“தக்லீத்”  ஓர் கூரிய பார்வை!

in 2019 ஏப்ரல்

“தக்லீத்”  ஓர் கூரிய பார்வை!

கு. நிஜாமுத்தீன்

பிப்ரவரி 2019  தொடர்ச்சி….

முஹம்மது(ஸல்)  உம்மத்தவரிடம் தக்லீத்:

மக்கத்து நகரில் முன்னோர்கள், முன்னோர்கள் என்று மூழ்கிக் கிடந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து நபி பட்டத்திற்குப் பிறகு தக்லீதை வன்மையாக எதிர்த்தார்கள், தக்லீதை பற்றிய இவர்களின் பிரச்சாரம் வலுப்பட்டவுடன் தக்லீத் நேயர்களின் கோபமும் துளிர் விட்டு வளர்ந்தது. இந்த கோபத்தின் விளைவால் தாம் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு நாடு துறந்து செல்லக்கூடிய நிலைக்கு நபி(ஸல்) ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் ஹிஜ்ரத் பயணமே பிந்திய வெற்றிக்கு முதல் படி யாக அமைந்தது. சுமார் மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகாலம் இப்ராஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளாக வந்தவர்களிடம் தான் நபி(ஸல்) அவர்களும் வந்தார்கள். இப்ராஹீம் நபி விட்டுச் சென்ற அதே இறை நேசப் பணியைத் தான் இவர்களும் மேற்கொண்டார்கள். இந்த தூய பணியை இப்ராஹீம்(அலை)இன் வாரிசுகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நம் முன்னோர்களெல்லாம் மூடர்களா? அவர்களுக்குத் தெரியாத மார்க்கமா இந்த முஹம்மதுக்கு தெரிந்துவிட்டது? என்று கேலி பேசினார்கள்.

அல்லாஹ் இறக்கிவைத்ததைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போதெல்லாம், அவர்களின் பதில் இவ்வாறு இருந்தது. “எங்கள் மூதாதையர்கள் எந்த வழியில் சென்றார்களோ அந்த வழியையே நாங்களும் பின்பற்றுவோம்”  (அல்குர்ஆன்: 2:170, 5:104, 31:21, 43:23)

இருப்பினும் ரசூல்(ஸல்) அவர்களின் அயராத உழைப்பின் மூலம் சமூகத்தின் பெரும் பகுதி விழிப்புணர்ச்சிப் பெற்றது. தக்லீத் என்ற மாயையை அகற்றி சுய சிந்தனை, ஆராய்ச்சித்திறன் மிக்கவையாக மாறியது. நபி(ஸல் அவர்களின் போதனையை நேரடியாகக் கேட்டு தெளிவு பெற்றவர்களிடம் தக்லீதை புகுத்த முடியாமல் ஷைத்தான் தோல்வியுற்றான் என்று உறுதியாகக் கூறலாம். ரசூலுல்லாஹ்வின் மறைவிற்குப் பிறகு கூட நபித்தோழர்கள் எந்த விஷயத்திற்கும் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு வழங்கிடவில்லை. அப்படியே வழங்கினாலும் அதைப் பரிசீலிக்காமல் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் மக்கள் இல்லை (உதாரணம்: உமர்(ரழி)வின் மஹர் தொகை நிர்ணயத்தை ஒரு பெண் தட்டிக் கேட்டதைக் கூறலாம்) ஆயினும் இந்த நிலை கடைசி காலம் வரை நீடிக்கவில்லை. மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே ஷைத்தான் மீண்டும், “தக்லீத் நோயை” விதைக்க ஆரம்பித்து விட்டான். இஸ்லாமிய ஆட்சியில் ஏற்பட்ட குழப்பமும் இதற்குக் காரணமாக இருந்தது. விளைவு! கடந்த 1200 வருடங்களாக இந்த உம்மத்தின் பெரும் பகுதி தக்லீத் நோயால் பிடிக்கப்பட்டு இறைவன் 7:179ல் கூறுவது போல் மிருகங்களை விட கேவலமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதனையே மவ்லவிகள் “அல் அவாம் கல் அன்ஆம்” எனக் கூறி பொதுமக்களை இழிவாகக் கருதி வருகின்றனர்.

“இத்திபா”   நேசர்கள்,  “தக்லீதின்”   தலைவர்களாக்கப்பட்டார்கள்!

முஹம்மது(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் ஒரு நூற்றாண்டு கழித்து இன்று தக்லீதின் தலைவர்களாக கருதப்படும் நான்கு இமாம்கள் பிறக்கிறார்கள். இவர்களுடைய இதயத்திலும், இவர்களைப் போன்ற இன்னும் சிலருடைய இதயத்திலும் இறைவன் இஸ்லாமிய கல்வியின் மோகத்தை வளர்த்தான். அதன் விளைவால் அந்த நன்மக்கள் இஸ்லாமிய கல்வியை (அவரவர் பகுதியில் கிடைத்தவற்றை) ஆழ்ந்து கற்றார்கள். அவர்களது வாழ்க்கையை பொறுத்தவரை மார்க்க விஷயங்களில் விளங்கி, ஆராய்ந்து பின்பற்றுதல் என்ற நிலையிலேயே இருந்தது. இன்றைய தக்லீத் நேயர்களைப் போல் அந்த இமாம்களும் தக்லீத் நேயர்களாகவே இருந்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்?

அவர்கள் தம்மிடம் உள்ள எந்த பிரச்சனைக்கும் தாம் அறிந்த குர்ஆன், ஹதீஃதை வைத்தே நன்கு சிந்தித்து விளங்கி தீர்வு எழுதினார்கள். எந்நிலையிலும் யாரையும் அவர்கள் தக்லீத் செய்பவர்களாக இருக்கவில்லை. அதே போன்று தம்மையும் யாரும் தக்லீத் செய்யக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இதை சென்ற தொடரில் விளக்கமாகக் கூறியுள்ளோம். இப்படி தக்லீதை எதிர்த்து சுய சிந்தனையை வளர்த்துக் கொள்ள சொன்னவர்களே இன்று தக்லீதுக்கு முன்னோடிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

அந்த இமாம்கள் வாழ்ந்த சுமார் 160 வருடகால கட்டத்தில் அந்த இமாம்களுக்குள் கருத்து வேறுபாடு தோன்றியது. சரித்திர உண்மை! இமாம்களின் விளங்கிப் பின்பற்றும் நிலையை முகல்லிதுகள் இங்கு தான் உணரவேண்டும். தம் காலத்திலேயே மக்களால் அறிஞராக மதிக்கப்பட்ட ஒரு நபர் ஒரு தீர்வை சொன்னதும், அதை அடுத்த அறிஞர் அப்படியே தக்லீத் செய்யவில்லை. மாறாக எந்த மூல ஆதார அடிப்படையில் இந்த தீர்வு கொடுக்கப்பட்டது? என ஆராய்ந்தார்கள், இதனால்தான் இமாம் களுக்குள் கருத்து வேறுபாடு தோன்றியது.

உதாரணமாக தொழுகையில் ஆரம்பத்தில் “பிஸ்மில்லாஹ்”வை சப்தமாக ஓதுவதா? மெதுவாக ஓதுவதா? அல்ஹம்துக்கு பிறகு “ஆமீனை” உரத்துக் கூறுவதா? சப்த மின்றி கூறுவதா? போன்ற சர்ச்சைகளைக் கூறலாம்)

முகல்லிதுகள் கூறுவது போல் இந்த உம்மத் தக்லீத் செய்துதான் ஆகவேண்டுமெனில், நான்கு இமாம்களில் மூன்று இமாம்கள் ஒருவரை தக்லீத் செய்துவிட்டுப் போய் இருக்கலாம். மாறாக நான்கு பேரும் தனித்தனியாக இயங்கியதிலிருந்தே தக்லீத் மாயை அவர்களை அணுகவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.

தக்லீத் வாதம் மகத்தானதொரு சாபக்கேடு :

மார்க்க விஷயத்தில் எப்பிரச்சனையையும் துல்லியமாக ஆழ்ந்து அணுக வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதை விடுத்து முன் சென்ற நல்லடியார்(?)கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்து பின்தொடர்ந்தால் நமது கியாமத் வாழ்வில் மகத்தான கெடுதிகளைச் சந்திக்க வேண்டி வரும். இதற்கான ஆதாரங்களை கொண்டு எழுதுகிறேன்.

ஈஸா(அலை) அவர்களின் உம்மத்தின் நிலை நமக்குச் சரியான படிப்பினையாகும். அந்த இறைத்தூதர் அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்தார். இந்த அழைப்பிற்குரிய ஆதாரமாக “இன்ஜீல்” எனும் வேதத்தையும் பெற்றிருந்தார். அந்த வேதமும் (குருமார்களால் திருத்தப்படுவதற்கு முன்) அந்த சமூகத்தினருக்குத் தெளிவான வழி முறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தது. இருந்தும் வேதத்திற்குரியவர்களாக ஈஸா(அலை) அவர்களின் முழு சமுதாயமும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல், வேதம் குருமார்களுக்கும், சன்னியாசிகளுக்கும் மட்டுமே உரியது. அதை அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்று தாரை வார்த்து விட்டு, தமது மார்க்கப் பிரச்சனை களுக்கு அந்த சன்னியாசிகளிடமும், குருக்களிடமும் தீர்ப்புக் கேட்டுச் சென்றார்கள், அவர்கள் சொன்ன தீர்வை அப்படியே “தக்லீத்” செய்தார்கள். இதன் விளைவை இறைவன் திருமறையில் கூறுகிறான்.

(கிறித்தவர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு தம் பாதிரிகளையும், தம் சன்னியாசிகளையும் தெய்வங்களாக எடுத்துக் கொண்டார்கள். (9:31)

தக்லீதின் நிலை இறைவனுக்கு இணை வைத்தலில் முடியும் என்பதற்கு இந்த வசனமும், இதற்கு நபி(ஸல்) கொடுத்த விளக்கமும் தகுந்த சான்று. அன்றைய கிறித்தவர் களைப் பொறுத்தவரை தாம் நம்பியுள்ள மார்க்க போதகர்களிடம் தவறே நிகழாது என்று திடமாக நம்பி இருந்தார்கள். அந்த போதகர்களின் ஃபத்வாதான் மார்க்கத்தின் ஃபத்வா என்றும் அதில் மாற்றம் செய்யவோ, அல்லது அதற்குரிய ஆதாரம் குறித்து சிந்திக்கவோ கூடாது என்ற நிலை தான் மேற்கண்ட வசனத்தில் எடுத்துக் காட்டப் படுகின்றது. இந்த வசனம் இறங்கியவுடன் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய…

அதீஇப்னு ஹாத்தம்(ரழி) அவர்கள் யா ரசூலுல்லாஹ் இந்த வசனத்தில் எனது முந்தைய மார்க்கப் போதகர்களை தெய்வங்களாக நாங்கள் எடுத்துக் கொண்டதாக இறைவன் கூறுகிறானே. நாங்கள் அவர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே எனக் கேட்கிறார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அழகான விளக்கம் கூறினார்கள். உங்கள் மார்க்கப் பிரச்சனைக்கு தீர்வு கேட்டு பாதிரிகளிடம் சென்று அவர்கள் ஒரு தீர்வை கூறியதும், அதாவது அவர் ஒன்றை ஹலால் என்றால் ஆமாம்! அது ஹலால்தான் என்றும், அவர் ஒன்றை ஹராம் என்றால் ஆமாம்! அது ஹராம் என்றும் இறை வேதத்தோடும், இறை தூதர் ஈஸா(அலை) அவர்களின் வழிமுறையோடும் ஒப்பிட்டுப் பார்க்காமல் “தக்லீத்”(கண்மூடிப் பின்பற்றச்) செய்தீர்களல்லவா? அந்த பாதிரி, சன்னியாசிகளை தெய்வ நிலைக்கு உயர்த்தியதன் பொருள் இதுதான். (ஹதீஃதின் கருத்துதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதாரம் அதே ஸஹாபி அறிவிப்பு மூலம் திர்மிதீ அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது)

படிப்பினை பெறுவோமா?

மேற்கண்ட வசனத்தையும், விளக்கத்தையும் இன்னும் பலமுறை படியுங்கள், ஆழ்ந்து படியுங்கள். இன்றைய முகல்லிதுகளின் நிலைக்கு இச்சம்பவம் ஒத்துப் போகிறதா இல்லையா?

A1     அன்றைய கிறித்துவர்கள், பாதிரிகளையும், சன்னியாசிகளையும் நம்பி தக்லீத் செய்தார்கள்.

A2     இன்றைய முஸ்லிம்கள், இமாம்களையும், மெளலவிகளையும் நம்பி தக்லீத் செய்கிறார்கள்.

B1     அன்றைய கிறித்துவர்களிடம் இறை வேதமாகிய “இன்ஜீலும்” ஈஸா(அலை) வழிமுறையும் இருந்தும் அதை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

B2     இன்றைய முஸ்லிம்களிடமும் இறை வேதமாகிய குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் முழு வழிமுறையும் இருக்கிறது. இவர்களும் கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.

C1     அன்றைய கிறித்துவ போதகர்களிடம் மூல ஆதாரங்களை விடுத்து முன்னோர் வழியில் தீர்ப்பு வழங்கும் பழக்கம் இருந்தது.

C2     இன்றைய மார்க்க போதகர்களாகிய மெளலவிகளிடமும் மூல ஆதாரங்களைப் பார்க்காமல் முன்னோர் வழியில் தீர்ப்பு வழங்கும் பழக்கம் இருக்கிறது.

9:31ல் கூறப்படும் அப்பட்டமான நிலைக்கு இன்றைய முஸ்லிம்களும் ஆளாகி விட்டார்கள்.

முன்னய நபிமார்களுக்குக் கொடுக்கப்பட்ட இறைநெறிநூல்களும் அவர்களது நடைமுறைகளும், அவர்கள் மீது பிரியம் வைத்து, அவர்களைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டவர்களாலேயே திரிக்கப்பட்டது போல், சிதைத்துச் சீரழிக்கப்பட்டது போல, இறுதி நெறிநூலான அல்குர்ஆனும், நபி முஹம்மது(ஸல்) அவர்களின் நடைமுறைகளும், திரிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் இருந்தால், அல்லாஹ்விடமிருந்து நேரடியாக வஹியைப் பெறும் ஒரு நபி வந்தே சத்தியத்தைப் போதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் அல்லாஹ்வுடைய பெருங்கருணை அவனது இறுதி நெறிநூலான அல்குர்ஆனையும், இறுதி நபி யான முஹம்மது(ஸல்) அவர்களின் நடை முறையையும் திரிக்கவோ, சிதைக்கவோ முடியாமல் பாதுகாத்து வருகிறான். உலகம் அழியும் வரை பாதுகாத்து வருவான். எனவே மக்களிடையே சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்க புதிதாக ஒரு நபி வரவேண்டிய அவசியமில்லை. நபி(ஸல்) அவர்களே இறுதி நபி அவர்களுக்குப் பின் நபி வரமுடியும் என வாதிடுகிறவர்கள் பொய்யர்களே, மக்களிடையே சத்திய மார்க்கத்தை, இஸ்லாத்தை எடுத்துப் போதிக்க அல்குர்ஆனும், ஹதீஃதும் போதுமானவை. இரண்டுக்கு மேல் அதிகப்படுத்துவதும் குற்றம், இரண் டைக் குறைப்பதும் குற்றமாகும்.

தக்லீத் செய்வோரின் கீழ் நிலை:

மனிதன் எந்த ஒரு வி­யத்தையும் நேருக்கு நேர் பார்த்து அதன் நன்மை தீமைகளை உணர்ந்தால் ஓரளவு படிப்பினை பெறுவான். மறைந்த நிலையில் உள்ள லாப நட்டங்களை அவன் பெரும்பாலும் பொருட்படுத்திக் கொள்வதில்லை. இது மனித இயல்புதான். ஆனாலும் இஸ்லாத்தை பொறுத்தவரை இறைவன் கூறக்கூடிய மறைநிலைகளை நம்பியே ஆக வேண்டும். இங்குதான் மனிதனின் ஈமான் பலப்படுத்தப்படுகிறது. புலனுணர்விற்கு எட்டாத சம்பவங்களை குறித்தெல்லாம் இறைவன் எடுத்தோதும் போது மெய் சிலிர்த்து ஏற்றுக் கொள்கிறோம். இதே அடிப்படையிலேயே தக்லீதிற்குரிய தண்டனையை ஏகன் கூறிக் காட்டுகிறான்.

எவன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் தன் கண்களை மூடிக் கொள்கிறானோ, அவனுக்காக நாம் ஷைத்தான்களை (மனித உருக்களில் உட்பட) ஏற்படுத்தி விடுகிறோம். அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான். இன்னும் அந்த ஷைத்தான்கள் அவனை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகிறார்கள். ஆனாலும் நாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். எதுவரையெனில் (தீர்ப்புக் கூறும் நாளின் நிதர்சனமாக உண்மைகளைக் காண) நம்மிடம் வரும்போது (வழிகெடுத்த ஷைத்தான்களிடம்) ஆ! உனக்கும், எனக்குமிடையில் இரு கிழக்குத் திசைகளுக்கும், மேற்குத் திசைகளுக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே! (என்னை வழிதவறச் செய்த) இந்த நண்பன் மிகவும் கெட்டவன்” என கூறுவான். (43:38)

(அப்போது) நீங்கள் (சிந்தித்து சீர்பெறாமல்) அநியாயம் செய்து கொண்டபடியால் இன்று நிச்சயமாக உங்களுக்கு யாதொரு பயனும் ஏற்படாது. நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக  இருப்பீர்கள் (என்று அழுத்தமாக கூறப்படும்) (43:39)

தக்லீத் செய்பவர்களின் நரகக் கூச்சல்:

நெருப்பில் அவர்கள் முகங்கள் புரட்டப்படும் அந்நாளில் ஓ (எங்கள்) கை சேதமே! நாங்கள் அல்லாஹ்(வின் கட்டளை)க்கு வழிபட்டிருக்க வேண்டுமே, இத்தூதரு(டன் அவரது ஏவல் விலக்கலு)க்கும் வழிபட்டிருக்க வேண்டுமே! எனக் கதறுவார்கள். எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (சித்திந்து விளங்காமல்) எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். விளைவு அவர்களால் வழிகெட்டுப் போனோம். என்றும் கதறுவார்கள். (33:66-67)

ஒவ்வொரு கூட்டத்தாரும் நரகில் நுழையும்போதெல்லாம் (தாங்கள் நம்பிய) தம் இனத்தாரை சபிப்பார்கள். அவர்கள் யாவரும் நரகத்தை அடைந்து விட்ட பின்னர் பின்வந்தவர்கள் முன் வந்தவர்களைப் பற்றி,

“எங்கள் இறைவனே! இவர்கள்தான் எங்களை வழிகெடுத்தார்கள். ஆதலால் இவர்களுக்கு நரகத்தின் இரு மடங்கு வேதனையைக் கொடு” என்று கூறுவார்கள். அதற்கு (ந்த இறை)வன் கூறுவான். உங்களில் ஒவ்வொருவருக்கும் இருமடங்கு (வேதனை) உண்டு. அவர்களின் முன் வந்தவர்கள் பின்வந்தவர்களை நோக்கி “எங்களை விட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது. எனவே நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட வினையின் காரணமாக நீங்களும் வேதனையை அனுபவியுங்கள்” என கூறுவர். (7:38,39)

தக்லீத் வாதிகளின் நரகப் பிரார்த்தனை:

நரகத்தில் அவர்கள் “எங்கள் இறைவா” நீ எங்களை வெளியேற்றுவாயாக, நாங்கள் வழக்கமாக (கண்களை மூடிச்) செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸஹீஹான அமல்களை செய்வோம் எனக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்து பார்க்கக் கூடியவன் சிந்திக்கும் பொருட்டு நாம் உங்களுக்கு (உலகில்) நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரும் வந்திருந்தார். எனவே நீங்கள் (அவர் வழி செல்லாமல் குருட்டுத்தனமாக செயல்பட்டதற்கான பலனை) சுவையுங்கள். அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை. (என்று கூறுவான்) (35:37)

தக்லீதின் கெடுதிகளை இத்துணை ஆழமாக எடுத்துக் காட்டுகிறது. உலகில் நடக்கும் அவ்வளவு கெடுதிகளுக்கும் இந்த தக்லீதே மூலக்காரணமாகும். நமது முஸ்லிம் சமுதாயம் தக்லீதை விட்டு விடுபட்டேயாக வேண்டும். எந்த ஒரு பிரச்சனையையும் ஆழ்ந்து சிந்தித்து தேவையான ஆதாரங்களோடு அணுகி செயல்பட வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமிடமும் இந்த நிலை வந்துவிட்டால் உலகில் பல புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்திக் காட்டிவிடலாம். எடுத்துக் கொடுத்த ஆதாரம் போதவில்லை எனில் எழுதுங்கள், இன்னும் விரிவாக தெளிவுபடுத்துகிறோம். தக்லீதை நியாயப்படுத்த ஆங்காங்கே மெளலவிகளால் கொடுக்கப்படும் ஆதாரங்களையும் அனுப்பினால் பரிசீலிப்போம்.

Previous post:

Next post: