“தக்லீது” – ஓர் ஆய்வு!

in 2019 ஜுன்

“தக்லீது” – ஓர் ஆய்வு!

– அபூ அப்தில்லாஹ்

மறுபதிப்பு : செப்டம்பர் 1987

இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீஃதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும் என்று சொன்னவுடன், “தக்லீது” செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது, மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது. அந்நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது, காரணம் இவை எல்லாம் “தக்லீது” ஆகும் என்று உடனே சொல்லி விடுகிறார்கள். தக்லீது செய்யாமல் நடப்பதாக இருந்தால், சுயமாக ஞானோதயத்தில் விளங்கி நடக்க வேண்டும், இது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம் இல்லை. ஆகவே தக்லீது செய்து தான் ஆகவேண்டும், என்று தக்லீதை நியாயப்படுத்த பெரும்பாலான முஸ்லிம்கள் முனைகிறார்கள்.

இந்த ஹிமாலயத் தவறுக்கு அடிப்படைக் காரணம். “தக்லீது” என்றால், பின் பற்றல் என்ற தவறான பொருளை காலங்காலமாக அவர்கள் விளங்கி வைத்திருப்பதேயாகும்.

“தக்லீது” என்ற அரபி பதம் “பின்பற்றல்” என்ற பொருளை ஒருபோதும் தராது. ஆனால் தலைமுறை, தலைமுறையாகத் “தக்லீது” என்ற அரபி சொல்லுக்குப் “பின்பற்றல்” என்ற தவறான பொருள், சுயநலக் காரர்களால், அவர்களின் உலக ஆதாயம் கருதி கொடுக்கப்பட்டு, மக்களிடையேயும் அதுவே வலுவாக வேரூன்றி விட்டது.

அல்குர்ஆன் 6236 வசனங்கள் அனைத்திலும், ஹதீஃதுகள் அனைத்திலும் பல இடங்களில் பின்பற்றுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தும், ஒரு இடத்தில்கூட இந்த “தக்லீது” பதம் பயன்படுத்தப்படவில்லை என்பது முஸ்லிம்களின் ஆழந்த சிந்தனைக்குரிய ஒரு விஷயமாகும். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் தவறான, பின்பற்றுதலுக்கும், இந்தத் “தக்லீது” பதம் பயன்படுத்தப்படவே இல்லை என்பதையும் முஸ்லிம்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டுகிறோம்.

“உங்கள் ரப்பிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள், அவனையன்றி வேறொருவரையும் பாதுகாவலர்களாக்கி (க்கொண்டு) அவர்களைப் பின்பற்றாதீர்கள் எனினும் இதன்படி நல்லுணர்வு பெறுவோர் உங்களில் வெகு சொற்பமே”. (அல்குர்ஆன் : 7:3)

இந்த வசனத்தில் “வலாதத்தபிவூ” என்ற பதமே பின்பற்றாதீர்கள் என்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. “தக்லீது” என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை.

“எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்(ஸய்யிது)களுக்கும், எங்கள் பெரியார் (அகாபிரீன்)களுக்கும் வழிப்பட்டோம், அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” (அல்குர்ஆன்: 33:67) நரகவாதிகள் நரகில் வேதனை செய்யப்படும் போது அவர்களின் ஓலம் இது.

இங்கும் தவறான பின்பற்றுதலுக்கு (வழிபடுதல்) “அதஃனா” என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது மாறாக, “தக்லீது” என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை.

“அல்லாஹ் இறக்கி வைத்த இ(ந்நூலை) தைப் பின்பற்றுங்கள், என்று அவர்களிடம் கூறப்பட்டால் அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்.  (அல்குர்ஆன்: 2:170)

இங்கு வழி தவறியவர்களும் “நத்தபிஃ” என்ற பதத்தையே தவறான பின்பற்றுத லுக்கு பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம். ஆனால், “தக்லீத்” என்ற பதத்தைப் பயன்படுத்தவில்லை.

ஆக குர்ஆன், ஹதீஃதுகள் முழுக்கத் தேடினாலும் பின்பற்றுதலுக்கு, அது சரி யான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி, தவறான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி “தக்லீத்” என்ற பதம் ஓரிடத்திலும் பயன்படுத்தப்படவில்லை என்பதைச் சகோதர, சகோதரிகள் தங்கள் உள்ளங்களில் நன்கு பதித்துக் கொள்ளவும். எவர் உங்களிடம் வாதம் செய்ய முன்வந்தாலும் குர்ஆனில் ஒரு வசனத்தையோ, உண்மை ஹதீஃதுகளில் ஒரு ஹதீஃதையோ, பின்பற்றுதலுக்கு “தக்லீத்” பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டச் சொல்லிக் கேளுங்கள். அப்போதுதான் உண்மை உங்களுக்குப் புரிய வரும்.

குர்ஆனின் 5ம் அத்தியாயம் மாயிதாவில் 2,97 இரண்டு வசனங்களில், தக்லீதைச் சேர்ந்த “கலாயித” என்ற பதம் மாலைகளால் அடையாளமிடப்பட்ட குர்பானி (பலி) மிருகங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹதீஃதுகளிலும் அடையாளமிடப்பட்ட குர்பானி மிருகங்களை “கலாயித” என்ற அரபி பதத்தின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

“தக்லீத்” என்னும் அரபி பதத்தின் மூலம் :

கல்லத-யுகல்லிது “தக்லீத்” கல்லதஹூ ஃபீகதா தபிஅஹு மின் ஃகய்ரி தஅம்முலின் வலாநழ்ரின்-எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.

கிறிஸ்தவர்களிடத்தில் தக்லீது :

அவர்களின் வேதநூல்களில் பதிவு செய்யப்பட்டது. அவர்களின் பாதிரிகளின் போதனைகளைக் காலங்காலமாக எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும். (முன்ஜித்-அரபி மொழி அகராதி)

குர்ஆன், ஹதீஃதுகளில் காணப்படாத “தக்லீத்” பதம் முன்னைய மதவாதிகளால் பயன்படுத்தப்படுகின்றது. அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி வழிகெட்டுச் செல்லும் ஒரு கூட்டமே, தங்கள் சுயநலம் கருதி, இஸ்லாத்தில் இந்தத் தக்லீதை நுழைத்துள்ளனர் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.

இதை நபி(ஸல்) அவர்கள் 1437 வருடங்களுக்கு முன்பே அழகாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

“எனது சமுதாயத்திற்கு ஒரு காலம், பனூ இஸ்ராயீல்களுக்கு வந்தது போல், ஒரு செருப்பிற்கு அடுத்த செருப்பு ஒத்திருப்பது போல் வந்து சேரும். அவர்களிலொருவன் தனது தாயிடம் (தவறு செய்ய) பகிரங்கமாக வந்திருந்தால், அவ்வாறே (தவறு செய்பவன்) எனது சமுதாயத்திலும் வருவான்.

நிச்சயமாக பனூ இஸ்ராயீல் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள். எனது உம்மத்தினர் 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். அவர்களில் ஒரு கூட்டத்தாரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் நரகத்தையடைவர். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு (நபி தோழர்கள்) அக்கூட்டத்தார் யார்? என்று கேட்க, (இன்றைய தினம்) நானும் எனது தோழர்களும், எவ்வாறு நடக்கிறோமோ, அவ்வாறே நடப்பவர்கள் என்று விடையளித்தார்கள். (வேறு எந்த தனிப் பெயரையும் நபி(ஸல்) அவர்கள் அந்த வெற்றி பெறும் கூட்டத்திற்குச் சூட் வில்லை என்பது இங்கு ஊன்றி கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்) அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) நூல்கள்: திர்மிதீ, அஹ்மத், அபூதாவூத்

அபூதாவூதில் முஆவியா(ரழி) அவர்க ளின் வாயிலாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள், அவர்களிடையே தான் தோன்றித்தனமான வகையில், அனாச் சாரங்கள், வெறிநாய் கடித்தவனது உடலில் அதன் விஷம், நரம்பு, தசைகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்றுவிடுவது போன்று, ஊடுருவிச் சென்றுவிடும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் முன்னோர்களை நீங்கள் சாணுக்குச் சாண், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள், அவர்கள் உடும்பின் துவாரத்திற்குள் புகுந்திருந்தாலும், அவர்களை (அப்படியே) பின்பற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நாங்கள் “யாரசூலுல்லாஹ்! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா கூறுகிறீர்கள்” என்று கேட்டோம் அதற்கு அவர்கள் “வேறு யாரை” என்றார்கள்.  அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரழி) நூல் : முஸ்லிம்.

முன்னைய மதவாதிகளின் அடிச் சுவட்டை அப்படியே பின்பற்றி அவர்கள் தக்லீதின் பேரால் செய்யும் காரியமான, “அவர்கள் இறைவனை விட்டு, தம் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் மரியமுடைய மகன் மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். (அல்குர்ஆன் 9:31) என்று இறைவன் சொல்வது போல், இவர்களும் தக்லீதின் பேரால், இறைவனை விட்டு தம் மவ்லவிகளை, இமாம்களைத் தெய்வங் களாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் கடவுள் என்று வணங்கவில்லை. தம் பாதிரிகளின் கூற்றுக்கள், அவர்களின் வேதத்திற்கு முரணாக இருந்தாலும் எடுத்து நடந்தனர். இதேபோல் முகல்லிதுகள், குர்ஆன், ஹதீஃதுகளுக்கு நேர்முரணான காரியங்களை இமாம்கள் சொன்னார்கள், மவ்லவிகள் சொல்கிறார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் பின்பற்றுகின்றனர். நபி(ஸல்) அவர்கள், வழிகெட்டுச் செல்வோர் பற்றிக் கூறியவற்றை அப்படியே முகல்லிதுகள் முழுக்க முழுக்க நிறைவேற்றுகின்றனர். பனூ இஸ்ராயீல்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தது போல், முகல்லிது களும் பல வழிதவறிய கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு கூட்டமும் நபி(ஸல்) அவர்களை வழிகாட்டியாக ஏற்று நடக்கத் தவறி விட்டனர். அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒருவரை இமாமாக – தலைவராக ஏற்றுக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுகின்றனர். ஆக ஜோடி செருப்பில் ஒரு செருப்புக்கு மறு செருப்பு ஒத்திருப்பது போல், பனூ இஸ்ராயீல்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றுகின்றனர். இதிலிருந்து யூத கிறிஸ்தவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர்கள் முகல்லிதுகளே, குர்ஆன், ஹதீஃதுகளை மட்டும் எடுத்துச் செயல்படுகிறவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

இதேபோன்று சூபிஸ தத்துவமும் (தரீக்கா பிரிவுகள், சமாதிச் சடங்குகள்) இது முற்றினதால் ஏற்பட்டுள்ள துறவு மனப்பான்மையையும், நபி(ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாத்தில் இல்லை, குர்ஆன், ஹதீஃதுகளில் இவற்றிற்குரிய ஆதாரங்கள் எள்ளளவும் இல்லை. ஆனால் முன்னைய மதவாதிகளிடம், யூத கிறிஸ்தவர்களிடம் இவை இருந்து வருகின்றன. இவற்றையும் அவர்களிடமிருந்தே அப்படியே காப்பி அடித்து, இஸ்லாத்தில் நுழைத்து விட்டார்கள். எனவே இந்த தக்லீதையும், தஸவ்வுஃபையும் மதவாதிகளைக் காப்பியடித்து, எடுத்து நடப்பவர்கள் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறவர்களாகவோ, நேர்வழி நடப்பவர்களாகவோ, அல்லாஹ்வின் பொருத்தம் பெறக்கூடியவர்களாகவோ, ஒருபோதும் ஆக முடியாது என்பது தெளிவான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த வழிகேடுகளிலிருந்து வல்ல இறைவன் நம்மைக் காப்பானாக.
அவர்கள் (விசுவாசிகள்) தங்கள் இரட்சகனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல், அவற்றின் மீது விழமாட்டார்கள், (பார்த்துப் பரிசீலனை செய்து செயல்படுவார்கள்) அல்குர்ஆன்: 25:73

இந்த வசனத்திலிருந்து குர்ஆனை தக்லீது செய்வதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. (பார்வை, பரிசீலனையில் வரமுடியாத, மறைவான விஷயங்களில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பது வேறு குர்ஆன் வசனங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது)

நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்குர்ஆன் : 3:31

இந்த வசனத்தில் நபி(ஸல்) அவர்களையே தக்லீது செய்யச் சொல்லப்படவில்லை, “இத்திபா” என்னும் விளங்கிப் பின்பற்றுதலே வலியுறுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில் மார்க்க விவகாரங்களைத் தவிர, (அல்லாஹ்வின் கட்டளை, ஒப்புதல் அடிப்படையில் சொல்லப்படுவது) நபி (ஸல்) அவர்களின் சொந்த விருப்பங்கள், அபிப்பிராயங்கள் அனைத்தும் நபிதோழர்களால் எடுத்து நடத்தப்படவில்லை என்பதற்குச் சரியான பல ஹதீஃது ஆதாரங்களைப் பார்க்க முடிகின்றது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் வசனங்களையே தக்லீது செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை, அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்) அவர்களைய ே”தக்லீத்” செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை, மாறாக சிந்தித்துப் பார்த்து செயல்படவே ஆணையிடுகிறான். இந்த நிலையில் வேறு யாரையும் “தக்லீத்” செய்ய அல்லாஹ் அனுமதித்து இருப்பானா? ஒருபோதும் அனுமதித்து இருக்க மாட்டான். முன் சொல்லப்பட்ட அல்குர்ஆன் 7:3 வசனம் “தக்லீதை” மிக வன்மையாக மறுத்தே இறக்கப்பட்டுள்ளதை அறிவுடையவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இதைத் தெளிவாக விளங்கி “தக்லீதை” விட்டு தவ்பா செய்ய முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கடமைப்பட்டிருக்கிறார்கள். அறிவுடையவர்கள் மட்டுமே முஸ்லிம்களாக இருக்க முடியும். “தக்லீதை” விட்டு தவ்பா செய்து நீங்காதவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே தெளிவாகும்.

தக்லீதிற்கும், இத்திபாவிற்கும் உள்ள வேறு பாடுகள்:

  1. சமீப காலத்தில் யூதர்கள் குர்ஆனில் பல இடைச் செருகல்களைச் சேர்த்து, லட்சக்கணக்கான குர்ஆன் பிரதிகள் அச்சடித்து, உலகம் முழுவதும் பரப்பினார்கள். அந்த குர்ஆனை பார்த்துப் பரிசீலனை செய்யாது அனைத்தும் இறைவனின் வசனங்கள் என்று நம்பிச் செயல்படுகிறவர்கள், “தக்லீது” செய்யும் முகல்லிதுகள் ஆவார்கள். அதைப் பார்த்துப் பரிசீலனை செய்து இடைச் செருகல்களை நீக்கி, இறைவன் வசனங்களை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள் “இத்திபா” செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.
  2. இதேபோல் ஹதீஃது நூல்களில், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃதுகள், பலவீனமான ஹதீஃதுகள் இடைச் செருகல்களாக லட்சக்கணக்கில் நுழைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தையும் உண்மை ஹதீஃதுகள் என்று பார்த்துப் பரிசீலனை செய்யாமல் நம்பிச் செயல்படுகிறவர்கள் தக்லீது செய்யும் முகல்லிதுகள் ஆவார்கள்.

ஹதீஃதுகளைப் பார்த்து பரிசீலனை செய்து, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃதுகளையும், பலவீனமான ஹதீஃதுகளையும் நீக்கிவிட்டு, உண்மையான ஹதீஃதுகளை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள் “இத்திபா” செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

  1. எந்த நூலில் எழுதப்பட்டிருந்தாலும், யாருடைய பேச்சாக இருந்தாலும், அவற்றை குர்ஆன், ஹதீஃதுகளோடு ஒத்துப் பார்த்து பரிசீலனை செய்யாமல், நம்பி எடுத்து நடப்பவர்கள், “தக்லீது” செய்யும் முகல்லிதுகள் ஆவார்கள்.

அவை மனிதர்களால் ஆக்கப்பட்டவை, அல்லது மனிதர்களால் பேசப்பட்டவை, வேதவாக்கல்ல என்ற உயர்ந்த நோக்கத்தோடு, அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்து, குர்ஆனுக்கும் உண்மை ஹதீஃதுகளுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும் எடுத்து நடப்பவர்கள், “”இத்திபா” செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

  1. அந்நஜாத்திலே வந்துவிட்டது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி, அவற்றைப் பார்த்து பரிசீலனை செய்யாமல் எடுத்து நடப்பவர்கள் “தக்லீது” செய்யும் முகல்லிதுகள் ஆவார்கள். அந்நஜாத்தில் வந்தாலும், அதில் எழுதுபவர்களும் மனிதர்களே, அவர்களிலும் தவறுகள் ஏற்படலாம் என்று அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்து குர்ஆனுக்கும், உண்மை ஹதீஃது களுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும் எடுத்து நடப்பவர்கள் “இத்திபா” செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

இப்போது தக்லீதுக்கும் (கண்மூடிப் பின் பற்றல்) இத்திபாவுக்கும் (விளங்கிப் பின்பற் றல்) உள்ள வேறுபாட்டை, நன்கு விளங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் ஈ அடிச்சான் காப்பி அடிப்பது “தக்லீது” ஆகும். “சார் அவன் மிகச் சரியாக எழுதுகிறான். அதனால் தான் நான் அவனைக் காப்பி அடிக்கிறேன்” என்று எந்த மாணவனும் சொல்ல முடியாது. காப்பி அடிப்பது அரசால் தடை செய்யப் பட்டிருப்பது போல், “தக்லீது” அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முன் திறமையான மாணவனிடம், பரீட்சையில் வரும் கேள்விகளைப் பற்றிக் கேட்டு விளங்கிக் கொண்டு, பரீட்சையில் சுயமாக எழுதுவது அரசால் அனுமதிக்கப்பட்டிருப்பது போல், திறமை மிக்கவர்களிடம், குர்ஆனையும், ஹதீஃதுகளையும் அறிந்தவர்களிடம் (அவர்களின் கற்பனைக் கட்டுக்கதைகளையோ, யூகங்களையோ அல்ல)கேட்டு, குர்ஆன், ஹதீஃதுகளில் உள்ளவை தான் என்று விளங்கி எடுத்து நடப்பதை, அல்லாஹ் அனுமதிக்கிறான். இதற்கு “இத்திபா” என்றே சொல்லப்படும்.

இதற்குப் பிறகும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் தக்லீதுக்கும், இத்திபாவுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இரண்டும் ஒன்றுதான் என்றோ, தக்லீது செய்யாமல் மார்க்கத்தை எடுத்து நடக்க முடியாது என்றோ, சரியாக இருந்தால் தக்லீது செய்யலாம் என்றோ சொல்லமாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வால் அனுமதிக்கப் படாத தக்லீதை விட்டு முற்றிலும் தவ்பா செய்து மீள்வோமாக! அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட “இத்திபா” செய்யப் பழகுவோமாக!

தக்லீது : கண்மூடிப் பின்பற்றல், புரோகிதமும், இடைத்தரகர்களும் இஸ்லாத்தில் புகுந்து, ஐக்கிய சமுதாயத்தைக் கூறுபோட்டு சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது.

முகல்லிது : பார்த்துப் பரிசீலனை செய்யாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவன்.

இத்திபா : விளங்கிப் பின்பற்றல் – புரோகிதத்தையும், இடைத்தரகர்களையும் ஒழித் துக்கட்டி ஐக்கிய, சமத்துவ, சகோதரத்துவ, சமுதாயம் அமைய வழிவகை செய்கிறது.
முஸ்லிம் சமுதாயத்திற்கு தக்லீது வேண்டுமா?

இத்திபா வேண்டுமா?

எவனொருவன் நேர்வழி இன்னதென்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, (வேறு ஒருவரை இமாமாக ஆக்கிக்கொண்டு) முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான)வழியிலேயே செல்லிவிட்டு, நரகத்திலும், அவனை நுழையச் செய்வோம், அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.  (4:115)

குறிப்பு : தக்லீதின் பெரும் கெடுதிகள் பற்றி அந்நஜாத் ஆரம்பத்திலேயே அதுவும் தக்லீதை நியாயப்படுத்தும் மவ்லவி புரோகிதர்கள் அந்நஜாத்தை விட்டு வெளியேறிய ஆரம்பத்திலேயே இந்த ஆக்கம் செப்டம்பர் 1987 இதழில் இடம் பெற்று அதன் பின்னர் பலமுறை மறு பதிப்பும் செய்யப்பட்டுள்ளது.

அதுவே இந்த இதழிலும் இடம் பெற்றுள்ளது. அரபு மொழிப் பண்டிதர்கள் மட்டுமே குர்ஆனை சரியாக விளங்க முடியும். குர்ஆன் மொழி பெயர்ப்பைப் பார்த்து மார்க்கத்தை விளங்க முடியாது. மவ்லவிகளை தக்லீது செய்தே ஆகவேண்டும் என்று நம்பி ஆலிம்கள் என வீண் பெருமையே பேசும் (7:146) தர்கா, தரீக்கா, மத்ஹபு, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஸலஃபி, தவ்ஹீத் என எப்பிரிவு மவ்லவிகள் பின்னால் சென்றாலும் அவர்கள் தக்லீது செய்யும் முகல்லிதுகளே. இம்மவ்லவிகளை தக்லீது செய்வதை விட்டு விடுபட்டு, 2:186 இறைக்கட்டளைப்படி மவ்லவிகளை நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்பி, 7:3 இறைக்கட்டளைப்படி குர்ஆன், சுன்னாவை நேரடியாக அறிந்து அதன்படி நடப்பவர்கள் மட்டுமே இத்திபா செய்பவர்கள், நேர்வழி நடப்பவர்கள், நாளை சுவர்க்கம் நுழையும் நற்பாக்கியவான்களாகும்!

Previous post:

Next post: