அமல்களின் சிறப்புகள்….

in 2019 மே

அமல்களின் சிறப்புகள்….

  1. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ­வ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.

திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி…

அமல்களின் சிறப்பு (அசி) புத்தகத்திலுள்ள திக்ரின் சிறப்புகள் பகுதி ஆய்வு செய்யப்படும் இந்த நேரத்தில், தப்லீக் ஜமாஅத்தினரின் வழமையான அமல்களை சென்ற இதழில் ஆய்வு செய்திருந்தோம். அதன் தொடர்ச்சியாக, “தப்லீகின் ஆறு நம்பர்” குறித்து எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த ஆறு நம்பரைப் பற்றி, நாம் ஆய்வு செய்து வருகின்ற அசி புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இந்த ஆறு நம்பர் “ஈருலக வெற்றிக்கு வழி” என்று ஒரு சிறு நூலும் தப்லீக் ஜமாஅத்தினரால் தொகுக்கப்பட்டு “ஸலாமத் பதிப்பகம், சென்னை” அவர்களால் வெளியிடப்பட்டிருக்கும் அளவிற்கு ஒரு முக்கியத்துவத்தை தப்லீக் ஜமாஅத்தினர் இந்த ஆறு நம்பருக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அந்த ஆறு நம்பர் என்னவென்றால்,

  1. கலிமா, 2. தொழுகை
    3. இல்மும், திக்ரும் 4. இக்ராம்
    5. இக்லாஸ் 6. தாவத் இலல்லாஹ்

வைகளைப் பற்றி சிறிது கவனிப்போம். இந்த புத்தகத்தின் முதல் நம்பர் “லா இலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” எனும் “கலீமா”வாம். அல்குர்ஆன் கூறிக் கொண்டிருக்கின்ற அத்தனை விடயங்களுக்கும் அடிப்படையே இந்த கலீமாதான். குர்ஆன் இதைப்பற்றி கூறாதது போல, தப்லீக் ஜமாஅத்தினர் தாங்களாகவே இந்த கலீமாவைக் கண்டுபிடித்தது போல “ஈருலக வெற்றிக்கு வழி (தப்லீக்கின் ஆறு நம்பர்)” என்று பிரசுரித்து தம்பட்டம் அடித்திருக்கிறார்கள். பரிசுத்த நெறிநூலை இவர்களின் தஃலீமில் படிப்பது இல்லை. நாளடைவில் குர்ஆனுக்கும், இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நிலை ஏற்பட திட்டமிட்டு வழிவகுத்து இருக்கிறார்கள் என்ற ஐயம் அறிவுள்ள எவருக்கும் ஏற்படத்தான் செய்யும். அதே நேரத்தில் குர்ஆனை முதுகுக்குப்பின் வைத்துவிட்ட இந்த அறிவிலிகள், ஈருலக வெற்றிக்கு வழி இந்த தஃலீம் புத்தகம் மட்டும் தான் என்ற உணர்வில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜமாஅத்தில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் இவர்களின் நிலை முஸ்லிம் ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட மெய்வழி சாலை என்ற ஒரு புது வழிபோல, தப்லீக் என்ற இதுவும் அடுத்த புது வழியாகத்தான் காட்சி தரும்.

இரண்டாம் நம்பர் தொழுகை! ஐந்து வேலை ஃபர்ளு தொழுகைகளை இமாம் ஜமாஅத்தில் தான் தொழவேண்டும் என்ற கண்டிப்பை பிறர் இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்ற அளவிற்கு இவர்கள் பேணுதலாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால், “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே தொழுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்த பின்னும் (அறிவிப்பாளர் : மாலிக் இப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, அஹ்மத்), அந்த நபி மொழியைப் பின்பற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்கள். இதன் மூலம், “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது” என்ற அல்குர்ஆன் 33:21 இறை வசனத் தையும் இவர்கள் புறக்கணித்தவர்கள் ஆகிறார்கள்.

மூன்றாம் நம்பர் இல்மும், திக்ரும்! அதாவது கல்வியும், தியானமும் என்கிறார்கள். கல்வியை அதாவது மார்க்க கல்வியை அவர்கள் இரு வகைகளாகப் பிரிக்கிறார்கள். ஒன்று பளாயில், மற்றொன்று மஸாயில், பளாயில் கல்வியை பள்ளியிலும், வீட்டிலும் ஆக தினமும் இரு தஃலீம் செய்வதன் மூலமாகவும், மஸாயில் கல்வியை பிக்ஹு நூல் கள் மூலமாகவும், தக்வாவுடைய ஆலிம்கள் மூலமாகவும் கற்றுக்கொள்ள வேண்டுமாம். கூர்ந்து கவனியுங்கள், பளாயில் கல்வியை அசி புத்தக தஃலீம் மூலமாகவும், மஸாயில் கல்வியை பிக்ஹு நூல்கள் மூலமாகவும் கற்றுக்கொள்ள வேண்டுமாம். அதாவது குர்ஆனையும், ஹதீஃத்களையும் இவர்கள் தஃலீம் செய்யமாட்டார்களாம். இரண்டையும் ஓரம் கட்டிவிட்டார்கள். எனவே, இவர்கள் கூறக்கூடிய இல்மும், திக்ரும் இஸ்லாம் கூறிக் கொண்டிருப்பவைகளில் இல்லை என்பதை அறிவோமாக.

நான்காவது நம்பர் இக்ராம்! உலமாக்களுடன் கண்ணியமாகவும், பெரியவர்களுடன் மரியாதையாகவும், சிறுவர்களுடன் அன்போடும் நடந்து கொள்ள வேண்டுமாம். இதைப் பற்றி ஆய்வு செய்வதற்கு ஒன்றும் இல்லை. ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் இதற்குள் நுழைந்து பார்த்தால், பளிச்சென்று தெரிந்து விடும். இது பாசாங்கு என்று. உள் நுழைவோமா? உலமாக்கள் என்று இவர்கள் கூறக்கூடியவர்கள் வேறு யாரும் இல்லை. மவ்லவி ஸனது (பட்டம்) பெற்றிருப்பவர்கள், பெரும்பாலும் பள்ளி வாயில்களில் இமாம் வேலையில் இருப்பவர்கள். இவர்களைப் பகைத்துக் கொண்டால், இறைநெறி நூல் அல்குர்ஆனை ஓரம் கட்ட முடியாது. கப்ஸா ஹதீஃத்களைக் கூறமுடியாது என்று நினைத்துக் கொண்டு கண்ணியப்படுத்துகிறார்கள். ஏனென்றால் அவர்களை குர்ஆன், ஹதீஃத் தெரிந்தவர்களாக இவர்கள் பாவிக்கிறார்கள்.

உண்மையில் இவர்கள் யாரை உலமாக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும் இவர்களைப் போல குர்ஆன், ஹதீஃத் தெரியாதவர்கள் என்ற உண்மை தப்லீக் ஜமாஅத்தினருக்குத் தெரியாது. ஓரிருவருக்கு தெரிந்திருந்தால் கூட இவர்கள் கொடுக்கும் கண்ணியத்தில் அவர்களும் விழுந்து விடுகிறார்கள். உண்மை நிலை இப்படி இருப்பதால்தான், இவர்கள் கூறும் அந்த உலமாக்கள் இவர்களுடைய வழியில் குறிக்கிடுவது இல்லை. குறுக்கிடாததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. மூன்று நாள் ஜமாஅத்துக்குப் போக மற்றவர்களை நச்சரிக்கும் இவர்கள் இந்த உலமாக்களை அழைப்பது இல்லை. நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? நம்மீது விழுந்து பிரண்டாமல் இருந்தால் சரி என்று அவர்களும் இவர்களை விட்டு விடுகிறார்கள்.

எனவே, இவர்களது வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இவர்கள் கூறும் இக்ராம், குர்ஆன், ஹதீஃத் கூறக்கூடிய இக்லாஸான இக்ராம் அல்ல. கண்ணியப்படுத்துவதாக ஒரு பாவ்லா! அவ்வளவுதான். ஏறக்குறைய மேற்கூறிய காரணங்களை மையமாகக் கொண்டுதான், பெரியவர்களுடன் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுவதும், இவர்கள் கூறும் பெரியவர்கள் நாம் நினைப்பது போல வயதில் மூத்தவர்கள் மட்டும் அல்ல என்பதையும் இவர்களது செயல்களிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. பெரும்பாலும் பள்ளி வாயிலின் பொறுப்பில் உள்ளவர்கள் இதில் அடங்குவர். பொறுப்பில் உள்ளவர்க ளுக்கு கூடுதல் மரியாதை கொடுப்பார்கள். இதிலும் இக்லாஸ் இல்லை, அடுத்து சிறுவர்களுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களை வயப்படுத்தி, குர்ஆன், ஹதீஃத் காட்டாத இவர்களது வழிக்கு சிறுவர்களைக் கொண்டு வரவேண்டும் என்ற நீண்ட கால திட்டமிடல் இது. இக்ராம் என்ற பெயரில் இவர்கள் காட்டும் கண்ணியத்தைப் பற்றி இன்னும் நிறைய எழுத முடியும். அவற்றை தவிர்த்துக் கொண்டோம். ஆக, இவர்களின் இக்ராம் பாசாங்கு. அது குர்ஆனிலும் இல்லை, ஹதீஃதிலும் இல்லை.

ஐந்தாம் நம்பர் இக்லாஸ்! எந்த ஒரு செயலையும் அல்லாஹ்வின் பொருத் தத்தை மட்டும் நாடி செய்ய வேண்டும் என்ற கோட்பாடு இது. இங்கேதான் ஆஹா ஓஹோ என்று இவர்களைப் புகழத் தோன்றும். அவசரப்பட்டு புகழ்ந்து விடாதீர்கள். இது அவ்வளவும் வேடம்! நாம் ஏற்கனவே தெரிவித்திருந்த “நல்ல பிள்ளை வேடம்!!” எந்த ஒரு அமலையும் அல்லாஹ் (ஜல்)வும், அவனது தூதரும் (ஸல்) ஏவியபடி செய்யமாட்டார்களாம்! இது இவர்களின் உள் நோக்கம். ஆனால் வெளியே பிறருக்கு காட்டுவது மட்டும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அத்தனையும் செய்கிறார்களாம். இதில் கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க்அவுட் ஆகிறது என்று பாருங்கள். ஒவ்வொரு செயலையும் இக்லாஸுடன் செய்ய வேண்டும் என்று ஆணித்தரமாக சொல்லிக்கொண்டிருப்பதால், இவர்களது ஒவ்வொரு செயலும் நல்ல செயல் என்ற மாயையை ஏற்படுத்தி விட்டார்கள். திரும்பத் திரும்ப ஒன்றை சொல்லிக் கொண்டிருப்பதால் அது உண்மை போல ஆகிவிடுகிறது என்ற கோயபல்ஸ் தத்துவத்தை இங்கே நிலைநாட்டி விட்டார்கள். இவை யயல்லாம் அல்லாஹ்விடம் ஒர்க்அவுட் ஆகாது என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள்.

தாவத் இலல்லாஹ்! இது ஆறாம் நம்பர்! இறுதி மூச்சு உள்ளவரை, மக்களை அல்லாஹ்வின் பாதையில் அழைத்துக் கொண்டிருப்பதாம். இவர்கள் கூறக்கூடிய அல்லாஹ்வின் பாதை என்பது, அசி புத்தகத்திலுள்ள குர்ஆன், ஹதீஃதில் இல்லாத அமல்களைத்தான். எனவே, இவர்களின் தாவத் இலல்லாஹ் இஸ்லாம் அல்ல என்பதைப் புரிந்து கொள்வோமாக.

எனவே, தப்லீக் ஜமாஅத் சகோதரர்களே! அகில உலகிற்கும் அல்லாஹ் இறக்கி அருள் புரிந்திருக்கின்ற மேலான கண்ணியம் வாய்ந்த குர்ஆனையும், அவனது தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கொடுத்துள்ள ஹதீஃத்களையும் மட்டும் பின்பற்றி ஈருலகிலும் வெற்றிபெற ஈடுபடுங்கள் என்றும், பிறரிடமும் உங்களால் முடிந்த அளவிற்கு நேரிய மார்க்கத்தைக் கூற பாடுபடுங்கள் என்றும் உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

(6-ம் நம்பர் பற்றி இன்ஷா அல்லாஹ் இனியும் வரும்)

Previous post:

Next post: