யா அல்லாஹ் !

in 1990 ஏப்ரல்

 

யா அல்லாஹ் !

புலவர்.செ. ஜஃபர் அலி,பிலிட்., நாகப்பட்டினம்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் நம்முடைய தேவைகள் அனைத்தையும் இறைவனிடமே முறையிடக் கூடியவர்களாக இருக்கின்றோம். தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்திலும், உனக்கே நாங்கள் அடிப்பணிகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவித் தேடுகிறோம்; எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக” என்று பணிவுடன் இறையஞ்சுகிறோம்.   (1:4,5)

படைத்தவனிடம் தானே படைப்பினங்கள் இரு கையேந்த வேண்டும் அதுதான் முறையுங்கூட! முறையான இறையஞ்சுதல் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படுவது உறுதி!

நம்முடைய முறையீடுகள் தூய்மையானதாகவும்-உள்ளத் தெளிவுடையதாகவும்-இறையருளை முறையாகப் பெறக்கூடியதும் இணைவைத்தல் இம்மியும் படியாததாகவும் இருக்க வேண்டும்.

ஐந்துவேளைத் தொழுபவர்கள் கூட, இன்றைக்கு இராகு காலம் எதிலிருந்து எதுவரை? எந்த நேரம் நல்ல நேரம்? என்று பார்ப்பவர்களாகவே உள்ளனர். இவர்களின் இறை நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்கின்றது? சற்றே சிந்தியுங்கள்!

அண்மையில், ஒரு சிற்றூரில் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. அழைப்பிதழில் மாலை 5 மணிக்கு அடிக்கல் நாட்டப்படும் என்றிருந்தது. ஆணால் அடிக்கல் நாட்டப்பட்தோ, “மஃரிபு தொழுகைக்குப்பின் 6-45 மணி அளவில் நடந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், அன்று ஞாயிற்றுக் கிழமை! மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை இராகு காலம்! இதனைத் தவிர்க்கவே “மஃரிபு” தொழுகைக்குப் பின் விழா நடந்தது என்ற உண்மை, வந்திருந்த பலருக்கும் தெரியாமலிருப்பதில் வியப்பேதுமில்லை:

“இறைவனுக்கு இணை வைத்தல்” என்னும் கொடுஞ்செயல், இறையில்லத்துக்கு அடிக்கல் வைக்கும் போது நடைபெறுகின்றது என்றால், இதைவிட மோசமான-அருவருக்கத்தக்க  செயல் வேறு என்ன இருக்க இயலும்?

நம் சமுதாயத்தில் வீடுகட்டத் தொடங்கும் போது கூட, மாற்று மதத்தவர்களின் சாஸ்திரப்படி, கொத்தனார்கள் பூஜை செய்வதைத் தடை செய்வதில்லை. கேட்டால் “அவர்கள் திருப்திக்காக அவர்கள் செய்துக் கொள்ளட்டும், நம் திருப்திக்காக ஹஜ்ரத்தை அழைத்து, “அல் பாத்திஹா” ஒன்று ஓதிவிட்டால் போதும்” என்று சமாதானம் சொல்கிறார்கள். சமுதாயத்தவரின் இறை நம்பிக்கை அழுத்தம் எந்த தகுதியில் உள்ளது? வீடு நமக்காக கட்டப்படுகின்றதா? இல்லை, அவர்கள் குடியிருக்கக் கட்டப்படுகின்றதா? யார் வீட்டுக்கு யார் பூஜை செய்வது?

இன்னும் இணை வைத்தலின் சாயல் எங்கெல்லாம் படிகின்றது, என்றால் பள்ளிவாசல் சென்று பர்ளான தொழுகையை நிறைவேற்றி, அவனிடமே(அல்லாஹ்விடமே) தனது தேவைகளைக் கேட்டு வருபவர்கள், வழியிலுள்ள தர்காவில் நின்று கையேந்துவதையும் கானுகின்றோம். நம் தமிழகத்தில் பெரும்பாான பள்ளிவாசல்களின் அருகில் தர் காக்களும் இருப்பதையும் நாம் கானுகின்றோம். இறைவனைத் தொழுது அவனிடம் கேட்பதில் மன உறுதி பெறாதவர்கள் தானே, இந்த இறையடியார்களிடம் கையேந்துகின்றனர்? வேதனை! வெட்கக்கேடு!!

உண்மை விசுவாசிகள் இவ்வாறு அல்லாஹ்விடம் இறையஞ்சிய வண்ணம் இருக்கிறார்கள்! “எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்துவாயாக! எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்து விடாதே! மேலும் எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக நீயே உண்மையில் தாராளமாக வழங்குவனாக இருக்கின்றாய். எங்கள் இறைவனே! திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒரு நாளில் ஒன்று திரட்டக் கூடியவனாய் இருக்கின்றாய். அந்நாள் வருவதில் எத்தகைய ஐயமும் இல்லை. நிச்சயமாக நீ வாக்குறுதி மாறு செய்பவன் அல்லன்”

அல்லாஹ்வே, இத்தகைய பிரார்த்தனைகளை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றான். திருக்குர்ஆனில் பல இடங்களில் இவ்வாறான சிறந்த பிரார்த்தனைகள் இருக்கின்றன. இன்னொரு பிரார்த்தனையையும் இவண் பார்ப்போம்.

சத்தியத்தில் உறுதியாக நிற்க கூடிய பொறுமையுடன் கூடிய வெற்றியாளர்கள் இவ்வாறு இறையஞ்சுகின்றனர். “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும், பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப் படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிக் கொள்ளக் கூடிய தன்மையை எங்களுக்குத் தந்தருள்வாயாக! (3:193,194)

நரகிலிருந்து விடுதலைப் பெறவும், பாவமன்னிப்பு கோரவும், மறுமையின் வெற்றிக்காகவும் எங்ஙனம் நாம் இறையஞ்ச வேண்டும் என்பதை அல்லாஹ், தன் மாமறையில் பின்வருமாறுக் கற்றுக் கொடுக்கின்றான்; “எங்கள் அதிபதியே! எங்கள் குற்றங்களை மன்னித்தருள்வாயாக! எங்களிடம் உள்ளத் தீமைகளை அகற்றுவாயாக! மேலும் எங்களை நல்லவர்களுடன் மரனிக்கச் செய்வாயாக! எங்கள் இறைவா மேலும், உனது தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை எங்களுக்கு நிறைவேற்றித் தந்தருள்வாயாக! மேலும் மறுமை நாளில் எங்களைக் கேவலப்படுத்தி விடாதே திண்ணமாக நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்” (3:193,194)

இறைத் தூதர்கள் பல்வேறு சமயங்களில் செய்த பிரார்த்தனையும் நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. அவற்றல் சிலவற்றை இவண் கான்போம்.

முதலில், ஷுஐப்(அலை) அவர்கள் புரிந்த பிரார்த்தனை வருமாறு:

எங்கள் இறைவனே! எங்களுக்கும் எங்களின் சமுதாயத்தவருக்கும் இடையே சரியாத் தீர்ப்பு அளிப்பாயாக! நீயே சிறப்பாக தீர்ப்பு வழங்குபவனாக இருக்கின்றாய்.” (7:89)

மூஸா(அலை) அவர்கள் புரிந்த பிரார்த்தனை வருமாறு:

என் இறைவா! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! மேலும் உன்னுடைய கருனையில் எங்களைச் சேர்த்துக் கொள்வாயாக; நீ அனைவரையும் விட மிக கருனை புரிபவனாவாய்” (7:151)

எகிப்தில் ஆட்சியதிகாரத்தை அடைந்த பின் யூஸுஃப்(அலை) அவர்கள் செய்த பிரார்த்தனை இவ்வாறிருந்தது: என் இறைவா! நீ எனக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கினாய். மேலும் செய்திகளின் விளக்கங்களைப் புரிந்துக் கொள்ளும் முறையைக் கற்றுத் தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீ தான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்க சிலர்களுடன் சேர்ப்பாயாக” (12:101)

அல்லாஹ்வின் நல்லடியார்களே! நமது இறையஞ்சுதல் யாவும் இதயத் தூய்மையுடன் தெளிவுடன் அல்லாஹ் ஒருவனையே நோக்கி அமைய வேண்டும்! எந்த விதமான இணைவைத்தலும் இணை வைத்தலும் இம்மியளவும் அதில் சேராதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒருவனே நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவனாக இருக்கின்றான் என்ற உறுதி அழுத்தமாக வேண்டும்! வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கருணை நம்மீது பொழிவதாக! ஆமின்.

Previous post:

Next post: