ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2019 மே

  ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

M.T.M. முஜீபுதீன், இலங்கை

2019 மார்ச் தொடர்ச்சி…..

உழைத்து வாழ்வதன் சிறப்புகள் பற்றி இஸ்லாம் :

மனிதன் மற்றவர்களிடம் சார்ந்து வாழ்வதை விட உழைத்து வாழ்வது சிறந்தது ஆகும். இதனால் அவனுடைய பொருளாதாரம் வளர்ச்சி அடைவதுடன், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் அடிப்படையாக அமைகின்றது. கவனியுங்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“எனது உயிர் யாருடைய கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவன் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி, அதை தமது முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவரிடம் வந்து யாசிப்பதை விடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம், மறுக்கவும் செய்யலாம்.” (புகாரி: 1470)

ஒரு மனிதன் யாசிப்பதை விட உழைத்துச் சாப்பிடுவது சிறந்தது ஆகும். இந்த உண்மை இங்கு முன்வைக்கப்படுகின்றது. ஒருவனிடம் செல்வம் இல்லாத சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வின் நல் அருளைப் பெறுவதற்காக, நபித் தோழர்கள் கூலி வேலை செய்த பணத்தினை எளிய மக்களுக்கு கொடுத்து உதவி இருக்கிறார்கள். அபூ மஸ்வூத்(ரழி) கூறியதாவது :

நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்ய வேண்டும் என ஏவினால் எங்களில் ஒருவர் கடைத் தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரு கையளவு தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் செய்து) விடுவார். ஆனால் இன்றோ எங்களிடம் சிலரிடம் ஓர் இலட்சம் (திர்கம் : தீனார்) வரை உள்ளது. (புகாரி 1416)

அன்று ஈமான் கொண்ட நபித் தோழர்கள் தர்மம் செய்வதன் மூலமாக நரக நெருப்பின் வேதனைகளிலிருந்து தவிர்ந்து வாழ முற்பட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“பேரீச்சம் பழத்தின் சிறு துண்டை யேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்”  (புகாரி: 1417)

கணவன் உழைத்த கூலியில் அல்லது பொருட்களை மனைவி தான தர்மம் செய்தாலும் இருவருக்கும் நன்மை கிடைக்கும். பின்வரும் நபி மொழியைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறு வாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளது கணவனுக்கும் கிடைக்கும். அது போலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது”. (புகாரி: 1425)

அல்லாஹ்விடம் நன்மையை நாடியவர்களாக தர்மம் செய்பவர்களுக்கு நிறைய நன்மை இருப்பதாக அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறுகின்றான். கவனியுங்கள் :

அல்லாஹ் கூறுகின்றான் :

“யார் தங்கள் பொருட்களை, (தானதர்மங்களில்) இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்”  (அல்குர்ஆன் : 2:274)

ஆகவே ஜகாத், ஸதகா போன்ற தான தர்மங்களும் மக்களின் வறுமையை நீக்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் பிரதான இடம் வகிக்கின்றது. ஆனால் தான தர்மம் வழங்கும் போது ஒருவர் நல்ல பொருட்களையே தர்மமாகக் கொடுத்தல் வேண்டும். மக்களுக்கு பயன்படுத்த முடியாத பொருட்களைக் கொடுக்கக் கூடாது. அத்துடன் தானதர்மங்களை பெருமையை எதிர்பார்த்துக் கொடுக்கக் கூடாது. தான தர்மம் வழங்குவதால் செல்வம் குறைந்து வறுமை வந்துவிடும் என வீணாக பயப்பட வேண்டாம். கவனியுங்கள் :

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்தும் நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்றவற்றி லிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள் அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள். ஏனெனில் (அத்தகைய பொருட்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்) கண்மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்த) தேவையற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கிறான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 2:267)

அத்துடன் அல்குர்ஆனின் 2:267 முதல் 273 வரையுள்ள வசனங்கள் தான தர்மங்களை பெற தகுதியுடையவர்களின் தன்மைகளையும், விளக்குவதை கவனியுங்கள். தான தர்மம் செய்வது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையாகும். தர்மம் செய்ய இயலாவிடின் நல்ல காரியங்களையாவது செய்தல் வேண்டும். அபூமூஸா(ரழி) கூறியதாவது :

“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்வதற்கான பொருள் ஏதும் கிடைக்காவிட்டால்…?” எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்” என்றனர். தோழர்கள் “அதுவும் முடியவில் லையாயின்” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை யாயின்” என்றதும் “நற்காரித்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!” எனக் கூறினார்கள். (புகாரி : 1445)

தான தர்மங்களை மக்கள் மேற்கொள்ளும் போது மக்களின் வறுமை நீங்குகின்றது மக்களின் நல்லுறவு சிறப்படைகின்றது. களவு, பொறாமை போன்ற தீயச் செயல்கள், குற்றங்கள் குறைந்து, சுமுகமான நல்ல உறவு வளர்கின்றது.

பெருநாள் தர்மங்களை வழங்க வழி காட்டும் மார்க்கம் இஸ்லாம் :

முஸ்லிம்களுக்கு இரு பெரு நாட்கள் உண்டு. அந்த பெருநாட்களில் மக்கள் உணவுகள் பெற்றுக் கொள்ளாது கஷ்டத்திற்கு உட்படாது தவிர்க்கிறது நபிவழிமுறை நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களிடையேயுள்ள அடிமை, அடிமையில்லாதார் அனைவர் மீதும் கடமையாக இருந்தது.  புகாரி : 1504)

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழு கைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். (புகாரி : 1503)

இதேபோல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு பின்தொடர்ந்து வரும் மூன்று நாட்களும் உட்பட்ட தேதிகளில் வசதியுடைய மக்கள் தமது குடும்பத்தின் சார்பாக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை அறுத்து தமது குடும்பத்தின ருக்கும், ஏழைகளுக்கும் வழங்க நபிவழியில் சிறந்த நடைமுறைகள் உண்டு. இதனால் முஸ்லிம்கள் தமது பெருநாள் தினங்களில் உண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு முடியும். அத்துடன் பெருநாள் தினங்களில் கூடியளவில் தர்மம் வழங்குவதற்கு நபிவழியில் ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இன்னும் சில குற்றப் பரிகாரமாகவும், இறைவனின் பெயரில் மேற்கொள்கின்ற சில நேர்ச்சைகளை நிறைவேற்றுவதற்காக வும் தானியங்களையும், பேரீச்சம்பழம் போன்றவற்றையும், ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை ஏழைகளுக்கு அன்னதானமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளும் இஸ்லாம் மார்க்கத்தில் உண்டு. ஆனால் உணவுகளை தெய்வங்களின் பெயரில் வீண் விரயம் செய்யும் செயற்பாடுகள் இஸ்லாம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவைகளாகும். அத்துடன் அல்லாஹ்விடம் மறுமை நன்மைகளை நாடியவர்களாக கிணறு, வீடுகள், காணி, கல்வி, சுகாதாரம் போன்ற சமூக நல வசதிகளை அமைத்துக் கொடுக்க வலியுறுத்தும் நபிவழி நடைமுறை களும் இஸ்லாம் மார்க்கத்தில் உண்டு. ஆகவே அன்று நபி(ஸல்) அவர்கள் கீழ் கட்டுமான வசதிகளை பொதுமக்களின் நன்மை கருதி, செல்வந்தர்கள் செய்வதனூடாக நன்மை உண்டு என வழிகாட்டினார்கள். ஆகவே வருமான ஏற்றத்தாழ்வை நீக்கி ஏழைகளும் வாழ்வதற்கு வழிகாட்டிய மார்க்கம் இஸ்லாம் ஆகும்.

சொத்துப் பங்கீடுக்கு வழிகாட்டும் மார்க்கம் இஸ்லாம் :

உலகில் பல நாடுகளில் சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதைக் காணலாம். அன்று 1422 ஆண்டுகளுக்கு முன் அரேபியாவிலும் மற்ற உலக நாடுகளிலும் பெண்கள் பல உரிமைகள் இன்றி பல துன்பங்களுக்கு உட்பட்டனர். இதனால் பெண் என்பவள் குழந்தைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவே கணிக்கப்பட்டாள். ஆனால் இஸ்லாம் மார்க்கத்தில் பெண்களுக்கும் சொத்தில் பங்கு வழங்க சட்டம் வகுத்துள்ளது. இன்றும் உலகில் பல சமூகங்களில் பெண்கள் திருமணம் அடையும் வயது வரை மட்டுமே பெற்றோரின் வீட்டில் வாழ முடியும். பின் தனது கணவனின் வீட்டுக்கு போய்விட வேண்டும். அதனால் பெற்றோரின் வீடுகள் ஆண் பிள்ளைகளுக்கே சென்று விடுகின்றன. இதனால் அவ்வாறான சமுதாயங்களில் ஆண் பெண் சொத்து வேறுபாடு பெண் உரிமைகளைப் பாதிக்கின்றன.

ஆனால் அல்லாஹ்வின் மார்க்க நெறி நூலான அல்குர்ஆன் சொத்துப் பங்கீட்டில் பெண் பிள்ளைகள், மனைவி, தாய், சகோதரி இவர்களுக்கும் பங்கு வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது. ஆகவே இஸ்லாம் சொத்துப் பங்கீட்டின் மூலம் குடும்பங்களிலுள்ள செல்வங்களின் ஏற்றத் தாழ்வைக் குறைத்துள்ளது. சொத்துப் பங்கீடு பற்றி அல்குர்ஆன் கூறுவதை கவனியுங்கள்.

உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகின்றதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர்(தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்) செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது. (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கன் (பயபக்தியுடையோர்) மீது கடமையாகும். (22:180)

Previous post:

Next post: