ஹதீஃதில் கூறப்படும் உதாரணங்கள்!  ( ஓர் அறிவியல் பார்வை!)

in 2019 ஜுலை

ஹதீஃதில் கூறப்படும் உதாரணங்கள்!  ( ஓர் அறிவியல் பார்வை!)

எஸ்.ஹலரத் அலி, திருச்சி

அல்லாஹ் உலகைப் படைத்து, அதை ஆளும் மனிதகுல மக்களுக்கு நேர்வழி காட்ட தூதர்களையும் அனுப்பினான். அந்த இறை தூதர்களுக்கு வழிகாட்ட நெறி நூல்களையும் இறக்கி அருளினான். இப்படி நன்மை தீமைகளை பிரித்தறிவிக்கக் கூடிய வேதங்களிலும், அதன்படி வாழ்ந்து காட்டிய தூதர்களின் போதனைகளிலும் ஏராளமான உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. நம் கண் முன்னே உள்ள பொருட்களை உதாரணமாக காட்டியே அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சத்தியத்தை எளிமையாக விளக்குகிறார்கள்.

இந்த வகையில், இரண்டு ஹதீஃத்களில் இடம்பெறும் உதாரணங்களை அறிவியல் ஆய்வுக்குட்படுத்தி அதன் தன்மைகள், இன்றைய நவீன அறிவியலுக்கு ஒத்துள்ளதா? அல்லது முரண்படுகிறதா? என்பதைப் பார்ப்போம். அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம். இது எப்போதும் எக்காலத்திற்கும் இயற்கை அறிவியலோடு இணைந்து செல்லும் மார்க்கம். இதில் முரண்பாடுகள் இருப்பதற்கு இடமில்லை.

ஹதீஃத் : 1

அல்லாஹ் பூமியை படைத்தபோது, அது நடுங்க ஆரம்பித்தது. அல்லாஹ் மலைகளைப் படைத்து பூமி ஆடாமல் நிலைநிறுத்தினான். மலைகளின் பலத்தைக் கண்டு வானவர்கள் வியப்புற்று, “எங்கள் இறைவனே! நீ படைத்தவற்றுள் இந்த மலைகளை விட பலமானது ஏதும் உண்டா?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ், “ஆம்! இரும்பு” என்றான்.

“இறைவனே! இரும்பை விட பலமானது ஏதேனும் உண்டா? என்று கேட்டபோது, “ஆம்! உண்டு. அது நெருப்பு என்று அல்லாஹ் கூறினான். இந்த நெருப்பை விட பலமானது ஏதேனும் உண்டா? என்று கேட்டபோது “ஆம் அது தண்ணீர்”! என்று கூறினான். இந்த தண்ணீரை விட பலமானது
உண்டா? என்று கேட்டதற்கு “ஆம்! அது காற்று!” என்று அல்லாஹ் கூறினான்.

இந்த பலமான காற்றை விட பலமானது உண்டா? என்று கேட்டபோது, “ஆம்! உண்டு, அது ஆதமுடைய மகனானவன் தன் இடதுகைக்கு தெரியாமல் வலது கையால் கொடுக்கும் தர்மமாகும்” என்று அல்லாஹ் கூறியதாக, நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரழி), நூல்: திர்மிதி : 3369(இங்கிலீஷ்): 3695 (அரபி)

ஒரு மனிதன் கொடுக்கும் தர்மத்தின் நிலை எந்தளவு உயர்வானது, பலம் பொருந் தியது என்பதனை அல்லாஹ், மலை, இரும்பு, நெருப்பு, நீர்,காற்று போன்ற தனது மாபெரும் படைப்புகளுடன் ஒப்பிட்டு, இவைகளை விட தர்மத்தின் கொடை மதிப்பு சிறந்தது என்று மக்களுக்கு உணர்த்துகிறான். அல்லாஹ் வரிசைப்படுத்திய, மலை, இரும்பு, நெருப்பு, நீர், காற்று போன்றவைகள் அறிவியல் ஆய்வுப் பார்வையில் சரியான ஒழுங்கு முறையில் இருப்பதை கவனியுங்கள்.

மலை என்னும் பாறைகள் பல பொருட்கள் சேர்ந்தது. இதில் பல தனிமங்கள் உள்ளன. குறிப்பாக, ஆக்சிஜன், சிலிகான், அலுமினியம், இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், மங்கனிசியம் போன்ற இரண்டாயிரம் தனிமங்கள் மலைகளில் உள்ளது.ஆயினும் மலைப்பாறைகளின் பொதுவான அடர்த்தி (Density) 2.0 – 2.6g/cm.3.  கிரனைட் கல்லின் பலமானது அளவாக உள்ளது. மலைப்பாறைகளின் உறுதித் தன்மை, கடினத்தன்மை மற்றும் பலத்தை விட இரும்பு அதிக உறுதியும், கடினத் தன்மையும் கொண்டுள்ளது.

மலைப்பாறைக் கற்களின் அடர்த்தி மதிப்பு 2.0 – 2.6g / cm.3 மட்டுமே. ஆனால் இரும்பின் அடர்த்தி மதிப்பு 7.85g/cm.3 ஆகவே பலத்தில், உறுதியில் மலைகளை விட இரும்பு அறிவியல் ரீதியாக பலமானது. உறுதியானது, ஆகவேதான் பெரும் கட்டுமானங்களுக்கு இரும்புக் கம்பிகளை நடுவில் வைத்து ஜல்லி சிமிண்ட்  (RCC-Reinforced Cement Concrete) கான்கிரீட் போடுகின்றனர்.

அடுத்து அல்லாஹ் கூறுகிறான். இரும்பை விட நெருப்பு அதிக பலம் வாய்ந்ததென்று! உண்மைதான். இரும்பை உருக்கக்கூடிய சக்தி நெருப்புக்கு உள்ளது. அனைவரும் அறிந்ததே! இரும்பை தொடர்ந்து நெருப்பில் வைத்து சூடுபடுத்தினால் சுமார் 1538 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் உருகி விடும். தொடர்ந்து வெப்பப்படுத்தினால் சுமார் 2862 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் இரும்பு ஆவியாகிவிடும். ஆகவே நெருப்பு, இரும்பை விட பலமானது.

இந்த நெருப்பை விட தண்ணீர் பலமானது என்று அல்லாஹ் சொல்கிறான். காரணம் நெருப்பை அணைப்பதற்கு தண்ணீர் போதுமானது. எந்த பலமான நெருப்பையும் தண்ணீரை அடித்து அணைத்து விடலாம். இதற்கு காரணம் தண்ணீர் தீ பிடிக்காது. மேலும் வெப்பத்தை உள்வாங்கக்கூடிய குணம் நீருக்கு உள்ளது. ஒரு பொருள் எரிவதற்கு மூன்று பொருள் தேவை. எரிபொருள், ஆக்சிஜன், வெப்பம், இம்மூன்றும் சேர்ந்தால்தான் நெருப்பாக எரிய முடியும். நெருப்பை தண்ணீர் எப்படி அணைக்கிறது என்றால், தண்ணீரானது நெருப்பின் வெப்பத்தை இழுத்துக் கொண்டு விடுவதால், நெருப்பு உடனடியாக அணைந்து விடுகிறது.

அடுத்து அல்லாஹ் கூறுகிறான், தண்ணீரை விட காற்று பலமானது என்று எப்படி?

பொதுவாக மலைகளை, இரும்பை உருக்கலாம், தண்ணீரை ஆவியாக்கலாம் ஆனால் காற்றை வேறு வடிவமாகவோ, பொருளாகவோ இயற்கையில் மாற்ற முடியாது. மலை, இரும்பு, நீர், நெருப்பு போகமுடியாத இடங்களுக்கும் காற்று நுழைய முடியும். காற்று இல்லையேல் உலகில் எந்த உயிரினங்களும் இல்லை, உலகம் உயிர்ப்புடன் விளங்க காற்று பிரதானமான பலமான காரணியாக உள்ளது. காற்றால் நெருப்பை அணைக்க முடியும். நீரை ஆவியாக்க முடியும், இரும்பை துருப்பிடிக்க (Corrosion) மலைப்பாறைகளை அரிக்கவும் (Erosion) முடியும்.

நீரின் பலம் நீர் நிலைகளில் மட்டுமே, மழை பொழிவு இல்லா பாலைநிலத்தில் அதன் தாக்கம் ஒன்றுமில்லை. வானத்தி லுள்ள காற்று மட்டுமே மழை மேகத்தை ஒருங்கிணைக்கவும், வேண்டிய இடங்களுக்கு மேகங்களைக் கொண்டு செல்லவும் உதவுகிறது. கடலில் அலைகளை எழுப்பி புயலாக மாற்றவும், அப்புயல் செல்லும் இட மெல்லாம் கடும் சேதத்தை ஏற்படுத்துவதும் காற்றே! “கஜா” புயலின் தாக்கத்தை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த பலமான காற்றை விட ஒரு மனிதன், தன் இடது கைக்குத் தெரியாமல் வலது கையால் கொடுக்கும் தர்மமே அதிகம் பலம் வாய்ந்தது என்று கூறி பிறருக்கு கொடுத்து உதவும் தர்மத்தை அல்லாஹ் புகழ்ந்து சிறப்பிக்கின்றான்.

ஹதீஃத் : 2

மறுமை நாளில் மக்கள் அனைவரும் “அல்லாஹ்வே காப்பாற்று! அல்லாஹ்வே காப்பாற்று! என்று பிரார்த்திப்பார்கள். அப்போது நரகத்தின் மேலே பாலம் கொண்டு வரப்பட்டு வைக்கப்படும் என்று கூறிக் கொண்டிருந்தபோது “அல்லாஹ்வின் தூதரே! பாலம் என்றால் என்ன?” கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “கால்கள் வழுக்கி விழக்கூடிய, சறுக்கக் கூடிய ஓர் இடமாகும். அதன்மீது இரும்புக் கொக்கி களும், அகண்டு நீண்ட முற்களும் இருக்கும். அதில் நஜ்து பகுதியில் விளையும் “சஅதான்” எனப்படும் முட்செடியின் முற்களைப் போன்ற கொக்கிகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள்.

இறை நம்பிககையாளர்கள், கண் சிமிட்டும் நேரத்திலும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பறவையைப் போன்றும், உயர் ரக குதிரைகள், மற்றும் ஒட்டகங்கள் போன்றும் (விரைவாக) அப்பாலத்தை கடந்து விடுவார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரீ(ரழி) நூல் : முஸ்லிம், 302, புகாரி : 7439, (ஹதீஃத் சுருக்கம்)

நாளை மறுமை நாளில் நரகத்தை தாண்டிச் செல்ல “சிராத்” என்னும் பாலத்தை கடக்காமல் சுவனத்தில் எவரும் நுழைய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

“மேலும் அதனை (பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் போக முடியாது. இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். அல்குர்ஆன் : 19:71

சிராத் என்னும் இப்பாலத்தை கடக்கும் இறை நம்பிக்கையாளர்கள், அவர்களின் நன்மையான அமல்களின் பெருமதியைப் பொறுத்து அவர்களின் கடக்கும் வேகமும் இருக்குமென்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அப்படி கடக்கும் வேகத்தை வரிசைப்படுத்துகிறார்கள். கண் சிமிட்டும் நேரம், மின்னல் வெட்டும் நேரம், காற்றைப் போன்று, பறவை, பந்தைய குதிரை மற்றும் ஒட்டக வேகம்.

அறிவியல் பார்வையில் இந்த தர வரிசை சரியாக இருப்பதை கவனியுங்கள் :

கண் இமைக்கும் நேரம் அல்லது கண் சிமிட்டும் நேரம் என்பது அறிவியல் ஆய்வில், ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரம். 1/10 வினாடிகள். அதிகபட்சம் 300 -400 மில்லி வினாடிகள். அதாவது 0.33 வினாடி நேரம் (அரை வினாடிக்கும் சற்று கூடுதல்) என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஒரு வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ. வேகத்தில் வரும் ஒளியானது, விழித்திரையில் பட்டு 1/300,000,000,000 seconds வினாடிகளில் திருப்பி அனுப்புகிறது.

(On average the human blink lasts only a tenth of a second which is 100 milli seconds. Wow, that’s fast! Sometimes, it can even last up to 400 milli seconds. The speed of the twinkling of an eye is faster than one hundreds billionths of a second. 1/300,000,000,000 seconds)

கண் இமைக்கும் நேரத்தின் வேகத்தை அறிவதற்கு, அல்குர்ஆனில் சில வசனங் களை அல்லாஹ் கூறுகின்றான். சுலைமான் (அலை) அவர்கள் ஏமனில் ஆட்சி செய்யும் பெண்ணின் சிம்மாசனத்தை யார் எடுத்து வருவது என்று தமது அவையில் வினவிய போது, வேதம் வழங்கப்பட்ட ஒருவர் கண் இமைப்பதற்குள் கொண்டு வருவேன் என்று சொல்லி அதன்படி கொண்டு வந்தார்.

இறை நெறிநூலில் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர், “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார். அவர் சொன்னவாறே அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்.  அல்குர்ஆன் : 27:40

நபி சுலைமான்(அலை) அவர்கள் பாலஸ்தீன் நாட்டில் பைத்துல் முகத்தஸ் தலைநகரில் ஆட்சி செய்தார்கள். ஏமன் நாட்டு அரசி, ஸன்ஆ தலைநகரில் ஆட்சி புரிந்தார். பாலஸ்தீனுக்கும் ஏமனுக்கும் இடையில் சுமார் 2265 K.M.(1407 மைல்கள்) போய் வருவதற்கான மொத்த தூரம் (2265+ 2265 = 4530 KM) நான்காயிரத்து ஐநூறுக்கும்

அதிகமான கிலோமீட்டர் தூரத்தை கண் இமைக்கும் நேரத்தில் சென்று வரும் ஆற்றல், கண் சிமிட்டும் நேரத்தின் அளவு ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு. (1/10)

இதுபோலவே இறுதி நாள் வரும் வேகமும் கண் சிமிட்டும் நேரமே!

இறுதி நாள் நிகழ்வதற்கு அதிக நேரம் தேவையில்லை. கண் சிமிட்டும் நேரம், ஏன் அதைவிடக் குறைந்த நேரம் போதுமான தாகும். அல்குர்ஆன் : 16:77

சிராத் என்னும் பாலத்தை நல்லடியார்களில் சிலர் கண் இமைக்கும் வேகத்தில் அதைக் கடப்பார்கள். இதை அடுத்து சிலர் மின்னல் வேகத்தில் கடப்பார்கள். மின்னலின் வேகம் என்ன?

மின்னல் என்பது ஒளி அலை அல்ல. மேகங்களுக்கிடையில் ஏற்படும் மின் தூண்டல். மேகத்திலிருந்து பூமியை நோக்கி வரும் (Downward Strike) மின்னலின் வேகம் வினாடிக்கு 200கி.மீ. பூமியிலிருந்து மேகத்தை நோக்கிச் செல்லும் (Upward Strike) மின்னலின் வேகம் வினாடிக்கு ஒரு லட்சம் கி.மீ. (100,000 கி.மீ)

Visible satellite image of Tropical Cyclone Olivia Barrow Island, Australia, setting a news world-record wind gust of 253 mph.

அடுத்து, நல்லடியார்கள் “காற்றைப் போன்று விரைந்து கடப்பார்கள்” காற்றின் வேகம் சராசரி 6-12mph (10-19km) நடுத்தரமான காற்றின் வேகம் சுமார் மணிக்கு 40-50 மைல் வரையிலும், கஜா புயல் போன்ற நேரங்களில் அதன் வேகம் மணிக்கு 70-100 மைல் ஆகவும் இருக்கும். புயல் காற்றின் அதிகபட்ச வேகம் 1996ம் வருடம் ஏப்ரல் 10 அன்று ஆஸ்திரேலியாவில் பதிவாகியது. மணிக்கு 408 கி.மீ. (253மைல்) இதைத் தொடர்ந்து, “நல்லடியார்கள் “பறவைகள் போன்று” விரைந்து கடப்பார்கள்” பறவைகளில் சற்று பெரிதான “கூழைக் கிடா” எனப்படும் பெலிக்கன் பறக்கும் வேகம் மணிக்கு 40 மைல், (65கிமீ.) பால்கன் கழுகுகள் மணிக்கு சுமார் 250கிமீ.வேகத்திலும், புறா பறக்கும் சராசரி வேகம் மணிக்கு 60 கி.மீ. பந்தைய புறாக்கள் மணிக்கு 140 கி.மீ. பறக்கும்.

கொடும் நரகத்தை கடக்க உதவும் சிராத் என்னும் பாலத்தை நல்லடியார்களில் சிலர் உயர் ரக “பந்தைய குதிரைகள்” வேகத்தில் கடந்துசெல்வர். பொதுவாக பந்தைய குதிரைகளின் வேகம் மணிக்கு 40-48கி.மீ. (43.97மைல்) ஆகும்.

இதைத்தொடர்ந்து சில நல்லடியார்கள் “ஒட்டக வேகத்தில்”பாலத்தைக் கடப்பார்கள். ஒட்டகத்தின் சராசரி வேகம் மணிக்கு 14-19 கி.மீ. (8.7-11.8மைல்)

இஸ்லாம் உரைக்கும் அனைத்து செய்தி களும் அறிவுக்குப் பொருத்தமாகவும், அறிவியலுக்கு இணக்கமாகவுமே இருக்கும். அச்சத்திய செய்திகள் இவ்வுலகில் நம்கண் முன்னே காண்பவையாக இருந்தாலும் சரியே. நம் கண் காணாத சுவனம். நரகம் குறித்து செய்தியாக இருந்தாலும் சரியே! அனைத்தும் முரண் இன்றியே தெளிவாக புரியும்படியே இருக்கும். 1439 ஆண்டுகளுக்கு முன்பு, படிப்பறிவில்லா பாலைவன மனிதர், இன்றைய அறிவியல் உண்மைகளை அன்றே சொன்னதன் காரணம் அவர் படைத்த இறைவனின் தூதராக இருந்ததே!

இன்னும், இந்தக் குர்ஆனில் (ஹதீஃதில்) மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். அல்குர்ஆன் : 39:27

Previous post:

Next post: