அந்நஜாத் – செப்டம்பர் 2019

in 2019 செப்டம்பர்

அந்நஜாத் –  ஆகஸ்ட் 2019

துல்கஃதா – துல்ஹஜ் 1440

 1. தலையங்கம்!
 2. இருளிலிருந்து வெளிச்சத்திற்கு…
 3. அமல்களின் சிறப்புகள்..
 4. நாளின்  ஆரம்பம்…
 5. ஆதிகாலவேதங்களும்,  இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்…
 6. “அஸ்ல்’  என்னும் கர்ப்பத்தடை: அல்லாஹ் விதித்ததை எவராலும் தடுக்க முடியாது!
 7. பரம்பரை முஸ்லிம்களின் இழிநிலை!
 8. பேரண்டப் படைப்பின் துவக்கம்!
 9. அறிந்து கொள்வோம்…
 10. வெற்றியாளர்கள் யார்?

*********************************************************

தலையங்கம்!

ஆச்சரியம்!  அதிர்ச்சி!!  வியப்பு!!!

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழக்கமாக அளிக்கும் நிதியுதவி நாம் அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 2017-2018 நிதியாண்டில் தமிழக அரசு அளித்த நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிவிட்டது என்று தமிழகத்தின் கணக்குத் தணிக்கையாளர் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

நிதியை அரசு திருப்பி அளிக்கவில்லை என்றும், மாநில அரசின் எதிர்பார்ப்பிற்கேற்ப மத்திய அரசால் விடுவிக்கப்படாத நிதியானது சேமிப்பாக கருதப்படும் என்றும், மத்திய அரசிடமிருந்து அடுத்த ஆண்டு அந்நிதி பெறப்படும்போது மாநில அரசு அதனை நிதியறிக்கையில் ஒதுக்கீடு செய்யும் என்றும் தமிழக முதல்வர் பொது நிகழ்வு ஒன்றில் பதிலளித்திருக்கிறார்.

அப்படி என்றால் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை தவறா என்ற வினா எழுகிறதல்லவா?

திருப்பி அனுப்பிய நிதியின் நிலை என்ன என்பது விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்பதுதான் இங்குள்ள கேள்வி. மேலும், வருங்காலத்தில் திட்டச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்ற பொருளாதார அடிப்படை உண்மை அறியாமல், அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போடுவது சேமிப்பாகி விடுமா?

கணக்குத் தணிக்கையாளரின் வருடாந்திர அறிக்கை தரும் மற்ற செய்திகளை “தி இந்து -தமிழ்’ தெரிவித்திருப்பதைப் பார்க்கும்போது, ஆச்சரியமும், அதிர்ச்சியும் மேலோங்குகிறது.

பிரதம மந்திரியின் “ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 3,082 கோடி இதில் மாநில அரசு செலவிட்டிருப்பது வெறும் ரூ. 728 கோடி மட்டுமே. செலவழிக்கப்படாமல் ரூ. 2,354.38 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளை அடையாளம் காண்பதில் தமிழக அரசு தவறி விட்டதாக தணிக்கை அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது. அப்படியானால் வீடு கட்டிக்கொள்வதற்கு வழியில்லாத ஏழை எளியவர்களை அரசால் கண்டுபிடிக்க முடியவில்லையா?

கிராமப்புறங்களில் நிலவி வரும் கடும் வறட்சியிலிருந்து மக்களைப் பாதுகாத்து வரும் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்துக்கான தொகையிலும் கூட ரூ. 247.84 கோடி செலவழிக்கப்படவில்லை.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.23.84 கோடியும் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்புக்கு உதவுவதற்காக உலக வங்கி ஒதுக்கீடு செய்த ரூ.100 கோடியில், வெறும் ரூ.2.35 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

இதைப்பற்றி எல்லாம் முதல்வர் குறிப்பிடவில்லை, மொத்தத்தில் சமூக நலத்திட்டங்களில் அரசு கவனம் செலுத்தவில்லை என்பது திருத்திக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும்.

நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதும், திருப்பி அனுப்பப்பட்டது என்பதும் மட்டுமின்றி, மாநில அரசின் நிதி அறிக்கையில் ஒதுக்கீடு செய்த நிதியையும் கூட முறையாக செலவழிக்கவில்லை என்று தணிக்கை அறிக்கை தோலுரித்துக் காட்டுகிறது. நிதி அறிக்கையில் காண்பித்த 280.29 கோடியை அரசு செலவழிக்கவேயில்லையாம். ஊரக மேம்பாட்டுத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம், நீர் விநியோகம், நெடுஞ்சாலைத்துறை ஆகியவைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படவில்லையாம். கல்வித்துறையில் மட்டுமே பல திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 1627 கோடி செலவழிக்கப்படவில்லை. இதனால் மாண வர்களும் பிற பயனீட்டார்களும் பயன் பெற முடியாமல் ஆகிவிட்டது.

சமூக நலத்திட்டங்களை அமுல்படுத்துவதில் காலம் காலமாக முன்மாதிரியாக இருந்து வரும் தமிழக அரசு தன்னை சரி செய்து கொள்ள வேண்டும் என்று “தி இந்து -தமிழ்’ அரசுக்கு சரியான அறிவுரையை கூறியிருக்கிறது.

மொத்தத்தில், அரசின் செயல்பாடுகள் பயனாளிகள் பயன் அடைவதை தடுத்து, மத்திய அரசிடம் நல்ல பிள்ளை பெயர் வாங்க முயல்வதாகவே காட்டுகிறது.

*********************************************************

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு!

அபூ அப்தில்லாஹ்

மறுபதிப்பு : ஜனவரி 1987
இன்று இஸ்லாமிய சமுதாயத்தின் பெரும் பகுதியினர் “தக்லீத்” என்ற பெயரில் மரியாதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக் கொண்டு, குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணானவற்றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழிதவறிச் செல்வதால், “தக்லீத்”தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம். குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்டிருப்பவை மார்க்கமாகி விட்டதற்கான முக்கிய காரணங்களை நாம் கவனிப்போம்.

பரீட்சையில் காப்பி அடிப்பதே தக்லீத்!

அவர்கள் சொல்லைக் கேட்டு, அவற்றில் அழகானதைப் பின்பற்றுவார்கள்; அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியது இத்தகை யோரைத்தான். இவர்களே அறிவுடையவர்கள். (அல்குர்ஆன்:39:18)

என்ற இந்த இறை கட்டளைப்படி ஒருவரின் சொல்லைக் கேட்டு அல்லது எழுத்தைப் பார்த்து, அதில் அழகானதை அதாவது குர்ஆன், ஹதீஃதுக்கு ஒத்ததை எடுத்துப் பின்பற்றுவது “தக்லீத்” ஆகாது.

நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் “திக்ரை” உடையவர்களிடம் கேளுங்கள். (அல்குர்ஆன் 16:43) என்ற வசனத்தில் கேட்டு விளங்கிச் செயல்படச் சொல்கிறானே அல்லாமல், “கல்லிதூ அஹ்லத் திக்ரி” என்று திக்ரை உடையவர்களை தக்லீத் செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. கேட்டு விளங்குவதற்கும், கண்மூடிப் பின்பற்றுதலுக்கும் (தக்லீத்) மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.

கணக்குத் தெரியாத மாணவன் ஆசிரியரிடம் கேட்பது என்றால், அந்தக் கணக்கின் ஆரம்பம் முதல் இறுதி விடை வரை எப்படிப் போடுவது என்பதைத் தெரிந்து, தனது மூளையில் ஏற்றிக் கொள்வதைத்தான் குறிக்கும். போடும் முறை அறியாமல் இறுதியில் வரும் விடையை மட்டும் தெரிந்து கொள்வது கணக்கை அறிந்து கொண்டது ஆகாது. கண்ணை மூடிக்கொண்டு கடைசியில் உள்ள விடையை மட்டும் அறிந்து கொள்வது போன்றது தான் தக்லீத் ஆகும். இது தடை செய்யப்பட்டது என்பதை எந்த புத்திசாலியும் மறுக்கமாட்டான்.

பரீட்சை எழுதும் மாணவர்களில் திறமை மிக்கவனிடம், மந்தப் புத்திக்காரன், பரீட்சைக்கு முன் கேட்டு, கேள்விகளையும் விடைகளையும் புரிந்து மனதில் இருத்திக் கொண்டு, பரீட்சையில் சுயமாக எழுதுவதே அவனுக்கு உண்மையான நன்மையைத் தரும். அவன் தனது திறமையில் நம்பிக்கை இழந்து, பக்கத்தில் உள்ளவனைப் பார்த்து காப்பி அடிப்பது, உண்மையில் பரீட்சை எழுதியது ஆகாது. பிடிபட்டால் கடுமையாகத் தண்டிக்கப்படுவான். காப்பி அடித்து பாஸாகிவிட்டாலும் ஆற்றல் மிக்கவனாக ஆக முடியாது.

மனிதர்களால் நடத்தப்படும் பரீட்சைகளில் அவர்களை ஏமாற்றி காப்பி அடிக்க வாய்ப்பாவது கிடைக்கும். ஆனால் அல்லாஹ்(ஜல்) நடத்தும் இந்த வாழ்க்கைப் பரீட்சையில் அல்லாஹ்வை ஏமாற்றி காப்பி அடிக்கவும் முடியாது என்பதை முஸ்லிம் பொதுமக்கள் விளங்கிக் கொள்ளவேண் டும். தக்லீத் என்பது வாழ்க்கைப் பரீட்சை யில் காப்பி அடிப்பது தான். ஆகவே முகல்லிதுகள் எப்படி வெற்றி பெற முடியும் என்பதை அவர்களே சிந்திக்கட்டும்.

வெள்ளைத் தாளில் கருப்பு மையில் எழுதுவது மட்டும் தான் பரீட்சை என்று பரீட்சையைப் பற்றி விளங்காமல் சொல்ப வர்கள் மட்டுமே இந்தக் கண்மூடிப் பின்பற்றலை (தக்லீதை) சரிகாண முடியும். அதல்லாமல் மாணவனுடைய திறமையை அறிந்து கொள்வதற்காகத்தான் பரீட்சை நடத்தப்படுகிறது என்பதை அறிந்த நடுத்தர அறிவு படைத்தவனும் இதை ஒப்புக்கொள்ள மாட்டான். தக்லீதின் நிலை குறித்து இதற்கு மேலும் விளக்க அவசியப்படாது என்று கருதுகிறோம்.

விளங்கிச் செயல்படுவது தக்லீத் அல்ல!

இந்த அடிப்படையில் பிக்ஹு சட்டங்களைத் தந்த இமாம்கள், ஹதீஃத் நூல்களைத் தந்த இமாம்கள் அதற்குப் பின்னால் வந்த பல நூறு இமாம்கள், ஏன்? சாதாரண நபர் முதல் யார் சொல்லி இருந்தாலும், அல்லது எழுதி வைத்திருந்தாலும் அவை குர்ஆன், ஹதீஃத்படி இருக்கின்றதா? என்று பார்த்து விளங்கி ஏற்று நடப்பதை அல்லாஹ்(ஜல்) அனுமதிக்கிறான். அதேபோல யாருடைய கூற்றாக இருந்தாலும் அது குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக இருந்தால் அதைப் புறக்கணித்தலே அல்லாஹ்(ஜல்)வுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருக்கும். இவைகளுக்கான பல ஆதாரங்களை நமது டிசம்பர் 1986 இதழில் பல ஆயத்துக்கள் ஹதீஃத்களின் அடிப்படையில் காட்டியுள்ளோம்.

குர்ஆனை அனைவருக்கும் விளக்குவதே கட்டாயக் கடமை :

தக்லீதை நியாயப்படுத்துவோர் கூறக்கூடிய அடுத்த ஆதாரத்தைப் பார்ப்போம்.

அதாவது குர்ஆனையும், ஹதீஃதையும் உங்களைப் போன்ற பாமர மக்களால் விளங்க முடியாது. எங்களைப் போன்ற மெளலவிகளின் கூட்டம் தான் விளங்க முடியும். எங்களுக்கு விளங்கி நாங்கள் எதைச் சொல்கிறோமோ அதை நீங்கள் சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் அவர்கள் தக்லீதை நியாயப்படுத்த எடுத்து வைக்கின்ற அடுத்த ஆதாரம். இது சரிதானா? என்பதை குர்ஆன் ஹதீஃத் வழியில் ஆராய்வோம்.

இப்படி அல்லாஹ்(ஜல்)வும் அவனது ரசூல்(ஸல்) அவர்களும் சொல்லி இருந்தால் எவ்வித மறுப்பும் இன்றி ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் குர்ஆனின் எந்தப் பக்கத்திலும் அப்படிப்பட்ட அறிவிப்பைப் பார்க்க முடியவில்லை. ஹதீஃதிலும் பார்க்க முடியவில்லை. குர்ஆனிலும், ஹதீஃதிலும் இல்லாத இந்த விதியை விதித்தது யார்? அதுவும் தெரியாது. அதையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்வதே முஸ்லிம்களின் தலை எழுத்துப் போலும்!
ஜின்வர்க்கத்தையும், மனித வர்க்கத்தையும் என்னை அடிபணிவதற்காக அன்றிப் படைக்கவில்லை. (அல்குர்ஆன் : 51:56)

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். (அல்குர்ஆன் 67:2)

இந்த இரு வசனங்களின்படி அனைவரும் அல்லாஹ்வை அடிபணியக் கடமைப்பட்டுள்ளனர். அனைவரும் சோதனைக்கு உட்பட்டவர்கள்; யாருக்கும் விதிவிலக்கில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. பரீட்சை என்றால் அனைவரும் விளங்கித்தான் ஆகவேண்டும். யாரும் யாரையும் காப்பி அடிக்கக் கூடாது. இந்த அடிப்படையில் முயற்சி செய்தால் குர்ஆனையும், ஹதீஃதையும் அனைவரும் விளங்கிக் கொள்ளமுடியும் என்பதே உண்மையான பேச்சாகும்.

நம்முடைய வி­யத்தில் யார் முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு நம் வழிகளை எளிதாக்குவோம். (அல்குர்ஆன் : 29:69)

இதற்கு மாற்றமாகச் சொல்கிறவர்கள் ஏதோ சுயநலத்திற்காகவே சொல்கிறார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ள முடியும். குர்ஆன் விளங்கிக் கொள்ள எளிதானது, தெளிவானது, சந்தேகத்திற்கு இடமில்லாதது என்பதற்கு குர்ஆனில் பல வசனங்களே சான்றுகளாக இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 12:1, 15:1, 16:64, 27:1, 28:2, 36:69, 43:2, 54:17,22,32,40)

குர்ஆனை நம்புவதா? மனிதக் கூற்றுக்களை நம்புவதா? பொது மக்களாகிய நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

உண்மை என்னவென்றால் மார்க்கத்தைக் கற்றுக்கொள்ள நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறையை விட்டு, மனித அபிப்பிராயங்களின்படி கல்வித் திட்டத்தை அமைத்துக் கொண்டதால் இந்த சமுதாயத்திற்கு இத்தனை பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறை, முஸ்லிமான ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அவர்கள் பத்து வயதினர்களான இளஞ்சிரார்களாக இருந்தாலும் எண்பது வயது கிழடுகளாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மூன்று அல்லது நான்கு ஆயத்துக்களாகவும் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தில் நின்றும் மூன்று அல்லது நான்கு ஹதீஃத்களாகவும் படிப்படியாக அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு குர்ஆனையும், ஹதீஃதையும் எளிதான முறையில் கற்றுக் கொள்வதாகும். இந்த அழகான முறையை விட்டு, சமுதாயத்தில் வலுவில்லாத ஒரு சாராரின் குழந்தைகளை (சமுதாயத்தில் 5% கூட இருக்காது) ஆரம்பத்திலிருந்தே சுய நம்பிக்கை அற்றவர்களாகவும், மார்க்கம் தெரியாதவர்களை சார்ந்திருப்பவர்களாகவும் ஆகும் சூழ்நிலையில் மார்க்கக்கல்வி என்ற பெயரால் குர்ஆன், ஹதீஃதோடு மனித அபிப்பிராயங்களையும் கலந்து எழுதப்பட்ட பிக்ஹு நூல்களைக் கற்றுக் கொடுக்கும் முறையை நாடு முழுவதும் உண்டாக்கி வைத்திருக்கிறோம். இந்த முறை மாறி சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குர்ஆனையும், ஹதீஃதையும் கற்றுக் கொள்ளும் நபி(ஸல்) அவர்களது காலத்து கல்வித் திட்டம் அமுல்படுத்தப்படாதவரை, இந்த சமுதாயத்திற்கு விடிவே இல்லை.

குர்ஆன் இறங்கியது பாமர மக்களுக்காகவே!

உண்மையில் குர்ஆன் எழுதப் படிக்கத் தெரியாத, அறியாமையிலும் பகிரங்க வழிகேட்டிலும் மூழ்கி இருந்த மக்களுக்காகத் தான் இறங்கியது.

எழுத்தறிவில்லாத ஜனங்களுக்காக அவர்களிலேயே ஒரு தூதரை அவன் அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகி ரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும் அவர், அவனுடைய வசனங்களை அவர்க ளுக்குப் படித்துக் காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு நெறி நூலையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக் கிறார். (அல்குர்ஆன்: 62:2)

இந்த வசனத்தின்படி நபி(ஸல்) அவர்களது காலத்தில், எழுதப் படிக்கத் தெரியாத 95% சஹாபாக்கள் குர்ஆனை நபி(ஸல்) அவர்களின் விளக்கத்தின் துணையோடு தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். ஆனால், அதே சமயத்தில் நாங்கள்தான் கற்றவர்கள், அரபி இலக்கண இலக்கிய விற்பன்னர்கள், கவிஞர்கள் என்று மார்தட்டிய தாருந்நத்வாவைச் சார்ந்த அன்றைய காலத்து உலமாக்களுக்கு, மத விற்பன்னர்கள் என்று மக்களால் போற்றப்பட்டவர்களுக்கு குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியவில்லை. தலைசிறந்த அறிஞர்கள் என்று போற்றப்பட்டவர்களை வடிகட்டிய ஜாஹில்கள் என்றும், வடிகட்டிய ஜாஹில்கள் என்று தூற்றப்பட்டவர்களை தலைசிறந்த அறிஞர்கள் என்றும் உலகம் சொல்லும் ஒரு மாபெரும் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்திக் காட்டியது. உண்மையில் இது ஒரு பெரும் அதிசயம் தான்.

அகந்தை ஆகாது!

ஆம்! நாங்கள்தான் கற்றவர்கள் அரபி இலக்கண இலக்கியம் அறிந்தவர்கள் என்று அகந்தையுடன் மார்தட்டும் அறிஞர்கள் குர்ஆனை விளங்க முடியாது (7:146) அரபியைச் சரிவர உச்சரிக்கத் தெரியாதவர்களாக இருந்தாலும் பயபக்தியுடையவர்களாகவும், (புலன்களுக்கு எட்டாத) மறைவானவற்றை நம்பியவர்களாகவும், ஐங்காலத் தொழுகையை அதனதன் நேரத்தில் தவறாமல் நிறைவேற்றக்கூடியவர்களாகவும், அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவர்களாகவும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதையும், அதற்கு முன்னால் அருளப்பட்டதையும் நம்பியவர்களாகவும் இருந்து கொண்டு குர்ஆனை படித்து விளங்க முற்பட்டால் நிச்சயமாக குர்ஆனைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியும். இது அல்லாஹ் (ஜல்) கொடுக்கும் உத்தரவாதம். (அல்குர்ஆன்: 2:2-5) திருவசனங்களின் கருத்து) இதை மறுப்பவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது.

இன்றைய தேவை என்ன?

இந்தச் சமுதாயத்திற்கு இன்று மிக மிகத் தேவை தக்வா(பயபக்தி)வுடைய வாழ்வும், குர்ஆனிலும், ஹதீஃதிலும் பாடுபடும் முயற்சியும் மட்டுமே, அதற்கு மேல் அரபி இலக்கண இலக்கியம் இருந்தால் அதை நாம் வரவேற்கிறோம்; மறுக்கவில்லை. இன்னும் பாடுபடுபவர்களில் சிலருக்கு ஞானத்தை அல்லாஹ் அதிகமாகவும் கொடுத்துவிட லாம் இது அல்லாஹ் அவருக்குக் கொடுத்தச் சிறப்பு ஆகும்.

(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே ஞானத்தைக் கொடுக்கின்றான். ஆதலால் எவர் ஞானம் கொடுக்கப் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாக அநேக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார். ஆயினும் அறிவாளிகளைத் தவிர(மற்றெவரும்) உணர்வு பெறமாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:269)

இந்த வசனப்படி இந்தச் சிறப்பைப் பெற்றவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டு, அந்த ஞானத்தைக் கொண்டு மற்ற மக்களுக்கும் குர்ஆன், ஹதீஃதை (மனித அபிப்பிராயங்களை அல்ல) விளங்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே அல்லாது சமுதாயத்தை இரு பிரிவினர்களாக்கி, நாங்கள் தான் மார்க்கத்தைப் போதிக்கும் உரிமை பெற்றவர்கள் நாங்கள் சொல்வதைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதாரங்கள் கேட்காமல் ஏற்று நடக்க வேண்டும் என்று சமுதாயத்தில் உயர்வு தாழ்வை உண்டாக்க ஒருபோதும் முனையக் கூடாது. அல்லாஹ்வுக்கும், அடியார் களுக்குமிடையில் தரகர்களை உண்டாக்க முனையக்கூடாது. இதனால்தான் தக்லீத் என்னும் கண்மூடிப் பின்பற்றலும் மதப் பிரிவுகளும் சமுதாயப் பிளவுகளும், வீழ்ச்சிகளும் ஏற்படுகின்றன.

வஹி வந்து கொண்டிருந்த நபிமார்களைத் தவிர வேறு மனிதர்களில் மார்க்க விஷயத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து அல்லது ஒருவரை ஒருவர் பாதுகாவலராக்கி பின்பற்றி நடப்பதை அல்லாஹ்(ஜல்) மிக வன்மையாக கண்டிக்கிறான்.

உங்களுக்காக உங்கள் இறைவனால் அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்; அவனையன்றி மற்றெவரையும் உங்களுக்குப் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றாதீர்கள். நீங்கள் நல்லுணர்வு பெறுவது வெகு சொற்பமே. (அல்குர்ஆன்: 7:3)

இந்த வசனத்தில் இப்போது நாம் எங்களுக்குக் குர்ஆனைத் தெரியாது, ஹதீஃதைத் தெரியாது. அவற்றை அறிந்து கொள்ள அரபியும் தெரியாது. அதற்கு அவகாசமும் இல்லை. அந்த நாதாக்கள் எல்லாம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மார்க்கத்திற்காக அர்ப்பணித்தவர்கள். பகல் இரவென்று பாராது பாடுபட்டவர்கள். குர்ஆனையும், ஹதீஃதையும் கரைத்துக் குடித்தவர்கள், அரபி இலக்கண இலக்கியங்களில் தேர்ந்தவர்கள், பதினாறு கலைகளையும் கற்றுத் தேர்ந்த விற்பன்னர்கள், குர்ஆனைப் பற்றியும், ஹதீஃதைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாததையா நாங்கள் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

ஆகவே அவர்களை எங்களது பாதுகாவலர்களாக்கி, எங்கள் இமாமாக ஆக்கி அவர்களைப் பின்பற்றுகிறோம் என்று சொல்கிறோமே இதைத்தான் மிக வன்மையாக அல்லாஹ்(ஜல்) கண்டித்துக் கூறுகிறான். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறோம் என்றால் நாமாகப் பின்பற்றியே ஆகவேண்டும் என்று பல வசனங்களில் கட்டளை இட்டதை வைத்தே பின்பற்றுகிறோம். வேறு யாரையும் பின்பற்ற அல்லாஹ்(ஜல்) வசனம் எதையும் இறக்கி வைக்கவில்லை. அதனால் நபி(ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாரையும் அது ஒருவராக இருந்தாலும் சரி பலராக இருந்தாலும் சரி, நல்லவர்களாக இருந்தாலும சரி, கெட்டவர்களாக இருந்தாலும் சரி பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றவே கூடாது.

இதைத்தான் அந்த மரியாதைக்குரிய இமாம்கள் எங்களை தக்லீது செய்யாதீர்கள். ஆதாரங்களை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடக்காதீர்கள் என்று தெளிவாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

அப்படி இருந்தும் அல்லாஹ்(ஜல்) சொல்வது போல் நம்மில் வெகு சிலரே இந்த உண்மையை உணரக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் (யூத கிறித்தவர்கள்) தங்கள் மதகுருக்களையும் பாதிரிகளையும் அல்லாஹ்வை விட்டு ரப்புகளாக ஆக்கிவிட்டனர். (அல்குர்ஆன்:9:31) என்ற திருவசனம் இறங்கியபோது, கிறித்துவராக இருந்து பின்னர் இஸ்லாத்தில் இணைந்த அதீ இப்னு ஹாதம்(ரழி) என்ற நபி தோழர் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே! (கடவுள்களாக ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகிறானே)” என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள், “உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியவற்றை ஹராம் என்றும் (கண்மூடித்தனமாக) நீங்களும் கருதினீர்கள் அல்லவா?

அதுதான் அவர்களை கடவுள்களாகக் கருதியதற்கு நிகரானது” என்று விளக்கம் தந்தார்கள். ஆதாரம் : அஹ்மத், திர்மிதீ

இந்த நிகழ்ச்சியிலிருந்து எவரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற எவருக்கும் அனுமதி இல்லை. மார்க்க அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதற்குரிய ஆதாரங்களை அறிய முற்படாமல் பின்பற்றுவது மிகப்பெரும் குற்றம் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்குத் தெளிவாக்குகின்றது. (2:256,257)

அல்லாஹ்(ஜல்) நம் அனைவருக்கும் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து அவனது நேர்வழியில் நடக்க அருள் புரிவானாக. ஆமீன்!

*********************************************************

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

அமல்களின் சிறப்புகள்….

ஒரு திறனாய்வு! தொடர் : 49

 1. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.

தலைப்பு : திக்ரின் சிறப்புகள்

குறுந்தலைப்பு: திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்.

தமிழாக்கமும், வெளியிட்டோரும்: பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து,12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.

அமல்களின் சிறப்புகள்(அசி) புத்தகம், 390வது பக்கத்தின் முதல் பாராவில் ஒரு ஹதீஃதிற்கு தந்துள்ள விளக்கத்தை சென்ற இதழில் ஆய்வு செய்தோம். இன்ஷா அல்லாஹ் இந்த இதழில் அந்த ஆய்வின் தொடர்ச்சியைக் காண்போம்.

எமது ஆய்வு :

தம்மை சுற்றி உள்ள அனைத்தையும் மனதிலிருந்து தூக்கி எறிந்து விட்டு, அல்லாஹ்வை மட்டும் மனித மனம் எப்போதும் தனித்திருந்து நினைத்து கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தை, “மனிதர்களை விட்டு நீங்கியிருப்பது மற்றும் மனம் அல்லாஹ்வைத் தவிர, மற்றவற்றை விட்டும் நீங்கியிருப்பது என்பதுதான் உண்மையில் (கல்வத் என்னும்) தனித்திருத்தலாகும். எனவே இருவிதமான தனிமைகளும் ஏற்பட்டுவிட்டால் அதுவே பரிபூரணமான தரஜாவாகும்” என்று கூறுகிறது.

அல்லாஹ்வும், அவனுடைய இறுதித் தூதரும் இப்படியான கருத்துக்களைக் கூறவேயில்லை. இது நடைமுறை சாத்தியமும் இல்லை. உதாரணமாக எல்லாவற்றையும் விட்டு நீங்கி இருந்து, அல்லாஹ்வை மட்டும் அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தால், பசிக்கு சாப்பிட சமைப்பதற்கு ஆள் இருக்காது, தாகம் தீர்க்க நீர் கிடைக்காது, இப்படியாக எந்தத் தேவையையும் எவரும் பெற்றுக்கொள்ள வழிவகைகள் இருக்காது.

குடும்பஸ்தர்கள் அல்லாஹ்வை மட்டும் நினைப்பவர்களாய் இருந்தால், எவரும் தனது தாய் தந்தையரை கவனிக்க முடியாது; மனைவி மக்களை கவனிக்க முடியாது; சந்ததி ஏற்படுத்த முடியாது; தனக்குத் தேவைப்படும் வாழ்வாதாரங்களைக் கூட எவரும் பெற்றுக்கொள்ள முடியாது; அல்லாஹ்வால் அழிக்கப்படும் வரை உலகம் மட்டும் இருக்கும். ஆனால் அதில் மனித இனம் மட்டும் இருக்காது.

அசி புத்தகம் கூறுவது போல, தனியாக இருந்து அல்லாஹ்வைத் தவிர, மற்றவற்றை விட்டு நீங்கி இருப்பது மனிதனுக்கு ஒருக் காலும் சாத்தியம் அல்ல என்பதை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளதை கீழேயுள்ள ஹதீஃதிலிருந்து அறிந்து கொள்ள முடிவதைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலாபின் அர்ரபீஉ அல்உசைதீ(ரழி) அவர்கள் கூறிய தாவது: (ஒருநாள்) அபூபக்கர்(ரழி) அவர்கள் என்னைச் சந்தித்து, “ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்” என்று சொன்னேன். அதற்கு “அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருட னும் குழந்தை குட்டிகளுடனும் கலந்து உறவாடுகிறோம். பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னவற்றில், அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்” என்று சொன்னேன்.

அதற்கு அபூபக்கர்(ரழி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்கர்(ரழி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றோம். நான், “அல்லாஹ் வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு நான்,”அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்க ளுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும், துணைவி யருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்து உறவாடுகிறோம். பிழைப்புகளில் ஈடுபட்டு விடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்” என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ, அவன் மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும் போதுள்ள நிலையிலும், இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன் ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்” என்று மூன்று முறை கூறினார்கள். (இந்த ஹதீஃத் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது) அறிவிப்பாளர் : ஹன்ழலா(ரழி) அவர்கள், ஆதாரம்: முஸ்லிம்: அத்தியாயம்: 49, பாவ மீட்சி எண். 5305

இந்த ஹதீஃதை மேலோட்டமாக படித்துவிடாமல், கவனித்து படியுங்கள். “என் உயிர் எவன் கையிலுள்ளதோ, அவன் மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக் கும்போதுள்ள நிலையிலும், இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து, இப்படிப்பட்ட நிலையில் எவராலும் இருக்க முடியாது. மேலும், நாம் போகும் இடங்களில் எல்லாம் மலக்குகள் நம்முடன் கைகுலுக்கவும் மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. அது எப்படி என்கிறீர்களா? இதுவரை நம்மில் எவருடனாவது வானவர்கள் கை குலுக்கி முஸாபா செய்திருக்கிறார்களா? இல்லையே! எனவே, அது அப்படித்தான்! இருந்தாலும் இதற்கான விளக்கத்தை கவனியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் “ஹன்ழாலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்” என்று மூன்று முறை தொடர்ந்து கூறிய வாசகம் நாம் சொல்வதை ஊர்ஜிதப்படுத்து கிறது. எனவே, நாம் அறிந்து கொண்டது சரியானதுதான் என்பதை, அதாவது, மற்றவற்றை விட்டு நீங்கி அல்லாஹ்வை எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பது சாத்தியம் இல்லை என்பது தெளிவாகி விட்டது அல்லவா? எனவே, அல்லாஹ்வை சில நேரம் நினைக்க முடியும், மற்றவர்களையும் மற்றவற்றையும் சில நேரம் நினைக்க முடியும் என்பதே இதன் கருத்தாகும்.

மற்றவர்களையும், மற்றவற்றையும் சில நேரம் நினைக்க முடியும் என்பதன் கருத்து அவர்களுக்கும் அவைகளுக்கும் அல்லாஹ் விதித்துள்ள கட்டளைகளின்படி நாம் செயல்பட்டால் அதுவும் இபாதத்தாக (வணக்கமாக) இஸ்லாம் கணிக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்.

இப்படியும், அப்படியும் இருப்பதுதான் மனிதனின் இயல்பு. அதனால்தான் மனிதர்கள் சிலநேரம் இப்படி இருப்பதையும், இப்படி இல்லாமல் சிலநேரம் அப்படி இருப்பதையும் இஸ்லாம் அனுமதித்து இரண்டையுமே இறை வணக்கமாக எடுத்துக் கொள்கிறது.

உதாரணமாக சில நேரம் தொழுகி றோம். மேலும் சில நேரம் துஆ செய்கிறோம். இவை எல்லாம் இறை வணக்கம் தான். எனவே, நன்மைகள் பதியப்படுகிறது.

அதேபோல வேறு சில நேரம் வணிகத்தில் நுழைகிறோம். அப்போது அல்லாஹ்வுக்கு பயந்து தராசை நீதமாக பிடித்து, அளவையில் மோசடி செய்யாமல் இருக்கிறோம். இங்கேயும் இறைவனுக்கு பயந்து செய்கிறோம் இல்லையா? எனவே இந்த வியாபாரத்தை இறைக் கட்டளைப்படி செய்ததால் இதையும் இஸ்லாம் இறை வணக்கமாக எடுத்துக்கொண்டு நன்மை பதியப்படுகிறதல்லவா?

ஒரு அலுவலகத்தில் பணியில் இருக்கிறோம். அலுவலகத்திலுள்ள ஒரு குண்டூசி கூட நமக்கு சொந்தமானது அல்ல. எனவே, ஒரு குண்டூசியைக் கூட நமது சொந்த உபயோகத்திற்காக வீட்டிற்கு எடுத்து வருவதில்லை. ஏன் எடுத்து வருவதில்லை?

இன்னும் நீங்கள் (பிறருடைய) அனந் தரச் சொத்துக்களையும் உண்டு வருகிறீர்கள் என்று அல்லாஹ் கண்டிப்பதால் (அல்குர்ஆன் 89:19) அல்லாஹ்வுக்கு பயந்து அந்த குண்டூசியைக் கூட நமது சொந்த உபயோகத்திற்காக வீட்டிற்கு எடுத்து வருவதில்லை.

இந்த நமது நற்செயல், “எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும், அதனை அவர் கண்டு கொள்வார். மேலும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதனையும் அவன் கண்டு கொள்வான்” (அல்குர்ஆன் : 99:7,8) என்ற ஆயத்தின் அடிப்படையில், அல்லாஹ்வுக்கு பயந்து பிறருடைய பொருளை, நமது உபயோகத்திற்கு பயன்படுத்த எடுத்து வராமல் இருந்து விடுகிறோம். நமது இந்த நற்செயலை இறைக் கட்டளைப்படி நாம் செய்தால், இதையும் இஸ்லாம் இறை வணக்கமாக எடுத்துக் கொண்டு நன்மை பதியப்படுத்துகிற தல்லவா?

அதே போல, அலுவலகத்தில் தனக்கு வரையறுக்கப்பட்ட வேலைகளை செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பது, அந்த வேலையை செய்ய லஞ்சம் பெறுவது ஆகிய தீய பழக்கத்திற்கு உட்படாமல், அல்லாஹ்வுக்கு பயந்து, கொடுக்கப்படும் சம்பளத்திற்காக வரையறுக்கப்பட்ட வேலைகளை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நேர்மையாக செய்து முடிப்பவருக்கு அந்த செயல் இறைக்கட்டளைப்படி இருந்தால், இதையும் இஸ்லாம் இறைவணக்கமாக எடுத்து கொண்டு நன்மையை பதிகிறதல்லவா?

கவனித்தீர்களா? நபி(ஸல்) அவர்கள் “ஹன்ழலா! (இப்படிச்) சிலநேரம் (அப்படிச்) சிலநேரம்” என்று மூன்று முறை தொடர்ந்து கூறிய வாசகம் நமது செயலுக்கு பொருந்தி வருகிறது அல்லவா?

ஈமானுடன் அல்லாஹ்வைத் தொழுவதும், நோன்பு வைப்பதும் வசதி உள்ளவர் ஜகாத் கொடுப்பதும், ஹஜ் செய்வதும் நேரடி வணக்கமாக இருப்பது போல, அல்லாஹ்வின் அச்சத்தால் நேர்மையாக செய்யப்படும் எல்லா செயல்களும் இறை வணக்கமாகும். எனவே “இப்படி” சில சமயங்களில், “அப்படி சில சமயங்களில்” இருக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் போதனை செய்கிறார்கள்.

தப்லீக் ஜமாஅத்தினரே! நன்றாக கவனியுங்கள்! உங்களில் அநேகர் பிறரின் பொருளை உண்பவர்களாக இல்லை, வரையறுக்கப்பட்ட வேலைகளை நேர்மையாக செய்கி றீர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால், அல்லாஹ்வும், அவனுடைய இறுதித் தூதரும் போதித்ததற்கு இணக்கமாக வழிபடாமல், அவற்றிற்கு எதிரானவைகளைக் கூறிக்கொண்டு ஈமானை இழந்து விட்ட அசி புத்தகத்தை நம்பி செயல்பட்டு வருகிறீர்களே, இது நியாயமா? எனவே, உங்களுக்கு நேர்வழி கிடைத்திட அல்லாஹ்விடம் மனமுருகி பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை.

390வது பக்கத்தின் இரண்டாவது பாராவில் உள்ள குழப்பம் பற்றி…   (இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்…..)

*********************************************************

நாளின் ஆரம்பம்…

எஸ்.எம். அமீர்,  நிந்தாவூர்,  இலங்கை

2019 மார்ச் தொடர்ச்சி….

ஜாபிர்(ரழி) அவர்கள் கூறியதாவது, உஹதுப் போர் நடக்கவிருந்ததற்கு முதல் நாள் இரவு எனது தந்தை என்னை அழைத்து நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் நான் தான் முதலில் கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன் என்று கூறினார்கள். மறுநாள் போரில் அவர்தான் முதலில் சஹீதாக்கப்பட்டார். (புகாரி: 1351)

அபூ மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறியதாவது. வானலோகத்தில் தொழுகை கடமையாக்கப்பட்ட மிஃராஜுடைய இரவுக்கு மறுநாள் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் இறங்கி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு இமாமாக நின்று ஐவேளைத் தொழுகைகளையும் அதனதன் நேரங்களில் தொழுது காட்டினார்கள். (முஸ்லிம்:1068,1069, புகாரி:3888)

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் குறித்து வினவினார். “நம்முடன் தொழுகைகளில் கலந்து கொள்வீராக” என்று கூறிய நபியவர்கள்… மறுநாள் பிலால்(ரழி) அவர்களிடம் சுப்ஹத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு உத்தரவிட்டு வெளிச்சம் வந்த பின்னர் சுப்ஹ் தொழுவித்தார்கள்.

மறுநாள் சுபுஹ் தொழுகையை பிற்படுத்தத் தொழுதார்கள் எந்த அளவிற்கென்றால் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஒருவர் “சூரியன் உதயமாகிவிட்டது” அல்லது “சூரியன் உதிக்கப் போகிறது” என்று கூறினார். மறுநாள் செம்மேகம் மறைவதற்கு முன்னர் மஃரிப் தொழுதார்கள் என்று வந்துள்ளது. (புராதா(ரழி), அபு மூசா(ரழி) முஸ்லிம் : 1079,1080,1081)

நபி(ஸல்) அவர்கள் இரவில் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தார்கள். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந் தது. மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். மறுநாள் காலையிலும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். (ஆயிஷா(ரழி), புகாரி: 729)

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் புறப்பட்டுச் சென்று பள்ளிவாசலில் தொழுதார்கள். அப்போது மக்களில் சிலரும் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். மறுநாள் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுதபோது மக்களின் எண்ணிக்கை அதிகமானது. (புகாரி:729, 924, 1129, முஸ்லிம் : 1395,1396)

பத்ருப் போரில் கலந்து கொண்ட அன்சாரி இத்பான் பின் மாலிக்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே நாங்கள் வந்து எனது வீட்டில் ஓரிடத்தில் நின்று தொழுகை நடத்த வேண்டும் அந்த இடத்தை நான் தொழுமிடமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்கள். மறுநாள் நண்பகல் வேளையில் அபூபக்கர்(ரழி) அவர்களுடன் வந்த நபி(ஸல்) அவர்கள் அவரது வீட்டின் ஓரிடத்தில் தொழுதார்கள். (புகாரி: 839,840, 1185, 1186, முஸ்லிம்:54, 1165)

அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது. பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த நிறப் பெண்மணி நோய்வாய்பட்டிருந்த நிலையில் ஒருநாள் இரவு இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவோடிரவாக அடக்கம் செய்து விட்டனர். மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும் இதை அப்போதே எனக்கு நீங்கள் அறிவிக்காததன் காரணம் என்ன? என்று கேட்டார்கள். (புகாரி: 458,460,1247,1337)

ரமழான் மாத நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் கைஸ் பின் ஸிர்மா அல் அன்சாரீ(ரழி) அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். அன்றைய பகல் பொழுதில் தமது நிலத்தில் கடுமையாக உழைக்கவும் செய்தார். நோன்பு துறக்கும் நேரம் வீட்டில் எதுவும் இல்லாததனால் தூக்கம் மேலிட அப்படியே உறங்கிவிட்டார்கள். மறுநாள் நோன்பைத் தொடராகப் பிடித்திருந்த நிலையில் தமது வயலில் பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது சரியாக நடுப்பகல் வேளையில் மயக்கமுற்றார்கள் நபி(ஸல்) அவர்களிடம் இது தெரிவிக்கப்பட்டது. அப்போது தான் இந்த 2:187 வசனம் அருளப்பட்டது. (பராஉ பின் ஆஸிப்(ரழி), முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, முஸ்னத் அஹ்மத், தாரமி தஃப்சீர் இப்னு கஸீர் : 1:578)

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது. ரமழான் மாத நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் முஸ்லிம்கள் இஷா தொழுகையை நிறைவேற்றி முடித்தால் அதற்குப் பிறகு மறுநாளின் இரவு வரும் வரை உண்பதும் உடலுறவு கொள்வதும் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் முஸ்லிம்களில் சிலர் ரமழான் மாதத்தில் இஷா தொழுகையை நிறைவேற்றிய பிறகு உண்ணவும், உடலுறவு கொள்ளவும் செய்தனர் அவர்களில் கஅப் பின் மாலிக்(ரழி) அவர்களும் உமர்(ரழி) அவர்களும் ஒருவராவார். மறுநாள் காலையில் உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து செய்தியைச் சொன்னார்கள். அப்போதுதான் 2:187 வசனத்தை அல்லாஹ் அருளினான். (பராஉபின் ஆஸிப்(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி), அபூஹுரைரா(ரழி), கஅப் பின் மாலிக்(ரழி), புகாரி: 4508, தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர்:2:575-592)

பகலில் நீங்கள் செய்தவற்றையயல்லாம் அவன் அறிகின்றான். பின்னர் உங்களை உறங்க வைப்பதற்காக உங்களின் உயிர்களை அன்றைய இரவில் அவன் கைப்பற்றுகின்றான். பின்னர் குறிப்பிட்ட தவணையை உலகில் நிறைவு செய்யப்படுவதற்காக மறுநாள் உங்களை உயிர் கொடுத்து எழுப்புகின்றான். (6:60-62, 39:42, 13:11, 82:10, 50:17,18, அபூஹுரைரா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி), கத்தீ(ரஹ்) முஜாஹித்(ரஹ்) கத்தாதா(ரஹ்), புகாரி: 6320,7393, முஸ்லிம்: 5257, திர்மிதி:3323, தஃப்சீர் இப்னு மர்தலைஹி, இப்னு கஸீர்: 7:928)

நபி மூஸா(அலை) அவர்களின் காலத்தில் இஸ்ரவேலர்கள் தீஹ் எனும் பாலை வனப் பகுதியில் தங்கியிருக்க நேரிட்ட போது அவர்களின் அன்றைய உணவிற்காக அல்லாஹ் பனிக்கட்டி போன்றதொரு தூய வெள்ளை நிறமான தேனை விட இனிப்பான பலகாரமாகிய “மன்னு” மற்றும் காடை போன்ற “சல்வா” எனும் சிறந்த உணவை அன்றைக்கு மட்டும் போதுமான அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேலதிகமாக மறுநாளைக்கும் தேவை என்று எடுத்து வைக்கக் கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். ஆனால் அந்த உத்தரவை மீறிய அவர்கள் மறுநாளைக்கும் தேவை என்று அதிகளவு இறைச்சியை எடுத்து சேமித்து வைக்கலானார்கள். அவ்வாறு மேலதிகமாக அவர்கள் சேமித்து வைத்த இறைச்சி மறுநாள் கெட்டுப்போய் துர்நாற்றமடிக்கும் இதனைக் குறித்தே! நபி(ஸல்) அவர்கள் இஸ்ரவேலர்களான யூதர்கள் இருந்திராவிட்டால் இறைச்சி கெட்டுப் போய் துர்நாற்றம் அடித்திருக்காது என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), சுத்தி(ரஹ்), கத்தாதா(ரஹ்), அஸ்லம்(ரஹ்) 2:57, 7:160, 20:80. புகாரி: 3330, 3399, 4478,4639,5708, தஃப்சீர் இப்னு கஸீர்: 1:215-220, 5:764, உம்ததுல்காரீ, இர்ஷாதுல் ஸாரீ)

மத்யனுக்கும் சினாய் தீபகற்பகத்திலுள்ள தூர் மலைக்கும் இடையே உள்ள அய்லா எனும் கடலோரக் கிராமத்தில் வசித்த யூதர்கள் தொழில் செய்வதற்குத் தடை செய்யப்பட்ட புனித பண்டிகை தினமான சனிக்கிழமையில் அல்லாஹ் புனித மாக்கியவற்றைத் திட்டமிட்டுக் கெடுப்பதற்காகச் சனிக்கிழமையில் மீன் உண்பது தான் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் சனிக்கிழமையில் மீனைப் பிடித்து வைத்திருந்து மற்ற நாட்களில் அதை உண்ணுங்கள் என்ற ஷைத்தானின் உளத் தூண்டுதலால் இறையாணையை மீறித் தடை செய்யப்பட்ட நாளில் தந்திரம் செய்து மீன் பிடித்தனர். அப்போது அவர்களிலுள்ள ஒரு சாரார் அல்லாஹ்வின் எதிரிகளே நீங்கள் குற்றம் இழைத்துவிட்டீர்கள். இன்று இரவு அல்லாஹ் உங்களுக்கு ஏதேனும் ஒரு வகை வேதனையை வழங்கிய நிலையிலேயே நாளை காலையில் உங்களை நாங்கள் காண்போம் என்று கூறினார்கள்.

மறுநாள் காலையில் பார்த்தபோது அவர்கள் குரங்குகளாக உருமாற்றப்பட்டிருந்தார்கள். (2:65,66, 7:66, 163-166, இப்னு அப்பாஸ் (ரழி), சுத்தி(ரஹ்), கத்தாதா(ரஹ்), ஷைபான்(ரஹ்), இக்ரிமா(ரஹ்), அதாஉ அல்ஃகுராசானி(ரஹ்), ளஹ்ஹாக்(ரஹ்), அபுல் ஆலியா(ரஹ்), சயீத் பின் ஜுபைர் (ரஹ்), அபூ ஜஃபர்(ரஹ்), அர்ராஸி(ரஹ்), முஜாஹித்(ரஹ்), தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், இப்னு கஸீர் 1:241-249, 3:927-937)

முதல் நாள் கிப்தி இனத்தைச் சேர்ந்த ஒருவனைத் தவறுதலாகக் கொலை செய்து விட்ட மூஸா(அலை) அவர்கள் மறுநாள் காலையில் தமக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்தோடு தெருவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். (28:15-18, முஜாஹித் (ரஹ்), கத்தாதா(ரஹ்), தஃப்சீர் இப்னு கஸீர்: 6:754)

இறை ஆணையின் பேரில் இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திலுள்ள பேரறிஞர் ஹிழ்ர்(அலை) அவர்களைச் சந்திப்பதற்காகக் கட்டுச்சாதத்துடன் ஒரு மீனையும் கூடையில் போட்டுக்கொண்டு “யூ­ஃபின் நூன்” என்பவரைப் பயணத் துணைவராகக் கூட்டிக் கொண்டு மூஸா(அலை) அவர்கள் இரவு பகலாகப் பயணம் செய்த சந்தர்ப்பத் தில் கூடையில் இருந்த இறந்த மீன் உயிர் பெற்றுத் துள்ளிக் குதித்துக் கடல் தண்ணீருக்குள் சென்றுவிட்டது. மறுநாள், காலை பொழுது புலரந்தபோது மூஸா(அலை) அவர்கள் தமது பயணத் துணைவரிடம் நமது காலைச் சிற்றூண்டியைக் கொண்டு வா! என்று கூறினார்கள். (புகாரி: 4725-4727, 7478,6672,2728, 3400-3402, 3278, 2267,122,78,74, முஸ்லிம் : 4742, 4744, 4746, 18:60-82)

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் ஓரிறைப் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது அவர்கள் உண்மையான இறைத்தூதர் தானா என்பதைப் பரீட்சித்துபதற்காகக் குறைசியர்களின் குழு ஒன்று நபியவர்களிடம் வந்து “குகைவாசிகள்” “துல்கர்ணைன்” மற்றும் “ரூஹ்” பற்றிய சில கேள்விகளைக் கேட்டபோது நபியவர்கள்.

“நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நாளை நான் விடை அளிக்கிறேன்” என்று கூறினார்கள். (18:23,24, 17:85. இப்னு அப்பாஸ்(ரழி) தஃப்சீர் தபரீ, லுபாபுந் நுகூல், தஃப்சீர் இப்னு கஸீர்: 5:376-378, 413-417)

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் பிறை பத்தாவது நாள் காலை மினாவில் இருக்கும் போது, “நாம் நாளை பனூ கினானாவின் பள்ளத்தாக்கை அடைவோம்” என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி:1589, 1590)

கலிஃபா உமர்(ரழி) அவர்கள் ஹிஜ்ரி, 18ம் ஆண்டு இன்று “ஷிரியா” என்றழைக்கக் கூடிய ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் “ஸர்க்” எனும் இடத்தை அடைந்தபோது பாலஸ்தீன், ஜோர்தான், ஹிம்மஸ், கின்ஸிரீன், திமிஷ்க் போன்ற நகரங்களின் ஆளுனர்கள் உமர்(ரழி) அவர்களைச் சந்தித்து தற்போது சிரியாவில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். இதனால் பிரயாணத்தை மேற்கொண்டு தொடர்வது சம்பந்தமாக ஆரம்பகால முஹாஜிர்கள் அன்சாரிகள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்துவந்த குறைஷ´ப் பெரியவர்கள் போன்றோரை அழைத்து கலந்தாலோசனை செய்த பின்னர் தொடர்ந்து சிரியாவிற்குச் செல்வதைக் கைவிட்ட உமர்(ரழி) அவர்கள் உடனே மக்களை அழைத்து நான் நாளை காலையில் மதீனாவிற்குப் புறப்படவிருக்கின்றேன். நீங்களும் என்னுடன் பயணம் புறப்படுங்கள் என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி: 5728,5729, 5730, முஸ்லிம் : 2219)

அபூ கத்தாதா(ரழி) அவர்கள் கூறியதாவது, கைஃபர் போரிலிருந்து திரும்பும் போது நபி(ஸல்) அவர்கள் இன்று மாலையும், இரவும் நடு நிசியும், நீங்கள் பயணம் செய்தால் நாளை காலையில் நீங்கள் ஓர் நீர் நிலையைச் சென்றடைவீர்கள் என்று கூறினார்கள். (முஸ்லிம் : 1213)

எனவே (அன்று இரவு) அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது உமது இறைவனிடமிருந்து சுற்றக்கூடிய (நெருப்பின் ஆபத்தான)து. சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது. அ(த் தோட்டத்திற்குரிய)வர்கள் அதிலுள்ள கனிகளை நாளை அதிகாலையில் சென்று பறித்துவிடுவோமென்று சத்தியம் செய்தார்கள். (68:17-19) என்பதிலிருந்து பொழுது புலர்ந்து விட்டால் அது நாளை என்று ஆகிவிடுகிறது. இன்றைய இரவுக்கும் நாளைய பகலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அது வேறு, இது வேறு.

“கறுத்தக் கயிறு” எனும் இன்றைய இரவின் இருள் அகன்று “வெள்ளைக் கயிறு” எனும் நாளைய விடியல் வெளிச்சம் தெரிய பொழுது புலர்ந்துவிட்டால் (2:187) கடந்த அந்த இரவு நேற்று என்று ஆகிவிடுகிறது. அவ்வாறே நபித்தோழர்களும் விளங்கியிருந்தார்கள்.

முதல் நாள் மூஸா(அலை) அவர்களது இனத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களில் ஒருவர் பிர்அவ்னின் “கிப்தி” இனத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு எதிராக மூஸா(அலை) அவர் களிடம் உதவி கோரினார். ஓங்கிய ஒரு குத்தில் மூஸா(அலை) அவர்கள் அவனது கதையை முடித்து விட்டார்கள். மறுநாள் காலை வேளையில் தனக்கு என்ன நடக் குமோ என்று அச்சத்தோடு தெருவில் நின்று கொண்டிருக்கையில் நேற்று அவர்களிடம் உதவி கோரிய இஸ்ரவேலர்களைச் சேர்ந்த ஒருவனுக்கு எதிராக உதவி கேட்டுக் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் உதவிக்குச் சென்றபோது நேற்று ஒருவரைக் கொலை செய்தது போன்று இன்று என்னையும் கொலை செய்யப் போகிறாரா? என்று “கிப்தி” இனத்தைச் சேர்ந்த மற்றொருவன் கூறலானான். (28:14-19, இப்னு அப்பாஸ்(ரழி), முஜாஹித்(ரஹ்), சயீத்பின் ஜுபைர்(ரஹ்), இக்ரிமா(ரஹ்), சுத்தீ(ரஹ்), கத்தாதா(ரஹ்), தஃப்சீர், இப்னு கஸீர்: 6:752-756)

மூஸா(ரஹ்) அவர்களின் தந்தையின் சகோதரரின் மகனாகிய “காரூன்” ஒருநாள் பிரமாண்டமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டு திகைக்க வைக்கும் முழுமையான அழகு அலங்காரத்துடன் தமது சமூகத்தாரிடம் வந்தபோது அன்று காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போல்நமக்கும் கொடுக்கப்பட்டு இருக்கலாமே! நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான் என்று நேற்று அவனது இடத்தை அடைய ஆசைப்பட்டவர்கள் அனைத்துக் கருவூலங்களுடனும் செருக்கோடு வந்து சொரிமணலில் புதையுண்ட “காரூனை” பார்த்துவிட்டு அல்லாஹ் நம்மீது கருணை காட்டியிருக்கா விட்டால் நம்மையும் (நேற்று) அவன் பூமிக்குள் புதையச் செய்திருப்பான் என்று கூறினார்கள். (28:76-82, இப்னு அப்பாஸ்(ரழி), கத்தாதா(ரஹ்), இப்ராஹீம்(ரஹ்), அந்நகஈ(ரஹ்), மாலிக் பின் தீனார்(ரஹ்), இப்னு ஜுரைஹ் (ரஹ்), தஃப்சீர் இப்னு கஸீர்: 6:822-835)

இவ்வுலக வாழ்க்கையின் நிலை எல்லாம் வானத்திலிருந்து நாம் இறக்கி வைத்த (மழை) நீரைப் போன்றதுதான் அந்நீர் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் உண்ணுகின்ற பூமியின் தாவரங்களுடன் (இரண்டறக்) கலந்து (அவற்றை முளைக்க வைத்து) விடுகிறது. இறுதியில் பூமி(பசுமையாகி) எழில் கொஞ்சம் அழகைப் பெறுகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் (பலனை அறுவடை செய்தவன்) மீது தமக்கு ஆற்றல் வந்துவிட்டதாக எண்ணினர். (இந்நிலையில்) இரவில் அல்லது பகலில் நமது கட்டளை பூமிக்கு வந்தது(அதையடுத்து) அத(ன் பயிரி)னை நேற்றைய தினம் இல்லாததைப் போன்று நாம் ஆக்கி விட்டோம். (10:24)

அபூதர்(ரழி) அவர்கள் கூறினார்கள்:

நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது ஒரு மனிதர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார் என்பதாகக் கேள்விப்பட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ரகசியமாகச் சென்றடைந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் அப்போது நபி(ஸல்) அவர்கள், “அபூதரே! நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஷயத்தை மறைத்து வைப்பீராக! உமது ஊருக்குத் திரும்பிச் செல்வீராக! நாங்கள் மேலோங்கி விட்ட செய்தி உமக்கு எட்டும்போது எங்களை நோக்கி வருவீராக!” என்று கூறினார்கள்.

அதற்கு நான், “உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் இதை அவர்களுக்கிடையே உரத்துச் சொல்வேன் என்று கூறிவிட்டு கஃபாவின் வளாகத்திற்குள் பிரவேசித்து அங்கே இருந்த குறைஷிகள் மத்தியில் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதி கூறுகின்றேன்” என்று கூறியவுடனேயே சூழ இருந்த குறைஷியர்கள் என்னை கடுமையாகத் தாக்கினார்கள். அங்கிருந்த அப்பாஸ்(ரழி) அவர்கள் மூலம் விடுவிக்கப்பட்ட நான் மறுநாள் காலை வேளை வந்தவுடன் மறுபடியும் அங்கே திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போலவே உரத்துக் கூறினேன். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரி: பாகம்: 4, பக்கம் 195, பாடம்: 10,11,3522, உம்ததுல் காரீ)

மக்கா வெற்றி கொள்ளப்பட்டதற்கு மறுநாள், நபி(ஸல்) அவர்கள் மக்காவை அல்லாஹ் புனிதப்படுத்தியிருக்கின்றான் எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதற்கோ இங்குள்ள மரத்தை வெட்டுவதற்கோ அனுமதிக்கப்படவில்லை நான் இங்கே போர் செய்ததனால் இதைப் பொது அனுமதி என்று எவரும் கருதிவிட வேண்டாம். எனக்குக் கூட ஒரு பகலின் சிறிது நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இன்று இதன் புனித தன்மை நேற்றைய அதன் புனித தன்மை போல் மீண்டும் வந்துவிட்டது என்று கூறினார்கள். (அபூ ஷிரைஹ் அல் அதவீ(ரழி), புகாரி:104, 1832,3189,1834,4313, முஸ்லிம்:2633,2632)

ரபீஆ பின் கஅப்(ரழி) அவர்கள் கூறியதாவது, நாங்கள் (ஒருமுறை) காரிருள் படர்ந்த ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஓரிடத்தில் நாங்கள் தங்கினோம் (எங்களில்) ஒவ்வொருவரும் கற்களை எடுத்து அதைத் தடுப்பாக வைத்துத் தொழுதனர். பொழுது புலர்ந்தபோது பார்த்தால் நாங்கள் அனைவருமே கிப்லா அல்லாத வேறொரு திசையை நோக்கித் தொழுதிருந்ததைக் கன்டோம். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! கடந்த நேற்றைய இரவில் நாங்கள் கிப்லா அல்லாத வேறு திசையை நோக்கித் தொழுதுவிட்டோம். அந்தத் தொழுகையின் நிலை என்ன? என்று கேட்டோம். அப்போது தான் அல்லாஹ் இந்த 2:115 வசனத்தை அருளினான். (திர்மிதி, இப்னு மாஜா, தஃப்சீர் இப்னுகஸீர் : 1:377)

உமர்(ரழி) அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பட்டாடையை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இதை எனக்குக் கொடுத்து அனுப்பியுள்ளீர்கள். ஆனால் “உத்தாரித்” என்பவர் விற்ற பட்டாடையைக் குறித்து நேற்று தாங்கள் வேறுவிதமாகக் கூறினீர்களே! என்று கேட்டார்கள்.
(அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) முஸ்லிம் : 4198)

நான் நேற்று இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் உமர்(ரழி) அவர்களிடம் அமர்ந்திருந்த போது அவர்கள் தமது தோழர்களிடம், “உங்களில் யார் இனி வரப்போகும் அரசியல் குழப்பங்கள் குறித்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னவைகளை நினைவில் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
(ஹுதைஃபா (ரழி), முஸ்லிம் : 231)

நேற்று நான் கலீபா உமர்(ரழி) அவர்களிடம் வந்து மூன்று முறை ஸலாம் சொல்லி அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி வழங்கப்பட வில்லை திரும்பிச் சென்று விட்டேன். பிறகு இன்று அவர்களிடம் சென்று நேற்று நான் வந்து மூன்று முறை சலாம் சொன்னேன். பதில் வராததால் பிறகு நான் திருப்பிச் சென்றுவிட்டேன் என்று கூறினேன். அவ்வாறு செல்வதற்கான நபியவர்களின் வழிமுறையான சாட்சியத்தைக் கொண்டுவா என்று உமர்(ரழி) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அபூமூஸா(ரழி), புகாரி:94,95,6244, 6245, முஸ்லிம் : 4352)

ஒரு பயணக் கூட்டம் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று பிறையைக் கண்டதாகக் கூறினார்கள். (அபூதாவூத்: 1159, அஹ்மது: 20598, 14006, நஸயீ: 1756, இப்னு மாஜா : 1653, பைககீ : 455) என்பதிலிருந்து நபியவர்களின் காலத்தில் இருந்தவர்களும், நேற்று, இன்று, நாளை என்பதை வெவ்வேறாகவே கருதியிருந்தார்கள் என்பது புரிகிறது.
ஆக இதுவரை நாம் குர்ஆன், ஹதீஃத், ஆதாரங்களின் அடிப்படையில் மேலே பார்த்த விசயங்களின்படி கடந்த காலமாகிய நேற்றையும், நிகழ் காலமாகிய இன்றையும் ஒருபோதும் ஒன்று சேர்க்க முடியாது. அவை இரண்டும் வெவ்வேறானவை அது போன்றே நிகழ் காலமாகிய இன்றையும் எதிர்காலமாகிய நாளையையும் ஒன்று சேர்க்க முடியாது. அவை இரண்டும் வெவ் வேறானவை. ஆனால் நாளின் ஆரம்பம் மஃரிப் என்போர் இயற்கை நிகழ்வுகளுக்கு முரணாக,

கடந்த காலமாகிய நேற்றையும், நிகழ் காலமாகிய இன்றையும் ஒன்று என்று சொல்கின்றார்கள். அது எவ்வாறு எனில் கடந்த காலமாகிய நேற்றையை மஃரிப் நேரத்தில் இருந்து நிகழ் காலமாகிய இன்றைய மஃரிப் நேரம் வரை ஒருநாள் என்று வாதிடுகின்றனர்.

அதுபோன்றே நிகழ் காலமாகிய இன்றையும், எதிர் காலமாகிய நாளையையும் ஒன்று என்று சொல்கின்றார்கள். அது எவ்வாறு எனில் நிகழ் காலமாகிய இன்றைய மஃரிப் நேரத்தில் இருந்து எதிர் காலமாகிய நாளைய மஃரிப் நேரம் வரை ஒரு நாள் என வாதிடுகின்றார்கள்.

சூரியனின் சுழற்சியை வைத்து நாளை ஆரம்பிப்பதற்குப் பதிலாக சந்திரனின் சுழற்சியை வைத்து நாளை ஆரம்பிக்கின்றார்கள்.

நாளின் கடைசிப் பகுதி சுப்ஹுக்கு முன் னர் என்பதற்குப் பதிலாக நாளின் கடைசிப் பகுதி மஃரிபுக்கு முன்னர் என வாதிடுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குள் நுழைவார்கள். ஆனால் இவர்களோ மஃரிப் தொழுதுவிட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குள் நுழைகின்றார்கள்.

பொழுது புலர்ந்து விடியலில் ஆரம்பித்த வியாழக்கிழமையன்று மாலை நேரம் மஃரிபில் இருந்து ஆரம்பித்த வியாழக்கிழமைக்குரிய இரவை வெள்ளிக்கிழமை இரவு என்று சொல்கின்றார்கள். அது போன்றே வெள்ளிக்கிழமையின் இரவை சனிக்கிழமையின் இரவு என்றும் சனிக்கிழமையின் இரவை ஞாயிற்றுக்கிழமையின் இரவு என்றும் ஞாயிற்றுக்கிழமையின் இரவை திங்கள் கிழமையின் இரவு என்றும் திங்கள் கிழமையின் இரவை செவ்வாய்க்கிழமையின் இரவு என்றும் செவ்வாய்க்கிழமையின் இரவை புதன் கிழமையின் இரவு என்றும் புதன் கிழமையின் இரவை வியாழக்கிழமையின் இரவு என்றும் நம்பிக் கடைப்பிடித்து வருகின்றனர்.

பொழுது புலரும் ஃபஜ்ர் நேரம் ஆகிகாலை வேளையில் நாளை ஆரம்பிப்பதற்குப் பதிலாக மஃரிபுடைய இரவு நேரத்திலிருந்து நாளை ஆரம்பிக்கின்றார்கள்.

ஆழ்ந்த உறக்கத்தின் அமைதிக்குப் பிறகு கறுப்புக் கயிறு எனும் காரிருள் இரவின் கருமை அகன்று வெள்ளைக் கயிறு எனும் விடியலின் வெளிச்சம் இருளைப் பிழந்த வாறு காலைப் பொழுது வசந்தமாகப் புலர்வதால் அடிவானம் பிரகாசித்து உலகம் ஒளிர்வு பெற்று பறவைகளின் பலவிதமான காதுக்கினிய ஒலிகளோடு மிருகங்களும், மனிதர்களும் விளிப்பை அடைந்து புத்துணர்வுடனும் புதுப்பொலிவுடனும் வாழ்வாதாரத்திற்கான காரணிகளைத் தேடிப் பயணங்களை மேற்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கி ஓடி ஆடிப் பாடுபட்டு உழைக்கும் பணிகளில் அதன் அலுவல்களில் உற்சாக மாக ஈடுபட்டுப் படைத்தவனின் அருளைப் பூமியில் தேடி ஓடி உழைக்கவும், சம்பாதிக்கவும் இன்னோரன்ன தொழில் செய்யவும் அல்லாஹ் பகலை உண்டாக்கினான்.

அவனே தனது கருணையால் (உங்களது வாழ்வாதாரத்திற்கான) அவனது அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகப் (பொழுது புலரும் போதுள்ள) பகலையும் உங்களுக்கு ஏற்படுத்தினான். (இதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டும். (28:73)

(பொழுது புலரும்) விடியற் காலையின் மீது சத்தியமாக அது வெளிச்சமாகும் பொழுது, (74:34)

நீங்கள் (ஓடி உழைப்பதற்காக) அவனே பொழுது புலரச் செய்து) விடியலைப் பிளப்பவன். இது வல்லமை மிக்கவனும் நன்கறிந்தவனுமான (ஏக இறை)வனின் ஏற்பாடாகும். (6:96)

அவனே உங்களுக்குப் பகலை (ஓர் இயக்கமாகவும் ஆக்கினான். (25:47)

நிச்சயமாக நாமே பகலை வெளிச்சம் உடையதாகவும் ஆக்கினோம். இறை நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (27:86)

நீங்கள் பார்ப்பதற்காகப் பகலையும் அல்லாஹ்தான் படைத்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகிறான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர் நன்றி செலுத்துவதில்லை. (40:61)

(வாழ்வாதாரத்தைத் தேடுவதற்குப் பேருதவியாகவுள்ள) சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக, (91:1)

(வாழ்வாதாரத் தேடுதலுக்காக சுடர் விட்டுப் பிரகாசிக்கும் சூரியனால்) பகல் வெளியாகும்போது அதன் மீதும் சத்தியமாக, (91:3)

(சூரியன் மூலம் பூமியில்) பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக, (92:2)

(சூரியனாகிய) ஒளி வீசும் விளக்கையும் (அங்கு நாம் வாழ்வாதாரத் தேடுதலுக்காக) அமைத்தோம். (78:13)

உங்களுக்கு (பகலின்) வெளிச்சத்தைக் கொண்டு வருகின்ற இறைவன் அல்லாஹ்வையன்றி வேறு யார்? என்று கூறுங்கள். (28:71)

இறை நம்பிக்கை கொண்டவர்களே! ஜும்ஆவுடைய தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள். (62:9,10)

பகல் பொழுது ஓடி உழைப்பதற்கு என்று தான் அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்களும் கூறுகின்றார்கள்.

உங்களுக்கும் நெறிநூல் கொடுக்கப்பட்ட யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உள்ள உவமை ஒரு மனிதரால் கூலி வேலைக்கு நியமிக்கப்பட்ட கூலியாட்களைப் போன்றவர்களாவர்.

ஒரு கிராஅத் கூலிக்கு காலையில் இருந்து நடுப்பகல் நேரம் வரை யூதர்கள் வேலை செய்தார்கள்.

பிறகு நடுப்பகலிலிருந்து அஸர் தொழுகை வரை ஒரு கிராஅத் கூலிக்கு கிறிஸ்தவர்கள் வேலை செய்தார்கள்.

பிறகு அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டு கிராஅத் கூலிக்கு நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ்பின் உமர்(ரழி), இப்னு உமர் (ரழி), அபு மூஸா(ரழி) புகாரி: 2268, 2269, 2771)

யா அல்லாஹ்! எனது சமுதாயத்தாருக்கு அதிகாலை நேரத்தில் அருள் வளத்தை வழங்குவாயாக! என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். (அபூதாவூத்)

அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். அந்நேரம் அல்லாஹ்வுடைய தூதர்(ஸல்) அவர்கள் என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு அருமை மகளே! எழு அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு அலட்சியப்படுத்துபவராக மாறிவிடாதே அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் வாழ்வாதாரத்தை வழங்குகிறான் என்று கூறினார்கள். (ஃபாத்திமா(ரழி), பைஹகீ)

*********************************************************

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

M.T.M.  முஜீபுதீன்,   இலங்கை

2019 ஆகஸ்ட் மாத தொடர்ச்சி…..

அல்லாஹ் ரமழான் மாதத்தில் அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இதனால் அல்லாஹ் வுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நோன்பை கடமையாக்கினான். அல்லாஹ் நோன்பு பற்றி மேலும் விளக்குவதை கவனியுங்கள்.

நோன்புக் கால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். அவன் உங்கள் மீது இரக்கங் கொண்டு உங்களை மன்னித்தான். எனவே, இனி (நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள். இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும்போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை (த்தாண்ட) முற்படாதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக் காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் : 2:187)

ரமழான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் நபி(ஸல்) அவர்கள் முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் (ஆஷீரா) நோன்பு நோற்றார்கள். பின் வேதக்காரர்களிலிருந்து வேறுபடுவ தற்காக முஹர்ரம் ஒன்பது, பத்து ஆகிய நாட்களில் நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதின் பின் இந்த நோன்பு விரும்பியவர் நோற்கவும் நோற்காது விடவும் அனுமதிக்கப்பட்டது. பின்வரும் ஹதீஃதை கவனியுங்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷீரா) நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இது குறித்து யூதர்களிடம் விளக்கம் கேட்டபோது, “இந்த நாளில் தான் (இறைத்தூதர்) மூசா(அலை) அவர்களுக்கும் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கும் பிர்அவ்னுக்கெதிராக இறைவன் வெற்றியளித் தான். எனவே, அந்த நாளைக் கண்ணியப்படுத்தும் முகமாகவே நாங்கள் இந்த நாளில் நோன்பு நோற்கிறோம்” என யூதர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், “உங்களைவிட மூசாவுக்கு அதிக நெருக்கமுடையவர்கள் நாங்களே” என்று கூறி விட்டு, ஆஷீரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்லிம் : 2082)

நோன்பு மனிதனைத் துன்பம் அடையச் செய்வததற்காக கடமையாக்கப்பட்டது அல்ல. மனிதனை துன்பத்துக்கு உள்ளாக்கக் கூடிய தொடர் தனக்கு நோன்பு நோற்பதை இஸ்லாம் தடுத்திருக்கின்றது. நோன்பு நோற்பதனால் பல நன்மைகளையும், சிறப்புகளையும் மனிதன் பெற்றுக் கொள்கிறான். நோன்பு எமக்கு இறை அச்சத்தை அதிகரிக்கின்றது. உடல் ஆரோக்கியத்தையும், மனக் கட்டுப்பாடு போன்ற பயிற்சிகளை ஏற்படுத்துகின்றது. நோன்பு பாவங்களை கட்டுப்படுத்த உதவுகின்றது. ஒரு மனிதன் நோன்பு நோற்றபடி வீண் பேச்சுகளை பேசியவனாக, பாவங்களை தொடர்ந்து செய்யின் நோன்பின் பயன்களை அடைய முடியாது. கவனியுங்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை!” (புகாரி:1903)

மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுவதை கவனியுங்கள் :

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரிதயாகும். நிச் சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் “நான் நோன்பாளி!” என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சி அடைகின்றான் தன் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சி அடைகின்றான். (முஸ்லிம் : 1904)

நோன்பு மனிதனைப் பாவங்களிலிருந்து தடுக்கும் கேடயமாக காணப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்வதை கவனியுங்கள்.

“உங்களில் எவர் திருமணத்திற்கான செலவீனங்களுக்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் அது (அந்நிய பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும் யார் அதற்கு சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்” (புகாரி : 1905)

ஆகவே, நோன்பு மனிதர்களை பாவங்களிலிருந்து காக்கும் கேடயமாக அமைகின்றது. இறையச்சத்தை அதிகரிக்கின்றது, கெட்ட வார்த்தைகளை பேசுவதை விட்டும் தடுக்கிறது, கூச்சலிட்டு சச்சரவுகளிலிருந்தும் சண்டையிடுவதிலிருந்தும் தவிர்க்கின்றது. ஆகவே நோன்பாளிக்கு பல நன்மைகள் இம்மையிலும், மறுமையிலும் காத்திருக்கின்றது. கவனியுங்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. யார் ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி:1901)

மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“சொர்க்கத்தில் “ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள் அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். “நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள் அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்!” (புகாரி:1896)

ரமழான் நோன்புடன் வேறு பல சந்தர்ப்பங்களில் கடமையில்லாத பல நோன்புகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்திருக்கிறார்கள் அது போல் நோன்பு நோற்கக் கூடாத நாட்களையும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்கிறார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஃத்களைப் பார்த்து நோன்பின் விதிமுறைகளை அறிந்து, உங்கள் வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்வதற்கு முயற்சியுங்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ரமழான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் (சொர்க்கத்தின்) வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். (புகாரி: 1899, முஸ்லிம்:1956)]

ஆகவே, அல்லாஹ்வின் அருளால் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. காலங்களையும், மாத நாட்களையும், நேரங்களையும் பிழையின்றி, அல்லாஹ் இயற்கையை படைத்து செயற்படுத்தும் முறைகளை கண்டுகொள்ள முடிகின்றது. ஆகவே எந்த சந்தேகமும் இல்லாமல் சந்திர மாதங்களையும், சூரிய நேரங்களையும் அறிந்து ரமழான் மாத கடமையான நோன்புகளை முறையாக நோற்று, அல்லாஹ்வின் நல்ல அருளைப் பெற முயற்சிப்போமாக.

வசதி படைத்த முஸ்லிம்களுக்கு கட்டாய கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடு ஹஜ்.

இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். ஹஜ் என்னும் சொல்லுக்கு “நாடுதல்”, “செயல்”, “திரும்பத் திரும்ப வருதல்” போன்ற சொற் பொருள்களும் உண்டு. இஸ்லாம் மார்க்க வழக்கின்படி ஹஜ் என்பது, இஸ்லாம் மார்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட வசதி வாய்ப்பு பெற்ற எந்த விசுவாசியும், புனித மக்காவிலுள்ள இறையில்லமான புனித கஅபாவை நாடிச் சென்று, நபி(ஸல்) அவர்கள் காட்டியபடி கிரியைகளை நிறைவேற்றும் ஒரு வணக்க வழிபாடு ஹஜ் ஆகும்.

இஸ்லாமிய மாதங்களான ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் ஆகியவை ஹஜ்ஜிற்குரிய காலமாகும். புனித கஅபா விற்குச் சென்றுவர சக்தியுள்ள ஒவ்வொரு முஸ் லிமும் வாழ்நாளில் ஒரு முறையாயினும் ஹஜ் செய்வது கட்டாய கடமையாகும். அல்லாஹ், அவனது அடியானும், இறைத் தூதருமான இப்ராஹீம்(அலை), இஸ்மாயில்(அலை), ஹாஜரா அம்மையார் ஆகியோரின் இறை நம்பிக்கையை சோதித்து,அவர்களின் வாழ்க்கையை மனித சமு தாயத்திற்கு படிப்பினையாக வெளிப்படுத்தும் ஒரு புனித கடமையாக ஹஜ் கடமை அமைகின்றது. ஹஜ் கடமை இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தின் இறை நம்பிக்கையின் உறுதியையும், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் வணங்கி வழிபடுவதற்கில்லை என்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாக வாழ்க்கையிலிருந்து பல படிப்பினைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாக ஹஜ்ஜுக் கிரிகைகள் அமைந்துள்ளன. பின்வரும் அல்குர்ஆன் வசனங்களை கவனியுங்கள்.

(இறை வணக்கத்திற்காக) மனிதர்களுகாக வைக்கப்பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்கா வில்(மக்காவில்) உள்ளது தான் அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார். இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறை யேற்படப் போவதில்லை ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான். (குர்ஆன்:3:96-98)

அல்லாஹ்வின் கட்டளையின்படி அல்லாஹ்வை வணங்கி வழிபட உலகில் அமைக்கப்பட்ட முதல் வீடு மக்காவில் உள்ள கஅபா ஆகும். சக்தியும், வசதியும் உடைய எல்லா இறை விசுவாசியும் ஹஜ் செய்வது கடமையாகும்.

ஆதி ஆலயம் மக்காவிலுள்ள கஅபா ஆகும். இச்செய்திகள் முன்னைய வேதத் தொகுப்புகளிலும் தேய்வு அடைந்த செய்தியாக இருப்பதைக் காண முடிகின்றது. இதனை சில நூல்கள் வெளிப்படுத்துவதை கவனியுங்கள்.

அழுகையின் (பக்கா) பள்ளத்தாக்கை) உருவ நடத்து (சுற்றி வந்து) அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள் மழையும் குளங்களை நிரப்பும். (சங்கீதம் : 84:6)

அழுகையின் பள்ளத்தாக்கு என மொழி பெயர்ப்பாளர் சொற்பொருள் தந்தாலும் மூலத் தில் பக்கா என்ற இடம் கையாளப்பட்டுள்ளது. இது மக்காவிலுள்ள கஅபாவைக் குறிக்கும். இதனை சில யூத அறிஞர்கள் இது தண்ணீரில்லாத குறிப்பிட்ட பள்ளத்தாக்கின் பெயர் என கூறுகின்றனர்.  (பார்க்க : யூதக் கலைக் களஞ்சியம் : 2:415)

அநேகமான இறைத்தூதர்கள் சென்று வழிபட்ட இடம் கஅபா ஆலயமாக இருந்தது. இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலர்களின் சந்ததியில் வந்த சில இறைத்தூதர்கள் ஜெருசலத்திலுள்ள பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கித் தொழுதிருக்கிறார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஆரம்பத்தில் பைத்துல் முகத் தஸ்ஸை நோக்கியே தொழுது வந்தார்கள். இறுதியாக அல்லாஹ்விடமிருந்து கஅபாவை முன்னோக்கி தொழும்படி கட்டளை வந்த பின்பே கஅபாவை முன்னோக்கி தொழுது வந்தார்கள்.

அல்குர்ஆன் கஅபாவை பெண் என்றும், மக்காவை நகரங்களின் தாய் எனவும் வர்ணிக்கின்றது. அவ்விடத்தை வனாந்திரம் எனவும் அரபியில் குறிப்பிடுவதும் உண்டு. “நலந்த விஷால் ஷப்த் ஷாகர்” அகராதியில் தருகாபன் என்பதற்கு வனாந்திரத்திலுள்ள புண்ணியத் தலம் என பொருள் கூறுகிறது. அத்துடன் காபன் என்பது தெளிவாக மக்காவில் உள்ள கஅபாவைக் குறிக்கிறது. இந்திய வேதங்களிலும் கஅபாவை பல பெயர்களில் குறிப்பிடுவதைக் காணலாம். அதே பெயர்கள் கஅபாவிற்கு அரபியிலும் பொருள் காணப்படுகின்றது. இந்தியாவிலுள்ள ரிக் வேதத் தொகுப்பு கூறுவதைப் பாருங்கள்.

*********************************************************

“அஸ்ல்’ என்னும் கர்ப்பத்தடை: அல்லாஹ் விதித்ததை எவராலும் தடுக்கமுடியாது!

(CAN YOU PREVENT PREGNANCY WITH THE PULLOUT METHOD?)

எஸ்.ஹலரத் அலி,  திருச்சி-7. ஷ

குழந்தை பிறப்பை தடுப்பதற்கும், தள்ளிப்போடவும் பல்வேறு கர்ப்பத்தடை வழிமுறைகள், உலகெங்கும் மக்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவற்றில் மிகப் பழமையான வழிமுறை, “அஸ்ல் செய்தல்’ என்பது. புணர்ச்சியின் போது ஆணின் விந்து வெளிவரும் தருணத்தில், பெண்ணுறுப்பிலிருந்து ஆணுறுப்பை வெளியே எடுத்து விடுவதற்குப் அரபியில் “அஸ்ல் (Coitus Interruptus) என்பார்கள். ஆணின் விந்தா னது பெண்ணின் உறுப்பில் சென்று விடாமல் தடுப்பதன் மூலம் கர்ப்பம் உண்டாகாமல் தடுத்து விடலாம். இந்த எளிய வழிமுறை இன்றும் மக்களால் பரவலாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆயினும் இம்முறையால் 100% முழுமையாக வெற்றியை அடைய முடியாது என்று இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் கூறிவிட்டது.

விந்து வெளிவருமுன் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுவதன் மூலம் கர்ப்ப முறுவதை தடுத்து விடலாம் என்பதே பல ரின் கருத்தாக உள்ளது. ஆனாலும் பரவ லாக பெண்கள் கர்ப்பம் தரிப்பதை பார்க்க முடிகிறது. இது எப்படி நிகழ்கிறது? இதன் காரணம் என்ன? என்பதை ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் ஆய்வு செய்து வருகின்ற னர். உடலுறவின் போது, விந்து வெளியேறு வதற்கு முன்னதாக “மதி’ என்னும் திரவம் வெளிப்படும். (Pre-ejaculatory) இது லூப்ரி கேசன் என்னும் மசகுத் தன்மையை ஏற் படுத்தி, விந்துவில் உள்ள உயிரணுக்கள் எளி தாக வழுக்கிச் செல்ல வழி ஏற்படுத்தும். இந்த திரவத்தின் மூலமாக விந்தணுக்கள் கலந்து கர்ப்பமுறச் செய்வதாகவே பெரும் பாலோர் கருதுகிறார்கள்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர் மைக்கேல் ஈசன்பர்க் இது குறித்து கூறும்போது, மக்கள் நடைமுறைப்படுத்தும் அஸ்ல் என்னும் (Withdrawing) “வெளியே எடுத்தல்’ வழிமுறையில் முற்றிலுமாக கர்ப்பம் ஏற்படுவதை தடுக்க இயலாது. 30% முதல் 40% வரை தோல்வியே ஏற்படுகிறது. அதற்கான காரணங்கள் பல “மதி’ எனும் திரவத்தில் விந்தணுக்கள் கலந்து இருக்கலாம். அல்லது இதற்கு முன்பு உறவு கொண்டபோது வெளியேறிய உயிரணுக்கள் அங்கு தங்கி இருக்கலாம். ஆனால் கர்ப்பம் தரிப்பதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அமெரிக்கா வில் குழந்தை பெற்ற தாய்மார்களில் பாதிப் பேர் விருப்பம் இன்றி பெற்றவர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதற்குக் காரணம் கர்ப்பத்தடை வழிமுறைகளின் தோல்வி.

இது குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகளை கடந்த 16, May, 2019 “சயின்டிபிக் அமெரிக்கன்’ ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

யூதர்களின் வேத நூலான தவ்ராத்தில் “வெளியே எடுத்தல்’ சம்பந்தமான ஒரு செய்தி கூறப்படுகிறது. இஸ்ரேலியர்களின் குல வழக்கப்படி ஒரு குடும்பத்திலுள்ள சகோதரரில் ஒருவன் இறந்து போனால், அவனின் விதவை மனைவியை வேறு அந்நியனுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது. அவளை இறந்தவனின் சகோதரனுக்கே (கொழுந்தன்) மணம் முடித்து வைக்க வேண்டும். பிறக்கும் ஆண் குழந்தையானது இறந்து போனவன் வாரிசாக வளரும். அவனது சொத்துக்களுக்கு வாரிசாக இருக்கும் என்று பைபிள் கூறுகிறது. பழைய ஏற்பாடு, உப ஆகமம் 25:5,6, இதன்படி யாக்கோபுவின் 11 புதல்வர்களில் ஒரு வனான யூதாவுக்கு மூத்த மகனாக ஏர் என்பவனும் இரண்டாவதாக ஓனான் என்பவனையும் பெற்றார்.

 1. யூதா தம் தலைமகன் ஏர் என்பவனுக்கு “தமார்’ என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தார்.
 2. யூதாவின் தலைமகன் ஏர் கர்த்தர் முன்னிலையில் கொடியவனாக இருந்ததால், கர்த்தர் அவனை சாகடித்தார்.
 3. அப்போது யூதா தம் இளைய மகன் ஓனானை நோக்கி, “நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ்! சகோதரனுக்குரிய கடமையைச் செய்து, உன் சகோதரனுக்கு வழி மரபு தோன்றச் செய்’ என்றார்.
 4. அந்த வழி மரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் அவளோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழி மரபு தோன்றாதவாறு தன் விந்தை தரையில் சிந்தி வந்தான். பைபிள்: பழைய ஏற்பாடு , ஆதி ஆகமம், 38:6-9.

உடலுறவின் போது விந்தை அதில் செலுத்தாமல், வெளியில் எடுத்து விடும் செயலுக்கு ஓனனிசம் (Onanism) என்று அழைக்கப்படுகிறது. (Onanism is the act of “Spilling ones seed” in any place other than a women’s vagina).

இஸ்லாத்தை பொருத்தவரை குடும்பக் கட்டுப்பாடு, கர்ப்பத்தடை போன்ற மனித செயல்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ இல்லை. ஏனென்றால் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உணவளிக்கும் பொறுப்பை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.

வறுமைக்கு அஞ்சி உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள். நாம் தான் அவர்களுக்கும் உணவளிக்கிறோம். உங்களுக்கும் உணவளிக்கிறோம். உண்மையில், அவர்களைக் கொலை செய்வது பெரும்பாவமாகும். அல்குர்ஆன்: 17:31

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. அல்குர்ஆன்: 11:6

எனவே தான் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டினார்கள். ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எந்த பெண்ணை மண முடிப்பது சிறந்தது? என்று ஆலோசனை கேட்டார்.

“உன்னிடம் அன்பு செலுத்துபவளையும், உனக்கு அதிக குழந்தைகள் பெற்றுக் கொடுப்பவளையும் திருமணம் செய்துகொள். நாளை கியாமத் நாளில் மற்ற உம்மத்துக்களைவிட என் உம்மத்து அதிகளவில் இருப்பது கண்டு பெருமைப்பட விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். அபூதாவூத்: 2050, ஸஹீஹ், ஷேக் அல்பானியின் “இர்வா அல் கலீல்’ : 1784.

நபி(ஸல்)அவர்கள் அருகில் “அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) பற்றிப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், பாலூட்டும் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும் ஒருவர். அதனால் அவள் கருவுற்று விடுவதை விரும்பாமல் இருக்கலாம். (அப்போது “அஸ்ல்’ செய்து கொள்வார் என்று விடையளித்தார்.

நபி(ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாமல் இருப்பதால் உங்கள் மீது எந்தக் குற்றமில்லை. அதுவெல்லாம் விதியாகும்”. “படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 2840, 2841)

அபூ சயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் , “புணர்ச்சி இடைமுறிப்பு” (அஸ்ல்) செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “விந்தின் அனைத்து (உயிரணுக் கூறுகளிலிருந்தும் குழந்தை உருவாவதில்லை. (ஒரே உயிரணு போதும்) அல்லாஹ் ஒன்றை படைக்க நாடிவிட்டால் அவனை எதுவும் தடுக்க முடியாது” என்று கூறினார்கள். (முஸ்லிம் : 2842)

ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரழி) அவர்கள் கூறியதாவது :

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, “என்னிடம் ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள். அவளே எங்க ளுக்கு பணிவிடை செய்பவளாகவும், தண்ணீர் சுமப்பவளாகவும் உள்ளாள். அவளிடம் நான் சென்று வருகிறேன். (அதே சமயம்) அவள் கருவுற்று விடுவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீ விரும்பினால் “அஸ்ல்’ செய்துகொள்! ஆயினும் அவளுக்கு விதிக்கப்பட்டுள்ளது அவளிடம் வந்து சேரும்” என்றார்கள்.

அம்மனிதர் சில நாள் கழித்த பின் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, “அந்த அடிமைப் பெண் கருவுற்று விட்டாள்’ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அவளுக்கு விதிக்கப்பட்டது நிச்சயம் அவ ளுக்கு வந்து சேரும் என உம்மிடம் நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.நான் அல்லாஹ்வின் அடிமையும் அவன் தூதரும் ஆவேன்” என்றார்கள். முஸ்லிம் : 2843, 2844

ஒரு மனிதர் “அஸ்ல்’ (புணர்ச்சி இடை முறிப்பு) செய்தாலும் அப்பெண் கருவுற்று விடுவதற்கான அசல் காரணம் தெரியாமல் இன்றைய நவீன அறிவியல் உலகம் திண்டா டித் தவிக்கிறது. அது அல்லாஹ் விதித்த விதி என்பதை அவர்கள் அறிய மறுக்கிறார்கள்.

அல்லாஹ் தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கின்றான். மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கிறான். அல்லது அவர்களுக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான். அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான். நிச்சயமாக, அவன் மிக்க அறிந்தவன், பேராற்ற லுடையவன். அல்குர்ஆன்: 42:49,50

குழந்தை பிறப்பை தடுப்பதற்காக எந்த முறையைக் கையாண்டாலும், அது 100 சதம் வெற்றியை கொடுப்பதில்லை என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஒரு பெண் ணுக்கு குழந்தை கொடுப்பதை அல்லாஹ் நாடிவிட்டால், அதை தடுப்பதற்கு எந்த கர்ப்பத்தடை சாதனங்களாலும் முடியாது என்பதை இன்றைய அறிவியல் உலகம் ஒப்புக் கொள்கிறது.

ஒரு துளி விந்துவில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் இருந்தாலும் ஒரே ஒரு உயிரணு மட்டுமே குழந்தையை தீர்மானிக்கிறது என்ற நவீன அறிவியல் உண்மையையும் அன்றே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்து விட்டார்கள். (முஸ்லிம்: 2842) இந்த ஒரு உயிரணுவை தடுப்பதற்கு மனிதர்கள் சக்தி பெறமாட்டார்கள். இது அல்லாஹ்வின் விதியில் முன்பே எழுதப்பட்ட ஒன்று. அல்லாஹ் வகுத்த விதியை எவராலும் மாற்ற முடியாது.

ஒரு துளி இந்திரியத்திலிருந்துதானே அல்லாஹ் அவனைப் படைத்தான். பின்னர், அவனுடைய விதியை நிர்ணயித்தான். அல்குர்ஆன் : 80:19

*********************************************************

பரம்பரை முஸ்லிம்களின் இழிநிலை!

 1. முஹம்மத் யூசுப்,   கத்தார்

எனது அருமை சகோதர, சகோதரிகளே! மனித யூகங்களை மார்க்கமாக செயல்படுத்தும் மதத்தில் இருந்து என்னை விடுவித்து வல்ல அல்லாஹ் அருளிய இஸ்லாமிய மார்க்கத்தில் இணைத்து கொண்ட நான் பரம்பரை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வோரின் நிலைகளில் சிலவற்றை தங்கள் முன் வைக்கிறேன்.

தீனும் வேண்டும், துன்யாவும் வேண்டும் என்று கூறி பாகுபடுத்தி (துன்யா) உலக விசயங்களை முதலிடத்திலும், மார்க்க விசயங்களை இரண்டாவது இடத்திலும் வைத்து செயல்படும் சகோதர, சகோதரிகளுக்கு விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன்.

இஸ்லாம் (தீன்) என்பது அகில உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட மார்க்கமாகும். இது அகில உலக மக்கள் செம்மையாக வாழ்வதற்கு வந்த நேரிய மார்க்கமாகும்.

வல்ல அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதன் நேரான வழியில் நடத்துவதற்காக இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலமாக நமக்கு அருளப்பட்ட ஒரு வாழ்க்கை திட்டம்தான் இஸ்லாம்.

ஷைத்தானின் தூண்டுதலால் மனித யூகத்தை மார்க்கமாக்கும் மனிதன், எங்கும் மார்க்கத்தை இரு கூராக்கி தான்தோன் றித்தனமாக வாழ்ந்து மறு உலகில் நஷ்டமடைந்தவனாகவே மடிகிறான். பெயரளவில் இஸ்லாத்தில் இருந்துகொண்டு வாயளவில் கலீஃமாவை சொல்லிக் கொண்டு இஸ்லாத்தையே களங்கப்படுத்திக் கொண்டிருக்கும் எனது அருமை சமுதாயமே! பாங்கு சொல்லிவிட்டார்கள், தொழுவதற்கு பள்ளிக்கு வாருங்கள் என்று கூறப்பட்டால், டிவியில் சினிமா பாடல்களை ரசித்துக்கொண்டு தீனும் வேண்டும், துன்யாவும் வேண்டும். இப்பொழுது துன்யா(சினிமா) அப்புறம் தீன் என்று தள்ளிவைப்பது நம்மில் பலரின் வாடிக்கையாகிற்று. தீனையும், துன்யாவையும் பிரித்ததின் விளைவைப் பார்த்தீர்களா? நமது எண்ணத்தில் தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகியவை மட்டும்தான் தீன் என்று எண்ண வைப்பதும் ஷைத்தானின் தூண்டுதலால் நாமாக ஏற்படுத்திய பிரிவுகளே!

புதிய கண்டுபிடிப்புகளை டி.வி.யை நாம் ஹராமாக்கவில்லை. அதில் காணும் விஷயங்களையே சாடுகிறோம். பெரும்பாலான திரைப்படங்களில் காணப்படும் விஷயங்கள் மக்களை கெட்ட நடத்தையின் பால் இட்டுச் செல்பவையாகவே உள்ளன என்பதை மக்களில் பலரும் ஒப்புக்கொள்வார்கள். இது இவர்கள் ஆதாரப்பூர்வமாக கண்ட உண்மையே. இந்த சினிமாவைப் பார்த்து திருடினேன், கொலை செய்தேன், விபச்சாரம் செய்தேன் என குற்றவாளிகளே வாக்குமூலம் கொடுக்கும் நிகழ்ச்சிகளை செய்தித்தாள்களில் காண்கிறோம். பெரும்பாலான சினிமாக் காட்சிகள் விபச்சாரத்தை தூண்டுபவையாக உள்ளன என்றால் அது மிகையாகாது. உண்மை விசுவாசிகள் அம்மாதிரி காட்சிகளைக் காணுவதை விட்டும் தவிர்ப்பதே மேலானதாகும்.

(விசுவாசிகளே!) நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (பார்க்க : 17:32) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தற்செயலாக ஒரு பெண்ணைப் பார்த்தால் குற்றமில்லை எனவும் தீய எண்ணத்துடன் மீண்டும் பார்த்தால் கண்கள் விபச்சாரம் செய்துவிட்டன என எச்சரித்துள்ளார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் தமது இருமனைவிகளுடன் இருக் கும்போஎது நபியவர்களைத் தேடி கண் தெரியாத ஸஹாபி உம்மிமக்தூம் அவர்கள் வந்தபோது தமது மனைவிகளை திரை மறைவில் செல்லக் கட்டளையிடுகிறார்கள். அதற்கு அவர்கள் அவருக்கு கண் தெரியாதே! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவருக்கு கண் தெரியாது, உங்களுக்குக் கண் தெரிகிறதே! எனக் கூறி பெண்கள் ஆண்களைப் பார்ப்பதற்கும் அணை போட்டார்கள். இவ்வளவு தெளிவாக இஸ்லாமிய சட்டங்கள் இருந்தும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டிய பரம்பரை முஸ்லிம்கள் தூய்மையான சட்டத்தை பின்பற்றாமல், மனம் போனபடி வாழ்ந்து மற்ற மக்கள் வெறுக்கும் அளவுக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது வேதனையடையாமல் இருக்க முடியாது.

சூரத்துல் மூமினூனில் ஈமான் கொண்டவர்களைப் பற்றி கூறும்போது அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறான். “ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும் அவர்கள் வீணான (பேச்சு, செயல்)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள். மேலும் அவர்கள் தங்களுடைய வெட்கத்தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

மேலும் ஐவேளைத் தொழுகையையும், அதனைக் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்பதையும் இறைவன் பல இடங்களில் திரும்பத் திரும்பக் கூறியும், நம்மில் பலர் தொழுகை விஷயத்தில், கவனக் குறைவாக இருப்பது வேதனைக்குரியது. தொழுகையை விடுவதற்கு இவர்கள் கூறும் காரணங்களைக் கேட்டால் சிரிப்பு வரும். பலஹீனமான மனிதன் பல காரணங்களைக் கூறி அல்லாஹ்வின் எண்ணத்தில் இருந்து தன்னைப் பிரித்து விடக்கூடாது என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் இலகுவான வழிகளையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

எனினும் நம்மில் பலர் உடல் சரியில்லை, அல்லது சுத்தமில்லை, வியாபாரம், புதிதாக திருமணம் செய்தது, கைகுட்டை இல்லை, குளிக்கவில்லை, தொப்பி இல்லை இன்னும் கணக்கிட முடியாத காரணங்களைக் கூறி தொழுகையை கட் அடித்து விடுவார்கள்.

ஆக எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் நேராக தொழுகையில் தான் கை வைக்கிறார்கள். இவர்களுக்கு தொழுகை என்பது பலி ஆடு இருப்பது போல் உள்ளது.

நபி(ஸல்) தனக்கு எந்த ஒரு சங்கடம் வந்தாலும் நேராக தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் உதவி தேடுவார்கள். தங்களை பரம்பரை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர் அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை மறந்து அவனுக்கு நன்றி செலுத்தாமல் காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். தலையாய கடமையாகிய தொழுகையில் இவர்களது நிலை இவ்வாறு என்றால் மற்ற கடமைகளை நிறைவேற்றுவதன் நிலை பற்றி என்ன சொல்வதற்கு இருக்கிறது.

அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் சராசரி மனிதனின் அன்றாடம் அவனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய விஷயங்களிலிருந்து நாட்டை ஆள்பவர் வரை செயல்படவேண்டிய முறைகளை தெளிவுபடுத்தாமல் விட்டுவிடவில்லை. நாம் தான் மனோஇச்சை காரணமாக அல்லாஹ்வின் சட்டங்களை அலட்சியப்படுத்துகிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக தங்களைப் பரம்பரை முஸ்லிம்கள் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் நமது முஸ்லிம் பெயர் தாங்கி சகோதரர்களில் பலர், இச்சட்டம் அக்காலத்திற்குப் பொருந்தும்; இக்காலத்திற்குப் பொருந்தாது என்று நாகூசாமல் சொல்லி நமது மார்க்கத்தை களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே இஸ்லாத்தின் சட்டங்களை அழிக்க முற்படுகிறார்கள் என்பது புரியவில்லையா? நடுநிலைச் சமுதாயமாக இருந்து மாற்று மதத்த வர்களுக்கு வழிகாட்ட வேண்டிய நாமே இஸ்லாத்தின் எதிரிகளாகவும், நயவஞ்சகர் களாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நமது சகோதர, சகோதரிகள் உணர வேண்டும்.

இவர்களின் தவறான போக்கால் மாற்று மதத்தவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல முற்படும் போது முதலில் உங்களுடைய ஆட்களைப் போய் பாருங்கள் என்று கூறுகிறார்கள். இந்த இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் மாற்று மத நண்பர்களும் இஸ்லாத்தைப் பற்றி தவறான எண்ணங் கொண்டுள்ளார்கள். பல இடங்களில் முஸ்லிம்களை வெறுக்கவும் செய்கிறார்கள்.

இனம், மதம், மொழி, நிறம் ஆகியவற்றால் சீர்குலைந்த சமுதாயத்தை செம்மைப்படுத்தியதே அல்லாஹ்வின் மார்க்கமாகிய இஸ்லாம்தான். பிரிவுகளற்ற, உயர்வு தாழ்வு இல்லாத இம்மார்க்கத்தில் ஷைத்தானின் தூண்டுதலால் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு தக்னி, பட்டானி, மரைக்காயர், ராவுத்தர் என்றும், ஷேக், சையது, கான் என்றும் கண்ணியமிக்க இமாம்கள் பெயரால் ஹனபி, ஷாஃபி, ஹன்பவி, மாலிகி என்றும் அதனுள்ளும் ஏற்படுத்தப்பட்ட தரீக்கா பிரிவுகளான ஷாதுலியா, காதிரியா, நக்சபந்தியா போன்ற பிரிவுகளிலும், இதுகளெல்லாம் போதாதென்று இப்பிரிவுகளைக் கொண்டு இஸ்லாத்திற்கு கடுகளவும் சம்பந்தமில்லாத தர்கா சடங்கு, மெளலூது, பாத்தியாக்கள் மற்றும் பல மூடச்சடங்குகளும் நுழைந்து விட்டன. எனவே நாம் புதிதாக பெயர் வைத்து நல்ல விஷயங்களைச் சொல்லி நம்மையும் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று கணக்கிட முடியாத இயக்கப் பிரிவுகளிலும் மக்களைப் பிரித்து சின்னாபின்னப்படுத்தி விட்டார்கள். எல்லாக் கூட்டத்தாலும் அவரவர் சொல்லும் விஷயமே சரி என்று ஆள் சேர்க்க முனையும் போது, புதிதாக இஸ்லாத்தில் இணைய என்னுபவர்கள் குழம்பிப் போய் விடுகிறார்கள். தரீக்காவாதிகளின் கூற்றோ வினோதமாக உள்ளது. மஃரிபத்தை அடையாமல் உண்மை மூஃமின் ஆகமுடியாது என துணிந்து கூறுகிறார்கள்.

எனதருமை சகோதர, சகோதரிகளே இதுதான் அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களுக்குக் காட்டித்தந்ததா? சிந்திப்பீர்களாக! பிற்காலத்தில் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மேற்கண்டவாறு பிரிந்து சின்னாபின்னப்படுத்தப்படுவார்கள் என்பதை முன்பே அறிந்த அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும் மிகத் தெளிவாகக் கூறுவதைக் கொண்டு படிப்பினைப் பெறுங்கள்.

எவர் அல்லாஹ் அளவில் (ஜனங் களை) அழைத்து(ந்தாமும்) நற்கருமங்களைச் செய்து, “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் உள்ளவன்,” என்று கூறுகின்றாரோ அவரை விட சொல்லால் அழகியவர் யார்? (41:33)

“எனது உம்மத்தில் 73 பிரிவினர் தோன்றுவர். 72 பிரிவினர் நரகம் புகுவர். 1 பிரிவு மட்டுமே சொர்க்கம் செல்லும். அவர்கள் இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எவ்வாறு நடக்கிறோமோ அவ்வாறே நடப்பவர்கள். அறிவிப்பவர் : முஆவியா(ரழி) அம்ரும்னுல் ஆஸ்(ரழி) ஆதாரநூல்கள், அபூதாவூத், திர்மிதீ.

முஸ்லிம்களாகிய நாம் ஒவ்வொரு வரும் அல்லாஹ்வின் கட்டளைக்கொப்ப மார்க்கப் பிரசாரம் செய்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக! ஆமீன்.

*********************************************************

பேரண்டப் படைப்பின் துவக்கம்!

A.K.  அப்துர் ரஹ்மான்

நாம் வாழும் இந்தப் பூமியும், அதைச் சூழ்ந்து நிற்கும் ஆகாயமும், அதில் காணப்படும் எண்ணற்ற கோள்களும், துணைக் கோள்களும், நட்சத்திரங்களும் எப்படித் தோன்றின என்ற வியப்பும், வினாவும் மனித உள்ளத்தில் தொன்றுதொட்டே அலைபாய்ந்து கொண்டிருந்தன.

இதற்கு விடை கூற முற்பட்ட விஞ்ஞானிகள் கருதுகோள் ஒன்றை (Hypothesis) முன் வைத்தனர். “நெபுலா’ என்ற மேகத் திரளிலிருந்து முதலாவதாக நட்சத்திரங்கள் தோன்றின என்றும், அப்படித் தோன்றிய நட்சத்திரங்களுள் ஒன்றுதான் சூரியன் என்றும் கூறினர்.

பின்னர் சூரியன் திடீரென வெடித்துச் சிதறியபோது அத்துண்டுகள் கோளமாயின என்றும், அக்கோள்களிலிருந்து துணைக் கோள்கள் பிரிந்து சென்றன என்றும் கூறுகின்றனர்.

இக்கூற்று பரவலாக நம்பப்பட்டு வந்த காலகட்டத்தில் தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வுகள் இக்கொள்கைகளுக்கு சாதகமாக அமையவில்லை. கிரகங்களின் பாதைகள், அவை சூரியனை நோக்கிச் சுற்றும் திசை சூரியனின் அச்சில் சுழற்சி (Axial Rotation) ஆகியவற்றை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தங்களின் முந்தைய கொள்கையை அடியோடு ஒதுக்கிவிட்டுப் புதிய கருதுகோள் ஒன்றை முன்வைத்தனர்.

ஆகியவற்றை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தங்களின் முந்தைய கொள்கையை அடியோடு ஒதுக்கிவிட்டுப் புதிய கருதுகோள் ஒன்றை முன்வைத்தனர்.

கோள்கள் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறியதல்ல: மாறாக அண்டத்தில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் உள்ளிட்ட யாவும் ஒரே சமயத்தில் தோன்றியதாகவே இருக்கமுடியும் எனக் கூறி, அண்டம் எப்போதும் உள்ளது. அதற்கு ஆரம்ப முடிவு என்பது இல்லை எனவும் கூறினர்.

இக்கூற்று இயல் மாறாக் கொள்கை (Steady State Theory) என்ற கவர்ச்சிகரமான பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் விஞ்ஞான உண்மைகள் இத்துடன் திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை. தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் இக்கொள்கைக்கு பாதகமாக அமைந்து விட்டன.

அண்டத்தின் வெப்பச் சூழலைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் இயல் மாறாக் கொள்கையை ஏற்பதற்குத் தேவையான வெப்பத்தை விடக் குறைந்த வெப்பத்தையும், அண்டத்தில் எங்கு பார்த்தாலும் இருண்ட பின்னணியைத் தோற்றுவிக்கும் அளவிற்கு குறைந்த ஒளியையும் கண்டதோடு, ஆண்டொன்றுக்கு 4கிமீ. ஒரு ஹைட்ரஜன் அணு உற்பத்தியாவதையும் கண்டனர். எனவே “இயல் மாறாக் கொள்கை” கேள்விக் குறியோடு தன்னுடைய வாழ்வை எதிர்நோக்கி நிற்கிறது.

மேற்கூறிய குறைபாடுகள் அனைத்திலும் தப்பி அவைகளையே தனக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டு மிக்க செல்வாக்குப் பெற்ற கருதுகோளாகத் தற்போது விஞ்ஞானிகளிடம் புகழ் பெற்று வருவது பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory)யாகும்.

இக்கொள்கை என்னவெனில், இப்பிர பஞ்சத்தில் காணப்படும் பூமி உள்ளிட்ட கோள்களும், துணைக்கோள்களும், நட்சத்திரங்களும், இன்னும் ஏனைய பருப் பொருட்கள் யாவும், ஏறத்தாழ பூமியை விட 318.5 மடங்கு எடை உள்ள வியாழன் (Jupitor) கிரகத்தை ஒத்து. ஆனால் மிக அடர்த்தி வாய்ந்த ஒரு பொருளுக்குள் அடக்கப்பட்டிருந்தது.

அப்பொருள் ஏதோ வானியல் காரணத்தால் தூள் தூளாக வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசுப் படலமாகப் பரவியது. இந்த நிகழ்ச்சி ஏறத்தாழ 1800 கோடி வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தது.

இந்த நிகழ்ச்சியின் பிறகு ஒரே புகை மூட்டமாக இருந்த அந்தத் தூசுத் துகள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பருப் பொருட்களையும் தோற்றுவித்தது.

இவ்வாறு பூமி உட்பட இருந்த கோள்களும், ஏனைய துணைக் கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் ஒன்றாகக் கலந்திருந்த அந்தத் தூசுப் படலத்தில் இருந்து ஏறத்தாழ 500லிருந்து 750 கோடி வருடங்களுக்கிடையில் தனித்தனியாக பிரிந்தன என இந்தப் பெரு வெடிப்புக் கொள்கை (Big Bang Theory) கூறுகிறது.

அண்டத்தின் வரலாற்றை மனிதன் தன்னுடைய நவீன விஞ்ஞான அறிவையும், கருவிகளையும், பொருளாதார வசதியையும், தீராத வேட்கையையும், விடா முயற்சியையும் பயன்படுத்தி கண்டறிந்த இந்த விஷயங்கள் தொடர்பாக இவ்வாறான வசதிகளோ, வேட்கையோ, இல்லாமல் வெறும் புராணக் கதைகளை பேசி வந்த 14 நூற்றாண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் பரிசுத்த குர்ஆன் என்ன கூறியது எனச் சற்றே திரும்பிப் பார்ப்போம்.

“நிச்சயமாக வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவற்றை நாமே பிரித்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா?” (21:30)\

என்ன அற்புதமான வார்த்தைகள்! இவ்வண்டத்தில் இருக்கும் யாவும் இரண்டறக் கலந்து ஒரு புகை மூட்டத்திலிருந்து தான் உற்பத்தியாகித் தனித்தனியே பிரிந்தன என்ற நவீன விஞ்ஞானக் கொள்கையை எவ்வளவு அற்புதமாகக் குர்ஆன் படம் பிடித்துக் காட்டி விட்டது.

நவீன விஞ்ஞானத்தின் அபிமான நண்பர்களே! பண்டைக்காலங்களில் காடு கண்ட மனிதர்களின் கற்பனைக் கனவுகளையும், வேதங்களாய் ஏந்தி வந்த பட்டியலில், அறியாமலே, படித்து உணராமலே, பத்தோடு பதினொன்றாக உங்களில் சிலர் அருள்மறை குர்ஆனையும் சேர்த்துப் பார்க்கின்றனர். இது அறியாமையல்லவா?

நீங்கள் மெய்யாகவே எதில் அபிமானம் கொள்கிறீர்களோ, அந்த விஞ்ஞானமே குர்ஆன் மெய்யான நெறிநூல் என்பதற்குச் சாட்சியாகி நிற்பதைப் பார்த்தீர்களல்லவா? பிறகு ஏன் நீங்கள் அதை நிராகரிக்கிறீர்கள்?

நீங்கள் குர்ஆனை ஏற்க மறுத்தால், குறைந்தபட்சம் அதை உலகுக்கு போதிக்க அனுப்பப்பட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்தவர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.

இப்பூவுலகின் அறியாமையைப் போக்கிச் சன்மார்க்கம் செழிக்க அண்டசராசங்கள் யாவையும் தன் வல்லமை ஒன்றைக் கொண்டே படைத்துப் பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் இணை, துணையில்லாத அந்த ஏக இறைவனிடமிருந்து அந்த நபி முஹம்மத்(ஸல்) பெற்றுத்தந்த பரிசுத்த குர்ஆன் மேலும் கூறுவதைக் கேளுங்கள்.

இவ்வண்டத்தின் படைப்பைத் துவக்குவதற்காக பூமியின் மீது இருக்க வேண்டிய, முளைக்க வேண்டிய அனைத்தையும் நிர்ணயம் செய்த பின்னர் ஆகாயத்தின் பால் திரும்பினான். அது ஒரு புகையாக இருந்தது. (41:11)

இப்போது சொல்லுங்கள்! நவீன கம்ப்யூட்டர் யுகத்தின் கண்டுபிடிப்புகளை வரிக்குவரி பிறழாமல் 14 நூற்றாண்டுகளுக்கு முந்திய சூழ்நிலையில் ஒரு மனிதரால் கூறியிருக்க முடியுமா?

ஆனால் அப்படி கூறியிருக்கிறார் என்பது தற்போது உலகறிந்த உண்மை. இதிலிருந்து நீங்கள் எந்த முடிவுக்கு வர விரும்புகிறீர்கள்? நாம் முன்னரே கண்டது போல் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இருபதாம் நூற்றாண்டு மனிதரென்றா?

அல்லது அவர் போதித்த இந்த அற்புதமான உண்மைகளைக் கொண்ட பரிசுத்த குர்ஆன் அண்ட சராசரங்களையும் படைத்த மெய்யான இறைவனின் நெறிநூல் என்றா?

நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் இதில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். எல்லாம் வல்லவனும், பேரருளாளனும், இப்பரிசுத்த குர்ஆனின் படைப்பாளனுமாகிய, அல்லாஹ்(ஜல்) நம் அனைவருக்கும் நல்ல, சரியான முடிவைத் தேர்வு செய்யத் துணை புரிவானாக!

*********************************************************

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ,  குண்டூர்,

 1. யார் ஈமான் கொள்ள மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
  காஃபிர்கள்.   அத்தியாயம் : 2:6
 2. அல்லாஹ் எதை உதாரணமாக கூறுவதற்கும் வெட்கப்படமாட்டான்?
  கொசுவையோ அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான்.  அத்.:2:26
 3. மரங்களில் இலை உதிராத மரம் எது?
  பேரீட்சை மரம். அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரழி), பாடம் : 3, எண் : 61 புகாரி
 4. உளூ முறிந்ததாக உறுதியாக தெரியாத வரை என்ன செய்யவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  சந்தேகப்பட்டு மீண்டும் உளூச் செய்ய வேண்டாம். பாடம் : 4, புகாரி
 5. ஃபரக் என்றால் என்ன?
  இரண்டு கை கொள்ளவு தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும். புகாரி : 2:250
 6. குர்பானி (பிராணிகளை அறுத்துப் பலியிடுதல் எப்போது செய்திட வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?
  முதலில் தொழுகை, பின்பு குர்பானி.  புகாரி : 3:95
 7. நபி(ஸல்) அவர்கள் குபா பள்ளிக்கு எப்போது செல்வார்கள்?
  ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும்.  புகாரி : 4:194
 8. எந்த இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது?
  நோன்புப் பெருநாள், ஹஜ்ஜு பெருநாள்.  புகாரி : 6:1197ல்/2
 9. தொழுகையில் தவறு செய்தால் என்ன செய்யவேண்டும்?
  சலாம் கொடுத்ததற்கு பின்பு இரண்டு ஸஜ்தா செய்து கொள்ளவேண்டும்.  புகாரி : 2:1226
 10. சொர்க்கத்தில் ஒரு வீட்டை எனக்காக கட்டித் தருவாயாக என பிரார்த்தித்தவர் யார்?
  ஃபிர்அவ்னின் மனைவி. குர்ஆன் : 66:11
 11. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணத்திற்கான தொழுகைக்கு எவ்வாறு அழைப்புக் கொடுக்கப்பட்டது?
  “அஸ்ஸலாத்து ஜாமிஆ” என அழைப்பு கொடுக்கப்பட்டது.  புகாரி : 3 : 1045
 12. எதைக் கொண்டு அல்லாஹ் தன்னிடம் உதவி தேடச் சொல்கிறான்?
  பொறுமையைக் கொண்டும், தொழுகையை கொண்டும். குர்ஆன் : 2:45
 13. நிராகரிப்போர் என்ன ஆவார்கள் என அல்லாஹ் கூறுகிறான்?
  வெகு விரைவில் தோல்வியடைவார்கள். அல்குர்ஆன் : 3:12
 14. அல்லாஹ்விடத்தில் யாருக்கு மன்னிப்பு உண்டு?
  அறியாமையினால் தீமை செய்த பின் விரைவில் மன்னிப்பு கேட்பவர்களுக்கு.  அல்குர்ஆன் : 4:17
 15. அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்பவரின் நிலை என்னவாகும்?
  பாவங்களின் காரணமாக வேதனை பிடித்துக் கொள்ளும்.  குர்ஆன் : 6:49
 16. அஃராஃப் என்றால் என்ன?
  சிகரங்கள். அத்தியாயம் :7
 17. போர் விலக்கப்பட்ட மாதங்கள் எது என அல்லாஹ் கூறுகிறான்?
  துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு. அல்குர்ஆன் : 9:5
 18. நம்லி என்றால் என்ன?
  எறும்புகள். அத்தியாயம் :27
 19. இடிமுழக்கம் பிடித்துக் கொண்ட கூட்டத்தார் யார்?
  ஸமூது கூட்டத்தார். அத்தியாயம் : 41:17
 20. மாயிதா என்றால் என்ன?
  உணவுத் தட்டு. அத்தியாயம் : 5

*********************************************************

குர்ஆனின் நற்போதனைகள் :

வெற்றியாளர்கள் யார்?

Dr. T.  முஹம்மது அலி

 1. இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். (23:1)
 2. தூய்மையானவன் நிச்சயமாக வெற்றி பெறுகிறான். (87:14, 91:9)
 3. (நபியே!) அவர்கள் உம்மீது அருளப்பட்ட நெறிநூலின் மீதும்; உமக்கு முன் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; மேலும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்; இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (2:4,5)
 4. நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும்; நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகளாகவும்; தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களில் ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். மேலும் அவர்களே வெற்றியாளர்கள். (3:104)
 5. எவர்கள் (நபி(ஸல்) அவர்களை உண்மையாக நம்பி, அவரை கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான நெறிநூலையும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள்தான் வெற்றியாளர்கள். (7:157)
 6. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்தவர்களை நேசிப்பார்களா? (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும், தங்கள் புதல்வர்களாயினும், தங்கள் சகோதரர்களாயினும், தங்கள் குடும்பத்தினராயினும் சரியே! (ஏனெனில்) அவர்களின் இதயங்களில் (அல்லாஹ் ஈமான் என்னும் இறை நம்பிக்கையை எழுதி(பதித்து)விட்டான். மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவை கொண்டு பலப்படுத்தி இருக்கிறான். சுவர்க்க சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களை பிரவேசிக்க செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனை பொருந்திக் கொண்டனர். அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர் அறிந்து கொள்க. நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றியாளர்கள். (58:22)
 7. உறவினர்களுக்கு அவர்களுக்குரியதைக் கொடுத்து விடுவீராக! அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் எவர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கே இது மிக்க நன்மையுடையதாகும். அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (30:58)
 8. தொழுகையை (செவ்வனே) நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புபவர்கள் இவர்கள்தான் தம் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள். மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (31:5)
 9. அல்லாஹ்வின் தூதரும் இவனிடம் இருக்கும் நம்பிக்கையாளர்கள் (மூஃமின்) தங்கள் செல்வங்களையும், உயிர்களையும் அர்ப்பணிம் செய்து போர் புகிறார்கள். அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு. இன்னும் அவர்கள்தான் வெற்றியாளர்கள். (9:88)
 10. எவர்கள் இறை நம்பிக்கையை (ஈமான்) கொண்டு தம் நாட்டை விட்டும் வெளியேறி தம் செல்வங்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள். மேலும் அவர்கள்தான் வெற்றியாளர்கள். (9:20)
 11. மூஃமின்களிடம் அவர்களுக்கிடையில் (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்பு கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால் அவர்கள் சொல்(வது) எல்லாம் நாங்கள் செவிமடுத்தோம். (அதற்கு) கீழ்ப்படிந்தோம் என்பதுதான். இத்தகையவர்கள் தாம் வெற்றியாளர்கள். (24:51)
 12. (மறுமை நாளில்) எவருடைய நன்மையின்) எடைக் கனத்ததோ?
  அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.  (7:8, 23:102)
 13. நரகவாசிகளும், சுவர்க்கவாசிகளும் சமமாகமாட்டார்கள். சுவர்க்கவாசிகளே வெற்றியாளர்கள். (59:20)
 14. எவர் (நரக) நெருப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டு சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறார்களோ? அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். (3:185)

*********************************************************

Previous post:

Next post: