ஐயமும், தெளிவும்
ஐயம் : தஸ்பீஹ் தொழுகைக்கு ஹதீஸ்களில் முறையான ஆதாரம் உண்டா? ஷேக்தாவூத், சுப்ரமணியபுரம், திருச்சி. எம்.எல்.எம் ஸாபிர் மன்வானை, கொழும்பு
தெளிவு : இது சம்பந்தமாக அபூதாவூத், இப்னுமாஜ்ஜா ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர் தொடரில் “முஸப்னு அப்தில் அஜீஸ்” என்பவரும், “ஹக்கமுப்னு அஃப்பான்” என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவ்விருவருமே பலஹீனமானவர்கள் என்று ஹதீஸ் கலாவல்லுநர்கள் கூறுகிறார்கள். இமாம் அஹ்மது பின் ஹம்பல்(ரஹ்) அவர்களிடம் தஸ்பீஹ் தொழுகைப் பற்றிக் கேட்கப்பட்ட போது, அதற்கு அவர்கள், இதற்கு ஆதாரமே கிடையாது என்று கூறியுள்ளார்கள்.
ஆனால் இது சம்பந்தமாக ஹதீஸ் நூல்களை அலசிப்பார்க்கும் போது ஹாக்கிம் அவர்களின் “அல்முஸ்தத்ரக்” எனும் நூலில் பாகம்1, பக்கம் 319ல் கீழ்காணும் அமைப்பில் ஒரு ஹதீஸ் பதிவாகியிருப்பதோடு, அது ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.
* நபி(ஸல்) அவர்கள் “ஜஃபர்பின் அபீதாலீப்” அவர்கள் அபிசீனியாவுக்கு அனுப்பிவிட்டு, அவர் திரும்பி வந்தவுடன் அவரைக் கட்டித்தழுவி அவருடைய இருக் கண்களுக்கு மத்தியில் முத்தமிட்டு விட்டு பின்வருமாறு கூறினார்கள்: நான் உமக்கு ஓர் அன்பளிப்பு செய்யட்டுமா? உமக்கு ஓர் நற்செய்திக் கூறட்டும்மா? ஒரு நன்கொடை அளிக்கட்டுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! “சரி” என்றார்கள். அப்போது அவரை நோக்கி நீர் 4 ரகா அத்துக்களை நபீலாகத் தொழ வேண்டும்.
அவ்வாறுத் தொழும்போது ஒவ்வொரு ரக்ஆத்திலும் “அல்ஹம்துவையும் மற்றொரு சூராவையும் ஓதிவிட்டு, ருகூஃ செய்வதற்கு முன்னால் நீர் நின்ற நிலையில் “சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ்” என்று 15 முறை ஓதிவிட்டு பிறகு நீர் ருகூஃ செய்ய வேண்டும். அப்போது (ருகூஃவில்) 10 முறை ஓத வேண்டும்.
இவ்வாறே இரண்டாவது ரகாஅத்தைத் துவங்கும் போது அந்த முதல் ரகாஅத்து முழுவதிலும் (ஒவ்வொருக் கட்டத்திலும் 10 முறை) ஓதிக் கொள்ள வேண்டும். இவ்வாறே 2-வது 3-வது ரகாஅத்துக்களிலும் நான் கூறியப்படி செய்துக் கொண்டு, இறுதியாக 4-வது ரக்ஆத்தையும் நிறைவு செய்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். (இப்னு உமர்(ரழி), ஹாக்கிம்)
தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமான மேற்காணும் இந்த ஒரே ஹதீஸ் தான் ஸஹீஹானதாகவும், எத்தகைய அப்பழுக்கற்றதாகவும் திகழ்கிறது.
ஐயம் : சவூதி அரேபியாவில் பள்ளியில் தொழும்போது சிலர் தமது பாத அணிகளோடு தொழுகிறார்கள். இவ்வாறுத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? என். எம். ஜுபைர்(இலங்கை), ரியாத்.
தெளிவு: ஒரு முறை நான் அனஸ்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் தமது பாத அணி செருப்புகளுடன் தொழுதுள்ளார்களா? என்றுக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆமாம்.என்றார்கள். (அபூமஸ்லமா ஸயீதுபின் யஜீத்(ரழி),புகாரீ)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு தொழ வைத்துக் கொண்டிருக்கும் போது, தமது பாத அணிகளைச் சுழற்றி, தமது இடப்பக்கம் வைத்தார்கள். அப்போது (அவர்களுடன் தொழுதுக் கொண்டிருந்த) மக்களும் தமது பாதஅணிகளைச் சுழற்றி வைத்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தமது தொழுகையை நிறைவு செய்து விட்டு, (அவர்களை நோக்கி) ஏன் உங்கள் பாதஅணிகளை சுழற்றி வைத்தீர்கள் என்றார்கள். அதற்கு அவர்கள் நீங்கள் பாத அணிகளைச் சுழற்றுவதைப் பார்த்து நாங்களும் எங்கள் பாத அணிகளை சுழற்றி வைத்து விட்டோம் என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் வந்து அவற்றில் அசுத்தம் இருப்பதாக கூறினார்கள் என்றார்கள். (அபூஸயீதில் குத்ரீ(ரழி), அபூதாவூத்)
ஆகவே மேற்காணும் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு செருப்புகளை அணிந்த நிலையில் தொழுவது ஆகும் என்பதை அறிகிறோம். அவற்றில் அசுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஐயம் : அத்தஹிய்யாத்தின் போது கலீமா விரலை அசைப்பதற்கும், அசைக்காமல் இருப்பதற்கும் உள்ள ஹதீஸ்கள் மிஷ்ரத்தில் அடுத்தடுத்து பதிவாகியுள்ளன. ஆனால் விரலை அசைப்பதற்கான ஹதீஸ் அபூதாவூதில் பதிவாகியுள்ளதாக “மிஸ்காத்” ஆசிரியர் சுட்டிக்காட்டியிருந்தும், இங்குள்ள மல்லவிகள் அவ்வாறு அபூதாவூதில் கிடையாது என்று கூறுகிறார்கள், ஆகவே அபூதாவூதில் அது சம்பந்தமான ஹதீஸ் உண்டா? இல்லையா? என்பதைத் தெளிவுப்படுத்தவும், ஷேக் முஹ்யுத்தீன், பேட்டை.
தெளிவு: மிஷ்காத்தில் விரலை அசைப்பதற்கான அறிவிப்பு அபூதாவூதிலும், தாரமீயிலும் இடம் பெற்றிருப்பதாகவே சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. தாரமீயில் பாகம் 1, பக்கம் 315 ல் முழுமையாக அதன் வாசகமும், அபூதாவூதில் பாகம்1 பக்கம் 193 “பாபு ரஃபியில் யதைன்” எனும் பாடத்தில் 726,727-வது ஹதீஸ்களில் அதன் கருத்தில் வேறு வாசகமும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
விரலை அசைத்தல், அதை அசைக்காமல் இருத்தல் ஆகிய இரு வகையான ஹதீஸ்களும் ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றிருப்பினும், விரலை அசைப்பதற்கான ஹதீஸே பலம் வாய்ந்ததாக உள்ளது ஏனெனில் விரலை அசைக்காமல் இருப்பதற்கான ஹதீஸ் உடைய அறிவிப்பாளர் தொடரில் ” முஹம்மது பின் அஜ்லான்” எனும் பெயருடைய நம்பகமற்ற ஒருவர் இடம் பெற்றிருப்பதால் அந்த அறிவிப்பு பலஹீனமாகி விடுகிறது.
இது மட்டுமின்றி விரலை அசைக்காமல் இருப்பதற்கான அறிவிப்பானது, ஒரு விஷயத்தை அது நடக்கவில்லை என்பதாக மறுக்கிறது. ஆனால் விரலை அசைப்பதற்கான அறிவிப்போ அவ்விஷயம் நடந்துள்ளதாக ஊர்ஜிதம் செய்கிறது.
இவ்வாறு இரு அறிவிப்புகள் முரண்படும் சந்தர்ப்பத்தில் ஒரு விஷயத்தை நடக்கவில்லை என்பதாக கூறும் அறிவிப்பை விட்டுவிட்டு, அவ்விஷயம் நடந்துள்ளதாக ஊர்ஜிதம் செய்யும் அறிவிப்பையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கலாவல்லுநர்களின் முடிவாகும். இது சம்பந்தமான முழு விபரங்களை அந்நஜாத் 89, ஜனவரி இதழில், “நபி வழியில் நம் தொழுகை” பகுதியில் காண்க!
ஐயம் : “தக்வா”வின் சிறப்பம்சம் என்ன? எம். முஹம்மது காசிம், பொறையாறு
தெளிவு: “தக்வா” என்பது பயபக்தி, இறை உணர்வு, பாவ தடுப்பு சக்தி முதலியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதோர் சிறப்புத் தன்மையாகும். “தக்வா” வுடன் செய்யப்படும் அமலுக்குத்தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் உள்ளது. “அல்லாஹ் (அமல்களை) ஏற்றுக் கொள்வதெல்லாம் “தக்வா” பயபக்தி-இறையுணர்வு உள்ளவர்களிடமிருந்துதான்” (5:27) என்று குர்ஆன் கூறுகிறது.
ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு அமலிலும் “தக்வா” இருந்தாக வேண்டும். இல்லையேல் அதன் பலனை அடையும் வாய்ப்பினை இழக்க நேரிடும்.
*. “ஓர் அடியான் பாவமில்லாதவற்றையும் அவை பாவமாக இருந்து விடுமோ என்று பயந்து அவற்றை விட்டொழிக்கும் வரை “முத்தக்கீன்” என்ற உயர் நிலையை தான் அடைந்துக் கொள்ள முடியாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அத்திய்யத்துஸ் ஸஃதீ(ரழி), திர்மீதி, இப்னுமாஜ்ஜா)
“தக்வா” ஒருவருடைய உள்ளத்தில் ஏற்ப்பட்டு விட்டால், அவர் சதா காலமும் தாம் அல்லாஹ்வின் முன்னிலையில் இருப்பதான் உணர்வு அவருக்கு உண்டாகி விடுகிறது. அதன் காரணமாக அவர் தாம் செய்யும் ஒவ்வொருக் காரியத்தையும் அது பாவமாக இருந்து விடக் கூடாது என்ற வகையில் மிகவும் எச்சரிக்கையாக இருந்துக் கொள்வார்.
ஐயம் : ஹதீஸ் குத்ஸீ என்றால் என்ன? ஹதீஸுக்கும், ஹதீஸ் குத்ஸீக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன? ஏ. அப்துஸ்ஸலாம், மஞ்சக் கொல்லை.
தெளிவு : “ஹதீஸ் குத்ஸீ” என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு கனவின் மூலமாகவோ அல்லது உள்ளத்தில் உதிப்பை உண்டு பண்ணுவதன் மூலமாகவோ அல்லது மலக்கின் மூலமாகவோ கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு, அவற்றை நபி(ஸல்) அவர்கள் தமது சொந்த வார்த்தைகளால் அறிவிக்கும் விஷயங்களாகும்.
“ஹதீஸ்” என்பது நபி(ஸல்) அவர்களின் சொற்செயல் அங்கீகாரம் ஆகியவைகளாகும். ” குர்ஆன்” என்பது வஹீயின் மூலமாக கருத்துக்களை அறிவிப்பதோடு, அவற்றுக்குரிய வாசகத்தையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வஹீயின் மூலமாக அறிவிக்கப்படும் ஒன்றாகும்.
ஐயம் : ரமழான் மாத இரவுத் தொழுகைக்கு “தராவிஹ்” என்று நிய்யத்து வைக்க வேண்டுமா? அல்லது “இரவுத் தொழுகை” என்பதாக நிய்யத்து வைக்க வேண்டுமா? இத்தொழுகையை வீட்டில் தொழுதுக் கொள்ளலாமா? ஏ. ஸாஜிதா, இலங்கை.
தெளிவு : “தராவிஹ்” தொழுகை என்றோ, “இரவுத் தொழுகை” என்றோ நிய்யத்து வைக்க வேண்டியத் தேவையில்லை. அது சுன்னத்தான தொழுகையாயிருப்பதால் “சுன்னத்து” என்பதாக நிய்யத்து வைக்க வேண்டியத் தேவையில்லை. அது சுன்னத் தான் தொழுகையாயிருப்பதால் ” சுன்னதத்து” என்னத்து என்பதாக நிய்யத்து வைத்துக் கொள்வதே முறையாகும். இத்தொழுகையை வீட்டிலும் தொழுதுக் கொள்ளலாம். ஜமாஅத்துடன் தொழுதால் 27 மடங்கு அதிகம் நன்மை உண்டு என்பதானது பர்ளு தொழுகையை ஜமாஅத்தோடு தொழும் போது தான் என்றறிக!
ஐயம் : அல்லாஹ்வுடைய அனைத்து வசனங்களையும் ஏற்று ஒரு வசனத்தை மட்டும் மறுப்பவனின் நிலை என்ன? ஏ. ஸாஜிதா, இலங்கை
தெளிவு : அல்லாஹ்வின் அனைத்து வசனங்களையும் ஏற்காதவர் மூமினாக இருக்க முடியாது.
ஐயம் : திருமறையில் ஒரே வசனம் பல இடங்களில் வருகிறதே. அல்லாஹ் வஹீ அறிவிக்கும்போது ஒருமுறை சொன்ன ஆயத்தை மறுமுறையும் சொல்லி அனுப்பினானா? அல்லது திருமறை தொகுக்கும் போது அவ்வாறு தொகுக்கப்பட்டதா? பத்ஐன்னிஸா அஷ்ரப்அலி,சென்னை-35
தெளிவு : திருக்குர்ஆனில் ஒரு சில வசனங்கள் திரும்பி திரும்பி வருவதைக் காண்கிறோம். குறிப்பாக அல்லாஹ்வுக்கு இணை வைப்புப் பற்றிய விஷயம், அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டிய அவசியம் போன்றவை திரும்ப திரும்ப கூறப்பட்டுள்ளது. உதாரணமாக இந்த இதழின் 9-ம் பக்கத்தை பார்வையிடுங்கள். அல்லாஹ்வை வணங்க வேண்டும், அவனது தூதரைப் பின்பற்ற வேண்டுமென நமக்கு மட்டுமல்ல,
ஆதம்(அலை) முதல் கடைசி நபி முஹம்மது(ஸல்) வரை சொல்லப்பட்டது. இது ஒரு அத்தியாயத்தில் அல்ல, பல அத்தியாயங்களில் வந்துள்ளது. வெவ்வேறு காலக் கட்டங்களில் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அப்படியே நமக்கு தந்துவிட்டு சென்றார்கள் நபி(ஸல்) அவர்கள்.
எதனையும் கூட்டவோ, குறைக்கவோ இல்லை. சூரா ரஹ்மானில் சுமார் 78 வசனங்கள் உள்ளன. அதில் ஒரே வசனம் 31 தடவைகள் அந்த அத்தியாயத்தில் திரும்பித் திரும்பி வர அது 31 வசனங்களாக கணக்கிடப்பட்டுள்ளது. நாம் அடிக்கடி ஓதி வரும் அல்ஹம்து சூரா ரசூல்(ஸல்) அவர்களுக்கு இரு தடவைகள் வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதாகவும், அதனை ரசூல்(ஸல்) கூறியதாகவும் ஹதீஸ்களில் காணமுடிகிறது. எல்லா அத்தியாயங்களும் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு ஆரம்பிக்க 9வது அத்தியாயமாகிய சூரத்துத் தெளபா மட்டும் பிஸ்மில்லாஹ்வைக் கொண்டு ஆரம்பிக்கவில்லை என்பதைக் காண்க.
எனவே ரசூல்(ஸல்) அவர்கள் தம் மனோ இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை, அது அவருக்கு இறை செய்தி (வஹீ) மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (53:34) என்ற இறை வாக்குப்படி ரசூல்(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை, அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர்கள் காலத்திலேயே தொகுக்கப்பட்டது.
ஒவ்வொரு ரமழானின் போது ரசூல்(ஸல்) அந்த ரமழான் வரை இறக்கப்பட்டிருந்த குர்ஆன் வசனங்களை கடைசி பத்து நாட்களில் ஜிப்ரயில் (அலை) அவர்களிடம் ஓதிக் காட்டினார்கள். கடைசி வருடம் ரசூல்(ஸல்) இரு தடவைகள் ஓதிக் காட்டினார்கள் என்ற ஹதீஸ்களும் இதனை ஊர்ஜிதம் செய்கின்றன. எனவே தற்சமயம் நம்மிடமுள்ள குர்ஆன் ரசூல்(ஸல்) அவர்களாலேயே, அவரதுக் காலத்திலேயே தொகுக்கப்பட்டுள்ளது என்பதை அறிக. குர்ஆன் வசனம் 15:9 படி அல்லாஹ் இறக்கிவைத்த குர்ஆன் அவனே பாதுகாத்துத் தந்துள்ளான் என்பதை உணர்க. அதனை நூல் வடிவமாக்கியது பிந்தியவர்களாகும். பிந்தியவர்கள் இதில் எதனையும் சேர்க்கவோ, குறைக்கவோ இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஐயம் : பெண்கள் தமது முகத்தையும் மறைத்தாக வேண்டுமா? (ஏ. ஸாஜிதா, இலங்கை)
தெளிவு: (நபியே!) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகையும் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தம் மார்பை மறைத்துக் கொள்ள வேண்டும்.(என்று கூறுவீராக) (24:31)
ஒருமுறை அபூபக்ரு(ரழி) அவர்களின் மகள் அஸ்மா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் தன்மீது ஓர் மெல்லிய ஆடை அணிந்த நிலையில் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டு, அஸ்மாவே! ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால் இதுவும், இதுவும் நீங்குதலாக என்று தமது முகத்தையும், மணிக்கட்டு வரையுள்ள தமது கையையும் சமிக்கை செய்துக் காட்டி வேறு பகுதிகளை பிறர் பார்ப்பதுக் கூடாது என்று கூறினார்கள். (அஸ்மா(ரழி), அபூ தாவூத்)
மேற்காணும் வசனத்தையும், ஹதீஸையும் முன்வைத்து ஒரு பெண் தனது முகத்தையும், மணிக்கட்டு வரைத் தனது இருகைகளையும் தவிர மற்ற பாகங்கள் அனைத்தையும் மறைத்தாக வேண்டும் என்பதை அறிகிறோம்.
ஐயம் : “லைலத்துள் கத்ர் என்னும் புனித இரவில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்கான ஸஹீஹான ஹதீஸின் வாயிலாக ஏதேனும் துஆ உண்டா?
முஹம்மது இஸ்மாயில், மதுரை.
தெளிவு : நான் ஒரு முறை அல்லாஹ்வின் தூதரே! இதுதான் “லைலத்துல் கத்ரு” என்பதை நான் அறிந்துக் கொண்டால் நான் என்ன ஓத வேண்டும் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு ஓத வேண்டும் என கூறினார்கள். அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ”
பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிப்பவன். மன்னிப்பை விரும்புகிறவன். ஆகவே என்னை மன்னித்தருள்வாயாக! (ஆயிஷா(ரழி), திர்மீதி, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)