ஹதீஸ் பெட்டகம்

in 1990 ஏப்ரல்

ஹதீஸ் பெட்டகம்

தொடர்: 2    

A. முஹம்மது அலி M.A., B.Ed., M.Phill

4. ஜகாத்துல் பித்ர்:

நீங்கள் விரும்ப கூடியவற்றிலிருந்து செலவு செய்கின்றவரை நீங்கள் நன்மையை அடையவே முடியாது.   (3:92)

முஸ்லிமான அடிமை, அடிமையல்லாதவன், ஆண், பெண், சிறியவர், பெரியவர், இளைஞர் அனைவர் மீதும் நோன்பு(பெருநாளன்று தரவேண்டிய பித்ரு) தர்மத்தை ரசூல்(ஸல்) அவர்கள் (பர்ளு) கடமையாக்கினார்கள். பேரித்தம் பழத்திலிருந்து ஒரு “சாஉ” அல்லது கோதுமையிலிருந்து ஒரு “சாஉ” பித்ர் தர்மம் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.

மற்றொரு அறிவிப்பின்படி : ஈத்(பெருநாள்) தொழுகைக்கு போவதற்கு முன் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.

அபூஸயீத் அல்குத்ரீ(ரழி) அறிவிப்புப்படி: ரசூல்(ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் கோதுமை, பார்லி, பேரித்தம் பழம், காய்ந்த திராட்சை, வெண்ணெய் போன்ற உணவுப் பொருள்களில் இருந்து ஒரு “சாஉ” பித்ர் தர்மம் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

மற்றொரு அறிவிப்பின் படி: அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) ஈத் பெருநாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகவெ பித்ர் தர்மம் கொடுக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஆதாரம்        பாடம்         அறிவிப்பாளர்கள்          இறப்பு

1. புகாரீ        சதக்கத்துல் பித்ர்       இப்னு உமர்(ரழி)            73 ஹி

                                                                         அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)       63 ஹி

2. முஸ்லிம்    ஜகாத்துல் பித்ர்        இப்னு உமர்(ரழி)           73 ஹி

                                                                          அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)     63 ஹி

3. நஸயீ       சதக்கத்துல் பித்ர்       இப்னு உமர்(ரழி)           73 ஹி

                                                                       அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)        63 ஹி

                                                                              இப்னு அப்பாஸ்(ரழி)          63 ஹி

4. அபூதாவூத்   ஜகாதுல் பித்ர்         இப்னு உமர்(ரழி)             73 ஹி

                                                                         அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)      63 ஹி

                                                                         இப்னு அப்பாஸ்(ரழி)               63 ஹி

5. இப்னு மாஜ்ஜா  சதக்கத்துல் பித்ர்        இப்னு உமர்(ரழி)  73 ஹி

                                                                          அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)      63ஹி

                                                                                  இப்னு அப்பாஸ்(ரழி)        63ஹி

                                                                                  அம்யிர்பின் ஜைது(ரழி)           

6. மு அத்தா மாலிக்  ஜகாத்துல் பித்ர்    இப்னு உமர்(ரழி)          73ஹி

                                                                            அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)      63ஹி

7. தாரமீ        ஜகாத்துல் பித்ர்          இப்னு உமர்(ரழி)           73ஹி

                                                                              அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)      63ஹி

                          இப்னு அப்பாஸ்(ரழி)        63ஹி

8.முஸ்னது அஹ்மத்  முஸ்னது இப்னு உமர்   இப்னு உமர்(ரழி) 73 ஹி  பாகம் 2-ல் பக்கங்கள்   102,137

9. இப்னு குசைமா                  அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)      73 ஹி

10. அல் ஹாகிம்                   அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)      63 ஹி

11. தாராகுத்னீ                      அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)       63 ஹி

                                                                                          இப்னு உமர்(ரழி)              73 ஹி

                                                                             அபூஸயீத் அல்குத்ரீ(ரழி)        63 ஹி

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் ஒரு சில காலம் பஸ்ராவின் கவர்னராக இருந்தார்கள். ஒரு ரமழானின் கடைசி இரவுகளில் நோன்பின் ஜகாத்தைக் கொடுக்கும்படி உபதேசித்தார்கள். குழுமியிருந்த முஸ்லிம் தோழர்கள் (நோன்பின் ஜகாஅத் என்ன என்பதை அறியாமல்) ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கானார்கள். இதனைக் கண்ணுற்ற இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள்: இங்கு மதீனாவாசிகள் யாராவது இருக்கிறார்களா? அவர்கள் (நோன்பு ஜகாத்தைப் பற்றி அறியாத) இவர்களுக்கு அறிவிக்கட்டும்.

நபி(ஸல்) அவர்கள், முஸ்லிமான அடிமை, அடிமையில்லாதவன், ஆண், பெண், சிறியவர், இளைஞர் என அனைவர் மீதும் பித்ர் தர்மத்தை கடமை(பர்ளு) ஆக்கினார்கள். பேரித்தம் பழம் அல்லது கோதுமையிலிருந்து ஒரு “சாஉ”(பித்ர்) ஜகாத் கொடுக்க ஆணையிட்டார்கள் என்றார்கள்.

இந்நிகழ்ச்சியை இமாம் நஸயீ, இமாம் அபூதாவூத் தங்களது நூல்களில் சரியான அறிவிப்பாளர்கள் வரிசைகளில் பதிவு செய்துள்ளனர்.

இதுவன்றி தஃலபா பின் சகீர் என்பவர், தான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிந்ததாக இந்த நபிமொழியைக் கூறி, சிறிது அதிகமாக பணக்காரனும், பரம ஏழையும்(கனி வஃபகீர்) பித்ர் தர்மம் தர வேண்டுமென  குறிப்பிடுகிறார். இது அபூதாவுதில் இடம் பெறுகிறது. இவர் இந்த நபிமொழியைத் தவிர வேறு ஹதீஸ் அறிவிக்கவில்லை. என்பது குறிப்பிடத்க்க விஷயம். இவர் நபி(ஸல்) அவர்களை சந்தித்தாரா? அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர் தானா? என்பதில் சரித்திர வல்லுநர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் பரம ஏழையும் ஸதக்கா, ஜக்காத் கொடுக்க வேண்டுமென்பது பற்பல நபிமொழிகளுக்கு புறம்பானதாகும். எனவே இந்த நபிமொழி பலஹீனமானதாகும்.

அல்லாஹ்வின் அருளால் ஆய்ந்தறிந்தவரை இந்த நபிமொழி பதினொரு(11) ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளதாகும். அறுபதுக்கும்(60) மேற்ப்பட்ட சரியான அறிவிப்பாளர் வரிசையில் பற்பல ஸஹாபாக்(நபித் தோழர்)களும், தாபிஈன்களும் இடம் பெற்றுள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்க விஷயம்.

“சாஉ” என்றால் என்ன?

தமிழர்களாகிய நம்மிடையே விரக்கடை, ஜான், முழம் போன்ற அளவுகள் புழக்கத்திலுள்ளன. அதாவது அவரவர் கைகளைக் கொண்டு அளவிடும் ஒருமுறைக்கு இப்பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இவை நீட்டலளவைக் குறிக்கின்றன. அதேப் போன்று “சாஉ” என்பது அன்றைய காலத்தில் அரபு நாட்டவர்களிடையே புழக்கத்திலிருந்த ஒருக் கொள்ளளவு, இரண்டு கைகளாலும் ஒருப் பொருளை அள்ளும்போது அவ்விருக் கைகளும் இணைந்து எவ்வளவுப் பொருட்களை தன்னகத்தே கொள்ளுமோ அதுப் போன்று நான்கு மடங்கு கொண்டது ஒரு “சாஉ” என அழைக்கப்பட்டது. எனவே இரு கைகளாலும் நான்கு முறை முழுமையாக அள்ளிப் போடும் அளவே ஒரு “சாஉ” ஆகும்.

மறுமையில் ஒருவர் செய்த செயல்களைப் பற்றி விசாரிக்கையில் அவர்களது வாய்கள் பூட்டப்பட்டு உறுப்புகளை வினவப்படும் (36:65) என்ற இறை ஆணைப்படி நமது கைகளால் அள்ளியிட்டு பித்ர் தர்மம் அளியுங்கள். நமது கைகள் அல்லாஹ்வின் வினாவுக்கு விடையளிக்கும் எவரது தனிப்பட்ட கருத்துக்கும் இடம் கொடாமல் ஹதீஸின் அடிப்படையில் நீங்கள் அமல் செய்தால் அல்லாஹ்விடமிருந்து தப்பிக்க முடியும்.

எவர் பெருநாள் தொழுகைக்கு முன்பே “பித்ர்” தர்மத்தை கொடுத்து விடுகிறாரோ அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜகாத் ஆகும். எவர் தொழுகைக்குப் பின் அதனைக் கொடுக்கின்றாரோ அது ஸதகாவாக நிறைவேறும் என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கும் செய்தி அபூதாவூத், தாரகுத்னீ, இப்னு மாஜ்ஜாவில் இடம் பெற்றுள்ளது.

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஏழைகள் இன்று (பெருநாளன்று) வீடு வீடாக சுற்றி வருவதை தேவையற்றதாக்குங்கள்”, அறிவிப்பு :இப்னு உமர்(ரழி)    ஆதாரம் : பைஹகீ, தாரகுத்னீ.

பெருநாள் தொழுகைக்கு பெண்களை அழைத்து வாருங்கள்!

நபியே நீர்) ஓர் (நல்ல) அடியார் தொழும்போது தடை செய்கிறானோ (அவனை) நீர் பார்த்தீரா? அல்லது அவர் இறையுணர்வைக் கொண்டு ஏவியவாறு இருந்தும் அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக்கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?

நிச்சயமாக அல்லாஹ்(அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அப்படியல்ல! அவன் விலகிக்கொள்ள வில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தை பிடித்து அவனை இழுப்போம். (96:9-15)

வீட்டில் தனித்து இருக்கும் பெண்களாகிய நாங்கள், மாதவிடாய் பெண்கள் முதற்கொண்டு அனைவரையும், இரு பெருநாட் தொழுகைக்கு வெளியே வர நபி(ஸல்) அவர்களால் ஆணையிடப்பட்டோம். அத்தொழுகையில் கலந்துக் கொள்ளவும், முஸ்லிம்களின் பிரார்த்தனைகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டோம். ஆணால் மாதவிடாய் பெண்கள் தொழுமிடத்தி(முஸல்லாவி)லிருந்து ஒதுங்கி இருக்கவும் பணிக்கப்பட்டோம்.

மற்றொரு அறிவிப்பின்படி : அப்போது ஒரு பெண் யாரசூலுல்லாஹ் எங்களில் எவருக்காவது உடுத்த உடை இல்லையெனில் என்ன செய்வது? என வினவினார்கள். அதற்கு ரசூல்(ஸல்) அவர்கள் உங்களது தோழிகளிடமிருந்து ஒரு உடையை சிறிது இரவல் வாங்கி உடுத்தி வாருங்கள் என விடை பகர்ந்தார்கள்.

இந்த நபிமொழியை உம்மு அதிய்யா(ரழி) என்ற நபித் தோழர் அறிவிப்பதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் காண்கிறோம். உம்மு அதிய்யா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்த ஒரு பெண் ஸஹாபியாகும். இவர்கள் அறிவிப்பதாக வரும் ஹதீஸ்கள் மிக மிக குறைவே. அவைகளாவன :

   1. மேற்கண்ட ஹதீஸ்

   2. ஜனாஸாவை ஒற்றைப்படை(3,5,7) தடவைகள் நீர் ஊற்றிக் கழுவ வேண்டும். வலது புறத்திலிருந்து நீர் ஊற்றிக் கழுவ ஆரம்பிக்க வேண்டும்.

   3. ஒப்பாரி வைத்தல் கூடாது.

   4. ஜனாஸாவிற்கு பெண்கள் செல்லக் கூடாது.

   5. அல்குர்ஆன் வசனம் 60:12ன் படி தானும், மற்றும் நான்கு பெண்களும் ரசூல்(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்தது.

   6. தாக் செவிலித்தாயாக பணிப் புரிந்தது போன்றவையாகும்.

நபியே விசுவாசங்கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து,

” அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணை வைப்பதில்லை;

திருடுவதில்லை;

விபச்சாரம் செய்வதில்லை.

தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை;

தங்களுடைய கை, கால்களுக்கிடையில் பாவம் செய்து(சோரம் போய், அதுப்பற்றிக்) கற்பனையாக அவதூறுக் கூறுவதில்லை;

கண்ணியமான செயல்களில் உங்களுக்கு மாறு செய்வதில்லை;

என்று (பைஅத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு நீர் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்து விட்ட குற்றங்களுக்காக) அல்லாஹ்விடம் மன்னிப்பைக்கோரும். அல்லாஹ் மிக மன்னிப்போனும் கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.

மேற்கண்ட குர்ஆன் வசனப்படி பைஅத் செய்த ஐந்து பெண்களில் தானும், உம்மு சுலைம்(ரழி) முஆதுடைய மனைவி இப்னது அபீசப்ரா(ரழி) அவர்களும் அடங்குவார்கள் என உம்மு அதிய்யா(ரழி)  கூறுகிறார்கள். பைஅத்தின்படி செய்யக் கூடாத செயல்களாக உள்ளவற்றில் “ஒப்பாரி வைப்பதும்” அடங்கும் என விளக்கமும் அளித்துள்ளார்கள்.

தான் ரசூல்(ஸல்) அவர்களுடன் ஏழு புனித (கஜ்வா) போரில் கலந்துக் கொண்டதாகவும், அப்போது

உணவு சமைத்தளித்தல்,

போரில் விழுப்புண் பட்டவர்களுக்கு மருந்திடல்,

உடல் அசெளகரியமானவர்களைக் கவனித்தல்

போன்ற செயல்களை செய்யும் செவிலித்தாயாக பணிப்புரிந்ததாகவும் கூறுகிறார்.

ரசூல்(ஸல்) அவர்களின் அன்பு மகள் ஜைனப்(ரழி) இறந்தபோது அவரது ஜனாஸலவைக் குளிப்பாட்டும் பாக்கியம் பெற்றவர்கள் உம்மு அதிய்யா(ரழி), தனது மகளை 3,5 அல்லது7 என ஒற்றைப்படை தடவைகளில் நீர் ஊற்றி வலதுபுறம் ஆரம்பித்து கழுகும்படி ரசூல்(ஸல்) தனது மேலங்சியைத் தர, அதனைக் கொண்டு ஜனாஸாவை மூடியதாகவும் தெரிவிக்கிறார்கள்.

இவ்விதமாக ரசூல்(ஸல்) அவர்களின் அன்பு மகளின் மரணம், ஜனாஸா குளிப்பு போன்றவற்றில் நேரடியாகப் பார்த்து பங்கேற்றதால் அப்போது ரசூல்(ஸல்) கூறிய அறிவுரைகளாவன

ஒப்பாரி வைக்காதீர்கள்;

ஒற்றைப்படையாக நீர் ஊற்றிக் குளிப்பாட்டுங்கள்;

வலதுப் புறத்திலிருந்து நீர் ஊற்ற ஆரம்பியுங்கள்;

பெண்கள் ஜனாஸாவின் பின்னால் நடந்து செல்லாதீர்கள்;

போன்றவற்றை நமக்கு தெரிவிக்கிறார்கள்.

அறிவிக்கும் ஸஹாபாக்களின் வரிசையில் ஹதீஸ்களை முஸ்னதால் தொகுத்த இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்) “ஹதீஸ் உம்மு அதிய்யா” என்ற தலைப்பில் 12 அறிவிப்பாளர்கள் வரிசையில் மேலேக் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் பதிவு செய்துள்ளார்கள். முஸ்னது அஹ்மதில் உம்மு அதிய்யா(ரழி)ப் பெயரில் உள்ளவை இந்த 12 ஹதீஸ்கள் மட்டுமே.

    இதுவன்றி புகாரீ, முஸ்லிம் போன்ற சிறப்புமிக்க ஹதீஸ் கலாவல்லுநர்களும் தங்களது நூல்களில் பதிவு  செய்துள்ளனர். நாம் பெருநாள் தொழுகைக்கு பெண்களை பொது தொழுகை தொழுமிடத்திற்கு (ஈத்காஹ்) அழைத்து வரும்படி அழைப்புவிட்ட நபிமொழிகள் எங்கெங்கு இடம்பெறுகிறது என்பதைக் காண்போம்.

ஆதார நூல்கள்                              பாடம்

1. புகாரீ                            பெருநாள் தொழுகை, மாதவிடாய், ஹஜ்

2. முஸ்லிம்                        பெருநாள் தொழுகை

3. நஸயீ                           பெருநாள் தொழுகை, மாதவிடாய்

4. திர்மிதீ                           பெருநாள் தொழுகை

5. இப்னுமாஜ்ஜா                    இகாமதிஸ்ஸலாத்

6. தாரமி                            தொழுகை

7. முஸ்னது அஹ்மது            முஸ்னது உம்மு அதிய்யா பாகம் 5ல் பக்கங்கள் 84, 85

(இதில் 12 ஹதீஸ்களெ உள்ளன.)

இப்னுமாஜ்ஜாவில் உம்மு அதிய்யா கூறுவதாக மூன்று அறிவிப்புகளுள்ளன. அதில் மூன்றாவது அறிவிப்பில் அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலஹீனமானவர்.

உம்மு அதிய்யா(ரழி) அவர்களின் மேற்கண்ட விளக்கமான நபிமொழியை உறுதிப் படுத்தி அம்ரா பின்து ரவாஹா(ரழி) என்ற நபித்தோழியர் அறிவிக்கும் மற்றொரு நபிமொழி கட்டாயம் அனைவரும் பெருநாள் தொழுகையில் கலந்துக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்துவதையும் காணீர்.

உடை உடுத்திய அனைவரும் பெருநாளன்று (வீட்டிலிருந்து) வெளியே (பெருநாள்) தொழுகையில் கலந்துக் கொள்ள நபி(ஸல்) ஆணையிட்டார்கள். இந்நபிமொழியை முஸ்னது அஹ்மதில் காணலாம்.

பெருநாள் தொழுகைக்கு பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறி பொதுத் தொழுகை நடக்குமிடத்திற்கு வர வேண்டுமென்ற மேற்படி நபிமொழியின் ஒரு அறிவிப்பில் உம்ர்(ரழி) அவர்களும் இடம் பெறுகிறார்கள். அது:

ரசூல்(ஸல்) மதீனா வந்து குடியேறியப் பின் (வந்த பெருநாளன்று) எல்லா முஸ்லிம் பெண்களையும் ஒரு மதீனத்து அன்சாரி பெண்ணின் வீட்டில் ஒன்றுக் கூட்டினார்கள். பின் அவர்களிடம் அவரது பிரதிநிதியாக உமர் இப்னு கத்தாப்(ரழி) அவர்களை அனுப்பினார்கள். அவ்வீட்டின் வாயிலுக்கு வந்த உமர்(ரழி) அனைவருக்கும் (முதன்மையாக) ஸலாம் கூறினார்கள். குழுமியிருந்த பெண்களும் (ஸலாமுக்கு) பதில் கூறினார்கள். பின் உமர்(ரழி) : நான் நபி(ஸல்) அவர்களின் ரசூலா(தூதரா)க வந்துள்ளேன். ரசூல்(ஸல்) மாதவிடாய் பெண்கள், கன்னிப் பெண்கள் முதற்கொண்டு உங்களனைவரையும் பெருநாள் தொழுகைக்கு (வீட்டை விட்டு தொழுமிடம்) வரக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்றார்கள். இந்தநபிமொழியை உம்மு அதிய்யா(ரழி) அறிவிப்பதை அபூதாவூத், அஸ்மது போன்ற நூல்களில் காணலாம்.

இந்த நபிமொழிகள் மூலம் நாம் நமது பெண் மக்களை பெருநாளன்று பொது மைதானத்தில் நடக்கும் தொழுகைக்கு அழைத்து வருதல் வேண்டுமென்பதை அறிகிறோம்.

அல்லாஹ்வின் அருளால் நாம் ஆய்ந்தறிந்த வரையில் இந்நபிமொழி ஏழு(7) ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூல்களில் சுமார் (20) இருபதுக்கும் மேற்ப்பட்ட சரியான அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது. அவ்வரிசையில் தாபீஈன்கள் பலர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

*******************************

    ஜகாத்தை மற்ற பொருளுடன் கலந்து விடாதீர்!

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஏழைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஜகாத்துடைய பொருள் மற்ற பொருளுடன் கலந்து விடுமாயின் நிச்சயமாக அப்பொருளை அது ஹலாலாக்கி விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.    (முஸ்னத், ஷாபீயீ)

Previous post:

Next post: