இமாமத் செய்பவரின் தகுதியும், வயதும்!

in 2019 மார்ச்

 M.A. ஹனிபா, பொட்டல்புதூர்

அமர் பின் ஸலாமா(ரழி) அறிவிப்பது :

வாகனத்தில் பயணிப்பவர்கள் (அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, இறை வேதமான குர்ஆனைக் கற்றுக் கொண்டு திரும்புகையில்) எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து நாங்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்வோம்.என் தந்தையும் நபி (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், (அல்லாஹ்வின் வேதமான) “குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த வரே உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று கூறினார்கள்.

பின்னர் என் தந்தை (எங்களிடம்) வந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், இறை வேதமான) “குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவரே உங்களுக்குத் தலைமை தாங்கி தொழுவிக்கட்டும் என்று கூறினார்கள்” என்று சொன்னார்கள். அதனால் மக்கள் (தொழுவிப்பதற்கு ஆளைத் தேடிப்) பார்த்தார்கள். அப்போது நான்தான் அவர்களுள் குர்ஆன் நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்தேன். ஆகவே, அவர்களுக்கு நானே தலைமை தாங்கி தொழுவித்தேன். (அப்போது) “நான் எட்டு வயது சிறுவனாக இருந்தேன். (நஸயீ : 781) நான் குர்ஆனை அதிகம் மனனம் செய்திருந்ததாலும் எங்கள் வம்சத்திலேயே நான் நல்ல முறையில் குர்ஆனை ஓதுபவனாக இருந்ததாலும் என்னை அவர்கள் இமாமாக நியமித்து விட்டார்கள்.

அதனால் நான் இமாமத் செய்து கொண்டிருந்தேன். நான் ஒரு சிறிய மஞ்சள் நிறத் துண்டு தான் போர்த்தியிருப்பேன். இந்நிலையில் நான் ஸஜ்தா செய்தால் என் மறை உறுப்பு தெரிந்தது. இதனைப் பார்த்த ஒரு பெண் ஒருவர் “தொழ வைக்கக்கூடியவரின் மர்ம ஸ்தானத்தை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். மக்கள் எனக்காக உமானிய்யா எனும் சட்டை வாங்கித் தந்தார்கள். நான் முஸ்லிமானதற்கு அடுத்தபடியாக இதில் ஏற்பட்ட மகிழ்ச்சி போன்று வேறெதிலும் ஏற்பட்டதில்லை. “அப்போது எனக்கு ஏழெட்டு வயது இருக்கும்” இந்நிலையில் அவர்களுக்கு நான் இமாமத் செய்பவனாக இருந்தேன்” (இவை அபூதாவூத் 495வது அறிவிப்பில் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. (மேலும் பார்க்க: புகாரி :4302வது ஹதீஃத்)

மேற்கண்ட அறிவிப்புகளில், பலர் இணைந்து ஜமாஅத்தாக சேர்ந்து தொழும் கடமையானத் தொழுகைக்கு ஒருவர் முன் னோடியாக தலைமையேற்க அவரைப் பின்பற்றித் தொழவேண்டும். முன்னோடியாக முன்னின்று தொழ வைப்பவர் இமாம், இமாமத் செய்பவர். இமாமத் செய்வதற்கான முதல் தகுதி குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்திருக்க வேண் டும். இமாமத் செய்பவருக்கு கல்வித் தகுதியும் அவசியமில்லை! முதியவர் இளையவர் என்ற வயது வரம்பும் ஒரு பொருட்டல்ல! இமாமத் செய்வதற்கு குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்து, தொழும் முறையையும் நன்கு அறிந்திருந்தாலே போதுமானது! குர்ஆன் வசனங்கள் முழுமையாக அருளப்படவில்லை என்றாலும், குர்ஆன் வசனங்கள் சிறுகச் சிறுக அருளப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே தொழுகை கடமையாக்கப்பட்டு, நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மதீனாவின் புற நகர் பகுதிகளில் பள்ளிவாசல்கள் அமைக் கப்பட்டு அங்கெல்லாம் ஓர் இமாமைப் பின் பற்றி தனித்தனி ஜமாஅத்துகள் நடந்து கொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்களின் தலைமையில் மஸ்ஜிதுந் நபவியில் ஜமாத் தொழுகை நடந்த அதே நேரத்தில், குபா பள்ளியில் வேறொரு இமாமின் தலைமையில் ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருந் தது. நூல்கள் : புகாரி : 403, முஸ்லிம்:915

நபி(ஸல்) அவர்களின் தலைமையைப் பின்பற்றி கடமையான ஜமாஅத் தொழுகையைத் தொழுது முடித்த பின்னர், நபித்தோழர் முஆது(ரழி) அவர்கள் தமது கூட்டத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாக நின்று கடமையானத் தொழுகையைத் தொழவைத்துள்ளார்கள். நூல்கள்: புகாரி : 6106, முஸ்லிம் : 795.

நபி(ஸல்) அவர்களின் தலைமையைப் பின்பற்றி கடமையான ஜமாத் தொழுகையைத் தொழுது முடித்த பின்னர், பள்ளியை விட்டு வெளியேறி இல்லத்திற்கு செல்லும் வழியில் வேறொரு பள்ளியில் ஜமாஅத் தொழுகை தொழுது கொண்டிருந்தவர்களை நோக்கி, நான் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுதுவிட்டு வருகிறேன். நிச்சயமாக கிப்லா மாற்றப்பட்டு விட்டது என்று அவர்களுக்கு அறிவிக்கிறார். அந்த ஜமாஅத்தினரும் கிப்லாத் திசையை மாற்றிக் கொள்கின்றனர். புகாரி : 7252, முஸ்லிம் : 913. இவையெல்லாம் நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே மதீனாவின் புறநகர் பகுதி களில் தனித்தனி இமாமைப் பின்பற்றி கூட்டுத் தொழுகை நடத்தும் செயல்முறை நடைமுறைக்கு வந்து விட்டது என்பதைத் தெளிவுப் படுத்துகின்றது.

இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண் டியது என்னவென்றால், “ஏழு ஆண்டுகள் மதரஸாவில் படித்து மவ்லவி பட்டம் பெற்றவர்கள் தான் கூட்டுத் தொழுகையில் முன் னின்று தலைமை தாங்கி இமாமத் செய்ய வேண்டும்” என்று எந்த நிபந்தனையும் இல்லை. ஊதியம் பெற்று கூலிக்கு இமாமத் செய்யும் ஒரு கூட்டத்தினரால் உருவாக்கப் பட்டது தான் இந்த ஏழு ஆண்டுகள் மதரஸா கல்வியும், மவ்லவி பட்டமும். கடந்த காலங்களில் இமாமத் செய்ய தகுதி என இதைத்தானே நாமும் நம்பி வந் தோம். பின்னர் குர்ஆன், ஹதீஃத் ஒளியில் நேரடியாக விளங்கிய பின் அதிலிருந்து விலகினோம் மறுமலர்ச்சி கண்டோம். கூலிக்கு இமாமத் செய்வது மார்க்கத் திற்கு முரணானது என விளங்கி பல மவ்லவி கள் அதிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இன்னும் ஊதியத்துக்கு இமாமத் செய்யும் மவ்லவிகள் “எங்க பிழைப்புக்கு என்ன வழி?” என்ற அறிவிப்பூர்வமான(?) கேள்வியை எழுப்புகின்றனர். ஒரு நாளில் கடமையான ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றும் ஒரு தொழுகையாளி அவர் குடும்பத்தினரின் வாழ்வாதாரத் தேவைக்கு ஆகுமான வழியில் உழைத்துப் பொருள் சேர்க்கின்றாரோ, இதே வழிதான் தம்மீது கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை இமாமாக நின்று நிறைவேற்றும் இமாமுக்கும் பொருந்தும். இதை முறையாக விளங்காத வரை, கூலிக்கு இமாமத் செய்யும் வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஊதியத்திற்குத் தொழவைக்கும் மவ்லவிகளைப் பின்பற்றித் தொழுதால் தான் தொழுகை நிறைவேறும் என்று முஸ்லிம் சமுதாயத்தினர் பலர் அறியாமையில் இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும்.

Previous post:

Next post: