பெரும்பான்மை….

in 2019 ஜுலை

பெரும்பான்மை….

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2018 நவம்பர் மாத தொடர்ச்சி…

பெரும்பாலானவர்கள் விதண்டாவாதம் புரிகின்றனர்.

நிச்சயமாக இந்தக் குர்ஆனில்நாம் மனிதர்களுக்கு எல்லா(விதமான) எடுத்துக்காட்டுகளையும் (கூறி) விவரித்துள்ளோம். (ஆனாலும்) மனிதனோ பெரும்பான்மையாக விதண்டாவாதம் புரிபவனாகவே இருக்கின்றான். 18:54, 9:54, புகாரி:1127, 7347, 7455, முஸ்லிம் 1424.

பெரும்பாலானவர்களுடைய பேச்சில் எந்த விதமான நன்மையுமில்லை :

தர்மம் அல்லது நற்செயல் அல்லது மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றைத் தூண்டக்கூடியவர்(களின் இரகசிய உரையாடல்)களைத் தவிரஅவர்களில் பெரும்பாலான (வர்களின்) இரகசிய உரையாடல்களில் எந்தவிதமான நன்மையும் இல்லை. 4:114

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் மனிதனின் உரையாடல்கள் அனைத்தும் அவனுக்குப் பாதகமானவையாக அமைந்துள்ளன. அல்லாஹ்வைத் துதித்தல் அல்லது நற்பணிகள் புரியும்படி தூண்டுதல் அல்லது தீயவற்றைத் தடுத்தல் தொடர்பான உரையாடல்களைத் தவிர (உம்முஹபீபா(ரழி) தஃப்ஸீர் இப்னு மர்தவைஹி)

பெரும்பாலானோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும் :

இன்னும் அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும் இன்னும் தமது இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும் நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே (வானத்தில்) இருந்தும் தமது பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள். அவர்களில் சிலர் (தாம்) நேர்வழியுள்ள சமூகத்தினராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையே ஆகும். 5:66

பெரும்பாலானவர்களின் சம்பாத்தியம் எதுவும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை நஷ்டத்திற்குள்ளானார்கள் :

இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களை விட எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவும் பலத்திலும் பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள் எனினும் அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்க வில்லை. 40:82

உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமை (உங்களுடைய நிலையை) ஒத்திருக்கிறது. அவர்கள் உங்களை விட வலிமை மிக்கவர்களாகவும் செல்வங்களிலும் மக்களிலும் பெரும்பாண்மையாகவும் இருந்தார்கள். தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள்.

உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுடைய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள் அவர்கள் (வீண் விதண்டாவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாறே நீங்களும் மூழ்கிவிட்டீர்கள். இம்மையிலும், மறுமையிலும் அவர்களுடைய செயல்கள் யாவும் அழிந்து விட்டன அவர்கள்தான் நஷ்டவாளர்கள். 9:69

பெரும்பாலானவர்கள் யூகத்தையே பின்பற்றுகின்றனர் :

(நபியே!) இந்த பூமியில் உள்ளவர் களில் பெரும்பாலானோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை இறைவழியில் இருந்து பிறழச் செய்து விடுவார்கள் (காரணம் வெறும்) யூகத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. 6:116, 10:36.

பெரும்பாலானவர்கள் அனுமானம் செய்ப வர்களே தவிர வேறு இல்லை :

மேலும் இப்புவியிலிருப்போரில் பெரும்பாலானோருக்கு(அவர்களின் கூற்றை ஏற்று) நீர் கீழ்ப்படிந்து நடந்தால் அவர்கள் உம்மை அல்லாஹ்வுடைய (நேரிய) பாதையிலிருந்து (உம்மைத் திருப்பி) வழிகெடுத்து விடுவார்கள். வெறும் யூகத்தைத் தவிர (வேறெதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. மேலும் அவர்கள் அனுமானம் செய்பவர்களே தவிர (வேறு) இல்லை. 6:116

பெரும்பாலானோர் பொய்யான கற்பனை யிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் :

(நபியே!) இந்த பூமியில் உள்ளவர் களில் பெரும்பாலானோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை இறைவழியில் இருந்து பிறழச் செய்து விடுவார்கள். (காரணம் வெறும்) யூகத்தைத் தவிர வேறு எதை யும் அவர்கள் பின்பற்றுவதில்லை. (மேலும் வெறும் பொய்யான) கற்பனையிலேயே அவர்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். 6:116

பெரும்பாலானோர் அல்லாஹ்வின் நேரிய பாதையை விட்டும் மக்களைத் தடுக்கிறார்கள் :

(நபியே!) இந்த பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலானோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை (நேரிய) இறை வழியில் இருந்து (உம்மைப்) பிறழச் செய்து விடுவார்கள். 6:116

இறை நம்பிக்கை கொண்டோரே! நிச்சயமாக சமய அறிஞர்கள் துறவிகள் ஆகியோரில் பெரும்பாலானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர் (நேரிய) இறை வழியிலிருந்து (ம் மக்களைத்) தடுக்கின்றனர். 9:34

பெரும்பாலானோர் கூட்டாளிகளுக்கு மோசடி செய்து விடுகின்றனர் :

உம்முடைய ஆட்டை(யும்) அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படி கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார் நிச்சயமாக கூட்டாளிகளில் பெரும்பாலானவர்கள் அவர்களில் சிலர் சிலரை மோசடி செய்து விடுகின்றனர். 38:24

பெரும்பாலானவர்கள் உபதேசங்களைக் கேட்பதில்லை :

நிச்சயமாக அவர்களின் பெரும்பாலானோர் (உண்மையிலேயே) உமது உபதேசத்தை) செவியுறுகிறார்கள் என்றோ விளங்கிக் கொள்கிறார்கள் என்றோ நீர் எண்ணிக் கொண்டீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள் தவிர வேறில்லை ஏன் (கால்நடைகளை விடவும்) மிகவும் வழிகெட்டவர்கள் ஆவர். 25:44

பெரும்பாலானவர்கள் ஆரோக்கியமான சந்தர்ப்பத்தை வீணாக்கி விடுகின்றனர் :

மனிதர்களில் பெரும்பாலானவர்கள் “ஆரோக்கியம்” எனும் அருட்கொடையான விஷயத்தில் ஏமாற்றப்பட்டு இழப்புக்குள்ளாக்கி விடுகின்றனர் என்று இறை தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னுஅப்பாஸ்(ரழி), புகாரி: 6412)

பெரும்பாலானவர்கள் ஓய்வு நேரத்தை வீணாக்கி விடுகின்றனர் :

மனிதர்களில் பெரும்பாலானவர்கள் “ஓய்வு” எனும் அருட்கொடையான விஷயத்தில் ஏமாற்றப்பட்டு இழப்புக்குள்ளாகி விடுகின்றனர் என்று இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (இப்னு அப்பாஸ் (ரழி) புகாரி : 6412)

இறைதூதர்கள் சொல்கின்றவற்றில் பெரும் பாலானவற்றைப் புரிந்து கொள்பவர்கள் இல்லை :

அதற்கு அவர்கள் “ஷிஐபே” நீர் சொல்கின்றவற்றில் பெரும்பாலானவை எங்களுக்குப் புரியவில்லை (11:91) என்று கூறினார்கள்.
பெரும்பாலானோர் இணை வைப்பவர்களாகவே இருந்தனர் :

பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன வாயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்! அவர்களில் பெரும்பாலானோர் இணை வைப்பவர்களாக(வே) இருந்தனர் என்று (நபியே!) நீர் கூறும். 30:42

பெரும்பாலானோர் நிராகரிப்பவர்களாகவே இருக்கின்றனர் :

அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் நன்றாக அறிகிறார்கள் (ஆனாலும்) பின்னர் அதனை அவர்கள் நிராகரிக்கின்றார்கள் அவர்களில் பெரும்பாலானோர் நிராகரிப்பவர்களாகவே இருக்கின்றனர். 16:83

நிச்சயமாக இந்த குர்ஆனில் நாம் மனிதர்களுக்கு எல்லா(விதமான) எடுத்துக்காட்டுகளையும் (கூறி) விவரித்துள்ளோம். (ஆனால்) மனிதர்களில் பெரும்பாலானோர் இறை மறுப்பைத் தவிர (வேறு எதையும்) ஏற்பதில்லை. 17:89

அவர்கள் சிந்தித்து உணர்வதற்காக அவர்களுக்கிடையே அதை நாம் (பலவாறு) திருப்பி விடுகின்றோம் (ஆனால்) மனிதர் களில் பெரும்பாலானோர் இறை மறுப்பைத் தவிர (வேறு எதையும்) ஏற்பதில்லை.  25:50

பெரும்பாலானோர் இணை வைத்துக் கொண்டே இறைவனை வணங்குகின்றனர்:

அவர்களில் பெரும்பாலானோர் இணை வைப்போராக இருந்து கொண்டே தவிர அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை. 12:106

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறிய தாவது. அவர்களின் இறை நம்பிக்கை (எப்படி இருந்ததென்றால்) அவர்களிடம் வானங்களைப் படைத்தவர் யார்? பூமியைப் படைத்தவன் யார்? மலைகளைப் படைத்தவன் யார்? என்றெல்லாம் கேட்டால் அல்லாஹ் என்றே கூறுவார்கள். 29:61, 31:25, 39:32,38, 23:86,87, 7:4-6. ஆனால் அல்லாஹ்வுக்கு இணையும் கற்பிப்பார்கள். இவ்வாறே முஜாஹித், அதாவு, இக்ரிமா, ஷஅபி, கத்தாதா, ழஹ்ஹாக், அப்துர் ரஹ்மான் பின் ஸைத், பின் அஸ்லம் (ரஹ்) ஆகியோரும் தெரிவித்துள்ளனர் தஃப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 4, பக்கம் 827-830.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது. இணை வைப்பாளர்கள் கஃபாவை சுற்றி(த் தவாஃப் செய்து) வரும்போது லப்பைக், லப்பைக், லா ஷரீக்க லக்க (உன் அழைப்பை ஏற்றோம். உனக்கு இணை எதுவும் இல்லை) என்று கூறுவார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (இவர்களை நோக்கி) உங்களுக்குக் கேடுதான் போதும் போதும் (இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்) என்பார்கள்.

(ஏனெனில்) அதன் பிறகு இணை வைப்பாளர்கள் “இல்லா ஷரீக்கன் ஹுவலக்க தம்லிஹு ஹுவ மா மலக்” (ஆனால் உனக்கு ஓர் இணையாளன் இருக்கின்றான் அவனுக்கு நீ எஜமான் அவன் யாருக்கும் எஜமான் அல்லன் அல்லது அவனுக்கும் அவனுடைய உடைமைகளுக்கும் நீயே நீதிபதி) என்று கூறுவார்கள். முஸ்லிம் : 2209

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான். நான் இணையாளர்களை விட்டும் இணை கற்பித்தலை விட்டும் அறவே தேவை அற்றவன் யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் முகஸ்துதி எனும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால் அவனையும் அவனது இணை வைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன். அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் முஸ்லிம் : 5708

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (தமது தோழர்களிடம்) உங்கள் விசயத்தில் நான் அதிகமாகப் பயப்படுவது சிறிய இணை வைப்பைத்தான் என்று கூறினார்கள். சிறிய இணை வைப்பு என்றால் என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று தோழர்கள் வினவினர் (அது) முகஸ்துதியாகும் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் மறுமை நாளில் மனிதர்கள் தங்களுடைய செயல்களுடன் கடந்து செல்லும் போது அவர்களிடம் உயர்ந்தோன் அல்லாஹ் உலகில் நீங்கள் யாருக்குக் காட்டுவதற்காக இந்தச் செயல்களைச் செய்தீர்களோ அவர்களிடம் சென்று அவர்களிடம் இருந்து ஏதேனும் பிரதிபலன் பெற முடியுமா? என்று பாருங் கள் என்பான் என்று கூறினார்கள். (மஹ்மூத் பின் லபீத்(ரழி) முஸ்னத் அஹ்மத் இணை வைத்தல் மாபெரும் அநீதியாகும். 31:33

பெரும்பாலானோர் குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டனர் :

(தாம் இழைத்த குற்றங்களை முன்னிட்டுத் தமக்கு) எந்த ஒரு சோதனையும் ஏற்படாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். அதனால் அவர்கள் (உண்மையை உணர முடியாத கருத்துக்) குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆகிவிட்டார்கள். அதன் பிறகும் அல்லாஹ் அவர்களை மன்னித்தான் எனினும் (அதன் பின்னரும்) அவர்களில் பெரும்பாலானோர் (கருத்துக்) குருடர்களாகவும், செவிடர்களாகவுமே ஆகிவிட்டனர். 5:71

அவர்களுக்கு நாம் செவிப் புலனையும் பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தி உள்ளோம். (ஆனால்) அவர்களின் செவிப்புலனோ, பார்வைகளோ, உள்ளங்களோ அவர்களுக்கு எந்தப் பலனையும் தரவில்லை. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள். 46:26, 25:44

அவர்களிடம் ஏதேனும் நன்மையை அல்லாஹ் அறிந்திருந்தால் அவர்களை (நல்ல விசயங்களை)க் கேட்க வைத்திருப்பான் (அவ்வாறு) அவர்களை அவன் கேட்க வைத்தாலும் அவர்கள்(அதைப்)புறக்கணித்து அலட்சியப்படுத்தி விடுவார்கள். 8:23

(அவர்களின் வெளிப்)பார்வைகள் குருடாகவில்லை. ஆனால் அவர்களின் நெஞ்சங்களில் உள்ள அகப்பார்வைகளே குருடாக இருக்கின்றன. 22:46

யார் அருளாளனின் அறிவுரையை(க் கண்டும்) காணாமல் இருக்கிறாரோ அவருக்கு ஒரு ஷைத்தானை நாம் சாட்டி விடுவோம் அவருக்கு உற்ற நண்பனாக இருப்பான். 2:171

இவர்கள் செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள். எனவே அவர்கள் (நல்வழிக்குத்) திரும்ப மாட்டார்கள். 2:18

அவர்கள் செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள். எனவே அவர்கள் (நல்வழிக்குத்) திரும்ப மாட்டார்கள். 2:18

பெரும்பாலானோர் கால்நடைகளைப் போன்றவர்கள் ஏன் கால்நடைகளை விடவும் மிகவும் வழிகெட்டவர்கள் :

அவர்களில் பெரும்பாலானோர் (உண்மையிலேயே) செவியுறுகிறார்கள் என்றோ விளங்கிக் கொள்கிறார்கள் என்றோ நீர் எண்ணிக் கொண்டீரா? (அவ்வாறில்லை மாறாக) அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள் தவிர வேறில்லை ஏன் (அவர்கள் கால்நடைகளை விடவும்) மிகவும் வழிகெட்டவர்கள் ஆவர். 25:44, 7:179

பெரும்பாலானோர் நகரத்திற்கென்றே படைக்கப்பட்டுள்ளனர் :

நிச்சயமாக நாம் ஜின்களில் இருந்தும் மனிதர்களில் இருந்தும் பெரும்பாலா னோரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை. அவர்களுக்கு காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள். இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள்” “இல்லை” அவற்றை விடவும் மிகவும் வழிகெட்டவர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். 7:179, 25:44, 46:26, 2:18,171, 8:23,22:46, 43:36, 5:71, 22:18

பெரும்பாலானோர் நரகத்தில் வீசி எறியப்படுவர் :

பெரும்பாலானோர் மீது (நரக) வேதனை விதிக்கப்பட்டுவிட்டது. (22:18)

யூதர்கள் “71” பிரிவுகளாகப் பிரிந்தனர் அதிலே “70” பிரிவினர்கள் நரகத்திற்குச் செல்வர், கிறிஸ்தவர்கள் “72” பிரிவுகளாகப் பிரிந்தனர் அதிலே “71” பிரிவினர்கள் நரகத் திற்குச் செல்வர், எவனுடைய கையில் முஹம்மதுடைய ஆத்மா இருக்கிறதோ அவன்மீது சத்தியமாக எனது சமுதாயத்தினர் நிச்சயமாக “73” பிரிவுகளாகப் பிரிவர் அதிலே “72” பிரிவினர்கள் நரகத்திற்குச் செல்வர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஆவியா(ரழி) அம்ரு இப்னு ஆஸ் (ரழி), இப்னுமாஜா, அபூதாவூத், திர்மிதி, ஸஹீஹுல் அல்பானி)

அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி “ஆதமே” என்பான் அதற்கு அவர்கள் இதோ வந்துவிட்டேன் கட்டளை இடு காத்திருக்கிறேன் நலம் அனைத்தும் உன் கரங்களில்தான் என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ் நீங்கள் நரகத்திற்குச் செல்ல இருப்பவர்களை (மற்றவர்களில்) இருந்தும்) தனியாகப் பிரித்து விடுங்கள் என்று கூறுவான் ஆதம்(அலை) அவர்கள் “”எத்தனை நரகவாசிகள்” என்று கேட்பார்கள். அதற்கு அவன் ஒவ்வொர் ஆயிரம் பேரில் இருந்தும் 999 பேரை (பிரித்து வெளியே கொண்டு வாருங்கள்) என்று பதிலளிப்பான்.

இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் அதி பயங்கர நிகழ்ச்சியின் காரணத்தால்) சிறுவன்கூட (மூப்படைந்து) நரைத்து விடுவான். கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள் மக்களை (அன்றைய அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள்.

ஆனால் அவர்கள் (உண்மையிலேயே மதுவால்)போதையுற்றிருக்க மாட்டார்கள் ஆனால் அல்லாஹ்வின் வேதனை (மிகக்) கடுமையானதாகும். (சுருக்கம்) அபூ சயீத் அல்குத்ரி(ரழி) புகாரி : 3348, 4741, 6528, 6530, 6642, 7483, 6529, முஸ்லிம் : 379, 5635

அந்த நாள்தான் (பச்சிளம்) பாலகர் களைக் கூட நரைத்த (முதிய)வர்களாக ஆக்கி விடுகின்ற நாளாகும். 73:17

(அன்று) குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (இறை நம்பிக்கையாளர்களை விட்டும்) பிரிந்து நில்லுங்கள் (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும். 36:59

இறுதியில் தூயவரில் இருந்து தீயவரை அவன் வேறுபடுத்தியே தீருவான். 3:179

அந்நாளில் (நல்லோர், தீயோர் என மக்கள் வேறாகப்) பிரிந்து விடுவார்கள். 30:43, 10:28

யுக முடிவு ஏற்படும் நாளான அன்றைய தினத்தில் (நல்லவர்கள் தீயவர்கள் என) அவர்கள் பிரிந்து விடுவர். 30:14

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாள் வரும்போது உயர்ந்தோன் அல்லாஹ் நரகத்திற்கு உத்தரவு பிறப்பிப்பான். அப்போது நரகத்தில் இருந்து இருள் படிந்த நீளமான (கழுத்து போன்ற) ஒரு பகுதி வெளியேறி வந்து குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (இறை நம்பிக்கையாளர்களை விட்டும்) பிரிந்து நில்லுங்கள் என்று கூறும் அப்போது மக்கள் தனியாக விலகிச்சென்று மண்டி இடுவார்கள். அபூஹுரைரா(ரழி) தஃப்ஸீர் தபரீதஃப்சீர்இப்னுகஸீர், பாகம்:7, பக்கம்:670, 671

அல்லாஹ் நம் அனைவரையும் இத்தகைய இழி நிலையில் இருந்து பாதுகாப்பானாக சத்திய அழைப்பு வரும்போது பெரும்பாண்மையைக் காரணம் காட்டி சத்தியத்தை மறுக்கும் கூட்டத்தில் இருந்தும் எம்மைப் பாதுகாப்பானாக.

பெரும்பாலானோர் பிறை விஷயத்திலும் அறியாதவர்களாகவும், அறிந்து கொள்ளாதவர்களாகவும், அலட்சியம் செய்பவர்களாகவும், சத்தியத்தை வெறுப்பவர்களாகவும், அனுமானங்களையும், யூகங்களையும் பின்பற்றி குர்ஆனை நம்பாதவர்களாகவும், பெரும் பாவத்திலும், பழியிலும் வரம்பு மீறலிலும், விதண்டாவாதத்திலும், வழிதவறச் செய்வதிலும், முகஸ்த்துதியிலும், மறுத்துரைப்பதிலும் இருக்கின்றார்கள்.

(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும் “தீயதும் நல்லதும் (ஒருபோதும்) சமமாகா” எனவே அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக. 5:100

Previous post:

Next post: