சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனாலும்!   

in 1990 ஏப்ரல்

சின்னஞ்சிறிய விஷயங்கள் தான் ஆனாலும்!   

அபூ ஃபாத்திமா

உண்மையிலேயே சிந்தனையாளர்களான   இவர்களுக்கு சென்ற  இதழில் பார்த்ததுப் போல் இந்த தடுமாற்ற நிலை ஏன் ஏற்ப்பட்டது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

இகாமதுத்தீன்” என்றால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் என்று இவர்களுக்குத் தவறாகப் போதிக்கப்பட்டு விட்டது. இந்த தவறான போதனை காரணமாக இவர்களது சிந்தனையெல்லாம் உலகிலுள்ள நாடுகளின் ஆட்சிகளைப் பிடிப்பதிலேயே சுழன்று வருகின்றது. அது விஷயமாக எந்த ஒரு நாட்டிலாவது எதாவதொரு முயற்சி நடந்தாலும் அது இவர்களை பெரிதும் கவர்கிறது. ஆட்சியைக் கைப்பற்றிவிட்டால் மார்க்கத்தை எளிதாக நிலைநாட்டிவிட முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை இன்றைய இஸ்லாமிய நாடுகளை இவர்கள் நோட்டமிட்டுப் பார்த்தால் புரிந்துக் கொள்ள முடியும். உலக நாடுகளின் எண்ணிக்கையில் இஸ்லாமிய நாடுகள் தான் அதிகமாக இருக்கின்றன.

ஆயினும் அந்த நாடுகளில் இஸ்லாம் நிலைநாட்டப்பட்டுள்ளதா? இகாமத்துத்தீன்-இறையாட்சி நடைபெறுகின்றதா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு சிந்திப்பார்களேயானால் மனிதன் தன்னில் இறையாட்சியை-இகாமத்துத்தீனை நிலை நாட்டாதவரை தனக்கு வெளியில் இறையாட்சியை நிலைநாட்ட முடியாது. இறையாட்சியை தன்னில் நிலைநாட்டும் ஒரு சமுதாயம் அமையாதவரை நாட்டில் இறையாட்சியை நிலைநாட்ட முடியாது. இகாமத்துத்தீன் – இறையாட்சியை நிலைநாட்டும் ஒரு சமுதாயம் அமைந்துவிட்டால் அடுத்த கனமே ஆட்சி அதிகாரம் அவர்கள் கைக்கு வந்துவிடும் என்பதை எளிதாக விளங்கமுடியும்.

பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்துச் சென்றது முஸ்லிம்களுக்கு வேண்டாத ஒரு கசப்பான சம்பவம். பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரியாமல் இருந்திருந்தால் இந்தியா இன்று உலகில் பெரும் வல்லரசாகத் திகழ்வதோடு, இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இந்தியாவில் ஒரு பிரகாசமான நிலை ஏற்ப்பட்டிருக்கும். பாக்கிஸ்தான் பிரிவதற்கு இந்து மதவாதிகளே மூலகாரணமாக இருந்தாலும் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் நிர்ப்பந்த நிலையிலும் சற்று நிதானமாக நடந்திருந்தால் அது முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் நலமாக அமைந்திருக்கும். நடந்து முடிந்த ஒன்றை அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்று ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நடந்து முடிந்ததை ஒரு படிப்பினையாகக் கொள்ளும் நோக்கத்துடனேயே இதனைக் குறிப்பிடுகிறோம்.

ஆனால் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் ஹிந்து மத வெறியர்களின் பிரிவினை வாதத்திற்கு துணை போனதற்குக் காரணம் தங்களுக்கென்றும் ஒரு தனி முஸ்லிம் நாடு அமைந்துவிட்டால் இஸ்லாத்தை-இகாமத்துத்தீனை-இறையாட்சியை நிலைநாட்டிவிட முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டது தான். இதனை பாகிஸ்தானின் 43 வருட கால அனுபவம் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. பாகிஸ்தானில் இன்றுவரை இகாமத்துத்தீன்-இறையாட்சி நிலைநாட்டப்படவில்லை என்பது உலகறிந்த உண்மை. இறையாட்சியை நிலைநாட்டப் போகிறோம் என்று கோஷமிட்டுக் கொண்டு கடந்த பாக்கிஸ்தான் தேர்தலில் போட்டியிட்டவர்களை பாகிஸ்தான் மக்கள் மண்ணைக் கவ்வச் செய்ததும், முஸ்லிம்களே இஸ்லாமிய ஆட்சியை-இகாமத்துத்தீனை விரும்பவில்லை என்று இஸ்லாமிய விரோதிகள் பத்திரிக்கைகளில் உலகம் முழுதும் செய்தியை பரப்பியதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இது இஸ்லாத்தின் குறையல்ல. இஸ்லாத்தின் போதனையை விட்டு தங்கள் மனித அபீப்ராயத்தைப் புகுத்தி இவர்கள் செயல்பட்டதேக் காரணமாகும். தனிமனிதனிடம் இறையாட்சி ஏற்ப்பட்டுவிட்டால் அந்த சமுதாயம் இறையாட்சியை நிலைநாட்டுபவர்களை நாட்டின் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுத்து விடுவார்கள் என்ற இஸ்லாமிய போதனையை தலைகீழாக்கி ஆட்சியைப் பிடித்து விட்டால் இறையாட்சியை நிலைநாட்டி விடலாம் என்று இவர்கள் தப்புக் கணக்குப் போட்டதேயாகும்.

இதனை தமது சொந்தக் கருத்தாகத் தெரிவிக்கவில்லை. நபி(ஸல்) அவர்களின் அழகிய நடைமுறைகளை வைத்தே சொல்லுகிறோம். நபி(ஸல்) அவர்கள் நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது மக்காவின் ஆட்சி அதிகாரம் குறைஷ்கள் வசமே இருந்தது. அல்லாஹ்வின் வீடான கஃபத்துல்லாஹ்வை தங்கள் மனோ இச்சையின்படி கோவிலாக்கி 360 விக்ரகங்களை வைத்து வணங்கி வந்தனர். நபி(ஸல்) அவர்கள் குறைஷ்களின் இந்தச் செயல் இறைவனுக்கு இணை வைக்கும்-அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத கொடுஞ்செயல். எனவே அதனை விட்டுவிடுங்கள் என போதித்தார்கள்.

அதாவது அந்த மக்களின் உள்ளத்தில் இறையாட்சி ஏற்பட பாடுபட்டார்கள். அதல்லாமல் கஃபத்துல்லாஹ்வை கைப்பற்றி அச்சிலைகளை எல்லாம் அகற்றி விட்டால் இறையாட்சி ஏற்பட்டு விடும் என்று கணக்குப் போடவில்லை. நான் அல்லாஹ்வின் தூதன்,  கஃபத்துல்லாஹ் அல்லாஹ்வின் வீடு. எனவே அந்த வீட்டின் அதிகாரம் எனக்கே உரியது. அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் நீஙகள் கஃபத்துல்லாஹ்வை என்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று வாதாடவில்லை. 10 பேர் இருந்தாலும்  கஃபத்துல்லாஹ்வை கைப்பற்றுவதற்காகப் போராடி மடிவதே ஜிஹாத் என்று சொல்லி குறைஷ்களை எதிர்த்து ஜிஹாதில் குதிக்கவில்லை.

ஏன் ஹுதைபிய்யா உடன்படிக்கை சமயம் நபி(ஸல்) அவர்களுடன் போராடி மடிவதற்கு உறுதி அளித்துத் தயாராக 1400 தோழர்கள் இருந்தும்  கஃபத்துல்லாஹ்வை அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் குறைஷ்கள் கையில் விட்டு வைக்கக் கூடாது என்று போராடி கைப்பற்ற எண்ணவில்லை. ஆயினும் அதற்கு முன்பு  மதீனா நோக்கி முஸ்லிம்களை அழிப்பதற்கென்று  வந்த அதே குறைஷ்களுடன் தற்காப்பு யுத்தங்கள் நடத்தி வெற்றிவாகை சூடியும் இருந்தனர். கஃபத்துல்லாஹ்வைக் கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தும் கூட அந்த முயற்சியில் நபி(ஸல்) அவர்கள் ஈடுபடவில்லை.

நபித்துவத்திற்கு பின்பும் சுமார் 21 ஆண்டுகள் கஃபத்துல்லாஹ் குறைஷ்காஃபிர்கள் வசமே இருந்தது. அதனுள் இறைவனுக்கு இணை வைக்கும் நிலையில் 360 விக்ரகங்கள் (இடையில் இப்ராஹிம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளால் வைக்கப்பட்டவை) இருந்து வந்தன. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நபி(ஸல்) அவர்கள் கஃபத்துல்லாஹ்வை நோக்கி தொழுதுக் கொண்டிருந்தனர். ஆயினும் காலம் கனியும் முன் கஃபத்துல்லாஹ்வைக் கைப்பற்ற எண்ணவில்லை. ஹுதைபியா உடன்படிக்கைக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின் பெரும் மாறுதல் ஏற்ப்பட்டது. இறையாட்சியை நிலைநாட்டும் ஒரு சமுதாயம் அமைந்துவிட்டது.

எவ்வித போராட்டமோ, இரத்தம் சிந்தலோ இல்லாமல் கஃபத்துல்லாஹ் முஸ்லிம்கள் கைக்கு வந்துவிட்டது. அங்கிருந்த இடையில் வைக்கப்பட்ட விக்ரகங்கள் எல்லாம் உடைத்தெரியப்பட்டு இறையாட்சி அங்கு நிலைநாட்டப்பட்டது. ஆக அல்லாஹ்வின் தூதருக்கே அல்லாஹ்வின் வீடான கஃபத்துல்லாஹ்விலேயே இறையாட்சியை நிலைநாட்ட 21 வருடங்கள் தேவைப்பட்டன. அதற்கு முன் அதனைக் கைப்பற்றும் கற்பனையில் நபி(ஸல்) அவர்கள் மூழ்கவில்லை என்பது தெளிவான ஒரு விஷயமாகும்.

அதுமட்டுமல்ல, மக்கா வந்து கஃபத்துல்லாஹ்வை முஸ்லிம்கள் தவஃபு செய்யும் அவர்களது உரிமைகளை குறைஷ்கள் மறுத்த சமயத்திலும், கஃபத்துல்லாஹ்வைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்காமல், குறைஷ்கள் கெளரவப் பிரச்சனை காரணமாக விதித்த நியாயமற்ற முட்டாள்தனமான கோரிக்கைகள் மூன்றையும் ஏற்றுக் கொண்டு பிரசித்திப் பெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கையைச் செய்துக் கொண்டு உம்ரா செய்யாமலேயே மதீனா திரும்புகிறார்கள். ஆட்சியை பிடிக்குமுன் மக்களிடையே இகாமத்துதீன்-இறையாட்சி ஏற்பட வேண்டும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதைவிட அழகிய முன் மாதிரி வேண்டுமா?

மக்கா வெற்றிக்கு முன் மதீனாவில் நபி(ஸல்) அவர்கள் ஆட்சி செய்துக் கொண்டிருந்தார்கள் என்று சிலர் வாதிடலாம். மதீனாவின் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியிலும் நபி(ஸல்) அவர்கள் இறங்கவில்லை. மதீனாவாசிகள் அன்சாரிகள் உள்ளங்களில் இறையாட்சி ஏற்ப்பட்டு விட்டது. அதனால் நபி(ஸல்) அவர்களை தங்கள் தலைவராக ஏற்று அவர்களுக்குக் கீழ் ஒன்றுபட்டு செயல்பட்டார்கள் என்பதே உண்மையாகும். தன்னில்  இறையாட்சியை-இகாமத்துத்தீனை  ஏற்ப்படுத்திக் கொண்டவர்களே நபி(ஸல்) அவர்களுக்கு முற்றிலும் வழிபட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல் முஸ்லிம்கள் தகுதியுள்ள ஒருவருக்குக் கீழ் செயல்படத் தயாராக வேண்டும். ஒரு முஸ்லிம் தன்னில் இறையாட்சியை-இகாமத்துத்தீனை நிலைநாட்ட ஆரம்பித்து விட்டால் அடுத்த நிமிடமே தான் ஒரு அமீருக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்பட்டு விடும். அடுத்து தகுதியுள்ள ஒருவரை அமீராக ஏற்றுச் செயல்படத் தொடங்கி விடுவான்.

எனவே மனித உள்ளங்களில் இறையாட்சியை உண்டாக்கும் முயற்சியே அசல் முயற்சியாகும். ஒவ்வொரு தனிமனிதனிடமும் இகாமத்துத்தீன்-இறையாட்சி ஏற்படுகின்றது என்பதற்கு அடையாளம் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கட்டாயக் கடமைகளிலும் மற்றும் நடைமுறைகளிலும் முழுக்க முழுக்க நபி(ஸல்) அவர்களை பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். அதில் சிறிய விஷயம் பெரிய விஷயம் என்று பிரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சிறிய விஷயமாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை விட்டு வேறு யாருடைய நடைமுறைகளை எடுத்து நடந்தாலும், அது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதாகும். அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு  இருக்கிறார்களா? (42:21) என்ற வசனத்தின்படி இணை வைத்தல் கொடியக் குற்றமாகும்.

இவற்றை விளங்கி செயல்படுவார்கள் நபி(ஸல்) அவர்களின் நடைமுறை மட்டுமே  அல்லாஹ்வின் அங்கீகாரத்தைப் பெற்றது. அல்லாஹ் விதித்ததையே நபி(ஸல்) அவர்கள் செயல்படுத்தியுள்ளார்கள். என்பதையும் விளங்கிக் கொள்வார்கள். இந்த நிலை ஒவ்வொரு தனி மனிதனிடமும் ஏற்படாதவரை குறைந்தபட்சம் ஒரு சமுதாயமானது  இவ்வாறு அமையாதவரை ஆட்சியைப் பிடிக்கும் முறையில் ஈடுவடுவது வீண் முயற்சியாகும். அவ்வாறு முயற்சி செய்து அவர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் அது இகாமத்துத்தீன்-இறையாட்சியாக அமையாது-மனித ஆட்சியாகவே அமையும் என்பதற்கு இஸ்லாத்தின் பெயரால் ஆட்சி நடைபெற்று வரும் பல நாடுகள் தக்க சான்றுகளாகும்.

தனி மனிதனில் இகாமத்துத்தீன்-இறையாட்சி ஏற்படாத நிலையில் நாட்டின் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, இறைவனைப் பற்றியும் உறுதியான நம்பிக்கை இல்லாதவர்களும் தங்களின் சுயவேட்கை காரணமாக இந்த முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடவே செய்வார்கள். தங்கள் உயிரை பணயம் வைத்துப் பாடுவடுவார்கள். ஆயினும் அவர்களின் பெரும் பயன் பூஜ்யம்தான். தங்கள் கட்சித் தலைவருக்காக தீக்குளித்த பலரை நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம். எனவே தன்னில் இகாமத்துத்தீன்-இறையாட்சியை நிலை நாட்டாதவர்களைக் கொண்டு நாட்டின் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதைவிட முடத்தனமான ஒரு முயற்சி இருக்காது என்பதை அறிஞர்கள் உணர வேண்டும்.

முஸ்லிம் என்பதற்கு தலையாய அடையாளமான தொழுகையிலேயே- அகீமுஸ்ஸலாத், அகீமுஸ்ஸலாத் என நூற்றுக்கணக்கான இடங்களில் குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தொழுகையிலேயே இகாமத்துத்தீன்-இறையாட்சியை நிலை நாட்டுவதை விட்டு மனித ஆட்சியை நிலைநாட்டுபவர்களை தன்னில் இறையாட்சியை நிலைநாட்டுபவர்கள் என்று நம்புவது நகைப்புக்குரியதாகும். இப்படிப்பட்டவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை. அப்படியே சாதித்தாலும் மக்கள் அதனால் பயனடையப் போவதில்லை. என்பதை இந்த அறிஞார்கள் உணர வேண்டும். இந்த விளக்கங்ளிலிருந்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் இகாமத்துதீன் என்ற போதனை முற்றிலுமம் தவறு மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட என்பதைப் புரிந்துக் கொண்டிருப்பீர்கள்.

இப்படிப்பட்ட தவறான அடிப்படையில் ஏற்பட்ட போதனை காரணமாக இகாமத்துதீன் என்றால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது தான் என்ற வீண் எண்ணத்தில் செயல்படுகிறவர்களின் எதார்த்த நிலைகளைப் பார்க்கும் போது அவர்கள் மறுமையை நம்பினாலும் அதைவிட இவ்வுலக வாழ்க்கைக்கே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளும் இவ்வுலக வாழ்க்கை சீராகவும், ஆரோக்கியமாகவும், வளமாகவும் அமைவதற்காக ஏற்ப்படுத்தப்பட்டவைகளே என்று நம்புவதோடு மக்களுக்கும் அவ்வாறே போதிக்க முற்ப்பட்டு விடுகிறார்கள்.

அதனால் தான் தொழுகையின் செயல்பாடுகளையும் இவர்கள் தங்கள்  மனோ விருப்பப்படி மனித அபீப்ராயங்களை ஏற்று செயல்படுத்த முற்ப்பட்டுவிடுகின்றனர். இவர்களின் இப்போக்கை கவனிக்கும் நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை, இவ்வுலக வாழ்க்கையில் மக்கள் ஒரு பயத்துடன், கட்டுப்பாடுடன் வாழ நமது முன்னோர்கள் சொன்னக் கட்டுக்கதைகளாகும். இவை என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

ஆட்சியைப் பிடிக்கும் மோகம் ஏற்ப்பட்டு விட்டால் மக்களின் மனங்கோனாதப்படி நடக்காவிட்டால் மக்களின் ஆதரவுக் கிடைக்காது. மக்களின் ஆதரவை இழந்துவிடக் கூடாது என்பதற்காக இறைவனுக்கு இணைவைக்கும் கொடுங் குற்றமான தர்கா சடங்குகளை, அவை கொடியக் குற்றங்கள் தான் என்பதை நன்கு அறிந்துக் கொண்டே ஆதரிக்கும் நயவஞ்சகர்கள் தான் இன்றைய முஸ்லிம் சமுதாய தலைவர்களாக காட்சி தருகிறார்கள். இப்படிப்பட்டவர்களைக் கொண்டு முஸ்லிம் சமுதாயத்திற்கோ இஸ்லாத்திற்கோ என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது என்று மக்கள் உணர வேண்டும்.

இகாமத்துதீன் என்றால் நாட்டின் ஆட்சியைப் பிடிப்பதுதான் என்ற தப்பெண்ணத்தில் செயல்படுகிறவர்களின் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதை விட மக்களைத் திருப்திப் படுத்தும் நோக்கத்துடன் தான் இருக்கின்றன. என்பதை புள்ளி விபரங்களுடன் அடுத்துப் பார்ப்போம்.    இன்ஷா அல்லாஹ்

Previous post:

Next post: