இறைவனால் இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்!

in 1990 ஜூன்

இறைவனால் இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்!

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையேப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7:3)

அல்லாஹ்(ஜல்) வின் இவ்வேத வசனத்தின் கருத்தின்படி நாம் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும் அவனால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்களை மாத்திரமே பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக மற்றவர்களைப் பாதுகாவலர்களாக நம்பி பின்பற்றுவோமேயானால் நிச்சயமாக நாம் பகிரங்கமான வழிகேட்டிலேயே ஆகிவிடுவோம்.

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இல்லாத பித்அத்துக்கள் ஆகும். பித்அத்து அனைத்தும் வழிகேடுகளே. வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்.
அறிவிப்பு : இப்னு மஸ்வூத்(ரழி)நூல் : புகாரீ, முஸ்லிம்

எனவே நபி(ஸல்) சொல்லாத, செய்யாத, அங்கீகரிக்காத அனைத்து செயல்களும் நம்மை நரகிற்கு இட்டுச் செல்லும் வழிகேடான செயல்களே! ஆனால் இன்று முஸ்லிம்கள் இந்த பித்அத்தான-வழிகேடான செயல்கள் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காமல் வாழ்கின்றனர். அவர்கள் இதன் கடுமையை உணரவேண்டும்.

மார்க்கம் என்பது அல்லாஹ்வால் ஏற்ப்படுத்தப்பட்டது. மார்க்கத்தில் உள்ள அமல்களையும் சட்டதிட்டங்களையும், ஏவல், விலக்கல்களையும் ஏற்ப்படுத்தி நபி(ஸல்) மூலமாக அல்லாஹ் நமக்கு அருள செய்தான். இது அல்லாஹ்வின் தனித்தன்மையாகும். எவ்வாறு “வணக்கத்திற்குரியவன்” என்பது அல்லாஹ்விற்கு மட்டும் உரிய தனித்தன்மையோ, அதுபோல மார்க்கத்தில் கட்டளையிடுதல் என்பதும் அல்லாஹ்வின் தனித்தன்மையில் உள்ளதாகும். நபி(ஸல்) அவர்கள் கூடத் தன் விருப்பத்திற்கிணங்க  எந்த செயல்களையும் மார்க்கமாக அறிவித்துவிட முடியாது.

“அவர்தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. மிக்க வல்லமையுடையவர்(ஜிப்ரயீல்) அவருக்கு கற்றுக்கொடுத்தார். (53:3-5)

என்பதாக அல்லாஹ் கூறுகிறான். அப்படியே ஒரு சமயம் தங்களுடைய மனைவிமார்களின் விருப்பத்திற்காக ஒரு பொருளை தனக்கு ஹராமாக்கிக் கொண்டதற்காக உடனே கண்டித்து அல்லாஹ் ஆயத்தை இறக்கி வைத்தான்.

“நபியே! உம் மனைவியர்களின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன் (66:1) என்பதாகும்.

அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் மீது அதிக பிரியமுடையவன். அத்தகைய பிரியமுள்ள நபியே சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அல்லாஹ், நபி(ஸல்) கூறியதை அனுமதித்திருக்கலாம் அல்லவா?  ஏன் அனுமதிக்கவில்லை? ஏனென்றால் மார்க்கத்தில் ஹலால், ஹராமை ஏற்ப்படுத்துவது அல்லாஹ்வின் தனித்தன்மை! இதில் தன்னுடைய பிரிய நபியையே குறுக்கிட அனுமதிக்கவில்லையென்றால் இன்று இமாம்களின் பெரியார்கள். முன்னோர்களின் பெயரால் நபி(ஸல்) காட்டித்தராத செயல்களை எல்லாம் மார்க்கமாக எண்ணிச் செயல்படுவதை அல்லாஹ் எவ்வாறு ஏற்றுக் கொள்வான்? இதனை சிந்திக்க வேண்டாமா?

மேலும் நபி(ஸல்) காட்டித்தராத செயல்களை எல்லாம் நன்மை என எண்ணிச் செய்தால் இந்த நன்மையான செயல்களை நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்ட மறந்துவிட்டார்களா? அல்லது மறைத்துவிட்டார்களா? அல்லது அவர்களுக்கே அது நன்மையான செயல் என்று தெரியாமல் போய்விட்டதா? இது நபி(ஸல்) அவர்களின் தூதுவத்தையே களங்கப்படுத்தக் கூடிய எவ்வளவு பெரிய கொடுஞ்செயல் என்னவென்றால் இது இதுவெல்லாம் மார்க்கம், நன்மையான செயல் என்று அல்லாஹ்வுக்கே இவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள் போலும்.

அல்லாஹ் முக்காலத்தையும் அறிந்தவன் இன்று இவர்கள், நபி(ஸல்) செய்து காட்டாத எந்தெந்த (பர்ளு தொமுகைக்குப் பின் கூட்டு துஆ போன்ற) செயல்களை எல்லாம் நன்மை என்று எண்ணிச் செய்கின்றார்களோ இதனையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே உள்ளான். அப்படியிருக்க, இவர்கள் செய்யும் இச்செயல்களெல்லாம் அல்லாஹ்விடத்தில் நன்மையான விஷயங்களாக இருக்குமேயானால் நபி(ஸல்) அவர்களை இச்செயல்களை செய்யும்படி அல்லாஹ் ஏவியிருக்கமாட்டானா? ஏவியிருப்பானே? அப்படியெனில் ஏன் ஏவவில்லை? இச்செயல்களெல்லாம் தன்மையானது என அல்லாஹ்விற்கே தெரியாமல் போய்விட்டதா? (நவூது பில்லாஹ்) எனவே இவர்களின் இச்செயல்கள் அல்லாஹ்வின் தன்மையையே குறை கூறக்கூடிய எவ்வளவு பெரிய செயல் என்பதை எண்ணிப்பாருங்கள்.

இத்தகையோரைப் பற்றித்தான் அல்லாஹ் குர்ஆனில்,

“நீங்கள் உங்கள் மார்க்கம்(வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க்க விரும்பு)கிறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகின்றான்-அன்றியும் அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகின்றவன் என்று(நபியே! ) நீர் கூறும் (49:16) என்பதாகக் கூறுகின்றான்.

எனவே அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு மார்க்கத்தை முழுமையாக அருளியபின், அவர்கள் செய்து காட்டாத செயல்களை எல்லாம் இமாம்கள், பெரியோர்கள், முன்னோர்கள் செய்தார்கள் என்பதாக இட்டுக்கட்டி கூறும் மெளலவிகளின் பேச்சுக்களை நம்பி, சிந்திக்காமல் கண்மூடித் தனமாக பின்பற்றுவீர்களேயானால் அல்லாஹ்வை விட்டு இம்மெளலவிகளை இறைவனாக ஏற்றுக் கொண்டவர்களாகி விடுவீர்கள்!

அவர்கள் அல்லாஹ்வை விட்டும், தம் பாதிரிகளையும், தம சந்ததிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹைபும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். (9:31)

என்ற வசனத்தை ஓதக் கேட்ட அதிய்யு பின் ஹாத்திப்(ரழி) என்ற ஸஹாபி, “அவர்கள், அவர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே”. என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நிச்சயமாக அவர்கள் ஹலாலை ஹராமென்றும், ஹராமை ஹலால் என்றும் ஆக்கி வைத்திருக்க இவர்கள் அவர்களை பின்பற்றிச் செயல்படுகின்றனர். ஆகவே இதுதான் இவர்கள் அவர்களை வணங்குகிறார்கள் என்பதற்கு பொருள்” என்றார்கள். அறிவிப்பு : அதிய்யுபின் ஹாத்திம்(ரழி)  நூல்: திர்மிதீ, அஹ்மது, இப்னுஜரீர்

விஷயம் இவ்வாறிருக்க இன்று மத்ஹபுகளில் பிரிவினையை ஏற்ப்படுத்தியும் ஒரு சாரருக்கு ஹராம் என்றும் மற்றொரு சாரருக்கு ஹலால் என்று உணவுகளில் கூட சில பிரிவினைகளை ஏற்ப்படுத்திவிட்டார்கள். ஹனபிகளுக்கு உடும்பு ஹராம் என்றும் மற்றொரு சாரருக்கு ஹலால் என்று உணவுக் கூடங்களில் கூட சில பிரிவினைகளை ஏற்ப்படுத்தி விட்டார்கள் ஹனபிகளுக்கு உடும்பு ஹராம். ஷாபிகளுக்கு ஹலால். ஹனபிகளுக்கு மயில் ஹலால். ஷாபிகளுக்கு ஹராம். ஹனபி ஸாபிகளுக்கு கரடி ஹராம். மாலிக் ஹம்பலிக்கு ஹலால் என்றும் ஆக்கி வைத்து (நூல் : குர்ஆனின் குரலின் பிக்ஹின் கலைக்களஞ்சியம்(?)) மத்ஹபிற்கு மத்ஹபு தொழும் முறை நபி(ஸல்) சுன்னத்திற்கு மாற்றமாக ஏற்ப்படுத்தியிருப்பதை அப்படியே, மத்ஹபுகளின் பெயரால் மெளலவிகள் கூறும் கூற்றை நம்பி கண்மூடித்தனமாக சிந்திக்காமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே, இவைகள் மேற்கூறப்பட்ட இறைவசனங்கள், ஹதீதுகளின் படி பச்சை ஷிர்க் அல்லவா?

இதனையே, உத்தமபாளையம் P.S.K முஹம்மது இப்ராஹிம் அவர்களால் மொழிப் பெயர்க்கப்பட்டு இன்றைய அனைத்து மதரஸாக்களாலும் மதிக்கப்படும் லால்ப்பேட்டை, மவ்லவி ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ (லேட்) அவர்களால் பார்வையிடப்பட்டு 1986-ல் வெளியிடப்பட்ட “மிஷ்காத்துல் மஸாபிஹ்” தொகுதி 1 என்ற நூலில் பக்கம் 4aயில், மேலேக் குறிப்பிட்ட குர்ஆன் 7:3வது வசனத்திற்கு விளக்கம் கூறுவதைப் பாருங்கள்.

இத்திருவாக்கை விளக்கும் அலாவுத்தீன், தமது தப்ஸீர் கா(க்)கான், வால்யூம்2, பக்கம் 171-ல் கூறுவது வருமாறு:- குர்ஆனையும் அதனோமு நபிபிரானுக்கு அருளப்பட்டதையும் பின்பற்றுக. அஃதாவது குர்ஆனையும் ஹதீதையும் பின்பற்றுக”.

அல்லாமா ஸனாஉல்லாஹ் பாணிபட்டீ தமது தப்ஸீர் மஜ்ஹரியில் இந்த திருவாக்கை விளக்கிக் கூறுவது வருமாறு:-

“ஒரு விஷயத்தில் ஓர் இமாம் அல்லது ஒரு மேதாவியின் கூற்றை, நபியின் வாக்கை காட்டினும் ஏற்றமாய்க் கொண்டு நாம் பின்பற்றினால் நாம் அல்லாஹ்வுக்கு பதிலாக வேறு இரட்சகர்களை பின்பற்றினவர் ஆவோம்.”

என தெள்ளத் தெளிவாக அவர்களது நூல்களிலேயே விளக்கியிருந்தும் இவ்விஷயங்களை அறிந்துக் கொண்டே மறைக்கின்றார்கள் என்றால் இன்னமும், இம்மெளலவி வர்க்கத்தினரின் சுய நலத்திற்கு ஆட்பட்டு அவர்களை நம்பி வழிகேட்டிலாகி நரகத்தில் புகவும் வேண்டுமா?

எவனொருவன் நேர்வழி இன்னதென்று தனக்கு தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வின்) இத்தூதரைவிட்டுப் பிரிந்து, முமின்களின் வழி அல்லாத வேறு வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு, நரகத்திலும் அவனை நுழைய செய்வோம்; அதுவோ சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.(4:115)

எனவே நாம் இமாம்கள், பெரியார்கள், முன்னோர்களின் பெயரால் மார்க்கத்தில்  இட்டுக்கட்டி அதனைக் கண்மூடித்தனமாக பின்பற்ற சொல்லும் மெளலவி வர்க்கத்தினரை நம்பிச் செயல்படாமல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தையும், அவனால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான வாழ்க்கையின்படி வாழக் கூடிய மக்களாக வாழ வல்ல அல்லாஹ்(ஜல்) நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக! ஆமின்.

Previous post:

Next post: