அமல்களின் சிறப்புகள்….

in 2019 ஏப்ரல்

அமல்களின் சிறப்புகள்….

  1. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத் கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.

திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி…

அமல்களின் சிறப்பு (அசி) புத்தகம் நல்ல பிள்ளை வேஷம் போட்டு, புனித குர்ஆனைப் புறக்கணித்து அதனை ஓரம் கட்டி விட்ட கொடுமையை சென்ற இதழில் கவனித்தோம். அமல்கள் என்ற பெயரில் அல்லாஹ் புனித குர்ஆனிலும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள், ஹதீஃத்களிலும் ஏவப்படாதவைகளைக் கூறி, மக்களை எப்படி எல்லாம் வழிகெடுத்து வருகிறார்கள் என்பதை இப்போது ஆய்வு செய்வோம்.

அதற்கு முன்பாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள இறை வசனத்தையும் ஹதீஃத் ஒன்றையும் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இதை இப்போது தருவதன் நோக்கம், அப்போதுதான் இந்த ஜமாஅத்தினர் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் கட்டளைக்கும், அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டலுக்கும் மாற்றமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.

இறை வசனம் 4:59ல் அல்லாஹ் இட்ட கட்டளையைப் பாருங்கள் :

நம்பிக்கைக் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள். இன்னும் தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால், அதை அல்லாஹ்விடமும், தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள். இதுதான் உங்களுக்கு சிறப்பான அழகான முடிவாக இருக்கும்.

அடுத்து, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டலைப் பாருங்கள்.

நிச்சயமாக வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்: வழிமுறைகளில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்கள் காட்டிய வழி:

அமல்களில் கெட்டது, இஸ்லாத்தில் இல்லாததை புதிதாக உண்டாக்குவது.

ஒவ்வொரு புதிய அமலும் பித்அத் ஆகும்.

ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.

ஒவ்வொரு வழிகேடும் நரக நெருப்பில் சேர்க்கும்.

ஆக மேற்கண்ட இறை வசனம் மற்றும் ஹதீஃதின் பிரகாரம், எந்த ஒரு அமலாக இருந்தாலும், அந்த அமலை செய்வதற்கு அல்லாஹ்வின் கட்டளை இருக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அந்த அமலை எப்படி செய்ய வேண்டும் என்ற வழிகாட்டி இருக்க வேண்டும். அதாவது அல்லாஹ்வின் கட்டளை குர்ஆனிலும், தூதரின் வழிகாட்டல் ஹதீஃதிலும் இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் இல்லாத வைகளை மார்க்க அமல்கள் என்று நினைத்து செய்யும் ஒவ்வொருவரும் நரக நெருப்பை சுவைத்தே தீரவேண்டும் என்பது தெளிவாகி விட்டது.

இப்போது தப்லீக் ஜமாஅத்தினர் செய்யும் கீழ்கண்ட அமல்கள் குர்ஆனிலும், ஹதீஃதிலும் இல்லாததாலும், அந்த அமல்கள் செய்பவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டும் என் பதாலும் அந்த அமல்களை செய்வதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நரகிற்கு கொண்டு செல்லும் அமல்கள் :

  1. பள்ளியில் ஏதேனும் ஒரு தொழுகைக்கு பிறகு, குர்ஆனை முதுகுக்குப் பின் னால் ஒதுக்கி வைத்து விட்டு, இந்த ஜமாஅத்தினரின் புத்தகமான அமல்களின் சிறப்பு(அசி) புத்தகத்தை மட்டும் தஃலிமில் படிப்பது.

இந்த புத்தகம் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் ஏற்ப ஒரு சில விஷயங்களை எழுதி விட்டு, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத இஸ்லாத்தில் இல்லாத கொள்கைகளை அதாவது இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளைக் கூறிக்கொண்டிருக்கும் புத்தகம் என்பதை நாம் இந்த ஆய்வுத்தொடரில் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்து வருகிறோம். இந்த புத்தகத்தைப் பற்றிய ஆய்வுத் தொடரைத் தொடர்ந்து படித்து வருபவர்கள் நிச்சயமாக இதனை அறிவர்.

அல்லாஹ் இறக்கி அருள் புரிந்திருக்கிற கல்வி ஞானமுள்ள குர்ஆனையே, நபி(ஸல்) அவர்கள் தினமும் ஏதேனும் ஒரு தொழுகைக்குப் பின் மக்களை உட்கார வைத்து படித்துக் காட்டும்படி கட்டளை இடாதபோது, குர்ஆன் ஹதீஃதுக்கு எதிரான “அசி” புத்தகத்தைப் படிப்பது இவர்களின் கொள்கைகளை வலியுறுத்தத்தான் என்பது தெளிவாகிவிட்டது.

எனவே, இவர்களின் தஃலீமில் அமர்வதும் இஸ்லாத்திற்கு எதிரான இவர்களின் கொள்கைக்கு செவி சாய்த்து செயல்படுத்துவதும் பித்அத் என்றிருப்பதால் அந்த அமல்கள் நரகில் சேர்க்கும் வழிகேடு ஆகும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட கடமைப்பட்டிருக்கிறார்கள்.

  1. தினமும் வீட்டில் ஏதேனும் ஒரு நேரத்தில் திட்டமிட்டு குர்ஆனைப் படித்துக் காட்டாமல், குடும்பத்தினருக்கு “அசி” புத்தகத்தை படித்துக் காட்டவேண்டும் என்பது இவர்களது அமல்களில் உள்ள விஷயம் ஆகும். எனவே, குடும்பத்தினர் இந்த தஃலீமில் அமர்வதும் இஸ்லாத்திற்கு எதிரான இவர்களின் கொள்கைக்கு செவி சாய்த்து செயல்படுவதும் பித்அத் என்றிருப்பதால் அந்த அமல்கள் நரகில் சேர்க்கும் வழிகேடு ஆகும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட கடமைப்பட்டிருக்கிறார்கள்.
  2. அடுத்து, வாரம் ஒரு முறை தமது மஹல்லாவில் “கஸ்த்” செல்வது, அதாவது வலம் வருவதாம். மஹல்லாவில் உள்ள சிலரை சந்தித்து பள்ளிவாசலுக்கு அழைப்பது, இவர்களுடன் வருபவர்களை, ஜமா அத்தில் தொழவைத்து பிறகு பயானில் உட்காரவைத்து அதன் பிறகு எதிர்கால தொலை நோக்குத் திட்டமாக இவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, இவர்களின் கொள்கை பரப்பு புத்தகமான அசி புத்தக தஃலீமை ஆரம்பித்து மூளைச் சலவை (BRAIN WASH) செய்து வைப்பார்கள். நல்ல பிள்ளை வேஷம் போட்டு கஸ்த் என்ற பெயரை வைத்துக்கொண்டு தான், இவர்களின் இயக்கக் கொள்கைக்கு ஆள் பிடிப்பு வேலை செய்து வருகிறார்கள். எனவே, கஸ்த் செல்வதும் இஸ்லாத்திற்கு எதிரானது இவர்களின் கொள்கைக்கு செவி சாய்த்து செயல்படுவதும் பித்அத் என்றிருப்பதால் அந்தஅமல்கள் நரகில் சேர்க்கும் வழிகேடு ஆகும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட கடமைப்பட்டிருக்கிறார்கள்.
  3. அதேபோல, வாரம் ஒரு முறை அடுத்த மஹல்லாவில் கஸ்த் சென்று அந்த மஹல்லாவில் உள்ள சிலரை சந்தித்து பள்ளிவாசலுக்கு அழைப்பது, இவர்களுடன் வருபவர்களை ஜமாஅத்தில் தொழவைத்து பிறகு பயானில் உட்காரவைத்து அதன் பிறகு எதிர்கால தொலைநோக்குத் திட்டமாக இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இவர்களின் கொள்கை பரப்பு புத்தகமான அசி புத்தக தஃலீமை ஆரம்பித்து மூளைச் சலவை (யrழிஷ்ஐ நிழிவிஜு) செய்து வைப்பார்கள். நல்ல பிள்ளை வேடம் போட்டு கஸ்த் என்ற பெயரை வைத்துக் கொண்டு தான் இவர்களின் இயக்கக் கொள்கைக்கு அடுத்த மஹல்லாவிலும் ஆள் பிடிப்பு வேலை செய்வார்கள். இப்படியாக நாட்டில் உள்ள ஒவ்வொரு மஹல்லாவிலும் நடைபெறும் இந்த கஸ்த்தின் மூலமாகத் தான் இந்த இயக்கத்தால் எந்த ஒரு விளம்பரமும் இன்றி லட்சக்கணக்கானோரை தங்கள் இயக்கத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தன்னை மறந்து சுய சிந்தனை இல்லாதவர்களாக ஆகிவிட்டவர்கள்; படித்து பட்டம் பதவிகளைக் கொண்டோர் கூட, தமக்கு முக்கிய பொறுப்புகள் தரப்பட்டுவிடுவதால் இஸ்லாமியக் கொள்கையிலிருந்து தாம் நழுவிக் கொண்டிருப்பதை அறிந்தும், கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே, அடுத்த மஹல்லாவுக்கு கஸ்த் செல்வதும் இஸ்லாத்திற்கு எதிரான இவர்ககளின் கொள்கைக்கு செவி சாய்த்து செயல்படுத்து வதும் பித்அத் என்றிருப்பதால் அந்த அமல்கள் நரகில் சேர்க்கும் வழிகேடு ஆகும் என் பதை அனைவரும் உணர்ந்து செயல்பட கடமைப்பட்டிருக்கிறார்கள்.
  4. அடுத்து, மார்க்கத்தை பிறருக்கு எத்திவைத்து தாவா பணி செய்ய வேண்டும் என்ற பெயரில் மாதம் மூன்று நாட்கள் ஊர் ஊராக சென்று தங்கள் இயக்கத்துக்கு அசி புத்தகத்தை வைத்துக் கொண்டே மேற்கண்ட முறையில் கஸ்த் செய்து ஆள் சேர்ப்பார்கள். இதை அல்லாஹ்வின் பாதையில் (ஃபீஸபீலில்லாஹ்) செல்வதாக தைரியமாக கூறிக் கொள்ளவும் செய்கிறார்கள். குர்ஆன், ஹதீஃதில் இல்லாத நரகில் சேர்க்கும் பித்அத் அமல்கள் இவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையாம்! எனவே, மூன்று நாள் ஜமாஅத்தில் சென்று இஸ்லாத்திற்கு எதிரான இவர்களின் கொள்கைக்கு செவி சாய்த்து செயல்படுத்துவது பித்அத் என்றிருப்பதால் அந்த அமல்கள் நரகில் சேர்க்கும் வழிகேடு ஆகும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட கடமைப்பட்டிருக்கிறார்கள். எனவே, இவர்களுடன் ஜமாஅத்தில் செல்வது கூடாது.
  5. அடுத்து, ஆண்டு ஒன்றுக்கு ஒரு ச்சில்லா அதாவது நாற்பது நாட்கள் மேலே கூறியவாறு ஜமாஅமத்தில் செல்வது! இதுவும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத அமல் ஆகும். நரகத்திற்கு செல்லும் வழிகேடு ஆகும். இவ்வாறு ஜமாஅத்தில் செல்வது கூடாது.
  6. இன்னும், ஆயுளில் ஒருமுறை நான்கு மாதம் அதாவது சேர்ந்தாற்போல மூன்று ச்சில்லா ஜமாஅத்தில் செல்வது! இதுவும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத அமல் ஆகும். நரகத்திற்கு செல்லும் வழிகேடு ஆகும். இவ்வாறு ஜமாஅத்தில் செல்வதுகூடாது.
  7. சத்திய மார்க்கம் இஸ்லாத்தின்பால் அழைப்புப் பணி செய்வதற்கே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மூன்று நாள், ச்சில்லா, மூன்று ச்சில்லா என்றெல்லாம் ஜமாஅத்தில் செல்லவேண்டும் என்று கட்டளை இடாத நிலையில், குடும்பத்திலுள்ள மனைவி மக்களை விட்டுவிட்டு, அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்யாமல் மூன்று நாள், ச்சில்லா, மூன்று ச்சில்லா (நான்கு மாதங்கள்) என்று சுற்றிக் கொண்டிருப்பதற்கு மார்க்கத்தில் எள்ளளவும் இடமில்லை. இவ்வாறு ஜமாஅத்தில் செல்வது கூடாது.

ஜமாஅத்தினர் நிர்ணயித்ததை விடவும் கூடுதலான நாட்கள் ஜமாஅத்தில் செல்ல பிரியப்படுபவர்களும் உண்டு. நினைத்த போதெல்லாம் இவர்கள் சமைத்து சாப்பிடுவதற்கான தட்டுமுட்டு சாமான்களின் மூட்டை முடிச்சோடு ஜமாஅத்துக்கு போகிறேன் பேர்வழி என்று கிளம்பி விடுகின்றவர்கள் பலரை இன்றும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதிகமான நாட்கள் இவர்கள் ஜமாஅத்தில் செல்வதற்கான காரணம் சீப் அன்ட் பெஸ்ட் சாப்பாடுதான். சில சமயங்களில் ஊர்க்காரர்களே கட்டணம் இன்றி இலவச சாப்பாடு போட்டு விடுவதும் ஒரு காரணம் ஆகும். இப்படி இலவச சாப்பாடு போடுவதை ஜமாஅத் அமீர் உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் சிறிது பாவ்லா காட்டி கெத்தான போக்கு காட்டி கண்டிஷன் போடுவார். என்ன கண்டிஷன் தெரியுமா? சாப்பாடு போடுபவர் அவர்களுடன் குறைந்தது மூன்று நாட்களாவது ஜமாஅத்தில் இருக்க வேண்டுமாம். ஜமாஅத்துக்கு வரமுடியாது என்று அவர் சொல்லிவிட்டால், ஆடிப்போவார் அமீர்? ஏன் தெரியுமா? இலவச சாப்பாடு வராமல் போய்விடுமோ என்ற பயம்தான் இதற்கான காரணம். கொச்சைப்படுத்துவதாக எண்ணி விடாதீர்கள். அதற்காகத்தான் எவரது பெயரையும் நான் குறிப்பிடவில்லை.

எமது அறியாமை காலத்தில் ஒருமுறை ஒரு ஊருக்கு ரமழான் மாதத்தில் ஜமாஅத் ஒன்றுடன் சென்றிருந்தேன். இஃப்தார் நேரத்தில் நோன்பை துறப்பதற்காக, கஞ்சிக்கு வடை, பஜ்ஜி வாங்க சென்றோம். பள்ளிவாசல் நுழைவாயிலில் ஒரு அழகிய சிறுமி வடை விற்றுக் கொண்டிருந்தார். என்னை ஜமாஅத்துக்கு அழைத்து வந்த நபர் என்னிடம் அந்த சிறுமியைக் காட்டி இது யார் தெரியுமா? என்ற வினாவை எழுப்பி அவரே அந்த வினாவுக்கு விடையும் தந்தார். எங்களுடன் ஜமாஅத்தில் ஆரம்பத்திலிருந்து இருந்து கொண்டிருக்கும் ஒருவரைக் காட்டி அவருடைய மகள் தான் அந்த சிறுமி என்றும், அவர் தன் வாழ்நாள் முழுவதையும் ஜமாஅத்திலேயே அர்ப்பணித்து விட்ட நாதா என்றார். ச்சீப் அன்டு பெஸ்ட் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு அதற்கான குறைந்த கட்டணத்தை ஜமாஅத்தில் செல்லும் பிறர் கொடுப்பதும், இவ்வாறாக இவரது வாழ்நாட்களை ஜமாஅத்தில் இருப்பதற்கே அர்ப்பணித்து விட்டாராம். குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு சிறுமியை வடை விற்பதற்கு அனுப்பி விடுவாராம். இவர் அர்ப்பணிப்பு செய்து வருகிறாராம். புல்லரிக்குதய்யா உங்களின் அர்ப்பணிப்பு!

அழைப்புப் பணி செய்யாவிட்டால், மனிதன் நஷ்டம் அடைவான் என்று அல்லாஹ் அல்குர்ஆன் 103வது அத்தியாயம் ஒன்று முதல் மூன்று வசனங்களில் மனிதர்களை எச்சரிப்பதை கவனிக்கவும்.

காலத்தின் மீது சத்தியமாக! 103:1

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 103:2

ஆயினும், எவர்கள் ஈமான்கொண்டு, (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்து, சத்திய(மார்க்க)த்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொண்டும், மேலும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர,

அவரவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அல்லது நேரத்தை ஒதுக்கி தமக்குத் தெரிந்தவர்களிடம் மார்க்கத்தை எத்தி வைப்பதுதான் அழைப்புப்பணி இதை தனியாகவும் செயல்படுத்தலாம். தாங்களாகவே விரும்பி வரும் நண்பர்களுடன் சேர்ந்து அவரவர் சக்திக்கேற்ப செயல்படுவது தான் மார்க்கம். இதுவே அழைப்புப் பணி ஆகும். இப்படிப்பட்ட முன்மாதிரியைத்தான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து முஸ்லிம்கள் கற்றிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் வேறு மாதிரி!

  1. சிறு விளம்பரம், துண்டு பிரசுரம் எதுவுமின்றி லட்சக்கணக்கில் ஆட்களை திரட்டி சிறு சலனமின்றி அமைதியாக இஜ்திமா நடத்தி வந்து கொண்டிருந்த இவர்கள், சமீபத்தில் திருச்சியில் படோடபகரமான விளம்பர யுக்திகளை சமூக வலை தளங்களில் கையாண்டு பல லட்ச மக்களை திரட்டி காட்டி அரசியல் மாநாடுகளை எல்லாம் மிஞ்சி விட்டனர். அமைதியாகவோ அல்லது படோடகரமாகவோ பெரும் கூட்டத்தை சேர்த்து விட்டால், அது வெற்றியாளர்களின் கூட்டம் அல்ல என்று அகிலங்களை படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் இறைவனாகிய அல்லாஹு (ஜல்) குர்ஆனில் கூறிக்கொண்டிருப்பதை சற்றே செவிமடுங்கள்.

பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால், அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். 6:116

பெரும்பாலோரை பின்பற்றக்கூடாது என்பதும், அந்த பெரும்பாலோர் அல்லாஹ்வின் வழியிலிருந்து விலகி வெறும் யூகங்கள், கற்பனைகளைத்தான் பின்பற்றுவார்கள் என்பது அசி புத்தக கப்ஸா கதைகளை நேரடியாக கூறுவது போலவே இருக்கிற தல்லவா?

ஆயிரம் ஆண்டுகள் மக்களிடம் அழைப்புப் பணி செய்திருந்த நபி நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுக்கே அல்லாஹ் நேர்வழியைக் கொடுத்து அருள் புரிந்தான். உங்கள் பார்வையில் நூஹ்(அலை) அவர்கள் அழைப்புப் பணியில் தோல்வி அடைந்து விட்டார்களா? நீங்கள்தான் வெற்றி பெற்றிருக்கிறீர்களா? நவூதுபில்லாஹ்.

கடையை விரித்த சொடுக்கு நேரத்தில் மோடி மஸ்தான் கூட்டத்தை சேர்த்து விடுவதுதான் உங்கள் பார்வையில் வெற்றியா?

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இந்த ஆண்டில் இந்த இடத்தில் இஜ்திமா நடத்த வேண்டும். இத்தனை லட்ச மக்களை திரட்ட வேண்டும் என்றெண்ணி இஜ்திமா நடத்தினார்களா? இஜ்திமா நடத்த எங்கிருந்து பெற்றீர்கள் முன் மாதிரியை? லட்சோப லட்ச மக்கள் சேர்ந்தும் அல்லாஹ்வின் பார்வையில் என்ன பிரயோஜனம்? நல்ல பிள்ளை வேஷம் போட்டு அசி புத்தகத்தில் நீங்கள் விட்ட உங்களது யூகங்களுக்கும் கற்பனைகளுக்குமே கிடைத்த பெரும்பான்மை இது.

உங்களில் அதி அற்புத(?) ஆறு நம்பர் அமல்களை பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்….

Previous post:

Next post: