆரம்பகால மக்களின் தக்லீதிற்கும் நம்மவர்களின் தக்லீதுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதை உணரலாம். ஆரம்பகால மக்கள் பாதுகாக்கப்பட்ட வேதங்களைப் பெற்றிருக்கவில்லை. அதனால் தமது மார்க்க வியங்களுக்கு தம் முன்னோர்களின் வழியையே ஆதாரமாக எடுத்ததை நாமும் ஓரளவு ஒப்புக் கொள்ளலாம்.
இது எப்படியெனில், தெளிவான வழிகாட்டிப் பலகை இல்லாத ஒரு ஊருக்குச் செல்ல, வழியில் தென்படும் வழிப்போக்கனிடம் வழி விசாரிப்பது போன்றதாகும். ஆனால் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்திலுள்ள முகல்லிதுகளைப் பொறுத்தவரை, வழிநெடுகிலும் வழிகாட்டி மரங்கள்-பலகைகள் ஏன்? ஏற்றிச் செல்ல வாகனங்கள் இருந்தும் கூட அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வழி தவறி அலைபவர்களுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
இத்தகைய தக்லீத்வாதிகளை இறைவன் மிருகங்களைவிட கீழான நிலையில் சித்தரித்துக் காட்டுகிறான். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன, அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள். அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன, அவற்றைக் கொண்டு (இறை அத்தாட்சிகளைப்) பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு காது கள் இருக்கின்றன, அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவசனங்களையோ, நற்போதனைகளையோ) கேட்கமாட்டார்கள். இத்தகைய (பகுத்தறிவு மனித பெயர் தாங்கிகள்) மிருகங்களைப் போன்றவர்கள், அல்ல, அல்ல அவற்றை விடவும் கேடுகெட்டவர்கள். (7:179) இவ்வளவு கடுமையாக இறைவன் தகஃலீத் நேசர்களை இழிவுபடுத்திய பிறகும் கூட அதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்போரை என்னவென்பது?
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)