இமாம்களை அவமதிப்பதும்,  மக்களை குழப்புவதும் யார்?

in 1990 ஜூன்

முல்லாக்களின் கிஸ்ஸா 

இமாம்களை அவமதிப்பதும்,  மக்களை குழப்புவதும் யார்?

அபூ ஹாமிது, சென்னை.

மத்ஹபுகள் இன்றியமையாதவை என்ற தம் முரட்டு வாதத்தை நிலைநாட்ட நாடி, அல்லாஹ் நல்கிய திருக்குர்ஆனுடைவும், அவனது திருத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வழிமுறைகளுடையவும் ஆற்றலையும் தரத்தையும் தாழ்த்தி, “மக்காச்சுடர்” ஆசிரியப் பெருந்தகை சுலைமான் பாக்கவி அவர்கள் எழுதியவைகளை மறுத்தும், உண்மையை விளக்கியும் சென்ற இதழில் எழுதினோம். இமாம்களை அவமதிப்பவர்கள் என்றும் குழப்பவாதிகள் என்றும் நம்மை மக்கள் நம்பும் படி செய்ய  பகீரதப் பிரயத்தனம் செய்பவர்களில் ஒருவர், சென்னை மாநகரில் புரசைவாக்கம் ஜும்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் மவ்லவி கே.ஏ. நிஜாமுத்தில் மன்பஈ அவர்கள், 16-02-1990 அன்று, சென்னை புதுக்கல்லூரி மஸ்ஜிதில் நடத்தப்பட்ட மாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவுகள் சாரம் இதோ:

இன்றைய முஸ்லிம் இளைஞர்களைக் குழப்பத்தில் ஆழ்த்த முனைந்துள்ளனர் சிலர். இத்தகைய குழப்பவாதிகள் ஆதிக்கத்தினின்றும் நம் இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டும். எனவே நம் இளைஞர்களுக்கு சரியான அறிவைப் புகட்டுவது மிக அவசியம். கண்ணியத்திற்குரிய இமாம்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறி அவர்களை அவமதிக்கின்றனர்; மக்களைக் குறிப்பாக இளைஞர்களை வழிக்கெடுக்கின்றனர் இக்குழப்பவாதிகள். இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களின் அறிவாற்றலையும் சொல் வன்மையையும் பற்றிக் கூறும் போது அறிஞர்கள் “அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தம் சொல்வன்மையால் தம் கையில் வைத்திருக்கும் கல்லை தன் பேச்சை செவிமடுப்பவர்கள் தங்கள் என நம்பும்படி செய்யும் ஆற்றல் படைத்தவர்கள்” என்று குறிப்பிடுகிறார்கள் இக்குழப்பவாதிகள்.

இஸ்லாத்தில் அடிப்படைக் கோட்பாடாகிய ஓர் இறைக் கொள்கையை(தவ்ஹீதை) வலியுறுத்தி, திருக்குர்ஆனையும் நபிவழியையும் பற்றிப் பிடித்து தூய இஸ்லாத்தை நிலைநிறுத்தவும், கண்மூடி, நபியல்லாதவர்களைப் பின்பற்றும் வழக்கத்தை அகற்றவும் மக்களைத் தூண்டுபவர்களையே குழப்பவாதிகள்” என்றுக் குறிப்பிடுகிறார் மவ்லவி கே.ஏ.என். ஆனால் உண்மையில் குழப்பவாதி யார்? என்றும் அதைச் செய்தோம்.

மவ்லவி கே.ஏ.என். அவர்களுடைய கூற்றை ஊன்றி வாசியுங்கள்; அவர் தரும் கருத்தைப் பற்றி சிந்தியுங்கள். மேலெழுந்த வாரியாக வாசிக்கும் போது பெருந்தகை பேஷ் இமாம் அவர்கள், இமாம் அபூஹனிபா(ரஹ்) அவர்களை உயர்த்திப் புகழ்ந்து அவர்களின் சொல்லாற்றலை மெச்சியதாகத் தோன்றும். யதார்த்தத்தில் அபூஹனீபா(ரஹ்) அவர்களை மவ்லவி கே.ஏ.என். எத்துனை இகழ்ந்துரைத்து விட்டார் என்பது தீர ஆய்ந்தாலே புரிய வரும். அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். நீங்கள் உண்மையைப் பொய்யுடன் குழப்பவோ உண்மையை நன்கறிந்துக் கொண்டே மறைக்கவோ வேண்டாம்.’

நீங்கள் உங்கள் சகோதரியிடம் பேசும்பொழுது அவர் நீங்கள் உண்மையையே கூறுவதாக எண்ணிக் கொண்டிருக்க நீங்கள் அவரிடம் பொய்யுரைத்து அவரை ஏமாற்றினால் இதைவிட நேர்மையற்றத் தன்மை வேறென்ன உள்ளது?   (சுப்யானுபின் அஸதில் ஹழ்ரமீ(ரழி), அபூதாவூத், புகாரீ)

ஒரு மூஃமினிடத்தில் பொய்யும், பிறரை மோசடி செய்யும் தன்மையும் அன்றி மற்ற தன்மைகள் காணப்படலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூ உமாமா(ரழி), அஹமத், பைஹகீ)

நபி(ஸல்) அவர்களிடம் ‘ஒரு முஸ்லிம் கோழையாக இருக்க இயலுமா? என்றுக் கேட்கப்பட்டது. ஆம் என்றும் பதில் கூறினார்கள்; ஒரு மூஃமின் கஞ்சனாக (கருமியாக) இருக்க இயலுமா? என்றுக் கேட்கப்பட்டது. ஆம் என்றும் பதில் கூறினார்கள்; ஒரு மூஃமின் பொய்யனாக இருக்க இயலுமா? என்றுக் கேட்கப்பட்டது. இல்லை என்றும் பதில் கூறினார்கள்; (ஸஃதுபின் அபீவக்காஸ்(ரழி), முஅத்தா மாலிக்)

அப்துல்லாஹ் பின் ஆமிர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு  தடவை நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த போது என் தாயார் என்னை அழைத்தார்கள். ஏதோ தருவதாகக் கூறி என்னை (அவர்கள் அருகில்) வரும்படி அழைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் என் தாயாரிடம் என்ன தரப் போகிறீர்கள் எனக் கேட்டார்கள். எனக்கு என் தாயார் பேரித்தம் பழம் தரப்போவதாகக் கூறினார்கள். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் “இந்த பேரித்தம்பழத்தை நீங்கள் (உங்கள் மகனுக்கு) கொடுக்காவிட்டால் உங்கள் மீது ஒரு பொய் பதிவு செய்யப்படும் என்று கூறினார்கள். (அபூதாவூத், பைஹகீ)

அபூஹுரைரா(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:

யாரேனும் ஒருவர் ஒருக் குழந்தையை ஒரு பொருளைத் தருவதாகச் சொல்லி அழைத்துவிட்டுப் பின்னர் அப்பொருளை அக்குழந்தைக்குக் கொடுக்காமல் இருந்துவிட்டால் அதுப் பொய்யாகும். (அஹ்மது) சகோதரர்களே! மேலேத் தரப்பட்ட இறைவசனமும், நபிமொழிகளும், பொய்யுரைப்பதைக் கண்டிக்கின்றன. அருமைக் குழந்தைகளை நம் அருகில் வர வைக்க பழம் தருகிறேன்; மிட்டாய் தருகிறேன்” என்று ஆசைக்காட்டி அழைப்பது சாதாரண நடைமுறை வழக்கமே; குழந்தை அருகில் வந்ததும் முத்தமிட்டு விட்டு ஒன்றும் கொடுக்காமல் இருந்து விடுகிறோம். பழம் தருகிறேன்; மிட்டாய் தருகிறேன்” என்று நாம் கூறும் போது நாம் அவைகளை உண்மையிலேயேக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. இவ்விதம் செய்வது பொய்யென்றும் அது தமது செயல் ஏட்டில் பதிவு செய்யப்படும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்படி இருக்க, குர்ஆனின் போதனைக்கு ஏற்பவும் நபிவழிக்கு ஒத்தும் வாழ்ந்தவராக அவர்களே புகழும் அபூ ஹனீபா(ரஹ்) அவர்கள் கையில் கல்லை வைத்துக் கொண்டு அதை பிறர் தங்கம் என்று நம்பும் படி செய்யும் ஆற்றல் படைத்தவர் என்று கூறுவது அடுக்குமா? இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் அவ்விதம் செய்ததாக கூற வில்லையே, அத்தகைய அறிவாற்றல் படைத்தவர்கள் என்றுத் தானே மவ்லவி கே.ஏ.என். அவர்கள் கூறியுள்ளார்கள் என்று வாதாடினால், அதைத் தான் மாபெரும் தவறு என்று இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்று கூறுகிறோம். பொய்யைக் கூற வேண்டும் பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இமாம் அபூஹனீபா அவர்களுக்கு இருந்திருக்க முடியாது என்பதில் எங்களுக்கு எள்ளவும் சந்தேகம் இல்லை.

கண்ணியத்திற்குரிய இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் அறிவாற்றலைச் சிலாகித்துப் பேசுவதாக மக்களை நம்பச் செய்ய மவ்லவி கே.ஏ.என் எடுத்தாண்ட முறையின் நோக்கத்தைப் பற்றியும், அதன் பின்விளைவுகளைப் பற்றியுமே நாம் உங்களைச் சிந்திக்கும்படி வேண்டுகிறோம். கல்லைத் தங்கம் எனப் பிறரை நம்ப வைப்பது பொய்யுரைப்பது அல்லது இவ்விரண்டும் கலந்த செயலாகவே கருதப்படும் அல்லவா? இதை அறியாமல் மவ்லவி கே.ஏ.என் அவர்கள் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களைப் பற்றி இவ்விதம் பேசுவது அவரது அறியாமையை  வெளிப்படுத்துவதோடு அவர் அறிந்தோ அறியாமலோ இமாம் அவர்களை அவமதித்ததாகவும் ஆகாதா?

ஒரு பொருளை அதன் வெளித்தோற்றம், கண்ட மாத்திரத்தில் உணரும் அதன் தன்மைகள் இயல்புகள் இவைகளைக் கொண்டு அது இன்னப் பொருள் என்று தெளிந்து அறிந்துக் கொள்ள முடியாதவனை விவேகமில்லாதவன் என்று கூறுவோம். ஆனால் தன் கைவசமுள்ள ஒரு பொருளை இது இன்னப் பொருள் என்றுத் தெளிவாகவும் துல்லியமாகவும் அறிந்துக் கொண்ட பிறரை, அப்பொருளை அதல்லாத வேறுப் பொருளாக-தன் சொல் வன்மையாலோ மற்றும் வேறு திறமையாலோ நம்பச் செய்பவரை “ஏமாற்றுக்காரன் அல்லது பித்தலாட்டக்காரன்” என்றுதானே அழைப்போம். எந்தச் சூழ்நிலையிலும் இத்தகைய செயலை நாம் நியாயப்படுத்த முடியுமா? எனவே இப்போது சிந்தித்து ஆராய்ந்து தீர்வுக் கூறுங்கள். மவ்லவி கே.ஏ.என. மன்பஈ அவர்கள் இமாம் அபூஹனிபா(ரஹ்) அவர்களைப் புகழ்ந்தாரா? இகழ்ந்தாரா?

ஒரு மனிதனுடைய உயர் பண்புகளும் மாண்புகளும் கேட்பவர் மனதில் பதிய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவருடைய தனிச் சிறப்புகளையும் மேம்பாட்டையும் எடுத்துக் கூற நாடினால், கூறுபவை வரலாற்று வாய்மைகளாக இருக்க வேண்டும். மாறாக கட்டுக்கதைகளில் இருந்தோ, புனையப்பட்ட புராணங்களிலிருந்தோ, அல்லது தன் யூகத்திலும், கற்பனையிலும் உதித்தவைகளையோ எடுத்துரைத்தால் அது கேட்பவர் மனதில் ஆழப்பதியாது. தன்னைச் செவிமடுப்பவர் பேசுபவரின் சொல்வன்மையால் தற்காலிகமாக உணர்ச்சிவசப்படச் செய்யலாம். ஆனால் அவ்வுணர்ச்சி தோன்றிய வேகத்திலேயே மறைந்துவிடும்.

முஸ்லிம்கள் உண்மையை உள்ளது உள்ளபடி மிகைப்படுத்தாமல் கூறக் கடமைப்பட்டுள்ளார்கள்; அங்ஙனமே ஒருவரைப் புகழும்போது மிகைப்படுத்திக் கூறாமலிருக்க கட்டளையிடப்பட்டுள்ளார்கள்.

ரசூல்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

மர்யம்(அலை) அவர்களின் குமாரர் ஈஸா(அலை) அவர்கள் விஷயத்தில் கிறித்தவர்கள் செயல்பட்டதுப் போல் என்னைப் புகழ்வதற்காக மிகைப் படுத்திக் கூற முற்படாதீர்கள். நான் ஒரு (இறை) அடிமையே. எனவே என்னைப்பற்றிக் குறிப்பிடும்போது, அவர் ஒரு இறைத்தூதரும் அடிமையும் ஆவர் என்றுக் கூறுங்கள். (உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

புகழும் போது மிகைப்படுத்திக் கூறுபவர்களில் முகத்தில் புழுதியை வாரி இறையுங்கள்; என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (மிக்தாதுப்னுல் அஸ்வத்(ரழி), முஸ்லிம்)

இந்த நபிமொழிகளை உரைக்கல்லாகக் கொண்டு மவ்லவி கே.ஏ.என். அவர்களின் கூற்றை கவனித்து அதன் தரத்தை நிர்ணயம் செய்யுங்கள். இது மட்டுமா, ஒரு வெள்ளிக்கிழமை ஜும்மா பயானில் இதே மெளலவி கே.ஏ.என. இதே சமயம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் ஈகைக் குணத்தைப் பற்றிக் கூறியதை கவனியுங்கள்.

பெரும் வியாபாரியும் செல்வ சீமானுமாகிய இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள்; தங்கள் கடையில் இருந்தபோது, ஒருவர் அவர்களிடம் உதவி நாடி வந்தார். அபூஹனீபா(ரஹ்) அவர்களின் ஈகைகுணத்தைப் பற்றிக் கூறியதை கவனியுங்கள்.

பெரும் வியாபாரியும் செல்வசீமானுமாகிய இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள்; தங்கள் கடையில் இருந்தபோது, ஒருவர் அவர்களிடம் உதவி நாடி வந்தார். அபூஹனீபா(ரஹ்) அவர்கள் பணப்பெட்டியிலிருந்து இடது கையால் பணத்தை எடுத்து ஈந்தார்கள். அருகிலிருந்த வேறொருவர் அபூஹனீபா(ரஹ்) அவர்களிடம் “நீங்கள் இடது கையால் பணம் கொடுத்தது நபிவழி(சுன்னத்து)க்கு மாறாக இருக்கிறதே” என்று கூறினார்கள். அபூஹனீபா(ரஹ்) அவர்கள் “பெட்டி எனது இடப்பக்கம் இருந்தது. நான் வலது கையால் பணம் எடுத்துக் கொடுப்பதற்குள் என் மணம் மாறி விடலாம். எனவே தான் இடது கையால் எடுத்துக் கொடுத்தேன் என்று சொன்னார்கள்.

இந்நிகழ்ச்சி வரலாற்று உண்மையாக இருக்க முடியுமா? இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களை இத்துணை சபலபுத்தியுள்ளவராக, திடச்சித்தம் இல்லாதவராக சித்தரிக்கும் கதைகளைக் கூறும் மவ்லவி சிந்திக்க வேண்டாமா? இவர் இவ்விதக் கதைகள் மூலம் இமாம்களை கண்ணியப்படுத்துகிறாரா? இழிவுப்படுத்துகிறாரா? சிந்தியுங்கள்.

இமாம்களை அவர்களின் நேர்மைக்காக, இறையுணர்விற்காக, உம்மத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக, அறிவாற்றலுக்காக நாங்கள் மதிக்கின்றோம்; கண்ணியப் படுத்துகின்றோம். என்றும் எவ்விடத்தும் அவர்களின் தரமும் தகுதியும் மாசுபடும் வகையில் பேசுவதில்லை; எழுதுவதில்லை. ஆனால் அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதை குர்ஆன் ஹதீதுகள் தரும் போதனையின் அடிப்படையில் மறுக்கின்றோம்; நாம் பின்பற்ற வேண்டியது குர்ஆனையும், நபி வழியையுமே என்கின்றோம். அது இறை தந்த கட்டளை:-

எவர்கள் மெய்யாகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபடுகின்றார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், சாத்தியவான்கள், உயிர்தியாகிகள், நல்லொழுக்கமுடையவர்கள், முதலியவர்களுடன் வகிப்பார்கள். இவர்கள் தான் மிக்க அழகான தோழர்கள்.                (4:69)

மவ்லவி கே.ஏ.என். நிஜாமுத்தின் அவர்கள் இந்த இறைவசனத்தை எடுத்தோதும் போது “வமன் யுத்தியில்லாஹ் வரசூலுஹு” (எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும்) என்பதை விட்டு ஓதி தமிழில் பொருள் கூறும் போது முன்னோர்களை பின்பற்றுவோர்கள் என்று ஆரம்பித்து முடிக்கிறார். இது உண்மையை(ஹக்கை) மறைத்ததாகாதா?

உண்மையை உள்ளபடி எடுத்துரைக்கும் எங்களைக் குழப்பவாதி என்று மக்களை நம்பசெய்ய பிரயத்தனம் செய்யும் மவ்லவி கே.ஏ.என். அவர்கள் அல்லவா திருமறையின் வசனத்தை இவ்விதம் மறைத்தும், தம் வாதத்தை நிலைநாட்ட திரித்தும் கூறி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார். அவருக்கு இரண்டு இறை வசனங்களை நினைவு கூறி நிறைவு செய்கின்றோம்.

“அல்லாஹ் இறக்கிய(இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் அதற்கு அவர்கள் ‘அன்று எங்கள் மூதாதையர்கள் எதன்மீது இருக்கக் கண்டோமோ அதனையே பின்பற்றுவோம்” என்றுக் கூறுகின்றனர். அவர்களை ஷைத்தான் கொழுந்துவிட்டு எரியும் வேதனையின் பால் அழைத்தாலுமா?” (17:21)

(நபியே!) இன்னும் சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது, நிச்சயமாக அசத்தியமானது அழிந்துப் போவதேயாகும் என்று கூறுவீராக.                                        (17:81)

Previous post:

Next post: