ஹதீஸ் பெட்டகம்

in 1990 மார்ச்

ஹதீஸ் பெட்டகம்

A.முஹம்மது அலி, MA, BEd,M.Phil.,

ஹதீஸ் பெட்டகத்தை திறப்பதற்கு முன்:

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இஸ்லாம் தென்னிந்தியாவில் அறிமுகமாகி சுமார் 1300 வருடங்களாகி விட்டன. இந்த 1300 வருடங்களாக இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆனும், ஹதீஸ் நூல்களும் நமது தாய் மொழியாம் தமிழில் தரப்படாதது வருந்தத்தக்க விஷயங்களாகும். சுமார் 40 வருடங்களுக்கு முன் தான் குர்ஆன் முழுமையாக தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு வெளிவரத்துவங்கியது. அவைகளும் தெளிவானதாக அமையவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.

குர்ஆன் மொழி பெயர்ப்புகள் தமிழில் வெளிவந்த நிலை இப்படியிருக்க குர்ஆனுக்கு அடுத்த அந்தஸ்தை உடைய ஹதீஸின் நிலை மிக மோசம். எவரும் ஹதீஸ் நூல்களை உள்ளது உள்ளபடி மொழிப் பெயர்த்து மக்களுக்கு தர வேண்டும் என்று ஆசைக் கொள்ளவில்லை. ஒரு சிலர் ஒரு சில ஹதீஸ் நூல்களை இந்த நூற்றாண்டில் தமிழில் மொழிப் பெயர்த்தாலும், தங்களது அல்லது தாங்கள் பின்பற்றும் அவரவர் தலைவர்களின் கருத்தக்களை இடையிடையே புகுத்தி ரசூல்(ஸல்) அவர்களின் கருத்துக்களை விட அவரவர் தலைவர்களின் கருத்தக்கள் மிக சிறந்ததாகக் காட்டி கற்ப்பித்துள்ளனர்.

சென்ற 5,6 வருடங்களாக நமது தமிழகத்தில் குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ வாருங்கள். என அழைக்கும் “பிரசாரம் வலுப்பெற்று வருகிறது. மக்களுக்கு முன் குர்ஆன், ஹதீஸ் கருத்துக்கள் உள்ளது உள்ளபடி எடுத்து வைக்கப்பட்டு வருகின்றன. குர்ஆன், ஹதீஸ்படி வாழ்ந்த முதல் நூற்றாண்டு முஸ்லிம்கள் போல வாழ வேண்டுமென்ற வேணவா பலரிடம் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட மணமாற்றம் பெற்று குர்ஆஅன் ஹதீஸ்படி வாழ எத்தனிப்பவர்கள் சாதாரண முஸ்லிம்கள் மட்டுமல்ல படித்தறிந்த பட்டதாரிகள், அறிஞர்கள், ஏன் மதரஸாக்களில் மார்க்கம் கற்ற மெளலவிகளும் அடங்குவர் என்பது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.

படித்தறிந்த பட்டதாரிகளும், அறிஞர்களும் ஆங்கிலம், உருது போன்ற மாற்று மொழகளிலுள்ள ஹதீஸ் மொழிப்பெயர்ப்புகளைக் கொண்டு நபி வழிகளை புரிந்து கொள்ள முடியும். மெளலவிகள் அரபியிலிருந்து நேரடியாக விளங்கிக் கொள்ளலாம். ஆணால் தமிழைத் தவிர வேறு மொழியறியாத முஸ்லிம்களின் நிலை என்ன? இதுவரை அவர்களுக்குக் காட்டப்படாதிருந்த நபிமொழிகளை அவர்கள் எப்படி அறிந்துக் கொள்ள முடியும்? நபி(ஸல்) அவர்களின் ஹதிஸ்களைத் தமிழில் மொழிப் பெயர்த்து தந்தாலேயன்றி அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாது.

சில தெளஹீது மெளலவிகள் சென்ற ஓரிரு ஆண்டுகளாக நபி(ஸல்) அவர்களின் நபிமொழி தொகுப்புகளில் சிலவற்றைத் தமிழில் மொழிப் பெயர்த்து மக்களுக்குத் தர ஆரம்பித்துள்ளனர். சில சகோதர பத்திரிக்கைகள் நபிமொழி தொகுப்புகளை தொடராகப் போட்டும் வருகின்றன.

இதுப் போன்ற ஒரு நபிமொழி தொகுப்பை அந்நஜாத் தரவில்லையே என்ற ஆதங்கம் நமது சகோதரர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அந்தக் குறையை நீக்கவே, “ஹதீஸ் பெட்டகம்” என்றத் தொடர் இம்மாதம் முதல் தொடங்குகிறது. ஒரே ஹதீஸ் நூலிலிருந்து ஹதீஸ்களை மொழிப் பெயர்த்து தருவது நமது நோக்கமல்ல ஒரே ஹதீஸ் எத்தனை நூற்களில் எத்தனை நபித்தோழர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தரமென்ன என்பதை நம்மால் முடிந்தவரை ஆய்ந்தளிக்க விரும்புகிறோம். இந்த ஆய்வில் அந்த ஹதீஸுக்குரிய முக்கியமான சரித்திரத் துணுக்குகளையும், அதை அறிவிக்கும் ஸஹாபிக்களையும் அவர்களின் இறந்த காலத்தையும் குறிப்பிடுகிறோம்.

இந்த ஹதீஸ் பெட்டகத்தை திறப்பதற்கு முன் ஒரு சிறு வேண்டுகோள்! இப்பெட்டகத்தின் முடிவில் நமது நமது அறிவில் அந்த ஹதீஸிலிருந்து விளங்கியதையும் தனித் தலைப்பில் குறிப்பிடுகிறோம். நபி(ஸல்) ஹஜ்ஜத்துல்விதா (விடை பெறும் ஹஜ்ஜில்) வில் குழுமியிருந்த நபித் தோழர்களுக்கு நீண்ட அறிவுரைகளைக் கூறி, அதனை மற்றவர்களுக்கும் எத்தி வைக்கும்படி ஏவினார்கள். மேலும் நபி(ஸல்) கூறினார்கள், என்னிடமிருந்து நீங்கள் ஒரே ஒரு விஷயம் அறிந்தாலும் அதனை மற்றவர்களுக்கு எத்தி வைத்திடுங்கள். ஒருவேளை என்னிடமிருந்து கேட்க உங்களை விட உங்களிடமிருந்து கேட்கும் அவர்கள் அதிகமாக விளங்கிக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.  எனவே எங்களது அறிவில் பட்டதை பட்டவர்த்தனமாக உங்களுக்கு குறிப்பிட்டுள்ளோம். இதனைப் படிக்கின்ற தாங்கள் அறிவிலும் நல்லதுப் படலாம். தயவு செய்து எங்களுக்குத் தெரிவியுங்கள். அது குர்ஆன் ஹதிஸுக்கு ஏற்ப்புடையதாக இருந்தால் மற்றவர்களுக்கும் அறிவிக்கலாம். அனைவரும் பயன் பெறச் செய்யலாம்.

முடிவாக ஒரு வேண்டுகோள்! சகோதரர்களே!

நம்மிடமுள்ள ஆதார நூல்களைக் கொண்டு ஆய்ந்ததையே உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம். இது உங்களுக்குப் பயனுடையதாக, அல்லாஹ், அவனது ரசூல் வழியில் நடக்க உபயோகமானதாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ்! என அல்லாஹ்வுக்குப் புகழ்பாடி செயல்படுங்கள். நபி(ஸல்) அவர்களுக்கு ஸலவாத் ஓதி அவர்களைச் சிறப்பிய்யுங்கள்.

இந்த ஆய்வில் ஏதாவது தவறிருக்குமானால் அதன் முழுப் பொறுப்பும் இதனை ஆய்ந்த என்னையும், இதனைப் பரீசீலித்த அந்நஜாத் ஆசிரியர்குழுவையே சாரும். அத்தவற்றைக் கண்டு நீங்கள் வாளாயிருந்தால் அல்லாஹ்விடம் மறுமையில் கேள்விக் கேட்கப்படுவீர்கள், எனவே தயவு செய்து இதில் இருக்குமானால் உடனே எங்களுக்கு எழுதித் திருத்தச் செய்யுங்கள். ஹதீஸ் ஆய்வு என்பது பெரும் கடல். மேலும் ஷைத்தானுக்கு பிடிக்காத ஒரு செயல்.

அல்லாஹ் நமக்களித்திருக்கும் அறிவு ஞானத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் “வெகுச் சொற்ப ஞானமேயன்றி உங்களுக்கு கொடுக்கப் பட வில்லை.” (17,85) என்கிறான். இதனை நாம் முழுமையாக நம்புகிறோம். அச்சொற்ப ஞானத்தை கொண்டு செய்யப்பட்ட ஆய்வையே உங்கள் முன் வைக்கிறோம்.

எல்லோரும் எல்லா ஹதீஸ் நூல்களையும் பார்த்திருக்க முடியாது. எனவே நாங்கள் குறிப்பிடாத, ஹதீஸ் நூல்கள் தங்களிடமிருந்து அதனைப் பார்க்கும் வாய்ப்பேற்ப்பட்டு அதில் அந்த ஹதீஸ் இருந்தால் எங்களுக்கு அதனையும் தெரிவியுங்கள். முடிந்தால் ஸனதுடன் (ஒரு போட்டோ காப்பி) அனுப்பினால் அதன் தரம் அறிந்து நமது தொகுப்பில் சேர்க்க முடியும். இந்நற்செயலால் நாம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மக்கள் வாழ முயற்ச்சித்த பலன் இன்ஷா அல்லாஹ் கிடைக்கும். நமது இந்த சிறிய சேவைக்கு மெளலவிகளும், அறிஞர்களும் துணை நிற்பார்கள் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி யாசிக்கின்றோம். நம்மனைவரையும் அல்லாஹ் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வாழ்ந்த முதல் நூற்றாண்டு முஸ்லிம்களாக்கி அருள்புரிவானாக! ஆமின்.

1. நோன்பை ஆரம்பியுங்கள்.

ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது போன்றே உங்கள் மீதும்  அது கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையுணர்வு(தக்வா) உடையவர்களாகலாம்.  (2:183)

நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்:

(ரமழான் மாதப் பிறைக் கண்டு நோன்பை (வைக்க) ஆரம்பிய்யுங்கள். (ஷவ்வால் மாத) பிறைக் கண்டு நோன்பு (வைப்பதை ) முடியுங்கள். (மேக மூட்டத்தால் பிறை) கண்ணுக்குத் தென்படவில்லை என்றால் (அம்மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிடுங்கள்.

ஆதாரம்        பாடம்                அறிவிப்பாளர்                    இறப்பு

1. புகாரீ        நோன்பு – பிறைக்காணல்    இப்னு உமர்(ரழி)                 73 ஹி

                                    அபூஹுரைரா (ரழி)              59 ஹி       

2. முஸ்லிம்       நோன்பு – பிறைக்காணல்    இப்னு உமர்(ரழி)               73 ஹி        

                                     அபூஹுரைரா (ரழி)            59 ஹி    

3. நஸயீ         நோன்பு                இப்னு உமர்(ரழி)               73 ஹி  

                                     அபூஹுரைரா (ரழி)            59 ஹி         

                                     இப்னு அப்பாஸ்(ரழி)            68 ஹி      

                                     அப்துர் ரஹ்மான் பின் ஜைது      72 ஹி     

                                     ஹுதைபா(ரழி)                35 ஹி  

4. அபூதாவூத்      நோன்பு                இப்னு உமர்(ரழி)               73 ஹி  

                                     இப்னு அப்பாஸ்(ரழி)            68 ஹி 

                                     ஹுதைபா(ரழி)                35 ஹி 

5. திர்மீதி        நோன்பு                 இப்னு அப்பாஸ்(ரழி)            68 ஹி

6. இப்னுமாஜ்ஜா    நோன்பு                 இப்னு உமர்(ரழி)               73 ஹி  

                                     அபூஹுரைரா (ரழி)            59 ஹி 

7. முஸ்னது அஹ்மது-

                முஸ்னது இப்னு அப்பாஸ்

                பாகம் 1ல் பக்கங்கள்      இப்னு அப்பாஸ்(ரழி)            68 ஹி 

                221,226,258

                முஸ்னது அபூஹுரைரா

                பாகம் 2ல் பக்கங்கள்     அபூஹுரைரா (ரழி)            59 ஹி 

                259, 263, 281, 287,

                415, 422, 430, 438,

                454, 469, 497.

               முஸ்னது ஜாபிர் இப்னு    ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரழி)    73 ஹி

               அப்துல்லாஹ் பாகம்

               3-ல் பக்கங்கள் 329,341

               ஹதீஸ் தலக்பின் அலி     கைஸின் தந்தை

               பாகம் 4ல் பக்கம் 23     தலக் இப்னு அலி(ரழி)

               ஹதீஸ் அபூக்ரா

               பாகம் 5ல் பக்கம்42      அபூபக்ரா(ரழி)                50ஹி

8. முஸ்னது                            ஜாபிர் இப்னு                73ஹி

  அபீயஃலா                           அப்துல்லாஹ்(ரழி)

9. தப்ரானி அவ்ஸத்                       ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரழி)    73 ஹி  

10. தப்ரானி கபீர்                        தலக் இப்னு அலி(ரழி)

                                     அபூபக்ரா(ரழி)                50 ஹி

11. அல்பராஜ்                           அபூபக்ரா(ரழி)                50 ஹி

     அப்துர் ரஹ்மான் பின் ஜைது பின் கத்தாப்(ரழி) என்ற நபித்தோழர் ரசூல்(ஸல்) மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்து இருபது மாதங்களுக்குப் பின் மதீனாவில் பிறந்தவர். இவரிடம் மக்கள் ரமழான் பிறை காண்பதில் சந்தேகம் கேட்டனர். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் ஜைது(ரழி) கூறினார்கள். நான் ஒரு தடவை பல ஸஹாபாக்(நபித் தோழர்)கள் கூடியிருந்த கூட்டத்தில் இருந்தேன். இதுப் போல அன்றும் ரமழான் பிறை காண்பதில் ஏற்படும் சந்தேகங்களைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபித் தோழர்கள்(ஏகோபித்து) கூறினார்கள்!

பிறை கண்டு நோன்பு வையுங்கள்:

பிறை கண்டு நோன்பு முடியுங்கள்:

    (மேக மூட்டத்தால்) பிறை தென்படாவிட்டால் (முந்திய மாதத்தை) முப்பது நாட்களாக கணக்கிடுங்கள். பிறைப் பார்த்ததை இருவர் (சாட்சியாக) கூறினால், அதனை ஏற்று நோன்பு வையுங்கள்: முடியுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள்.

    இந்த ஸஹாபிக் கூறும் மேற்படி கூற்று நஸயீயில் நோன்பு பாடத்தில் இடம் பெறுகிறது. இவர் கூறும் ஒரே ஒரு ஹதீஸ் (நஸயீயில்) இது தான்.

    அல்லாஹ்வின் உதவியால் நாம் ஆய்ந்தறிந்தவரையில் இந்நபிமொழி ஆதாரப்பூர்வமான பதினொரு ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட சரியான அறிவிப்பாளர் வரிசையில் ஸஹாபாக்(நபித் தோழர்)கள், தாபியீன்கள் பலர் இடம் பெற்றுள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

நமது அறிவில் பட்டவை:

    1. ஷஃபான் மாதம் முடிந்து ரமழான் பிறைக் கண்டு நோன்பு வைக்க ஆரம்பிக்க வேண்டும். ரமழான் முடிந்து ஷவ்வால் பிறைக் கண்டு ஈத்(பெருநாள்) கொண்டாட வேண்டும்.

    2. மேக மூட்டத்தால் பிறைகாண முடியாவிட்டால் ஷஃபானை 30 நாட்களாகக் கணித்து மறுநாள் முதல் ரமழான் நோன்பு வைக்க ஆரம்பிக்க வேண்டும். ஷவ்வால் பிறைத் தெரியாவிட்டால் ரமழானை 30 நாட்களாக் கணக்கிட்டு மறுநாள் ஈத் (பெருநாள்) கொண்டாட வேண்டும்.

    3. பிறைக் காணப்பட்டுள்ளது என்ற விபரம் கிடைத்தால் கண்டதற்கு இரு சாட்சிகள் அவசியம் தேவை. அதனடிப்படையில் அமல் செய்யலாம்.

    4. ஹிஜ்ரி சந்திரக் கணக்குப் படி 29 அல்லது 30 நாட்கள் கொண்டதே ஒரு மாதமாகும்.

                       (உங்களறிவில் பட்டத்தையும் எழுதுங்கள், சரியானதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.-ஆர்)

அதிகப்படியான செய்திகள்:

அ) நமது அருள்மறை திருக்குர்ஆன் இறக்கப்பட்டது ரமழான் மாதத்தில் தான்.            (2:185)

ஆ) ஹிஜ்ரீ 2-ம் ஆண்டு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

இ) சரித்திரப் புகழ்மிக்க “பத்ர்” போர் ஹி 2ஆம் ஆண்டு ரமழான் பிறை 17ல் நிகழ்ந்து இஸ்லாமிய விரோதிகளுக்கு ஒரு படம் புகட்டியது.

2) இஃதிகாஃப்:

    நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இத்திகாஃபில்) இருக்கும் போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்.                                                        (2:187)

    நபி(ஸல்) அவர்கள் ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

    மற்றொரு அறிவிப்பின்படி : அவர்கள் மரணிக்கும் வரை இருந்தார்கள். கடைசி வருடம் 20 நாட்களிருந்தார்கள்.

    ஆயிஷா(ரழி) அறிவிப்பின்படி: உயிருடன் இருந்த வரையில் அவருடைய குடும்பத்தாருடன் இஃதிகாஃப் இருந்தார்கள். அவரது மரணத்திற்குப் பிறகு அவரதுக் குடும்பத்தார்கள் இருந்தார்கள்.

    பெரும்பாலும் இந்த நபிமொழிகள் நோன்பு பாடத்தில் இஃதிகாஃப் என்ற தனித் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.

ஆதாரம்              அறிவிப்பாளர்                    இறப்பு

1. புகாரீ           ஆயிஷா(ரழி) இப்னு உமர்(ரழி)             57/58 ஹி

                                                    73 ஹி

                                  

2. முஸ்லிம்         ஆயிஷா(ரழி) இப்னு உமர்(ரழி)            57/58 ஹி

                                                    73 ஹி

         

3. அபூதாவூத்        ஆயிஷா(ரழி) இப்னு உமர்(ரழி)            57/58 ஹி

                                                    73 ஹி

                   அபூஹுரைரா (ரழி)                   59 ஹி 

                    உபை இப்னு கஃபு(ரழி)                22/30 ஹி

           

5. திர்மீதி          அபூஹுரைரா (ரழி)                     59 ஹி  

6. இப்னுமாஜ்ஜா     இப்னு உமர்(ரழி)                      57/58 ஹி

                                                    73 ஹி

                அபூஹுரைரா (ரழி)                     59 ஹி 

                உபை இப்னு கஃபு(ரழி)                   22/30 ஹி

              

7. முஸ்னது அஹ்மது-  முஸ்னது அபூஹுரைரா, 

                            அபூஹுரைரா(ரழி)           59ஹி

                  பாகம் 2ல் பக்கங்கள்

                    271, 281

                  முஸ்னது இப்னுஉமர்

                   பாகம் 2ல் பக்கங்கள்

                    67, 129, 133   

                           இப்னு உமர்(ரழி)               57/58 ஹி

                       முஸ்னது அனஸ்,

                  பாகம் 3ல் பக்கம்

                  104               அனஸ்பின் மாலிக்(ரழி) 103ஹி

                    முஸ்னது ஆயிஷா

                   பாகம் 6ல் பக்கங்கள்

                  50,92,168,169       ஆயிஷா(ரழி)        57/58ஹி

8. முஸ்னது          அலிபின் அபீதாலீப்(ரழி)

  அபீயஃலா                          

     தப்ரானியில் அலி(ரழி) அனஸ்(ரழி) மூலம் அறிவிக்கப்படும் இதே ஹதீஸ் பலஹீனமானதாகும்.

    அல்லாஹ்வின் உதவியால் நாம் ஆழ்ந்தறிந்தவரையில் இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமான ஏழு ஹதீஸ் நூல்களில் இடம்  பெற்றுள்ளது. (25) இருபத்தைந்துக்கும் மேற்ப்பட்ட சரியான அறிவிப்பாளர் வரிசையில் ஸஹாபாக்(நபித் தோழர்)களும் தாபீயீன்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

    நமது அறிவில்ப் பட்டவை:

   1. இஃதிகாஃப் இறை தியானத்தில் தனித்திருத்தல் என்ற இஃதிகாஃபை நபி(ஸல்) அவர்களாலும் அவரதுக் குடும்பத்தாராலும்(மனைவி மக்களுடன்) செயலாற்றப்பட்டுள்ளது.

   2. ஆண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருத்தல் வேண்டும். பெண்கள் பள்ளியின் ஓரத்தில் இடம் ஒதுக்கி அல்லது வீட்டில் தொழுமிடத்தில் இஃதிகாஃப் இருக்கலாம்.

    3. இஃதிகாஃப் இருக்கும் நாட்களில் இரவிலும், பகலிலும் கணவன் மனைவி தாம்பத்யம் தடை செய்யப்பட்டுள்ளது.

    4. இஃதிகாஃப்  இருக்கும் ரமழான் அல்லாத நாட்களிலும் நோன்பு வைப்பது வரவேற்க்கத்தக்கது.

    5. இவ்வளவு சிறப்புமிக்க ஒரு நல்ல சுன்னத்தான நல்லமல் நமது மக்களால் சரியாக நிறைவேற்றப ்படவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.

அதிகப் படியான செய்திகள்:

அ) ஆயிரம் மாதங்களைவிட சிறப்புமிக்க ஓரிரவு லைலத்துள் கத்ர் அவ்விரவு ரமழான் மாதத்தில் உள்ளது. (97:3) என்ற இறை ஆணைப்படி அவ்விரவை பெற நபி(ஸல்) கற்றுத்தந்த ஒரு அமல் இஃதிகாஃப் ஆகும்.

ஆ) இச்சிறப்புமிக்க லைலத்துல்கத்ர் எந்த இரவுகளில் உள்ளது என்பதைக் கண்டறிய ஒரு வருடம் முழு ரமழானும் இஃதிகாஃபில் நபி(ஸல்) அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

இ) நபி(ஸல்) தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ரமழானில் இஃதிகாஃப் இருந்திருக்கிறார்கள். ஏதாவது காரணத்தால் ரமழானில் இஃதிகாஃப் இருக்க முடியவில்லையெனில் அதனை மற்ற மாதங்களில் “கழா” செய்துள்ளார்கள்.

    இஃதிகாஃபைப் பற்றிய முழு விபரத்தை குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் முழுமையாக அறிய “இஃதிகாஃப்” என்ற சிறு நூலைக் காண்க. (அந்நஜாத் வெழியீடு)

3. நோன்புக் கால இரவுகளில் முதலிரவு:

    நோன்புக் கால இரவுகளில் நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவுக் கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான். அவன் உங்கள் மீதுப் பரிதாபம் கொண்டு உங்களை மன்னித்தான். எனவே இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள்.

                                                                    (2:187)

மாற்றப்பட்ட (மன்சூக்) நபிமொழி:

    ”எவரொருவர் (நோன்புக் காலத்தில் உடலுறவு, ஸ்கலிதம் போன்றவற்றால்) குளிப்பு கடமையானவராக காலையில் விழிக்கிறாரோ அவர் அன்று நோன்பு வைக்க வேண்டாம்” என நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரழி) அறிவிக்கும் ஒரு ஹதீஸ் “ஹம்மாம் இப்னு முனப்பஹ்” என்ற மிக மிக பழமையான ஹதீஸ் நூலில் 33வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.

    இதே அறிவிப்பை இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) தமது முஸ்னத்திலும் (பாகம் 2ல் பக்கம் 314ல்) பதிவு செய்துள்ளார்கள்.

    இந்நபி மொழியை அபூஹுரைரா(ரழி) அவர்களிடமிருந்து தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருல்காரி(ரஹ்) என்ற தாபிஈன் கூறும் கூற்று இப்னுமாஜ்ஜாவில் (பாடம்: நோன்பு) இடம் பெற்றுள்ளது.

  இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அனைவரும் நல்லவர்கள், நம்பத்தக்கவர்கள் என எல்லா ஹதீஸ் கலா வல்லுனர்களாலும் புகழப்படுகிறார்கள். ஆணால் இந்நபிமொழி திருக்குர்ஆனின் வசனம் 2:187 என்ற அல்லாஹ்வின் ஆணைக்கு முரண்பட்டிருப்பதைக் காண்கிறோம். மற்றும் பல ஸஹீஹான ஹதீஸ்களின் கருத்துக்களுக்கு மாற்றமாக அமைந்துள்ளது. எனவே இந்த நபிமொழிப் பற்றிய கடும் சர்ச்சை அபூஹுரைரா(ரழி) உயிருடனிருக்கையில் உருவானது. அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நபி மொழி ரமழான் நோன்பு கடமையான ஆரம்பக் காலத்தில்க் கூறப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்களாலேயே (மன்சூக்) மாற்றப் பட்டது. என்பதைக் கீழ்காணும் சரித்திர நிகழ்ச்சிகள் மூலமறியலாம்.

    அபூபக்கர் இப்னு அப்துர்ரஹ்மான் இப்னு அல் ஹாரித் இப்னு ஹிஷாம்(ரழி-இ93ஹி) என்பவர் மதினாவில் வாழ்ந்த ஏழு பெரும் மார்க்க அறிஞர்களில் ஒருவராக இருந்தார். இவரது தந்தை அப்துர்ரஹ்மான் அவர்களும், பாட்டனார் அல் ஹாாஜத் அவர்களும் (ரழி-அன்ஹுமா) நபி(ஸல்) அவர்களை நேரில் கண்டு உடனிருந்த நபித்தோழர்கள். இவரது பாட்டனார் அல்ஹாரித் (ரழி-இ18ஹி) மக்கா வெற்றியின்போது இஸ்லாத்தில் இணைந்தார். தந்தை அப்துர்ரஹ்மான்(ரழி-இ43ஹி) தனது பத்து வயதிலிருந்து நபி(ஸல்) அவர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தார்கள்.

    அபூபக்கர் இப்னு அப்துர்ரஹ்மான்(ரழி) அவர்களின் உண்மைப் பெயர் முஹம்மது ஆகும். இவர் தனது தந்தையிடமிருந்தும் அபூஹுரைரா, ஆயிஷா, உம்முஸலமா(ரழி-அன்ஹும்) போன்ற நபித் தோழர்களிலிருந்தம் தானறிந்த உண்மையான நபிமொழிகளை அறிவிக்கும் மார்க்க அறிஞராகத் திகழ்ந்தார். தானும், தனது தந்தை அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்களும் இந் நபிமொழியின் தரமறிய எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், உண்மையறிந்த விபரத்தையும் முஅத்தா மாலிக்கில் இமாம் மாலிக்(ரஹ்) ஜுனுபாளியின் நோன்பு என்ற பாடத்தில் சரியான அறிவிப்பாளர் வரிசையில் கூறுவதைக் காண்போம்.

    மார்வான் இப்னுல் ஹகம்(ரழி-இ65ஹி) என்பவர் மதினாவில் கவர்னராக இருந்தார். நானும் எனது தந்தை அப்துர்ரஹ்மான் அவர்களும் மர்வானிடம் போயிருந்தோம். அப்போது அபூஹுரைரா(ரழி) : எவரொருவர் (நோன்பு கால இரவுகளில் உடலுறவு, ஸ்கலிதம் மூலம்) குளிப்பு கடமையானவராக காலையில் விழிக்கின்றாரோ அவர் அன்று நோன்பு வைக்க வேண்டாமென நபி(ஸல்) கூறியதாகக் கூறப்பட்டது. அதனைச் செவியுற்ற கவர்னர் மர்வான்(ரழி) ஆச்சர்யத்துடன் நிச்சயமாக நீங்களிருவரும் முஃமின்களின் தாய்களான ஆயிஷா, உம்மு ஸலமா(ரழி-அன்ஹுமா) ஆகிய இருவரிடமும் நேரில் சென்று இதைப்பற்றிக் கேட்டறிய வேண்டும் என்றார்கள். அப்போது ஆயிஷா,உம்மு ஸலமா(ரழி-அன்ஹுமா) மதினாவில் குடியிருந்தனர்.

    நானும் எனது தந்தை அப்துர்ரஹ்மானும் முதலில் ஆயிஷா(ரழி) இல்லம் சென்றோம். (அங்கு நடந்ததை உரையாடலாகப் பார்ப்போம்.)

அப்துர் ரஹ்மான்(ரழி) : முஃமின்களின் தாயே! எவரொருவர் குளிப்புக் கடமையானவராக காலையில்     விழிக்கின்றாரோ  அவர் அன்று  நோன்பு வைக்க வேண்டாமென நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரழி)க் கூறியுள்ளாரே! (அதன் உண்மை நிலை என்ன?)

ஆயிஷா(ரழி)       : அபூஹுரைரா(ரழி) கூறியதுப் போலல்ல. ஓ அப்துர் ரஹ்மானே! உண்மையில் நபி(ஸல்) எப்படி நடந்துக் கொண்டார்களோ அதற்கு மாற்றமாக நீர் வாழ விரும்புகிறீரா?

அப்துர் ரஹ்மான்(ரழி) : இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இல்லை!

ஆயிஷா(ரழி)       : “திட்டமாக நான் கூறுகிறேன். நபி(ஸல்) உடலுறவு, ஸ்கலித மூலமாக குளிப்பு வாஜிபானாலும் அன்று நோன்பு வைப்பார்கள்.” என்றார்கள்.

    பின் நாங்களிருவரும் உம்மு ஸலமா(ரழி) அவர்களிடமும் சென்றோம். அபூஹுரைரா(ரழி) கூறிய ஹதிஸைப் பற்றி ஆயிஷா(ரழி) அவர்களிடம் வினவியதுப் போலவே வினவினோம். அவர்களும் ஆயிஷா(ரழி) கூறியதுப் போலவேக் கூறினார்கள்.

    அதற்குப் பின் நாங்களிருவரும் கவர்னர்-மர்வான் இப்னுல் ஹக்கம்(ரழி) அவர்களிடம் திரும்பி, விசாரித்து, நேரில் கேட்டறிந்த நபிச் செயலைச் சொன்னோம்.

மர்வான் : ஓ அபூமுஹம்மதே! சத்தியமாக உங்களுக்குக் கூறுகிறேன். எனது வீட்டின் வாசலில் வெகு வேகமாகச் செல்லும் இரு(ஒட்டகங்கள்/குதிரைகள்) வாகனங்டகளுள்ளன. தற்சமயம் அபூஹுரைரா(ரழி) அல்-அதிக்  என்ற இடத்தில் இருக்கிறார்கள். தயவுசெய்து தாங்களிருவரும் அவரிடம் சென்று இந்த உண்மை நபிமொழியைத் தெரிவியுங்கள். (அவர் கூறிவரும் தவறான நபிமொழியைத் தடுங்கள்) என்றார்.

    நானும் எனதுத் தந்தை அப்துர்ரஹ்மானும் உடனேப் புறப்பட்டு அல்-அதிக் வந்து சேர்ந்தோம். அபூஹுரைரா(ரழி) அவர்களைச் சந்தித்தோம். அவருடன் எனது தந்தை சிறிது  நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கடைசியில் தான் ஆயிஷா, உம்மு ஸலமா(ரழி அன்ஹுமா) மூலம் கேட்டறிந்த உண்மை நபிச் செயலைக் கூறி (அவர் கூறிவரும் தவறான நபிமொழியைத் தவிர்க்கும்படி கூறி) னார்.

    இதனைச் செவியுற்ற  அபூஹுரைரா(ரழி): இந்த விஷயம் எனக்குத் தெரியாது. ஒருவர் எனக்கு இச்செய்தியை அறிவித்தார் என்றார். ( இது முஅத்தாவின் அறிவிப்பு) மு அத்தாவிற்கு விளக்கமெழுதிய ஜர்கானி(ரஹ்)  அவர்கள் இதே ஹதீஸை உஸாமா பின் ஜைது(ரழி) கூறியதாக நஸயீயிலும் இடம் பெறுவதாகக் குறிப்பிடுகிறார். (பாகம் 2 பக்கம் 160)

    நான் அல்பழ்லு இப்னு அப்பாஸிடமிருந்து அறிந்ததாகவும், அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பதை நானறியேன்! அபூஹுரைரா(ரழி) கூறியதாக புகாரீ(ரஹ்) தனது நூலில் குறிப்பிடுகிறார்கள்.

    இதனைச் செவியுற்ற அபூஹுரைரா(ரழி) அவ்விருவரும்(ஆயிஷா, உம்முஸலமா(ரழி-அன்ஹுமா) அப்படியாக் கூறினார்கள்?! என ஆச்சரியத்துடன் கேட்டார். ஆமாம்! என்றதும் நிச்சயமாக அவர்கள் என்னைவிட அதிகமறிந்தவர்கள் எனக் கூறியதாக முஸ்லிம்(ரஹ்) தனது நூலில் விவரிக்கிறார்.

    மற்றொரு அறிவிப்பில் தான் அல்பழ்லு இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடமிருந்து கேட்டதாகவும், நபி(ஸல்)  அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்கவில்லை எனக் கூறியதாக முஸ்லிமிலும், அஹ்மதிலும் காணப்படுகிறது.

     எனவே இந்த சரித்திர பின்னனிக் கொண்ட இந்த நபிமொழி மாற்றப்பட்டது(மன்சூக்) என்பதை அறிகிறோம். இதன்மூலம் அமல் செய்வதுக் கூடாது, சரியான நபிமொழி மூலம் அமல் செய்ய வேண்டும். அந்நபிமொழிகள் யாவை? எங்கெங்கு இடம் பெறுகின்றன? என்பதைக் காண்போம்.

செயல்படுத்தப் பட வேண்டிய நபிமொழி:

    “நபி(ஸல்) அவர்கள் (நோன்பு காலங்களில் ஒரு சில நாட்கள்) குளிப்பு கடமையாகியவர்களாக காலையில் எழுவார்கள். (கடமையான குளிப்பை) குளித்துவிட்டு நோன்பை தொடர்வார்கள்” என நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவிகளில் இருவரான ஆயிஷா, உம்மு ஸலமா(ரழி-அன்ஹுமா) அறிவிக்கிறார்கள்.

    மற்றொரு அறிவிப்பின்படி: தனது மனைவிகளிடம் (இரவில்) உடலுறவுக் கொண்டபின்  காலையில் எழுந்து குளித்துவிட்டு பஜ்ர் தொழுது, நோன்பை, நோன்பை தொடர்கிறார்கள்.

     இக்கருத்தினை வலியுறுத்தும் ஹதிஸ்கள் பெரும்பாலும் ஆயிஷா, உம்மு ஸலமா(ரழி அல்குமா) மூலமாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நபிமொழிகள், கணவன் மனைவிகளுக்கிடையேயான  தாம்பத்ய விஷயமாக இருப்பதால் இவ்விருவரும் தங்களது அந்தரங்க அனுபவத்தை இந்த சமுதாயத்திற்கு ஒரு செய்தியாகக் கொடுத்திருப்பது இதன் முக்கியத்துவத்தை நமக்குத் தெளிவுப்படுத்துகிறது. இந்த நபிமொழி இடம் பெறும் நூல்களைக் காண்போம்.

அறிவிப்பாளர்கள்:

1. ஆயிஷா பின்து அபீபக்ர்(ரழி), இறப்பு 57/58 ஹி

2. உம்மு ஸலமா(ரழி), அசல் பெயர்: ஹிந்து பின்து

                            அபீஉமைய்யா, இறப்பு 61 ஹி

ஆதாரம்                      பாடம்                    தலைப்பு

1. புகாரீ                    நோன்பு                ஜுனுபாளியின் நோன்பு

2. முஸ்லிம்                  நோன்பு              (குளிப்பு கடமையானவர்கள்)

3. அபூதாவூத்                நோன்பு                      ”  

5. திர்மீதி                   நோன்பு                      “

6. இப்னுமாஜ்ஜா              நோன்பு                      “

7. முஸ்னது அஹ்மது          முஸ்னது அல்பழ்லுபின் அப்பாஸ்

                         பாகம் 1ல் பக்கங்கள்:211, 213

                         முஸ்னது அபூஹுரைரா,பாகம்

                          2-ல் பக்கங்கள்:248,286

                        முஸ்னது ஆயிஷா, பாகம் 6ல்

                        பக்கங்கள்: 36, 71, 99, 101

                        102, 112, 152, 153, 154,

                        203, 216, 229, 245, 253,

                        256, 273, 278, 279

தப்ரானியில் இடம் பெறும் இந்த நபிமொழி புழாலா பின்உபைது என்பவரால் அறிவிக்கப்படுகிறது. அதன் அறிவிப்பாளர் வரிசையில் அடையாளம் தெரியாதவர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே அது பலஹீனமானதாகும்

    அல்லாஹ்வின் உதவியால் நாம் ஆய்ந்தறிந்த வரையில் இந்நபிமொழி ஆதாரப்பூர்வமான ஏழு ஹதிஸ் நூல்களில், முப்பதுக்கும் மேற்ப்பட்ட சரியான அறிவிப்பாளர் வரிசையில், அந்தரங்க தாம்பத்யத்தில் அனுபவப்பூர்வமாக பங்குக் கொண்ட நபி(ஸல்) அவர்களின் மனைவிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது நினைவுக் கூறத்தக்கதாகும்.

    நமது அறிவில்ப் பட்டவை:

     1. நோன்பு காலங்களில் பகலில் மனைவியுடன் உடலுறவு கொள்வதுக் கூடாது. மற்றக் காலங்களில் எந்நேரமும் உடலுறவுக்கு ஏற்புடையதே!

    2. உண்பது, குடிப்பது, போகிப்பது நோன்பு காலங்களில் பகலில் ஹராமா(வில)க்கப்பட்டது. இரவு நேரங்களில் அனைத்தும் ஆகுமானதே!

    3. முந்திய சமுதாயத்தைவிட இச்சமுதாயம் உடலிச்சைகளை அடக்குவதில் பலஹீனமானவர்கள் என்பதைத் தெளிவாக அல்லாஹ் உணர்ந்தே இப்படி இலகுவான சட்டத்தை நமக்கு அருளினான்.

    4. ஸஹாபாக்கள் காலத்திலேயே தாபீயீன்கள் ஆதாரம் கேட்டு உண்மைச் செய்திகளை கற்றனர். கற்ப்பித்தனர்.

    உங்களறிவில் பட்டதை எழுதுங்கள். சரியானதை அனைவருக்கும் தெரியப்படுத்தி, குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆராயத் தூண்டுவோம்.

அதிகப் படியான செய்திகள்:

    அ) ஆரம்பத்தில் ரமழான் மாதம் முழுதும் இரவிலும், பகலிலும் உடலுறவுக் கொள்வது ஹராமாக்க(விலக்)கப்பட்டிருந்தது. உமர்(ரழி) போன்றோரின் பிரார்த்தனைக்கொப்ப இரவில் உடலுறவு கொள்வதை அல்லாஹ் அனுமதித்தான்.

    ஆ) நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஆதாரப்பூர்வமான நூல்களின் பாடங்களை முழுமையாகப் படிப்பீர்களேயானால்  நோன்பாளிகள் தங்கள் கணவன் மனைவிக்கிடையேயான விஷயங்களைப்பற்றி தெளிவாக அறிந்துக் கொள்ளலாம். ஆதார நூல்களைப் புரட்டுங்கள்: புரிந்துக் கொள்ளுங்கள்: செயல்படுங்கள்: அல்லாஹ்வின் புகழ்பாடுங்கள்.

Previous post:

Next post: