நடந்து முடிந்த மக்களவைத்தேர்தல்…

in 2019 மே,தலையங்கம்

அந்நஜாத் மே 2019

ஷஃபான்-ரமழான் 1440

 1. தலையங்கம்!
 2. அல்லாஹ்வின் கடும் சோதனை! முஸ்லிம்களே சுதாரித்துக் கொள்ளுங்கள்!
 3. பயங்கரவாத ஆயுதமாகும் பருவ நிலை மாற்றங்கள்  (தொடர்-3)
 4. அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா?    (தொடர்-3)
 5. அமல்களின் சிறப்புகள்!
 6. உருவப்படம் வரையலாமா?   (பகுதி-1)
 7. எது இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த சந்திர காலண்டர்?
 8. பிறைகள் காலத்தை காட்டும் காலண்டர்!
 9. நோன்பை பற்றி குர்ஆன், ஹதீஃத் சொல்வது என்ன?
 10. ஆதிகாலவேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்…
 11. விமர்சனம்! விளக்கம்!!

தலையங்கம்!   

நடந்து முடிந்த மக்களவைத்தேர்தல்…

தேர்தலுக்கு முன் எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. தேர்தல் அன்று வாக்காளர்கள் பரபரப்பாக இருந்தனர். தேர்தல் நடந்துவிட்ட அடுத்த நாள் ஊரே அமைதியாகி விட்டது. தேர்தல் முடிவுக்காக மக்கள் இப்போது காத்திருக்கின்றனர். ஆனால், தலைசிறந்த பத்திரிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து வருகின்றன.

திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி “எலக்ஷன் கமிஷன் மோடி கமிஷனாக மாறிவிட்டது’ என்று குற்றம் சாட்டுகிறார்.

தேர்தல் ஆணையம் என்றவுடனே, அதற்குள்ள அதிகாரம், அதை முறையாக பயன்படுத்தி மத்திய அரசை பயப்பட வைத்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் அவர்களை நினைவில் கொண்டு வராமல் இருக்க முடியாது. இவரது பதவி காலத்தில் போலீஸ் மற்றும் அனைத்து அரசு துறைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

ஆனால் இப்போது? தேர்தல் ஆணையத்துக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தவே பயப்படும் ஆணையமாகத்தான் இப்போது ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. இதை நாம் சுயமாகக் கூறவில்லை தேர்தல் ஆணையமே நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டினர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் மேனகா காந்தி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் எங்களின் அதிகாரத்தை அடக்கி, பற்கள் இல்லாத அமைப்பாக தேர்தல் ஆணையத்தை முடக்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதிர்ந்து போன நீதிமன்றம் இந்த மூவரும் பிரச்சாரம் செய்ய சில நாட்களுக்கு தடை விதித்தது. இதுபோன்ற சில நீதியரசர்களால் சாமானியர்கள் சிறிதேனும் நிம்மதி பெற முடிகிறது.

தமிழ்நாட்டில் சின்னங்கள் ஒதுக்குவதில் பிரச்சனை! இதில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. தொப்பி, குக்கர், பரிசுப் பெட்டி இந்த சின்னங்கள் சாதாரணமாக தினகரனை நினைவுபடுத்துவதான நிலை அமைந்துள்ளது.

அமமுக வேட்பாளர் பெயரில் உள்ள வேறு சுயேச்சை வேட்பாளருக்கு திட்டமிட்டு பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கென்றே சின்னங்கள் ஒதுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இதில் அமமுக குறிவைக்கப்பட்டதாகவும் இதனால் தினகரன் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளாகினர் என்றும் தெரிய வருகிறது. ஏதோ ஒரு இடத்தில் இவ்வாறு நிகழ்ந்திருந்தால் தற்செயலாக நடந்த நிகழ்வு என்று ஒதுக்கிவிடமுடியும். ஆனால், திருவாரூர், பொள்ளாச்சி, அரூர், தஞ்சை, பாபிரெட்டிபட்டி ஆகிய பல இடங்களில் இதுபோன்ற குழப்பத்தை தேர்தல் ஆணையம் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அடுத்த குற்றச்சாட்டு! திமுக, அதிமுக, அமமுக என அனைத்து முக்கியக் கட்சிகளும் தமிழகம் முழுவதும் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்வதாக ட்விட்டரில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த குற்றச்சாட்டு! வருமான வரித்துறை சோதனை! பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் ரெய்டு நடத்தப்படவில்லை. பி.ஜே.பி. கூட்டணி கட்சிகள் ஆளும் மாநி லங்களிலும் ரெய்டு நடத்தப்படவில்லை. ஆனால், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வீடுகளில் சோதனை நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு! தமிழகத்தில் திமுகவின் துரைமுருகன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும், கனிமொழி, விசிகவினரின் இடங்களிலும் ரெய்டு நடைபெற்றன.

அடுத்த குற்றச்சாட்டு! எலெக்ட்ரானிக் ஓட்டிங் மெஷ´ன்! ஆந்திராவில் ஏற்பட்ட குளறுபடியால் வரலாறு காணாதவாறு விடிய விடிய இரவு முழுவதும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்காளர் ஓட்டுப் போடுவதற்கு ஒரு மெஷ´ன், யாருக்கு வாக்களித்தார் என பார்ப்பதற்கு ஒரு மெஷ´ன் ஆக வாக்காளர் நேரடி சம்பந்தப்பட்டது இரண்டு மெஷ´ன்களில் மட்டுமே. வாக்காளர் நேரடி சம்பந்தப்படாத கண்ட்ரோல் பேனலில் முறைகேடு செய்ய முடியுமோ என்ற சந்தேகம் வாக்காளர் மத்தியில் நிலவி வருவதை வாக்குச் சாவடிகளில் காணமுடிந்தது.

இந்த தேர்தலில், வாக்காளர்கள் எதையோ எதிர்பார்த்து வாக்களித்ததாக யூகிக்க முடிகிறது. அது ஆட்சி மாற்றமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

தேர்தல் ஆணையத்திடம் ஒரு வேண்டு கோள்! நடந்தவை நடந்தவைகளாக இருக் கட்டும்! இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்! பார்த்துக் கொள்ளுங்கள்.

தேர்தல் முடிவை நேர்மையாக தெரிவிக்க கடமைப்பட்டுள்ளீர்கள். இப்போது முடிவைத் தெரிவிக்கும் நேரத்தில், நீங்கள் பற்கள் இல்லாத அமைப்பு அல்ல! இனி உங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற துணிச்சலுடன் உண்மைக்கு பாடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம். உங்களின் இந்த துணிச்சலால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை நீங்கள் காப்பாற்றப் போகிறீர்கள்.

நல்ல ஆட்சியாளரை நம் தாய் நாடு இந்தியா பெற்றிட இறைவனைப் பிரார்த்திப்போம்.

Previous post:

Next post: