அமல்களின் சிறப்புகள்….

in 2019 ஜுலை

அமல்களின் சிறப்புகள்….

தொடர் : 47

  1. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு: திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும்: பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.

அமல்களின் சிறப்புகள்(அசி) புத்தகத்தில் ஸஹீஹான ஹதீஃதை சமயங்களில் குறிப்பிட்டுவிடுவார்கள். ஆனால், புரியும்படியாக இருக்கும் அந்த ஹதீஃத்களை விவரிப்பதாகக் கூறி, குர்ஆன், ஹதீஃதுக்கு எதிரான அவர்களின் கொள்கையை திணித்து விடுவது இவர்களது வாடிக்கை.

அசி புத்தகம் பக்கம் 388,389ல் ஹதீஃத் எண் 16ல் வெளியிட்டுள்ள ஸஹீஹான ஹதீஃதை படித்துப் பாருங்கள்.

ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் அருளியதை செவியுற்றதாக, ஹஜ்ரத் அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “அல்லாஹுத்த ஆலாவுடைய நிழலன்றி வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்து) நாளில் அல்லாஹுத்த ஆலா தன்னுடைய (ரஹ்மத்தின் நிழலில்) ஏழு நபர்களுக்கு இடமளிக்கிறான்.

  1. நீதிமானான மன்னன்,
    2. வாலிபத்தில் அல்லாஹ்வை வணங்குகின்ற வாலிபன்,
    3. மஸ்ஜிதோடு மனம் தொடர்புள்ள மனிதன்,
    4. அல்லாஹ்விற்காகவே நட்பு கொண்ட இரு மனிதர்கள், அவர்கள் கூடுவதும், பிரிவதும் அல்லாஹ்வுக்காகவே இருக்கும்,
    5. அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் (தவறான செயலுக்கு) அழைத்தும், நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன்” என்று கூறி விலகிக் கொண்ட மனிதன்,
    6. வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாத முறையில் மறைத்து தர்மம் செய்கிற மனிதன்,
    7. தனித்திருந்து அல்லாஹ்வை திக்ரு செய்து கண்ணீர் வடிக்கும் மனிதன். (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஹதீஃத் கிதாபுகளில் வந்துள்ள மேற்கண்ட கருத்துள்ள ஹதீஃத் ஸஹீஹான ஹதீஃதான்; ஆனால், தமது கருத்துக்கு சாதகமாக சில விஷயங்களை மாற்றி அமைத்திருக்கிறார். ஒப்பீட்டிற்காக புகாரி ஹதீஃத் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள், நீதியை நிலைநாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்புபடுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிற போது, “நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர். தனிமையில் இருந்து அல் லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர் என அபூ ஹுரைரா(ரழி), அறிவித்தார். புகாரி, அத்தியாயம்: 10, பாடம்: பாங்கு 660

நீதியை நிலைநாட்டும் தலைவர் என்று ஹதீஃதில் கூறப்பட்டிருக்கிறது, ஆனால், அசி புத்தகம் நீதிமானான மன்னன் என்று கூறுகிறது. அதேபோல அல்லாஹ்வின் நிழல் என்பதை அல்லாஹுத ஆலாவின் ரஹ்மத்தின் நிழல் என்று கூறுகிறது. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர் என்பதை வாலிபத்தில் அல்லாஹ்வை வணங்குகின்ற வாலிபன் என்று கூறுகிறது. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர் என்பதை தனித்திருந்து அல்லாஹ்வை திக்ரு செய்து கண்ணீர் வடிக்கும் மனிதன் என்றும் கூறுகிறது.

மாற்றி எழுதப்பட்டிருக்கும் இதர விஷயங்களை விட்டு விட்டு, இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் திக்ரைப் பற்றி என்ன மாற்றப்பட்டிருக்கிறது என்பதை பார்ப்போம். அதற்கு முன்பாக, ஹதீஃதுக்கு அசி புத்தகம் விளக்கம் கொடுத்திருப்பதைப் படித்துப் பாருங்கள்.

விளக்கம் : திக்ரு செய்யும்போது கண்ணீர் வடிப்பதென்பதற்கு, தன்னுடைய பாவங் களையும் குற்றங்களையும் எண்ணிப் பார்த்து அழுகிறான் அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள பேரின்பத்தால் அவரை அறியாமலேயே கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தோடுகின்றது என்பது கருத்தாகலாம்.

விளக்கத்திற்கு விளக்கம் !

மேற்கண்ட அவர்களின் விளக்கத்திற்கு விளக்கமாக பல பெரியார்களின்(?) சம்பவங்களையும்(?) இப்புத்தகம் பதிவிடுகிறது. அதிலிருக்கும் ஒன்றை இப்போது படித்துப் பாருங்கள்.

ஒரு பெரியார் கூறியதாக, தாபித் பன்னானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அறிவிக்கிறார்கள். என்னுடைய எந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று எனக்குத் தெரிந்து விடுகிறது என அவர் கூறியபோது, அது எவ்வாறு தெரிகிறது என்று மக்கள் கேட்டனர். எந்த துஆவின் போது உடல் சிலிர்த்து இதயத்தில் துடிப்பு ஏற்பட்டு, கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறதோ அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது என அவர் பதிலளித்தார்.

எமது ஆய்வு :

மேலே கூறப்பட்டுள்ள சம்பவம் யாருக்கேனும் புரிகிறதா? துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதும், நிராகரிக்கப்படுவதும், அல்லாஹ் வின் நாட்டத்தின்பால் உள்ள விஷயமாகும். இவ்வாறு இருக்கையில், மூன்று காரணங்கள் நிகழ்ந்து விட்டால் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்று அடித்துக் கூறுகிறார் பெரியார் தாபித் பன்னானி அவர்கள், உடல் சிலிர்க்க வேண்டுமாம். இதயத் துடிப்பு ஏற்பட வேண்டுமாம், கண்களில் கண்ணீர் வடிய வேண்டுமாம். இதயத் துடிப்பு ஏற்படவேண்டும் எனக் கூறும் பன்னாரி அவர்கள், இதயத்துடிப்பு இருப்பவர்களால்தான் துஆ கேட்க முடியும். இதயத் துடிப்பு இல்லாத மைய்யத்துக்களால் துஆ கேட்க முடியாது என்ற உண்மை புரியாத பெரியாராக இருக்கிறாரே என்று கவலைப்பட வேண்டி இருக்கிறது.

எமது ஆய்வு :

இந்த விளக்கத்திலுள்ள சம்பவம், உண் மையில் நடந்த சம்பவம் அல்ல! வழக்க மான கட்டுக்கதைதான்! இந்த சம்பவத்தை படிப்பவர்கள் இதை ஹதீஃத் என்று அதுவும் ஸஹீஹான ஹதீஃத் என்று எண்ணிக்கொள்ள வேண்டும் என்று ஒரு செட்அப் செய்திருக்கிறார்கள். எப்படி என்றால், இந்த ஹதீஃத் புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி, முஅத்தா போன்ற ஏகப்பட்ட ஹதீஃத் நூல்களில் ஸஹீஹான ஹதீஃதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற ஹதீஃத் நூல்களில் ஸஹீஹ் தரத்திலுள்ள ஹதீஃத்களும், மற்ற தரங்களிலுள்ள ஹதீஃத்களும் சேர்ந்திருப்பதாலும், புகாரி, முஸ்லிம் இரண்டு நூல்களில் மட்டும் ஸஹீஹான ஹதீஃத்கள் மட்டும் இருப்பதால் ஸஹீஹுல் புகாரி, ஸஹிஹுல் முஸ்லிம் என்று ஏனைய ஹதீஃத்கலா வல்லுனர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாலும், அசி புத்தகம் புகாரி, முஸ்லிம் ஆகிய இரண்டு ஹதீஃத்களை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளது.

ஸஹீஹான ஹதீஃதின் அறிவிப்பாளர் ஒரு சஹாபியாக இருக்க வேண்டும் என்பது மரபு. எனவே, இந்த சம்பவத்தின் அறிவிப்பாளராக வருபவர் தாபித் பன்னானி என்ற நபராம். இந்த நபர் ஒரு சஹாபி இல்லை. அது மட்டும் அல்ல, இவர் ஒரு அட்ரஸ் இல்லாத ஆசாமி!

அட்ரஸ் இல்லாத இந்த ஆசாமி, இந்த சம்பவத்தை “ஒரு பெரியார் கூறியதாக” அறிவிக்கிறார். அதாவது அட்ரஸ் இல்லாத பெரியார், அட்ரஸ் இல்லாத வேறொரு பெரியார் கூறியதாக அறிவிக்கிறார். எனவே, உண்மையில் சம்பவத்தை சொன்ன பெரியார், பெயர் இல்லாத அல்லது பெயர் தெரியாத அல்லது பெயர் வைக்கப்படாத ஒரு பெரியாராகவே காட்டப்படுகிறார்.

என்னடா இது? இஸ்லாத்தில் புகுந்து கொண்டு என்னென்ன விளையாட்டுக்கள் விளையாடுகிறார்கள்! சஹாபாக்களின் பெயர்கள் கூறப்பட்ட இட்டுக் காட்டப்பட்ட பொய்யான ஹதீஃத்களை கிழித்து நார்நாராகக தொங்கவிட்டு, எல்லா ஹதீஃத்களையும், ஹதீஃத்கலா வல்லுனர்கள் சீரமைத்துத் தந்துவிட்ட பின்பும், இஸ்லாத்தில் புகுந்து கொண்ட இப்படி எல்லாம் பொய் புரட்டு செய்யச் சொல்லி அவர்களை ஏவியது நிச்சயமாக ஷைத்தானாகத்தான் இருக்க முடியும்.

கூட்டு திக்ருதான் செய்யவேண்டும் என்று முஸ்லிம்களை மூளைச் சலவை செய்து, இன்று வரை செய்ய வைத்துக் கொண்டிருக்கும் ஜக்கரியா சாஹிபின் இந்த கருத்து பொய், புரட்டு, பித்தலாட்டம் என்பதை ஜக்கரியா சாஹிப் அவர்களே அவரது அசி புத்தகத்தின்வாயிலாக இப்போது ஸஹீஹான் இந்த ஹதீஃதின் மூலம் நிரூபித்து விட்டார்.

மேற்கண்ட சஹீஹான ஹதீஃதில் ஏழா வதாக சொல்லப்பட்டிருக்கும் மனிதரைப் பற்றி ஹதீஃதில் எப்படி குறிப்பிடப்பட்டி ருக்கிறது என்பதை சற்று கவனித்துப் பாருங்கள். தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர் என்று இருக்கிறது. அதாவது திக்ர் செய்வதைப் பற்றி இது பேசவில்லை, மாறாக, அல்லாஹ்வின் மீதுபயம், உலக வாழ்வில் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாக மரணிக்க வேண்டுமே என்ற கவலை, ஈமானுடைய மவுத் கிடைக்குமா என்ற பயம், கப்ருடைய கேள்விகள், கப்ருடைய அதாபுகள் பற்றி பயம், கெட்ட வர்களுடன் எழுப்பப்பட்டு விடுவோமா என்ற பயம், மறுமையின் கேள்வி கணக்கு பயம், நரகம்-நரக நெருப்பின் வேதனைகள் – தண்டனைகள் பற்றி பயம், தீர்ப்பு நாளின் அதிபதி நமக்கு தரவிருக்கும் தீர்ப்பு எதுவாக இருக்கும் என்ற பயம், மறுமையில் அல்லாஹ்வை காணும் பாக்கியம் கிட்டுமா என்ற கவலை, அல்லாஹ் நம்மை பார்ப்பானா? நம்மிடம் பேசுவானா? நம்முடைய பாவங்களை மன்னிப்பானா? மன்னித்து நம்மை பரிசுத்தமாக்கி வைப்பானா? என்ற பயம். அல்லாஹ் நம்மிடம் நம்முடைய பாவங்களை, எல்லோருக்கும் தெரியாமல் திரை மறைவில் விசாரிப்பானா? அல்லது எல்லோருக்கும் தெரியும்படியாக எல்லோர் முன்னிலையிலும் விசாரித்து வெளிப்படுத்தி விடுவானா? என்ற பயம். ஃபர்ளு தொழுகைக்குப் பின் துஆவை அல்லாஹ் கட்டளை இட்டபடி ரகசியமாகவும், பணிவாகவும் கேட்காமல் (7:55), கூட்டாக துஆ கேட்டுவிட்டாமே என்ற பயம். காலையிலும், மாலையிலும், இரவிலும், தஹஜ்ஜத்திலும் தனித்து திக்ர் செய்யாமல், கூட்டு திக்ரு செய்து வரம்பு மீறி விட்டதற்காக (2:205) பயம். மறுமையில் அல்லாஹ்விடமிருந்து சுஜூது செய்யுமாறு கட்டளை வந்தவுடன், பிறர் பாராட்ட வேண்டும் என்று தொழுதவர்களால் சுஜூது செய்ய (குனிய) முடியாமல் போய்விடுவது போல, நமக்கும் அந்த நிலை வந்து விடுமா? அவர்களுடன் நாமும் சேர்ந்து விடுவோமா? (68:42) என்ற பயம். வினை சீட்டு வலக் கரத்தில் கிடைக்க வேண்டுமே என்று பயம். மீசானின் நன்மைத் தட்டு கனமாய் இருக்க வேண்டும் என்ற பயம். அல்லாஹ்வின் திருப்தி கிடைக்குமா என்ற பயம் மேலும் இதுபோன்ற பல விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைத்து தனிமையில் அல்லாஹ்வுக்கு பயந்து அழுவோம் இல்லையா? இந்த அர்த்தங்களை அசி புத்தகம் அனர்த்தங்களாக்கி, ஹதீஃதை உல்ட்டா செய்து தனித்திருந்து அல்லாஹ்வை திக்ரு செய்து கண்ணீர் வடிக்கும் மனிதன் என்று எழுதியிருக்கிறார்.

இதன் மூலம் இங்கு சொல்லப்படாத திக்ரைப் பற்றித் தாம் கூறிவிட்டதாக அவர் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், அந்தோ பரிதாபம்! தம்மையும் அறியாது இந்த ஏழாவது வகை மனிதர் தனிமையில் அல்லாஹ்வை திக்ர் செய்து கண்ணீர் வடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அசி புத்தகத்தில் கணிசமான பகுதியை கூட்டு திக்ர் செய்வதற்கு வலியுறுத்திவிட்டு இப்போது இந்த ஸஹீஹான ஹதீஃதை தெரியாமல் எழுதி, தனிமையில் திக்ர் செய்த தாக எழுதி மாட்டிக் கொண்டு விட்டார்.

திக்ர் என்ற வார்த்தைக்குள்ள பல அர்த்தங்களை குர்ஆன் ஆயத்துக்களுடன் மேற்கோள் காட்டியும், குர்ஆனும் ஹதீஃதும், சப்தமிட்டு கூட்டாக திக்ர் செய்வதை அறி முகப்படுத்தவில்லை என்றும், அப்படி செய்தால் குர்ஆனின் 2:205வது ஆயத்தை மறுத்த பாவிகளாவோம் என்று முந்தைய தொடர்களில் எழுதியிருந்தோம்.

நன்றாக கவனியுங்கள் தப்லீக் ஜமாஅத்தினரே! இப்போதும் உங்களால் அசி புத்த கத்தின் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால், உங்களது மூளை நூறு சதம் சுத்தமாக சலவை செய்யப்பட்டிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக மக்கள் விளங்கிக் கொள்வார்கள் என்பது சர்வ நிச்சயம்.

தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடித்து அழுத மனிதருக்குத்தான், “வேறு எந்த நிழலும் இல்லாத(கியாமத்து) நாளில், அல்லாஹுத்த ஆலா அவனுடைய நிழலில் இடமளிக்கிறான். வரம்பு மீறி, கூட்டு திக்ரு செய்தவர்களுக்கு அல்ல என்பதை விளங்கிக் கொண்டு கூட்டு திக்ரிலிருந்து விடுபடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த லட்சணத்தில், தமது ஆதரவாளர்களை பைத்தியமாக்குவதற்கு கவிதை ஒன்றுக்கு வக்காலத்து வாங்குவதை பாருங்கள்.

“அன்பனின் நினைவில் இரவெல்லாம் அழுவதே எங்கள் வேலை, நண்பனின் நினைவில் திளைத்திருப்பதுதான் எங்கள் தூக்கம்” (உர்து கவிதை)

“கவிஞர்கள் பொய்யர்கள்” என்று அல்லாஹ் கூறியதை செவி ஏற்காமல், இரவெல்லாம் தூங்காமல் அழுகச் சொல்கிறார் ஜக்கரியா சாஹிப் அவர்கள். பைத்தியமாகித் திரிவதற்கு!”

Previous post:

Next post: